” மச்சான் இந்த பையனப் பாரேன் புடிச்ச நடிகை ரேவதிங்கறான்”
ராகிங்கில் சீனியர் ஒருவன் இவனைக் கேவலமாக பேசியதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது, ரோஜா, மீனா, ரம்பாயுகத்தில் ரேவதியைப் பிடிக்குமென அவன் சொன்னது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் பட்டிருக்கும்.
” நீ வேற, இவன உனக்குப் பிடிச்ச பொண்ணுட்ட பயோடேட்டா வாங்கிவரச்சொன்னா, அந்த பொண்ணும் பேவரைட் நடிகைன்னு ரேவதியத்தான் எழுதியிருக்கு , இவங்க ரெண்டு பேரும் சரியான மாங்காவா இருக்காங்க” என்று நக்கலடித்தான் இன்னொரு சீனியர்.
இவன் பயொடேட்டா வாங்கி வந்த பெண் பிடித்த பெண் என்றெல்லாம் இல்லை, அவளை முழுதாக பார்க்கக்கூட இல்லை, அந்த பெண் மட்டுந்தான் வகுப்புத்தோழர்கள் யார் கேட்டாலும் முகம் சுழிக்காமல் மாய்ந்து மாய்ந்து பயோடேட்டா எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ரேவதி பிடிக்குமென சொல்லியிருந்ததால் இயற்கையாகவே அவனுக்குப் பிடித்தமான பெண்ணாக மாறிப்போனாள்.
அதற்கு பின் நாள்பட நாள்பட ரேவதியைப்பற்றி நிறைய அவனும் அவளும் பேசினார்கள். ரேவதியைப்பற்றி அலசித்தள்ளினார்கள். காலப்போக்கில் ரேவதி நடித்த படத்தை இவன் பார்க்கும்போதெல்லாம் அவளை நினைத்துக் கொள்வான். அவள் பார்க்கும்போதெல்லாம் இவனை நினைத்துக் கொள்வாள். ஆனால் கடைசிவரை
இருவரும் இணைந்து ஒரு ரேவதி படம் கூட பார்க்கவில்லை.
ஏறக்குறைய ‘ரேவதித்தனமாகத்’ தான் இருவரும் பழகினார்கள்.
அதனால் தான் காலத்தின் கட்டாயத்தால் பிரிய நேர்ந்தபோது கூட அதிகம் அவதிப்படவில்லை. யார் ரேவதிப்படம் எப்போது பார்த்தாலும் வழக்கம் போல் அடுத்தவரை நினைத்துக்கொள்ள வேண்டும், அதுதான் இருவருக்கிடையிருந்த நட்பா காதலாவென தெரியாமலே பிரிந்து கொண்ட உறவிற்கு செலுத்தும் மரியாதை என்ற உறுதியுடன் பிரிந்துகொண்டார்கள்.
காலச்சக்கரத்தின் சூழற்சியில் பல்லாண்டுகளுக்கு பிறகு தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளோடு ஒரு கல்லூரி கெட்டுகெதரில் ஒருவரையொருவர் முதன்முதலாக சந்தித்தனர்.
அவளைப்பார்த்தவுடன் எப்படி இருக்கிறாய் என்றெல்லாம் நலம் விசாரிக்காமல் கூட
” இப்பலாம் ரேவதி படம் வர்ரதில்லையே, யூடுப்ல பழைய படங்க பாக்கறியா, கடைசியா பவர்பாண்டி பாத்தப்ப உன்னைய அவ்வளவு நெனெச்சிட்டேன் தெரியுமா, ரேவதி இப்பலாம் நெறய நடிக்கறதில்லையே..” என்று வழவழவென்று பேச ஆரம்பித்தான்.
அவள் மேலும் கீழும் பார்த்து ” டேய் என்னடா இவ்வளவு நாள் கழிச்சு பாக்கறோம் , சினிமா பத்தி பேசற, கம் ஆன் மீட் மை டாட்டர் ரேவதிஸ்ரீ, டூயிங் ஹெர் மெடிசன், செகண்ட் ஹியர், அங்கிள்க்கு கை கொடுறா” என்று வெளுக்க ஆரம்பித்தாள்.
அவள் நடிக்க ஆரம்பித்திருக்கிறாள்
ரேவதியைப்போலவே!
எழுதியவர்
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Nejamalumae Boomer Uncle tha sir.. Pavam….
நிலைக்குத்தி போன
நினைப்போடு ஆணும்
நிலை கடந்து போன
வாழ்வோடு பெண்ணும்
பழகிய நாள்களைத்
தூசுதட்டும் விதம்
அருமை.