தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது
இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய கல்வியின் இருண்டகாலம் என்கிற புத்தகம் தான் தமிழில் வெளியான முதல் விமர்சன புத்தகம். அதற்கு பிறகு வெளியானது தான் தோழர்.சண்மூகசுந்தரம் எழுதி வெளியாகியுள்ள என்ன சொல்கிறது “தேசிய கல்விக்கொள்கை-2019.? என்கிற புத்தகம்.
கல்வி குறித்து மிகுந்த அக்கறையோடு செயல்படும் பாரதி புத்தகாலயம் தான் மேற்கூறிய இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது..
தோழர்.சண்முக சுந்தரம் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கள அனுபவத்தோடும் இளைஞர் முழக்க ஆசிரியர் பணியில் இருந்த எழுத்து அனுபவத்தின் துணையோடும் இப்புத்தகத்தை சிறந்த முறையில் எழுதியிருக்கிறார்.
488 வரைவு அறிக்கையின் சாரம்சத்தை 126 பக்கங்களில் எழுதியிருப்பது சாதரண விஷயமல்ல ஒவ்வொரு பகுதியிலும் அவரின் கடின உழைப்பு தெரிகிறது…
இது வழக்கமான கட்டுரை மொழியில் இல்லை எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில் கேள்வி பதில்கள் முறையில் மக்களின் வழக்கு மொழியில் எளிமையாக இருக்கிறது. எவ்வளவு உயர்ந்த கருத்தாக இருந்தாலும் மக்களுக்கு புரியா மொழியில் பேசுவோமாயின் நம் இலக்கை அடைய முடியாது. அந்த வகையில் இந்தப்புத்தகம் முதல் புத்தக வாசகரையும் கவரும் முறையில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.
மக்களின் வழக்கு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஏராளமான புள்ளி விவரங்களும் தேவையான இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. நான் இரண்டு மணி நேர இரயில் பயணத்தில் முழு புத்தகத்தையும் வாசித்து முடித்தேன்….
கல்விக்கொள்கை குறித்து ஏன் பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்…? என்ற தலைப்பில் துவங்கி உண்மையில் புதிய கல்விக்கொள்கை எப்படியிருக்க வேண்டும் என்பது வரை விரிவாக அலசியிருக்கிறார்.
ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் பல கல்வியாளர்கள் கல்வி குறித்து எழுதியிருப்பதை பதிவு செய்ததோடு கல்வி குறித்து தான் வாசித்த அனுபவத்தோடு தன் ஆலோசனைகளையும் இணைத்து நிறைவு செய்திருக்கிறார்.
இக்கல்விக்கொள்கையின் முக்கிய நோக்கங்களான கல்வி கூடங்களை தனியார்மயப்படுத்துவது, பாடத் திட்டங்களையும் நிர்வாக அமைப்புகளையும் காவிமயப்படுத்துவது, மேற்கூறிய இரண்டையும் இடையூறு இல்லாமல் நிறைவேற்ற மத்தியத்துவப்படுத்துவது ஆகிய முக்கிய அம்சங்களை பகுதி பகுதியாக பிரித்து பள்ளிக்கல்வி முதல் பல்கலைகழக கல்வி வரை இவ்வரைவு அறிக்கை கக்கியிருக்கும் விஷத்தின் கொடூரத்தை ஒவ்வொன்றாக அம்பலத்துகிறார்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி 85% 6வயதிற்குள் பெற்றுவிடும் எனவே பல மொழிகள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை மொழிக்கல்வியும், பொதுக்கல்வியும் உலக அனுபவம் என்ற தலைப்பில் அறிவியல் பூர்வமாகவே மறுக்கிறார்.
உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத ஒரு சாராம்சத்தை வரைவு அறிக்கை பரிந்துரைக்கிறது.
உலகளவில் தற்போது மனித வளத்தில் இந்தியாவின் நிலை 130நாடுகளில் 103 வது இடத்திலும் கல்வியில் 191ல் 145வது இடத்திலும் இருக்கிறது.
கல்வி சீரழிவிற்கு முக்கிய காரணம் உலகிலேயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு இந்தியா என்பதால் தான். கல்வி வர்த்தக பண்டமாக பார்க்கப்படுகிறதே தவிர சமூக மேம்பாட்டிற்கு பயன்படும் அடிப்படை ஆதாரமாக பார்க்கப்படுவதில்லை.
கல்வி கொடுப்பது அரசின் கடமையாக இல்லாமல் தனியாரிடம் ஒப்படைப்பதே அரசு தன் கடமையாக செயல்படுவதால் உலகளவில் இந்த கேவலத்தை தவிர்க்கவே முடியவில்லை. அதற்கு தீர்வு காண இவ்வரைவு அறிக்கையில் எந்த பரிந்துரையும் இல்லை மேலும் தனியார்மயபடுத்தும் ஆலோசனைகள் தான் அதிகம் நிரம்பியிருக்கிறது.
இது 1994ல் போடப்பட்ட காட்ஸ் ஒப்பந்தத்தின் தொடர்ச்சி என்பதோடு இது பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தோடு பின்னிப் பிணைந்துள்ளதையும் சேர்த்தே இப்புத்தக ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார்.
அந்தணர்களும் அரசர்களின் வாரிசுகளும் மட்டும் படித்த குருகுலக்கல்வியை இந்த அறிக்கை மெச்சுகிறது, இந்த கல்விக்கொள்கையின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம் ஏற்கனவே நாடு முழுவதும் 26ஆயிரம் பள்ளிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இனி அரசு பள்ளிகளையும் ஆர்எஸ்எஸ் பள்ளிகளாக மாற்றவே இவ்வரைவு அறிக்கையை முன்வைக்கிறது.
சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் இராணுவப் பள்ளி ஒன்றினை ஆர்எஸ்எஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக துவக்கியுள்ளது அவ்வமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி, இந்தப் பள்ளியை நடத்தும் என்றும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கற்பிக்கும் எனவும் அறிவித்துள்ளது மேலும் அனைத்து மாநிலங்களிலும் இப்பள்ளி விரிவாக்கப்படும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. கல்வி தனியார்மயமாக்கல் இந்துத்துவா சித்தாந்தம் வளர்வதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. தனியார்மயமாக்கல் காவிமயமாக்கல் நகமும் சதையும் போல் இணைந்திருக்கிறது.
2020க்குள் ஒரே மாதிரி பாடத்திட்டம், தேர்வு என சொல்லும் அறிக்கை ஒரே மாதிரியான பள்ளிகள், ஒரே மாதிரியான வகுப்பறைகள்,
குறித்து எதையும் பேசவில்லை.
நவோதயா, கேந்திர வித்யாலயா,சிபிஎஸ்இ,
ஐசிஎஸ்சி, குளோபல் ஸ்கூல் போன்ற பலவிதமான பள்ளிகள் காசுக்கேற்ற கல்வியை உருவாக்கியிருக்கிறதே இதையெல்லாம் ஒழிக்க எதையும் இந்த அறிக்கை பேசவில்லை..
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் பள்ளி அமைப்பையே பலவினப்படுத்தி கோச்சிங் சென்டர், டியூஷன் சென்டர், போன்ற தனியார்கள் நடத்தும் வர்த்தக அமைப்புகளை வளம்கொழிக்க வைக்கும். தரம்…தேர்வு… என்ற சொல்லாடல்களை பயன்படுத்தி காசு இருப்பவருக்கே கல்வி பெருவாரியான தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப் பட்ட, மக்களுக்கு இனி கல்வி கிடையாது என்பதை மறைமுகமாக சொல்லும் பரிந்துரைகள் நிறைந்தவை தான் இக்கல்விகொள்கை.
மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் சொல்லை கொஞ்சம் மாற்றி அம்பானி அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கு சேவை செய்யும் மாணவர்களை உருவாக்குவதே இக்கல்விகொள்கையின் நோக்கம் என்பதாக அறிவிக்கிறது அதனால் தான் இன்னும் துவக்கபடாத அம்பானியின் பல்கலைகழகத்திற்கு விருதும் நிதி உதவியும் கொடுத்து கௌரவம் செய்துள்ளது மோடி அரசு..
லைட்டு ஆனால் டைட் என்ற அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை இருக்க வேண்டுமாம், அதாவது அரசு கொடுக்கும் நிதி லைட்டாகத்தான் இருக்கும் கல்வி நிலையங்களை மூடுவதில் அரசு டைட்டாக செயல்படும் என்பதை நக்கல் தொனியில் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.அதற்கு மேலும் சில உதாரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
மாணவர்களின் உயர் கல்வியை பொருத்தவரை புதிய கல்லூரிகளை துவங்க யூஜிசியிடம் அனுமதி வாங்கும் முறை ஏற்கனவே ஒழித்தாகிவிட்டது தனியார் கல்லூரிகளே கட்டணமும் நிர்ணயிக்கலாம் பட்டமும் வழங்கலாம் சுதந்திர இந்தியாவின் பலன்களை தனியார்கள் முதலாளிகள் அனுபவித்துகொண்டே இருக்கிறார்கள், இனி டிகிரிக்கு ஏற்றார்போல் பட்டங்களின் விலைகளும் அதன் பட்டியலும் கல்லூரி முகப்பில் இருந்தாலும் இனி ஆச்சர்யப்பட வேண்டாம்.
ஒருபக்கம் 3-5-8 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதோடு பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு முறையும் தேர்வுகள் நடத்த வேண்டுமாம். அதன் மூலம் தான் தங்களின் பணியை உத்தரவாதம் செய்துகொள்ள வேண்டும்.
பதவி உயர்வு சம்பள உயர்வு இனி எல்லாம் மதிப்பெண் அடிப்படையில் தான். சம்பள உயர்வு கேட்டு போராட வராதீர்கள் தேர்வுக்கு தயாராகுங்கள் என ஆசிரியர்க்கு அறிவுரை வழங்குகிறது இந்த பரிந்துரை. சங்கமாக ஆசிரியர்கள் இணைவதை தடுக்கும் நடவடிக்கையும் இதில் அடங்கும்.
கல்வியில் இருந்த கொஞ்ச நஞ்சம் மாநில உரிமைகளும் முழுவதுமாய் பறித்து மத்தியத்துவமாகிறது. ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் என்ற அமைப்பை நிறுவி இனி எல்லாம் பிரதமர் முடிவில் தான் இருக்கும்.
அவர் கண் அசைவில் அனைத்து மாநிலங்களும் கட்டுப்படும் மாநிலங்களுக்கு தனியாக இனி எந்த உரிமையும் இல்லை…
1976ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் கூட மாநில பட்டியலில் இருந்த கல்வி பொது பட்டியலுக்கு தான் மாறியது ஆனால் தற்போது முழுவதுமாய் மத்திய பட்டியலுக்கு மாறவிருக்கிறது நாடு எமர்ஜென்சி காலத்தைவிட ஆபத்தான சர்வாதிகார பாதையை நோக்கி பயனிக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
மாநில உரிமை பறிபோவது குறித்து தமிழக அரசு கவலைப் படவில்லை ஆட்சியாளர்களுக்கு அடிமைத்தனம் புதிதல்ல இதெல்லாம் Take it Easy ஆக எடுத்துக்கொள்வார்கள் நமக்கு அப்படியில்லை அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைக்க தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது போராட்டத்திற்கு மக்களை தயார் செய்யும் பணி இருக்கிறது அதற்கு ஆயுதமாய் இந்தப்புத்தகம் நிச்சயம் இருக்கும் வாசிப்போம் விவாதிப்போம் களமாடுவோம்…..
எஸ். மோசஸ் பிரபு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவள்ளுர் மாவட்ட செயலாளர்