தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | மேரி ஷெல்லி எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ (Frankenstein) நாவல்
19 வயதுப் பெண்ணால் இப்படியொரு அறிவியல் புனைவை எழுத முடியுமா என்று கேட்டார்கள்!
அ. குமரேசன்
எழுத்து நடை இவ்வளவு மோசமாகவா இருப்பது என்று ஒதுக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் அத்துமீறல்களை நியாயப்படுத்துவதாகத் தாக்கப்பட்ட அந்த நாவல், சிறந்த அறிவியல் புனைவுகளின் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் இங்கிலாந்தின் மேரி ஷெல்லி (Mary Shelley) (1797–1851) எழுதிய, 1818ஆம் ஆண்டில் வெளியான ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ (Frankenstein) என்ற நாவல் தான் இப்படி விமர்சனத் தடைகளைத் தாண்டியது. அவர் வாழ்ந்த காலத்தில் இத்தகைய எதிர்ப்புகளால் மிகக் குறைவாகவே விற்பனையாகிய புத்தகம், பின்னர் உலக அளவிலேயே அதிகமாகப் பரவிய அறிவியல் புனைவாக அடையாளம் பெற்றது. 1818இல் வந்த இந்த நாவலுக்கு ‘தி மாடர்ன் புரோம்தியஸ்’ என்ற தலைப்பும் உண்டு.

நாவலின் உள்ளடக்கம் சார்ந்து விமர்சித்தவர்கள் முன்வைத்த வாதங்கள்: மதம் கற்பித்து வந்துள்ள வாழ்க்கை நெறிகளை மீறுகிறது; கடவுளன்றி ஒரு புதிய உயிரினத்தைப் படைக்கிற மகத்துவம் மனிதனுக்குக் கிடையாது; பொறுப்பற்ற அறிவியல் ஆராய்ச்சியை உயர்த்திப் பிடிக்கிறது; பிசாச குணம், உயிரின உருவாக்கம் ஆகியவை குடும்ப இலக்கிய மரபுக்கு மாறானவை; கதையின் முடிவு உணர்வற்றதாக, தீர்வை முன்வைக்காததாக இருக்கிறது.
கதை நடை சார்ந்து விமர்சித்தவர்கள் கூறிய கருத்துகள்: (அந்நாளைய வழக்கப்படி) கவிதை நடையில் இல்லாமல் நேரடி உரைநடையில் எளிதாக வாசிக்கக்கூடியதாக இருக்கிறது; முந்தைய இலக்கியங்கள் போன்ற மொழிச் சிறப்புகள் இல்லை; கதையோட்டம் ஒரே சீராக இல்லாமல் பயணியின் நடை, ஆராய்ச்சியாளரின் நடை, அமானுடப் பிறவியின் நடை என மாறிக்கொண்டே இருக்கிறது; கதையை விட அதிகமாகத் தத்துவத்தைப் பேசுகிறது.
பாதுகாத்த திறனாய்வுகள்

பின்னர் வந்த இலக்கிய அன்பர்களும் திறனாய்வாளர்களும் இத்தகைய தாக்குதல்களிலிருந்து நாவலைப் பாதுகாத்தனர். மிகச் சிறந்த அறிவியல் புனைவு கிடைத்திருக்கிறது, ஆங்கில இலக்கியத்திற்கு ஒரு புதிய எழுத்துநடை அறிமுகமாகியிருக்கிறது, அறிவியல் பயன்பாடு பற்றிய ஆழ்ந்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது, பழமைச் சிந்தனைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்று பாராட்டினார்கள்.
இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்ற நாவலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, நாவலை எழுதிய மேரி ஒல்ஸ்டோன்கிராஃப்ட் ஷெல்லி பற்றித் தெரிந்துகொள்வோம். அன்றைய சமூக–இலக்கியச் சூழலில், பெண்களால் ஆழ்ந்த இலக்கியத்தைப் படைக்க முடியாது என்று சிறுமைப்படுத்தும் ஆணாதிக்க மனநிலையிலிருந்தும் அவர் மீது விமர்சனக் கற்கள் வீசப்பட்டன.
நாவலை எழுதியபோது மேரியின் வயது 19 மட்டுமே. அந்த வயதில் மனித வாழ்க்கையைப் பற்றியோ, சமூக மதிப்புகள் பற்றியோ, அறிவியலுக்கு உரிய இடம் பற்றியோ ஒரு பெண்ணுக்கு என்ன தெரிந்துவிடும் என்ற அலட்சியமும் விமர்சனங்களில் இருந்தது. உலகம் முழுவதுமே பெண் எழுத்தாளர்கள் இதைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது, இல்லையா? இத்தனைக்கும் மேரியின் தாய் பெண்களின் உரிமைகளுக்காக வாதாடியவர், எழுதியவர். தந்தை ஒரு தத்துவ அறிஞர், சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர். புதிய சிந்தனைக்கும் எழுத்தாக்க ஈடுபாட்டிற்கும் ஆதரவான குடும்பச் சூழலிருந்து வந்தவரானாலும் மேரி இந்த வேலிகளைக் கடக்க வேண்டியிருந்தது. புத்தகத்தின் தொடக்கப் பதிப்புகள் அவருடைய பெயர் இல்லாமல், “அனாமதேயர்” என்ற அடையாளத்துடன்தான் வெளியிடப்பட்டன!

இன்னொரு முக்கியமான தகவல் – நீங்கள் பெயரை வைத்தே ஊகித்திருப்பீர்கள் – “ஷெல்லி” என்ற சுருக்கப் பெயரில் அறியப்பட்ட உலகப் புகழ்பெற்ற கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) (1792–1822) நாவலாசிரியரின் இணையர்தான். ஆங்கில இலக்கியத்தில் “ரொமாண்டிசிசம்” எனப்படும் உணர்ச்சிப் புனைவியல் வகை ஒன்று உண்டு. அதைக் கொண்டுவந்த முன்னோடிகளில் ஒருவர் ஷெல்லி. மானுட விடுதலை, மனித நேயம், அரசியல் எழுச்சி, மதவெறி எதிர்ப்பு, இயற்கை மேன்மை, காதல் சுதந்திரம், மனித நேயம் ஆகியவற்றைத் தம் கவிதைகளின் உயிரோட்டமாக வைத்தவர்.
போட்டியில் பிறந்த நாவல்
இளம் வயதிலேயே ஷெல்லி–மேரி இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பல ஊர்களுக்குச் சுற்றினார்கள். அப்படியொரு பயணத்தின்போது 2016இல் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது, இருவருக்கும் இடையே, ஒரு முற்றிலும் புதுமையான, பயங்கரமான புனைவை யாரால் உருவாக்க முடியும் என்ற போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டிக்காக மேரி எழுதியதுதான் இந்த நாவல். அந்தப் புத்தகத்திற்கு ஷெல்லி முன்னுரை எழுதினார். 1822இல் ஒரு படகுப்பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் ஷெல்லி, தனது 30ஆவது வயதில் இறந்துவிட்டார். அவருடைய படைப்புகளைப் பின்னர் மேரி புத்தகங்களாகத் தொகுத்து வெளியிட்டார்.
![]()
’வால்பெர்கா’ என்ற வரலாற்றுப் புனைவு (1823), ‘தி லாஸ்ட் மேன்’ என்ற எதிர்காலவியல் நாவல் (1826), ‘பெர்க்கின் வார்பெக்’ என்ற அரண்மனை வாழ்க்கை பற்றிய புதினம் (1830), ‘லோடோர்’ என்று பெண்ணின் கல்வி, மண வாழ்க்கை பற்றிப் பேசிய நெடுங்கதை (1835), ‘ஃபாக்னர்’ என்ற குடும்ப உறவுகளின் பின்னணியில் பெண்ணின் உள்ளுணர்வுகளில் வெளிச்சம் பாய்ச்சிய படைப்பு (1937) ஆகியவை மேரி ஷெல்லி எழுதியவையே. அத்துடன் மனித இயற்கை, சமூகச் சிக்கல்கள், பெண்களின் உரிமைகள், பயணக் குறிப்புகள் எனப் பல கட்டுரை நூல்களும் அவரிடமிருந்து வந்துள்ளன. ஷெல்லியின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தார். தன் சமகாலப் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட நிலைமைகள் குறித்த கடித வடிவிலான கட்டுரைகள் தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. கடைசி ஆண்டுகளில் ஒரு தனிமை உணர்வால் தவித்து வந்தவர் 1851இல் 53 வயதில் புற்றுநோய் தன்னை விழுங்கக் கொடுத்தார்.
விமர்சனங்களால் விழுங்க முடியாத இலக்கியச் சிறப்பைப் பெற்ற நாவலின் கதைமாந்தர்களைச் சந்திப்போம்.
புதிய உயிர்
தென் அமெரிக்காவின் அலாஸ்கா அருகே பயணம் செய்கிற கடற்படை அதிகாரி ராபர்ட் வால்டன் எழுதிய கடிதங்களிலிருந்து கதை தொடங்குகிறது. பயணத்தின்போது உறைபனிக்குள் சாகும் நிலையில் கிடக்கும் ஒரு மனிதனை மீட்கிறார். அவன் பெயர் விக்டர் ஃபிராங்கஸ்டைன் – சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்தவன். அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமும் செயல்திறனும் உள்ளவன். விக்டர் தனக்கு நேர்ந்ததையும் தன்னால் நேர்ந்ததையும் அவரிடம் சொல்கிறான். கேப்டன் வால்டன் மூலம் நாம் விக்டரின் கதையைத் தெரிந்துகொள்கிறோம்.
மரணத்தை ஒரு முடிவாக அல்லாமல் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவனான விக்டர் ஃபிராங்கன்ஸ்டெய்ன், இறந்தவர்களின் உடல்களை வைத்து ஒரு நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான். புதிய உயிரை செயற்கையாக உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி. ஒரு கட்டத்தில் அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெறுகிறான். அந்த உடல்களிலிருந்து எடுத்த உறுப்புகளை இணைத்து, உயிரணுக்களைச் சேர்த்து ஒரு புதிய உயிரினத்தையே உருவாக்கிவிடுகிறான்.

மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத அந்த உயிரி அச்சமூட்டும் தோற்றத்துடன் கட்டுங்கடங்காத வலிமையைப் பெற்றிருக்கிறது. தான் உருவாக்கியதைப் பார்த்து தானே அஞ்சுகிற விக்டர், அதை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.
பெயர் எதுவும் சூட்டப்படாத அந்த உருவம் தன் சொந்த முயற்சியில் மொழியைக் கற்றுக்கொள்கிறது. என்ன செய்தாலும் மனிதர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உணர்கிறது. தன்னை நேசிக்கக்கூடிய ஒரு மனித உயிரையாவது காண முடியாதா என்று தேடுகிறது. பல இடங்களுக்கும் செல்கிறது, அங்கெல்லாம் அதைப் பார்த்துவிட்டு மனிதர்கள் அலறியடித்து ஓடுகிறார்கள்.
ஒரு விவசாயக் குடும்பத்தை ஒளிந்திருந்து கவனிக்கும் அந்த உயிரினம், அவர்களுடன் பழக முயல்கிறது. ஆனால் அவர்களும் அதைக் கண்டு ஓடிவிடுகிறார்கள். இப்படி எல்லோராலும் ஒதுக்கப்படுவதால் தனிமையாக உணரும் புதிய உயிரி தன்னுள் வெறுப்பையும் ஆத்திரத்தையும் வளர்த்துக்கொள்கிறது.
பழிவாங்கும் செயல்களில் இறங்கும் அந்த உயிரி விக்டரின் ஒரு நண்பரைக் கொல்கிறது. தம்பியைக் கொல்கிறது. பின்னர் அவனுடைய மனைவியையும் கொல்கிறது. ஒரு புனிதச் சடங்கு நிகழ்விலும், ஒரு திருமண விழாவிலும் புகுந்து பலரையும் தாக்குகிறது, சேதங்களை ஏற்படுத்துகிறது.
திரும்பி வரும் விக்டரிடம், தனக்குத் துணையாகத் தன்னையொத்த ஒரு பெண் உயிரியை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது. அவன் மறுத்துவிடுகிறான். இது அதனுடைய ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. அவன் சார்ந்த எல்லோரையும் கொல்கிறது, கடைசியில் தன்னைப் படைத்தவனையும் கொன்றுவிடுகிறது.
விக்டரின் மரணத்திற்குப் பிறகு, கப்பலுக்கு வரும் உயிரி, கேப்டன் வால்டனைச் சந்திக்கிறது அந்த உயிரி. ஏற்கெனவே அவனிடமிருந்து அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற வால்டனுக்கு அதைப் பார்த்ததும் பயம், கவலை, குழப்பம் ஆகிய உணர்வுகள் ஏற்படுகின்றன. இருந்தபோதிலும் அதன் மீது பரிவும் ஏற்படுகிறது. அந்த “அசுரன்” பாவம் செய்கிற குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்ட ஓர் உயிர்தான் என்று புரிந்துகொள்கிறார். அதேவேளையில், அது செய்த கொலைகளையும் மற்ற கொடூரங்களையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவராகக் குழப்பத்தில் தவிக்கிறார்.

அவரிடம், தன்னைப் படைத்தவன் தனக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்திருப்பான் என்று கூறும் உயிரி, தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறுகிறது. “நான் இறந்துவிடுவேன், இப்போது நான் உணரும் எதுவும் இனி உணரப்பட மாட்டாது. இந்தத் துன்பத் தீ விரைவில் அணைந்துவிடும். என் சிதைக் குவியலின் மீது நான் வெற்றிகரமாக ஏறுவேன், வதைக்கும் தீப்பிழம்புகள் ஏற்படுத்தும் வேதனையில் மகிழ்வேன். அந்தப் பெரும் நெருப்பின் ஒளி மங்கிவிடும்; என் சாம்பலைக் காற்று கடலுக்குள் அடித்துச் சென்றுவிடும். என் ஆன்மா அமைதியாக உறங்கும், அல்லது அது சிந்திக்குமானால், நிச்சயம் இது போலச் சிந்திக்காது. விடைபெறுகிறேன்!”
இவ்வாறு கூறிவிட்டு, காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. அது தற்கொலை செய்துகொண்டதாக நாம் முடிவுக்கு வருகிறோம்.
கேள்விகள்
இணையத் தரவுகளில் கிடைக்கிற இந்தக் கதையும், தெரியவரும் பாத்திரங்களும் கற்பனை என்றாலும், உண்மை வாழ்க்கையில் அறிவியலைப் பொறுப்புடன் கையாளத் தவறினால் என்னாகும் என்ற வினாவை எழுப்புகின்றன. சிலர் இந்த நாவல் அறிவியலுக்கு எதிரானது என்றும் ஆராய்ச்சிகள் பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்கள். ஆயினும், இது அறிவியல் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்கு ஆதரவான நாவல்தான் இது என்று திறனாய்வாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள். இன்றைய ஏஐ தொழில்நுட்பத்தை சுயநலமிகளும் சுரண்டல் வேட்கையர்களும் தவறாகப் பயன்படுத்துவதால் மனித இனத்திற்கே ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள் அல்லவா?
இன்று நாம் காணும் மரபணு ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளுக்கான தொடக்கப் புள்ளிகளை அந்தக் காலத்திலேயே, அந்த வயதிலேயே ஒரு பெண் கற்பனை செய்து எழுதியிருப்பது எளிதாகக் கடந்துவிடக் கூடியதல்ல என்று இப்போது அந்த நாவல் பற்றிப் பேசுகிறவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வகையில் மேரி ஷெல்லி தன் காலத்தை மீறிச் சிந்தித்துக் கதை புனைந்தவர் என்ற பாராட்டையும் வழங்குகிறார்கள்.

விக்டரிடம் பேசும் உயிரி, “நான் உன் ஆதாமாக இருக்க வேண்டியவன். ஆனால் வீழ்ந்த தேவதூதனாகிவிட்டேன்,” என்று கூறுகிறது. பைபிள் கதைப்படி, கடவுளின் கட்டளைக்கு எதிராகப் போகிற தேவதூதர்களை வீழ்ந்த தேவதூதர்கள் என்று குறிப்பிடுவது மதமும் இலக்கியமும் சார்ந்த மரபு. நல்ல நோக்கங்களிலிருந்து விலகித் தன்னலத்திற்காகத் தரம் தாழ்கிறவர்களைக் குறிப்பிடவும் “வீழ்ந்த தேவதூதர்” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.
மற்றொரு இடத்தில் விக்டர் இவ்வாறு கூறுகிறான்: “என்னிடமிருந்து கற்றுக்கொள், என் போதனைகளால் இல்லாவிட்டாலும், என்னை எடுத்துக்காட்டாகக் கொண்டாவது என்னிடமிருந்து கற்றுக்கொள் – அறிவைப் பெறுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை.”
நுட்பமான எச்சரிக்கை
அறிவும் அறிவியலும் மனித மாண்புகளுக்காக அல்லாமல் சுய மோகங்களுக்கும் லாபத் தாகங்களுக்கும் கையாளப்படுமானால் அது அவ்வாறு கையாளுகிறவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தானதாக முடிந்துவிடும். இதை இந்த வரிகள் நுட்பமாக எடுத்துரைக்கின்றன. அறிவியல் மக்களுக்கே என்று சொல்லாமல் சொல்கிற இடம் இது.
இந்தக் கருத்தாக்கம் இந்த நாவலைத் தொடர்ந்து பிற்காலத்தில் வந்த பல இலக்கியப் படைப்புகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சியால் உருவாகும் ஆபத்தான உயிரிகளிடமிருந்து அல்லது ரோபோக்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாக்கும் வீரர்கள் பற்றிய ஒற்றைக் கதைகளும் தொடர்களும் வலைத்தளத் திரைகளுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. உயிரினம் ஒன்று தனிமையில் விடப்படுவது எவ்வளவு அபாயகரமானது என்று சித்தரித்து, மனிதர்களும் என்றும் எங்கும் தனிமைப்பட்டுப் போகாமல் துணைகளோடு வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அந்தக் கதைகள் எடுத்துரைக்கின்றன.
மனித உணர்வும், மானுட அக்கறையும் அனைத்தையும் விட மகத்தானவை என்று இலக்கியமும் கலையும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அப்படிச் சொல்வதற்கு “ஸ்டார்ட்” பட்டனை அழுத்தியது ‘ஃபிராங்கன்ஸ்டெய்ன்’ நாவல் என்று உறுதியாகச் சொல்லலாம்.
எழுதியவர் :

அ. குமரேசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை.