ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக ‘டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’…
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–3
– அ. குமரேசன்
“உண்மையைச் சொல், சொன்னபின் ஓடிவிடு.”
“எனது கல்வியில் எனது பள்ளிப் படிப்பு தலையிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.”
“புன்னகை என்பது மின்சாரம். தருபவரை மங்கிவிடச் செய்யாமல் பெறுபவரை ஒளிரச் செய்யும் வாழ்க்கை.”
“எப்போதும் மற்றவர்களின் இறுதிநிகழ்வுகளுக்குச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுடையதற்கு அவர்கள் வர மாட்டார்கள்.”
– இப்படியெல்லாம் எழுதியவர் மார்க் ட்வெய்ன் (Mark Twain) (1835–1910). தமது சமூக நையாண்டிப் படைப்புகளுக்காகவும் நகைச்சுவை இழையோடும் தெறிப்புகளுக்காகவும் உலகெங்கும் வாசிக்கப்படுபவர். ‘டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’, ‘ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்’, ‘அரசனும் ஆண்டியும்’, ‘மிசிசிப்பி வாழ்க்கை’, ‘முலாம் பூசிய காலம் – இன்றைய கதை’ ‘புடன்ஹெட் வில்சன்’ உள்ளிட்ட நாவல்கள் புகழ்பெற்றவை என இலக்கிய நேயர்கள் தெரிவிக்கிறார்கள்.

டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’ நாவலின் தொடர்ச்சியாகவும், தனியாக வாசிக்க தக்கதாகவும் 1884இல் வந்தது ‘ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்’. இனவாதத்தைத் தூண்டுகிறது, கறுப்பின மக்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புகிறது, கெட்டவார்த்தைகளைப் பேசுகிறது என்று குற்றம் சாட்டப்பட்ட அந்த நாவல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. பிரிட்டன் உள்பட வேறு பல நாடுகளில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இன்று உலக இலக்கியங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கும் அந்த நாவல் கூறுகிற இருவரின் பயணக் கதைக்குள் நாமும் பயணிப்போம்.
கதைச் சுருக்கம்
1840களில் நடக்கிற கதை. மிசோரி மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தைச் சேர்ந்த சிறுவன் ஹக்கிள் பெர்ரி ஃபின். நண்பனான டாம் சாயர் சாகசங்களின் பலனாகப் பெருந்தொகை ஒன்றைப் பெறுகிறான். கணவரை இழந்தவரான டக்ளஸ், அவரது சகோதரி மிஸ் வாட்சன் இருவரும் ஹக்கைத் தங்கள் பாதுகாப்பில் வளர்க்கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையை விரும்பினாலும் அவன் டாம் சாயரின் கூட்டத்தோடு இருப்பதற்காக அங்கேயே தங்குகிறான்.
குடிகாரனான தகப்பன் பாப் தனது பணத்தைக் கைப்பற்ற முயன்றதைத் தடுக்கிறான் ஹக். ஆத்திரத்துடன் அவனை வெகுதொலைவில் ஒரு தனி அறையில் அடைத்து வைக்கிறான். பாப் நிதானம் இழந்த போதையில் ஹக்கைக் கொல்லவும் முயல்கிறான்.
ஹக் தான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக நாடகமாடி ஒரு தீவுக்குத் தப்பிச் செல்கிறான். அங்கே மிஸ் வாட்சனின் அடிமையான கறுப்பின இளைஞன் ஜிம் அவனுடன் பழகுகிறான். அவள் தன்னை விற்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்து தப்பி ஓடத் திட்டமிட்டிருப்பதைக் கூறுகிறான். அவனுடன், ஹக்கும் இணைகிறான்.
இருவரும் மிசிசிப்பி நதியில் ஒரு கட்டுமரத்தில் பயணம் செய்கிறார்கள். ஒரு வெள்ளப் பெருக்கின்போது கரையொதுங்கும், அவர்கள் ஒரு படகு வீட்டைக் காண்கிறார்கள், அங்கு ஜிம், துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடக்கும் ஒருவரது உடலைக் காண்கிறான். ஆனால், ஹக் அதைப் பார்க்க வேண்டாமென்று தடுத்துவிடுகிறான்.
நகருக்குள் செல்லும் ஹக் அங்கே ஜிம்மைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதை அறிகிறான். ஹக்கை ஜிம்தான் கொலை செய்துவிட்டதாக கதை பரவியிருக்கிறது. ஜிம்மிடம் திரும்பி வருகிறான். இருவரும் மறுபடியும் தங்கள் கட்டுமரத்தில் தப்புகிறார்கள். ஓரிடத்தில் தரைதட்டி நிற்கும் ஒரு நீராவிப் படகைப் பார்க்கிறார்கள். அதில் இரண்டு திருடர்கள், மூன்றாவது நபரைக் கொல்லப் போவதாகக் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹக்கும் ஜிம்மும் அந்தத் திருடர்களின் படகில் தப்பிச் செல்கிறார்கள்.
இதற்கிடையே பயணத்தில் பல சவால்கள் குறுக்கிடுகின்றன. சமாளித்துத் தொடர்கிறார்கள்.. திடீரெனப் படகு மூழ்கிவிடுகிறது. இருவரும் பனி மூட்டத்தில் பிரிந்துவிடுகிறார்கள். ஒருவழியாக மீண்டும் சந்திக்கிறபோது, இப்படி நடக்கும் என்று தன் கனவில் வந்ததாக ஹக் பொய்யாகச் சொல்கிறான். உண்மை தெரியவரும்போது ஜிம் மிகவும் வருத்தமடைகிறான். தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தவனான ஜிம் எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறான் என்று அறியும் ஹக் அவனைப் புண்படுத்திவிட்டதை எண்ணி தானும் வருந்துகிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள்.
சில வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். எசமானர்களிடமிருந்து ஓடிப்போன கறுப்பின அடிமைகளைப் பிடிக்க வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஹக் அப்படி யாரையும் பார்க்கவில்லை என்று கூறி, ஜிம்மைக் காப்பாற்றுகிறான். ஒரு கட்டுமரத்தில் பயணம் தொடரும் நிலையில் ஒரு நீராவிக் கப்பல் வந்து மோதுகிறது. ஹக்கும் ஜிம்மும் மீண்டும் பிரிகிறார்கள்.
வழியில், கிரேஞ்சர் ஃபோர்டு குடும்பத்தை சந்திக்கிறான் ஹக்.. அந்தக் குடும்பத்திற்கு சீப்பர்ட்சன் குடும்பத்துடன் முப்பது ஆண்டுகாலப் பகை. இப்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இருவர் காதலித்து ஓடிப்போன பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.. இரு தரப்பினரின் மோதல் ஒரு கொலையில் முடிகிறது.அங்கிருந்து தப்பிக்கும் ஹக் மறுபடியும் ஜிம்முடன் இணைகிறான்.
மன்னர் குடும்பம் என்று கூறிக்கொள்ளும் இரண்டு மோசடிக்காரர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மோசடிகளுக்கு ஹக்கையும் ஜிம்மையும் உதவ வைக்கிறார்கள். ஒரு நகரத்தில் மோசடிக்காரர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் மேடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மூன்றாம் நாள் இரவில், ஏமாற்றப்பட்டதை அறிந்து பழிவாங்கத் துடிக்கும் முந்தைய காட்சியின் பார்வையாளர்களிடம் தந்திரமாகக் கட்டணத்தை வசூலிக்கும், மோசடிக்காரர்கள் ஓடிவிடுகிறார்கள்.
அந்த இருவரும் அடுத்த நகரத்தில் அண்மையில் இறந்துவிட்ட பீட்டர் வில்க்ஸ் என்பவரின் சகோதரர்களைப் போல் நடித்து, அவரது சொத்தை திருட முயல்கிறார்கள். ஆதரவற்றவர்களாக நிற்கும் அவருடைய மருமகள்களுக்காக அந்தச் சொத்தை மீட்க ஹக் உதவுகிறான். வில்க்ஸின் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு மேலும் இரண்டு பேர் வருகிறார்கள், குழப்பம் ஏற்படுகிறது. ஹக்கை மோசடிக்காரர்கள் பிடித்து வைக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஜிம்மைப் பிடித்து பெல்ப்ஸ் என்பவரிடம் விற்றுவிட்டதை ஹக் கண்டறிகிறான். அவனை விடுவிக்க உறுதியேற்கிறான். இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பித்து அங்கே போகிறான்.
பெல்ப்ஸ் ஹக்கை தங்கள் மருமகன் டாம் சாயர் என்று தவறாக நினைக்கிறார்கள். அவர்களுடன் இணக்கமாகப் பழகுகிறான். திரும்பி வரும் டாம் சாயர் நடப்பதைப் புரிந்துகொண்டு ஹக்கின் நாடகத்திற்கு ஒத்துழைக்கிறான். மன்னர் குடும்பம் என்று ஏமாற்றி வந்தவர்கள் பற்றி எல்லோருக்கும் தெரிவிக்கிறான் ஹக். ஊரார் அவர்களின் முகத்தில் தார் பூசி இறகுகள் ஒட்டி நகரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்.
ஜிம்மைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் டாம் சாயர் காயமடைகிறான். தப்பித்துச் செல்ல இருந்த ஜிம் அவனைக் கவனித்துக் கொள்வதற்காகத் தங்குகிறான். அப்போது கைது செய்யப்பட்டு பெல்ப்ஸிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறான். அந்நேரம் டாமின் அத்தை பாலி வருகிறார். ஹக், டாம் இருவரது உண்மையான அடையாளங்களை வெளிப்படுத்துகிறார். மிஸ் வாட்சன் இறந்துவிட்டதையும், அவர் தனது உயிலில் ஜிம்மை விடுவித்துவிட்டதாக எழுதியிருப்பதையும் பாலி விளக்குகிறார். டாம் அந்த விசயம் தனக்குத் தெரியும் என்றும், வேண்டுமென்றே அதை மறைத்து ஜிம்மை ஒரு விறுவிறுப்பான முறையில் மீட்க விரும்பியதாகவும் தெரிவிக்கிறான். படகு வீட்டில் இறந்து கிடந்தது ஹக்கின் அப்பா பாப்தான் என்று கூறுகிறான் ஜிம். பெல்ப்ஸ் குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்படுவதிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக வாழ விரும்பும் ஹக் பூர்வகுடிமக்கள் வாழும் பகுதிக்குச் செல்கிறான்.
உடைபட்ட தடை
குழந்தைகளின் ரசனைக்கான சாகசக் கதையாக எழுதப்பட்ட இந்த நாவல் உண்மையில் கறுப்பின மக்களை எப்படியெல்லாம் வெள்ளையினக் கனவான்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று காட்டுகிறது. ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தை வைத்து, சமூக நிலவரங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. உண்மை நிலையைக் காட்டுவதற்காக, வசனங்களில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த கடுமையான சொற்களையும் வசவுகளையும் சேர்த்திருக்கிறார் மார்க் ட்வெய்ன் (Mark Twain).
வெள்ளைச் சமூகத்தினருக்கு அவர்களது இனவாத ஆணவங்களை அம்பலப்படுத்தியதால் நாவல் பிடிக்காமல் போனது. போலியான காரணங்களைக் கூறி தடை விதிக்க வற்புறுத்தினார்கள். மனசாட்சிப்படி செயல்பட விரும்பும் ஹக் பாத்திரம், மத போதனைகளை மீறுவதாக இருக்கிறது என்று அன்றைய கிறிஸ்துவ மதவாதிகளும் எதிர்த்தார்கள். இனவாத, மதவாதப் பார்வைகளுடன் இருந்த அமெரிக்க மாநிலங்களின் ஆட்சியாளர்கள் நாவலுக்குத் தடை விதித்தார்கள். பல ஆண்டுகள் கடந்த பின்னரே தடை விலக்கப்பட்டது.
‘தி அட்வெஞ்ச்சர்ஸ் ஆஃப் ஹக்கிள்பெர்ரி ஃபின்” (Adventures of Huckleberry Finn) நாவல் வெளியான காலத்தில் பெரிய விருதுகள் ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும், காலப்போக்கில் இந்த நாவல் இலக்கிய உலகில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது. அமெரிக்க இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான படக்கதை வடிவத்திலும், சில திரைப்படங்களாகவும் மக்களிடம் வந்திருக்கிறது. அமெரிக்க இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த புத்தகங்களில் ஒன்று என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறது. அடிமைத்தனத்திற்கு, இனவெறிக்கு எதிராகக் களம் இறங்குவோருக்கு ஒரு இலக்கியத் துணை என்ற இடத்தையும் பிடித்திருக்கிறது.
எழுதியவர்:
அ.குமரேசன்
முந்தைய கட்டுரையை படிக்க: தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–2 : அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் (ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’)
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.