தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் ‘கேட்ச்-22’ (Catch-22)
– அ. குமரேசன்
போர் மீது ஒரு வசீகரம் கட்டப்படுகிற காலக்கட்டம் இது. உலகின் பல பகுதிகளிலும் போர்க் கூச்சல்கள் செவிகளைத் துளைக்கின்றன. இந்தியா–பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணிந்ததில் இருநாட்டு மக்களும் நிம்மதியடைகிறார்கள். அதற்குள் முடிந்துவிட்டதே என்று ஆதங்கப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். போரில் ஏதாவது அறிவுடைமை இருக்கிறதா என்று கேட்க வைக்கிறது, 1961ஆம் ஆண்டில் வெளியான ‘கேட்ச்–22’ என்ற நாவல்.
‘கேட்ச்-22’ (Catch-22) (பிடி–22) என்றால் என்ன? தப்பிக்க முடியாத, ஒரு சிக்கலிலிருந்து தப்புவதற்கான முயற்சியே மேலும் சிக்கல்களைக் கொண்டுவரும் இக்கட்டான நிலைமையைக் குறிப்பிடுவதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. “அவர்கள் கேட்ச்–22 நிலைமையில் மாட்டிக்கொண்டார்கள்” –இப்படி.
சுவையான தகவல் என்னவென்றால், கதையை எழுதிய ஜோசப் ஹெல்லர் (1923–1999), ஏற்கெனவே மக்கள் புழங்கிக்கொண்டிருந்த சொல்லைத் தனது நாவலுக்குப் பயன்படுத்தவில்லை, மாறாக அந்த நாவலில் வரும் சொல் மக்களிடையே புழக்கத்திற்கு வந்துவிட்டது!
விமானப் படையில் ‘கேட்ச்-22’ (Catch-22) என்றொரு விதி இருப்பதாக நாவல் சொல்கிறது. அதாவது, படையில் பணி புரிகிறபோது ஒரு விமானியின் மனநலம் குன்றிவிட்டால் அவர் தன்னை விடுவிக்குமாறு விண்ணப்பிக்கலாம். ஆனால், “பிடி–22” விதியின்படி மனநலம் குன்றிய ஒருவரால் அதை உணர்ந்து அப்படிக் கோர இயலாது, அவர் அப்படிக் கோருவதே அவர் மனநலத்தோடு இருப்பதால்தான், ஆகவே விண்ணப்பம் நிராகரிக்கப்படும்!

“தேசவிரோத புத்தகம்”!
வேடிக்கையான இந்த வேதனை நிலைமையை வைத்து, அல்லது வேதனையான இந்த வேடிக்கை நிலைமையை வைத்து நாவலைப் புனைந்திருக்கிறார் ஹெல்லர். ஆம், வைத்துச் செய்திருக்கிறார்!
ஒருபுறம் அரசுகளால் போர்களில் இறக்கிவிடப்படும் படைவீரர்களோடு பொதுமக்களும் பேரிழப்புகளை எதிர்கொள்கிறார்கள். இன்னொருபுறம் ஆயுதத் தயாரிப்பு முதலாளிகளும் ஊழல் பேர்வழிகளும் ஆதாயம் அடைகிறார்கள். இந்த நிலைமையை எடுத்துக்காட்டுகிற நாவல் அப்படியே போகிற போக்கில், இதையெல்லாம் தடுத்து மக்களைக் காப்பாற்ற முடியாத கடவுள் கையாலாகாதவர் என்றும் சாடுகிறது.
இதெல்லாம் போதாதா? தேசப்பற்றுக்கு எதிராகப் பேசுகிறது, அமெரிக்க அரசின் போர் நடவடிக்கைகளைப் பகடி செய்கிறது, போர் சார்ந்த தொழில்துறையை இழிவுபடுத்துகிறது, படை அதிகாரிகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது, ராணுவப் பணிக்கு வர விரும்பும் இளைய தலைமுறையினரிடையே பாதுகாப்புத் துறை பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புகிறது, கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தி ஒழுக்க வாழ்வைச் சீர்குலைக்கிறது என்று கிளம்பிவிட்டார்கள். பல பள்ளி நூலகங்களின் அடுக்கங்களிலிருந்து புத்தகம் அப்புறப்படுத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பையும், கருத்தாளர்களின் கண்டனங்களையும் தொடர்ந்து மறுபடியும் வைக்கப்பட்டது.
நாவலுக்குள்…
இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் அமைக்கப்பட்ட அமெரிக்க விமானப்படைத் தளத்தில் விமானியாக இருப்பவன் யோசாரியன். தொடர்ந்து போர் விமானங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆபத்தான அந்தப் பணிகளைத் தவிர்க்கப் பல முயற்சிகளை எடுக்கிறான். தனக்கு மனநலம் குன்றிவிட்டதாகக் கூறி தன்னை விடுவிக்கக் கோருகிறான். ஆனால் அந்த ‘கேட்ச்-22’ (Catch-22) விதி அவனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. ஆகவே, நாள்பட்ட, கடுமையான ஈரல் சீர்குலைவு எனக் கூறி ராணுவ மருத்துவமனையில் சேர்கிறான்.

உயரதிகாரிகள் படைவீரர்களின் உயிர் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பதையும், தங்களுடைய பதவி உயர்வு உள்ளிட்ட நோக்கங்களுடன் வீரர்களைப் பலிகொடுக்க அவர்கள் துணிவதையும் காண்கிறான். கர்னல் கேத்கார்ட் என்ற அதிகாரி, தனது பிரிவின் வீரர்களை, வேறு எந்த பிரிவையும் விடப் பல மடங்கு அதிகமான முறை தாக்குதல் விமானங்களைச் செலுத்துவதற்குக் கட்டாயப்படுத்துகிறான். அரசாங்கத்திடம் தன்னை ஒரு மகாவீரனாகக் காட்டிக்கொள்வதற்காக, வீரர்கள் வீடு திரும்ப முடியாதபடி, ஒரு சுற்றுப்பணியை முடிப்பதற்கு ஓட்டியாக வேண்டிய விமானங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்துகிறான்.
யோசாரியன் ஆகாயச் சண்டைகளையும் நண்பர்கள் உள்ளிட்ட சக வீரர்களின் மரணங்களையும் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான்; ஒவ்வொரு பணி தரப்படும்போதும் எதிரிப்படையால் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறான். அவனுடைய கோழைத்தனம் வெளிப்படுகிறது. நாவலின் போக்கில் செல்லச்செல்ல, அவன் கோழையல்ல, துணிவு மிக்கவன், கட்டுப்பாடு மிக்கவன் என்று தெரியவருகிறது. அவன் கவலைப்பட்டது எதிரிகளின் வலிமையைப் பற்றியல்ல, சொந்த நாட்டு ராணுவக் கெடுபிடிகள் பற்றித்தான்.
கதாபாத்திரங்களுக்கிடையில் துண்டாடப்பட்ட கதை போல, சில அத்தியாயங்களில் ஒற்றைக் கால வரிசைப்படி நகர்கிற கதை, மற்ற அத்தியாயங்களில் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமாக மாறிமாறிப் பயணிக்கிறது. போர்க்காலத்தின் நியாயமான அச்சம் விமானிகள் எதிர்கொள்ளும் கடும் அதிர்ச்சிகளின் மூலமாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. தாக்குதல்களையும் மனித உயிர்கள் கொல்லப்படுவதையும் போற்றுதலுக்குரிய வீரச்செயலாக அல்லாமல், கவலைக்குரிய சோகச் சூழலாகச் சித்தரிக்கிறது என்று நூல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பற்ற இத்தாலிய மலை கிராமத்தின் மீது அர்த்தமற்ற தாக்குதலுடன் திகில் தொடங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரக்தி, போரில் மனிதர்கள் காணாமல் போவது என்று மேலேறும் நாவல், ஒரு வெகுளித்தனமான இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதோடு உச்சக்கட்டத்தை அடைகிறது.
நாவல் பல்வேறு கோணங்களின் போர்க்களத் துயரங்களைக் காட்டினாலும், செத்துவிட்டான் என்று நினைத்த நெருங்கிய நண்பனான ஓர், சாகசமான முறையில் வேறுநாட்டுக்குச் சென்றதை அறிந்து மகிழும் யோசாரின், தானும் வெளியேறி ஓடுவதாக இன்பியல் காட்சியுடனேயே நிறைவடைகிறது.
போர் வணிகமும் கடவுளும்
படையின் உணவுப் பிரிவு அதிகாரி மிலோ. போர்ச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு வணிகப் பேரரசையே கட்டுகிற மிலோ உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தளவாடங்களையும் விமானங்களையும் கூட வாங்கி விற்கிற அளவுக்குப் பணம் குவிக்கிறான். அது மட்டுமல்ல, வீரர்களுக்குத் தேசப்பற்றுடன் எதிரிகளோடு மோதுவதற்கு ஊக்கமளித்துவிட்டு, எதிரி நாட்டுடனேயே கூட தன் வணிகத்தை விரிவுபடுத்துகிறான். ஒரு கட்டத்தில் சொந்தப் படைப்பிரிவுத் தளத்தின் மீதே குண்டு வீசுவதற்குத் தயங்காமல் ஏற்பாடு செய்கிறான். லாபம்தான் குறி என்றான பின் தேசமாவது, பற்றாவது! மிலோ மூலமாக, போர் சார்ந்த பொருள்கள் தயாரிப்பின் வணிகமய வலைப் பின்னலை அறிய முடிகிறது என்று ஒரு வாசகர் பதிவிட்டிருக்கிறார். லாபத்திற்கான பீடத்தில் பலியிடப்படுகிறவர்கள் உயிருக்கு அஞ்சாத வீரர்களும், சண்டையில் மாட்டிக்கொள்ளும் பொதுமக்களும்.
நடப்பதையெல்லாம் கண்டு மனம் நோகிற யோசாரினிடம் யாரோ கடவுளின் சித்தம் இது என்று சொல்கிறார்கள். கடவுளின் செயல்கள் சாமானியமாகப் புரிந்துகொள்ள முடியாதவையாகப் புதிராகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆவேசமடையும் யோசாரின் இவ்வாறு பேசுகிறான்: “கடவுள் புதிரான வழிகளில் செயல்படுகிறார் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதில் புதிர் ஒன்றுமில்லை. கடவுள் எந்த வேலையும் செய்யவில்லை. அவர் விளையாடுகிறாராக இருக்கும் நம்மை முற்றிலும் மறந்துவிட்டாராக இருக்கும் – கிராமத்தில் ஒரு மந்தமான, குழப்பமான, அறிவில்லாத, ஆணவம் பிடித்த, முரட்டுத்தனமான பண்ணையார் போல.”

தன்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறவர்களிடம் தொடர்ந்து பேசுகிறான்: “நல்ல கடவுள் தனது படைப்பின் உடலில் சளி, பல் சிதைவு போன்ற தொந்தரவுகளை ஏன் சேர்க்க வேண்டும்? வயதானவர்களுக்கு மலத்தை கட்டுப்படுத்தும் சக்தியை அவர் ஏன் பறித்தார்? அவர் ஏன் வலியை உருவாக்கினார்? ஓ, வலியின் வாயிலாகவே ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறாரா? அதற்குப் பதிலாக அவர் ஏன் ஓர் அழைப்பு மணியைப் பொருத்தியிருக்க முடியாது? ஆபத்து வரும்போது அவருடைய வானக கீதங்களில் ஒன்றை ஏன் ஒலிக்கச் செய்யக்கூடாது? ஒவ்வொருவரின் நெற்றியின் நடுவில்நீலம் சிவப்பு நியான் விளக்குகள் எரிந்து எச்சரிக்கிற அமைப்பை ஏன் பயன்படுத்தியிருக்க முடியாது? ஒரு ஜூக்பாக்ஸ் தயாரிப்பாளர் கூட இதைச் செய்திருக்க முடியும் என்றால் கடவுளால் ஏன் முடியவில்லை? ஒரு வேலையை சரியாகச் செய்ய அவருக்கு இருந்த வாய்ப்பையும் சக்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கிறபோது, அதற்கு பதிலாக அவர் உருவாக்கிய முட்டாள்தனமான, அருவருப்பான குழப்பங்கள்தான் கண்ணில் படுகின்றன. அவருடைய முழுமையான திறமையின்மை மலைத்துப்போய் நிற்க வைக்கிறது. …”
தப்பியோடிய யோசாரின் போரால் சிதைந்த இத்தாலிய நகரம் ஒன்றில் நடந்து செல்லும் காட்சியைபற்றி இவ்வாறு எழுதுகிறார் ஜோசப் ஹெல்லர்: “யோசாரியன் அங்கிருந்து விலகிச் செல்ல வேகத்தை அதிகரித்தான், கிட்டத்தட்ட ஓடினான். இரவு திகில்களால் நிறைந்திருந்தது. மேலும், கிறிஸ்து உலகெங்கும் நடந்து சென்றபோது எப்படி உணர்ந்திருப்பார் என்று அவன் நினைத்துப் பார்த்தான் – பித்தர்கள் நிறைந்த மருத்துவமனையில் ஒரு மனநல மருத்துவர் நடப்பது போல, கொள்ளையர்கள் நிறைந்த சிறைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவன் நடப்பது போல! ஒருவரும் எஞ்சியிராத ஊரில் ஒரு தொழுநோயாளி எதிரே வந்தால் கூட எவ்வளவு வரவேற்புக்குரியவராக இருப்பார்!”
ஜோசப் ஹெல்லர்

நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளினில் கான் ஐலேண்டில் ரஷ்யாவிலிருந்து வந்த ஏழை யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் எழுத்தாளர் ஜோசப் ஹெல்லர். இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க விமானப்படையில் குண்டுவீச்சு விமானியாகப் பணியாற்றியவர். போருக்குப் பிறகு ஆங்கிலம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியராகவும், ஒரு விளம்பர நிறுவனத்தில் படியெடுப்பு எழுத்தராகவும் வேலை செய்தவர். “சம்திங் ஹேப்பண்டு”, “குட் அஸ் காட்”, “குளோசிங் டைம்” உள்ளிட்ட அவரது நாவல்களும் புகழ்பெற்றவை. அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூக நிலைமைகளையும் அதிகாரத்துவத்தையும் எள்ளி நகையாடுபவைதான் என்று தெரியவருகிறது.
தொடக்கத்தில் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘கேட்ச்-22’ (Catch-22) பின்னர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் அடுத்த பாகமாகவே “குளோசிங் டைம்” நாவலை எழுதினார் என்று கூறப்படுகிறது.
புத்தகம் வெளியானபோது விற்பனை மந்தமாகவே இருந்தது. இன்று, உலகில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது. திரைப்படமாகவும், வலைத்தொடராகவும் வந்து ஏராளமானோரிடம் சென்றடைந்திருக்கிறது..
எழுதியவர் :

அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


போர் என்பது மனிதம் மறந்தவர்களின் விளையாட்டு; இங்கு மதம், கடவுள், தேசப்பற்று ஆகிய அனைத்தும் வியாபார யுக்தியே என்பதை மறந்தவன்/அறியாதவன், கூக்குரல் எழுப்புகிறான் வாழ்க என் தேசம் என்று . போகும் உயிர் தன்னுடையாதாக இருந்தால் , தன் ரத்த சொந்தமாக இருந்தால் தெரியும் போரின் வலி . அந்த வலியை உணர்ந்த ஒரு மனிதன் அந்த அவலத்தை பதிவு செய்துள்ளான். ஆனால் , இந்த தேசத்தில் உண்மை பேசுவது எவ்வளவு பெரிய தவறென்று நீங்கள் அறிவீர்களா ?
There was only one catch and that was catch-22 எனும் (இன்றும் என்னால் மறக்க முடியாத) அறிமுக வாக்கியத்துடன் துவங்கும் இப்புத்தகம் ஹெல்லரின் சிறப்பான படைப்பு. அவரது மற்றைய படைப்புகள் ஒன்றும் சிலாகிக்கத்தக்கதாக இல்லை. போருக்கு எதிரான அவரது பதிவாககூட இதைக் கொள்ளலாம் என்று கருதுகிறேன். சமூகம் பற்றிய எள்ளலை அவரது கதைகளில் படித்ததுண்டு. இந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொருவர் பிரிசிக். இவரது ஜென் அண்ட் தி ஆர்ட் ஆஃப் மோட்டர் சைகிள் …. இருவருமே அறுபதுகளின் இறுதியில் வியட்நாம் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் நார்மன் மெயிலரைப் போன்ற அளவில் இல்லையென்றாலும் இளைஞர்களைக் கவர்ந்தவர்கள்.