பாட்டல் ராதா (Bottle Radha) : திரைப்படம் விமர்சனம்
கொஞ்சம் தடுமாறினாலும் அழுகைப் படம் என்றோ பாடம் எடுக்கும் (preachy) படம் என்றோ முத்திரை பதிந்து விடக்கூடிய கருப்பொருள். ஆனால் மிகவும் வித்தியாசமாகக் கையாண்டிருக்கிறார்கள்.
ராதாமணி குடிகாரன் என்பதைத் தாண்டி எவ்வளவு சிறந்த கட்டடக் கலைஞன், அவனது உழைப்பையும் திறமையையும் வீணடிக்கிறானே என்ற அங்கலாய்ப்பு ஆரம்பத்திலேயே மனதில் பதிந்து விடுகிறது.
குடிப்பழக்கம் என்பது ஒரு தனிநபரின் குணக்கேடும் பொறுப்பின்மையும் மட்டுமல்ல, ஒரு அரசின் அக்கறையின்மையும் சமூக ஏற்றத் தாழ்வுகளும் இணைந்து உழைக்கும் மக்களின் மீது காலங்காலமாய்த் திணித்துக் கொண்டிருக்கும் ஒரு சீர்கேடு.
அதனின்று வெளிவர இயலாமல் நோய்வாய்ப்பட்டுப் போகும் ‘குடி’ மக்கள் திருந்த வேண்டுமென்று மனதார விரும்பினாலும் இயலாமல் போகும் நுட்பமான காரணங்களைப் பொதுச் சமூகம் புரிந்து கொள்ளும் படி சொல்லி இருப்பது சிறப்பு.
கூலித் தொழிலாளர்களும் முறைசாரா உழைப்பில் ஈடுபடுபவர்களும் மட்டுமல்ல, ஐடி ஊழியர்களும் கூட 14, 15 மணிநேர வேலைப் பளுவாலும் மன அழுத்ததாலும் குடி நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு ஃபேஷனுக்காகக் குடிக்கத் தொடங்கும் எலிட் மனப்பான்மைக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு சபாஷ்.
புத்தர் மறுவாழ்வு மையக் காட்சிகள் எதார்த்தமாக அமைந்திருந்தாலும் நகைச்சுவையும் மிளிரும்படி எடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் கூட அந்தக் காட்சிகளை விரிவாக அழுத்தமாக எடுத்திருக்கலாமோ?

மனைவி பாத்திரத்தைச் சித்தரித்திருக்கும் விதத்தில் மட்டுமே படம் பல மைல்கற்களை எட்டி விட்டது. மனைவி வந்து விடுவாளா என்று கவலையுடன் கேட்கும் கேள்விக்கு அசோக் சொல்லும் பதில் அற்புதம். செடி + நாய்
பாத்திரப் படைப்புகளும், நடிகர் தேர்வுகளும் கச்சிதமாக இருந்தன. அந்த சின்னப் பையன் ரெட் இடைவேளைக்கு முன்பு மிர்ர்ர்ரட்டி விட்டார்!!! ஒரு சின்னஞ்சிறிய காட்சியில் போதைப் பொருளின் கொடூர இருட்டு உலகத்தைக் கண் முன் காட்டி விட்டார் இயக்குநர்.
பாடல்கள் எப்போது வந்து எப்போது முடிகின்றன என்பதே தெரியாமல் கதையோடு இயைந்து இருந்தன. இசை நன்று. குடிப்பவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பார்க்க வேண்டிய படம்.
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
எழுதியவர் :

தீபா லட்சுமி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

