கௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பொன். தனசேகரன் மொழிபெயர்த்த நூல். அதை அடுத்து மயிலைபாலு மொழியாக்கம் செய்து தமுஎகச தென் சென்னைமாவட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட கவுரிலங்கேஷின் சிந்தனைக்கு மரணமில்லை என்ற நூல். மூன்றாவதாக கிராசுமொழி பெயர்த்த கௌரி லங்கேஷ் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள் என்றஇந்த நூல். இதில் கவுரி லங்கேஷின் பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை 2015-16 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அண்மைக்கால பதிவுகள் என்பதால் அவற்றின் புரிதல்நமக்குக் கூடுதலாகவே இருக்கிறது. ஷாபானுவுக்கு மறுக்கப்பட்ட நீதி சாய்ராபானுவுக்குக் கிடைக்கட்டும் என்ற முதல் கட்டுரையே முத்தலாக் முறையை எதிர்த்த வழக்கு பற்றிய அறிமுகமாக அமைந்திருக்கிறது. முத்தலாக் முறை தவறானது. அது சட்டவிரோதமானது. பெண்கள் சமுதாயத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . கௌரி லங்கேஷின் கனவு நிறைவேறி இருக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள மோடி அரசு அந்த நீதியைத் திரித்துஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. இப்போது கௌரி லங்கேஷ் இருந்திருந்தால் அதன் மீதான விமர்சனம் என்னவாக இருக்கும் என்பதை நம்மால் அறிய முடியாமல் போய் விட்டது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற அடிப்படையில் சமூக செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ், மற்றொரு சமூகச் செயற்பாட்டாளரான காஞ்சா அய்லயா எழுதிய “ நான் ஏன்இந்து அல்ல” என்ற நூலை மிகவும் சிலாகித்துத் தமது கட்டுரை ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் . “உண்மையில் வன்முறையானது இந்துயிசத்தின் முதன்மை கட்டுப்பாட்டுகருவியாக இருந்து வருகிறது. அதனால்தான் மற்ற மதக் கடவுள்களுக்கு மாறாக இந்துக் கடவுள்கள்ஆயுதங்கள்வைத்திருப்பதாக சித்தரிக்கப்படுகின்றன. வேறு எந்த மதத்திலும் மக்களைஅடிபணிய வைக்கும் விதத்தில் ஒரே சமயத்தில் ஏற்பு நிலை, வன்முறை ஆகிய இரு வடிவங்களில் கடவுள்கள் பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறாக இந்துக் கடவுள்களுக்கும் தலித் பகுஜன்களுக்கும் இடையிலான உறவு அடக்குபவர், அடக்கப்படுபவர் என்பதாகவே இருந்துள்ளது.”விஷ்ணு நீலவண்ணத் தோலுடன்கூடிய கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்என்றால் சத்ரியர்களும், தலித் பகுஜன் களும் பிராமணர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த காலத்தில் இந்தக் கடவுள் உருவாக்கப்பட்டிருக்கலாம். சத்ரியர்களைக் கவர்ந்திழுப்பதற்காக விஷ்ணு உருவாக்கப்பட்டு, அவர் சத்திரியர்கள்-பிராமணர்கள் இருவரின்ரத்தக் கலப்பு என்று கூறப்பட்டிருக்கலாம்.
” பிரம்மனும், விஷ்ணுவும் எந்த வகையிலும் பழங்குடியினரைப்போல் தோற்றமளிக்காததால், அவர்கள் அந்த உருவத்தில் சிவனைப் படைத்தனர். சிவனையும் ,பார்வதியையும் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் கீழாகப் படைத்ததன் மூலம் எப்போதுமே பழங்குடியினர் பிராமணர்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற உண்மையைப் பரப்பினர்.இதுபோன்ற கருத்துக்கள் கௌரி லங்கேஷூக்குப் பிடித்தமானவையாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நூலைக் கன்னடத்தில் மொழிபெயர்க்க ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று இந்தக் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் . அந்த நூல் அவர் விரும்பியபடி கன்னட மொழியில் பதிவு செய்யப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. இது தேடியறிய வேண்டிய ஒரு விஷயமாகத் தெரிகிறது. மற்றொரு முக்கியமான கட்டுரையாக இடம் பெற்றிருப்பது “எங்கள் தேசபக்தி உங்கள் தேசபக்தி” என்றகட்டுரையாகும். இந்தக் கட்டுரை சென்றஆண்டு மே மாதம் எழுதப்பட்டுள்ளது. இதில் கௌரி லங்கேஷ் எழுத்துக்களைவிட அதிகமாக இடம்பெற்றிருப்பது பத்திரிகையாளர் ப்ரியா ரமணியின்எழுத்துக்கள்தான். அவருடைய கருத்துக்கள் மிகவும் பிடித்தமானவையாக இருப்பதால், அப்படியே என்னுடைய பார்வையைப் பிரதிபலிப்பதால் அதைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துத் தருகிறேன் என்று சொல்மூலமாகத் தந்து அதனைக் கட்டுரையோடு சேர்த்திருக்கிறார். இந்தக் கட்டுரையில் தேசபக்தி பற்றி மிக விரிவாக அவர் கூறியிருக்கிறார்.“உங்கள் தேசபக்தி அனைத்துக்கும் காவியைப் பூச விரும்புகிறது. என்தேசபக்தி பொருளாசையைக் கைவிட்ட யோகிகளின் ஆடைகள் மற்றும்கொடி, ஜிலேபியின் வண்ணங்களில் மகிழ்ச்சி கொள்வது. உங்களது யோகிகள் அதிகாரப் பசியும் ,அரசியலும் கொண்டவர்கள்” என்று மிகத் தெளிவாக தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இந்தக் கருத்துகளில் கவுரி லங்கேஷூக்கு உடன்பாடு இருந்தது வியப்பில்லை தானே! இப்படியாக 10 கட்டுரைகளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் பல்வேறு விஷமத்தனங்களை, வில்லத்தனங்களை, பொய்களை, புரட்டுகளை , கருத்துரிமையைக் காலில்போட்டு மிதிப்பதை எல்லாம் மிக கவனமாக பதிவு செய்துள்ளன. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்க ஊர் சுற்றி திரியப் போகும் மோடிக்கு பதில் சொல்ல பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க நூல்கள் பயன்படும் என்பது உறுதி. கிராசு மொழிபெயர்த்துள்ள இந்த நூலும் மிக முக்கியமான பதிவு . இதனை வாங்கிப் படிப்பது தேசத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகக் கருதப்பட வேண்டும்.
கௌரி லங்கேஷ் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள்
கன்னடத்தில் இருந்து
ஆங்கிலத்தில் மார்க் செபாஸ்டியன், ஆரோன் மென்சஸ்
தமிழில் : கிராசு
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
பக்: 64, விலை: ரூ. 50/-