நூல் அறிமுகம்: “பச்சைய மழை” கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்

வானத்துக்கொடையினை நம்பியிருக்கும் விவசாயிகளோ.. மழைத்துளியொன்று விழாதா  மண்ணை வெடித்து எட்டிப் பார்த்துவிடமாட்டோமாயென தனக்குள்ளான உயிர்ப்பிடித்து காத்துக்கிடக்கும் ஏதோ ஒரு கிளியின் அலகிலிருந்து தெரித்து விழுந்த விதையின் மனசாக மக்கள்..
அனல்காற்றாய் அடித்துக் கிடக்கையில்
“பேஞ்சா மாதிரி பேஞ்சிடும்” மழையை காதலியின் கரம்பிடித்து மெல்ல மெல்ல இழுத்தணைத்து விட மறுக்கும் காதலனையொத்து வானம் மொத்த மழையை இழுத்து வைத்துக் கொண்டால் ..?
என்ன எழவுக்கு இந்த மழை பெய்யனும்.. எவன் கேட்டான் இதை.? இப்படி சூட்டைக் கிளப்பிட்டுப் போவுதே.. என்ன ஆகுமா? என்று பெய்த மழையை கரிச்சுக் கொட்டுவதும் நடக்கும்..
அதே நேரத்தில் 10 நாளா இப்படி பேய்ஞ்சது பேய்ஞ்சா மாதிரி கெடக்குதே..
ஒரு வேலை வெட்டிக்கும் போகமுடியல..
ஏரி தாங்குமான்னு தெரியல.. ஊடு முச்சூடும் மழைத்தண்ணி.. ரோட்ல போர் எல்லாக் கருமமும் தாவாரத்துல வந்து மெதக்குதே.. என்ன ஆகுமோ..? ஆத்தா இந்த மழை எப்போ ஓயுமோ.. காடு கழனியெல்லாம் கடலா நிக்குது.. வெளஞ்ச நெல்ல வீட்டுக்கு கொண்டு வரமுடியலையே என மார்பெலும்பு சூடேற அடித்து அழும் மக்கள் “மழையே போய் ஒழி” என்று சத்தம் போட்டு சாபமிடுவதும் நடக்கும்..
ஆனால் அதெப்படி கவிஞரே..
இந்த இரண்டு மழையும் வேணாம் இங்கு..
எம் மக்கள்.. எம் மண்.. மண்ணிற்குள் புதைந்து  உயிர் கொண்டாடும்,
இந்நிலமெங்கும் பச்சைப் பசேலென
மாற்றிப் போட்டிடும் வித்தையை மட்டுமறிந்த அந்த சாகச “பச்சைய மழை” மட்டும் வேண்டும் என்று நேசத்தோடு தொகுப்பிற்கு பெயர் வைத்திருக்கிறீர்கள்.
கவிதைத் தொகுப்பின் தலைப்பே மனசெங்கும் மழை பெய்து கும்மாளமிட்டல்லவா பிச்சுப்பூவும்,  மல்லிகையும், முல்லையும், மகிழமும், செம்பருத்தியும், சம்பங்கியும், சங்குப்பூவும் இன்னும் பெயர் தெரியா காட்டுப்பூ பலதும் மொட்டவிழ வண்டுக் கூட்டத்தின் வனப்பு மிகுந்த ரீங்காரமல்லவா எம் காதுகளெல்லாம் வழிந்து கிடக்கிறது பேரெழிலாய்.
கவிதைத் தொகுப்பின் தலைப்பிற்கே
எனது பேரன்பும் வாழ்த்துகளும் இன்போ.அம்பிகா அவர்களே..
“பச்சைய மழை” யின் முதல் கவிதை தொடங்கி 80 வது பாடல் வரையிலும்
எத்தனையெத்தனை படிமங்கள்..
எல்லாமும் இதயத்தை உரசியும்,
தழுவியும்.. எப்போதாவது துயரம் ஏந்தி வலிக்கச் செய்தும்.. எப்படி உங்களால் பார்ப்பவை அனைத்தையும் படிமங்களாக்கி
சொல்ல வந்ததை அழகாகவும் மென்மையாகவும் வேதனை வழியும் வலி பொருந்தியதாகவும் சொல்லி பச்சைய மழையை வரவைக்க முடிந்தது..
“உந்தன் காதலை” அடையாளப் படுத்த வரையாட்டின் கொம்பின் கூர் துவங்கி
தட்டானின் கூட்டுக்கண் வரையிலும்..
காதல்தான் எத்தனை எத்தனை பாடுபடுத்துகிறது நம் நேசம் கொண்ட மனிதர்களை..
ஒவ்வொரு நாளும் நம்மை கடந்து போகும்
எளிய மாந்தர்களை பார்த்துக் கொண்டே நடக்கிறோம்.. எவரின் கால் செருப்பாவது பிய்ந்து போகாதா எனச் சாலையில் நடந்தலையும் செருப்புக் கால்களையே பார்த்துக் காத்துக் கிடக்கும் கண்களில் தெரியும் பட்டர் பிஸ்கட்டுக்காக அழுது கொண்டிருக்கும் மூன்று வயது குழந்தையின் முகம்..
மரத்துக்கடியில்
கரும்பு ஜுஸ் பிழிந்து  கொண்டிருப்பவளின் நாவரண்ட தொண்டையின் ஏற்ற இறக்கத்தை பார்த்திருப்போமா ஒரு கிளாஸ் டீயின் ருசிக்காக.. ஒவ்வொரு நாளும் கடந்து போகிறோம்..     எளிய மக்களின் உழைப்பில்தான்
எத்தனை உயிர்களின் காதல் அடங்கிக்கிடக்கிறதென்பதை நம்முடைய இயந்திர வாழ்க்கை பார்க்க.. யோசிக்க.. உணர மறுக்கிறது..
ஆனால் கவிஞரின் மெளனம்   “வன்மத்தின் பெருங்குரலெடுத்து கத்தித் தீர்க்கிறது
பழவண்டியைக் கடந்தவள் கண்களால்
பசியாறுவதைப் பார்த்து”.
நெடுவாசல்.. இன்றும் தகித்துக் கொண்டிருக்கிறது.. எதுவும் நடக்கலாம்..
அது எப்போதும் நடக்கலாம்.. அமைதியாக.
ஊருக்கும்..உலகிற்கும் சோறிட்ட விவசாயி
தன் “வீட்டடுப்பெரிக்க உடைக்கும் கோடாரியின் கோர உறுமலாய் செவிப்பறை கிழிக்கிறது இடி” என வார்த்தைகளை அடுக்கிடும்போது
மானுடத்தின் இயலாமை அம்மணமாய் நிற்கிறது.
வீட்டிற்குள் எல்லாமும் இருட்டு
அப்பா பசியாற வந்திடும் வேளை
ஈரம்பாய்ச்சிய துணி இருக்கிறது..
வறுமையின் மொத்தமாக அவள்..
“கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் வந்தமர்ந்த
பட்டாம் பூச்சியை பார்த்ததும்”
கவிஞரே எப்படி இத்தனை இருட்டிலும்
பட்டாம் பூச்சியின் சிறகில் இருக்கும்
வண்ணங்களில் குதூகலிக்கிறீர்கள் நீங்கள்.! செம்மயா இருக்கு தோழர்.
கிழிந்த துணியை இழுத்துப் போர்த்தி
காலுக்கும் எட்டாமல் தலையையும் மூடிக்கொள்ளமுடியாமல் தூங்கியும் தூங்காமலும் இருக்கும் அவளின் மூச்சுக்காற்று உதறலில் தெரியும்
பனிபொழியும் இரவின் கொடூரம்..
ஆமாம் எதற்காக வாழ்கிறாள் அந்தக் கிழவி.? வாழ்வின் மீது நம்பிக்கை.!
நாளையும் நான் வாழ்ந்திட வேண்டும்
என்கிற உயிர் மீது கொண்டுள்ள பேரன்பு மட்டுமே.!    இன்று நிகழ்வில் எல்லாம் நடந்தது.. நேற்று நிகழ்ந்த ஒன்று இன்று நடந்ததாக நினைவில் இல்லை.. இன்று நடப்பதுதான் நேற்றும் நிகழ்ந்ததா..? நினைவு பிறழ்கிறது.. நேற்று நிகழ்ந்ததாக நினைவில் இருப்பதும், இன்று நடக்கவில்லையே எனை நினைத்திருப்பதும் “காத்திருப்பின் தாகம் அதிகரிக்க நாளை அதன் வாரிசாவது வந்து சேருமென்ற நம்பிக்கையின் உயிர்ப்பிடிப்பில் தொடர்கிறதென் தள்ளாடும் தனிமை” வயதானவர்களின்
தனிவாழ்வு வலிக்கிறது கவிஞரே.
வட்டிக் கடையில் எத்தனையோ நகை மீட்க முடியாம போனாலும் கவலை கொள்ளாத மனசு தன் அப்பன் நிலத்தை விற்று வங்கிப் போட்ட மீத முள்ள ஒத்தை நகையும் முழ்கிடும் வேளையில் அப்பனை நினைத்து
அழுதிடும் மனசை தேற்ற அப்பனைத் தவிர யாரால் முடியும்.. “ஏல ஒப்புகைச் சீட்டில்
விரலச்சு பதிக்கையில் விழிகசியும் மைதொட்டு ஒப்பமிடும் கண்ணீரை உலர்த்திச் சிரிக்கும் காற்றிற்கு ஒரு போதும் தெரிவதில்லை அது அப்பனின் வயலை விற்றுப்போட்ட நகையின் கடைசி கையிருப்பென்று”  உருகித்தான் போனேன் கவிஞரே.
காதலன்.. காதலி இருவர் மீது கொள்ளும்
நேசத்தில்தான் மனசுக்குள் எத்தனை எத்தனை அன்பின் மாற்றங்கள்..
“நான் இப்படி இருக்கிறேன் என்றால் உன் ஒருத்தியின் ஈரம்மிக்க சொற்களால் மட்டுமே”.. நான் “என் திமிரடங்க கூத்தாடிக்கிடக்கிறேனென்றால், அன்பே உன் மென்னகையால் மட்டும்தானடி”. இல்லை காதலா
“நீ தழுவிய காற்றுதான் நூற்றாண்டுகளின்
கனவுகளை திறக்கும், நீ வனைந்த சிறகுகள்தான் வான் பறத்தலை வசப்படுத்தக்கூடும்”. இது எல்லாமும் சத்தியம் ஒருவரொருவர் சுயம், அகம், புறம் உணர்ந்த புரிந்த காதலர்களுக்கு என்பதை
காதலி கடைக்கண் காட்டிவிட்டால் என்ற நிலையில் இருந்து எழுதி இருப்பார் கவிஞர் இன்போ.அம்பிகா.
பார்த்துப்பார்த்து கட்டிய தன் கனவு வீட்டினை விற்க நேர்ந்தால் விற்றவனின் வலி என்பதை “விற்றுக் கடந்த வீட்டின் வழி நுழைந்து சுவர் மோதித் திரும்புகிறது விற்றவனின் கவலைத் தோய்ந்த பெருமூச்சு”. என் அப்பாவின் வெப்பம்பொதிந்த மூச்சுக்காற்று
எனைத் எரித்ததைப் போன்று உணர்ந்தேன்.. எனது அப்பாவை அங்கு பார்த்தேன் கவிஞரே…
நீட் தேர்வு எழுத எம் பெண்பிள்ளைகளுக்கு நேர்ந்த அவமானத்தை ஆதியில் தொடங்கி மேலிருந்து பெண்களுக்கு தொடர்ந்து இழைத்து வரும் கொடும் துன்பத்தை அதே வலியோடுகொடுத்திருக்கிறீர்கள், “அரைபடி கடலை திருடினாள் என சந்தேகப்பட்டு கண்டாங்கி சேலை அவிழ்த்ததை; நூற்கண்டு திருடினாள் என்பதற்காக நூற்பாலையில் முந்தானை உருவியதை;   “அதெல்லாம் கிறுக்குப் பய காலம்ன்னு படிக்கப்போயி நீட் எழுதுற வாசலுல உள்ளாடை கழற்றச் சொன்ன அவமானத்தால நடைபொணமா போனாளாம்” பெண்கள் மீது எல்லா சமூலத்திலும் நடத்தப்படும் கொடூரத்தை
வேதனையோடு சொல்லி இருக்கிறார் கவிஞர்.
தன் மகள் ஓவியமாக வானத்தை வரையும் போதெல்லாம் மேகத்தை வரைய மறக்க மாட்டாள். இப்போது மழையையும் சேர்த்து
வரையத் தொடங்கி இருக்கும் காரணத்தை
வாசகனுக்கு வலியோடும்.. பேரன்பு கொண்டும் சொல்லி இருப்பார்.
“நிழல் பொழி தருக்களற்ற புலராச் சாலையில் மருள் கண்கள் கசிய இரந்துழன்று முக்கிமுனுங்கி பெருமூச்சோடு நறவை ஒழுகக் கடந்த பொதி மாடொன்றைக் கண்டபின்”
மகளுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.
80 கவிதைகளுக்குள் இரண்டு பாடல்கள்..
பாடல்களிலும் உங்கள் ஒளி திரும்பலாம் இன்போ அம்பிகா.. உங்களுக்கான தன்னித்துவம் தெரிகிறது.. வார்த்தைகளை கலந்து கட்டி கலக்கி கொண்டிருக்கிறீர்கள். பல புதிய வார்த்தைகள் இலக்கணச் செறிவோடு தெளித்துள்ளீர்கள் தூவானம் போன்று. மீண்டும் மீண்டும் பயன்படுத்திடும் வார்த்தைகள் எங்கிலும் பார்க்கமுடியவில்லையென்னால்.. ஒரு வேளை உங்கள் கவிதைக்குள் முழுமையாக எனை புதைத்துக் கொண்டதால் அடையாளம் காணமுடியவில்லையோ என்னவோ..
முதல் தொகுப்பே பின்னி பெடலுத்திருக்கிறீர்கள் இன்போ அம்பிகா..
பேரன்பும் வாழ்த்துக்களும்..
பச்சை மழையை மட்டும் வேண்டும் உங்களின் ஈர மனசுக்கு வணக்கங்கள்.!
பச்சைய மழை
கவிதை தொகுப்பு
இன்போ அம்பிகா
நகர்வு பதிப்பகம்
கருப்பு அன்பரசன்.
“பச்சைய மழை” 
வேண்டுவோர் பேசிடலாம்
82705 80656 .