தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –15
நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம்
அ. குமரேசன்
நான்கு திரைப்படங்களாக, நான்கு தொலைக்காட்சித் தொடர்களாக, பல முறை மேடை நாடகங்களாக, ஒரு நாட்டிய நாடகமாக வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல் அது. கதையைத் தழுவி இந்தி உள்பட பல மொழிகளில் திரைப்படங்கள் வந்திருக்கின்றன (கதையைப் படிக்கிறபோது அதே சாயலில் தமிழில் வந்த படங்களும் உங்கள் நினைவுக்கு வரும்). ஆனால், நாவல் வெளியானபோது கடுமையான மூன்று வகை எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஒன்று –அதுவரை வழக்கத்தில் இருந்த நேர்கோட்டு முறையிலிருந்து வெகுவாக விலகிய தனித்துவமான புதிய கதை சொல்லல் நடை படிப்பதற்குக் கடினமாக இருக்கிறது. இரண்டு –வன்முறையையும் பழிவாங்கல் உணர்வையும் நியாயப்படுத்துகிறது. மூன்று –திருச்சபையால் அறிவுறுத்தப்பட்டு வந்துள்ள சமூக நெறிகளை மீறுகிறது.
இந்த எதிர்மறை விமர்சனங்களைக் கடந்து, இங்கிலாந்து நாட்டு இலக்கியத்தில் சிறந்ததொரு காவியப் படைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அந்த நாவல் ‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ (மூர்க்கச் சிகரங்கள்). 1847இல் வெளியான இந்த நூலை எழுதியவர் எமிலி பிரான்ட்டே. அவர் எழுதிய முதல் நாவல் மட்டுமல்ல, இதுவே அவருடைய கடைசி நாவலும் கூட. ஆம், ‘எல்லிஸ் பெல்’ என்ற புனைப் பெயரில் எழுதி வந்த அவரது ஒரே நாவல் இதுதான். மற்றபடி அதே புனைப் பெயரில் கவிதைகளும், உலகத்தைப் பற்றிய கருத்துக் குறிப்புகளும் எழுதியிருக்கிறார். 1818இல் பிறந்த எமிலி பிரான்ட்டே ஏன் அடுத்த நாவலை எழுதவில்லை என்றால், அவருடைய இலக்கிய மேதைமையைக் காட்டிய இந்த நாவல் வெளியான அடுத்த ஆண்டிலேயே, 30 வயதில், காசநோய்க்கு பலியாகிவிட்டார்.

நாவலின் மூர்க்கக் காட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக எழுத்தாளர் தொடர்பான இன்னொரு சுவையான தகவலைத் தெரிந்துகொள்வோம். சகோதரிகளான எமிலி பிரான்ட்டே, சார்லோட் பிரான்ட்டே, ஆன் பிரான்டே மூவருமே எழுத்தாளர்கள். தமிழகக் கல்லூரிகளுக்கும் வந்த ‘ஜேன் அயர்’ நாவலை எழுதியவர் சார்லோட். ‘தி டெனன்ட் ஆஃப் ஒயில்டுஃபெல் ஹால்’ நாவலை வழங்கியவர் ஆன். மற்றுமொரு தகவல் – மூவருமே காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
நாவலின் சுருக்கம்
‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ இங்கிலாந்தின் யோர்க்ஷைர் மூர்ஸ் எனப்படும் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த எர்ன்ஷா, லின்டன் என்ற இரண்டு குடும்பங்களின் உறவுகள் பற்றிய கதை. வன்முறைகள் நிறைந்த ஆனால் உணர்வுப்பூர்வமான உறவுகளை அது சித்தரிக்கிறது.
லாக்வுட் என்ற ஒரு பண்ணைக் குத்தகைதாரரின் அனுபவங்களிலிருந்து தொடங்குகிறது கதை. அவர் த்ரஷ்க்ராஸ் க்ரேன்ஜ் என்ற பண்ணையைக் குத்தகைக்கு எடுக்கிறார். அந்தப் பண்ணையின் உரிமையாளரான ஹீத்கிளிஃப் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள வுதரிங் ஹெய்ட்ஸ் பண்ணை வீட்டில் வசிக்கிறார். சூறாவளி போல் எப்போது வேண்டுமானாலும் கடுமையான காற்று வீசுகிற, எளிதில் நடமாட இயலாத உயரமான மேடுகள் நிறைந்த ஒரு மூர்க்கத்தனமான சூழலில் அந்தப் பண்ணையும் வீடும் இருக்கின்றன. அங்கே செல்கிற லாக்வுட் அந்த விசித்திரமான சூழலால் ஈர்க்கப்படுகிறார். ஆனால் அந்த வீட்டில் உள்ள கேத்தி, படிப்பறிவில்லாத பணியாளர் போல நடந்துகொள்ளும் ஹெர்ட்டன் பணியாளர் ஜோசப் ஆகியோர் லாக்வுட்டுடன் இணக்கமின்றி நடந்துகொள்கிறார்கள்.
