தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 7 | ‘லொலிடா’ (Lolita) நாவல்
ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை
அ. குமரேசன்
‘லொலிடா’ என்ற இந்த நாவலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் ஜான் ரே ஜூனியர் என்ற உளவியலாளர். உளவியல் நூல்களின் தொகுப்பாளருமான அவர், சிறையில் இதய நோயால் இறந்துபோன ஒரு கைதியின் நினைவுக் குறிப்புகள் இந்தப் புத்தகமாக உருவாகியிருக்கிறது என்கிறார். ஹம்பர் ஹம்பர் (ஆங்கில எழுத்துகளின்படி ஹம்பர்ட், உச்சரிப்பின்படி ஹம்பர்) என்ற புனைப் பெயர் சூட்டிக்கொண்டவனான அந்தக் கைதி தன்னுடைய கதையை சொல்லத் தொடங்குகிறான்.
நாவலுக்குள் நேரடியாகச் செல்லாமல் எதற்காக அந்த முன்னுரையிலிருந்து தொடங்க வேண்டும்? காரணம் அந்த முன்னுரை நாவலின் முதல் அத்தியாயம்! உளவியலாளர் ஒரு கற்பனைப் பாத்திரம்!

ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறி இறுதிக் காலத்தில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவரான எழுத்தாளர் விளாதிமீர் நபோகோவ் (Vladimir Nabokov) (1899–1977) இப்படியொரு புதிய உத்தியோடு நாவலை 1955இல் எழுதியிருக்கிறார். தி டிஃபென்ஸ்(பாதுகாப்பு), தி டெஸ்பெய்ர் (மனக்கசப்பு), இன்விடேஷன் டு எ பிஹெட்டிங் (தலையை வெட்டுவதற்கு அழைப்பு), தி கிஃப்ட் (அன்பளிப்பு), என்சான்ட்டர் (வசீகரன்), சைன்ஸ் அன் சிம்பல்ஸ் (குறிகளும் சின்னங்களும்), பேல் ஃபயர் (வெளிறிய நெருப்பு)ஆகிய நாவல்கள் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர் நபோகோவ்.
‘லொலிடா’ வெளியானபோது பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, அர்ஜன்டைனா, தென்னாப்பிரிக்கா, நியூஜிலாந்து உள்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. அமெரிக்க அஞ்சல் துறை இந்த நாவலை யாராவது யாருக்காவது அனுப்பினால் பட்டுவாடா செய்ய மாட்டோம் என்று அறிவித்தது. இந்தத் தடைகளுக்குக் காரணங்களாக பாலியல் உறவுகள் பற்றிச் சித்தரிக்கிறது, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் மீது ரசனையை ஏற்படுத்துகிறது, சமூக ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிரான கருத்துகளைப் பரப்புகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. இலக்கிய உலகத்தினர், பத்திரிகையாளர்கள், சமூக அக்கறையாளர்கள் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தினார்கள். தடை விலக்கப்பட்டது.
‘டைம்ஸ்’ ஏடு உலகின் சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் இதனைச் சேர்த்தது. மாடர்ன் லைப்ரரி, லே மோண்டி, போக்லுபென் ஒர்ல்ட் லைப்ரரி, தி பிக் ரீட் உள்ளிட்ட அமைப்புகளும் முக்கியமான நாவல்களின் வரிசையில் இது இணைவதாக அறிவித்திருக்கின்றன. பல முறை நாடக ரசிகர்களையும், இரண்டு முறை திரைப்பட ரசிகர்களையும் வந்தடைந்த லொலிடா யார்?

கதைக்களம்
ஹம்பர் ஹம்பர் என்ன குற்றத்துக்காக அவன் கைது செய்யப்பட்டான் என்று முன்னுரையில் தெரிவிக்கப்படவில்லை. அவனுடைய உண்மைப் பெயரும் கடைசி வரையில் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்ற நடுவர்களுக்கு ஒரு வாக்குமூலமாக அவன் எழுதிய நினைவுக் குறிப்புகள் அவனுடைய பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, தனிப்பட்ட இழப்பு, அதை ஈடுசெய்வதாக எண்ணி ஏற்படுத்திக்கொண்ட பாலியல் ஈர்ப்பு ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன. அத்துடன் அரசியல்–சமூகச் சூழல்களையும் பேசுகின்றன.
