தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –14 | ‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!
அ. குமரேசன்
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிற, நவீனத்துவ இலக்கிய முன்னோடியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற நாவல் 1922ஆம் ஆண்டில் வெளியான ‘யுலிசிஸ்’ (Ulysses)., அந்நாளிலேயே புராணக் கதாபாத்திரத்தை வைத்து மாற்றுச் சிந்தனை உள்ளிட்ட புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியதற்காகப் பாராட்டுகளைப் பெற்ற படைப்பு. அயர்லாந்து நாட்டின் ஜேம்ஸ் ஜாய்ஸ் – James Joyce (1882–1941) எழுதிய இந்தக் கதை, தொடக்கத்தில் கடுமையான முரண் விமர்சனங்களைச் சந்தித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. இலக்கியவாதிகளின் கருத்துகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் படிப்படியாகத் தடை விலக்கப்பட்டது, அமெரிக்காவில் பதிப்பாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் 1934இல் தடையை நீக்கியது.
முரண்களாகக் கூறப்பட்டவை – வழக்கமான நாவல்களிலிருந்து மாறுபட்ட நடை, ஆகவே வாசிப்பதற்கு எளிதாக இல்லை. திடீர்த் திடீரென்று தத்துவம், உளவியல், அறிவியல், வரலாறு, மொழி இலக்கணம் என்று எங்கெங்கோ போகிறது, ஆகவே கதை என்னதான் சொல்கிறது எனப் புரியவில்லை. தடைக்கான காரணங்களாகக் கூறப்பட்டவை –பாலியல் உறவுகளைச் சித்தரிக்கிறது, அது அன்றைய சமூகக் கருத்துகளுடன் முரண்படுகிறது. ஒரு பெண்ணின் பாலியல் எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுகிறது, அது ஒழுக்க நெறிகளை மீறுகிறது.

இந்த எதிர்ப்புகள் நியாயமற்றவை என்று எழுத்தாளரும், கதையின் புதுமையை ரசித்துக் கருத்தை ஏற்றுக்கொண்ட இலக்கியவாதிகளும் நிறையவே வாதிட வேண்டியிருந்தது. அதில் வெற்றியும் கிடைத்தது. நாவல் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் சுவையானவை.
மூன்று பாகங்களாக வந்த இந்த நாவலில் மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளன. அத்தியாயம் என்று சொல்வது தவறு, ஏனென்றால் புத்தகத்தில் காட்சி (எபிசோட்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கப் பதிப்புகளில், காட்சிகளுக்குத் தலைப்புகளோ, வரிசை எண்களோ தரப்படவில்லை. ஆனால் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவது வெவ்வேறு முறைகளில் உணர்த்தப்பட்டிருக்கும். ஒரு காட்சி உரைநடையாக இருக்கும், இன்னொரு காட்சி நாடக உரையாடலாக இருக்கும், மற்றொரு காட்சி கவிதை வடிவில் இருக்கும், வேறொரு காட்சி சொல் விளையாட்டுகளோடு ஆங்கில மொழியின் வரலாறு பற்றிப் பேசும்! பல இடங்களில் வாக்கிய அமைப்புகள் கரடு முரடாக இருக்கும். இதையெல்லாம் ஜேம்ஸ் ஜாய்ஸ் திட்டமிட்டே செய்திருந்தார்.
மூவரின் கதை
1904 ஜூன் 16 , அயர்லாந்து தலைநகர் டப்ளின். அந்த ஒரு நாளில் நடைபெறுகிற, குறிப்பாக மூன்று பேரின் அனுபவங்களும் சிந்தனைகளுமே கதை. பத்திரிகை விளம்பர முகவரான லியோபோல்ட் ப்ளூம் அதன் விற்பனையாளர். அவரது மனைவி மோல்லி ஒரு பாடகர். இளம் ஆசிரியரான ஸ்டீபன் டெடலஸ் ஓர் எழுத்தாளர்.