வெளியே கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த வீட்டிலேயே இரவு தங்குகிற லாக்வுட், தனக்குத் தரப்பட்ட அறையில் இருந்த ஒரு நாட்குறிப்பேட்டைப் படிக்கிறார். அது, அந்த அறையில் முன்பு இருந்தவளும், பண்ணைவீட்டின் முன்னாள் உரிமையாளர் எர்ன்ஷா மகளுமான கேத்தரின் எழுதி வைத்தது. இரவில் கேத்தரின் சன்னலுக்கு வெளியே ஆவியாக வந்து, கதவைத் திறந்துவிடுமாறு கெஞ்சுகிறாள். அலறியடித்து உறக்கத்திலிருந்து எழுகிறார் லாக்வுட். அவருடைய அலறலால் தனது அறையில் இருக்கும் ஹீத்கிளிஃப் உளைச்சலடைகிறார்.

காலையில் கடும் பனியிலேயே தனது பண்ணைக்குத் திரும்பும் லாக்வுட்டின் உடல்நலம் குன்றிப் படுக்கையில் விழுகிறார். வீட்டைப் பராமரிக்கும் பெண்ணான நெல்லி டீன் அவருக்கு, வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டின் கடந்த காலக் கதையைக் கூறுகிறார்.
அந்தக் கதை முப்பது ஆண்டுகள் பின்னாலிருந்து தொடங்குகிறது. எர்ன்ஷாவின் மகன் ஹிண்ட்லி, மகள் கேத்தரின். ஒருநாள் எர்ன்ஷா நகரத்திலிருந்து ஆதரவற்ற ஒரு சிறுவனைத் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவன்தான் ஹீத்கிளிஃப். அவனுடைய பிறப்பு மூலம் தெரியவில்லை, அநேகமாக ஒரு நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். மனைவி இறந்துவிட்டதால் பிள்ளைகளைக் கவனிக்கத் தவறும் எர்ன்ஷா அவனிடம் அன்பு காட்டுகிறார். அது ஹிண்ட்லிக்கு அவன் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் கேத்தரினுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகக் காட்டிலும் காற்றிலும் சுற்றித் திரிகிறார்கள்.
ஹிண்ட்லி படிப்புக்காக வெளியூர் செல்கிறான். மூன்று ஆண்டுகளில் எர்ன்ஷா இறந்துவிட, அவன் மாளிகையின் உரிமையாளராகிறான். திருமணத்திற்குப் பிறகு ஹிண்ட்லி, அவனுடைய மனைவி பிரான்சஸ் இருவரும் ஹீத்கிளிஃபை மேலும் அவமதிக்கிறார்கள். வேலைக்காரர்களில் ஒருவனாக நடத்துவதுடன் தினமும் மோசமான சொற்களால் வசவுகளை வீசுகிறார்கள்.
த்ரஷ்கிராஸ் கிரேஞ்ச் பண்ணை வீட்டில் எட்கர் லிண்டன், அவனுடைய தங்கை இசபெல்லா வாழ்கிறார்கள். கேத்தரினும் ஹீத்கிளிஃபும் அவர்களை சிறுவயதுக் குறுகுறுப்புடன் வேவு பார்க்கிறார்கள். கேத்தரினை நாய் கடித்துவிட, வெளியே வரும் எட்கர் அவளை மட்டும் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறான். வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டுக்கு எட்கரும் இசபெல்லாவும் வருகிறார்கள். அங்கே எட்கரும் ஹிண்ட்லியும் சேர்ந்து ஹீத்கிளிஃபை இழிவாகப் பேசிச் சிரிக்கிறார்கள். ஒரு மோதல் ஏற்படுவதைத் தொடர்ந்து, அழுக்கு நிறைந்த, சூடுபடுத்திக்கொள்ளும் வசதி இல்லாத மாடியறையில் தங்கவைக்கப்படுகிறான். அப்போதே அவனுக்குள் இவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் முளைவிடுகிறது.
வயது வளர வளர கேத்தரின் மீது அவன் கொண்ட நட்பு ஆழ்ந்த காதலாக வளர்கிறது.
ஹிண்ட்லி, பிரான்சஸ் இணையருக்கு ஒரு மகன் – ஹேர்டன் – பிறக்கிறான். நீண்ட காலமாக காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரான்சஸ் குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்துவிடுகிறாள்.
கேத்தரின் சமூகப் பெருமைக்காகவும் வசதியான வாழ்க்கைக்காகவும் எட்கரை மணக்க முடிவு செய்கிறாள். ஆனாலும் அவள் மனம் ஹீத்கிளிஃபையே நேசிக்கிறது. இதை அவள் நெல்லியிடம் பகிர்ந்துகொள்கிறாள். அவனுக்கு உதவ விரும்புவதாகக் கூறும் அவள், ஆனால் அவனுடைய தாழ்ந்த சமூக நிலை காரணமாக அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாதவளாக இருப்பதையும் தெரிவிக்கிறாள். அவனைப் போன்றவனுடன் பழக வேண்டாம் என்கிறாள் நெல்லி. அறைக்கு வெளியே இருந்து அரைகுறையாக இந்த உரையாடலைக் கேட்கும் ஹீத்கிளிஃப் ஏக்கமும் ஆத்திரமுமாக அந்த ஊரிலிருந்தே வெளியேறுகிறான். கேத்தரின்–எட்கர் இருவருக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. அவள் பெயர் கேத்தி.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஹீத்கிளிஃப் திரும்பி வருகிறான். இப்போது அவன் ஒரு பெரும் பணக்காரன். எப்படிப் பணக்காரனானான்? அவனுடைய பிறப்பு மூலத்தைப் போலவே சொத்து மூலத்தையும் புதிராகவே விட்டிருக்கிறார் நாவலாசிரியர். அவன் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதித்திருக்கலாம் அல்லது ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று நெல்லி தன் ஊகங்களைக் கூறுகிறாள். ஆனால், தாழ்வான சமூகத்தைச் சேர்ந்தவனாகக் கருதும் மேட்டுக்குடியினர் அவன் தவறான முறையிலேயே பொருளீட்டியிருப்பான் என்று கருதுகிறது. பிற்பகுதியில் அவன் இரக்கமற்ற பழிவாங்கலில் இறங்குவதன் பின்னணியில் தவறான வழியில் பணம் ஈட்டியதும் இருக்கக்கூடும் என்ற ஊகத்திற்கும் இடமளிக்கிறார் எமிலி பிரான்டே.
தன்னை அவமானப்படுத்தியவர்களையும், தனது காதலைப் பிரித்தவர்களையும் பழிவாங்கத் தொடங்குகிறான் ஹீத் கிளிஃப். இசபெல்லாவுக்குத் தன் மீது இருக்கும் மோகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான். அடிக்கடி அவன் வீட்டுக்கு வருவதைக் கண்டு அவனை விரட்டியிடிக்கிறான் எட்கர். அதை ஏற்காத கேத்தரின் அறைக்கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே உணவின்றி இருக்கிறாள். அவளுடைய உடல் நலம் சரிவடைகிறது.
ஹிண்ட்லியின் சூதாட்ட மோகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் ஹீத்கிளிஃப் பெருந்தொகையைக் காட்டி, ஆட்டத்துக்கு இழுத்துத் தோற்கடிக்கிறான். அதற்காகக் கொடுக்க ஒப்புக்கொண்ட பெருந்தொகைக்குப் பதிலாக பண்ணை வீட்டை ஒப்படைக்க வற்புறுத்தி வசப்படுத்திக்கொள்கிறான். எட்கரைப் பழி வாங்குவதற்காக, இசபெல்லாவைத் தன்னோடு ஓடிவர வைத்து, பின்னர் அவளை மணந்துகொண்டு உளவியலாகவும் உடலளவிலும் பல வகைகளில் துன்புறுத்துகிறான்.
கேத்தரின் நலிந்துகொண்டிருப்பதை அறியும் ஹீத்க்ளிஃப் அவளை ரகசியமாகச் சந்திக்கிறான். அவனைப் பார்த்தபின், பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் கேத்தரின் மரணமடைகிறாள். கொந்தளிக்கும் ஹீத்கிளிஃப், அவள் ஆவியாக வந்து தன்னைக் கடைசிவரை ஆட்டுவிக்க வேண்டும் என்று வேண்டுகிறான். செத்துப்போனவள் மீது அவன் காட்டும் விசுவாசத்தைப் பார்த்துக் கசப்படையும் இசபெல்லா வேறு ஊருக்குப் போய்விடுகிறாள். அங்கே அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது, தன் அண்ணன–கணவன் இருவர் பெயரையும் இணைத்து லிண்டன் ஹீத்கிளிஃப் என்று பெயர் வைக்கிறாள். ஒரு நோயாளியாக அவன் வளர்கிறான்.
ஹிண்ட்லி மதுப்பழக்கத்தால் மரணமடைகிறான். அவனுடைய மகன் ஹேர்டன் படிப்பறிவற்றவனாகச் சுற்றிவருகிறான். ஹீத்கிளிஃப் வெறிபிடித்தவனாக அடுத்த தலைமுறையினரையும் தனது பழிவாங்கும் படலத்திற்கு இலக்காக்குகிறான். கேத்தி, லிண்டன் இருவரும் நேசத்துடன் பழகுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டால் த்ரஷ்கிராஸ் கிரேஞ்ச் பண்ணையையும் வளைத்துப் போடலாம் என்று ஹீத்கிளிஃப் திட்டமிடுகிறான்.
இதனிடையே லிண்டன் ஹீத்கிளிஃப் அவனுடைய மாமன் எட்கர் வீட்டில் வளர அனுப்பி வைக்கப்படுகிறான். தன்னுடைய மகன் தன்னுடன்தான் இருக்க வேண்டுமென்று தகராறு செய்கிறான் ஹீத்கிளிஃப். சில மாதங்களில் எட்கர் இறந்துவிட, கேத்தியையும் லிண்டனையும் கட்டாயப்படுத்தித் தன்னோடு இருக்கச் செய்கிறான். உடல்நிலை மோசமடையும் லிண்டன் திடீரென இறந்துவிட, கேத்தி வேறு வழியின்றி ஹீத்கிளிஃபுடன் வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டில் இருக்க வேண்டியதாகிறது. நாளுக்கு நாள் அவனுடைய வெறித்தனம் முற்றுகிறது. கேத்தரின் இறந்தபோது, அவளுக்கான கல்லறையை வெட்டியது தானேதான் எனத் தெரிவிக்கும் அவன், அதன் பிறகு தினமும் அவளுடைய ஆவி தன்னைப் பின்தொடர்வதாகவும் கூறுகிறான்.
காலப்போக்கில் கேத்திக்கும் ஹேர்டனுக்கும் காதல் மலர்கிறது. அவனுக்கு அவள் படிப்புச் சொல்லிக்கொடுக்கிறாள். அவர்களுடைய காதல் பழைய தலைமுறையின் காழ்ப்புணர்வு வன்மமும், மேலாதிக்கப் புத்தியும், பாகுபாட்டு வக்கிரமும், பழிவாங்கல் வேட்கையுமான மூர்க்கச் சுழற்சியை முறியடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஹீத்க்ளிஃப் தன் பழிவாங்கல் செயல்களாலும், கேத்தரினின் ஆவி பற்றிய எண்ணங்களாலும் மன அமைதி குலைந்தவனாகத் திரிந்து மடிகிறான். அவனுடைய மரணத்திற்குப் பின்னரும் சில நாட்களுக்குப் புதிரான, அமானுட நிகழ்வுகள் தொடர்கின்றன. பகை வளர்த்த பழைய தலைமுறையின் கதை முடிந்து, குடும்ப ரகசியங்களால் துரத்தப்பட்ட புதிய தலைமுறையின் அமைதியான வாழ்க்கை தொடங்குகிறது.
மூர்க்கம்
கேத்தரின், ஹீத்கிளிஃப் இடையேயான காதல் அன்றைய சமூக விதிகளை மீறிய, ஆழமான, உடைக்க முடியாத, கிட்டத்தட்ட மூர்க்கத்தனமான ஒரு பிணைப்பு. காதல் நிறைவேறாமல் போனதால், ஹீத்கிளிஃபுக்கு ஏற்படும் பழியுணர்வும் மூர்க்கத்தனமானது. அந்த இரண்டுமாகச் சேர்ந்து அடுத்த தலைமுறைகளையும் அலைக்கழிக்கின்றன. உச்சத்தைத் தொடும் அந்த இரண்டு மூர்க்கங்கள்தான் நாவலின் மைய விசைகள்.
வுத்தரிங் ஹெய்ட்ஸ் வட்டாரத்தின் இயற்கைச் சூழல் சார்ந்த மூர்க்கம், அந்த இரண்டு பண்ணை வீடுகளின் கதாபாத்திரங்கள் சார்ந்த மூர்க்கத்திற்கு ஒப்புவமையாகிறது. நாவல் சமூகக் கட்டுப்பாடும், வர்க்க வேறுபாடும் சார்ந்த மூர்க்கங்களையும் தொடுகிறது. விக்டோரிய காலச் சமூகப் படிநிலைகள் தனிமனித உணர்வுகளைச் சூறையாடுவதைச் சித்தரித்ததன் மூலம் அன்றைய மதிப்புகளைச் சாடுகிறது. அந்த நிலைமைகள் எப்படி மனித மனங்களில் வஞ்சத்தை வளர்க்கின்றன என்று யோசிக்க வைக்கிறது.

அமானுடம், ஆவி நாவல் ஒரு கட்டத்தில் கேத்தரின் ஆவியாக ஹீத்கிளிஃபை நெருங்க முயல்வதாகவும், மானுடத்திற்கு அப்பாற்பட்ட சக்திகள் ஆட்டுவிப்பதாகவும் சித்தரிக்கிறது. இது அமானுடம், ஆவி ஆகிய பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கையை ஆதரிப்பதாக இருக்கிறது என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால், அந்தச் சித்தரிப்புகள் சூழ்நிலைகளாலும் நிகழ்ச்சிப் போக்குகளாலும் சிதைந்துபோன மனநிலைகள் பற்றிய உளவியல் வெளிப்பாடுகளே என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் வாதிட்டனர். இப்போதும் அந்த இரு வாதங்களும் தொடர்கின்றன. ஆயினும், அந்த அமானுடங்கள் உளவியல் சித்தரிப்புகள்தான் என்ற கருத்திற்கே பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கிறது.
இவ்வாறு உணர்ச்சிப் பெருக்கான, மானுடத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளையும், புதிரான முறையில், வியக்க வைக்கும் வகையில் சித்தரிக்கும் இலக்கிய வகைப்பாட்டிற்கு “கோதிக் புனைவு” என்று பெயர். கோதிக் என்பது மையக் காலத்திய கட்டடக் கலை. கோட்டைகளும் தேவாலாயங்களும் அந்தக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டன. ஒரு வியத்தகு அமைப்புடன் இருந்த அந்தக் கட்டங்கள் சிதைந்தபோது ஒரு புதிரான தோற்றத்தைப் பெற்றன. அவற்றால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளில் அந்தப் புதிரையும், வியப்பையும், சிதைவையும் கொண்டுவர முயன்றனர். அந்த முயற்சிக்கு “கோதிக் புனைவு” என்ற இலக்கிய அடையாளம் கிடைத்தது.
நாவல் வெளியான புதிதில், சமூக விதிகளை மீறி, பாலியல், வன்முறை மற்றும் தீவிரமான உணர்வுகளை வெளிப்படையாகப் பேசியதால், “காட்டுமிராண்டித்தனமானது” என்றும் “ஒழுக்கமற்றது” என்றும் கூறி அதைப் புறக்கணிக்கும் முயற்சிகள் நடந்தன. மதம் அறிவுறுத்தும் சமூக ஏற்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தியதால், நாவலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மதவாதிகள் பேசினார்கள். ஆயினும், கடுமையான வாக்குவாதங்களுக்குத்தான் நாவல் உள்ளாக்கப்பட்டதேயன்றி தடை விதிக்கப்படும் அளவுக்குப் போகவில்லை.
மாறாக, எழுத்தாளரின் மறைவுக்குப் பிறகு, தனித்துவமான கதைசொல்லல், ஆழமான உளவியல் பார்வை, கதாபாத்திரங்களின் நுட்பமான சித்தரிப்பு ஆகியவற்றிற்காக ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாகப் பாராட்டுப் பெற்றது. காதலின் ஆக்க சக்தி–அழிவு சக்தி, மனித உறவுகளின் சிக்கல்கள், மனதின் இருண்ட பகுதிகள் ஆகியவற்றை எமிலி பிரான்ட்டே ஆராய்ந்திருக்கிறார். அந்த வகையில் ஒரு புதுமையான, துணிச்சலான படைப்புகளுக்கான ஓர் எடுத்துக்காட்டு என்று இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது இந்த நாவல்.
எழுதியவர் :

அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Wonderful criticism of the English novel in lucid Tamil. Awaiting more articles from the author