1910ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஆங்கிலேயத் தாய்க்கும் சுவிட்சர்லாந்துத் தந்தைக்கும் பிறந்த ஹம்பர் சிறார் பருவத்தில் அனபெல் லீ என்ற சிநேகிதி மீது ஈர்ப்பு கொள்கிறான். நச்சுக் காய்ச்சலால் அனபெல் அந்த வயதிலேயே இறந்து விடுகிறாள். இந்தப் பிரிவால் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்படும் ஹம்பருக்கு 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளின் மீது வெறித்தனமான பாலியல் மோகம் வளர்கிறது. தனது மன இச்சைகளை நிறைவு செய்கிறவர்கள் என்று நினைக்கும் சிறுமிகளை அடையாளப்படுத்த அவனாகவே “நிம்பெட்” (கிட்டத்தட்ட ‘காமதேவதை’ என்று பொருள்) என்று புதிய சொல்லை உருவாக்குகிறான்.

பட்டப் படிப்புக்குப் பிறகு பிரெஞ்சு இலக்கிய ஆசிரியராக வேலைக்குச் சேர்கிறான். இக்காலத்தில் அவன் மனநல மருத்துவமனைகளுக்கு அடிக்கடி போக வேண்டியதாகிறது. வலேரியா என்ற பெண்ணுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கிறது. சிறிது காலத்தில் அவள் அவனிடமிருந்து விலகிவிடுகிறாள். இரண்டாம்
உலகப் போர் சூழல்கள் உருவாகின்றன. அவன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்கிறான். 37 வயதில், அவன் அமெரிக்காவில் நியூ இங்கிலாந்து என்று குறிப்பிடப்படும் வட்டாரத்தில் தங்கி அமைதியாகத் தனது எழுத்துப் பணியில் மூழ்க எண்ணி வீடு தேடுகிறான். ஒரு வீட்டின் உரிமையாளரான சர்லோட் தன் வீட்டிற்குக் குடிவர விடுக்கும் அழைப்பை மறுக்க எண்ணுகிறான். ஆனால் அவளுடைய மகளான டோலெரெஸ் என்ற 12 வயதுச் சிறுமியைக் காண்கிறபோது அவளைத் தன் சிறுவயதுக் காதலியான அனபெல்லின் மறு உருவமாகக் கருதுகிறான். வீட்டிற்குக் குடி வருகிறான். பழகுகிறான். அவளை ‘லொலிடா’ (Lolita) (கவர்ச்சிக் கட்டழகி) என்று செல்லமாக அழைக்கிறான்.
அவளைத் தொடுவது, உரசுவது என்று தன் பாலியல் இச்சையைத் தணித்துக்கொள்ள ஹம்பர் முயல்கிறான். பள்ளியின் கோடை முகாமுக்காக அவள் சென்றபோது, சர்லோட்டிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அவன் மீது தனக்கிருக்கும் காதலை வெளிப்படுத்தும் சர்லோட், அவன் தன்னை மணக்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்று கெடு வைக்கிறாள். டோலெரெஸ்சின் வளர்ப்புத் தந்தையாக இருப்பதால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஊகிக்கும் ஹம்பர் சம்மதிக்கிறான்..
திருமணத்திற்குப் பிறகு, சர்லோட்டுக்குப் போதை மருந்து கொடுக்கவும், டோலெரெஸ் திரும்பி வந்ததும் அவளையும போதையில் ஆழ்த்திப் பாலியல் உறவுகொள்ளவும் ஹம்பர் திட்டமிடுகிறான். தற்செயலாக ஹம்பரின் குறிப்பேட்டைப் படிக்கும் படிக்கும் சர்லோட் அவனுடைய உண்மை நோக்கங்களைக் கண்டுபிடிக்கிறாள். அதில் எழுதியிருப்பவை உண்மையல்ல, அடுத்த நாவலுக்கான குறிப்புகள்தான் என்று அவன் கூறுவதை ஏற்க மறுத்து, மகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். கடிதத்தை அஞ்சல் நிலையத்தில் சேர்க்கச் செல்கிறபோது சாலை விபத்தில் மரணமடைகிறாள்.

ஹம்பர் கோடை முகாமுக்குச் சென்று, டோலெரெஸ்சைப் பார்த்து, அவளுடைய தாய் கடுமையான உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அழைத்துப் போகிறான். ஒரு பணக்கார விடுதியில் அறையெடுத்துத் தங்க வைக்கிறான். அவளுடைய பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுக்கிறான். அவள் தூக்கத்தில் விழும் வரையில் விடுதிக்குள் சுற்றிவரக் கிளம்புகிறான். மையக் கூடத்தில் ஒரு ஆசாமியைப் பார்க்கிறான். அவனுக்கு இவனுடைய திட்டம் தெரிந்திருப்பது போல இருக்கிறது. அறைக்குத் திரும்பி வரும் ஹம்பர், தூக்க மருநது வேலை செய்யாததையும் அவள் விழித்திருப்பதையும் காண்கிறான். திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகிறது.
மறுநாள் பேசிக்கொண்டிருக்கும்போது டோலெரெஸ், முகாமில் இருந்தபோது வயதில் மூத்த பையனுடன் தனக்கு உறவு ஏற்பட்டதைச் சொல்கிறாள். ஹம்பர் அவளைக் கட்டாயப்படுத்தி வன்புணர்கிறான். பின்னர் அவளிடம் சர்லோட் இறந்துவிட்டதைத் தெரிவிக்கிறான். அவளை அழைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் பயணம் செய்கிறான். சிறுமியான அவளை நிறையப் பணம் கொடுத்தும் உளவியலாகக் கட்டுப்படுத்தியும் தன் இச்சைக்கு உட்படுத்துகிறான். நன்றாகக் கவனித்துக்கொள்ளவும் செய்கிறான்.அதே வேளையில் வெளி இடங்களுக்குப் போகக்கூடாது என்று தன் பிடியிலேயே வைத்திருக்கிறான்.
வேறொரு நகருக்குக் குடிவருகிறார்கள். அங்கே அவளைப் பெண்கள் பள்ளியில் சேர்க்கிறான். தன்னை அவளுடைய தந்தை என்று காட்டிக்கொள்கிறான். தலைமையாசிரியர், அவன் அவளைப் பழைய காலத்துப் பெற்றோர்கள் போலக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது சரியல்ல என்கிறார். ஆகவே பள்ளி நாடகத்தில் அவள் நடிக்க ஹம்பர் சம்மதிக்கிறான். நாடகத்தின் தலைப்பு, அவன் சந்தேகித்த அந்த மர்ம நபர் இருந்த விடுதியின் பெயராகவே இருப்பதைக் கவனிக்கிறான். நாடக நிகழ்வுக்கு முந்தைய இரவில் டோலெரெஸ் வெளியே ஓடுகிறாள். தேடிச் செல்லும் ஹம்பர் அவள் ஒரு கடையில் ஐஸ் கிரீம் சோடா குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவள் மீண்டும் ஒரு நீண்ட சாலைப் பயணம் போக விரும்புவதாகச் சொல்கிறாள். அவனுக்கு உற்சாகமாக இருக்கிறது என்றாலும், பயணத்தின்போது தங்களை யாரோ பின்தொடர்வது போல சந்தேகம் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் உடல் நலம குன்றுகிற அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். மறுநாள் அங்கே போகிறபோது. அவள் குணமாகி, தன் மாமாவுடன் போய்விட்டதாக மருத்துவமனையில் கூறுகிறார்கள். எங்கே தேடியும் அவளை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயது டொலரெஸ்சிடமிருந்து ஹம்பருக்கு ஒரு கடிதம் வருகிறது. தனக்கு ரிச்சர்ட் என்பவனுடன் திருமணமாகிவிட்டது என்றும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து, சிரமமாக இருப்பதால் பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டு எழுதியிருக்கிறாள். ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான். அவள் அவனிடம், அந்த மர்ம நபர், நாடக எழுத்தாளர் க்ளேர் கில்டி என்றும், அவன்தான் பல இடங்களில் தங்களைப் பின்தொடர்ந்தவன் என்றும் கூறுகிறாள். மருத்துவமனையிலிருந்து தன்னை அழைத்துச் சென்றது அவன்தான், சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகு அவனுடைய ஆபாசப்படத்தில் நடிக்க மறுத்ததால் தன்னைக் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டான் என்றும் தெரிவிக்கிறாள். . கில்டி, அவளை அவனுடைய ஆபாசத் திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்காகக் கழித்துவிட்டதாகவும் விளக்குகிறாள். ரிச்சர்டிடம் ஹம்பர் அவளுடனான தன் உறவை மறைத்துத் தகப்பனாகவே அறிமுகப்படுத்திக்கொள்கிறான். ஊர் திரும்புகிறவன், மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரீட்டா என்ற பெண்ணுடன் வாழ்கிறான். கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்படுகிறான்.
ஹம்பர், நீதிமன்ற நடுவர்களுக்கான கடிதத்தில், “எனக்கு லொலிடா (Lolita) மீது காமம் மட்டுமல்லாமல் ஆழ்ந்த காதல் இருப்பதையும் இந்தக் கணத்தில்தான் உணர்கிறேன்,” என்று எழுதியிருக்கிறான். அவளைத் தன்னோடு வந்துவிடுமாறு அழைத்தபோது அவள் வர மறுத்துவிட்டதையும், தன் கட்டுப்பாட்டில் இருந்த, அவளுக்குச் சேர வேண்டிய, அவளுடைய தாயின் பணத்தையெல்லாம் அவளிடமே ஒப்படைத்துவிட்டுத் திரும்பியதாகவும் கூறுகிறான். அந்த கில்டியைத் தேடிச் சென்று போதையோடு இருந்தவனைச் சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்திருக்கிறான். தனது நினைவுக் குறிப்புகளை டோலெரெஸ் உயிர்வாழும் வரையில் பொதுவில் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறான். சிறைவாசத்திலேயே ஹம்பர் மரணமடைந்துவிட்டதையும், டோலெரெஸ் பிரசவத்தின்போது உயிரிழந்ததையும் நாவலின் “முன்னுரை” ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது.

கருத்துகள்
முதலில் குறிப்பிட்ட விமர்சனங்களை நாவல் கடந்துவிட்டது. ஆயினும், சிறைக் கைதி தன் கதையைத் தானே சொல்கிற நடையில் எழுதப்பட்டிருப்பதால் இந்த நாவல் டோலெரெஸ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களின் இயல்புகள், சூழல்கள், மனநிலைகள் பற்றிப் பேசவில்லை என்ற இலக்கியத் திறனாய்வு சார்ந்த கருத்துகள் வந்துள்ளன. சமூக வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார் நபோகோவ் என்று பாராட்டும் பகிரப்பட்டிருக்கிறது. பல்வேறு மொழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சொல் விளையாட்டுகள், நுட்பமாக இரட்டைப்பொருள் தரும் சொல்லாடல்கள், ஒரே சொல்லின் எழுத்துகளை வேறு பொருள் தரும் வகையில் மாற்றியமைப்பது ஆகிய நயங்களைத் திறனாய்வுகள் சுட்டிக்காட்டியிருப்பதைத் தெரிவிக்கிறது ‘விக்கிபீடியா’. அந்த ”நிம்பெட்” என்ற சொல் பின்னர் அகராதிகளில் இடம் பிடித்ததாம்! இன்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றத்தை நாவல் நியாயப்படுத்தவில்லை, மாறாக இப்படிப்பட்டவர்கள் இருப்பதை அடையாளம் காட்டுகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
எழுதியவர் :

அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

