தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -4
குழந்தையின் பசியைக் கவனித்தல்

சத்தம் போடாதே, கவனி! என்று பிள்ளைகளின் சத்தத்திற்கு ஏற்ப ஆசிரியரின் கூக்குரலும் வகுப்பறையில் அதிகமாகவே இருக்கும். அமைதியாக உதட்டைக் குவித்து விரலை அதில் அதக்கியபடியே கப்சுப்பென்று கவனித்திருக்கும் பிள்ளைகளுக்கு முன்பு ஆசிரியர் மட்டும் ஏனோ மடமடவென பாடத்தை ஒப்பித்துக் கொண்டிருப்பார். ஆனால் நமது பள்ளியறையிலோ குழந்தைகள் கியாமுயாவென்று கத்திக் கொண்டிருக்க மாணவப் பெற்றோர்களாகிய நாமெல்லாம் சாந்தமாக அமர்ந்து அவர்களைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியிருக்கும். ஆம், அவர்கள் தானே இவ்வகுப்பறையில் நமக்கெல்லாம் வாத்தியார்களாக இருக்கப் போகிறார்கள்! பின்னே, குழந்தைகளின் பசியை வேறெப்படிக் கண்டறிவது?

குழந்தையின் வயிற்றுக்குள் தாய்ப்பால் செல்லச் செல்ல, அது நம்மைப் போலவே செரிமானமாக வேண்டி மெதுவாக குடலிற்குள் செல்வதற்கான அவசியமில்லாத காரணத்தால் அவர்கள் குடிக்க, சத்துக்களை குடல் உறிஞ்சிக் கொள்ள, மலம் சிறுநீரென கழிக்கவென்று சில நிமிடங்களிலேயே வெளியேறி வயிறும் சட்டென்று காலியாகிவிடும். அதுவும் நம்மைப் போல பற்களால், இரைப்பையால், குடல் நொதியால் அரைத்து அதை நையப்புடைத்து தாமதமாக மலத்தைக் கழிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருப்பதில்லை. ஆக, இத்தகைய காலியான வயிற்றினாலே அடிக்கடி அவர்களுக்குப் பசித்துக் கொண்டேதானிருக்கும்.

அதேசமயம் பிறந்த பிள்ளைகள் பொழுதன்னைக்கும் தூங்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் எழுவதற்கான, உடலை முறுக்கிக் கொள்வதான, கண்ணைக் கண்ணைச் சிமிட்டிக் கொள்வதான முயற்சிகளெல்லாம் பசிப்பதற்கென அவர்கள் உருவாக்கிக் கொள்கிற சமிக்கைகள் தானே! ஆக, ஆரம்பகால கட்டத்தில் அய்யா..! அம்மா..! பசிக்குதம்மா! என்றெல்லாம் அவர்கள் நம்மிடம் தாய்ப்பால் கேட்டு வரமாட்டார்கள். நாம் தான் பிள்ளையின் பசியறிந்து ஊட்ட வேண்டியிருக்கும்.

அதாவது பிள்ளைகள் வயிற்றுக்குள் இருக்கிறவரை நஞ்சுப்பைதான் ஒரு தானியங்கி இயந்திரம் போல குழந்தையின் ஒவ்வொரு மாத வளர்ச்சிக்கும் ஏற்ப அம்மாவின் இரத்தத்திலிருந்து சத்துகளைக் கவனமாகக் கறந்தெடுத்து, அதைச் சரியான அளவில் கணக்கிட்டு கருவிற்கு ஊட்டி ஊட்டி வளர்த்தெடுக்கிறது. இதற்கெல்லாம் நமது உடலில் இயல்பாகவே இருக்கிற உயிர்க்கடிகாரத்தின் இயக்கமும், ஒவ்வொரு பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கென்றே இருக்கிற நுட்பமான உயிரியல் வடிவமைப்பும் தான் காரணமே. இதனால் தானே மனம்பிறழந்தவளால்கூட பிள்ளையை வயிற்றுக்குள் சீராட்டி வளர்க்க முடிகிறது!

ஏனென்றால் அவளது பித்தம் தெளியாவிட்டாலும்கூட அவளுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிற உயிர்க்கடிகாரம் அவளது பிள்ளையை முறையாகக் கவனித்துக் கொள்ளும். ஆனால் அதேசமயத்தில் பிள்ளை பிறந்தவுடனே தாய்ப்பால் புகட்டுவது என்பதோ முற்றிலும் அம்மாவின் மனக்கணக்கைப் பொறுத்தே அமைந்துவிடுகிறது அல்லவா! ″பிள்ளை அரைமணி நேரத்திற்கு முன்னாடி தான் பால் குடித்தான், இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து குடிக்கட்டும்″ என்றோ, ″பிள்ளை தூங்குகிறானே! அவனை எப்படி எழுப்பிப் புகட்டுவது? இன்னும் சற்று நேரம் கழித்து புகட்டுவோம்!″ என்றோ நமது புரிதலை வைத்துப் புகட்டுவது தானே இப்போது பிள்ளை பிறந்த பின்னால் உடலிற்கு வெளியே நடக்கிறது. ஆக, நஞ்சுப்பை உள்ளே தன்னியல்பில் செய்த வேலையை நாமோ வெளியே இருந்து கொண்டு விழிப்புணர்வுடன் இதைப் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துவிடுகிறதல்லவா! ஆனால், என்னவோ இதிலே தானே சிக்கலே வருகிறது?

குழந்தைகள் பிறந்த பின்னால் என்னதான் உடலானது மார்பகத்தின் வழியே பிள்ளைக்குப் பாலூட்ட ஆயத்தமாக இருந்தாலும், தாய்ப்பால் புகட்டுதல் தொடர்பான நம்முடைய புரிதலின்மை காரணமாக பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் குறைபாடுகள் இருக்கத் தானே செய்கிறது. ஆகவே தான் பிள்ளையின் பசியை சரியாகக் கணக்கிட்டு அவர்களுக்குத் தக்க சமயத்தில் பசியாற்றுகிற வழிமுறையைக் கற்றுத் தேறுவதற்கு நம்முடைய பள்ளியில் கவனமாக இங்கே படிக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைகளுக்கென்றும் பிரத்தியேகமாக ஒரு பாஷை இருக்கிறது. அதுதான் அவர்களின் உடல்மொழி. நாம் என்ன மொழி பேசினாலும் குழந்தைகளின் உடல்மொழியைக் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே நம் பிள்ளையை வளர்த்தெடுக்க முடியும். ஆக, இங்கு நாம் கற்றுக் கொள்ள போவது என்னவோ உடல்மொழிப் பாடம் தான் தாய்மார்களே! பேசா மடந்தைகளின் சைகை பாஷைகளைக் கற்றுத் தருகிற செவித்திறன் குறையுடையோர் பள்ளியைப் போலவே, நாமும் இங்கே குழந்தைகளின் சப்தங்களை, அசைவுகளை, முகமாற்றங்களை அவை ஒவ்வொன்றுக்குமான அர்த்தங்களை என்று முறையாகக் கற்றுக் கொள்ளப் போகிறோம். ஏனென்றால் அவர்கள் வெளிப்படுத்துகிற ஒவ்வொறு அசைவிற்கும் ஒரு அர்த்தமிருக்கிறதே!

தாய்மார்களே, நாமெல்லாம் இன்னும் பச்சைப் பிள்ளையாய் இருக்கிறோம்! குழந்தைகள் அழுதால் தான் அவர்களுக்குப் பசிக்கிறதென்று மேம்போக்காக இன்னமும்கூட நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனாலும் குழந்தைகள் அழுவதென்கென்று காரணமா வேண்டும்?

அருகாமையில் அம்மாவின் வாசமோ, தோலோடு தோலான நெருக்கமோ இல்லாமல் போகும் போதோ, பருத்தியாலான நைலான் போன்ற துணியின் மினுமினுப்பில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் குழந்தைக்கு அதனால் உண்டாகும் எரிச்சலிலோ, படுக்கை வாசத்திற்கு ஊர்ந்து வருகிற எறும்பின் கடியாலோ, அடிக்கடி உச்சா போவதினால், மலம் கழிப்பதினால் உண்டாகிற அசௌகரியத்தினாலோ குழந்தைகளும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தபடி இருக்கிறார்கள் தானே? ஆனாலும் இது என்னவோ காக்கி உடையணிந்தவர்கள் எல்லாம் கூர்காவாகிப் போன கதைதான்.

இந்த சமயத்தில் பிள்ளைகள் அழுவது ஒன்றுமட்டுமே பசிக்கான அர்த்தமல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒருவகையில் குழந்தைகள் பசிக்கையில் அழத்தான் செய்கிறார்கள் என்றாலும்கூட அது அவர்களது பசிக்கான இறுதிகட்ட முயற்சியாகத் தானே இருக்கிறது? ஆம், அழுகை என்பது பசித்து பசித்து ஒவ்வொன்றாக பிள்ளைகள் வெளிப்படுத்துகிற சமிக்கைகளை நாம் உதாசீனப்படுத்துகிற போதுதான் அவர்களின் கடைசி முயற்சியாக, அதுவும் ஒருவித விரக்தியாக அழுகையை வெளிப்படுத்துகிறார்கள்! இதைப் பற்றி புரிந்து கொள்ள பசிக்கான உணர்வை எப்படியெல்லாம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதான விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே நாம் சொன்னபடி தாய்ப்பால் அருந்த அருந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளே குழந்தையின் வயிறு மொத்தமாகவே காலியாகி வயிறும் கூப்பாடு போடத்துவங்கிவிடும். ஆம், பிள்ளையின் வயிறோ பேசத் துவங்கிவிடும். ஆனால், அம்மாவின் காதுகளுக்குக் கேட்கிற அளவிற்கு சப்தம் எழுப்பத் தெரியாத வாயில்லா பிள்ளையாகிய இரைப்பையானது வேறுவழியின்றி குழந்தையின் மூளையை பசியின் நரம்புத் தூண்டலால் கிள்ளிவிட்டு அதற்கேற்ப சமிக்கைகளை வெளிப்படுத்த வைக்கும். இப்படிக் காலியாகிற வயிற்றின் ஆரம்பகட்ட உணர்வுகளையெல்லாம் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளுமே தனித்துவமானவர்கள், ஒவ்வொருவருமே வெவ்வேறு விதமான சமிக்கைகளை ஒரே காரணத்திற்காக வெளிப்படுத்துவார்கள் என்பதையெல்லாம் நாம் ஏற்கனவே புரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா!

அதாவது பசியின் துவக்கத்தில், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளோ சட்டென்று உடம்பை முறுக்கி எழுவார்கள். எழுவார்கள் என்றால், பிள்ளைகள் விசயத்தில் கண்ணை விழித்துக் கொண்டு காபி அருந்த படுக்கையிலிருந்து எழுவார்கள் என்று அர்த்தமில்லை. சாந்தமாக துயில் கொண்டிருக்கிற அவர்களோ கைகால்களை அசைத்தபடி உடலை நெட்டித்துக் கொள்வதும்கூட அவர்களைப் பொறுத்த வரையில் எழுவதுதான். ஒருசில குழ்நதைகள் அமைதியாக இருக்கும் போதே சட்டென்று சுறுசுறுப்பாகத் தெரிவார்கள். துருதுருவென முண்டத் துவங்குவார்கள். இதுவும் ஒருவகையில் பசியை வெளிப்படுத்துகிற சமிக்கைதான். வேறுசில குழந்தைகளோ இமைகள் மூடியபடியிருக்க அவர்களது கருவிழிகள் கடிகார நாக்கு அலைவுறுவதைப் போல அசைந்தபடி பசியை அறிவிப்பார்கள். சிலரோ கண்ணைக் கண்ணை சிமிட்டி தங்களது பசியை வெளிப்படுத்துவார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் வாயை அகலத்திறந்து மூடுவதும், பாம்பு போலான துருத்தலான நாக்கை நீட்டி காற்றிலே துலாவுவதும், அங்கு ஏதும் கிட்டாத இல்லாத போது உதட்டையே தழுவிச் சுவைப்பதும் அல்லது எவரேனும் தூக்கிக் கொஞ்சினால் அவர்களின் சட்டையையோ, தோலையோ விரல்களையோ சுவைப்பதும், அப்படியும் யாருமே அருகில் இல்லாத பட்சத்தில் தன் கைகால்களை முகத்தருகே கொண்டு வந்து விரல்களைச் சவைப்பதுமாக பசியுணர்ச்சியை தெரிவிப்பார்கள். சிலநேரங்களில் குழந்தைகளைச் சுற்றி போர்த்தியிருக்கிற துணியையே சவைத்தவாறு சப்தமெழுப்பியபடியும், வெறுமனே உதட்டைக் குவித்து பாலருந்துவது போலான சப்தமெழுப்பி நம்மைக் கவருவதைப் போலவும் செய்யத் துவங்குவார்கள். அப்படியும் இல்லாவிட்டால் ஙாக்…ஙாக்.. என்று கூவியபடி நம் கவனத்தைப் பெறுவதற்கு ஒரு ஆர்க்கஸ்ட்ரா நிகழ்ச்சியையே அவர்கள் அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். இச்சமயத்தில் அவர்களை அள்ளியெடுத்து மார்பருகே கொண்டு போனாலே அவர்களும் உடனே மார்பைக் கைகளில் பற்றி நுகர்ந்தபடி காம்பைக் கவ்விச் சுவைக்கத் துவங்கிவிடுவார்கள்.

பெற்றோர்களாகிய நாம் இதை வைத்தே பிள்ளைகளின் பசியையும், அவர்கள் பசியெடுக்கிற போதெல்லாம் பிள்ளைகள் எப்படியான உணர்வுகளை, சமிக்கைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் கற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் இப்படியான உணர்வுகளை மட்டுமே பிள்ளைகள் வெளிப்படுத்த வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை. நாமெல்லாம் பிள்ளைகளைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினாலே விளையாட்டுப் போக்கில் தங்களது பசியை வெளிக்காட்டுவதற்கு அவர்கள் செய்கிற சுட்டித்தனங்களை இன்னும்கூட நாம் நிறையவே கண்டுகொள்ள முடியும். தாயிற்கு மட்டுமே புரிகிற ஒரு மந்திரப் பார்வையோடு அவர்கள் பார்க்கிற போதும், மெலிசாக ஏக்கத்தைப் போலழுகிற பிள்ளையின் வித்தியாசமான குரலை வைத்தும், அவன் பால்தான் கேட்கிறான்..! என்று சில தாய்மார்கள் புரிந்து கொள்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேசமயத்தில் அவர்களது பசியைக் கண்டுபிடித்து மார்பில் போட்டாலுமே சில குழந்தைகள் பாலைக் குடிக்காமல் மார்பில் வெறுமனவே வாய் வைத்துக் கொண்டு விளையாடியபடி இருப்பார்கள். வீட்டில் வளர்ந்த பிள்ளைகளே, எதைப் பார்த்தாலும் விளையாடுவதற்கு அதுவேண்டும், இதுவேண்டுமென்று அடம்பிடித்து எந்நேரமும் விளையாடத் துடிதுடிக்கிறார்களே! அப்படியிருக்க, இன்னும் தவழக்கூடத் தெரியாத பிள்ளைக்கு விளையாட உங்கள் மார்பைத் தவிர வேறென்ன இருக்கிறது, தாய்மார்களே?

குழந்தைகளைப் பொறுத்தவரை எதுவெல்லாம் உண்ணக் கிடைக்கிறதோ அதுவெல்லாம் விளையாடுவதற்குரிய விசயம்தான். அதனால் தான் உண்ணுவதற்கு சாதத்தைக் கொடுத்தால் சிதறடித்து விளையாடுவதும், விளையாட்டு பார்பி பொம்மையைக் கொடுத்தால் வாயில் சவைத்து பொன்னிற முடியைக் கடித்து தும்சம் செய்வதுமாக இருக்கிறார்கள். ஆக, மார்பில் போட்டு அவர்கள் விளையாடுகிறார்கள் என்றால் அதற்கும் நாம் அனுமதித்து மடியில் போட்டு தூங்க வைக்க வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால் போகிற போக்கிலே அவர்களும் பசிக்கேற்ப புசிக்கவும், பொழுதிற்கு விளையாடவும் மார்பைப் பற்றி புரிந்து கொள்வார்கள். அதேபோல நாமுமே மார்பில் விளையாடுகிறார்களா அல்லது பாலருந்துகிறார்களா என்பதை மார்பிலிட்ட அடுத்த கணமே கண்டுபிடிக்கிற அளவிற்குக் கற்றுத் தேர்ந்துவிட முடியும்.

ஆனால் இப்படியெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி அதையெல்லாம் பெற்றோர்களாகிய நாம் கண்டுகொள்ளாத போதுதான் குழந்தைகளும் விரக்தியாகி அதற்குரிய கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். குழந்தைகளுக்கும் சிரிப்பு, அழுகை வருவது போல கோபமும் மனஅழுத்தமும் உண்டாகும் என்பதையும்கூட நாம் இக்கணத்திலே நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் தாய்மார்களே!

குழந்தையை தாயிடமிருந்து பிரித்து தனியே தொட்டிலில் போடுகிற போதும், உறவினர்கள் அடிக்கடி பிள்ளையைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிற போதும் இப்படியான பிள்ளையின் தனித்துவமான உணர்வுகளை ஒரு தாயினால் கண்டுகொள்ள முடியாமல் போகிறது. அப்போதுதான் அம்மா மீதான கோபத்தில் பசிக்கு உணவில்லாத ஏக்கத்தில் உரத்து பிள்ளைகள் அழுகிறார்கள். பசிக்கு அழுதழுது சோர்ந்து போய் எரிச்சலடைந்து ஒருகட்டத்தில் மீண்டும் அவர்கள் உறங்கியும் விடுகிறார்கள். வீட்டில் பசியென்று நுழைந்து உணவில்லை என்றதும் சட்டென்று பெரியவர்களாகிய நமக்கே கோபமும் எரிச்சலும் வருகிற போது பிள்ளைகளுக்கு மட்டும் வராதா என்ன?

இப்படி விரக்தியடைந்துவிட்ட குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு முன்பாக நாம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது. அழுகையின் துவக்கத்திலிருக்கிற பிள்ளைகள் மட்டும் மார்பில் போட்டதும் முரண்டு பிடிக்காமல் காம்பில் பொருத்தி மன்னிக்கும் மனப்பான்மையோடு நடந்து கொள்வார்கள். ஆனால் விரக்திநிலைக்குச் சென்ற, மார்பில் போட்டாலும் பால்குடிக்காமல் ஆர்ப்பாட்டம் பண்ணுகிற பிள்ளைகளை சில நொடிகள் அவர்களின் விரல்களை உதட்டில் சுவைக்க வைத்து அழுகையை ஆற்றுப்படுத்திவிட்ட பின்னரே பாலூட்ட செய்யலாம். அப்போது அவர்களும் அமைதியாய் நம் மார்பில் பாலூட்ட இசைவு தெரிவித்துவிடுவார்கள்.

இத்தகைய பசியுணரும் பயிற்சிகளை நாம் பள்ளியில் இருக்கிற காலத்திலேயே கற்றுக் கொள்ள முடியும். இதனால் பசித்து அழுவதற்கு முன்பே அவர்களின் ஆரம்பகட்ட பசியுணர்வைப் புரிந்து கொண்டு பிள்ளைக்குப் பாலூட்ட நாம் தயாராகிவிட முடிகிறது. துவக்கத்தில் எப்போதும் தூக்கநிலையிலேயே இருக்கிற பிள்ளைகளின் பசியுணர்வை அறிந்து கொள்ள கொஞ்சம் சிரமங்கள் இருந்தாலும் போகப்போக இதுவெல்லாம் சரியாகிவிடும் தாய்மார்களே! அதேசமயம் பிள்ளைகள் பசியில்லாமல் இருக்கையில் விடாப்பிடியாகப் பாலூட்டுவதையும் தவிர்த்துவிட வேண்டும். இதனால் அவர்கள் இயல்பாகவே பசித்து உண்ணுகிற உணர்வில் ஏதும் குழப்பம் வந்துவிடக் கூடாதல்லவா!

ஆக, இப்போது பிள்ளையின் பசியை எப்படியெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்று நாம் புரிந்து கொண்டாம். நம்முடைய ஆசானாகிய பிள்ளையிடமிருந்து நாமும் உடல்மொழிப் பாடத்தை இப்போது நன்றாகவே கற்றத் தேர்ந்துவிட்டோம். சரி, அடுத்தென்ன, இனி பாலூட்டத் துவங்கிவிடலாம் தானே!

– டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *