தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | “மோபி டிக் (Moby-Dick)” நாவல் 

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” நாவல் 

திமிங்கல வேட்டைக்குப் புறப்பட்டு தத்துவங்களுக்கு வலை வீசிய நாவல்

அ. குமரேசன்

மதம் கூறும் தத்துவங்களை விசாரணைக்கு உட்படுத்துகிற, இயற்கையில் மனிதரின் இடம் என்று விவாதிக்கிற ஆழ்ந்த உள்ளடக்கத்திலும், மாறுபட்ட சித்தரிப்பு வகையிலும் முத்திரை பதித்த படைப்பு என இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிற ஒரு நாவல், அது வெளியானபோது (1851) கரடு முரடான எழுத்து நடை என்று புறந்தள்ளப்பட்டது. மிக நீளமாக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. புத்தகக் கடைகளில் விற்பனையாகாததால் பதிப்பகங்களால் புறக்கணிக்கப்பட்டவராக ஒரு துறைமுகப் பணியாளராக வேலை செய்தார் அதன் படைப்பாளி. இவரை எழுத்தாளர் என்று சொல்கிறார்களே என மற்றவர்களால் பேசப்படுகிற அளவுக்கே இருந்தவர் தனது மற்ற படைப்புகளும் ஏற்கப்படாத நிலையிலேயே காலமானார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்
ஹெர்மன் மெல்வில் (Herman Melville)

அந்த அமெரிக்க எழுத்தாளர் பெயர் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) (1819–91). அவருடைய அந்த முக்கியமான நாவல் ‘மோபி டிக்’ (Moby-Dick).

கடல் சார்ந்த வாழ்க்கையே மையமாக இருக்கும் மாலுமிகளும் தொடர்ச்சியாகப் பயணிக்கிறவர்களும் கப்பல்களை அடிக்கடி தாக்கக்கூடிய குறிப்பிட்ட திமிங்கலங்களுக்கும் இதர பெரிய உயிரிகளுக்கும் அடையாளப் பெயர்கள் சூட்டுவதுண்டு. அப்படி, கடலில் அட்டகாசம் செய்யும் ஒரு வெள்ளைத் திமிங்கலத்திற்குச் சூட்டப்பட்ட பெயர்தான் மோபி டிக் (Moby-Dick). அக்காலத்தில் மெழுகு, சில வாசனைத் திரவங்கள், எந்திர உயவுப்பசை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான கொழுப்பு எண்ணைக்காகவும், உணவுக்கான இறைச்சிக்காகவும், மருத்துவ ஆற்றல் உள்ளது என்ற நம்பிக்கையால் வெட்டியெடுக்கப்பட்ட உறுப்புகளுக்காகவும் திமிங்கல வேட்டைகள் கட்டுப்பாடின்றி நடத்தப்பட்டன. அதன் செரிமான மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் ஒரு பசை, கடல் நீரில் மிதந்து, சூரிய ஒளியால் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒரு நறுமணத்தைப் பெறும். அம்பரிஸ் எனப்படும் அந்தப் பொருள், மனிதர்களின் இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது!

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

குறிப்பாக ‘விந்துத் திமிங்கலம்’ (ஸ்பெர்ம் வேல்) எனப்படும் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டன. அவற்றின் தலை வழியாகக் கிடைக்கும் கொழுப்பு எண்ணெய் விந்து போன்ற நிறத்துடனும் பசைத்தன்மையுடனும் இருப்பதால், அது திமிங்கலத்தின் விந்து என்று தவறாகக் கருதப்பட்டு அவ்வாறு குறிப்பிடப்பட்டது. (கடலில் திமிங்கலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து நாடுகளிடை திமிங்கல ஆணையம் (IWC) அமைக்கப்பட்டு, 1986ஆம் ஆண்டில்தான் வணிக நோக்கத் திமிங்கல வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. சில நாடுகளின் அரசுகளும் நிறுவனங்களும் அந்தத் தடையைக் கண்டுகொள்வதில்லை). கடலில் இறங்கும் கப்பலின் கேப்டன் அந்த மோபி டிக்கையும் தேடுகிற பயணத்தின் மூலமாக மனிதர்களுக்கும் இதர உயிரிகளுக்குமான உறவு பற்றியும் பேசுகிறது இந்த நாவல்.

வேட்டையின் கதை

சாகச வேட்கையும், ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபடும் விருப்பமும் கொண்டவனான இஸ்மேல் ‘பிக்வோட்’ என்ற திமிங்கல வேட்டைக் கப்பலில்,ஒரு மாலுமியாக வேலைக்குச் சேர்கிறான்.. அவனுடைய பார்வையில்தான் கதை சொல்லப்படுகிறது. கப்பலின் கேப்டன் அஹாப் ஒரு காலை இழந்து செயற்கைக் கால் பொருத்திக் கொண்டவர். மிகுந்த பிடிவாதக்காரரான அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தது மோபி டிக் (Moby-Dick) திமிங்கலத்தைப் பிடிக்க முயன்றபோதுதான். அதை எப்படியாவது கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும் என்ற பழியுணர்வோடு இருக்கிறார். அதற்காகவே உலகின் எல்லாக் கடல்களிலும் கப்பலைச் செலுத்தக் கட்டாயப்படுத்துகிறார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

அவருடைய பணியாளர்களுடன் திமிங்கல வேட்டைக்காரர்களான மூன்று பேர் சேர்ந்துகொள்கிறார்கள். பின்னர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஈட்டி எறிபவர்களான மூன்று பேர் அஹாப்பின் பழிவாங்கல் பயணத்தில் இணைகிறார்கள்.

அந்தப் பயணத்தை இஸ்மேல் சித்தரிப்பதன் மூலம் கடலின் பல்வேறு தன்மைகள், திமிங்கலம் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இயல்புகள், திமிங்கல வேட்டை நுட்பங்கள், அது சார்ந்த சந்தை நிலவரங்கள், சாகசமும் சோதனைகளும் நிறைந்த மாலுமிகளின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை நாம் அறிகிறோம். அஹாப்பின் பழி வெறி படிப்படியாக அதிகரித்து, அவரை ஒரு விசித்திரமான, கொடூரமான தலைவராக மாற்றுகிறது. அவர் திமிங்கலங்களால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களது கப்பல்களின் கேப்டன்களைச் சந்திக்கிறபோது அவர்கள் மோபி டிக் (Moby-Dick) பற்றி எச்சரிக்கிறார்கள். அவர் தன் நோக்கத்தில் பின்வாங்குவதாக இல்லை.

உச்சக்கட்டத்தில் பிக்வோட் கப்பல் மோபி டிக்கைக் கண்டுபிடிக்கிறது. அஹாப்பும் மற்ற மாலுமிகளும், உடன் வந்த வேட்டையர்களும் மூன்று நாட்கள் தொடர்ச்சியான, அழிவுகரமான தாக்குதல்களில் இறங்குகின்றனர். மோபி டிக்கும் மோதுகிறது. அதுவொரு கடற்போராகவே நடக்கிறது. அஹாப் தனது ஈட்டியால் தாக்க முற்படும்போது மோபி டிக் (Moby-Dick) கப்பலைத் தாக்குகிறது. கப்பல் முழுமையாக அழிகிறது. உயிரிழக்கும் நிலையில் இருக்கும் மோபி டிக், ஒரு படகை மீட்க முயலும் அஹாப்பைக் கையில் ஈட்டியோடு கடலுக்குள்ளே இழுத்துச் சென்றுவிடுகிறது இஸ்மேல் தவிர்த்து மாலுமிகள், திமிங்கல வேட்டைக்கு வந்தவர்கள் எல்லோரும் மோபி டிக் (Moby-Dick) தாக்குதலில் சிக்கியும் கடலில் மூழ்கியும் உயிரிழக்கிறார்கள்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

பயணிக்கிறபோது இறந்துபோகக் கூடியவர்களை கடலிலேயே நல்லடக்கம் செய்வதற்காகக் கப்பலின் தச்சர் செய்து வைத்திருந்த ஒரு சவப்பெட்டி நீரில் மிதக்கிறது. அதில் தொற்றிக்கொள்ளும் இஸ்மேல் மட்டும் தப்பிக்கிறான். அந்தப் பகுதிக்கு வரும் மற்றொரு கப்பலின் மாலுமிகள் அவனை மீட்கிறார்கள்.

தத்துவ விசாரணைகள்

கூரிய ஆயுதம் இருந்தும் மோபியிடமிருந்து அஹாப் தப்பிக்க முடியாமல் போவது இயற்கைக்கு எதிராக மனிதர்கள் எந்த அளவுக்கு அழிவில் இறங்க முடியும் என்று நுணுக்கமாக யோசிக்க வைக்கிறது. இயற்கையின் வழங்கல்களைப் பயன்படுத்திக்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழலாமேயன்றி, இயற்கையோடு முரண்பட்டுப் பகைத்து வாழ முடியாது என்று நாவல் விவாதிக்கிறது. இயற்கையின் கட்டுக்கடங்காத வல்லமையின் பிரதிநிதிதான் மோபி டிக் (Moby-Dick) திமிங்கலம் என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

நாவல் நெடுகிலும் பைபிள் குறிப்புகள், தத்துவ விளக்கங்கள், மனிதரின் இருப்பு, நன்மை–தீமை பற்றிய கருத்தியல்கள், நீதிக் கோட்பாடுகள் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாவல் அப்போது எதிர்க்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். அஹாப் தன் விதியால் அலைக்கழிக்கப்பட்டாரா அல்லது தனது பழியுணர்வால் இழுத்துச் செல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டள்ளன. தலைமைப் பொறுப்பில் இருந்தவனின் மூர்க்கத்தாலும் முட்டாள்தனத்தாலும் மற்றவர்களும் அழிவைச் சந்திக்க நேரிடும் அரசியலும் நுட்பமாகப் பேசப்பட்டிருக்கிறது.

எதிர்ப்புகளையும் புறக்கணிப்புகளையுமே சந்தித்த மெல்வில் தனது நாவல் குறித்த இத்தகைய நல்ல மதிப்பீடுகளைப் பார்க்க முடியாமல் போனது ஒரு துயரம்தான். படைப்பு வெற்றி பெற்று படைப்பாளி தோற்றுவிட்ட கதையா? இல்லை, படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது படைப்பாளியின் வெற்றிதானே?

எழுத்தாளரின் சாகசங்கள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

ஹெர்மன் மெல்வில் (Herman Melville) வாழ்க்கையே கூட சாகசங்கள் நிரம்பியதுதான். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தந்தையின் மரணத்தால் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, குடும்பத்திற்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல வேலைகளைச் செய்த அவர் பின்னர் ஒரு வங்கி ஊழியரானார். அதன் பின் பள்ளி ஆசிரியரானார். தனது 19ஆவது வயதில் ஒரு கப்பல் ஊழியராகச் சேர்ந்து கடல் பயணத்தைத் தொடங்கினார். அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் கப்பல் வாழ்க்கை சார்ந்த சில வெற்றிகரமான நாவல்களை எழுத உதவின.

வேறொரு கப்பலில் வேலை செய்தபோது ஒரு தீவில் நிறுத்தப்பட்டிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தப்பித்து ஓடினார், சில காலம் பழங்குடி மக்களுடன் பழகி வாழ்ந்தார். இடையில் பிரிட்டிஷ் சிறையில் சில மாதங்கள் அடைக்கப்பட்டார். விடுதலையாகி நாடு திரும்பிய பிறகு, அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். இந்தக் கடல் அனுபவங்களின்போது ‘மோக்கா டாக்’ என்று பெயரிடப்பட்ட திமிங்கலம் பற்றி நிறைய விவரங்களை அறிந்தார். அது மோபி டிக்காகப் பரிணமித்தது என்று விக்கிபீடியா, ‘ஜெமினி’ ஏஐ தளங்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக் கழகங்களின் இலக்கிய ஆய்வுகளுக்குரிய ஒரு புத்தகமாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மௌன சினிமாக் காலத்திலேயே ‘தி ஸீ பீஸ்ட்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. பின்னர் அதே திரைக்கதையின் பேசும் பதிப்பாக நாவலின் பெயரிலேயே இரண்டு முறை திரைப்படங்களாக வந்தது. இந்தக் கதையைத் தழுவிய, வேறு கதாபாத்திரங்களையும் அனுபவங்களையும் காட்டிய சில தொலைக்காட்சித் தொடர்களும் வந்திருக்கின்றன.

அறிவியலாளர்களும் பல்லுயிர்ப் பாதுகாப்பு அக்கறையாளர்களும் விடுக்கும் எச்சரிக்கைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், வேட்டைச் சுரண்டல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிரான பொதுச் சீற்றத்தை வளர்ப்பதில் தனது பங்கையும் அளிக்கிறது மோபி டிக் (Moby-Dick).

எழுதியவர் : 
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 7 | விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov) ‘லொலிடா’ (Lolita) நாவல் - ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை - https://bookday.in/
அ. குமரேசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *