தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்– 4
எதிர்காலக் கதையைக் கூறி கடந்தகால, நிகழ்கால நடப்புகளைச் சாடிய நாவல் (The Handmaid’s Tale)
அ. குமரேசன்
கனடா நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கியத் திறனாய்வாளர் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood). 18 கவிதை நூல்கள், 18 நாவல்கள் இவற்றுடன் சமூக நிலைமைகள் தொடர்பாகப் பல கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். 85 வயதில் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார், இலக்கிய விவாதங்களில் பங்கேற்று வருகிறார். சுற்றுச்சூழல் இயக்கத்தில் ஒரு முன்னணிச் செயற்பாட்டாளர்.
1985ஆம் ஆண்டில் அவர் எழுதி வெளியிட்ட நாவல் ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்‘ (The Handmaid’s Tale) (ஓரு சேடியின் கதை). பெண்களின் ஒழுக்க வாழ்வு பற்றிய வழிகாட்டல்களை விமர்சிக்கிறது, ஒழுக்க விதிகளை மீறுவதற்குப் பெண்களைத் தூண்டுகிறது, மதத்திற்கு உள்ள அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்றெல்லாம் கூறி அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் இந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் இரண்டுமே நாவலுக்கு நிலையான தடை விதிக்க வற்புறுத்தின. அவருடைய சொந்த நாடான கனடாவில் தடை செய்யப்படவில்லை என்றாலும், பெண்ணின் உடல், பாலியல் உறவு சார்ந்த கொச்சையான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும், கட்டுப்பாடுகளை அவமதிக்கிறது என்றும் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. இந்தியாவில் தடை அளவுக்குப் போகவில்லை, ஆனால் சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. உலக அளவில் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்தத் தடைகளும் எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் படிப்படியாக அடங்கிப் போயின.
உண்மையில் இன்றளவும் எல்லாச் சமுதாயங்களிலும், நவீன வாழ்க்கை முறைகளிலேயே, தாண்டவமாடுகிற ஆணாதிக்க ஆணவங்களைச் சந்தியில் நிறுத்துகிறாள் ஓர் உயரதிகாரி வீட்டுச் சேடியான ஆஃப்ஃப்ரெட். வெளியானது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில். எதிர்காலத்தில் (21ஆம் நூற்றாண்டில்) ஒரு கற்பனையான நாட்டில் (கிலியட்) நடக்கும் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளை, குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வக்கிரங்களைப் பற்றிப் பேசுவது போல முக்காலத்திற்கும் உரிய பார்வையைப் பகிர்ந்திருக்கிறார் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood). ஒரு நாடு ஒற்றை மதவெறி ஆட்சியின் பிடியில் சிக்கினால் மக்கள் என்ன ஆவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். கதைக்குள் போவோம்.
அழிவுக்குப் பின்னால்…
தடுக்கப்படாமல் அலட்சியமாக விடப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாக அமெரிக்க நாடு சிதைகிறது. ‘சன்ஸ் ஆஃப் ஜேக்கப்’ என்ற ஒரு கலவரக் குழு ஆட்சியைக் கைப்பற்றுகிறது. ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டுவதற்கு மாறாக, பழைய மதங்களிலிருந்து கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை எல்லாம் எடுத்துத் தனதாக்கிக்கொண்டு, அனைத்து மதங்களையும் ஒடுக்கிவிட்டு ஒரு புதிய மதத்தை உருவாக்குகிறது. நாட்டின் அரியாசன மதம் அதுதான் என்று அறிவிக்கப்படுகிறது. சர்வாதிகாரத்திற்கே உரிய வழக்கப்படி முதலில் ஊடகச் சுதந்திரத்தை அந்த அரசு முடக்குகிறது. கடுமையான சமூக விதிகள், முக்கியமாகப் பெண்களைக் கட்டுப்படுத்தி வைக்கிற சடங்குகள் நடைமுறைக்கு வருகின்றன. பெண்கள் போராடிப் பெற்றிருந்த உரிமைகள் யாவும் விலக்கப்படுகின்றன. சட்டப்படியே எல்லாப் பெண்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
நாட்டின் பெண்களிலேயே உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் யாரென்றால், உயரதிகாரிகளின் மனைவிமார்கள்தான். அவர்கள் உட்பட அனைத்துப் பெண்களும் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனி நிறங்களில் சீருடைகள் கட்டாயமாக்கப்படுகிறது. அவர்களுக்கு சொத்துரிமை, பணம் வைத்திருக்கும் உரிமை, படிக்கும் உரிமை, எழுதும் உரிமை எதுவும் கிடையாது. அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்குக் கருவுறும் உரிமை கூடக் கிடையாது. அதிகார பீடத்திலிருந்து, எந்த ஆணுடன் ஒரு பெண் உறவுகொள்ள வேண்டும் என்று ஆணை வருகிறதோ அவனுடன்தான் அவள் செல்ல வேண்டும், அவனால் உருவாகும் கருவைத்தான் சுமக்க வேண்டும், பெற்றுத் தர வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ‘ஹேண்ட்மெய்ட்’ என்று பெயர். தமிழில் சேடி, பணிப்பெண், வேலைக்காரி, பெண் கையாள் என்று சொல்லலாம்.
அப்படியொரு சேடிதான் ஆஃப்ஃப்ரெட். ஏற்கெனவே திருமணமாகிப் பிரிந்துவிட்ட ஒருவனோடு வாழ விரும்பி, தன் மகளுடன் ஊரை விட்டு வெளியேற முயலும்போது பிடிபட்டுவிடுகிறாள். அவளையும் சிறுமியையும் பிரிக்கிறார்கள். அவள் விபச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைக்கிறார்கள். யாருடன் தப்பிக்க முயன்றாளோ அவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை.
புதிய சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட பெண் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் அல்லது அரசாங்கம் சொல்கிறபடி யாருடைய வீட்டிலாவது சேடியாக வேலை செய்ய வேண்டும். அவளுடைய உண்மையான பெயர் மறைக்கப்பட்டு, யாருடைய வீட்டுக்கு அனுப்பப்படுகிறாளோ அவனுடைய பெயருடன் “ஆஃப்” என்ற முன்னொட்டு சேர்த்து அழைக்கப்படுவாள். உயிரோடு இருந்தால்தான் மகளைக் கண்டுபிடிக்க முடியும், இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிற மற்ற பெண்களுக்கும் உதவ முடியும். ஆகவே ஆஃப்ஃப்ரெட் அதை ஏற்கிறாள். குழந்தை பிறக்காதவனான, கமாண்டர் எனப்படும் ஓர் உயரதிகாரியின் வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவனுடைய பெயர் ஃப்ரெட். ஆனவே இவளுடைய பெயர் ஆஃப்ஃப்ரெட்.
அவனுடைய மனைவிக்குத் தனது உடலில் குறையா அல்லது அவனிடம் குறைபாடா என்று தெரியாத நிலையில் இவளைக் கணவனின் இருப்பிடத்திற்கு ஒரு சடங்குக்காக அனுப்பி வைக்கிறாள். உண்மையில் அது வக்கிரமான வல்லுறவு ஏற்பாடுதான், ஆனால் சடங்கு என்பதாக அமைத்திருக்கிறார்கள் அதிகார பீடத்தினர்.
ஆஃப்ஃப்ரெட் தனது கடந்த கால நினைவுகளுடன் வாழ்கிறாள். கணவன், மகள், நண்பர்களின் நினைவுகள் அவளை வாட்டுகின்றன. அவள் கிலியட் நாட்டின் கொடுமையான வாழ்க்கை முறையை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறாள். அதற்காக மற்ற சேடிகளுடன் ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறாள். ஆஃப்க்ளென் என்ற சேடி ஒத்தாசையாக இருக்கிறாள். ஏற்கெனவே நாட்டில் ஆட்சிக்கு எதிரான சில குழுக்கள் ரகசியமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. அவர்களோடும் இவள் தொடர்பு கொள்கிறாள். சுதந்திரத்தை மீட்கத் துடிப்போரின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெறுகிறாள்.
கமாண்டர் இவள் மீது மோகம் கொண்டவனாகத் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறான். அவளைப் பயன்படுத்திய பின்பு பாலியல் விடுதியில் அவளைத் தள்ளிவிடத் திட்டமிட்டிருக்கிறான். அரசாங்கத்திற்குத் தெரியாமல் இப்படிச் சந்திப்பதும் சட்டவிரோதம். அவனுடைய மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதிகார அமைப்புகள் பற்றிய தகவல்களை அவனிடமிருந்து கறக்கிறாள் ஆஃப்ஃப்ரெட். மகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று எதையும் செய்யத் துணிகிறாள்.
இதனிடையே, கமாண்டரின் உதவியாளனான நிக் என்பவனுக்கும் இவளுக்கும் இடையே ஒரு நேசம் உருவாகிறது. ஆஃப்க்ளெய்ன் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வருகிறது. இவளுக்குத் தானும் செத்துப் போவதா அல்லது எப்படியாவது தப்பிப்பதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. நிக் உண்மையிலேயே நம்பக்கூடியவனா அல்லது அரசாங்கத்தின் கையாளா என்ற சந்தேகமும் தோன்றுகிறது. திடீரென ‘கடவுளின் கண்கள்’ என்ற படைப் பிரிவினர் ஆஃப்ஃபிரெட்டைக் கைது செய்கிறார்கள். வெளியே கொண்டுசெல்லப்படும்போது அவளை நெருங்கும் நிக், தன்னை நம்புமாறு கேட்டுக்கொள்கிறான். வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு வாகனத்தில் ஏறச் சொல்கிறார்கள். தயங்கினாலும் பிறகு துணிந்தவளாக வாகனத்தில் ஏறுகிறாள்.
அதற்கப்புறம் என்ன ஆகிறது என்று நாவல் சொல்லவில்லை. அந்த வாகனம் அவளைத் தண்டனைக் கூடத்திற்குக் கொண்டு செல்ல வந்ததா அல்லது தப்பிப்பதற்காக நிக் செய்த ஏற்பாடா, அவன் தன் மகளைக் கண்டுபிடித்தாளா, மற்ற பெண்கள் என்ன ஆனார்கள் என்ற பல கேள்விகள் சூழ்கின்றன. எதிர்காலக் கற்பனை நாடு ஒன்றில் தொடங்கிய நாவல், எதிர்காலக் கற்பனை மாநாடு ஒன்றில் நிறைவடைகிறது. 2195ஆம் ஆண்டில் நடைபெறும் அந்த மாநாட்டில் ஒரு ஆய்வாளர், “இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய, அக்காலத்துத் தொழில்நுட்பம் சார்ந்த ஒலிப்பேழை ஒன்று ஆராய்ச்சியில் கிடைத்திருப்பதாகவும், அதில் ஆஃப்ஃபிரெட் என்ற பெண் தன் கதையைப் பதிவு செய்திருக்கிறாள்,” என்றும் அறிவிக்கிறார். அவளுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை அவரும் ஊகமாகவே முன்வைக்கிறார்.
நிகழ்கால உண்மைகள்
நாவல் பற்றிய கருத்தரங்குகளில் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood), கதையில் வரும் நிகழ்வுகள் காலங்காலமாகப் பெண்கள் சந்திக்கிற அவலங்களின் சித்தரிப்புதான் என்று கூறியிருக்கிறார். பெண்களின் சுதந்திரத்தை மிதித்து நசுக்கும் மதங்களின் கட்டுப்பாடுகளோடு கலந்து தொடர்கிற ஆணாதிக்க வன்மங்களைச் சொல்வதற்குக் கற்பனையான எதிர்காலம் உதவியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இன்று பல மதங்களில் பெண்கள் பற்றிய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று அங்கீகரிக்கிற அவர், அந்த மாற்றம் மேலும் வலுப் பெறுவதற்கு இப்படிப்பட்ட படைப்புகள் உதவும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்திருக்கிறார்.
‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid’s Tale) நாவலுக்கு பல முக்கியமான விருதுகள் கிடைத்துள்ளன. கனடாவின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான கவர்னர் ஜெனரல் விருது (1985), சிறந்த அறிவியல் புனைகதைக்கான ஆர்தல் சி. கிளார்க் விருது (1987), காமன்வெல்த் இலக்கிய விருது (1987), ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையின் புனைகதை விருது (1986) ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். பல நாடுகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும், இளையோருக்கான படக்கதைப் புத்தகங்களாகவும் ஆஃப்ஃப்ரெட் உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறாள். 2019ஆம் ஆண்டில் இதன் இரண்டாவது பாகமாக ‘தி டெஸ்டமென்ட்ஸ்’ (சாட்சியங்கள்) வெளியானது. கிலியட் நாடு பிறகு என்ன ஆனது எனக் கூறும் அந்த நாவல் புக்கர் பரிசைப் பெற்றது. முதல் பாகம் புக்கர் பரிசுக்கான பரிந்துரையை மட்டும் பெற்றது. பின்னர், 2000ஆவது ஆண்டில், குடும்ப ரகசியங்கள் பற்றிப் பேசும் ‘தி பிளைண்ட் அசாசின்’ (கண்மூடித்தனமான கொலையாளி) புக்கர் பரிசைப் பெற்றது. ‘தி டெஸ்டமென்ட்ஸ் மூலமாக, இரண்டு முறை அந்தப் பரிசைப் பெற்ற படைப்பாளிகளின் வரிசையில் இவரும் சேர்ந்தார்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.