தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 8
புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)
அ. குமரேசன்
1958ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ஆனால் அதை உருவாக்கிய எழுத்தாளர் விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் அரசியல் நோக்கத்திற்கு இரையாவதைப் புரிந்துகொண்டு, அல்லது உலகில் அப்போது நடந்த ஏதேனும் அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மனசாட்சியின்படி மறுத்தாரா? அல்லது நாவலுக்கு சொந்த நாட்டில் எழுந்த எதிர்ப்புக்குப் பணிந்தாரா? கதையையும், கதை வெளியான கதையையும் தெரிந்துகொண்டால் இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கும்.
ரஷ்ய நாட்டவரான போரிஸ் லியோனிடோவிச் பாஸ்டர்நாக் (Boris Pasternak) (1890–1960) ‘தடை வேலிகளுக்கு மேலே மேகங்கள்’, ‘மேகங்களின் நடுவே இரட்டை நட்சத்திரம்’, ’இரண்டாவது பிறப்பு’, ‘கருத்துகளும் வெவ்வேறு வகைகளும்’ ஆகியவை உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியவர். தனது காலகட்டத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மை, மக்களின் அவலம், முதலாம் உலகப் போர், ஜார் சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்களின் எழுச்சி, ஆட்சியைத் தூக்கி எறிந்து சோசலிச சோவியத் யூனியன் ஆட்சிக்கு அடிப்படை அமைத்த புரட்சி, கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்கள், இரண்டாம் உலகப் போர், சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த அசைவுகள் ஆகியவற்றின் தாக்கங்களை நேரடி அனுபவங்களாக உள்வாங்கினார். அவற்றில் அவருக்கு மாறுபட்ட சிந்தனைகளும்இருந்தன. அந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தி அவர் முதலாவதாகவும் கடைசியாகவும் எழுதிய நாவல் இது.
1950ஆம் ஆண்டுகளில் நாவலைப் பகுதி பகுதியாக எழுதி, அப்போதைய வழக்கப்படி இலக்கிய மேடைகளில் வாசித்து வந்தார். முழுப் புத்தகமாகத் தொகுக்கப்பட இருந்த நிலையில் சோவியத் அரசு அதை அச்சிடவும் வெளியிடவும் தடை விதித்தது. ஜார் அரசின் கீழ் நாட்டு மக்கள் வறுமையிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வான நிலைமைகளிலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது, அதற்கு எதிராக ஆவேசத்துடன் போராட்டங்கள் வெடித்தது. இவற்றைத் தொடக்கப் பகுதியில் சரியாகப் பதிவு செய்த நாவல், பின்னர் புரட்சி என்றாலே கொடூரமான வன்முறைகள் என்றும், மாற்றங்களுக்கான திட்டங்களை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றும், அரசாட்சியிலும் சமூக வாழ்விலும் கட்டுப்பாடுகளின் பெயரால் கிறிஸ்துவத் திருச்சபைகள் ஆதிக்கம் செலுத்திய காலத்திற்குத் திரும்பிச் செல்வதன் மீது மோகத்தை ஏற்படுத்துகிறது என்றும், சோசலிசக் கட்டுமானத்தின் மேல் மனநிறைவின்மையை வளர்க்கிறது என்றும் தடைக்கான காரணம் கூறப்பட்டது.
கடத்தப்பட்டு வெளியீடு
சில நண்பர்களின் உதவியோடு தொகுப்பு இத்தாலிக்குக் கடத்தப்பட்டது. அங்கே புத்தகமாக அச்சிடப்பட்டு 1957இல் வெளியிடப்பட்டது. இதில் ஒரு கவனிக்கத்தக்க ஒரு தகவல் – நாவலை வெளியிட்ட ஜியாங்கியாகோமோ ஃபெல்ட்ரினெல்லி ஒரு இடதுசாரிப் பதிப்பாளர், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இயக்கத்தின் லட்சியங்களுக்கு எதிரானதாகவும் எழுதப்பட்ட நாவலை வெளியிட்டதற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நூலை அச்சிட்டு வெளியிட வைப்பதற்கு சிஐஏ வேலை செய்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க அரசு நடத்தி வந்த கெடுபிடிப் போரில் நாவலும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பல மொழிகளிலும் கொண்டுவரப்பட்டது.
நாவலுக்குப் பல நாடுகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது. அரசியல், சமூக, பண்பாட்டுத்தள நிலைமைகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, சோவியத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது என்று பாராட்டுகள் குவிந்தன. இலக்கியப் படைப்பு என்ற முறையில் எதிர்க் கருத்துகளும் வந்தன. முன்னும் பின்னுமாகப் போகும் கதையின் நடை குழப்பத்தைத் தருகிறது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏராளமான கதாபாத்திரங்கள், ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்திற்கும் மூன்று பெயர்கள், பல இடங்களில் அவர்கள் வருகிறபோது ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் குறிப்பிடப்படுகிறது, அது வாசிப்புக்குத் தடையாக இருக்கிறது என்றும் விமர்சிக்கப்பட்டது. மனித உணர்வுகளும் உறவுகளும் தொடர்பான சித்தரிப்புகள் சிறப்பாக இருக்கின்றன என்ற அங்கீகாரத்துடன், வரலாற்றைத் திரித்துக்கூறுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
ஆயினும், 1958இல் கூடிய நோபல் பரிசுத் தேர்வுக்குழு ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) மிகச் சிறந்த நாவல் என்று அறிவித்தது. நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதில், இலக்கியத் தகுதிகளுக்கு அப்பாற்பட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு சோவியத் யூனியன் மேல் இருந்த அரசியல் காழ்ப்பு ஒரு முக்கிய பின்னணியாக இருந்தது என்று கூறலாம். சோவியத் யூனியனில் உயர்ந்து பறந்த செங்கொடியும், அங்கே மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான நடவடிக்கைகளும் தங்களுடைய நாடுகளிலும் சுரண்டல் அமைப்புக்கு எதிராக மக்களைத் திரட்டும் என்ற அச்சம் முதலாளித்துவக் கும்பல்களுக்கு இருந்தது. ஆகவே சிவப்புச் சிந்தனையைத் தாக்கக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கப்பட்டது.

இன்னொரு பக்கத்தில், பாஸ்டர்னாக் தன் சொந்தக் கருத்தின் அடிப்படையில் அல்லது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் எழுதியிருந்தாலும் கூட, அதற்குத் தடை விதித்திருக்கக்கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. நாவலைப் பற்றிய கூர்மையான விமர்சனங்களை நிகிதா குருசேவ் அரசாங்கமோ, கம்யூனிஸ்ட் கட்சியோ, இலக்கிய அமைப்புகளோ வலுவாகச் செய்து மக்களின் முடிவுக்கு விட்டிருக்கலாம். மாறாகத் தடை விதித்ததால், சோசலிசத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்காது என்ற எண்ணத்தைப் பரப்புவதற்குத் தோதான சூழல் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை.
மருத்துவக் கவிஞன் ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலின் கதைச்சுருக்கம் வருமாறு:
மருத்துவரான யூரி ஷிவாகோ ஒரு கவிஞனும் கூட. மன்னராட்சிக் கொடுமைகளைக் கண்டு வளர்ந்தவன் உள்நாட்டுப் போரின் கொந்தளிப்பையும் சந்திக்கிறான். மக்களின் கிளர்ச்சி பெரும் புரட்சியாக மாறுவதையும் காண்கிறான். டோன்யா என்ற பெண்ணை மணந்துகொள்கிறான். முதல் உலகப்போரின்போது ராணுவ மருத்துவராகப் பணியாற்ற ஆணையிடப்படுகிறது. மருத்துவ முகாமில் லாரா என்ற பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்கிறான். ஒரு புரட்சிகர இளைஞனின் மனைவி லாரா. அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் அவனை தேடுகிறவளான அவள் ஷிவாகோ மீதும் அன்பு வைக்கிறாள்.
புரட்சியை நிலைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஷிவாகோவின் வாழ்க்கையை பாதிக்கின்றன. அந்த நடவடிக்கைகளை ஏற்க மறுக்கிறான். தன் மனைவியையும் குடும்பத்தையும் நேசிக்கிற அவன் தன் காதலைப் பாதுகாக்கவும் போராடுகிறான். கொந்தளிப்பான நிலைமைகளால் துரத்தப்பட்டவனாக வேறோர் இடத்தை அடையும் அவன் தன் எழுத்தாக்கங்களில் ஆறுதல் கொள்கிறான். கவிதைகளை வெளியிட முயல்கிறான். அதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
லாரா–ஷிவாகோ இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சூழ்நிலைகள் அவர்களைப் பிரிக்கின்றன. லாரா தனது கணவனைத் தேடிச் செல்கிறாள், ஷிவாகோ தனது குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. (இதனிடையே நாட்டின் அரசியலிலும் சமுதாயத்திலும் பல வேகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மத நிறுவனங்களின் பிடியிலிருந்து அரசு அமைப்புகள் விடுவிக்கப்பட்டன. சமுதாயத்திலும் தலையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன.ஆனால், அவற்றை எதிர்மறையாகவே நாவல் சித்தரிக்கிறது).
பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தொடர்கின்றன. சோவியத் படையிலிருந்து வெளியேறும் யுரி ஷிவாகோ இறுதியில் மாஸ்கோ நகருக்குத் திருமபுகிறான். மனைவியும் மகனும் வேறெங்கோ இருக்க, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான், அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. ஆனால் யுரி மகிழ்ச்சியாக இல்லை. 1929ஆம் ஆண்டில், உடல்நலம் குன்றிய நிலையில் ஒருநாள் சாலையில் செல்லும்போது டிராம் விபத்தில் இறக்கிறான் ஷிவாகோ.
பல ஆண்டுகளுக்குப் பிறகு யூரியின் சிறுவயது நண்பர்கள் அவனது கவிதைகளைத் தேடியெடுத்து புத்தகமாக வெளியிடுகிறார்கள். அந்தக் கவிதைகள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காதலும் ஏக்கங்களும் நிறைந்த அவனுடைய வாழ்க்கை ஒரு சோகமான காவியமாகப் பேசப்படுகிறது.
இலக்கியத்துக்காகவா அரசியலுக்காகவா?
’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) சோவியத் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் எழுதப்பட்ட ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக மேற்கத்திய நாடுகளின் அரசுகளாலும் திறனாய்வாளர்களாலும் பார்க்கப்பட்டது. சோவியத் இலக்கியத்திற்கே எதிரான ஒரு குரலாகவும் இந்த நாவலுக்கான பரிசு கருதப்பட்டது. அரசின் அழுத்தத்தை மீறி பாஸ்டர்நாக் தனது படைப்புக்காக நின்றார் என்று போற்றும் குரல்கள் ஒலித்தன. அதில் ஒரு பகுதி உண்மையும் இருந்தது, மறுபகுதி உள்நோக்கமும் இருந்தது.
“நோபல் பரிசு வழங்கப்பட்டதில் அரசியல் காரணிகளுக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், அதன் ஆழமான தத்துவார்த்த சிந்தனைகள், கவித்துவமான மொழி மற்றும் மனித உணர்வுகளை சித்தரிக்கும் விதம் ஆகியவை இலக்கியப்பூர்வமாகப் பாராட்டுக்குரியவை. அன்று நிலவிய உலகளாவிய அரசியல் சூழல் நாவலின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கலாம்,” என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நாவல் புரட்சியின் உன்னத நோக்கங்களை சிறுமைப்படுத்தியது, சுரண்டல் சக்திகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் ஆதரவாகப் பேசியது என்ற விமர்சனமும் முன்னுக்கு வந்தது.தனிமனிதனின் உணர்வுகள், காதல் மற்றும் ஆன்மீகத் தேடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற நாவல் புரட்சியின் பொதுவான இலக்குகளை விட தனிமனிதனின் சுதந்திரம் முக்கியமானது என்ற கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறது. இது புரட்சியின் கூட்டு உணர்வுக்கு எதிரானது என்று போராட்டக்களத்தில் நின்றவர்களால் பார்க்கப்பட்டது.
நாவலின் கதாநாயகனான ஷிவாகோவின் கவிதைகளில் மதத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது சோவியத் அரசு வளர்க்க முயன்ற அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக அமைந்தது. அதே போல், நிலப்பிரபுத்துவ கால சமூக அமைப்பின் மீதான ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்று மாற்றங்களுக்காக நிற்பவர்கள் கூறினார்கள். நம் ஊரில் கூட, எதற்கெடுத்தாலும் “அந்தக் காலத்திலேயெல்லாம்” என்று காலாவதியாகிப் போன கலாச்சார, சமூக நிலைகள் மறுபடியும் வர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறவர்ளையும், பழைய சடங்குகளை நியாயப்படுத்திப் புதுப்பிக்க விருமபுகிறவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?.
முடிவுரையாகச் சொல்வதென்றால், படைப்புச் சுதந்திரம் மிக முக்கியமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) நாவலை அன்றைய சோவியத் அரசு தடை செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். அவர்கள் நாவலை கடுமையாக விமர்சித்திருக்கலாம், அதன் கருத்துக்களை மறுத்திருக்கலாம், ஆனால் தடை நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலானது..அதே நேரத்தில் ஒரு பெரிய சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, தனிமனித நோக்கங்களை மட்டும் முதன்மைப்படுத்துவது புரட்சிக்கு எதிரானவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது. பிற்காலத்தில் சோவியத் யூனியனும் அதன் மாண்புகளும் தகர்க்கப்பட்டதற்கு ஆதரவான மனநிலையை வளர்த்ததில் இப்படிப்பட்ட சிந்தனைப் போக்குகளுக்கும் பங்கிருக்கிறது எனலாம்.
போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) மறைந்தபிறகு, 1965இல் ஓமர் ஷெரீப் மையப்பாத்திரத்தில் நடிக்க, டேவிட் லீன் இயக்கத்தில் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) திரைப்படமாகவும் வந்தது. உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்று பல அமைப்புகளும் சான்றளிக்க, திரையரங்க வசூலிலும் உலக சாதனை நிகழ்த்திய படங்களில் ஒன்றாக தன்னைப் பதித்துக்கொண்டது. நாவலுக்குச் சற்றும் குறையாமல் சோவியத் அரசைக் குறைகூறியது. ஒரு நாவலை வெற்றிகரமான திரைப்படமாக்கிய முயற்சிகளில் ஒன்றாகவும் அடையாளம் பெற்றது.
எழுதியவர் :

அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.