நகரத்தின் ஒரு கோபுரக் கட்டடத்தில் நண்பர்களோடு குடியிருக்கும் ஸ்டீபன் டெலஸ் தனது தாயின் மரணத்தை எண்ணி வருந்துகிறான். நண்பர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பள்ளிக்குச் சென்று வகுப்பில் வரலாற்றுப் பாடம் நடத்தும் ஸடீபன் பின்னர் கடற்கரைக்குச் சென்று தனியாக அமர்ந்து சிந்தனையில் மூழ்குகிறான். தனது தந்தையுடன் நல்ல உறவில் இல்லாத ஸ்டீபன் தனக்கொரு ஞானத் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறான்.
லியோபோல்ட் ப்ளூம் தனது மனைவிக்குக் காலை உணவு தயாரித்துக் கொடுக்கிறார். பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்து நகரத்தில் சுற்றுகிறார். மனைவிக்கு பிளேசஸ் போய்லான் என்ற, இசைக்குழு மேலாளருடன் தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகம் அவரை அப்படிச் சுற்ற வைக்கிறது. ஆனால், மார்தா கிளிஃபோர்ட் என்ற பெண்ணுக்குப் புனைப் பெயரில் காதல் கடிதங்கள் அனுப்புகிறவரான அவருக்கு, அந்தப் பெண்ணிடமிருந்து கடிதம் வருகிறது. தொழில் சார்ந்தும் நட்பு முறையிலும் பலரோடு உரையாடுகிறார். இன்னொரு பக்கம், தனது மகனை இழந்த துயரத்தில் இருக்கும் அவரும், தனக்கொரு ஞானப் புதல்வன் வேண்டுமென நினைக்கிறார்.
மோல்லிக்கு உண்மையிலேயே போய்லானுடன் தொடர்பு இருக்கிறது. அவருடைய பாலியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது காரணமா அல்லது மிகுதியான வேட்கை கொண்டவரா என்பது வாசகர்களின் கருத்துக்கு விடப்படுகிறது. சிறுவயதில் தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக ஒரு தோழியுடன் பழகியவர் என்று நாவலின் பிற்பகுதியில் தெரியவருகிறது.
ஊரைச் சுற்றி வருகிற ப்ளூம் தனது செயல்கள் பற்றித் தனக்குத் தானே விமர்சித்துக்கொள்கிறார். தனிமை, மனைவியின் மீது சந்தேகம், தானே சந்தேகத்துக்கு உரியவராக நடந்து கொள்வது, மோல்லியின் விருப்பங்கள் பற்றிய மதிப்பீடு, மனசாட்சியின் விசாரணை ஆகியவற்றால் உந்தப்படும் உணர்ச்சி மேலீட்டுடன் அவர் அலைக்கழிக்கப்படுகிறார்.

ஒரு மதுபானக் கூடத்தில் ப்ளூம், ஸ்டீபன் இருவரும் அறிமுகமாகிறார்கள். ஒருவர்க்கொருவர் பிடித்துப்போக பல சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தான் தேடுகிற ஞான மகன் ஸ்டீபனாக இருக்கலாம் என்று ப்ளூமும், ஞானத் தந்தை ப்ளூமாக இருக்கலாம் என்று ஸ்டீபனும் நினைத்துக்கொள்கிறார்கள். ஸ்டீபனை ப்ளூம் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தன்னோடு தங்கச் சொல்கிறார்.
ஆயினும் தனது சுதந்திரமான பாதையில் பயணிக்க விரும்பும் ஸ்டீபன் மறுத்துவிட்டு மறுபடி தனிமையில் நகரத்திற்குள் செல்கிறான். ஒருநாள் பழக்கம்தான் என்ற நிலையில் வீட்டில் தங்குகிற அளவுக்கு நெருங்க வேண்டாம் என்ற எண்ணத்தாலோ, மோல்லியின் வெளிப்படைத் தன்மையால் ஏற்பட்ட தயக்கத்தாலோ ஸ்டீபன் அந்த முடிவை எடுத்திருப்பான் என்று வாசகர்கள் ஊகித்துக்கொள்ளலாம்.
கடைசிக் காட்சியில், மோல்லியும் ப்ளூமும் சேர்ந்தே படுத்திருக்கிறார்கள். அப்போது மோல்லி தனது கடந்தகால நினைவுகளுக்குள் பயணிக்கிறார். தன்னுரையாடல் வடிவில் அந்த நினைவுகள் வாசகர்களுக்குப் பகிரப்படுகின்றன. தனது பாலியல் வேட்கை, கணவரைப் பற்றிய மதிப்பீடு, அவருடைய பக்குவம், போய்லான் மீதான உடல் சார்ந்த கவர்ச்சி, அதற்கு முன் பல ஆண்களுடன் பழகியது, இளவயதினளாக இருந்தபோது ஒரு நண்பியிடன் தன்பாலின ஈர்ப்பு, திருமணத்திற்கு முன் ப்ளூம் தன்னை அணுகி சேர்ந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தியது, அப்போது நெருக்கமாக இழுத்தணைத்துத் தனது ஒப்புதலை அளித்த விதம்… இப்படியாக அந்தத் தன்னுரையாடல் வெளிப்படுகிறது.
செய்து வைத்தவர்களா?
இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்துப்படி – மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்பு இது. கதையின் ஓட்டமே, இயற்கையான பாலியல் விருப்பத்தைச் சார்ந்திருப்பதால் அது பற்றிய சித்தரிப்புகளில் தவறில்லை. மேலும், ஒரு கதாபாத்திரம் என்றால் முழுக்க முழுக்க நல்லவர், அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவர் என வார்க்கப்படுவதிலிருந்த இந்த நாவல் மாறுபடுகிறது. அத்துமீறும் ஆசைகளும் அதைப் பற்றிய சுயவிமர்சனங்களுமாக இயல்பான மனிதர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். ப்ளூம் மனைவியின் மீது ஆத்திரப்படும் வழக்கமான கணவராக இல்லாமல், மோல்லியைப் புரிந்துகொள்ள முயல்வதும், தனது நிலையை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய உளவியல் நுட்பங்கள்.
மோல்லியின் நினைவோட்டம் ஒரே சீராக இல்லாமல், தொடர்ச்சியாக அமையாமல் ஏறுக்கு மாறாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் தனியாகச் சிந்திக்கிறபோது எழுதிவைத்தது போலத் தொடர்ச்சியாக இருக்காது, ஒன்றைப் பற்றி யோசிக்கிறபோதே இன்னொன்றைப் பற்றிய யோசனை தொற்றிக்கொள்ளும். அதை அலசுகிறபோது தொடர்பே இல்லாத வேறொரு நிகழ்வு நிழலாடும். இதை ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார்.
அந்த நீண்ட தன்னுரையாடலில் எங்கேயும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி என எந்த நிறுத்தற்குறியும் இருக்காது. அது வாசிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், அதுவே ஒரு புதிய உத்தியாகவும் அமைந்தது. நினைவுப் பகிர்வில் மோல்லி இடையிடையே “ஆமா” (யெஸ்) என்ற சொல்லை அடிக்கடி சொல்வதாக வரும். “ஆமா… அவன் என்னிடம் நெருங்கி ஆமா அப்படிக் கேட்டான் ஆமா நான் அவனை ஆமா அப்படியே அணைச்சிக்கிட்டேன்…” இப்படி. இந்த “ஆமா” மிகவும் புகழ்பெற்ற சொல்லாக மாறியதாம்.

ஸ்டீபன் என்னாகிறான்? ப்ளூமும் மோல்லியும் இணக்கமானார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்கு கதையின் போக்கை வைத்து அவரவர் கண்ணோட்டத்தில் பதில் காண வைக்கிறது நாவல். இதன் மூலம் வாசகர்களைப் படைப்பின் பங்காளியாக்குகிறார் நாவலாசிரியர். தனிமனித சிந்தனையோட்டம், உளவியல் ஆய்வு, நகர வாழ்க்கை என இந்த நாவலை மூன்று கோணங்களில் ஆராயலாம்.
இப்படிப்பட்ட படைப்பு வெளியானபோது தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் ஒன்றும் உண்டு. ஸ்டீபன் மதுபானக்கூடத்தில் இருக்கிறபோது, தேசப்பற்று பற்றிய காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. அப்போது அவன் பிரிட்டிஷ் மன்னரைக் கடுமையாக விமர்சிக்கிறான். அயர்லாந்தில் சுதந்திரத்திற்கான கிளர்ச்சி ஏற்பட்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் இந்த விமர்சனம் அரசு மீதான தாக்குதலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காரணத்திற்காகவும் இங்கிலாந்தில் நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது.
பிற்காலத்தில் அதே இங்கிலாந்தில் பல நாடகக்குழுக்கள் நாவலை மேடையேற்றியிருக்கின்றன. வானொலி நாடகத் தொடராகவும் ஒலிபரப்பானது. 1967இல் பிரிட்டன்–அமெரிக்க கூட்டுத் தயாரிப்பாக ‘ யுலிசிஸ் (Ulysses) ’ என்ற தலைப்பிலும், 2003இல் அயர்லாந்து–கனடா கூட்டுத் தயாரிப்பில் ‘ப்ளூம்’ என்ற தலைப்பிலும் திரைப்படங்களாக வந்தது. முதல் படம் வணிக அடிப்படையிலும் நல்ல வெற்றியைப் பெற்றது, இரண்டாவது படம் சுமாராகவே போனது.
பெயரிலேயே ஒரு கலகம்
1914இல் டப்ளின் நகர வாழ்க்கையைப் பல வகைகளில் பிரதிபலித்த ‘டப்ளினர்ஸ்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு, 1916இல் தன் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘எ போர்ட்ரெய்ட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் அஸ் எ யங் மேனி’ என்ற நாவல், 1939இல் சிக்கலான மொழி விளையாட்டுக்காகப் பெரிதும் பேசப்படும் ‘ஃபின்னேகன்ஸ் வேக்’ என்ற நாவல் ஆகியவை ஜாய்ஸ்சின் குறிப்பிடத்தக்க இதர சில படைப்புகளாகும். டப்ளின் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

செவ்வியல் தன்மை, புதுமை முயற்சி, ஒரு காலத்தில் முரணாகப் பார்க்கப்பட்ட கதாபாத்திரங்கள், நுட்பமான அரசியல்–சமூக விமர்சனம், மொழி விளையாட்டுகள், அறிவியலும் வரலாறும் உள்ளிட்ட தேடல்கள், உளவியல் வெளிப்பாடுகள் இவற்றுக்காக இன்றளவும் இலக்கியம் மற்றும் கல்வி வட்டாரங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது ‘ யுலிசிஸ் (Ulysses) ’.
யுலிசிஸ் (Ulysses) கிரேக்கப் புராணக் கதைகளில் வருகிற ஒரு வீரர். ஹோமர் எழுதிய ‘ஒடிஸி’ காவியத்தில், பல சாகசங்களைச் செய்கிற முக்கியமான கதாபாத்திரம். அந்த வீரரின் பெயரை, ஜேம்ஸ் ஜாய்ஸ், எந்தப் பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் அசாத்தியமான சாகசங்களும் இல்லாத ஒரு சராசரி மனிதரான ப்ளூமின் ஒரு நாள் நிகழ்வுகளைக் கூறும் ஒரு நாவலுக்குச் சூட்டியதே கூட பேசுபொருளானது. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கை ஒன்றும் சாதாரணமாதல்ல என்று உணர்த்தவே இந்தப் பெயராம்!
எழுதியவர் :

அ. குமரேசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

