தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
16. தாய்ப்பாலூட்டுவதை எப்போது நிறுத்துவது
பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வளர வளர பால்குடியை எப்படி மறக்கடிப்பது என்கிற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் சாலையோர கடை நிறுத்தங்களில் தாய்மடியை முட்டி முட்டி மண்டியிட்டு பாலருந்திக் கொண்டிருக்கும் வளர்ந்த ஆட்டுக்குட்டிகளையும், பசுவின் கன்றுகளையும் பற்றிச் சிந்திக்கிற போது நாம் மட்டும் ஏன் குழந்தைக்குப் பாலூட்டுவதைக்கூட சிரமம் தரக்கூடிய மகப்பேற்றின் ஓர் அங்கமாக பார்க்கத் துவங்கிவிட்டோம் என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.
இச்சமயத்தில் இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பாக நம் பால்யகாலம் எழுப்புகிற புதிர் கேள்விக்கு விடை தேடியாக வேண்டும். கிராமத்துத் திடலில் புழுதி பறக்க ஓடியாடித் திரிந்த பால்ய கால நினைவுகளில் நம் வயதையும் மீறிய பிள்ளைகள் பள்ளிகளில், தெருக்களில் முன்பற்கள் துருத்தியபடியிருக்க, விரல் சுவைத்தபடியே திரிவதை அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்திருப்போம். ஆனால் இப்போது ஏன் நம்மால் விரல் சுவைத்துத் திரிகிற பிள்ளைகளை வீடுகளில், சாலைகளில், பள்ளிகளில் எங்குமே நாம் காண முடிவதேயில்லை என்பதைப் பற்றி நாம் எப்போதாவது அக்கறையுடன் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?
சட்டென்று நம்மோடு பால்ய காலங்களில் விதவிதமாக விரலைச் சவைத்தபடி சுற்றித் திரிந்த, அப்படி விரலைச் சவைத்தபடி திரிவதால் கேலி கிண்டலுக்கு ஆளாகிற, அப்படி எந்த விமர்சனத்திற்கும் தலைசாய்க்காமல் தன்போக்கில் விரலை உதட்டிற்குள் திணித்து மேற்சட்டையில் எச்சில் வடித்தபடி தெருக்கிளில் உலாவுகிற, அப்படித் திரிகிற பிள்ளையின் வாயிலிருந்து விரலை விடுவிப்பதற்காக வற்றல், மிளகாய், குமட்டிக்காய் என்று கசப்பு, உரப்பு என விரல்களில் தடவித் தடவி அப்பழக்கத்தைப் போக்க தெருதெருவாகத் துரத்துகிற, அவ்வாறு துரத்திப் பிடிக்க ஊர்ச் சிறுவர்கள் பெரியவர்களென திரண்டு அதனையே ஒரு திருவிழாக்கோலமாக ஆக்கிவிடுகிற நிகழ்வுகளெல்லாம் நம் மனக்கண் முன்னே வந்து போகிறதல்லவா!
ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைகளும் சமத்தாக பள்ளியில் வாத்தியார் விரலை அமைதி காக்கச் செய்கிற அரிதான பொழுதைத் தவிர கைகள் வாயிற்குச் செல்வதேயில்லை. அப்படியே தப்பித்தவறி விரல் வாயருகே சென்றாலும்கூட ஆரோக்கியத்தைக் காரணம் காட்டி, சீ..! அழுக்கு என்று கைகளைக் கழுவிக் கழுவி கைரேகை தீர சுத்தம் செய்கிற பெற்றோர்களும் இப்போது நிறைய வந்துவிட்டார்கள். சரி, அதுபோகட்டும். பிள்ளைகள் இப்போது விரல் சுவைப்பதேயில்லை என்பதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டால் எப்போது பிள்ளைக்கு பால்குடி மறக்கடிக்கலாம் என்பதற்கான தேடலுக்கு விடையும் கிடைத்துவிடும்.
பெண் திருமணமாகி குழந்தைப்பேறு பெறுவதென்பது எப்படி அவ்வளவு முக்கியத்துவத்தோடு இச்சமூம் முன்பு பார்த்ததோ அதேயளவு இடத்தை பாலூட்டுவதற்குமே கொடுத்திருந்தது. அப்போது பிள்ளைக்குப் பாலூட்டுவதென்பது பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. கருவில் வளருகிற பிள்ளையை இம்மாதம் வரையிலும் வளர்ந்தால் போதுமென்று பாதியிலேயே பிரசவித்து வெளியே எடுக்க முடியுமா? அதேபோல மார்பிலிட்டு பாலூட்டுகிற காலத்திலும் இவ்வயது வரையிலும் பாலூட்டினால் போதுமென்று நிறுத்தவும் முடியாது, கூடாது.
அப்போதெல்லாம் பிள்ளைக்கு ஐந்து வயது, ஆறு வயது வரையிலும் பாலூட்டுவது என்பதெல்லாம் மிகவும் சர்வ சாதாரணமாக பார்க்கப்பட்டது. பிள்ளைகள் ஓடியாடி விளையாடித் திரிகிற போது தெருவில் புழுதியில் உழன்றபடியே வந்து அம்மாவின் மடியில் உட்கார்ந்து பாலருந்திவிட்டுப் போய் மறுபடியும் விளையாடுகிற ஒன்றை வெகு இயல்பாகவே அப்போதெல்லாம் காண முடியும்.
அதாவது பிள்ளைகளுக்கு நம் தாயின் மார்பிலே பாலருந்திக் குடிக்கிறோம் என்கிற தன்னுணர்வு பெறுகிற வயதைக் கடந்தும் அப்போது தாய்மார்கள் பாலூட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவர்கள் மார்பின் காம்பைக் கவ்விச் சுவைத்த பழக்கத்தை சுலபத்தில் விட முடிவதில்லை. ஆகையால் காம்பைப் போலவே தன்மையுடைய விரல்களை வாயில் சவைத்தபடியே அதன் நினைவில் பாலூட்டுகிற மற்ற கணங்களில் திரிந்து கொண்டிருப்பர். ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைக்கு மார்பில் பாலூட்டுகிற உணர்ந்து நினைவில் பதிவதற்கு முன்பாகவே புட்டிப்பாலிற்கும் இணை உணவிற்கும் குழந்தைகள் பழக்கமாகிற காரணத்தினால் இப்போது வயதாகிய பின்னரும்கூட விரல் சூப்பிக் கொண்டிருக்கிற, அதனால் தெத்துப்பற்களோடு திரிகிற பிள்ளைகளை நாம் பார்க்க முடிவதில்லை.
ஆக, தாய்ப்பாலை நாம் முழுவதுமாக குழந்தைகளுக்குப் புகட்டுவதில்லை என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறதல்லவா! ″என்னால் இனியும் உடல் நோக தாய்ப்பால் புகட்ட முடியாது, நான் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் புட்டிப்பாலுக்குப் பழக்கப் போகிறேன், பிள்ளையை உடனிருந்து பார்த்துக் கொள்ள யாருமில்லை என்பதால் பால்குடியை நிறுத்தப் போகிறேன், வீட்டு வேலைகளை என்னால் சரிவர கவனிக்க முடியவில்லை என்பதாலே இதைச் செய்ய வேண்டியதிருக்கிறது, சீக்கிரமாக பால்குடியை மறக்கடிக்காவிட்டால் பின்னாளில் நிறுத்துவது கடினம்″ என்ற எத்தனையோ நமக்கான காரணங்களைச் சொல்லி குழந்தைக்கான தாய்ப்பாலை மறுப்பது என்பதும்கூட ஒரு குற்றம்தான், அடிப்படி மனித உரிமை மீறல் தான்.
எனக்கு வேண்டிய வரையிலும் தாய்ப்பாலைக் குடித்துக் கொள்வேன்! என்பது ஒரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதிலே பிள்ளை பெற்ற காரணத்தை வைத்துக்கூட ஒரு தாய் பால்கூடி மறக்கடிப்பதை முடிவு செய்ய முடியாது. தாய்ப்பால் தனக்கு இனி வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் குழந்தை மட்டுமே. ஆகையால் எப்போது தாய்ப்பால் நிறுத்துவது, எப்படி தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்துவது என்பதெல்லாம் நமது கையிலே ஒன்றும் இல்லை.
பொதுவாக பிள்ளைகள் வளர்ந்து வருகிற சமயத்தில் தாய்ப்பாலூட்டுகிற நம் சிரமங்களைச் சொல்லி அவர்களுடன் உரையாடுகிற போது தாங்களாகவே மாற்று உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று குழந்தைகள் ஒப்புக் கொள்வதாக பல இடங்களில் தாய்மார்கள் சொல்லி வைத்திருப்பதுகூட ஒருவேளை நமக்கு உதவியாயிருக்கும்.
– டாக்டர் இடங்கர் பாவலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

