தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -5
நாமும் புத்தனாவோம்..!
நீங்கள் புத்தனைப் பார்த்திருக்கிறீர்களா? அவன் ஆழ்தியான நித்திரை நிலையில் தன்னை மறந்து தியானிக்கிற போது எதைப் பற்றியேனும் சிந்திக்கிறானா, சிரிக்கிறானா அல்லது இவ்வுலகை எண்ணி வருத்தம் கொள்கிறானா என்பதைப் பற்றிய எதையும் நாம் அவனது முகபாவணையிலிருந்து அறிந்து கொள்ள முடியாது. அவனது சிரிப்புகூட இன்றுவரையிலுமே ஒரு மகோன்னதப் புன்னகைதான். அந்தச் சிரிப்பு தான் அவனது ஞானம் எனத் தோன்றுமளவிற்கு அதிலொரு மயக்கம் தொற்றிக் கொண்டேயிருக்கும். அப்படியொரு புத்தநிலையில் தான் அம்மாக்களும் தாய்ப்பாலூட்ட வேண்டியிருக்கும்.
தாய்மார்களே! நாம் புத்தனைப் போலவே அக்கணத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பிரசவித்த களைப்பைப் பற்றி ஏதும் எண்ணாமல், தாய்ப்பால் சுரப்பது பற்றிய கவலையேதும் கொள்ளாமல் அக்கணத்தில் பிள்ளைக்குப் பாலூட்டுவதை மட்டுமே மனதில் இருத்திக் கொண்டு பாலூட்ட வேண்டும். தன் ஆழ்மனம் கண்டடைந்துவிட்ட தன்னிறைவை உணர்ந்த புத்தன் அதன் பரிபூரணத்தை முகத்திலே கொணர்ந்து ஒளிவீசிடும் புன்னகையின் பொழிவை உதட்டில் தவழவிடுவதைப் போல, நாமும் அடிவயிற்றிலிருந்து நிறைவாய் பிறந்துவிட்ட பாலகனின் பிரசவித்த சுகந்தத்தை வெளிக் கொணர்ந்து பெருமகிழ்ச்சியோடு நாம் பாலூட்ட வேண்டும்.
புத்தனின் தியானநிலை என்றவுடனே துயில் கொள்ளும் நிலையை எண்ணிப் பார்க்கும் நமக்கு அதுதான் உச்சகட்ட விழிப்புநிலை என்று விளங்குவதில்லை. உள்ளுக்குள் அலைக்கழிக்கும் குழப்பங்களின் கசடுகளையெல்லாம் அகற்றிவிட்டு அலையில்லா பேரமைதி பொங்கும் நடுகடலின் நித்தியத்துவத்தை அடைய நாம் முயற்சிக்க வேண்டும். அத்தகைய விழிப்புநிலையில் தான் பிள்ளைக்குப் பசியையும், பசியமர்த்திய தன்னிறைவையும் நமது உடலிலும், பிள்ளையின் அங்க அசைவுகளிலும் நாம் கண்டடைய முடியும். இவ்விதத்தில் நாம் பரிபூரணமாய் பாலூட்டுகிற போது நம் உடலைப் பற்றிய எவ்வித பிரஞ்சையுமின்றி ஒரு இறகின் இலகுவைப் போல உணர முடியும். பறக்கும் வயதையொத்த குஞ்சுக்கு பறத்தலின் அற்புதங்களையெல்லாம் தாய்ப்பறவை பறக்காட்டும் பெருமிதத்தைப் போல நாமும் உடலின் அசமந்தத்தை மறந்துவிட்டு அதன் வாதைகளைக் கடந்துவிட்டு ஆத்மநிலையிலே பாலூட்ட வேண்டும்.
பாலூட்டுகிற ஆத்மார்த்த நிலையிலிருக்க வேண்டுமென்றால் அமர்ந்து சம்மணமிட்ட இருப்பிலா அல்லது சயன நிலையிலிருந்தா என்கிற குழப்பமெல்லாம் ஒருவிதத்தில் நமக்குள்ளே வந்துவிடுகிறது. இதை இன்னும்கூட எளிமையாகப் புரிந்து கொள்வதென்றால், தாயவள் சாய்வாக்கில் சம்மணமிட்ட நிலையில் பாலூட்ட, நம் பாலகர்களோ சயனநிலையில் மடியிலே கிடந்தபடி மார்பில் பாலருந்தித் துயில் கொள்ள வேண்டியதுதான்.
புத்தனாகிய அன்னை..!
குழந்தைகள் பிறந்தவுடனே நாம் பிரசவ அறையிலிருக்க ஒருசாய்த்துப் படுத்துக் கொள்ளுமாறு செவிலியர் அறிவுறுத்தியபடியே இருக்க, உறவினர்களோ நம் பிள்ளையைத் தூக்கி மார்பருகே வைத்து பாலருந்தச் செய்வார்கள். அப்போது நம் பிள்ளையைத் தூக்கக்கூட திராணியின்றி களைத்துப் போய் பிரசவ மேடையிலே நாம் சயனித்திருப்போம். அச்சமயத்தில் குழந்தையைத் தூக்குவதற்கும், பாலூட்டுவதற்கும் முற்றிலும் நம்மோடு பிரசவத்திற்கு உடனிருந்த உறவினர்களைச் சார்ந்தே அத்தகைய முதல் தாய்ப்பாலூட்டல் நிகழ்வானது இருந்திருக்கும். ஆனால் பிரசவத்திற்குப் பின்பாக வார்டுக்கு வந்தவுடனே கொஞ்சம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தாய்ப்பால் புகட்ட வேண்டியிருப்பதால் பிள்ளையை எப்படித் தூக்குவது, அவர்களுக்குப் பாலுட்ட எப்படி தங்களை இலகுவாக அமர்த்திக் கொள்வது என்பது உள்ளிட்ட நுட்பங்களையெல்லாம் நாம் மெல்ல மெல்ல பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பிள்ளை பெற்றவளின் அடிவயிறு மெலிதான உப்பலுடன் அடங்கிப் போய், கடந்த பத்துமாதங்களும் உறுமலுடன் இருந்த கர்ப்பப்பை அப்போதுதான் தூக்கநிலைக்குச் செல்லவே துவங்கியிருக்கும். கர்ப்பப்பையும் தான் கடந்த காலங்களில் எவ்வளவு கஷ்டங்களைப் பார்த்திருக்கும்? எத்தகைய சிரமங்களைக் கடந்து வந்திருக்கும்? இத்தகைய பிள்ளையை அரும்பாடுபட்டு பிரசவிப்பதற்கு வயதிற்கு வந்த தருணத்திலிருந்து மாதாமாதம் கருமுட்டையைத் தாங்கியிருந்து, அதனது விந்தணுக்கள் வராத போது அதை கழித்துக் கொட்டிவிட்டு, ஒருவழியாக இப்போதுதான் பிள்ளையும் பெற்றெடுத்துக் கொடுத்துவிட்டு துயில் கொள்ளப் போகிறது. ஒருவகையில் கர்ப்பப்பையும்கூட புத்தன் தானோ என்னவோ!
ஆக, பாலூட்டத் துவங்குகையில் இனிமேலும் அடிவயிற்றை தொந்தரவு செய்யாத வண்ணம் மேல்வயிற்றிலே போட்டு பிள்ளைக்குப் பாலூட்ட வேண்டியதிருக்கும். எனவே தான் களைப்புற்ற கர்ப்பப்பைக்கு எவ்வித அசௌகரியத்தையும் தராமல், பாலருந்த முண்டுகிற பாலகனுக்கு எவ்வித அசிரத்தையும் அளிக்காமல் தாய்ப்பால் புகட்டுவதற்கு நாம் அமர்ந்த நிலையில் புகட்டுவது தான் சரியானதாக இருக்கும். மருத்துவமனைப் படுக்கையில் நம் பிள்ளையைப் பிரசவிப்பதற்கு இளகிக் கொடுத்து நிலைகுலைந்து போயிருக்கிற தண்டுவடத்தையும் நாம் இப்போது கவனத்தில் கொள்ள வேண்டும். முதுகுப்புறமாக இளஞ்சூட்டில் சுடுதண்ணீரை வெதுவெதுப்பாக முதுகில் ஊற்றி ஆற்றுப்படுத்துவது மட்டுமே போதாது தாய்மார்களே! பாலூட்டுகையில் முதுகிற்கும் ஆசுவாசமாக தலையணைகளை வைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் இப்போதுதான் பாலூட்டுவதற்கென்றே தனியே தலையணைகள் கிடைக்கின்றதே! அதனை முதுகிற்கு அடை கொடுத்தபடி, அதேசமயம் சற்று பின்னோக்கிய வாக்கில் சாய்மானமாக அமர்ந்து கொண்டு தாய்ப்பாலூட்டுவதை நாமும் துவக்கலாமே!
முதலில் பாலூட்டத் துவங்கும் போது உடலை இறுக்கமாக இல்லாமல் தளர்த்திக் கொண்டு, அதேசமயம் மனதையும் இலகுவாக வைத்துக் கொண்டு அமைதியான நிலையில் முழுமகிழ்ச்சியோடு பாலூட்டத் துவங்கலாம். முதுகை பாதுகாப்பாய் வைத்துக் கொள்கிற அதேசமயம் தோள்பட்டையின் விரைப்பையும் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டும். மேலும் நாம் சம்மணமிட்டு அமருகையில் குழந்தையை வாங்கி நம் மடிந்த கால்கள் மீது இருத்திக் கொள்கிற போது அதிகமாக அழுந்திக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு மிருதுவான துணியை மடியில் போட்டு அதிலே குழந்தையைக் கிடத்தியபடி பாலூட்டத் துவங்கலாம்.
ஒருவேளை நாம் இருக்கையில் அமர்ந்து சாய்மானமாக பாலூட்ட வேண்டுமென்றால் கால்கள் அந்தரத்தில் இல்லாதவாறு பாதங்கள் தரையில் படுகிற வாக்கிலிருந்தபடியே வைத்துப் புகட்டலாம். அதேசமயம் குழந்தையைத் தாங்கிக் கொள்கிற தொடைப்பகுதியை நமது இடுப்புப் பகுதியைக் காட்டிலும் சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியும் நம் பிள்ளைகள் மார்பை எட்டிப்பிடித்து பாலருந்துகிற உயரம் குறைவாயிருக்கும் பட்சத்தில் அதற்கேற்ப துணிகளை மடியில் கிடத்தி மார்பிற்கும் குழந்தைக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொள்ளலாம்.
குழந்தை புத்தன்
குழந்தைகளை பதட்டமில்லாமல் கைகளில் தூக்கிப் பாலூட்டுவது என்பது ஆரம்பத்திலே அது சிரமமாகத்தான் இருக்கும். பிஞ்சுக் கழுத்து நில்லாமல் இளநீர் தேங்காய் போலிருக்கும் தலையைப் பிடித்துக் கொஞ்சம் அழுத்தம் கூடினாலும் காயமாகிவிடுகிற மிருதுவான உடம்பைக் கைத்தாங்களாக மற்றவர் உதவியின்றி தூக்குவது எளிதானது காரணம் ஒன்றுமில்லைதான். ஆனால் இத்தகைய பதட்டங்களையெல்லாம் தூர ஒதுக்கிவிட்டு நம் பிள்ளையென்கிற ஒட்டுதல் உறவோடு தூக்கிப் பழகினால் தானே பிள்ளையை ஆரோக்கியமாக வளர்க்கவே முடியும்?
ஆக, தரையில் கிடத்தப்பட்டு பசியின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியபடி கைகால்களை அசைத்து மழலை நடனமிட்டுக்கும் கொண்டிருக்கும் அவர்களைத் தூக்குவதற்கு அவர்கள் படுத்திருக்கிற துணியோடு சேர்த்தே அணைத்துத் தூக்க வேண்டியிருக்கும். நம்முடைய எந்தப் பக்கத்தினது மார்பில் பாலூட்டப் போகின்றோமோ அந்தப்புறத்தினது கைகளின் மடிப்புகளில் நாம் தலைவைத்துத் தூங்குவது போன்ற பாவணையில் பிள்ளையின் தலையை, கழுத்தை, தோள்பட்டையை முதுகுப்புறத்தை ஒருசேர இருக்குமாறு கைகளை நுழைத்துக் கொண்டும், இன்னொரு பக்கத்து கையினால் அவர்களின் கால்களை உள்ளே அதக்கியபடி விரல்களை இடுப்பிற்குள் நுழைத்து புட்டத்தை தாங்கியபடியும் தூக்கி மடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தையின் முழுஉடலையுமே சரிசமமாக கைகளில் தாங்கியபடியிருக்க வேண்டியது அவசியம். அவர்கள் உடல் முழுக்க நம் வயிற்றுப் பக்கமாக திரும்பியிருக்குமாறு, அவர்களது தலைப்பக்கம் மார்பைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த நிலையில் தான் குழந்தையின் ஆடையில்லாத தோலும், ஆடை விலக்கப்பட்ட அன்னையின் தோலும் முழுதொடர்பிலே இருக்க முடிகிறது. இதனால் குழந்தையினது உடலின் வெப்பம் சமநிலைப்படுத்தல், நோய் எதிர்ப்புசக்தி விருத்தியாதலென ஏகப்பட்ட ஆரோக்கியத்திற்குரிய விசயங்கள் நடக்கின்றன என்பதைப் பற்றி நாமும் ஏற்கனவே புரிந்து வைத்திருக்கிறோமே!
பொதுவாக தாய்ப்பாலூட்டலைப் பொருத்தவரையில் குழந்தையின் கால் பக்கத்தைவிட தலைப்பகுதி சற்று உயரமான வாக்கில் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் குழந்தையின் காது, தோள்பட்டை, இடுப்புப்பகுதி இவையனைத்தும் ஒரேநேர்கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் தலையை மட்டும் உள்ளங்கையில் தாங்கிப் பிடிக்காமல் அவர்களை கைமடிப்பு மேலே வாகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் கழுத்துப் பகுதி இம்மியும் திரும்பியிறாதவாறு சற்று அண்ணாந்த நிலையிலேயே இருக்க வேண்டும். இதனால் பாலருந்தும் பிள்ளையின் வாயில் நிறைந்து நிற்கும் பாலானது உடனே இரைப்பைக்குள் இறங்கி அவர்களுக்கு புரையேறி மூச்சுத்திணறல் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பதற்கு ஏதுவாகிறது.
மார்பகத்தை தயார்படுத்துதல்
இப்போது நாமும் பாலூட்ட அமர்ந்தாயிற்று, பிள்ளையும் மடியில் கிடத்தியாயிற்று. அடுத்ததாக குழந்தையின் வாயினை மார்பிலே பொருத்த வேண்டுமல்லவா! இது எளிதானதுதான் என்றாலும்கூட அதிலும் நாம் கவனிக்கத் தவறுகிற, முக்கியமாக கையாள வேண்டிய சமாச்சாரங்கள் இருக்கவே செய்கின்றன, தாய்மார்களே!
பிள்ளைகள் எளிதாக பாலருந்துவதற்கு வசதியாக நாம் ஒருகையில் குழந்தையைக் கிடத்தியே தாங்கிப் பிடித்திருப்போம் அல்லவா! அதேசமயத்தில் மறுகையினால் மார்பைப் பிடித்து பாலூட்டுவதற்கு ஏதுவாக குழந்தைக்கு ஒத்துளைக்க வேண்டியதிருக்கும். இதற்கு நம் கைகளை காம்பிலிருந்தும், கருப்பு வளையமான ஏரியோலாவிலிருந்தும் கொஞ்சம் தள்ளிய தூரத்தில் காப்பித் தம்ளரை பிடிக்கிற வாக்கில் பக்கவாட்டிலிருந்து பிடித்துக் கொள்ள வேண்டும். இதை ஆங்கில எழுத்து ‘C‘ வடிவில் மார்பை பிடித்தல் என்று சொல்லுகிறார்கள். அப்போது கைகளின் கட்டைவிரலை மேலே பார்த்த வண்ணமும் மற்ற விரல்களை மார்பக அடிப்பகுதியிலும் இருக்குமாறு இலகுவாக பிடித்துக் கொள்ள வேண்டும். மேலும் மார்பை இறுக்கமாக அல்லாமல் கொஞ்சம் தளர்வாகவே பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். ஆங்கிலத்தில் ‘U‘ வடிவ வசம் கொள்வதை சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்கள் பாலூட்டுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இத்தகைய நிலையில் பிடித்துக் கொண்டிருக்கும் போதே சிலசமயத்தில் பால் மெல்ல கசிந்து வரத்துவங்கும். இதுவும் நல்லதிற்குத் தானே! தாய்ப்பாலூட்டலில் எப்போதும் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால் குழந்தைக்கு மார்பு எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக குனியவோ, மார்பை இழுக்கச் செய்யவோ கூடாது. மார்பை இயல்பாக எப்படி இருக்க முடியுமோ அப்படியே விட வேண்டியதுதான். மற்றபடி குழந்தையைத் தான் நம் மார்பை நோக்கி அணைத்தபடி நகர்த்த வேண்டியிருக்கும். இப்போது குழந்தையும் மார்பிற்கு அருகாமையில் வந்தவுடன் அவசரப்படாமல் சற்று நிதானமாக பால் வாசம் கமழுகிற காம்பினை குழந்தையின் உதட்டிலும், உதட்டினது கடைவாய் ஓரத்திலும் மெல்ல உரசிப் பார்க்க வேண்டும். அவர்களாக வாயினைத் திறக்கிற வரையிலும் நாம் பொறுத்திருக்க வேண்டும். அப்படியும் இல்லாவிட்டால் மார்பிலிருந்து பாலை வெளியேற்றி பிள்ளையின் உதட்டிலும் காம்பிலும் தடவிவிடுவதன் வழியே பாலூட்டுவதைத் தூண்டச் செய்யலாம்.
இச்செயலினால் தூண்டப்படுகிற குழந்தைகள் பால் வாசத்தை நுகர்ந்து, நாவை நீட்டி மார்புத் தோலையும் காம்பையும் சவைத்துப் பார்த்து மெல்ல மெல்ல வாயினை அகலத் திறப்பார்கள். அச்சமயத்தில் நாம் மார்பை ஒருவாக்கில் பிடித்திருந்தோம் அல்லவா! அத்தகைய பிடியில் கட்டைவிரலை மெல்ல அழுத்தியும் அடியில் பிடித்திருக்கிற விரல்களால் மார்பை கொஞ்சம் தூக்கியபடியும் பிடித்துக் கொள்ளுகிற போது மார்புக்காம்பு குழந்தையின் மேலுதட்டை நோக்கி அதாவது மேல் அண்ணத்தை நோக்கியபடி இருக்கும். இப்படிப் பொருத்தமான நிலையில் மார்பை உள்ளே நுழைக்கிற போது குழந்தைகள் காம்பினை மட்டுமல்லாது காம்போடு சேர்ந்த ஏரியோலாவின் ஏனைய பகுதியையும் உள்ளடக்கியபடி வாயிற்குள் அனுமதித்திக் கொள்ளும்.
நாம் தாய்ப்பாலூட்டுகிற போது குழந்தையின் வாய்ப்பகுதி மார்போடு சரியாகப் பொருந்தியிருந்தால் மட்டும்தான் பிள்ளைக்கு முழுவதுமாக தாய்ப்பாலே கிடைக்கும். இதற்கு குழந்தையின் வாய்ப்பகுதி நன்கு அகலத் திறந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் தானே பால்பைகள் வந்து திறக்கிற கருமைநிற ஏரியோலாவின் பகுதியும் வாய்க்குள்ளாக செல்ல முடியும். அதேசமயம் ஏரியோலாவின் கீழ்பகுதி முழுவதுமாக வாய்ப்பகுதிக்குள் தான் இருக்க வேண்டும். அதன் மேல் பக்கம் வேண்டுமானால் கொஞ்சம் தெரியலாமே தவிர, கீழ்பகுதியானது முழுக்க வாய்க்குள் உள்வாங்கியபடியிருக்க வேண்டும். அச்சமயத்தில் குழந்தையின் கீழுதடு பிதுங்கி வெளித்தள்ளியபடி இருப்பதும் அவசியம். தாடைப்பகுதி மார்பைத் தொட்டபடியும், முக்குப் பகுதியானது மார்பிலிருந்து சற்றே விலகியிருந்து மூச்சுவிடுவதற்கு சிரமமில்லாதவாறு இருக்குமாறும் கவனித்துக் கொள்வது மிக முக்கியமானது.
இப்படியான நிலையில்தான் குழந்தையின் கீழ்தாடையோடு இணைந்த நாக்கு ஏரியோலாவின் கீழ்பகுதியின் மேல் ஊர்ந்து சென்று அதனை மேல் அண்ணத்தோடு அழுத்தியபடி பாலினை வாயிற்குள் கறக்க முடிகிறது. நாம் பழச்சாற்றை உறிஞ்சுகுழாயில் குடிப்பதைப் போல ஒன்றும் நம் காம்பில் உறிஞ்சுபதில்லை, பிள்ளைகள். முதலில் நாம் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தாய்மார்களே! நாவின் முன்பின் அசைவுகள் காம்பைச் சுற்றியிருக்கிற ஏரியோலாவினை மேல் அண்ணத்தோடு அழுத்தும் போது ஏரியோலாவின் அடியில் இருக்கிற பால்பைகள் திறந்து பாலினை வாயிற்குள் கொட்டியபடி பாலபிஷேகம் செய்கின்றன. இப்படியாக பாலூட்டுகிற போது தாய்ப்பால் குழந்தையின் வாயிற்குள் கறந்து பசியைற்றும் வேலையைச் செய்கின்றன.
ஆக, இப்போது நாம் தாய்ப்பாலூட்டவதற்கான தியானநிலையைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டோம் அல்லவா! அடுத்த பாடத்தில் நம் பிள்ளைகள் சரியாகப் பாலருந்துவதை எப்படிக் கண்காணிப்பது என்பதைப் பற்றியும் பார்த்துவிடுவோமே!
-டாக்டர் இடங்கர் பாவலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

