அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல்

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் (ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–2

– அ. குமரேசன்

நல்லதொரு இலக்கியப் படைப்பு வாசித்து மகிழ வைப்பதோடு தனது வேலை முடிந்ததென்று நிற்பதில்லை. சித்தரிக்கப்பட்ட உண்மைகளை உரசிப் பார்க்கச் செய்யும். பொய்மைகளைப் புரிந்துகொள்ள உதவும். நிலைமைகளை மாற்றுவதற்குப் போராடுகிறவர்களோடு இணைந்திருக்கத் தூண்டும். அதன் காரணமாகவே உண்மைகளை மறைத்துப் பொய்மைகளைப் பரப்புகிறவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும். யாரும் அதைப் படிக்க இயலாமல் தடை போட முடுக்கிவிடும்.

அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் ‘ஆயிரத்துத் தொள்ளாயிரத்து  எண்பத்து நான்கு’. பிரிட்டானிய எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய இந்த நாவல் ‘1984’ என்று  எண்ணாகக் குறிப்பிடும் தலைப்பிலும் வெளியானது. 1984ஆம் ஆண்டில் மைக்கேல் ரோட்ஃபோர்ட் இயக்கத்தில் திரைப்படமாகவும் அரங்குகளுக்கு வந்தது. அதற்கு முன் அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன் உள்ளிட்ட சில நாடுகளில் புத்தகம் தடை செய்யப்பட்டது.  வேறு சில நாடுகளில் எதிர்ப்புக்கு உள்ளானது.  பிரிட்டனில்  அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்படவில்லை என்றாலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பள்ளிகளிலும் இதர நூலகங்களிலும் சிறிது காலம் புத்தகம் எளிதில் கிடைக்காது என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டது. சீனாவில் புத்தகம் கிடைத்தது, ஆயினும் அதன் மீதான விவாதங்கள், குறிப்பாக இணையவழி விவாதங்கள் கண்காணிக்கப்பட்டன, தணிக்கைக்கு உள்ளாகின. அத்தகைய முட்டுக்கட்டைகளைத் தாண்டி இன்று எங்கேயும் கிடைக்கிறது, உலகின் பல மொழிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/
             ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)

இதில் ஒரு வேடிக்கையும் நடந்தது. சோவியத் யூனியனில், சோசலிசக் கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைகளை முன்வைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த நாவலுக்கு, அமெரிக்காவின் பல மாநிலங்களில் கம்யூனிசச் சிந்தனைகளைப் பரப்புகிறது என்ற கண்டனத்துடன் தடை விதிக்கப்பட்டது! பாலியல் உறவைச் சித்தரிப்பதாகக் கூறி பள்ளி நூலகங்களிலிருந்து விலக்கப்பட்டது. பிரிட்டனில், அரசின் முழு அதிகாரத்தை நாவல் கேள்விக்கு உட்படுத்துகிறது என்ற அடிப்படையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

வெவ்வேறு கோணங்களில் எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொண்ட நாவலின் கதை இப்படியாக இருக்க, நாவல் சொல்லும் கதை என்ன? சுதந்திரமான பொன்மயமான எதிர்காலம் பற்றிய கற்பனை சூழ் கனவுலகத்தை ஆங்கிலத்தில் ‘உட்டோப்பியன்’ என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். அதற்கு நேர்மாறான, அடக்குமுறைகளும் துயரங்களும் நிறைந்ததோர் எதிர்காலம் பற்றிய கற்பனையை ‘டிஸ்டோபியன்’ என்பார்கள். 1949இல் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)   எழுதி வெளியான இந்த நாவல், 35 ஆண்டுகளுக்குப் பிந்தைய ஒரு வல்லாட்சி நாட்டையும் அதன் குடிமக்களையும் கற்பனையாக முன்வைக்கிறது. எதிர்காலக் கற்பனை என்றாலும், அது நாவல் வெளியான காலக்கட்டத்தின் மெய்யான நடப்புகள் பற்றிய மறைமுக விமர்சனம்தான்.

‘1984’ கதைச் சுருக்கம்

உறுதியாகத் தெரிய வராத, 1984 ஆக இருக்கலாம் என ஊகிக்கப்படும் ஆண்டில், போர்களாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் உலகமே சீரழிந்து போயிருக்கிறது. எல்லா நாடுகளும் மூன்றே மூன்று அனைத்ததிகார வல்லரசுகளின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்த மூன்றில் ஒன்றான ஓசியானியா பேரரசுக்கு உட்பட்ட ஏர்ஸ்ட்ரிப் ஒன் என்ற பகுதியாக பிரிட்டன் மாறியுள்ளது. ஓசியானியாவை “கட்சி” (தி பார்ட்டி) என்ற குழு ஆள்கிறது. அதன் கொள்கை “இங்க்சாக்” (இங்கிலீஷ் சோசலிசம் என்பதன் சுருக்கம்) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நவீன வசதிகளுடனும் (கிட்டத்தட்ட செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் போன்றவை) இருக்கும் பேரரசின் ஆகப்பெரும் அதிபதி “பெரிய அண்ணன்” (பிக் ப்ரதர்). அவர்  ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துக் குடிமக்களை ஒடுக்கி வைத்திருக்கிறார். கட்டுப்பாடுகளை மீறினால் கடும் தண்டனைகள் நிச்சயம். அதைக் கண்காணிக்க “சிந்தனைக் காவல்” (தாட் போலீஸ்) என்ற படையே இயங்குகிறது. ஆட்சிக்கு எதிராகச் செல்கிறவர்கள் “ஆளல்லாதவர்கள்” (அன்பெர்சன்ஸ்) என அறிவிக்கப்பட்டு அவர்கள் இருந்ததற்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே மக்கள் அச்சத்துடன் அவரைப் போற்றுகிறவர்களாக மாறியிருக்கிறார்கள்.

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

 கட்சியின் வெளியமைப்பு உறுப்பினரான  விஸ்டன் ஸ்மித் அரசின் உண்மை அமைச்சகத்தில் ஊழியராக இருக்கிறான். வரலாற்று ஆவணங்களைத் திருத்தி தலைமை கூறுவது போலப் பதிவு செய்வது அவனுடைய வேலை. பழைய ஆவணங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிடும். வேலைகளில் ஈடுபடும்போது உண்மைகளை அறிய நேரிடும் வின்ஸ்டன் முந்தைய வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொள்ள முயல்கிறான்.   மனதளவில் தலைமையை வெறுக்கிறான். அதை  எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடப்பதாகவும் தானும் அவற்றில் பங்கேற்பதாகவும் கனவு காண்கிறான். தான் ஒரு “சிந்தனைக் குற்றவாளி” என்று புரிந்துவைத்திருக்கிற அவன் எதிர்காலத்தில் சிறைவாசம் உண்டு என்ற தெளிவோடும் இருக்கிறான்.

1950இல் நடந்த கலவரத்தில் பெற்றோரை இழந்தவனும், மனைவியைப் பிரிந்தவனுமான வின்ஸ்டன், பொதுமக்களுக்கு அரசியல் நிலைமைகளில் பெரிதாக அக்கறையில்லாமல் இருப்பதைக்  கண்டு ஏமாற்றமடைகிறான். இந்நிலையில் அமைச்சகத்தில், அரசின் நோக்கங்களுக்கு ஏற்ற கதைகளை எழுதிக்கொடுக்கும் எந்திரங்களைப் பராமரிக்கும் சக ஊழியரான  ஜூலியா அவனுடைய கவனத்திற்கு உள்ளாகிறாள். அவள் மீது தொடக்கத்தில் சந்தேகம் கொள்கிறான். அவள் தலைமையின் உளவாளியாக இருக்கலாம் என்று நினைக்கிறான். ஆட்சியின் உள்ளமைப்பில் இருக்கும்  ஒ’ப்ரையன் என்ற அதிகாரி, அரசுக்கு எதிரான “சகோதரத்துவம்”  என்ற ரகசிய இயக்கத்தின் உறுப்பினராக இருக்கக்கூடும் என்றும் ஊகிக்கிறான்.

நாட்களின் ஓட்டத்தில் ஜூலியாவும் ஆட்சியை வெறுப்பவள்தான் என்று அவனுக்குத் தெரியவருகிறது. இருவரும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். இங்க்சாக் சட்டப்படி, அரசின் அனுமதியின்றி யாரும் உறவுகொள்ள முடியாது. ஆகவே இவர்களது காதல் ரகசியமாகவே தொடர்கிறது. அவர்கள் சந்தித்துக்கொள்வதற்கு சாரிங்டன் என்ற கடைக்காரர் உதவி செய்கிறார். இருவரும் தங்களது குடும்பப் பின்னணிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

விஸ்டனைத் தனியாக வீட்டுக்கு வரவழைக்கும் ஓ‘ப்ரையன், அவன் ஊகித்தது போலவே  தன்னை சகோதரத்துவ இயக்கத்தின் உறுப்பினர்தான்   என்று வெளிப்படுத்திக்கொள்கிறார். எமானுவேல் கோல்ட்ஸ்டீன் என்பவர் எழுதிய ‘ஆட்சிக் கூட்டமைப்பின் கோட்பாடும் நடைமுறையும்’ என்ற புத்தகத்தைத் தருகிறார். 

இதனிடையே ஓசியானியாவின் எதிரி அரசாகிய யூரேசியா (ஐரோப்பிய ஆசியா) திடீரென ஈஸ்டேசியா (கீழை ஆசியா) என  மாறுகிறது, அது பெரிதாகக் கவனிக்கப்படாமல் போகிறது. விஸ்டன் அந்தப் புத்தகத்தை படிக்கிறான். ஆட்சிக்குழு எப்படி  அதிகாரத்தைக் கையாளுகிறது என்பதை அந்த நூல் விளக்குகிறது. அரசால் விளம்பரப்படுத்தப்படும் பல்வேறு முழக்கங்களின் உண்மை நோக்கங்களையும் கூறுகிறது. ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது எப்படி என்ற அத்தியாயத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அவனும் ஜூலியாவும் கைது செய்யப்படுகிறார்கள். சாரிங்டன் உண்மையில் சிந்தனைக் காவல் படையின் கையாள் என்றும்,  ஒ’ப்ரையன் கூட அதிகாரபீடத்தின் அடியாள்தான் என்றும் அப்போதுதான் தெரியவருகிறது.  

சிறையில் விஸ்டன் பட்டினி போடப்படுகிறான். கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிறான். சிறையதிகாரிகள் அவனை ஆட்சியின் விசுவாசியாக மாற்ற முயல்கிறார்கள். சகோதரத்துவம் என்ற இயக்கம் உண்மையிலேயே இருக்கிறதா என்று அவன் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது    என்கிறார் ஓ‘ப்ரையன்.  கோல்ட்ஸ்டீன் எழுதியதாகக் கொடுத்த புத்தகமே கூட  அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டதுதான் என்று கூறுகிறார். லட்சியத்தை அடைவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தை அடைவதுதான் லட்சியமே என்றும்  தெளிவுபடுத்துகிறார்.

விஸ்டனை “அறை 101” எனப்படும் கூடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். கொண்டுவரப்படும் ஒவ்வொரு கைதியின் பயம்   என்ன என்று அறிந்து அந்தச் சூழல் ஏற்படுத்தப்படுகிற அறை அது. விஸ்டனின் மிகப்பெரிய பயம் எலிகள்.  எலிகள் நிறைந்த ஒரு கூண்டு அவன் முகத்தோடு சேர்த்துக் கட்டப்படுகிறது. அந்த எலிகள் கடித்துக் குதறிவிடும் என்ற அச்சத்தில் வின்ஸ்டன்  விஸ்டன் ஜூலியாவைக் கைவிடுகிறான், கட்சியை ஏற்பதாக அறிவிக்கிறான்.

விடுவிக்கப்படும் வின்ஸ்டன், உணவகத்திற்குச் செல்கிறான். அங்கே, பல ஐரோப்பிய ஆசிய நாடுகளை ஒசியானா கைப்பற்றிவிட்ட செய்தி ஒலிபரப்பாகிறது. அதைக் கேட்டு மகிழ்கிறான். ஒருநாள் அங்கே  ஜூலியாவைச் சந்திக்கிறான்.  இருவருமே ஒருவர்க்கொருவர் துரோகம் செய்ததை ஒப்புக்கொள்கிறார்கள். கடைசியில், முற்றிலுமாக ஆட்சியின் விசுவாசியாக மாறும் வின்ஸ்டன் பெரிய அண்ணனை முழுமையாக நேசிக்கவும் தொடங்குகிறான். 

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) 

நாவலாசிரியரின் முந்தைய நூல்களும் அதிகார அமைப்புகளை விமர்சிப்பவைதான். குறிப்பாக, அவருடைய ‘விலங்குப் பண்ணை’ (அனிமல் ஃபார்ம்) சோசலிசத்தின் சமத்துவக் கொள்கைகளைக் கிண்டலடித்து எழுதப்பட்டதுதான். புதிதாக உருவாகி வளர்ந்து வந்த சோசலிச சோவியத் யூனியனுக்கு ஏகாதிபத்திய நாடுகளால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல், உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டுவதற்கான சதி, அந்த நிலையில் மேற்கொள்ள நேர்ந்த கடுமையான சில நடவடிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டிருந்தால் அந்த நாவலை அப்படி எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை. 

ஆயினும், கலை இலக்கியப் படைப்பின் கருத்துச் சுதந்திரமும் விமர்சன உரிமையும் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவை. சோசலிசத்தைக் கட்ட முயலும் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்ற பிரச்சாரத்தைத் தங்களது ஆயுதமாக முதலாளித்துவ சக்திகள் பயன்படுத்துவது தெரிந்ததுதான். ஆனால், முதலாளிய நாடுகளில் அறிவிக்காமலே செயல்படுத்தப்படும் கருத்துரிமை ஒடுக்குமுறைகளை அந்த சக்திகளோ, அவர்களின் ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. ‘1984’ நாவலைத் தழுவியே தமிழ்நாட்டில் எழுத்தாளர் சுஜாதா ‘ஜினோ’ என்ற, சமத்துவ அரசுக் கொள்கைகளைப் பகடி செய்யும் அறிவியல் புனைவை எழுதியது  கவனத்தில் கொள்ளத்தக்கது.

 

1903இல், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த வங்காள மாகாணத்தின் மோத்திஹரி நகரில் (இன்று  அது பிஹார் மாநிலத்தில் இருக்கிறது)  வெள்ளையின அதிகாரியின் குடும்பத்தில் பிறந்தவர் எரிக் ஆர்தர் பிளெய்ர். பின்னர் லண்டனுக்குத் திரும்பிச் சென்ற பிறகு, இலக்கியத்தில் ஈடுபட்டவர், ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)   என்ற புனைப்பெயரில் கவிதைகள்  எழுதலானார். ‘டௌன் அன் அவுட் இன் பாரிஸ் அன் லண்டன்’ (1933), ‘தி ரோட்  விகான் பியெர்’ (1937), ‘ஹோமேஜ் டு கட்டாலோனியா (1938), ‘அனிமல் ஃபார்ம்’ (1945) ஆகிய நாவல்களைப் படைத்தவர், 1949ஆம் ஆண்டில் ‘1984’ நாவலை வழங்கினார். அது வெளியான அடுத்த ஆண்டிலேயே, அதற்குக் கிடைத்த வரவேற்பு, எதிர்ப்பு இரண்டையுமே காணாமல், அவரை நெடுங்காலமாக வாட்டிவந்த எலும்புருக்கி நோய் முற்றிய நிலையில் காலமானார். இறப்புக்குப் பின் நாவல் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றது.

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

இன்று அரசியலில் அடிக்கடி கையாளப்படுகிற, அதிகார ஆணவத்தைக் குறிப்பிடும் “பெரிய அண்ணன்”, அரசுப் பீடங்களால் மக்களிடையே புகுத்தப்படும் சொல்லாடல்களைக் குறிக்கும் “நியூஸ்பீக்”. முரண்பாடான இரண்டு நிலைபாடுகளைக் கொணடிருக்கும் போக்கை அடையாளப்படுத்தும் “டபுள்திங்க்”, கொடிய ஆட்சிக்கு எதிராகச் சிந்திப்பதைக் கூட குற்றமாக்கும் குதர்க்கத்தைச் சுட்டிக்காட்டும் “தாட்கிரைம்”, அரியாசனவாதிகளுக்குச் சாதகமாக வரலாற்றுத் தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்படும் சூழ்ச்சியின் குறியீடாக “மெமரிஹோல்” என்ற ஆங்கிலச் சொற்கள் மேற்கத்திய நாடுகளின் அரசியல் களத்தில் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அந்தச் சொற்கள் ‘1984’ நாவலிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவைதான். 

பாசிசம், சர்வாதிகாரம் ஆகியவற்றையும்  சாடுகிற, ஜனநாயகப்பூர்வமான சமத்துவத்தையும், மதவாதங்களை மறுக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் வலியுறுத்துகிற கட்டுரைகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களைத் தந்தமைக்காக இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிறவர். இன்று அவரது நூல்கள் இடம்பெறாத நூலகங்களே உலகில் இல்லை எனலாம். கல்வி, மொழி என அனைத்திலும் அதிகாரக் குவிப்புகள் உறுத்தலே இல்லாமல் நிகழ்த்தப்படும் காலக்கட்டத்தில் ‘1984’ போன்ற படைப்புகள், இக்கட்டுரையின் தொடக்கப் பத்தியில் கூறப்பட்டுள்ள வேலையைச் செய்யும்தானே?

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *