தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்
அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல்
அ. குமரேசன்
புத்தகக் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் தாளில் சுற்றி வேறு ஏதோவொரு பொருள் போலக் கொடுப்பார்கள். வாடிக்கையாளர்கள் அப்படியே வேறு ஏதோவொரு பொருள் போல எடுத்துச் செல்வார்கள். அந்த அளவுக்குக் கவனத்தோடு விற்கப்பட்டது, எச்சரிக்கையாக கொண்டுசெல்லப்பட்டது ஒரு நாவல். காரணம் ஆஸ்திரேலிய நாட்டின் பல மாநிலங்களில் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி, நியூஜிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புத்தக விற்பனைக்குக் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
பொதுவான வன்முறை மன நிலையையும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான கொடூரங்களையும் நியாயப்படுத்துகிறது, அத்தகைய வன்மங்கள் மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று எதிர்மறை விமர்சனங்கள் மேலோங்கின. ஆனால், இலக்கியவாதிகளின் தொடர்ச்சியான விவாதங்கள், வாசகர்களின் வரவேற்பு உள்ளிட்ட ஆதரவுகளால் தடைகள் விலக்கப்பட்டன. இன்று, “வாசக சமூகத்தை ஈர்த்த செழுமையான படைப்பு” என்ற அடையாளத்தைப் பெற்று, உலகின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) என்ற புத்தகம் பற்றி தகவல் தொகுப்புப் பெட்டகமாகிய விக்கிபீடியா, செயற்கை நுண்ணறிவுக் கருவியாகிய ஜெமினி இரண்டும் தருகிற தகவல்கள் கவனிக்கத் தக்கவை. தீவிரமான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை ஒரு வன்மமான நையாண்டிக்கு உட்படுத்தும் “கறுப்பு நகைச்சுவை” வடிவத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 1991இல் வெளியானது.
1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நியூயார்க் நகர வாழ்க்கையோடு இணைந்ததாக ஒரு பணக்கார இளைஞனின் உளவியல் சிக்கல்களைக் கதையாக்கியிருக்கிறார் எல்லிஸ். குறிப்பாக பெரு முதலாளித்துவப் பங்குச் சந்தை வேட்டைக் களமான வால் ஸ்ட்ரீட், அதில் புரையோடிப் போயிருக்கும் மோசடிகள், அது கட்டமைக்கும் நுகர்வுக் கலாச்சார நிலவரங்கள், அதனால் பரவியிருக்கும் சமூகப் போலித் தனங்கள், தனி மனிதருக்கு ஏற்படும் எதிர்மறையான உளவியல் தாக்கங்கள் ஆகியவற்றை நாவல் துணிச்சலாகப் பேசுகிறது.
வால் ஸ்ட்ரீட் சந்தையின் பெரு நிறுவனங்களின் பங்குகள் விற்பனையால் “பேராசை பெருநன்மை” என்ற மனப்பான்மை வளர்க்கப்பட்டிருப்பதை நாவல் கடுமையாகச் சாடுகிறது. மனிதர்கள் அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள், கார்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள், புழங்குகிற பணக்கார உணவகங்கள் என்ற நிறுவன விற்பனை அடையாளப் பெயர்களில்தான் (பிராண்ட்) மதிப்பிடப்படுகிறார்கள். மனித உணர்வுகளும் உறவுகளும் அற்பமானவையாகத் தள்ளப்படுகின்றன. சமூகப் பொறுப்பைப் பொறுத்த மட்டில் கார்ப்பரேட் உலகத்தின் உள்ளீடற்ற மேலோட்டத் தன்மையை நாவல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது என்றும் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
நாவலில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளும் பாலியல் துன்புறுத்தல்களும் விரிவாக, அதிர்ச்சியளிக்கும் வகையில், அப்படிப்பட்ட கொடுமைகள் மீது ஒரு ரசனையை ஏற்படுத்தும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று பெண்ணுரிமைக் கருத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தனிமனிதர்களை சமுதாயம் கொடியவர்களாக மாற்றுவதைத்தான் எழுத்தாளர் இவ்வாறு சித்தரித்திருக்கிறார் என்று நாவலின் ஆதரவாளர்கள் விளக்கமளித்தார்கள். இன்றளவும் இந்த விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.

கதையின் நாயகன் சித்தரிக்கப்படும் விதமும் விமர்சிக்கப்பட்டது. அவன் உண்மையிலேயே குற்றங்களைச் செய்கிறானா அல்லது குற்றங்களைச் செய்வது போன்ற மனதின் மாயக் கற்பனையில் மூழ்கி, அவனே அதை நம்புகிறானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே நம்பகத் தன்மையில்லாத கதையாடலாகவும், உண்மை வாழ்க்கை நடப்புடன் இணையாததாகவும் நாவல் அமைந்திருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அப்படியில்லை, முதலாளித்துவம் திணிக்கிற நுகர்வுக் கலாச்சாரம் மனிதர்களை உண்மை நடப்புச் சூழல்களிலிருந்து துண்டித்துவிடுகிறது, அதைத்தான் நாவல் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
நாவலை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனம், அதன் உள்ளடக்கம் காரணமாக ஒதுங்கிக்கொண்டது. வெறொரு பதிப்பகம் வெளியிட்டது. அமெரிக்க நூலகங்கள் சங்கத்தால் 1990களில் அதிகமாகத் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இது இடம் பிடித்தது. எல்லிஸ்சுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இத்தகைய நிகழ்வுகள் உலகப் புத்தகச் சமூகத்தின் கவனத்தைப் பெற்றன. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் துறுதுறுப்போடு, புத்தகப் படிகளைக் கடத்தி வரச்செய்து பல நாடுகளின் வாசகர்கள் படித்தார்கள். படிப்படியாகத் தடை நீர்த்துப்போனது.
கதை என்னவெனில்…
1989 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் வணிகம் உச்சத்தில் இருக்கிறது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பேட்மேன் ஒரு முதலீட்டு வங்கியில் ஊழியராக வேலை செய்கிறான். அவன் பகல் நேரங்களில் வால் ஸ்ட்ரீட் உயரடுக்கு வட்டத்தில் பளபளப்பான வாழ்க்கையை வாழ்கிறான். இரவில் ஈவிரக்கமற்ற கொலைகளையும், பாலியல் அத்துமீறல்களையும், சித்திரவதைகளையும் செய்கிறான். தனது சகாக்களுடன் வெள்ளிக்கிழமை இரவுகளில் கோகெய்ன் எடுத்துக்கொள்கிறான். மற்றவர்களின் ஆடைகளை விமர்சிக்கிறான். நாகரிகமாக இருப்பது பற்றி ஆலோசனைகள் கூறுகிறான். நடத்தை விதிகள் குறித்துக் கேள்வி கேட்கிறான்.
அவனுக்கும் இன்னொரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த எவலின் எனும் பெண்ணுக்கும் அவனுடைய விருப்பத்தை விசாரிக்காமலே, திருமணத்தை நிச்சயிக்கிறார்கள் பணக்காரப் பெற்றோர்கள். தனது சகோதரனுடனும் மறதிநோயாளியான தாயுடனும் தகராறு செய்கிறான். ஒருநாள், சக ஊழியர்களில் ஒருவனான ஓவன் என்பவனைக் கொலை செய்கிறான் பேட்மேன்.. பிறகு ஓவனுடைய வீட்டைக் கைப்பற்றி, தன்னிடம் சிக்குகிறவர்களை அங்கே அழைத்து வந்து கொல்கிறான். தனது செயல்களின் மீது கட்டுப்பாட்டை இழக்கும் பேட்மேன் முற்றிய உளவியல் சிக்கலுள்ளவனாக (சைக்கோ) மாறுகிறான். சாதாரண கத்திக் குத்துகளில் தொடங்கி, நீண்ட நேர பாலியல் வல்லுறவு, சித்திரவதை, உடல் உறுப்புச் சிதைவு, கொல்லப்பட்டவர்களின் உடல் சதையை அறுத்து உண்ணுதல், சடலத்துடன் உடலுறவு என்று அவனுடைய உளவியல் நிலை கொடூரமாகச் சீர்குலைகிறது.
பல சமயங்களில் தனது கொடூரச் செயல்களை வெளிப்படையாகத் தனது சக ஊழியர்களிடம் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கொலை, மரண தண்டனை என்று அவன் சொல்வதை, வால் ஸ்ட்ரீட் வர்த்தகத்தோடு இணைந்த “நிறுவன இணைப்பு”, “கையகப்படுத்துதல்” என்ற பொருளில் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்கள்.
நிலைமை முற்றிக்கொண்டே போகிறது.தெருவில் சீரில்லாமல் சுற்றுகிறவர்களைக் கொல்கிறான். அவனைப் பிடிப்பதற்கு அதிரடிப்படையினர் ஹெலிகாப்டரில் அனுப்பப்படுகிறார்கள். பேட்மேன் தப்பி ஓடி தனது அலுவலகத்தில் ஒளிந்துகொள்கிறான். ஹரோல்ட் கார்ன்ஸ் என்ற தனது வழக்குரைஞருடன் தொலைபேசியில் தொடர்புகொள்கிறான். தொலைபேசியை அவர் எடுக்காத நிலையில் அதன் பதிலனுப்புக் கருவியில் தனது எல்லா குற்றங்களையும் சொல்ல்ப் பதிவு செய்கிறான்.
அந்தக் கொலை வீட்டுக்கு மறுபடியும் போகிறான். அங்கே அவன் ஏற்கெனவே இரண்டு பாலியல் தொழிலாளர்களைக் கொன்று சிதைத்திருந்தான். அழுகிய உடல்களை எதிர்பார்த்துச் செல்கிறவன் அந்த வீடு முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்துத் திகைக்கிறான். துர்நாற்றம் வீசுமானால் அதை மாற்றுவதற்குக வாச மலர்கள் நிரப்பப்பட்டிருகின்றன. வீட்டு மனை வணிக முகவர் ஒருவர், பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அந்த வீட்டைப் பார்க்க வந்ததாகக் கூறுகிறார். உண்மையில் அப்படி எந்த விளம்பரமும் இல்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறும் மீண்டும் வர வேண்டாம் என்றும் அந்த முகவர் பேட்மேனிடம் கூறுகிறார். விலை மதிப்புமிக்க அந்த வீட்டின் விற்பனை வாய்ப்பு குறையாமல் இருப்பதற்காகக் கட்டட உரிமையாளர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு, கொலைகள் மறைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
பேட்மேன் விசித்திரமான மாயத் தோற்றங்களை அனுபவிக்கத் தொடங்குகிறான். ஒரு உணவுத் துணுக்கிற்குள் தன்னை யாரோ நேர்காணல் செய்வதாக, ஒரு பூங்கா இருக்கை உயிர் பெற்று எழுந்து துரத்துவதாக, ஐஸ்கிரீம் பெட்டிக்குள் மனித எலும்புத்துண்டு கிடப்பதாக… இப்படியெல்லாம் மாயையான நிகழ்வுகளை அனுபவிக்கிறான். வழக்குரைஞரைத் தொடர்பு கொள்ளும் பேட்மேன், அவருடைய தொலைபேசி இயந்திரத்தில் பதிவு செய்திருந்த வாக்குமூலம் பற்றிக் கேட்கிறான். அவரோ அதை ஒரு வேடிக்கை என்று கருதிச் சிரிக்கிறார். வழக்குரைஞர் கார்ன்ஸ் தன்னோடு இப்போது தொடர்புகொண்டிருப்பவன் உண்மையான பேட்மேன் அல்ல என்றும், அவனுக்கு இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யும் துணிவு கிடையாது என்றும் கூறுகிறார்.
பேட்மேனும் நண்பர்களும் ஒரு புதிய விடுதியில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பதோடு நாவல் முடிவடைகிறது. அங்கே எல்லோரும் பொருளாதார வெற்றிதான் உண்மையான மகிழ்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் அமெரிக்க அரசுத் தலைவர் பதவியேற்பு விழா மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. , பல்வேறு எழுத்துருக்களுடன் கூடிய ஒரு விளம்பரப் பலகையில் “இது வெளியேறும் வழியல்ல” என்று எழுதப்பட்டிருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரச் சூழல்களிலிருந்து அவனோ, அவன் உருவாக்கிய கொலைச் சூழல்களிலிருந்து மற்றவர்களோ தப்பித்து வெளியேறிவிட முடியாது என்று அந்த வாசகம் உணர்த்துகிறது.
பெயர்க் காரணம்
நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு பத்திரிகையாளர் எல்லிஸ்சிடம் அதன் தலைப்பு பற்றிக் கேட்டிருக்கிறார். 1980கள் வாக்கில் பல திரையரங்குகளும் கடைகளும் கொண்ட ஒரு பன்முக வளாகத்திற்குச் சென்றிருந்தாராம். ஒரு திரையரங்கப் பெயர்ப் பலகையில் பெரிய எழுத்துகளில் “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டப்பட்டிருந்ததாம். விசாரித்தபோது, “அமெரிக்கன் ஆந்த்தெம்“ (அமெரிக்க நாட்டுப்பண்), “சைக்கோ 3” (உளவியல் கொடூரன் 3) என்ற இரண்டு திரைப்படங்களின் தலைப்புகளைச் சேர்க்க முடியாததால், இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டியதாகச் சொன்னார்களாம்! “அதைப் பார்த்ததும் எனக்கு ‘பூம்!,’ என்று தோன்றியது. நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு அதுதான் தலைப்பு,” என்று கூறினார் எல்லிஸ்.
இலக்கியத் திறனாய்வளரான ஜெஃப்ரி டபிள்யூ. ஹண்டர், “பெருமளவுக்கு முதலாளித்துவத்தின் மேலோட்டத்தனமான சமூகப் பொறுப்பையும் அதன் கொடிய கூறுகளையும் பற்றிய விமர்சனமே இந்த நாவல். கதைமாந்தர்கள் பெரும்பாலும் பொருள்சார் ஆதாயங்களிலும் வெளித்தோற்றங்களிலும்தான் அக்கறை காட்டுகின்றனர். இந்தக் கூறுகள் “மேம்போக்குத்தனம்” உச்சம் பெறுகிற ஒரு பின்நவீனத்துவ உலகின் அடையாளங்களே. அதுதான் பேட்மேன் போன்றோர் மற்ற மனிதர்களையும் வெறும் பண்டங்களாக நினைக்க வைக்கிறது,” என்று பதிவிட்டிருக்கிறார். நாவலின் ஒரு கட்டத்தில் பேட்மேன் ஒரு பெண்ணின் சதையை உண்ணும்போது, “எனது செயல்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நான் உணர்ந்தாலும் இந்தப் பெண், இந்த உடல், இந்த சதை எதுவுமே ஒன்றுமில்லை என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்கிறேன்,” என்று குறிப்பிடுகிறான்.
அடையாளச் சிக்கல்கள்
இளைஞர்களின் மனக்குழப்பங்கள், சமூகச் சீர்கேடுகள், நுகர்வுக் கலாச்சாரத்தின் பாதக விளைவுகள் உள்ளிட்ட நிலைமைகளைத் தனது படைப்புகளின் கருப்பொருட்களாக எடுத்துக்கொள்கிறார் நையாண்டி எழுத்தாளரும் திரைக்கதையாளருமான பிரெட் ஈஸ்டன் எல்லிஸ். 1964இல் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் பிறந்தவரான எல்லிஸ் 1980களிலும் 90களிலும் மாறுபட்ட கலைப் பார்வைகளோடு முன்னணியில் இருந்த ‘இலக்கிய பிராட் பேக்’ என்ற இளம் எழுத்தாளர்கள் குழுவிலும் அங்கம் வகித்தார்.
அமெரிக்க இளைஞர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்கியிருப்பதைக் கூறும் ‘லெஸ் தேன் ஜீரோ’, அதன் இரண்டாம் பாகமான ‘இம்பீரியல் பெட்ரூம்ஸ்’’ ஆகிய நாவல்களையும் சில ‘தி இன்ஃபார்மர்ஸ் என்ற சிறுகதைத் தொகுப்பையும், வாழ்க்கைப் பயண நினைவுக் குறிப்பு நூல்களையும் எழுதியிருக்கிறார். லெஸ் தேன் ஜீரோ, தி ரூல்ஸ் ஆஃப் அட்ராக் ஷன், தி இன்ஃபார்மர்ஸ், அமெரிக்கன் சைக்கோ (American Psycho) ஆகிய கதைகள் திரைப்பட வடிவமெடுத்துள்ளன.
எடுத்துச் சொல்லப்படும் உண்மை நிலைமைகளாலும், அப்பட்டமான சித்தரிப்புகளாலும் வாசகர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிற போதிலும், பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் தனது சர்ச்சைக்குரிய படைப்புகளின் மூலம், ஆழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து, நவீன அமெரிக்க சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று இலக்கிய உலகினர் சான்றளிக்கின்றனர்.
எழுதியவர் :

அ. குமரேசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.