தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் – 10
பாலுட்டுவதன் நிறைவாக…
நாம் பாலூட்டிக் கொண்டிருக்கையில் குழந்தையின் முகத்தைப் பார்த்தபடியும், அவர்கள் பாலருந்திக் குடிக்கிற பேரழகை இரசித்தபடியும், அவர்களின் ஒவ்வொரு அசைவையும் மனதிற்குள் பொக்கிஷமாய் சேர்த்து வைத்தபடியும் இருப்போம். அப்போது பாலருந்தித் தீர்க்கமற வயிறு நிறைந்துவிட்ட பின்பாக அவர்களாகவே போதுமென்கிற உணர்வுடன் மார்பிலிருந்து வாயினை விலக்கிக் கொள்வார்கள். அச்சமயத்தில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர மார்பிலிருந்து அவர்களை விடுவிப்பதில் அவசரம் காட்டக்கூடாது.
அதேசமயத்தில் பிள்ளைகள் துவக்கத்தின் போது ஆவலாதியாக குடித்துக் கொண்டிருக்கையில் இடையிடையே சில நேரங்களில் காற்றையும் தாய்ப்பாலோடு சேர்த்து விழுங்கிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்போது மார்புக் காம்போடு சேர்த்து சரியாக வாயினைப் பொருத்திராத இடைவெளியில் காற்றானது உள்நுழைந்து அவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடும். இதனால் வயிற்றின் இரைப்பையில் தாய்ப்பால் போய் நிறைய வேண்டிய இடத்தில் கூடுதலாக காற்று போய் அடைத்துக் கொள்வதால் பிள்ளைகளும் நிறைவாகப் பாலருந்த முடியாமல் அரைகுறை வயிற்றோடு பாலருந்துவதை நிறுத்திக் கொள்வதுண்டு.
இப்படிக் காற்றினால் நிறைகின்ற வயிற்றினால் பிள்ளைகளுக்கு வயிற்றுக் கோளாறு உண்டாகி எந்நேரமும் வயிற்றை நெளித்துக் கொண்டு அழுதபடியே இருப்பார்கள். இதைத்தான் நாம் போய் பாட்டிகளிடம் ‘தொக்க எடுக்கிறோம்‘ என்று குழந்தையின் வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கிறோம். இதற்கு கிரைப்வாட்டரையும் மருந்துக் கடைகளாக வாங்கி பிள்ளையின் வயிற்றுக்கு அளித்தபடியே இருக்கிறோம். ஆனாலும் இதை நாம் எளிய முறையிலேயே சரிசெய்துவிடுகிற நுட்பங்கள் நம்மிடமே இருக்கத்தான் செய்கின்றன.
மார்பிலே பாலருந்திய பின்பாக காம்பினைக் காயப்படுத்திடாமல், குழந்தையையும் சிரமப்படுத்திராமல் மார்பிலிருந்து அவர்களை விலக்குவதும்கூட ஒரு தனிக் கலைதான். பிள்ளைகள் சரியாக மார்பைக் கவ்விக் குடிக்கவில்லை என்றாலோ, அவர்களால் சரிவர மார்பில் வாயினைப் பொருத்த முடியவில்லை என்றாலோ, அவர்களுக்குத் தாய்ப்பால் சரியாகக் கிடைக்கவில்லை என்றாலோ, காற்றைக் காற்றைக் குடித்துவிட்டு வயிற்றை அதிலே நிறைத்துக் கொள்கிறார்கள் என்றாலோ, அப்போது பாலூட்டுகிற தருணத்தின் பாதியிலேயே அதை நாம் நிறுத்திவிட்டு மறுபடியும் மார்பிலே போட்டு பாலூட்ட வேண்டியிருக்கும்.
மார்பிலிருந்து பிள்ளையின் வாயினைப் பிரித்தெடுப்பதென்று கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். பசியில் வலிந்து அவர்கள் நம் மார்பைச் சவைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று போய் பாதியில் அவர்களை அகற்றும் போது பந்தியிலிருந்து பாதியில் எழச் சொல்வதைப் போன்ற ஏக்கமும் ஏமாற்றமும் அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும். ஆகையால் தான் மார்பினை வாயிலிருந்து வெடுக்கென்று அவசரகதியில் பிடுக்குவதைப் போலச் செய்யாமல் நிதானமாக விலக்குவதற்கு முயற்சி செய்ய அறிவுறுத்துகிறார்கள்.
அதாவது நாம் குழந்தையை ஒரு கையாலே தாங்கிப் பிடித்திருப்போம் தானே. அப்போது தாய்ப்பாலூட்டுவதன் துவக்கத்திலேயே மறுகையினால் மார்பைப் படித்து குழந்தையின் வாயில் சரியாகப் பொருந்தச் செய்துவிட்ட பின்பாக இரண்டு கைகளையும் சேர்த்தணைத்து பிள்ளையைத் தாங்கிப் பிடித்திருப்போம். இப்போது மார்பிலிருந்து குழந்தையை விடுவிப்பதற்கு மீண்டும் அதேகையை நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
அதாவது குழந்தையின் பிடிமானத்திலிருந்து மறுகையினை விடுவித்த பின்பாக தற்போது பாலருந்திக் கொண்டிருக்கிற மார்பிற்கு வந்து காம்பைக் கவ்வியிருக்கிற குழந்தையின் கடைவாயிற்கு அருகாமையில் சற்று தள்ளியபடி விரல்களால் மார்பை மெல்ல அழுத்திக் கொள்ள வேண்டும். அப்போது குழந்தையின் வாயிற்கும் மார்பிற்குமிடையே கிடைக்கிற இடைவெளியில் நம் சுண்டுவிரலை வாயிற்குள்ளாக நுழைத்து காம்பினை உதட்டிலிருந்து விடுவிடுக்க வேண்டும். அந்தக் கணத்தில் குழந்தையின் நாடியை கீழ்நோக்கித் தளர்த்தியபடி மார்பிலிருந்து மெல்ல அவர்களை விடுவித்துக் கொள்ள முடியும்.
ஆனால் அவர்களை மார்பிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கவோ, தலையைப் பிடித்துத் தள்ளுவதோ போலச் செய்யமால் நிதானமாகச் செய்வதன் வழியே காம்பினைச் சேதப்படுத்திராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். குழந்தைகளையுமே விரக்தியின் நிலைக்கு எடுத்துச் செல்லாமல் அடுத்தகட்ட தாய்ப்பால் புகட்டுகிற நிகழ்விற்கு உடனடியாகத் தயார்படுத்திக் கொள்ளவும் முடியும்.
சில நேரங்களில் பிள்ளைகள் எவ்வளவு தான் தாய்ப்பால் குடித்திருக்கிறார்கள் என்பதை நம்மால் கணக்கிட்டுச் சொல்லவும் முடியாது. அதேசமயத்தில் வாயில் நிறைந்திருக்கிற தாய்ப்பால் தொண்டைக்குழிக்குள் இறங்கி இரைப்பையை அடைந்துவிட்டதையும் உறுதிப்படுத்த முடியாது. மேலும் அவர்களுக்கு இரைப்பையின் மூடுகுழாய்ப் பகுதி சரிவர வளர்ச்சியடைந்திராத காரணத்தினால் குடித்த தாய்ப்பாலும் மேலேறி புரையேறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய காரணத்தால் பிள்ளைகள் பாலருந்திய பின்பாக அவர்களைத் தூக்கி தோளில் போட்டு முதுகை மெல்லத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனை தாயென்று இல்லாமல் கணவரோ, உறவினர்களோகூட உடனிருந்து உதவியைச் செய்யலாம்.
இப்படிச் செய்வதால் காற்றைக் குடித்த பிள்ளைகள் அதனை இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேற்றச் செய்வார்கள். மேலும் தொண்டைக்குள்ளிருந்த தாய்ப்பாலும் இரைப்பைக்குள் இறங்கி அவர்களது உடலைத் தேற்றுவதற்கான வேலையைப் பார்க்கத் துவங்கிவிடும். இப்படிக் காற்றை மட்டும் நீக்கிவிட்ட பின்பாக இருக்கக்கூடிய அரைகுறை வயிற்றால் மீண்டும் அவர்களுக்கு உடனே சீக்கிரத்தில் பசிக்கத் துவங்கிவிடும். அப்போது நாம் மறுபடியும் மடியிலே போட்டுத் தாய்ப்பாலூட்டத் துவங்கலாம். இதனால் பிள்ளைகளும் நன்றாக, அதிகமாக பாலருந்திக் குடித்து ஆரோக்கியமாக வளருகிறார்கள்.
– டாக்டர் இடங்கர் பாவலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

