தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எழுதிய “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses) நாவல்
ஒரு கற்பனைக்காக எழுத்தாளரின் உயிரைக் கேட்க வைத்த நாவல்
அ. குமரேசன்
வேறு எந்தப் புத்தகமும் இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தடைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டதில்லை எனும் அளவுக்குத் தாக்குதல்களுக்கு உள்ளானது ஒரு நாவல். படைப்பாளி இப்போதும் பொது இடங்களுக்கு வர இயலாமல் பதுங்கி வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் அந்த நாவல் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses) (சைத்தான் வசனங்கள்).
இந்தியா விடுதலையடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக, 1947 ஜூன் 19இல், அன்றைய பம்பாய் நகரில், பிறந்தவர் அஹமது சல்மான் ருஷ்டி (Salman Rushdie). குடும்பம் பிரிட்டனில் குடியேறியபோது அங்கே கல்வி பயின்றவர். ருஷ்டி தொடக்கத்தில் ஒரு பதிப்பகத்தில் படிதிருத்துநராக வேலை செய்தார். அது அவருக்குள் இருந்த எழுத்தாளரை உசுப்பிவிட்டது போலும்.

அவரது முதல் நாவல் ‘க்ரிமஸ்’ புராணக் கதைக் கூறுகளுடன் அறிவியல் புனைவாக வந்தது. இந்தியா சுதந்திரமடைந்த நாளின் நள்ளிரவில் பிறந்த இரண்டு குழந்தைகளின் மூலமாக சமூக மாற்றங்கள் பற்றிப் பேசும் ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ (1981ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது பெற்ற இந்த நாவல், 1994, 2008 ஆகிய ஆண்டுகளில் ‘புக்கர் விருதுபெற்ற நாவல்களில் சிறந்த படைப்புக்கான விருதை இரண்டு முறை பெற்றது), பாகிஸ்தானின் அரசியல், சமூக நிலைமைகளை விமர்சிக்கும் ‘ஷேம்’, குழந்தைகளுக்காக எழுதிய ‘ஹாரூன் அன் தி ஸீ ஆஃப் ஸ்டோரீஸ்’, தென்னிந்தியப் பின்னணியில் பண்பாடுகள் பற்றி விவாதிக்கும் ‘தி மூர்ஸ் லாஸ்ட் சை’, கிரேக்கப் புராணக் கதைகளை இணைக்கும் ‘தி கிரவுண்ட் பினீத் ஹெர் ஃபீட்’, இந்தியப் பேராரியருக்கு நியூயார்க் நகரில் ஏற்படும் கலாச்சார அதிர்வுகளை சித்தரிக்கும் ‘ஃபியூரி’, காஷ்மீர் பின்னணியில் பயங்கரவாதத்துக்கு எதிராக அன்பின் வலிமையை முன்வைத்த ‘ஷாலிமர் தி க்ளோன்’, அக்பர்-பிளாரன்ஸ் காலக்கட்டங்களுக்குச் செல்லும் ‘தி என்சான்ட்டர்ஸ் ஆஃப் ஃபிளாரன்ஸ்’, சிறார் நாவலாகிய ‘லூகா அன் தி ஃபயர் ஆஃப் லைஃப்’, புராணக் கற்பனைகளையும் நிகழ்காலச் சிக்கல்களையும் நியூயார்க் பின்னணியில் ஆராயும் ‘டூ இயர்ஸ் அன் ட்வென்டி எய்ட் நைட்ஸ்’, டொனால்ட் டிரம்ப் காலக்கட்ட அமெரிக்கப் பின்னணியில் ஒரு மர்மமான குடும்பத்தை அறிமுகப்படுத்தும் ‘தி கோல்டன் ஹவுஸ்’, நவீன காலத்தில் அடையாளத் தேடல் பயணம் பற்றி விவரிக்கும் ‘குயிக்சோட்’, ஒரு பெண்ணின் ஆற்றல் ஓர் அரசாட்சியையே நிறுவுவதாகக் கூறும் ‘விக்டரி சிட்டி’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைத் தொகுப்பு, தன் வரலாறு, நினைவுக் குறிப்புகள் ஆகிய நூல்களும் வந்துள்ளன.
பதற்றங்களும் ஃபத்வாவும்
ருஷ்டியின் நாவல்கள் பெரும்பாலும் புராணக் கதைக் கூறுகளும், மதநூல்களின் கருத்துகளும் கலந்து நவீன வாழ்க்கையைப் பேசுகின்றன என்று செயற்கை நுண்ணறிவுத் துணைகள் தெரிவிக்கின்றன. இவரது நான்காவது நாவல்தான் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses). 1988இல் லண்டனில் வெளியாகிப் பலநாடுகளுக்கும் பயணப்பட்ட இந்த நாவலுக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனங்கள் எழுந்தன. புத்தகப் படிகள் தீக்கிரையாக்கப்பட்டன. புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன பாகிஸ்தான் அரசு புத்தகத்தை இறக்குமதி செய்யவோ விற்கவோ கூடாதென்று தடை விதித்தது. அடுத்த ஆண்டிலேயே இந்தியாவிலும், ராஜீவ் காந்தி அரசு, படைப்புச் சுதந்திரத்திற்குத் துணையாக நிற்பதற்கும் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மாறாக, புத்தகத்திற்குத் தடை விதித்தது. மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல அரசாங்கங்கள் தடை விதித்தன.
ஈரான் நாட்டு அரசுத் தலைவரும் இஸ்லாம் தலைமை குருவுமான அயதுல்லா கோமெய்னி, புத்தகத்திற்கு மட்டுமல்லாமல் எழுத்தாளரின் உயிர்வாழ்க்கைக்கே தடை விதித்தார். “ஃபத்வா” எனப்படும் அந்த ஆணையின்படி உலகில் எங்கேயும் இருக்கக்கூடிய மத விசுவாசிகள், ருஷ்டியை எங்கே கண்டாலும் கொலை செய்யலாம். கொல்ல வாய்ப்பில்லாதவர்கள் அவர் இருக்குமிடம், நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களைக் கொல்லக்கூடியவர்களுக்கு அளிக்கலாம். ஒரு புனிதக் கடமையாக அறிவிக்கப்பட்ட இந்த ஃபத்வாவைத் தொடர்ந்து வன்முறைகள் தீவிரமடைந்தன. ஜப்பான் நாட்டில் மொழிபெயர்ப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இறைத்தூதரையும், மார்க்க போதனைகளையும் இழிவுபடுத்திவிட்டார் என்பதே ருஷ்டி மீதான குற்றச்சாட்டுகளின் சாரம். மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரிட்டிஷ் அரசு அவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளித்தது. பல ஆண்டுகள் கழித்து, பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாகச் சுற்றிவர விரும்புவதாக அவர் அறிவித்தார். ஆனால் ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் இடுப்பில் கத்திக்குத்து பட்டு காயமடைந்தார். மறுபடி பாதுகாப்பு வளையத்திற்குள் பதுங்க வேண்டியதாயிற்று.
அவருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய திறனாய்வாளர்கள், நாவலில் அப்படி இழிவுபடுத்துகிற நோக்கம் எதுவும் இல்லை என்றார்கள். விமர்சிக்கப்படுகிற பகுதி இலக்கியப்பூர்வமான கற்பனைச் சித்தரிப்புதான் என்று கூறினார்கள். மார்க்கம் சார்ந்த பலர் புலம்பெயர்ந்தவர்களாகப் பல நாடுகளில் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கிற நாவல்தான் இது என்றார்கள். எந்த மக்களுக்காக அவர் தன் படைப்பின் மூலம் பேசுகிறாரோ அந்த மக்களைச் சேர்ந்தவர்களே அவரைக் கொலை செய்யத் துடிப்பது துயரமானது என்றும் கவலை தெரிவித்தார்கள். இவ்வாறு ருஷ்டிக்கு ஆதரவாக எழுதியவர்களில் மதம் சார்ந்தவர்களும் இருந்தது கவனத்திற்குரியது.
சமூகப் பொறுப்பு
படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எப்போதும் தோள்கொடுக்கிறவர்களிலும் சிலர், படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு சமூகப் பொறுப்பும் முக்கியமானது. நம்பிக்கைகள் சார்ந்தவற்றை விமர்சிக்கிறபோது கூட நம்புகிறவர்கள் ஏற்கத்தக்க வகையில் நுட்பமாக அந்த விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்றார்கள். படைப்புச் சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா அல்லது தோழமையானவையா என்ற விவாதம் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், இந்த நாவலையும் நாவலாசிரியரையும் எதிர்த்துக் கிளம்பியவர்கள் எல்லோரும் புத்தகத்தை ஒரு தடவையாவது வாசித்திருப்பார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. தாங்கள் நேரடியாகப் படித்து ஒரு முடிவுக்கு வராமலே, சமூகத் தலைவர்கள் அல்லது இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கிளப்புவதே வேலையாக இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதாலேயே சுயமான சிந்தனை ஏதுமின்றி வன்முறைக்குத் தயாராகிறவர்கள் எல்லா நாடுகளிலும் மதங்களிலும் சாதிகளிலும் இன்னபிற அமைப்பிகளிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
இருவரின் கதை
ருஷ்டியின் மாய மெய்யியல் சித்தரிப்புத் தன்மையுடன் புத்தகம் சொல்கிற கதை என்ன? இந்தியாவில் இந்தித் திரைப்பட உலகம் சார்ந்த இருவர் இதன் நாயகர்கள். கிப்ரயீல் ஃபரிஷ்டா நட்சத்திர நடிப்புக் கலைஞர். சலாவுதீன் சாம்ச்சா இங்கிலாந்தில் வேலை செய்யும் பின்னணிக் குரல் கலைஞர். ஃபரிஷ்டா பக்திப் படங்களில் இந்து தெய்வங்களாக வந்து புகழ்பெற்றிருப்பவர். சாம்ச்சா தன் தந்தையுடனும் இந்தியச் சூழலுடனும் ஒத்துப்போக மறுத்து லண்டனில் குடியேறியவர்.
இவர்கள் இருவரும் பயணிக்கும் விமானத்தை மற்ற பயணிகளோடு சேர்ந்து கடத்துகிறது பஞ்சாப் தனிநாடு தீவிரவாதக் குழு. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் விமானத்தை ஆற்றின் மேல் பறக்க வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். மற்ற அனைவரும் மாண்டுவிட, ஃபரிஷ்டாவும் சாம்ச்சாவும் மாயமான முறையில் உயிர் பிழைக்கிறார்கள். ஃபரிஷ்டா இறைத்தூதர் கிப்ரயீல் போலவும், சாம்ச்சா ஒரு சாத்தான் போலவும் உருமாறுகிறார்கள். ஃபரிஷ்டா தலையின் பின்னால் அவ்வப்போது ஒளிவட்டம் தோன்றுகிறது, சாம்ச்சாவுக்கு ஆட்டுக் கொம்புகளும் கால்களும் முளைக்கின்றன.
சம்ச்சாவை ஒரு சட்டவிரோதக் குடியேறி என்று சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் கைது செய்து அவமதிக்கவும் செய்கின்றனர். ஃபரிஷ்டா தனது முன்னாள் காதலியான ஆலியா என்ற மலையேற்ற வீரரைக் கண்டுபிடித்துச் சேர்கிறார். இருப்பினும், தன்னை இறைத்தூதராகக் கருதுவதன் மனச்சிதைவுக்கு உள்ளாக அவர்களது உறவில் சிக்கல் ஏற்படுகிறது. லண்டனில் மதப் பரப்புரையில் ஈடுபட முயல்கிறார் ஃபரிஷ்டா. அந்த முயற்சி தோல்வியடைகிறது. தெருவில் இறங்கி நடக்கும் ஃபரிஷ்டா மீது திரைப்படத் தயாரிப்பாளர் சிசோடியா கார் மோதுகிறது. அவர் ஆலியாவுடன் சேர்ந்து ஃபரிஷ்டாவை மனச்சிதைவு சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார்.
சாம்ச்சாவின் தோற்றமும் நடத்தையும் தீவிரமடைகின்றன. விமான வெடிப்பில் அவர் இறந்துவிட்டதாக நம்பும் அவரது மனைவி பமீலா, நண்பர் ஜம்பி ஜோஷி இருவரும் உறவைத் தொடங்கியிருப்பது தெரியவர மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ஜம்பி ஒரு விடுதியை நடத்தும் குடும்பத்தினருடன் அவரைத் தங்க வைக்கிறார். கைது செய்யப்பட்ட நடவடிக்கையிலிருந்து தன்னைப் பாதுகாக்காததாலும், விமான விபத்துக்குப் பிறகு கைவிட்டதாலும் ஃபரிஷ்டா மீது அ சாம்சாச்சாவுக்குக் கோபம் ஏற்படுகிறது. அவரது சாத்தான் தோற்றம் தீவிரமடைந்து பின்னர் மனித உருவத்துக்குத் திரும்புகிறார்.

ஃபரிஷ்டாவின் திரையுலக வெற்றியிலும் காழ்ப்பு கொள்ளும் சாம்ச்சா அவரைப் பழிவாங்க எண்ணுகிறார். ஃபரிஷ்டாவின் மனச்சிதைவை அறியும் சாம்ச்சா, தொலைபேசி மூலம் வெவ்வேறு குரல் பதிவுகளையும், ஆலியா பற்றிய விவரங்களையும் பயன்படுத்தி , தவறான எண்ணம் வரச் செய்து. அவர்களுடைய உறவைச் சிதைக்கிறார்.
சாம்ச்சா, ஜம்பி, பமீலா மூவரும் கருப்பின மக்கள் நலச் செயல்பாட்டாளர் டாக்டர் உஹுரு சிம்பா ஆதரவுப் பேரணியில் பங்கேற்கிறார்கள். தொடர் கொலைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்படும் சிம்பா,. சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துவிடுகிறார். சமூகக் கண்காணிப்பில் ஈடுபடும் சீக்கிய இளைஞர்கள் உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள் – அவன் ஒரு வெள்ளையன். ஒரு தெற்காசிய இரவு விடுதியில் காவல்துறை சோதனை நடத்துகிறது. அதனால் கலவரம் தூண்டப்படுகிறது. காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் தகவல்களை விநியோகிக்க பமீலாவும் ஜம்பியும் திட்டமிடுகிறார்கள், ஆனால் முகமூடி ஆசாமிகள் கட்டடத்திற்குத் தீவைத்து, ஆதாரங்களை அழித்து இருவரையும் கொல்கிறார்கள்.
கலவரக்காரர்களால் எழும் தீப்பிழம்புகள் தனது அற்புத மகிமையின் விளைவு என்று நம்புகிறார் ஃபரிஷ்டா. தொலைபேசியில் வந்த தவறான தகவல்களுக்கு சாம்ச்சாவே காரணம் என்பதை அறியும் ஃபரிஷ்டா அவரைக் கொல்லும் எண்ணத்துடன் புறப்படுகிறார். தீப்பற்றி எரியும் கட்டடத்திற்குள் சிக்கியிருக்கும் விடுதிக் காப்பாளரையும் அவரது மனைவியையும் காப்பாற்ற முயல்கிறார் சாம்ச்சா. அதைக் காணும் ஃபரிஷ்டா கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்குகிறார்.
இருவரும் இந்தியா திரும்புகிறார்கள். ஃபரிஷ்டா திரைப்படங்களில் நடிக்கிறார். அந்தப் படங்கள் தோல்வியடைகின்றன. சிசோடியா-ஆலியா இருவரும் கொல்லப்படுகிறார்கள்.
சாம்ச்சா, மனத்தாங்கலுடன் பிரிந்திருந்த தனது தந்தையைப் பார்க்கச் செல்கிறார். சிசோடியாவையும் ஆலியாவையும் கொன்றது ஃபரிஷ்டாதான் என்று அவரிடமிருந்து தெரியவருகிறது. சாம்ச்சாவின் தந்தை இருக்கும் பண்ணைக்குச் சென்று, அவரைக் சுடப் போவது போலத் துப்பாக்கியை நீட்டுகிறார். சில நொடிகளில் துப்பாக்கியைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொள்கிறார். தந்தையுடன் சமாதானமாகும் சாம்ச்சா சதனது இந்திய அடையாளத்திலும் இணக்கம் கொள்கிறார்.
கோபத்திற்குக் காரணம்
இந்தக் கதையில் நம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டதாகக் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? ஃபரிஷ்டாவின் மூன்று கனவுகள் இருக்கின்றன. முதல் கனவில், ஜாஹிலியா நகரில் (மெக்கா நகர அடையாளமாக இப்படியொரு நகரம்) இறைத்தூதர் தனக்கு இறைவனால் அருளப்பட்ட வசனங்களைச் சொல்கிறபோது, பழைய தெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அதே போனற வேறு சில வழிகாட்டல்களையும் கூறுகிறார். பின்னர், அவை சாத்தானின் வேலையால் தவறாகச் சொல்லப்பட்டுவிட்டன என்றும், உண்மையில் அவை இறைவனால் சொல்லப்பட்டவையல்ல என்றும் கூறுகிறார். நகரத்தைக் கைப்பற்றும் தூதருக்கு இரண்டு எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர், வேற்று மதப் பூசாரி. இன்னாருவர் எதையும் சந்தேகிக்கிற பகடிப் புலவர். நகரம் கைப்பற்றப்படும்போது ஒரு பாலியல் விடுதியில் பதுங்கிக்கொள்கிறார் அங்குள்ள பெண்களுக்கு தூதரின் மனைவிகளுடைய பெயர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
தூதரிடமிருந்து தப்பிக்கும் ஒருவன், தனக்கு அவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறான். அவர் உண்மையிலேயே தனக்கு இறைவன் சொன்ன வசனங்களில் சிலவற்றை மாற்றிவிட்டார் என்றும் கூறுகிறான். இவையெல்லாம், இறைத்தூதர் மீதான நம்பிக்கையைச் சிதறடிப்பதாக இருக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இரண்டாவது கனவில், இந்தியாவைச் சேர்ந்த கிராமத்துப் பெண்ணான ஆயிஷா, தனக்கு இறைத்தூதரின் அருள் கிடைத்ததாகக் கூறி, மக்களை அழைத்துச் செல்கிறாள். அரபிக் பெருங்கடல் குறுக்கிடுகிறது. இறையருள் இருப்பதால் கடல்நீர் மீது அவர்கள் நடக்க முடியும் என்கிறாள். அதைக் கேட்டு கடல் மீது நடக்கிறபோது, அவர்கள் நீரில் மறைகிறார்கள். அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்றும், இல்லை இறையருளால் புனித நகரத்தை அடைந்துவிட்டார்கள் என்றும் இருவிதமாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது கனவில் மதவெறியரான இமாம் என்பவர் வருகிறார். அவர், இடைறத்தூதராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஃபரிஷ்டாவை, தன்னால் நாடுகடத்தப்பட்ட ஆயிஷா என்ற அரசியுடன் செயற்கையாகப் போரில் ஈடுபட வைக்கிறார்.

இத்தகைய சித்தரிப்புகள் வரம்புமீறிவிட்டன, தூதரின் சொற்களில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன என்ற விமர்சனங்கள்தான் விபரீதங்களாக உருவெடுத்தன. இறைத்தூதர், புனித நகரம் ஆகிய பெயர்களைக் கற்பனையாகப் புனைந்தவர், இவற்றையும் வேறு வகையில் கொண்டுவந்திருக்க முடியும் என்ற கரிசனக் குரல்களும் கேட்கின்றன. ஆயினும், ஃபத்வா அறிவித்து ஒருவரின் வெளியுலகை இருட்டடிப்பு செய்வது ஏற்க முடியாதது என்ற படைப்புரிமைக் குரல்களும் உரக்க எழுகின்றன. ஒரு படைப்பில் தவறான சித்தரிப்பு இருப்பதாகக் கருதப்படுமானால், அது தவறு என்று சுட்டிக்காட்டவும், சரியானது எது என்று எடுத்துக்காட்டவுமான வாய்ப்பை விமர்சிக்கிறவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமேயன்றி இப்படி ஆளை ஒழிக்கும் பாதையில் செல்வது நாகரிகக் காலத்திற்குப் பொருந்ததாதது. மேலும் அது மார்க்கத்தினர் அனைவருமே சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த உணர்வுகளும் மேலோங்க, அந்த “பத்வா” ஆணையை விலக்கிக்கொள்வதற்கான முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால் தொடரவில்லை. ஏனென்றால், மதவிதிகளின்படி ஃபத்வா ஆணையைப் பிறப்பித்தவர் யாரோ அவரேதான் விலக்கிக்கொள்ளவும் அதிகாரம் உள்ளவர். ஆனால் அயதுல்லா கோமெய்னி காலமாகிவிட்டாரே… எதிர்காலத்தில் எந்த மதம், எந்த அமைப்பானாலும் இப்படிப்பட்ட தண்டனை ஆணைகளைப் பிறப்பிக்கிற அதிகாரங்கள் இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியை மனித நேய மத நம்பிக்கையாளர்கள் எழுப்புவது சிறந்ததொரு சேவையாக அமையும்.
அதற்கொரு இணக்கத் துணையாக, தி சாட்டனிக் வெர்சஸ் (The Satanic Verses) இந்த நாவல் 1988ஆம் ஆண்டுக்கான ஒயிட்பிரெட் விருது (இப்போது கோஸ்டா புத்தக விருது என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையையும் பெற்றது.
எழுதியவர் :

அ. குமரேசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

