கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’!
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–6
அ. குமரேசன்
இந்தியாவில் 1967ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட நாவல். இங்கிலாந்து நாட்டவரான அல்டஸ் ஹக்ஸ்லே (Aldous Huxley) (1894 – 1963) எழுதிய ‘பிரேவ் நியூ வொர்ல்ட்’ (Brave New World). மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் கோழைத்தனமாக இருக்கும் ஒரு முட்டாள்தனமான அரசு பற்றி “துணிச்சலான புதிய உலகம்” என்று வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறும் இந்த நாவல் அதற்கு முன் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் பல மாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்டது. பிற்காலத்தில் உலகின் சிறந்த அறிவியல் புனைவுகளில் ஒன்று, அரசியல் விமர்சனப் படைப்பு, இயற்கையான உறவுகளை உயர்த்திப் பிடிக்கும் சித்தரிப்பு, உழைப்பாளிகள் எந்திரமாக்கப்படுவதை எதிர்க்கும் வெளிப்பாடு என்ற பாராட்டுகளைப் பெற்றது. பல்கலைக்கழக ஆய்வுகளுக்கும் இந்த நாவல் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சுரண்டலையும் போலியான கட்டுப்பாடுகளையும் நாவல் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறது. ஆனால் அதை மறைத்து, பாலியல் உறவுகள் பற்றிப் பேசுகிறது என்றும், நம்பிக்கைகளை இழிவுபடுத்துகிறது என்றும், சிறு வயதினர் படிக்க ஏற்றதல்ல என்றும் கரித்துக் கொட்டிப் புத்தகத்தைப் புதைத்துவிட முயன்றனர். அதுவோ புதைத்த மண்ணைப் பிளந்து முளைத்ததுடன், சிறந்த இலக்கியப் படைப்பாகவும் அடையாளம் பெற்றுவிட்டது.
உலகச் சந்தை ஆக்கிரமிப்புக் கார்ப்பரேட்டுகளின் முன்னோடியான ஹென்றி ஃபோர்டு, தனது தொழிற்சாலைகளில் புகுத்திய நடைமுறைகளை இந்த நாவலின் மூலம் எள்ளலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் ஹக்ஸ்லே. ‘கி.பி.’ என்று சொல்லப்படுவது போல, ‘ஃபோ.பி.’ (ஃபோர்டுக்குப் பின்) என்ற எதிர்காலத்தையும், அவர் ஒரு கடவுள் போல வழிபடப்படும் சூழலையும் கற்பனையாக உருவாக்கி அதில் கதாபாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறார் எழுத்தாளர். இந்தியாவின் சோமபானம் போன்ற மயக்கம் தரும் ஒரு திரவம் பற்றியும், அதை விடவும் போதையான சாதியப் பாகுபாடு பற்றியும் கூட இந்த நாவல் தொட்டுக் காட்டுகிறது. இந்த எழுத்தாக்கம் குறித்து இணையத்தின் தரவுத் தளங்கள் தெரிவிக்கும் தகவல்கள் சுவையானவை.
அப்படியோர் உலக அரசு!
நாவல் ஃபோ.பி. 632ஆம் (2540ஆம்) ஆண்டில், ‘உலக அரசு’ என்ற ஆட்சியின் கீழ் லண்டன் நகரில் தொடங்குகிறது. கடுமையான சட்டதிட்டங்களைத் திணித்து, மக்களுக்கு இயல்பாக நேசித்து, உறவு கொண்டு, குடும்பம் நடத்துகிற உரிமையைக் கூட மறுக்கிற அரசு அது. செயற்கையான கருப்பைகளில் உருவாக்கப்பட்டு, பிறந்தபின் சிறு வயதிலிருந்தே இப்படியிப்படித்தான் வாழ வேண்டும் என்று முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட திட்டத்தின்படி குடிமக்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவுத் திறன், உழைப்புத் திறன் என்ற அடிப்படைகளில் அல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்சிலான் என்ற ஐந்து சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அல்ஃபா மிக உயர்ந்த சாதி, மற்றவை அடுத்தடுத்த படிகளில் (வர்ணாஸ்ரம வகைப்பாடு போல) வைக்கப்பட்டிருக்கின்றன. சமுதாயம் வறுமை, துன்பம் என எந்தப் புகாரும் இல்லாமல் இருக்க ஆணையிடப்பட்டிருக்கிறது. எப்போதும் மகிழ்ச்சிகரமான மனநிலையிலேயே இருக்கச் செய்வதற்காக ‘சோமா’ என்ற பானத்தைப் பருகுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

கருப்பைத் தொழிற்சாலைப் பணியாளரான லெனினா பீட்டா சாதியைச் சேர்ந்தவள், பாலியலாக ஈர்க்கக் கூடியவள். அல்ஃபா சாதிக்காரனான பர்னார்ட் மார்க்ஸ், அந்தச் சாதிக்காரர்களின் உயரத்திற்கு வளராதவன், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பவன். கல்வியறிவின் காரணமாகக் குடிமக்களை அமைதியாக வைத்திருக்க சோமா குடிக்கச் செய்வது உள்ளிட்ட உலக அரசின் வழிமுறைகளை எதிர்க்கிறான்.பர்னார்ட் தனது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுகிறான். அவனை ஐஸ்லாந்து நாட்டிற்குக் கடத்த அவனுடைய நிறுவனத்தின் இயக்குநர் திட்டமிடுகிறான். பர்னார்ட்டின் ஒரே நண்பன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் வாட்சன், அதே சாதியைச் சேர்ந்தவன், நல்ல எழுத்தாளர். ஆனால், வலிகளை உணராத சமுதாயத்தில் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியாத நிலைமை.
சுற்றுலா செல்லும் பர்னார்ட், லெனினா இருவரும் காட்டுமிராண்டிகள் தனிப்பகுதி என்று ஒதுக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கே அவர்கள் இயற்கையாகப் பிறந்து வளரும் மக்களை முதல் முறையாகக் காண்கிறார்கள். அந்த மக்கள் காதல், இளமைத் துடிப்பு, நோய், முதுமை, தனி மொழி என்று வாழ்வதைப் பார்க்கிறார்கள். அவர்களிடம் முரட்டுத்தனமான மதச் சடங்குகளும் ஊறிப் போயிருக்கின்றன. சுற்றிவரும்போது இருவரும் நடுத்தர வயது லிண்டா, அவளுடைய மகன் ஜான் இருவரையும் சந்திக்கிறார்கள். உலக அரசின் பகுதியில் பிறந்து வளர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சுற்றுலாவின்போது, உடன்வந்தவர்களால் கவனக்குறைவாக விட்டுச் செல்லப்பட்டவள் அவள். சுற்றுலாக் குழுவோடு வந்த ஒருவனால் கருவுற்று, ஜானைப் பெற்றெடுத்தவள். அவளைக் கர்ப்பமாக்கியவன் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் இயக்குநர்தான் என்று பர்னார்ட் கண்டுபிடிக்கிறான்.
ஜான் பல ஆண்டுகளாக கிராமத்திலேயேதான் வாழ்கிறான் என்றாலும் ஊர் மக்கள் அவனை ஏற்கவில்லை. தனிமையில் வளர்ந்த அவனுக்குக் கிடைத்த இரண்டு புத்தகங்களே வழிகாட்டிகள். ஒரு புத்தகம் ‘அறிவியல் கையேடு’, இன்னொன்று ‘வில்லியம் ஷேக்ஸ்பியர் படைப்புகள்’. எப்போதும் அந்தப் புத்தகங்களில் படித்தவற்றை மேற்கோள் காட்டிப் பேசுவான்.
லிண்டா, தான் பிறந்த ஊருக்குத் திரும்ப விரும்புகிறாள். அவள் எப்போதும் புகழ்ந்து பேசும் புதிய உலகத்தைக் காண ஜான் ஆசைப்படுகிறான். பர்னார்ட், தான் நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, இருவரையும் லண்டனுக்கு அழைத்துச் செல்கிறான்.
லண்டனில், லிண்டாவைத் தாயாக்கிய நிறுவன இயக்குநரை ஜான் சந்திக்கிறான். “அப்பா” என்று அழைக்கிறான். செயற்கைக் கருத்தரிப்பு மட்டுமே நடைமுறையில் உள்ள ஊரில் அவன் இப்படி அழைப்பதைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள். இந்த அவமானத்தால் இயக்குநர் பதவி விலகுகிறான்.
புதிய ஊரில் பண்டைக்கால மனிதனாக ஜான் புகழ் பெறுகிறான். அவனுடைய பாதுகாவலனாக பர்னார்ட் முன்னிலை பெறுகிறான் என்றாலும், படிப்பார்வம் கொண்ட ஜானுக்கு எழுத்தாளரான ஹெல்ம்ஹோல்ட்ஸ் மீது மட்டுமே அன்பும் மரியாதையும் இருப்பதைக் கண்டு பொறாமைப்படவும் செய்கிறான். லிண்டா மறுபடி சோமா பானத்தில் மூழ்குகிறாள்.
ஜான், லெனினா இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அவளைப் பிடித்திருந்தாலும், தன்னிச்சையான பாலியல் வாழ்க்கையை ஜான் ஏற்க மறுக்கிறான். லெனினா அவனைக் கவர முயலும்போது, அவன் அவளைக் தாக்குகிறான். லிண்டா மரண படுக்கையில் கிடக்கும் தகவல் வருகிறது. தாயைப் பார்க்க ஜான் மருத்துவமனைக்குச் செல்கிறான். செயற்கையான அந்த இலட்சிய உலகத்தில், மரணம் பொருட்படுத்தத் தேவையில்லாத நிகழ்வாகக் கற்பிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான். இறப்பவர்களின் வலிகளும் அவர்களைச் சார்ந்தோரின் உணர்வுகளும் அலட்சியப்படுத்தப்படுவது அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. கோபத்தில் ஒருவரை அடித்துவிடுகிறான். அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகிறான்.

அடித்தட்டு மக்களுக்கு சோமா விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முயல்கிறான். ஏற்கெனவே அதன் மயக்கத்தில் கிடக்கப் பழக்கப்படுத்தப்பட்டவர்கான அவர்கள் கலவரம் செய்கிறார்கள். காவல்துறையினர் மக்கள் மீது ‘சோமா’ நுரை பீய்ச்சி அமைதிப்படுத்துகிறார்கள்.
பர்னார்ட், ஹெல்ம்ஹோல்ட்ஸ், ஜான் மூவரும் முஸ்தபா மோண்ட் என்ற உயரதிகாரியின் முன் நிறுத்தப்படுகிறார்கள். சமூகச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக அவர்களை நாடுகடத்தித் தீவுகளுக்கு அனுப்ப இருப்பதை மோண்ட் தெரிவிக்கிறார். பர்னார்ட் மேலும் ஒரு வாய்ப்பளிக்கக் கோருகிறான். ஆனால் ஹெல்ம்ஹோல்ட்ஸ் தீவு வாழ்க்கையில் தனிமனிதச் சுதந்திரத்துடன் இருக்கலாம், பலவகை மனிதர்களைப் பார்க்கலாம், புதிது புதிதாக எழுதலாம் என்ற எதிர்பார்ப்புடன் அந்த முடிவை ஏற்கிறான். நாடுகடத்தல் உனக்கு ஒரு பரிசுதான் என்று அதிகாரியும் கூறுகிறார். ஜானிடம் மோண்ட் தற்போதைய சமுதாயம் உருவானதன் பின்னணிகளைக் கூறுகிறார். சாதிப் பிரிவினைகள் தேவை என்று வாதிடுகிறார். அந்த வாதங்களை ஏற்க மறுக்கும் ஜான், மகிச்சியின்றி வாழும் உரிமையைக் கோருகிறான் என்று மோண்ட் அறிவிக்கிறார். தன்னையும் ஏதாவது ஒரு தீவுக்கு அனுப்ப வேண்டுமென்ற அவனுடைய கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
நாகரிக சமூகத்தின் ஒரே மாதிரியான வாழ்க்கையில் வெறுத்துப் போனவனாக ஜான் ஒரு குன்றின் கைவிடப்பட்ட கலங்கரை விளக்குக் கோபுரத்தில் நுழைந்து தனியாக வாழ்கிறான். நாகரிகம் எனப்படுவதிலிருந்து தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ள தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்கிறான். அந்தக் காணொளிப் பதிவு எங்கும் பரவ, அதை வேடிக்கை பார்க்க ஏராளமானவர்கள் கூடுகிறார்கள். ஊடகவியலாளர்களும் குவிகிறார்கள். ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து லெனினா இறங்கி வருகிறாள். தனது நேசத்துக்கும் கோபத்துக்கும் ஆளானவளை அவன் சவுக்கால் அடிக்கிறான், மறுபடியும் தன்னைத்தானே அடித்துக்கொள்கிறான். மக்கள் சோமா பருகி வெறியாட்டம் போடுகிறார்கள். மறுநாள், அந்த வெறியாட்டத்தில் கலந்துகொண்ட குற்றவுணர்வுடன் எழுகிறான் ஜான். மக்கள் அவனைப் பார்க்க வருகிறார்கள். அவனுடைய உடல் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
அரவணைத்த அங்கீகாரம்

மக்களின் துயரங்களுக்குத் தீர்வு கண்டு உண்மையான மகிழ்ச்சி வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியாத சுரண்டல் வர்க்க அரசுகள் சாதி–மதப் பிரிவினைகளையும் சடங்குச் சம்பிரதாயங்களையும் போதை மயக்கங்களையும் பயன்படுத்திப் போலியான கொண்டாட்டத்தில் வைத்திருப்பதைக் கூண்டில் நிறுத்துகிற “துணிச்சலான புதிய நாவல்” இது. உலகெங்கும் இருக்கிற இலக்கியவாதிகளும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் குரல்கொடுத்திராவிட்டால் இந்த நாவலை ஆளில்லாத் தீவுக்குக் கடத்தியிருப்பார்கள்.
அல்டஸ் லியோனார்ட் ஹக்ஸ்லே எழுதிய ‘டோர்ஸ் ஆஃப் பெர்சப்ஷன்’ (நுண்ணுணர்வின் வாசல்கள்), ‘ஐலாண்ட்’ (தீவு) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நாவல்களையும் வழங்கியிருக்கிறார். துணிச்சலான புதிய உலகத்தைப் பகடி செய்யும் இந்த நாவல் எந்த அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதோ அதே அமெரிக்காவின் ‘மாடர்ன் லைப்ரரி’ அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து ஐந்தாவது இடத்தை அளித்தது. ‘தி அப்சர்வர்’ பத்திரிகை வெளியிட்ட, அனைத்துக் காலங்களிலும் சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் இது 53வது இடத்தைப் பெற்றது. நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது, இரண்டு முறை திரைப்படங்களாகவும் வந்திருக்கிறது.
நாவலாசிரியர் ஹக்ஸ்லே பற்றி ஒரு கூடுதல் தகவல்: சிறு வயதில் பார்வைத் திறனைப் பெரிதும் இழந்துவிட்டார். புத்தக வாசிப்புதான் அவருக்கு ஒரு துணையாக அமைந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஓரளவுக்குப் பார்வை மீண்டது. உலகத்தையும் நிகழ்வுகளையும் உற்றுப் பார்க்கிற மாற்றுத் திறனைச் செழுமையாக வளர்த்துக்கொண்டு இலக்கிய உலகில் நடைபோட்டார். அறிவியல் வளர்ச்சியின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு, அதைத் தவறாகப் பயன்படுத்துவோர் பற்றிய எச்சரிக்கை இரண்டும் அவரது எழுத்துகளில் வெளிப்படுகின்றன என்று திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

