தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1
வெகுளியான அந்தப் பறவை கொல்லப்பட்டது ஏன்?
– அ. குமரேசன்
அரசியல், மதம், சமூகம் என எதை எடுத்துக்கொண்டாலும், அதில் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் தங்களுடைய எதிரிகளை விடவும் அஞ்சுகிற ஒன்று இருக்கிறது. அதுதான் புத்தகம்!
ஏன் அஞ்சுகிறார்கள் என்றால், புத்தகம் சிந்திக்க வைக்கிறது, கேள்விகள் கேட்கத் தூண்டுகிறது, சரியான கேள்விகளை எழுப்ப வழிகாட்டுகிறது, மக்களிடையே உண்மைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது, மாற்றங்களை நிகழ்த்துவதற்கு சமுதாயத்தைத் தயார்ப்படுத்துகிறது. அடக்குமுறையாளர்களுக்கு இதுவெல்லாம் ஆகாதவையாயிற்றே, ஆகவே அவர்கள் புத்தகங்களை வெறுக்கிறார்கள், முடக்கிவைக்க விரும்புகிறார்கள்.
அவ்வாறு முடக்கப்பட்ட புத்தகங்கள் பின்னர் காலத்தை வென்று புகழடைந்திருக்கின்றன. அவற்றில் பேசப்படும் நிலைமைகள் இன்றைக்கும் நீடிக்கின்றன. அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான இயக்கங்களும் தொடர்கின்றன.
கருத்துச் சுதந்திரம் மேலோங்கிய நாடு என்று கருதப்படும் அமெரிக்காவிலேயே முக்கியமான கதைப் புத்தகங்கள் முடக்கப்பட்ட கதைகள் உண்டு. இத்தனைக்கும் அந்த நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது என்பதுதான்! 1771 அது அங்கே நடைமுறைக்கு வந்தது. ஆயினும் அதில் உள்ள சில வாசகங்களுக்கு ஆளுக்காள் ஒரு புதிய விளக்கம் கொடுத்து, சில சிறப்பான புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கச் சட்டப்படி, மாநில அரசுகளுக்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும், பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரங்கள் உண்டு. அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தித்தான் உள்ளூரளவில் பல புத்தகங்கள் வாசகர்களுக்குக் கிடைக்காமல் தடுக்கப்பட்டன. இந்தியா உட்படப் பல நாடுகளிலும் இப்படி நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது.
தடைகளைத் தகர்த்து வரலாற்றில் இடம் பிடித்த சில புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இன்று முதலாவதாக–.
டு கில் எ மாக்கிங்பேர்ட் (ஒரு கிண்டல் பறவையைக் கொல்ல)

ஹார்ப்பர் லீ எழுதிய நாவல். 1960ஆம் ஆண்டில் ஜே.பி. லிப்பின்காட் அன் கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த ஆண்டிலேயே புலிட்சர் விருது பெற்றது. ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களின் நூலகங்களிலும் கல்விநிலையங்களிலும் அந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது.
நாவல் கூறும் கதை என்ன?
1930களில் அலபாமா மாநிலத்தின் மேகோம்ப் (அது ஒரு கற்பனையான ஊர்) நகரத்தில் நடக்கும் நிகழ்வுகள் கதையாகப் பின்னப்பட்டுள்ளன. கொள்கை நெறியுடன் தொழில் நடத்துபவர் வழக்குரைஞர் அட்டிகஸ். அவருடைய மகள் ஸ்கவுட்., மகன் ஜெம். கோடை விடுமுறையில் அந்த நகரத்திற்கு வரும் குழந்தைகள் அங்கே டில் என்ற சிறுவனுடன் நட்புக்கொள்கிறார்கள். அண்டை வீட்டுக்காரரான பூ ராட்லி வெளியே யாருடனும் பழகாதவர், வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பவர். ஊரில் அவரைப் பற்றிப் பல கட்டுக்கதைகள். அந்தக் கதைகளை முதலில் நம்புகிற பசங்கள் அந்தப் பக்கம் போகவே பயப்படுகிறார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
மயெல்லா ஏவெல் என்ற வெள்ளையினப் பெண்ணை வன்புணர்ந்ததாக டாம் ராபின்சன் என்ற கறுப்பின இளைஞன் கைது செய்யப்படுகிறான். நீதிமன்றத்தில் அவனுக்காக வாதாட அட்டிகஸ் நியமிக்கப்படுகிறார். விசாரணையில் டாம் குற்றவாளி அல்ல என்றும், மயெல்லாவின் தந்தை பாப் ஏவெல் கறுப்பினத்தவர்கள் மீதான வெறுப்புடன் பொய்யாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் என்றும் அட்டிகஸ் நிறுவுகிறார்.
உண்மையில் டாம் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தவன்தான். ஆனால் அவள்தான் அவனைப் பாலியல் இச்சையுடன் நெருங்குகிறாள். அதைப் பார்த்துவிடும் பாப் ஏவல், தன் மகள்தான் குற்றவாளி என்று வெளியே தெரிந்தால் தன் கௌரவம் குலைந்துவிடும் என்று அஞ்சுகிறான். ஏற்கெனவே அவன் கறுப்பின மக்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதி பகைமையோடு இருப்பவன்தான். மேலும், வெள்ளை இனத்திலேயே அவன் ஒரு கீழ்த்தட்டுச் சமூகத்தில் இருப்பவன். போலியாகக் குற்றம் சாட்டிக் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தன் சமூக நிலையை உயர்வாகக் காட்டிக்கொள்ள முயல்கிறான். அதற்கு அவனுடைய மகளும் உடன்படுகிறாள்.
இதையெல்லாம் அட்டிகஸ் தன் விசாரணைத் திறமையாலும் ஆதாரங்களாலும் நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். ஆனால், இன ஆணவம் கொண்ட வெள்ளையினத்தவர்கள் மட்டுமே இருக்கிற நடுவர்கள் (ஜூரி) குழு டாம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கிறது. மேல்முறையீடு முயற்சிகள் நடக்கிறபோதே சிறையிலிருந்து தப்பிக்க முயலும் டாம், சுட்டுக் கொல்லப்படுகிறான்.
முன்னதாக, ஒரு பாதிரியாரின் உதவியுடன், நீதிமன்றத்தில் கலப்பின மக்களுக்கான பிரிவில் அமர்ந்து விசாரணைகளையும் தீர்ப்பையும் கவனிக்கும் குழந்தைகள் அதிர்ச்சியடைகிறார்கள். இனவெறியின் கொடூரத்தையும் கேவலத்தையும் உணர்கிறார்கள்.
தனது பொய் அம்பலமானதால் ஆத்திரப்படும் பாப் ஏவல், குழந்தைகளைத் தாக்க முயல்கிறான். வெளியே வராதவனான பூ இப்போது வெளியே வந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறான்.
கொலை செய்யப்பட்ட பாப் ஏவெல் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. சிறுவன் ஜெம்தான் அதைச் செய்திருப்பான் என்று பலரும் நினைத்திருக்க, கொன்றவன் பூ ராட்லி என்று சரியாக ஊகிக்கிறார் நகரத் காவல்துறைத் தலைவர். அவனைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். உண்மையை மறைக்கிறார். மர்மக் கொலையாகவே அது போய்விடுகிறது.
இந்த நிகழ்வுகளையெல்லாம் சிறுமி ஸ்கவுட் சொல்வதாகவே இந்தக் கதை தொடங்கி முடிகிறது. மாக்கிங்பேர்ட் (கிண்டல் பறவை) எனப்படும் நம் ஊர் சிட்டுக்குருவிகள் போன்ற பறவையினம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்றன. மற்ற பறவைகளின் ஒலிகளைக் கேட்டு அதே போல் திரும்பவும் உச்சரிப்பதில், ராகம் போட்டுப் பாடுவது போல அந்த ஒலிகளைத் தொடர்ச்சியாக எழுப்புவதிலும் வல்லவை அந்தப் பறவைகள். யாருக்கும் கெடுதல் செய்யாமல், வெகுளித்தனமாகப் பேசுகிற, செயல்படுகிறவர்களை மாக்கிங்பேர்ட் என்று ஒப்பிடுகிறார் எழுத்தாளர்.
டாம் அப்படிப்பட்ட ஒரு வெகுளிதான். அந்த பூ ராட்லியும் கூட ஒரு மாக்கிங்பேர்ட் எனலாம். பொய்யான குற்றச்சாட்டும், வன்மமான இனப்பாகுபாடும் சேர்ந்து எளியவர்களையும், சமூகத்தின் உண்மையான மாண்பையும் ஒடுக்குகின்றன என்ற பொருளில், நாவலுக்கு இந்தத் தலைப்பு மிகவும் பொருந்துகிறது. இதில் நூலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் என்ன பிரச்சினை?
1930ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இனவெறி எந்த அளவுக்கு இருந்தது என்று அப்பட்டமாகப் பேசுகிறது நாவல். உழைப்பாளி மக்கள் சுரண்டப்படுவது பற்றிக் கூறுகிறது. பெண்கள் குறித்த ஆண் வக்கிரங்களைச் சாடுகிறது.
ஆனால், கதாபாத்திரங்களின் உரையாடல்களில் சொச்சையான சொற்கள் நிறைய இருக்கின்றன. இது வளரும் தலைமுறைகளுக்கு ஆகாது என்று சிலர் விவகாரமாக்கினார்கள். உண்மையில் கசப்பான வரலாறுகள் நினைவூட்டப்படுவதை அவர்கள் விரும்பாததே தடைக்குக் காரணம் என்று நாம் புரிந்துகொள்ளலாம். காலப்போக்கில் தடைகள் நீர்த்துப்போயின என்றாலும், இப்போதும் சில பகுதிகளில் நீடிக்கின்றன. ஆனால் புத்தகம் விற்பனைக் கூடங்களிலும் மற்ற நூலகங்களிலும் இப்போது இணைய வழியாகவும் தாராளமாகக் கிடைக்கிறது.
“ஒரு பெண்ணாக, மனித உரிமைகளுக்காக நிற்பவளாக, இனப் பாகுபாட்டின் இழிவை உலகமறியச் செய்ய விரும்பினேன். அதற்காகவே இந்த நாவலை எழுதினேன்,” என்றார் ஹார்ப்பர் லீ.
இந்த நாவலுக்குப் பிறகு புதிய நாவல் எதையும் எழுதவில்லை அவர். ஏனென்று கேட்கப்பட்டபோது, ”அந்த நாவலிலேயே நான் சொல்ல நினைத்த அனைத்தையும் சொல்லிவிட்டேன். அவற்றையேதான் திரும்பத் திரும்பச் சொல்வேன்,” என்றார். தடை நடவடிக்கைகள் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்தியிருந்தன. ஆயினும் நாவல் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்று வந்தார்.
தடைகளை மீறி நாவலுக்குக் கிடைத்த வரவேற்பும் விருதும் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து, அது போல இன்னொன்று எழுத முடியுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாலும் அவர் தொடர்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆயினும், இதை எழுதுவதற்கு முன் தயாரித்து வைத்திருந்த, இதன் முதல் பாகம் என்று சொல்லத்தக்க ஒரு நாவலை (கோ செட் எ வாட்ச்மேன்) 2015இல் வெளியிட்டார். அதற்கடுத்த ஆண்டில் தமது 89ஆவது வயதில் காலமானார்.
இன்றும் அமெரிக்காவில் பல வகைகளில் இனப் பாகுபாடுகள் தொடரும் நிலையில் களப்போராளிகளுக்கும் இந்த நாவல் ஒரு கைவிளக்காக இருக்கிறது.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.