தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல்
மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள்
அ. குமரேசன்
ஒரு இலக்கியப் புனைவின் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அல்லது அது முன்வைக்கும் விமர்சனங்களைப் பரிசீலிக்க மனமில்லாமல் அதைத் தாக்குவது ஒரு சமூக மூர்க்கம்தான், அதைப் புறக்கணிப்பது ஒரு அரசியல் வன்முறைதான்.
ஆனால், ஒரு புத்தகம் மனிதர்களின் இயற்கையான குணமே மூர்க்கம்தான் என்று கூறுகிறது; ஒழுங்குபடுத்தும் அரசியல் விதிகளையும் மத நெறிகளையும் கொச்சைப்படுத்துகிறது; வன்முறைகளை நியாயப்படுத்துகிறது; நம்பிக்கையின்மையைப் போதிக்கிறது என்றெல்லாம் கூறி அதற்குத் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாகப் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் அதைப் படிக்கக்கூடாது என்று அவர்களின் கைகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது.
1954ஆம் ஆண்டில் வெளியோன ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (ஈக்களின் எசமான் – Lord of the Flies) நாவல் இந்த மூர்க்கத் தடைகளை மீறி வாசகர்களின் கைகளுக்குச் சென்றது. அதை எழுதியவர் வில்லியம் கோல்டிங் (1911–1993). அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 1983ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தகுதியை உறுதிப்படுத்தியதில் இந்த நாவலுக்கும் சிறப்பான பங்கிருந்தது. அதற்கு முன் ‘ரைட்ஸ் ஆஃப் பாஸேஜ்’ (பயணவழிச் சடங்குகள்) என்ற நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்தது. இவற்றுடன் ‘தி இன்ஹெரிட்டர்ஸ்’ (வாரிசுகள்), ‘பின்ச்செர் மார்ட்டின்’ (இது இந்த நாவலில் மையக் கதாபாத்திரத்தின் பெயர்) உள்ளிட்ட படைப்புகளும் சேர்ந்தே நோபல் விருதுக்குரிய இடத்தை நிறுவின.
படைப்பாளிக்கொரு பின்னணி

இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் பிறந்தவரான வில்லியம் கோல்டிங் (William Golding) ஒரு நாவல் புனைவாளர், கவிஞர், நாடகாசிரியர். அவரது தந்தை ஒரு பகுத்தறிவாளர், அறிவியலாளர், அரசியல் இயக்க ஈடுபாட்டாளர். தாய் அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமைக்காகப் போராடிய களச் செயல்பாட்டாளர். கோல்டிங் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது அன்றைய கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தின்படி கடற்படையில் சேர்க்கப்பட்டு களத்திற்கு அனுப்பப்பட்டார்.
வளர்ந்த குடும்பச் சூழலிருந்து மாற்றுச் சிந்தனைகளையும், கட்டாயக் கடற்படைப் பணியிலிருந்து போரின் மோசமான விளைவுகளையும், பள்ளி ஆசிரியர் அனுபவத்திலிருந்து இளையோரின் குண இயல்புகளையும் கூர்மையாக உள்வாங்கினார். மனித வாழ்க்கையும், தத்துவக் கண்ணோட்டமும் சார்ந்த படைப்புகளை உருவாக்கியதில் இந்தப் பின்னணிகளுக்கும் அனுபவங்களுக்கும் அடிப்படையான பங்கிருந்தது என்று இலக்கிய உலகினர் குறிப்பிடுகின்றனர்.
தடைகளையும் கெடுபிடிகளையும் வென்ற அந்த நாவல் இன்று சிறந்ததொரு குறியீட்டுச் சித்தரிப்பாக, தத்துவப் படைப்பாக, அரசியல் புனைவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஈக்களின் எசமான் எந்தப் ஈக்களைப் பறக்க விடுகிறது? எந்த எசமானை நடமாடவிடுகிறது?
தீவில் சிக்கிய சின்னப் பையன்கள்
இரண்டாம் உலகப் போர் பின்னணியில், அணுகுண்டுத் தாக்குதல்கள் வெடிக்கும் அபாயத்தில், பிரிட்டிஷ் அரசு பள்ளிச் சிறுவர்களை ஒரு விமானத்தில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுகிறது. ஒரு பள்ளியின் மாணவர்கள் செல்லும் விமானம் விபத்துக்கு உள்ளாகி ஆளரவமற்ற, அழகானதொரு தீவில் விழுகிறது. உடன் பயணித்த ஆசிரியர்கள், விமானப் பணியாளர்கள் உள்பட பெரியவர்கள் அனைவரும் உயிரிழக்க, தப்பிப் பிழைக்கிறவர்கள் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மட்டுமே.
என்ன செய்வது என்று கலங்கும் சிறுவர்களுக்கு, ஓரளவு முதிர்ச்சியுள்ளவனான ராஃப் தலைமைப் பொறுப்பேற்கிறான். முதலில் அனைவருக்குமிடையே ஒரு நாகரிகத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முயலும் ராஃப், ஒரு சங்கை எடுத்து ஊதி, சிறுவர்களைக் கூட்டி கூட்டம் நடத்துகிறான். அப்போது பகுத்தறிவு கொண்ட, ஆனால் உடல் சார்ந்த இயலாமை உள்ளவனான பிக்கி, ஒரு நாகரிக சமூகத்தில் ஒவ்வொருவருக்குமான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறான். இருவரும் இணைந்து தீவில் ஒரு கட்டுப்பாடான சமுதாயத்தை உருவாக்க முயல்கின்றனர்.
தீவிலிருந்து தப்பிப்பதற்காக, கடலில் செல்லும் கப்பல்களின் கவனத்தை ஈர்க்க ஒரு சமிக்கை நெருப்பைத் தொடர்ச்சியாக எரிய வைக்க முடிவு செய்கிறார்கள். பிக்கி அணிந்துள்ள கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு மூட்டுகிறார்கள்.
பள்ளியில் பாடகர் குழு தலைவனாக இருந்தவனான ஜாக் மெரிடியூ அடங்காத அதிகாரப் பசி கொண்டவன். விலங்குகளிளை வேட்டையாடிக் கொல்வதில் ஆர்வமுள்ள அவனால் ‘ராஃப் தலைமையை சகித்துக்கொள்ள முடியவில்லை. சமிக்கை நெருப்பை எரிய வைப்பதை விட, காட்டுப் பன்றிகளை வேட்டையாடி உணவாகச் சுடுவதே முக்கியம் என அவன் வாதிடுகிறான். சிறுவர்களில் அதிகமானோர் அவனுடைய குழுவில் சேர்கின்றனர். பன்றிகளை வேட்டையாடுவதில் அவர்கள் மனிதத் தன்மையற்ற வன்மமும் மூர்க்கமும் மிக்க ரசனையை வளர்த்துக் கொள்கின்றனர்.
கொடூர விலங்கு பயம்
தீவில் ஒரு கொடூரமான மிருகம் இருக்கிறது என்ற அச்சம் சிறுவர்களுக்கிடையே பரவுகிறது. முதலில் அது ஒரு கற்பனையாகத்தான் இருந்தது என்றாலும் படிப்படியாக அந்த அச்சம் உண்மையானது என்ற கவலை தொற்றுகிறது. ஜாக் அவர்களின் பீதியை சாதகமாக்கிக்கொண்டு, தன்னால்தான் எல்லோரையும் காப்பாற்ற முடியும் என்று சொல்லி, ராஃபிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க முயல்கிறான். ஒரு வேட்டைக்காரன் போலத் தனது முகத்தில் வண்ணக் கோடுகள் வரைந்து மிரளவைக்கும் சடங்குகளை நடத்துகிறான்.
சமிக்கை நெருப்புப் பராமரிப்பை விட்டுவிட்டு, ஜாக் குழுவினர் வேட்டையாடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தீவுக்கு அருகாமையில் வரும் ஒரு கப்பல், அந்த நெருப்பு அணைந்துவிட்டதால், மக்கள் இருப்பதற்கான சமிக்கை கிடைக்காத நிலையில் திரும்பிவிடுகிறது. இது நாகரிகத்தோடு அணுகும் ராஃப், வன்மம் நிறைந்த ஜாக் இருவருக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்துகிறது. பகுத்தறிவுள்ள பிக்கி, ஆன்மீகச் சிந்தனை கொண்ட சைமன் என சிலர் மட்டுமே இப்போது ராஃப் குழுவில் நிற்கின்றனர்.
“கொடூர விலங்கு என்பது வெளியே இல்லை, நம் மனதில்தான் இருக்கிறது,” என உணரும் சைமன் அதைப் பிற சிறுவர்களிடம் சொல்கிறான். “எனக்குள்ளேயும் அந்தக் கொடிய விலங்கு இருக்கிறது,” என்ற பொருளில் பேசுகிறான்.. ஆனால் அவன்தான் அந்தக் கொடூர விலங்கு என்று தவறாகப் புரிந்து கொள்ளும் ஜாக் குழுவினர் அவனை ஈவிரக்கமின்றித் தாக்கிக் கொல்கின்றனர்.
இப்படியாகப் போகும் கதையில், சிலர் மட்டுமே எஞ்சியிருக்க, பிக்கி சங்கை ஊதி மீண்டும் சிறுவர்களை ஒன்றுகூட்டிப் பகுத்தறிவுடன் பேச முயல்கிறான். அதை ஏற்க முடியாத ஜாக் குழுவினர் ஒரு பாறையை உருட்டி அவனையும் கொல்கின்றனர். நாகரிகத்தின் முழு அழிவையும், அநாகரிக வன்மத்தின் வெற்றியையும் குறிப்பது போல, அந்த ஒற்றுமைச் சங்கு உடைந்து நொறுங்குகிறது.
இப்போது தனியாக விடப்படுகிறான் ராஃப். அவனை வேட்டையாட முயல்கிறது கும்பல். அவனைச் சுற்றிலும் நெருப்பைப் பற்ற வைக்கிறது. உயிரைப் பணயம் வைத்து ஓடுகிறான். குழுவினர் துரத்துகின்றனர். இறுதியாகக் கடற்கரையை வந்தடைகிறவனை அங்கே முகாமிட்டிருக்கும் கடற்படைத் தலைவர் மீட்கிறார். சிறுவர்களின் தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் அவர், தீவில் நடந்த அட்டூழியங்களைக் கேட்டு உறைந்து போகிறார். அவரைக் கண்டதும் ராஃப், ஜாக் உள்பட எல்லோரும் மறுபடி சிறுவர்களாக மாறி அழத் தொடங்குகிறார்கள்.
எசமான் யாரெனில்…
எஞ்சிய சிறுவர்கள் மீட்கப்படுவது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அவர்களை மீட்பவரே ஒரு போர்க் கப்பலின் தலைவர்தான். பெரியவர்களின் உலகம் ஏற்கெனவே வேறு வகையான வன்முறை அரசியலால் கட்டப்பட்டிருப்பதைக் கதை உணர்த்துகிறது என்று திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகப் போரின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆயுதமோகிகள் மானுட மாண்புகளைப் பாதுகாக்கத் தவறிய குற்றவாளிகளே என்று சாடுகிறது. போர் வேண்டாம் எனும் இலக்கியக் குரலாக ஒலிக்கிறது.
ஆதியில் மனிதர்கள் மூர்க்கத்தனமாக இருந்தார்கள் (இன்றும் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்!), படிப்படியாக மாறினார்கள் என்பது உண்மை. அந்த மாற்றத்தைத்தான் நாகரிகம் என்று கூறுகிறோம் என்பதும் உண்மை. அந்த நாகரிகத்தின் காவல் இல்லாமல் போகுமானால், மனிதப் பரிணாமத்தின் மாண்புகள் மறையும், புதைந்து போன தீமைகள் மேலெழும் என்ற எச்சரிக்கைச் சங்கையும் இந்த நாவல் ஊதுகிறது என இணையவழித் திறனாய்வுகள் மூலம் அறிய முடிகிறது.
அழுகிப்போன பொருள்களின் மீது ஈக்கள் மொய்க்கும். நாவலில், தரையில் ஊன்றப்பட்ட ஒரு குச்சியில் செருகப்பட்டிருக்கும் ஒரு பன்றித் தலையை ஈக்கள் மொய்க்கின்றன. ஈக்களைப் போல தீமைகள் எங்கும் பரவியிருப்பதைச் சொல்ல முயல்கிறது நாவல். சுயநலமும் வன்மமும் குடியேறிய மனம்தான் அந்த ஈக்களின் எசமான்.
ஏன் சிறுவர்கள்?
ஏன் ஆண்கள்?
தீவுக் காட்டுக்குள் சில வழிபாட்டு முறைகளைத் தொடங்குவதாகச் சித்தரித்திருப்பதும், சைமனின் கருத்து ஏற்கப்படாததும் மதத்தின் தோல்வியைக் குறிக்கின்றன, ஆகவேதான், போர் மோக அரசியல் சிந்தனையாளர்களோடு, மதவாதிகளும் இந்த நாவலை எதிர்த்தார்கள் போல!
வாழ்க்கை அனுபவத்தின் பிரதிநிதிகளான பெரியவர்களின் வழிகாட்டலும், பாலினத் துணைகளான பெண்களும் இல்லாதபோது மூர்க்கத்தின் இருண்மையில் மூழ்க நேரிடும் எனக் காட்டுவதே ஆண்கள் மட்டுமே உள்ள அந்தக் கூட்டம். அதே போல், இத்தனை தலைமுறைகள் கடந்தும் மனிதர்கள் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதன் வெளிப்பாடுதான் காட்டாட்சி செய்வோர் சிறுவர்கள் என்ற சித்தரிப்பு.
இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வந்திருக்கிறது. 1963இல் பிரிட்டன் தயாரிப்பபாகக் கறுப்பு வெள்ளையில் வந்த முதல் படம் நாவலுக்கு நெருக்கமாக இருக்கிறது என்ற வரவேற்பைப் பெற்றது. 1990இல் ஹாலிவுட் தயாரிப்பாக, இங்கிலாந்துச் சிறுவர்களை அமெரிக்கர்களாக மாற்றிச் சித்தரித்த பல வண்ணப் படம், நாவலின் ஆழத்தைத் தொடத் தவறிவிட்டது என்ற விமர்சனத்தைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுமே நாவல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தின. படக்கதைப் புத்தகம், கார்ட்டூன் படம் என்ற வடிவங்களையும் இந்த நாவல் எடுத்திருக்கிறது.
ஆக்கிரமிப்புப் போர் தொடுப்பவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற நாவல், தீங்குகளுக்குத் தீர்வு காணப் போராடுகிற சக்திகள் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கருத்தும் பகிரப்படுகிறது. இலக்கிய ஆக்கத்தில் அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த இரு கருத்துகளின் “போர்” நிற்காமல் தொடரும்தான் இல்லையா!
எழுதியவர் :

அ. குமரேசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.