உனக்கு நீயே விளக்கு – புத்தர்

கௌதம புத்தர் குறித்து இதுவரை நாம் அறியாத பல அபூர்வமான செய்திகளை, மிக எளிய நடையில் பல நூல்களைப் பயின்று அடிப்படை ஆதாரத்துடன் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள்.

துறவற வாழ்விற்கு மட்டுமல்ல, எப்படிப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுத்துள்ளோர்க்கும் அல்லது தனது விருப்பமின்றியே பல்வேறு காரணங்களால் வாழ்வின் ஏதோ ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டோர்க்கும் அடைபட்ட உள்ளத்தில் ஜன்னல்களைத் திறப்பதாகவே பௌத்த நெறியும் புத்தரின் வாழ்வும் இருக்கின்றனவென்பது திண்ணம்.

அதனால்தான் புத்தர் குறித்து மிகத் தெளிந்த மனத்துடன் ஒரு கவிதையாக, தத்துவமாக தோன்றி உருப்பெற்று மறைந்து செல்கிற தொடர்ச்சியாக என்றென்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் நீரோட்டம் ஒன்றின் ஒரு திவலையாகவே எல்லா வாழ்க்கைகளும் அமைகின்றன.
இந்த வாழ்வின் தவிர்க்க இயலாததாகிய துக்கம் அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் ஆகியன அவருக்கு விளங்கின என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர் அ.மாக்ஸ்.

‘இந்தியாவில் தோன்றிய சிந்தனைகளில் மனங்களை பற்றி அதிக அக்கறை கொண்டது பவுத்த மதம். உடல்களைக் கட்டுப்படுத்திய இந்து மதத்திற்கும் உடலியக்கத்திற்கு மூலமான மனத்தைப் பற்றிக் கவலைப்பட்ட பவுத்தத்திற்கும் உள்ள முரண்பாடுகள் குறிப்பிடத்தக்கன. மன விடுதலைக்கானது’ என்ற கருப்புப் பிரதிகளின் சிறிய முன்னுரையுடன் தொடங்குகிறது இந்நூல்.

துறவு மேற்கொண்டு செல்லும் வழியில் சித்தார்த்தர் தனது அரச உடைகளை ஓர் ஏழை விறகு வெட்டியிடம் மாற்றிக்கொண்டு விறகு வெட்டியின் எளிய உடைகளை ஏற்றுக்கொள்கிறார்.
புத்த சங்கத்தில் சிரமண இயக்கத்தில் சேர்பவர்கள் மூன்று துணிகள், பிச்சைப் பாத்திரம், கத்தி, வடிதுணி, மாசி, இடுப்புத்துணி முதலிய எட்டுப் பொருள்களைத் தவிர வேறு எந்தத் தனிச் சொத்துக்களையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது கட்டளை. இதைப் படித்தறியும்போது எவ்வளவு தீர்க்கமும் தெளிவும் பெற்ற மதியினர்களாக வாழ்க்கை நெறி வகுத்து அளித்துள்ளார்கள் என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது.

திராவிட இயக்கங்கள் செய்ததும் ...
நூலாசிரியர் அ.மாக்ஸ்

சித்தார்த்தர் துறவறம் மேற்கொண்ட காரணங்களில் மிக முக்கியமான காரணத்தை இந்நூல் வழி அறிய முடிகிறது. கௌதமர் சாக்கிய சங்கத்தின் உறுப்பினராகி எட்டாண்டுகளுக்குப்பின் அதாவது அவருக்கு இருபத்தெட்டு வயதாகும்போது சங்கத்தின் முடிவுடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

சாக்கிய மற்றும் கோலிய அரசின் எல்லைக்கிடையே பாய்ந்துகொண்டிருந்த ரோகிணி ஆற்றுநீரைப் பாசனத்திற்கு யார் முதலில் பயன்படுத்துவது என்ற பிரச்சினை அவ்வாண்டில் முற்றி வெடித்ததில், கோலியர்கள் மீது போர் தொடுப்பது என்ற தான் சார்ந்திருக்கும் சாக்கிய சங்கத்தின் முடிவைச் சித்தார்த்தர் எதிர்த்தார். ஒரு போர் இன்னொரு போருக்கே வித்தாகும் என்ற சித்தார்த்தர் கருத்தைச் சாக்கிய அரசினர் ஏற்கவில்லை. அப்போது சித்தார்த்தர்க்குச் சாக்கிய சங்கம் இரண்டு கட்டளைகளை இட்டது. ஒன்று சங்க முடிவை ஏற்றுப் போருக்குச் செல்வது. மற்றொன்று சங்கம் அளிக்கும் தண்டனையை ஏற்பது என்பதாக.

மரண தண்டனை, நாடு கடத்தல், கும்பத்துடன் சமூகவிலக்குச் செய்தல், இவற்றில் ஏதேனும் ஒரு தண்டனையை ஏற்க வேண்டும் என்பது சங்க நியதி. தனக்காக குடும்பத்தினர் தண்டனை பெறுவதை விரும்பாத சித்தார்த்தர் வீட்டையும் நாட்டையும் தான் துறந்து செல்வதென்ற முடிவைச் சங்கத்திடம் தெரியப்படுத்தியதற்கு சங்கமும் ஏற்றுக்கொண்டு போரையும் சிறிது காலம் தள்ளி வைத்திருந்ததாம். இது தவிர போர் வெறுப்பு, இல்லறம் என்பது தொல்லையும் குப்பையுமான இடம் என்கிற எண்ணம், நோய், முதுமை, மரணம் சமூகக் காரணங்களும் புத்தரின் துறவறத்திற்குக் காரணமாகப் பட்டியலிடுகிறார் அண்ணல் அம்பேத்கார்.

1. ஆயுதம் தாங்குவது பயங்கரமாகத் தோன்றியது. இந்த மக்கள் எப்படிச் சண்டையிடுகிறார்கள் பாருங்கள்.

2. குறைவான நீரில் மீன்கள் துடிப்பதுபோல ஒருவரை ஒருவர் பகைத்துத் துடிக்கும் மக்களைக் கண்டு என் உள்ளத்தில் அச்சம் விளைந்தது.

3. நான்கு பக்கங்களிலும் உலகம் சாரமற்றதாகிறது திக்குகள் நடுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. மக்கள் கடைசிவரை பகைகொண்டு திரிவதைக் கண்டேன் எனக்கு வைராக்கியம் உண்டாயிற்று.

‘யாரோ சொன்னது என்றோ அருளப்பட்டது என்றோ வழிவழியாய் வந்தது என்றோ எதையும் ஏற்காதே. நீயே அறிந்துகொள் என்பதே பகவான் புத்தர் தன்னை நெருங்கியோர்களுக்குச் சொன்னது’ என்ற முக்கியக் குறிப்பும் இதுபோல் பகவான் புத்தர் குறித்த பல அரிய தகவல்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன.

தீண்டத்தகாதோர் யாரெனப் புத்தர் இடும் பட்டியல் மிக அவசியமானது. முக்கியமானது. ‘எளிதில் ஆத்திரப்படுபவர், நீங்கா வெறுப்பை மனத்தில் தேக்கியிருப்பவர், நன்மைகளிலிருந்து விலகி இருப்பவர் அவனே இழிந்தவன். உயிர்களின் பால் கருணை இல்லாதவனே தீண்டத்தகாதவன். ஆக்கிரமிப்புகளைச் செய்பவன் இழிந்தவன் என்ற இந்த வகைப்பாட்டில் சுரண்டி வாழ்பவன், கடனைத் திருப்பித்தராதவன்’ இப்படிப்பட்ட இன்னும் சிலரையும் சேர்த்துள்ளார் புத்தர்.
கி.மு. 2550 ஆண்டுகளுக்கு முன் பிறந்த புத்தர் இன்றளவும் உலக நாடுகள் பலவற்றில் பின்பற்றப்படுகிறார் என்றால் அந்த நெறியின் சமத்துவமும் சமூக நீதியுமே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நமக்கு உணர்த்துகிறது இந்நூல்.

புத்தம் சரணம் 
அ. மார்க்ஸ்

பதிப்பகம் கருப்புப்பிரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *