நாம் அனைவருமே ஆரிய திராவிடப் போரின் சம காலச் சாட்சியங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆரியத்தின் ஆதிக்கவெறி திராவிடத்தின் சில அடிமைக் குதிரைகள் மீதேறி நமது குரல் வளையை நெரித்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்தப் போரில் தோற்றோமென்றால் நமக்குக் கிழக்கு என்பதே இருக்காது. நாம் நிலத்தை இழப்போம். நமது அதிகாரத்தை இழந்து விடுவோம். நிலமே அதிகாரம். நிலம் போனால் அத்தனையும் போம்.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் இடதுசாரி எழுத்தாளனின் கண்களில் வெறும் முப்பது காசுக் கடனுக்காய் கோயிலுக்குத் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்ட அங்காடி-பெரங்காடி எனும் பெண்களின் துயரம் மட்டுமே தெரிகிறது. எனவே ‘படுகைத் தழல்’ நாவல், ‘ஆண்டுக்கு 1லட்சத்து 15 ஆயிரம் கலம் நெல்லும், 300 கழஞ்சுப் பொன்னும், 2000 காசுகளும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வருவாயாக வந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்- 30காசுக் கடனை அடைக்க வழியின்றி கோயிலுக்குத் தங்களை அடிமையாக விற்றுக் கொண்ட தாய் அங்காடி-மகள் பெரங்காடி போன்ற பெண்டிரின் அழுகைக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இப்படி அடிமையாக்கப்பட்ட பெண்களின் பாதத்தில் பழுக்கக் காய்ச்சிய நரிச்சூல அச்சு பதிக்கப்பட்டது எனும் பதைப்புறும் தகவலையும் நாவலில் காண முடிகிறது.. எந்நேரமும் வெகுமக்களை ஏய்த்துப் பிழைக்கத் திட்டம் தீட்டும் அக்கிரமக்காரர்களின் சதியாலோசனை முணுமுணுப்பும், அந்தக் கயவர்களை எதிர்க்க வழியின்றிக் குமையும் வெகுமக்களின் மௌனக் கூச்சலுமே எழுத்தாளனின் காதுகளை நிறைத்து விடுகின்றன.

Image result for ஆரிய திராவிட போர்

அப்படி ஒரு அரிய மனிதராய் ஆரிய திராவிடப் போரின் தோற்றுவாய் முதல் இன்றைய நிலைவரை நமது சுரணைக்கு உறைக்கிறாற் போலத் தொடுத்து ‘படுகைத் தழல்’ எனும் நாவலாக்கித் தந்திருக்கிறார் தோழர்.புலியூர் முருகேசன். அனைவருக்கும் நிலம் வாழும் இடம் என்றால் உழவர்களுக்கு அதுதான் வாழ்க்கையே. அதனால்தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரிலும், பசுமை வழிச்சாலை என்ற பொய்முகத்துடனும், கெயில் குழாய் என்ற வடிவிலும் தங்களது நிலத்தை அரசின் கொடிய கரங்கள் ஆக்கிரமிக்க முயற்சிக்கும் போதெல்லாம் உழவர் பெருமக்கள் ஊண் உறக்கம் மறந்து தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். எட்டு வழிச்சாலைக்காகத் தனது நிலத்தை அபகரிக்க வந்த அரசின் இரும்புக் கரத்தை எதிர்த்து நின்று, தனது சுட்டு விரலை உயர்த்தி உரிமைக் குரல் எழுப்பிய பேருழத்தியை விடவும் மண்ணைக் காதலிக்கும் மற்றொருவர் இருக்க இயலுமா?

இராஜராஜனது பெருமை மிகுந்த ஆட்சியில் உற்பத்திச் சக்திகளாக வேளாண் குடிகளும், இடைக்குடிகளும் எப்படி நடத்தப்பட்டனர் என்பதை ஒருமுறை திறந்த மனத்துடன் வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தாலே விளங்கும். தான் யாருக்கானவனாக யாருடைய நலன் பேணுபவனாக இருந்தான் என்பதை இராஜராஜனே கல்லில் வெட்டி வைத்திருக்கிறான். அவற்றை அடிப்படையாகக் கொண்டு தோழர்.புலியூர் முருகேசன் நமக்காகப் படைத்திருக்கும் ‘படுகைத் தழல்’ நாவல் முழுவதும் இராஜராஜனது ஆட்சியின் கொடுந்தழலால் சுட்டெரிக்கப்பட்ட பல்வேறு தரப்பட்ட பொருளாதார உற்பத்திக் குடிகளின் கறுகல் வாடையடிக்கிறது. அந்தக் கொடுந்தழல் நம்மீதும் இன்றுவரை படர்ந்து கொண்டிருக்கிறது.

Image result for தமிழ்க் கல்வெட்டு

இந்தியாவின் கல்வெட்டுகளில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை தமிழ்க் கல்வெட்டுகளே என்பர். அதில் அரசர்கள் பார்ப்பனர்களுக்குக் கொடுத்த தான தர்மங்களைப் பற்றியனவே கணிசமானவையாக இருக்கின்றன. எந்தக் கேள்வியுமின்றி உழுகுடிகளிடமிருந்து பிடுங்கப்படும் நிலங்கள் எப்படி அகரங்களாக, அக்ரஹாரங்களாக, மங்களங்களாக, மஹாதானபுரங்களாக, இறையிலி நிலங்களாக மாற்றப்பட்டன என அறிய நேர்ந்தால் நெஞ்சம் பதறும். பொன்னாக விளைந்து குவிந்த தஞ்சைப் படுகையில், பசியின் தீராத செந்தழல் உழுகுடிகளின் வயிற்றில் கனன்று கொண்டே இருந்தது என்பதை இன்று நம்மால் நம்பவே இயலாது. ஆனால், வரலாறு இந்த அக்கிரமங்களைக் கல்வெட்டுக்களாகப் பதிந்து வைத்துள்ளது. இந்தத் தழல் இடைக்காலத்தது மட்டுமல்ல. என்றைக்கு கைபர் போலன் கணவாய்கள் வழியாக ஆரியர்கள் வந்தனரோ அன்று முதல் இன்று வரையிலும் திட்டமிட்டுத் தமிழரது உடலையும் உள்ளத்தையும் எரித்துக் கொண்டுள்ளது என்பது அற்புதமாக எழுதியுள்ளார் புலியூர் முருகேசன்.

Image result for thanjai periya kovil

இராஜராஜப் பெருங்கோயில் உயர உயர உழுகுடிகளின் நிலை தாழ்ந்து கொண்டே போகிறது. உழுகுடிகளின் மீதான வரிகள் இத்தனை என்றில்லை. உழுகுடிகளின் நிலைதான் இப்படி என்றால் இடைக்குடிகளின் நிலையும் மோசமாகத்தான் இருக்கிறது. ‘சாவா மூவா வாழ்மாடு’ என கால்நடைகளைக் கையளித்து விட்டு கோயிலில் நந்தா விளக்கெரிக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர் இடையர்கள். அரண்மனைக்குப் பால் படுபொருட்களை முறை வைத்துத் தரும் இடைக்குடியான மாதரியைச் சிலப்பதிகாரத்திலேயே கண்டிருக்கிறோம் என்றாலும் கோவில்களின் நித்தியப் பூசைக்கான பால், தயிர், நெய் முதலியவற்றிற்காகவும் நந்தா விளக்கெரிப்பதற்கான நெய்க்காகவும், பிராமண போஜனத்திற்கான பால் படுபொருட்களுக்காகவும் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். சோழ சாம்ராஜ்யத்தில் கோயில் என்ற நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நேர்மாறாக வெகுமக்களின் வாழ்வு தாழ்நிலைக்குப் போயிருக்கிறது. கல்லும், மண்ணும், மரமும் சுண்ணமும், சாந்தும், செங்கல்லும் சுமந்து மக்கள் மண்ணுக்குள் போகப் போக பெருவுடையாரின் பெருங்கோயில் விண்ணை முட்ட வளர்ந்திருக்கிறது. இறைப்பூசைக்கான அத்தனை செலவுகளுக்கும் வெகுமக்களே உழைத்துச் சாக வேண்டி இருந்திருக்கிறது. பார்ப்பனர்கள் கடவுளின் பெயரால் இந்தச் சுரண்டல்களைத் திட்டமிட்டு நடத்தி வந்திருக்கின்றனர்.

சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்துத் தளங்களிலும் தங்களது சுரண்டல் வேலைகளைத் தம் வர்க்க நலனுக்காகத் திறம்படச் செய்திருக்கின்றனர் பார்ப்பனர்கள்
ஆரிய திராவிடப் போரின் தளபதிகளுள் மிக முக்கியமானவர்கள் தமிழ்ச் சித்தர்கள். ஆரியத்தின் வைதீகக் கொள்கைக்கு எதிரான மிகப் பெரிய கலகக் குரல் அவர்களுடையது. தஞ்சைப் பெரிய கோவிலில் பெருவுடையார் எனப்படும் மாபெரும் சிவலிங்கத்தைச் சுண்ணம் சார்த்தி நேர் நிறுத்த முடியாமல் பார்ப்பனர்கள் தவித்த பொழுது இராஜராஜனின் அழைப்பை ஏற்று வருகை புரிந்த கருவூர்ச் சித்தர் தனது வாயிலிருந்த தாம்பூலத்தைத் துப்பி நிலை நிறுத்தினார் என்ற செவி வழிச் செய்தி ஒன்று உண்டு. மெய்யோ பொய்யோ இது பார்ப்பனியத்தின் அகந்தையையும், இறுமாப்பையும் காறி உமிழும் தரமான சம்பவம்.

Image result for சித்தர்

சித்தர்களின் எதிர்த் தாக்குதலைத் தாள மாட்டாத பார்ப்பனியம் எப்படி வஞ்சனையால் அவர்களை அழித்தொழிக்கிறது என்பதையும் நாவலில் சொல்லிச் செல்கிறார் புலியூர் முருகேசன்.பார்ப்பனியம் எப்படித் தனது எதிரிச் சமயங்களான பௌத்தம் சமணம், ஆசீவகம் ஆகியவற்றை அழித்தொழித்தது என்பதற்கு முக்கியமான உதாரணம் மதுரையில் திருஞானசம்பந்தர் தலைமையில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்ற சம்பவம். அந்தச் சம்பவமும் நாவலில் இடம் பெற்றிருக்கிறது பொதுவாகவே வரலாற்று நாவல்களுக்கெனப் பெரும் வாசகப் பரப்பு உண்டு. தமிழில் கல்கிக்கு இருக்கும் வாசகப் பரப்பு எத்தகையது என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.‘பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் மனதில் சோழப் பேரரசைப் பற்றி உண்டாகி இருக்கும் அத்தனை பிம்பங்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட வல்லது ‘படுகைத் தழல். படுகைத் தழல்’ பேசுவது முழுக்க முழுக்கக் குடிமக்களின் பாடுகள், குடிமக்களின் பாடுகள் மட்டும்தான். அசல் குடிமக்கள் காப்பியம் படுகைத் தழல்’ என்றாலும் மிகை இல்லை.

நாவலில் ஒரு காதல் காட்சி. வேம்பனும் பெரங்காடியும் கரும்புக் காடொன்றில் முயங்குகிறார்கள். புலியூர் முருகேசன் அதை இப்படி விவரிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் கரும்புச் சாறாகப் பருகிக் கொண்டார்கள். அவ்வளவுதான் விவரிப்பு. நாவலில் எதிர்மறையாய் விமர்சிக்க எதுவுமே இல்லையா? என்றால் இருக்கிறது என்றுதான் சொல்வேன். நெல்லரிசிச் சோற்றில் எங்காவது தட்டுப்படும் நெல்லைப்போல. நாவலில், வெகுமக்கள் பார்ப்பனர்களால் பட்ட பாடுகளே கதையாகியிருக்கின்றன. நாவலின் ஒவ்வொரு கண்ணியும் மக்களின் பாடுகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை வரலாற்று ஆவணத்தைப் படித்து கொண்டிருக்கிறோமா என்ற எண்ணம் எழுவது நாவலின் குறையல்ல.

Image result for படுகைத் தழல்நமது வாசிப்பின் குறைபாடு என்பதாகவே புரிந்து கொள்கிறேன். ஒரு இடதுசாரி நாவலில் தன்னேரிலாத தலைமக்களாக ‘மூதன்,’ ‘பழையோள்’ போன்றோர் காட்டப்படுவது நெருடலாக உள்ளது. ஆய்வறிஞர் ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை நினைவுபடுத்தும் நாவலின் கடைசிப் பகுதி சற்றே வறட்சியானதாகப் பட்டது. தனி நாவலாகப் படைக்கத் தகுந்த செய்திகளைச் சுருக்கி ‘படுகைத் தழலின் இறுதிப் பகுதியாக இணைத்து விட்டாரோ என்ற எண்ணமும் வருகிறது. ஆனால், இந்தப் பகுதியை கதையின் முற்பகுதியுடனும், நடுப்பகுதியுடனும் தொடர்புபடுத்தியிருக்கும் பாங்கு அபாரமானது; கலைத்துவமானது. சமஸ்கிருத மந்திரங்களுக்கு மனிதர்களை மயக்கும் சக்தி இருப்பதான பொருள்படும்படி எழுதியிருப்பது இன்னொரு நெருடல். தெலுங்கு மொழிப் பாடல்கள் இனிமையானவை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கே மேற்குறிப்பிட்டதும் உண்மை.

சந்தேகமிருந்தால் ‘மின்னேட்டி சூரிடு ஒச்சேனம்ம பல்லே கோனேட்டி தாமர்லு பிச்சேனம்ம’ என்ற பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு இடதுசாரி இயக்கத் தோழரிடமிருந்து ‘ஆரிய, திராவிடப் போரைப்’ பற்றி இப்படியொரு நுணுக்கமான, நிறைவான நாவலை எதிர்பார்க்கவே இல்லை. பற்பல துண்டு துண்டான வரலாற்று நிகழ்வுகளைத் தேடித் திரட்டித் தக்க முறையில் இணைத்து நாவலாக்கித் தந்திருக்கும் தோழர் புலியூர் முருகேசனின் உழைப்பும், அர்ப்பணிப்பும் திறமையும் பாராட்டத்தக்கன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *