உலகத்தை இளையோரும், அவர்களைப் பெரியோரும் புரிந்துகொள்ள ஒரு நாவல் ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye)
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 5
– அ. குமரேசன்
இளம் தலைமுறையினரின் – குறிப்பாக முதிர் பதின்பருவத்தினரின் சுதந்திர மனநிலை, அவர்கள் இழக்க நேரிடுகிற குழந்தைத்தனம், சமூகத்தைப் புரிந்துகொள்வதில் அவர்களுடைய போராட்டம், அவர்களைப் புரிந்துகொள்வதில் சமூகத்திற்குத் தேவைப்படும் பக்குவம் ஆகியவற்றைப் பேசும் அருமையான நாவல் என்று ஆங்கில இலக்கிய உலகில் பாராட்டப்படுவது 1951இல் வெளியான ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye). கம்பு பயிரிடப்பட்ட வயலில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைக் கற்பனை செய்துகொள்ளும் இளைஞனைப் பற்றிய கதை. ‘கம்பு வயல் குழந்தைகளின் மெய்க்காவலன்’ என்று நாவலின் தலைப்பைத் தமிழில் சொல்லலாம். எழுதியவர் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger).
1923ஆம் ஆண்டிலிருந்து வெளியான மிகச் சிறந்த 100 நாவல்களை 2005ஆம் ஆண்டில் பட்டியிலிட்ட ‘டைம்ஸ்’ ஏடு, அவற்றில் ஒன்றாக இதனைச் சேர்த்திருந்தது. ‘மாடர்ன் லைப்ரரி’ என்ற அமைப்பு 2003ஆம் ஆண்டில் தனது வாசகர்களிடையே 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த நாவல்கள் பற்றி ஒரு வாக்கெடுப்பை நடத்தியது. அதிலும் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger) எழுதிய இந்த நாவல் தேர்வு பெற்றது. பெரிதும் படிக்கப்பட்ட நாவல்கள் பற்றி பிபிசி ஊடக நிறுவனம் நடத்திய ஆய்வில் 15வது இடத்தைப் பிடித்தது.
இதுவரையில் சுமார் ஆறரைக் கோடிப் படிகள் விற்பனையாகியுள்ள இந்த நாவல், வெளியான சில ஆண்டுகள் அமெரிக்காவின் பல மாநிலங்களில் நூலகங்களிலும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும் தடை செய்யப்பட்டது. இளம் பருவத்தினரின் ஒழுக்கக் கேடுகளை நியாயப்படுத்துகிறது, அவர்கள் பயன்படுத்தக்கூடிய “கெட்டவார்த்தைகளை’‘ அப்படியே சொல்கிறது, கல்வி நிறுவனங்களிலும் சமூகத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சாடியதன் மூலம் கம்யூனிஸ்ட் கருத்துகளை விதைக்கிறது என்ற காரணங்கள் கூறப்பட்டன. ஒக்லஹோமா மாநிலத்தின் டுல்சா நகரப் பள்ளி ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்கள் படித்து வந்து விவாதிக்க இந்த நாவலைப் பரிந்துரைத்ததற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இலக்கிய அன்பர்களும் சமூக அக்கறையாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து. சில மாதங்களில் அவர் மறுபடியும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் புத்தகத்திற்கான தடை விலக்கப்பட்டது. இப்போது பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாவலாசிரியர் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger) அமெரிக்காவின் அன்றைய கட்டாய ராணுவ சேவைச் சட்டப்படி இரண்டாம் உலகப் போரில் பணியாற்றுவதற்கு முன்பு, 1940 ஆம் ஆண்டில் “ஸ்டோரி” என்ற பத்திரிகையில் பல சிறுகதைகளை வெளியிட்டார். 1948 இல், அவரது “எ பெர்ஃபெக்ட் டே ஃபார் பனானாஃபிஷ்”நாவல் ‘தி நியூ யார்க்கர்’ பத்திரிகையில் வெளியானது. “தி கேட்சர் இன் தி ரை” உடனடியாக பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ‘நைன் ஸ்டோரிஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ஒரு குறுநாவல் மற்றும் ஒரு சிறுகதையை உள்ளடக்கிய ‘ஃப்ரானி அண்ட் ஜூயி’ என்ற தொகுப்பையும், இரண்டு குறுநாவல்களை உள்ளடக்கிய ‘ரைஸ் ஹை தி ரூஃப் பீம், கார்பென்டர்ஸ் அண்ட் சீமோர்: அன் இன்ட்ரோடக்ஷன்” என்ற தொகுப்பையும் வெளியிட்டார். சாலிங்கரின் கடைசிப் படைப்பான ‘ஹாப்வொர்த் 16, 1924’ என்ற குறுநாவல்1965இல் வெளியானது.
அதன் பிறகு கசப்பான அனுபவங்களுடனேயே வாழ்ந்தார். 1980களில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவருடன் நீண்ட நாட்கள் சட்டப் போராட்டம், 1990களின் பிற்பகுதியில் அவருக்கு நெருக்கமான இருவர் எழுதிய சுயசரிதை தொடர்பான சண்டை என அவரது பிற்கால வாழ்க்கை கடந்து, 91 வயதில், 2010இல் மரணத்துடன் முடிந்தது.
கதை என்னவென்றால்…
ஹோல்டன் கால்ஃபீல்ட் என்ற இளைஞன் தன் கதையைச் சொல்கிற நடையில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன் கடந்த நாட்களின் நிகழ்வுகளை ஹோல்டன் நினைவுகூர்கிறான். கதை, பென்சில்வேனியா மாநிலத்தில் கற்பனையாக உருவகிக்கப்ட்ட அகர்ஸ்டடவுன் என்ற கற்பனையாக உருவகிக்கப்பட்ட நகரத்தின் ‘பென்சி பிரிபரேட்டரி அகாடமி’ என்ற உயர்நிலைப் பள்ளியில் தொடங்குகிறது. அங்கே அவன் ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்ததால் பள்ளி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுகிறான்.
ஹோல்டன் தனது அறை நண்பனான வார்ட் ஸ்ட்ராட்லேடர் கேட்டுக்கொண்டதற்காக ஒரு ஆங்கிலக் கட்டுரை எழுதித்தர ஒப்புக்கொள்கிறான். அவனை எழுதச்சொல்லிவிட்டு ஜேன் கல்லாகர் என்ற பெண்ணுடன் டேட்டிங் செல்கிறான் ஸ்ட்ராட்லேடர். அவள் மீது காதல் கொண்டுள்ள ஹோல்டன் வருத்தப்படுகிறான். அவன் எழுதிய உணர்வுப்பூர்வமான கட்டுரையை ஸ்ட்ராட்லேடர் மதிக்கவே இல்லை. அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டானா என்று ஹோல்டன் கேட்க பதிலளிக்க மறுக்கிறான். கோபமடைந்த ஹோல்டன் அவனைத் தாக்குகிறான். அங்கே ஏற்படும் சண்டையில் ஸ்ட்ராட்லேடர் எளிதில் வெற்றி பெறுகிறான். அந்த ஊரிலும் பள்ளியிலும் உள்ள போலித்தனங்களை வெறுத்து, ஹோல்டன் நியூயார்க்கிற்கு ரயிலில் செல்ல முடிவு செய்கிறான். பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்தி பெற்றோரைச் சென்றடையும் வரையில் வீட்டிற்கு வராமல் இருக்கத் திட்டமிடுகிறான்.
இரவில் ஒரு பாலியல் தொழிலாளியும், அவளுடைய தரகனும் மோசடியாக ஹோல்டனை ஏமாற்றுகின்றனர். ஊரைவிட்டுப் புறப்படுகிறவன், சாலி ஹேய்ஸ் என்ற பழைய தோழியை தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான், அவள் மறுத்துவிடுகிறாள். வகுப்பில் தன்னுடன் படித்தவன் ஒருவனைச் சந்திக்கும் ஹோல்டன் அவனுடைய பாலியல் வாழ்க்கை பற்றி தொடர்ந்து கேள்விகள் கேட்கிறான். இறுதியில் ஹோல்டன் குடித்துவிட்டு பெரியவர்களிடம் மோசமாக நடந்துகொள்கிறான்.
தனது தங்கை போபியைப் பார்க்க ஏங்கும் ஹோல்டன் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து அவளை எழுப்புகிறான். உடன்பிறந்தவனைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், அவன் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டுபிடித்து வருந்துகிறாள். அவனது இலக்கில்லாத போக்கிற்காகவும், மற்றவர்களை வெறுக்கும் மனநிலைக்காகவும் அவனைக் கண்டிக்கிறாள்.
எதைப் பற்றியாவது அக்கறை இருக்கிறதா என்று அவள் கேட்கும்போது, ராபர்ட் பர்ன்ஸின் “காமின் த்ரூ தி ரை” என்ற கவிதையை தவறாகப் புரிந்துகொண்டு உருவாக்கிய ஒரு கற்பனையைப் பகிர்ந்துகொள்கிறான். அந்தக் கவிதையில் வருகிற கம்பு பயிரிடப்பட்ட வயலில் குழந்தைகள் ஓடுவதாகவும், அவர்கள் அருகிலுள்ள பாறையிலிருந்து கீழே விழுவதற்கு முன் பிடித்துக் காப்பாற்றுவதாகவும் கற்பனை செய்கிறான். போபி அந்தக் கவிதையின் உண்மையான பொருளை விளக்குகிறாள். கம்பு வயலில் காதலர்கள் சந்தித்துக்கொள்வதைத்தான் கவிஞர் சித்தரித்திருக்கிறார் என்று கூறுகிறாள். கவிதையைப் புரிந்துகொள்வதிலும் தோல்வியா என்று ஹோல்டன் கண்ணீர் விடுகிறான், போபி ஆறுதல் படுத்துகிறாள்.
பெற்றோர் வீடு திரும்பியதும் அவன் வெளியேறி தனது முன்னாள் ஆங்கில ஆசிரியரைச் சந்திக்கிறான்.. ஹோல்டன் ஒரு பயங்கரமான வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறான் என்று அவர் கவலைப்படுகிறார். கற்பனைகளை விடுத்து நடப்பு வாழ்வில் ஈடுபடுத்திக்கொள்ள அறிவுறுத்துகிறார். உறங்கி எழுந்திருக்கும்போது அவர் அவனுடைய தலை முடியைக் கோதிவிடுகிறார். அதை அவன் பாலியல் முயற்சி என்று தவறாகப் புரிந்துகொள்கிறான். அவரிடமிருந்தும் விலகி ரயில் நிலையக் காத்திருப்பு அறையில் மீதி இரவை மனம் நிறைய வெறுப்புடன் கழிக்கிறான்.
காலையில், நகரத்தில் நம்பிக்கையான தொடர்புகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்தவனாக மேற்கு நோக்கிச் சென்று, ஒரு மரக் கிட்டங்கியின் எரிவாயு நிலையத்தில் காது கேளாத-வாய் பேச இயலாத தொழிலாளியாக வேலைக்குச் சேர முடிவு செய்கிறான். தனது திட்டத்தைக் கூறுவதற்காக போபியைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறான். நகரத்தின் அருங்காட்சியகத்திற்கு ஒரு பெட்டியுடன் வருகிற அவள் தன்னையும் அழைத்துச் செல்லக் கேட்கிறாள். ஹோல்டன் மறுக்கிறான். வருத்தப்படும் அவளை, பள்ளிக்கு மட்டம் போட அனுமதிப்பதன் மூலம் உற்சாகப்படுத்த முயல்கிறான். அவள் கோபம் தணியாமல் இருக்கிறாள். சுழல் நாற்காலி ராட்டினத்தில் அவள் சுற்றிவர அனுமதிச்சீட்டு வாங்கித் தருகிறான். சமாதானமடையும் தங்கை சுழல் நாற்காலியில் சவாரி செய்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்.
அன்றிரவு தனது பெற்றோர்களைச் சந்தித்ததையும், உடல் நலத்தில் கோளாறு என்று நினைத்துத் தன்னை அவர்கள் கலிபோர்னியாவில், தன் அண்ணன் வாழும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பியதையும், செப்டம்பரில் வேறொரு பள்ளியில் சேர இருப்பதையும் நம்மிடம் (வாசகர்களிடம்) சொல்கிறான். பள்ளி பற்றிய பேச்சு, தவறவிட்ட தனது முன்னாள் வகுப்பு தோழர்களை நினைவுபடுத்திவிட்டது என்றும், அதற்கு மேல் பேச விரும்பவில்லை என்றும் ஹோல்டன் கூறுவதுடன் நாவல் முடிகிறது.
போராட்டமும் பீதியும்
எளிதில் தனிமைப்பட்டுவிடுகிற பதின்பருவத்தினரின் மனப் போராட்டங்களையும், அதற்கான சூழல்களையும் பெரியவர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியதன் தேவையை உணர்த்துகிற இந்த நாவல், இளைய தலைமுறைகளிடையேயும் கணிசமாக வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே, “முன்னேறிய” அமெரிக்க சமுதாயத்தில் எந்த அளவுக்கு கம்யூனிசச் சிந்தனைகள் பற்றிய பீதி பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும், நாவலுக்கு விதிக்கப்பட்ட தடையின் மூலம் அறிய முடிகிறது.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.