பிருந்தா சாரதி (Brindha Sarathy) எழுதிய "எண்ணும் எழுத்தும்" (Ennum Ezhuthum) புத்தகம் ஓர் அறிமுகம் | கவிஞர் பா.மகாலட்சுமி (Pa. Mahalakshmi)

பிருந்தா சாரதி எழுதிய “எண்ணும் எழுத்தும்” – நூல் அறிமுகம்

எண்ணும் எழுத்தும் புத்தகத்தில்  “பிருந்தாவின் கவிதைகள் பிருந்தாவனமாக விரிகின்றன அங்கே அவர் கண்ணனாகி குழல் ஊதுகிறார் எண்களெல்லாம் கோபியர்களாகி அவரைச் சுற்றி ஆடுகின்றன ”

-என கவிக்கோவின் அற்புதமான அணிந்துரையோடு அறிமுகமாகிறது எண்களின் வரிசையில் கவிதைகள்.

கவிஞர் விக்ரமாதித்யனின் ஆய்வுரையோடும் , எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனின் சிறப்புரையோடும் வெளிவந்திருக்கிற இந் நூலின் பக்க வரிசைகளில் எண்கள் வழியாக உள்நுழையலாம்,

” ஒன்று இரண்டாக பிரித்தது
இரண்டும்
ஒன்றாவதற்கு தான் ”

என வாழ்வை எண்களுக்குள்ளாக பயணித்து எழுதியிருக்கும் கவிஞரின் கவிதைக்குள் கொஞ்சம் கவனமாகவே கண்ணெடுத்து வைக்கிறேன், ஏனெனில் கணிதத்தில் நான் கொஞ்சம் சுமார் தான். எண்களைக் கொண்டு சொல்லப்பட்ட கவிதைக்குள் சொலவடைகளையும், தத்துவங்களையும் கொண்டு இவ்வளவு கவிதைகளை படைக்க முடியுமா…? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் கவிஞனுக்கு எண்களும் வசப்பட்டுப்போவதில் ஆச்சரியம் இல்லை.

இரண்டுக்கு ஒரு கவிதை..

“இரண்டாக இருந்தது போதும்
ஒன்றாகலாம் என்றால்
பகலில் ஏற்க மறுக்கிறாய்
இரவில் மறக்கிறாய்
எல்லாம் புரிந்தது போல்
மௌன சம்மதம் தருகிறாய்
பகலில்
ஒன்றும் புரியாதது போல்
அப்பாவியாய் கேள்வி கேட்கிறாய்
இரவின் வாசலில்
இரண்டில் ஒன்று பார்க்காமல்
விடலாமா
அங்குமிங்குமாய் அலைக்கழிக்கும் இருமையை..?!

-என எண்களுக்குள் வெளிச்சம் தேடி இருட்டை விரட்ட பார்க்கிறது கவிதை.

” ஒரே காலப்பிரமாணம்
ஒரே சுருதி
ஒத்திசைந்த
இரண்டு இறக்கைகள் போல்
இசைந்து விட வேண்டும்
நமதிரு இதயங்களும் ”

அடடா இரண்டு இறக்கைகளுக்குள் கதகதப்பாய் இருக்கும் குஞ்சுகளை போல் வாசிக்கும்போது கூட ஒரு கதகதப்பு தோன்றுகிறது , அன்பிணைந்த இரு ஆன்மாக்களின் ஒரே துடிப்பாய் .

“நமதிரு உடல்களால்
நம் ஒற்றை ஆன்மாவை
இருபுறமும் தழுவி
கதகதப்பூட்டிக் கொள்வோம்
இரண்டு இறக்கைகள் போல்”

என பிரியங்களுக்குள் பின்னிப்பிணைகிறது காதலின் கூட்டு எண்கள்.

என் நான்கிற்கு எழுதப்பட்ட கவிதைகள் மிக சுவாரசியமானவை,

” கடற்கரை மணல் எல்லாம்
காதல் தோட்டம்
இரு சக்கர வாகனமெல்லாம்
பறக்கும் கம்பளம்
நம் வாழ்வை நம் விருப்பப்பட்டோர் வாழலாம்
நாலு பேர் பற்றிய கவலையின்றி அந்த நூறுபேர் வியக்கக்கூடும்
நம்மை பார்த்து
தாங்கள் பயந்த சாகும்
மற்ற நூறுபேரை சபித்தபடி ”

-எல்லா மாற்றங்களின் முடிவெல்லாம் எதோ நான்கு பேரின் விமர்சனங்களுக்கு அஞ்சியே தள்ளிப்போவதை கவிதையிலாவது சொல்லிவிடுவோம் என பயமகற்றிப் பேசும் கவிதை.

எண்களின் மதிப்பு கூட்டும் பூஜ்ஜியத்திற்கு எப்போதும் சிறப்பு உண்டு. பூஜியம் இருக்கும் இடத்தில் மற்ற எண்களுக்கு மதிப்புக் கூடும் . பூஜ்ஜியத்தின் எண்ணிக்கை கூட கூட தங்களை உயர்த்திக் கொள்கிறது பத்திலக்க எண்களும். அப்படித்தான் கவிஞரின் கவிதைகள் பூஜ்ஜியத்தால் ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பியிருக்கிறார். இது ஒரு புதிய முயற்சி படைப்பின் பார்வை எதை நோக்கிச் சென்றாலும் தன் எழுத்துக்களை கூர்மைப்படுத்திக் கொள்ளும் அதிலும் கவிதை எதனுள்ளும் தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொள்ளும் என்பதற்கு பிருந்தா சாரதி அவர்களின் ” எண்ணும் எழுத்தும் ” கவிதை நூலே சாட்சி.

காதலின் முடிவில்லா பக்கங்களையும் தொட்டுச் செல்ல மறக்கவில்லை எண்கள்..

” இருட்டு குகைக்குள்
வழி தேடிக் கலைத்த தடுமாற்றத்தில்
பித்தாகி நிற்கும் என்னை
பத்திரமாக வழிகாட்டி
அழைத்துச் செல்கிறது
அவள் மூக்குத்தி ஒளி…

அவநம்பிக்கையின்
சிறு கீற்றும் நுழையாத
தைரியம் பிரகாசிக்கிறது
அவள் விழிகள் இரண்டிலும்…

புறப்பட்ட அகாலப் புற்றுக்கே சென்று
சுருண்டு விட்டிருக்க வேண்டும்
என் அனர்த்த பயங்கள்
அவள் கால் அரவத்தில் மருண்டு .

– என காதலியின் கால்தடத்தில் பயணிக்கிற கவிதை எண்கள் இதயங்களை இணைத்துப் பார்க்கிறது லாப நோக்கின்றி.

” ஒன்பதோ எண்பதோ
சுற்றட்டும் கோள்கள்
நீயும் சுற்று ..

என்று வாழ்வு நெறியையும் பேசுகிறது ஒரு கவிதை.

“இரட்டை மாட்டு வண்டி” எனத் தலைப்பிட்ட கவிதை மனித உழைப்பை பேசுகிற மானுடவியலில் இரட்டை வண்டிகளில் பூட்டப்படும் மாடுகளின் உழைப்பை நேயத்தோடு பறைசாட்டுகிறது. மாடுகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் துயரங்களாக காட்சிப்படுத்துகிறது வரிகள்..

ஒரு சம்பந்தமும் இல்லை
உனக்கும் எனக்கும்

இரட்டை மாட்டு வண்டி ஒன்றின்
ஜோடி மாடுகளாக
ஒன்று சேர்த்தது விதி
யாருடைய பயணமோ தொடர்கிறது

உன் துயரங்களை நானும் என் வழிகளை நீயும் வேறு யாரை விடவும் நன்கு அறிவோம் என்றாலும் அருகருகே இருக்கிறோம்
என்பது மட்டும்தான் வாயில்லா ஜீவன்கள் நமக்கிருக்கும் ஆறுதல்

வண்டியின் நுகத்தடியிலிருந்து
தீவனம் கரைத்துவைத்த தொட்டியில்
பசிதாகம் தீர்க்கும்போது
ஒருவர் கண்ணில் ஒருவர்
தெரிகிறோம்

கலங்குகின்றன அவை விடுதலை இல்லா பாட்டை நினைத்து

அவ்வேளை ஒன்றில் ஈ மொய்க்கும் என் கழுத்து புண் கண்டு
நாவினால் நக்கி அன்பு செய்தாயே அது ஒன்று போதும்
காயடிக்கப்பட்ட இவ்வாழ்வுக்கு .

மனிதத்தோடு எழுதப்பட்ட இக்கவிதைக்குள் இருக்கிறது உயிர்களை நேசிக்கும் இதயமொன்று.

இயற்கையை வாசிப்பதும், உயிர்களை நேசிப்பதும், சக மனிதனை நேசிப்பதாலும் மட்டுமே மனிதனின் மதிப்பெண்கள் கூடும். அதை நோக்கிப் பயணிக்கும் எழுத்துக்களை வரவேற்று மகிழ்கிறோம். திரைப்படத்துறையில் நடிகராகவும் அவதானித்திருக்கிற கவிஞர்.பிருந்தா சாரதி அவர்கள் திரைப்படத்துறையில் வெற்றிகளை நோக்கி நகரும்போது கவிதைகளையும் நமக்கு தந்து மகிழட்டும். ஏனெனின் படைப்புகளையும் கலைகளையும் கொண்டே தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத்திக்கொண்டவர்கள். உங்கள் படைப்புகள் வெளிவந்துகொண்டே இருக்க அன்பு வாழ்த்துக்கள் .

நூலின் விவரங்கள்:

நூல்: எண்ணும் எழுத்தும்
ஆசிரியர்: பிருந்தா சாரதி
பதிப்பகம்: படி வெளியீடு, சென்னை 600078
விலை: ரூ.70

எழுதியவர்: 

கவிஞர் பா.மகாலட்சுமி
மதுரை

*****************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *