நிதிக்கூட்டாட்சியைத் தகர்க்கும் மோடி- எடப்பாடி கூட்டணி..! | Modi-Edappadi Alliance | என்.குணசேகரன் எழுதிய அரசியல் கட்டுரை - www.bookday.in

நிதிக்கூட்டாட்சியைத் தகர்க்கும் “மோடி- எடப்பாடி” கூட்டணி..! – என்.குணசேகரன்

நிதிக்கூட்டாட்சியைத் தகர்க்கும் மோடி- எடப்பாடி கூட்டணி!

– என்.குணசேகரன்

தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து திமுக அரசு மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்

“திமுக 5 ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கியது – ஸ்டாலினின் “ஒரே சாதனை”

“தமிழ்நாடு இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம்….திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின்…”

“மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் திமுகவின் சாதனை. எதிர்கால சந்ததியினரை கடன்காரர்களாக ஆக்கியுள்ளனர்”

“…..அதிமுக ஆட்சி முடிவடைந்தபோது மொத்தக் கடன் ₹4.85 லட்சம் கோடியாக இருந்தது. திமுக ஆட்சியில் இது ₹10 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துவிட்டது’”

இந்தப் பேச்சுக்களில் அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையை எடப்பாடி மிகவும் ‘புத்திசாலித்தனமாக’ மறைத்து வருகிறார்.

ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி வராததால் கடன் சுமை அதிகரித்துள்ளது என்ற உண்மையை பேச அவருக்குத் துணிவில்லை.மோடி – அமித்ஷாவிற்கு எடப்பாடி அடிமையாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு சொன்னால் எடப்பாடி ஆவேசப்படுகிறார். தமிழக நலனை பலி கொடுத்தாலும் பரவாயில்லை;ஒன்றிய அரசின் போக்கை கண்டிக்கக் கூடாது என்று மௌனமாக இருப்பதால் அவர் மோடிக்கு அடிமையாக இருக்கிறார் என்பதுதானே உண்மை?

தமிழ்நாட்டிற்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறோம் என்ற வகையில் பாஜகவினர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றனர். நிதியே தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்பதா தற்போதுள்ள பிரச்சனை? சட்ட அடிப்படையிலும் நிதி கூட்டாட்சி கோட்பாடுகள் அடிப்படையில் வரவேண்டிய நிதி தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதா என்பது தான் முக்கியப் பிரச்சினை.

நிதி பகிர்வில் தொடரும் அநீதி!

தமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று. தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறைகளில் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலமாக உள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2025-26ஆம் நிதியாண்டில் சுமார் ₹35.68 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், மாநிலத்தின் கடன் சுமை ₹10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.இது முக்கியமான பொருளாதார சவாலாக உள்ளது.

உண்மையில், ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியைத் தராமல் இருப்பது, நிதிப் பகிர்வில் அநீதி, ஜிஎஸ்டி இழப்புகள் மற்றும் ஒன்றிய திட்டங்களுக்கான நிதி தாமதம், செஸ்-சர்சார்ஜ் பங்கீடு மறுப்பு ஆகியவை தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

சென்னை மெட்ரோ திட்ட நிதியை மாநில அரசும் ஒன்றிய அரசும் 50:50 அடிப்படையில் ஏற்க வேண்டும். ஆனால்,₹9,523 கோடி சென்னை மெட்ரோ ரயில் திட்டம் -IIக்காக ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இப்படி வரவேண்டிய தொகை வரவில்லை என்றால் கடன் சுமை அதிகரிக்கத் தானே செய்யும் ?இதை ஏன் எடப்பாடி உணரவில்லை?

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் அதிகரித்துள்ளன. 2025-26இல் வருவாய் பற்றாக்குறை ₹69,219 கோடியாக உயர்ந்தது. இருப்பினும்,2026-27இல் இது ₹48,696 கோடியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 45.6% அளவில் மட்டுமே உள்ளது.மாநிலம் தனது சொந்த வரி வருவாயை சார்ந்து மட்டும் செயல்படும் நிலை உள்ளது .ஒன்றிய அரசின் வரி பங்கு மற்றும் மானியங்கள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன. ஒன்றிய அரசின் நிதிப் பங்கினை அதிகரிக்க வேண்டும் என்று எடப்பாடி என்றாவது குரல் கொடுத்தாரா?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-யில் தமிழ்நாடு சுமார் 9% பங்களிப்பு செய்கிறது. ஆனால், மத்திய வரி பங்கில் அதற்கான நியாயமான பங்கு கிடைப்பதில்லை. ஒரு ரூபாய் வரி வருவாய் கொடுக்கும் தமிழ்நாட்டுக்கு வெறும் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. இந்த அநீதியை ஒழித்து, மாநிலத்திற்கான வருவாயை முழுமையாக வழங்கினால் மட்டுமே மாநிலத்தின் நிதி நிலைமை மேம்படும்.

2016-17இல் மத்திய நிதி உதவி ஜிஎஸ்டிபி(GSDP)-யில் 3.41% ஆக இருந்தது. 2025-26இல் இது 1.96% ஆகக் குறைந்துள்ளது. இது பாஜக ஒன்றிய அரசு இழைத்துள்ள பெரும் அநீதி.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்களின் வரி உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு காலம் முடிவடைந்த பிறகு, ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு (rate rationalisation) காரணமாக தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ₹9,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அரசு இதற்கான இழப்பீட்டை வழங்கவில்லை. இது மோசமான ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை.

மத்திய திட்டங்களுக்கான நிதி

சமக்ரா சிக்ஷா (Samagra Shiksha), ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission), நிதி ஆணைய மானியங்கள் போன்ற திட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமலாக்கி இந்தித் திணிப்பை ஏற்றுக் கொண்டால்தான் நிதி என்று அடாவடி செய்கின்றனர்.இயற்கைப் பேரிடர்களுக்கான தேசிய பேரிடர் நிவாரண (NDRF) நிதியும் முழுமையாக வழங்கப்படவில்லை. இவற்றில் எல்லாம் தமிழ்நாடு பெருமளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

செஸ், சர்சார்ஜ் வருவாயை நிகர வரி வருவாயில் சேர்க்காமல் ஒன்றியம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிக்கும் மற்றொரு அநீதி.

ஒன்றிய அரசு வசூலிக்கும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) பகிர்ந்தளிக்கப்படும் முறையில் ஏற்படும் சிக்கல்கள் தமிழ்நாட்டிற்கு நிதி இழப்பை ஏற்படுத்தி நிதி நெருக்கடியை உருவாக்குகிறது.ஐஜிஎஸ்டி என்பது தற்காலிகமாக ஒன்றிய அரசின் கணக்கில் இருக்கும் ஒரு நிதி. இது மாநிலங்களுக்கு உடனடியாகப் பிரித்து வழங்கப்பட வேண்டும். 2025 ஏப்ரலில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய ₹1,709 கோடி மறுக்கப்பட்டது.

இதுபோன்று வர வேண்டிய வருவாய் திடீரெனக் குறையும்போது, அரசு ஏற்கனவே திட்டமிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்குப் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மாநில அரசு தனது அன்றாடச் செலவுகளுக்கும், வட்டி கட்டவும் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.

ஒன்றிய அரசு கூடுதல் கடன் வாங்க அனுமதி அளிக்கும்போது, மின்வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பை மாநில அரசே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறது. மின்வாரிய இழப்புகளை ஈடுகட்டப் பல்லாயிரக்கணக்கான கோடி பெரும் தொகையை மின்வாரியத்திற்காக மாநில அரசு ஒதுக்கும்போது, கல்வி, மருத்துவம் அல்லது சாலை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளுக்குச் செலவிட வேண்டிய நிதி முடக்கப்படுகிறது.

நிதி கமிஷன் ஒதுக்கீடு

“தமிழகத்திற்குக் கிடைக்கும் பகிர்வு சதவீதம் கடுமையாகக் குறைந்திருக்கிறது. கிடைமட்டப் பகிர்வில் தொகுப்பு நிதியில் தமிழகத்தின் பங்கு ஒன்பதாவது நிதிக் கமிஷனில் 7.932%, இது தேய்ந்து போய் 15வது நிதிக்கமிஷனில் 4.077%, இது படிப்படியாகத் தேய்ந்திருக்கிறது. ஒன்பதாவது நிதிக்கமிஷனின் பெற்ற விகிதத்தைக்கூட 15வது நிதிக்கமிஷனில் பெறாததால் தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து அறுபத்தி மூவாயிரம் கோடிகள்.”

( -” ஓரவஞ்சக நிதி அரசியலை முறியடிப்போம்”- எஸ் .விஜயன்). இப்படிப்பட்ட பெரிய இழப்பு தொடரும் போது கடன் சுமையில் மாநிலம் சிக்குகிற நிலை ஏற்படுகிறது என்கிற உண்மை முதலமைச்சராக இருந்த எடப்பாடிக்கு ஏன் தெரியாமல் போனது?

ஜிஎஸ்டி இழப்பீடு, மத்திய திட்ட நிதி உடனடி விடுவிப்பு, செஸ்(cess )மற்றும் சர் சார்ஜ் ( surcharge)-கள் பகிர்வு ஆகியவை அவசியம். மாநிலங்களின் உரிமைகளை மதிக்கும் உண்மையான நிதிக் கூட்டாட்சி முறை இல்லாவிட்டால், தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் நிதி நிலைமை மேலும் பாதிக்கப்படும்.

வரி வருவாய் பகிர்வு 50% உயர்த்துக!

சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டுவது போல், ஒன்றிய அரசு மொத்த வரிவருவாயில் தற்போது 41% மட்டுமே பகிரப்படுகிறது. இதனை 50 சதவீதமாக உயர்த்தி மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் நிதி பகிர்வு அநீதிகளால் மாநிலம் தனது சொந்த வருவாயை அதிகரித்து, நலத்திட்டங்கள், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது.இதனால், கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 45.6% அளவில் உள்ளது. ஆனால், மத்திய வரி பங்கு மற்றும் மானியங்கள் போதுமானதாக இல்லை.

ஒன்றிய அரசு நியாயமான நிதி பகிர்வை உறுதி செய்ய வேண்டும். GST இழப்பீடு நீட்டிப்பு, மத்திய திட்ட நிதி உடனடி விடுவிப்பு, செஸ் மற்றும் சர் சார்ஜ்-கள் பகிர்வு ஆகியவை அவசியம். இவையே மாநிலங்களின் கோரிக்கைகள்.தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த கோரிக்கைகளை ஏற்பதற்கு அதிமுக-பாஜக கூட்டணி தயாராக இல்லை. மாநிலங்களின் உரிமைகளை மதிக்கும் உண்மையான கூட்டாட்சி முறை இல்லாவிட்டால், தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் நிதி நிலைமை மேலும் பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியின் அடித்தளம். இதை உணராமல் கூட்டாட்சியை சீரழித்து , தமிழ்நாட்டை பழிவாங்கத் துடிக்கும் பாஜக அதிமுக கூட்டணியை மக்கள் முறியடிப்பார்கள்!

========================================================.

எழுதியவர்:

– என்.குணசேகரன்
மத்தியக்குழு உறுப்பினர் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *