நூல் அறிமுகம்: அண்ணல் B. R. அம்பேத்கார் எழுதிய “புத்தரும் அவர் தம்மமும்” – பெ. அந்தோணிராஜ்

நூல் அறிமுகம்: அண்ணல் B. R. அம்பேத்கார் எழுதிய “புத்தரும் அவர் தம்மமும்” – பெ. அந்தோணிராஜ்

 

பௌத்தத்தில் சாமியில்லை, சடங்கு இல்லை, சாதியில்லை, மாயம் இல்லை, மந்திரம் இல்லை, பூஜை இல்லை, பிரார்த்தனை இல்லை, எல்லாவற்றிக்கும் மேலாக தனியுடமை சுரண்டல் இல்லை.

மாறாக பௌத்தத்தில் அன்பு உண்டு, அறிவு உண்டு, சமத்துவம் உண்டு சமதர்மம் உண்டு, ஒழுக்கம் உண்டு, இரக்கம் உண்டு, வீரத்துடனான விவேகம் உண்டு. இவை மொழிபெயர்ப்பாளரின் வார்த்தைகள் ஆகும்.

அறிவுபூர்வ சிந்தனைக்கு முழுப்பெயர் பௌத்தம் !!

நேர்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிக்குப்பெயர் பௌத்தம்!!

சமத்துவத்திற்கு வழிநடத்தும் தத்துவத்திற்குப்பெயர் பௌத்தம் !!!

நீண்டநாட்கள் ஆவலுடன் தேடி கிடைத்திட்ட புத்தகம் இது. இதில் பத்து இயல்கள் உள்ளன. பத்து இயல்களை பகுதி பகுதியாக பதிவிடலாமென எண்ணுகிறேன், ஏனெனில் அவசியம் அனைவரும் வாசித்தறிய வேண்டிய நூல் ஆகும். இன்றைய பதிவு ‘புத்தரின் தோற்றமும் துறவும்’ என்ற இயலும், ‘சமய மாற்ற செயல்பாடுகள்’ பற்றியுமான பதிவு.

What is the Thai festival in July? - Speak Thai Easy

சித்தார்த்தரின் தோற்றம் நாம் ஏற்கனவே வரலாற்றில் படித்த விஷயமே. அவர் துறவு பூணுவதற்குக் காரணம் ஒரு மூன்று காட்சிகள் அல்ல, மாறாக அக்காலத்தில் சாக்கிய நாட்டில் சாக்கியர்களுக்கான சங்கம் இருந்துள்ளது. இருபது வயதுடைய அனைத்து சாக்கியரும் அதில் சேரத்தகுதி உடையவர்களே, ஆனால் ஒரு நிபந்தனை புதிய உறுப்பினர் சேர்க்கையின்போது கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அறிக்கை வெளியிடப்படும் மூன்று முறை அது அறிவிக்கப்படும், அப்போது எந்தவித எதிர்ப்பும் உறுப்பினர்கள் தெரிவிக்க வில்லையென்றால் அப்புதிய உறுப்பினர், உறுப்பினராக்கபடுவார், அவ்வாறே சித்தார்த்தன் உறுப்பினராகச் சேருகிறார். ஐந்தாறு ஆண்டுகள் கழித்து ரோகிணி ஆற்றுநீர் தாவா சாக்கியர்களுக்கும், கோலியர்களுக்குமாக எழுகிறது, அது பற்றி பேச கூட்டம் கூட்டப்பட்டது.

சாக்கிய தளபதி, கோலியர்கள் மீது போர் தொடுக்கவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறார், சித்தார்த்தர் அதனை எதிர்க்கிறார்,அதற்கு அவர் கோலியர்கள் நமது அண்டையில் வசிப்பவர்கள், அவர்களுடன் சமாதானமாகப் பேசுவோம். பேசி நதிநீரை பங்கிடுவதற்கு ஒரு தீர்வு காணலாம் என்கிறார், ஆனால் தளபதி எதிர்க்கிறார் பிரச்னைக்கு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக சித்தார்த்தர் கோரிக்கை பெரும்பான்மையினரால் தோற்கடிக்கப்படுகிறது. மறுநாள் சங்கம் மீண்டும் கூடுகிறது, அனைவரும் போருக்கு தயாராகவேண்டும் எனக் கோரிக்கைவிடப்படுகிறது, அப்போது சித்தார்த்தர் எழுந்து பகைமையை பகைமையால் தீர்க்க முடியாது, அன்பினால் மட்டுமே முடியும், இப்போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்று அறிவிக்கிறார்.

சங்கம் இவரை குற்றவாளியென தீர்மானிக்கிறது. நாடுகடத்தப்படுத்தல் என்ற தண்டனையை ஏற்றுக்கொண்டு சித்தார்த்தர் துறவு பூண்டு நாட்டைவிட்டு வெளியேறுகிறார், இப்படித்தான் சித்தார்த்தர் துறவியாகிறார், நாம் வழக்கமாக படித்த வரலாறு ஏதோ காரணத்திற்காக மாற்றி எழுதப்பட்டுள்ளது. ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒரு சுவாரஸ்யத்தை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும், சுயம்வரத்தில்தான் சித்தார்த்தர் யசோதரையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார், ஆனால் போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்கள் வில்வித்தையில் வெற்றிபெற்றால்தான் சம்மதிப்போம் எனத்தெரிவிக்க சித்தார்த்தர் அப்போட்டியில் வெற்றிபெற்று யசோதரையை மணம் முடிக்கிறார்.

Sutra on the Eight Realizations: one of the most important suttas ...

வெளியேறிய சித்தர்த்தருடன் கபிலவஸ்துவைச் சார்ந்த பொதுமக்கள் அநோமர ஆறு வரை செல்கின்றனர். உடன் சித்தர்தாரின் செல்லக்குதிரையான கந்தகமும், வேலையாளனான சன்னாவும் உடன் சென்றனர். சித்தார்த்தர் அவர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார். அவருடைய குடும்பம் துக்கத்தில் ஆழ்கிறது.

மகதத்தின் தலைநகரான ராஜகிருகத்தை அடைகிறார், ஆஸ்ரமம் அமைத்து தங்குகிறார், இதைக் கேள்விப்பட்ட மகத மன்னன் பிம்பிசாரன் விரைந்து வந்து சித்தர்தாரை சந்தித்து சமாதானப்படுத்த முயல்கிறான், அதே நேரம் கோலியர்களுடனான போர் நிறுத்தப்படுகிறது. இதைக் காரணம் காட்டி பிம்பிசாரன் மீண்டும் முயற்சிக்க சித்தார்த்தர் கண்ணியமாக மறுத்துவிடுகிறார்.

பின்னர் புத்தொளித்தேடி ஒவ்வொரு இடமாகச் செல்கிறார். முதலில் பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு செல்கிறார், அங்கிருந்தது சாங்கிய தத்துவத்தில் தேர்ந்தவரான ஆராதகாலாம் என்ற முனிவரிடம் செல்கிறார். அங்குதான் தியானப்பயிற்சியை பழகுகிறார், மேலும் எதாவது பயிற்சியுள்ளதா எனக்கேட்டு இல்லையென்றதும் அங்கிருந்து உத்தக ராம புத்திரரிடம் செல்கிறார், முதலில் தியானத்தின் ஏழு நிலைகளை பயிற்சி எடுத்த சித்தார்த்தர் உத்தகாவிடம் எட்டாவது நிலைக்கான பயிற்சி எடுக்கிறார், அங்கு கற்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரியவும் அவரிடம் விடைபெற்று வெளியேறிய சித்தார்த்தர் சாங்கியம் மாற்றும் சமாதி மார்க்கங்களை அறிந்தார், ஆனால் பிருகு முனிவரிடம் கடும் விரத வழிகளை கண்டறியததினால் அதையும் கற்றுக்கொள்ள முடிவெடுத்தார்.

கயாவிற்கு அருகிலுள்ள நிரஞ்சனை ஆற்றங்கரையில் குடில் அமைத்தார். ஆறு ஆண்டுகாலம் கடும் விரதமேற்கொண்டார், இறுதியில் அவரின் உடல் மிகவும் பலகீனமுற்றதால் விரதத்தை கைவிட்டார். கடும் விரதத்திற்கு ஒரு உதாரணம் சித்தார்த்தர் ஒரு நாள் ஒன்றிற்கு ஒரே ஒரு அவரை விதை மட்டும் உண்டு விரதமிருந்தார். என்ன கொடுமை சார் இது !!

கயாவிற்கு செல்லும் பெருசாலையில் இருந்த ஒரு அரசமரத்தை தேர்ந்தெடுத்து அங்கு தியானத்தில் ஆழ்ந்தார். தியானகாலத்தில் உண்பதற்கு தேவையான உணவை சேமித்துவைத்த பின்னரே சித்தார்த்தர் தியானமேற்கொண்டார். ஆரம்பத்தில் சாங்கிய தத்துவத்தின் பிடியிலேயேதான் இருந்தார் நாற்பதாவது நாளில் ஞானம் பெற்றார், அன்று முதல் அவர் ‘புத்தர்’ என்று அழைக்கப்பட்டார்.

Buy Artamori Ambedkar Buddha Self Adesive Wallpaper Online at Low ...

அதுவரை போதிசத்துவராக இருந்தவர் புத்தர் ஆகிறார். இதற்கான பத்துவிதமான வாழ்வை முன்னிறுத்துகிறார். அவை,

1. முதிதா (மகிழ்ச்சி )
2. விமலா (தூய்மை )
3. பிரபாகரி (பேரொளி )
4. அர்சீஸ்மதி (அறிவு தீ )
5. சுதுர்ஜெயம் (வெல்லற்கரியது )
6. அபிமுகி (புரிதல் )
7. துரங்கமா (நெடுந்தொலைவு ஏகல் )
8. அசலா (சலனமற்றவர் )
9. சாதுமதி (எல்லாம் கடந்தவர் )
10. தர்மமேகா (பரிபூரணத்துவம் )

இவ்வாறு பத்து நிலைகள் கடந்தவர் யாவரும் புத்தரே.

இவரின் சமகாலத்திய வேதமுனிவர்கள் எட்டு பேர் இருந்தனர்.

1. அகமர்சனர் – உலகம் வெப்பத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டது என்றவர்.

2. பிராமணஸ்பதி – உலகம் ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றியது என்றார்.

3. பிரஜாபதி பரமேத்திஸ்நர் – உலகத்தின் மூலம் தண்ணீர் என்றார்.

4. அனிலர்- உள்ளவை அனைத்திற்கும் அடிப்படை வாயுவே என்றார்.

5. திர்காதாமஸர் – இவர் உலகம் சூரியனைப் பொறுத்ததே என்றார்.

6. நாராயணன் – பிரபஞ்சத்தின் தோற்றமூலம் புருஷரே (கடவுள்) என்றார்.

7. ஹிரண்யகர்பர் – உலகின் அடிப்படை தீ என்றார்

8. விஸ்வகர்மன் – கடவுளே இயக்க சக்தியாக இருக்கிறார், அவர் பிரபஞ்சத்திற்கு முந்தியவர் என்றார்.

இப்படி வட இந்தியாவில் 62 தத்துவங்கள் இருந்தன.

தமிழ்த்துளி Tamil-drops: இன்னாநாற்பது ...

பண்டைய இந்தியாவின் தத்துவ ஞானிகளில் தலை சிறந்தவர் ‘கபிலர்’. இவருடைய தத்துவம் ‘சாங்கியம்’ எனப்படும். இவரின் முதல் கருத்து, இவ்வுலகில் நிரூபிக்க முடியாதது எதுவும் உண்மையில்லை (எனக்கு தெரிந்தவரை உலகின் முதல் கடவுள் மறுப்பாளர் இவரே).

உண்மையென்பது புலனுணர்வுக்கு வெளிப்படவேண்டும், இல்லையெனில் அனுமானத்திற்கு அகப்படல் வேண்டும்.
காரண காரியக் கோட்பாடு இவரால் வலியுறுத்தப்பட்டது.

இந்த பிரபஞ்சம் பரிணமித்தவற்றாலும், பரிணமிக்காதவற்றாலும் நிறைந்தது என்கிறார்.

உலகில் முதன்முதலாக
‘சத்துவம், ராஜஸம், தாமசம்’ என்ற மூன்று
குணங்களை கூறியவர் கபிலரேயாவார்.

இவரிடமிருந்து காரணகாரிய தொடர்பை புத்தர் ஏற்றுக்கொண்டார் அது போல இவரின் யோகாசத்திரங்கள் வேறு வேறு மதங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே.

“பிராமணங்கள்” வேதத்திற்கு அடுத்த புனித நூலாக கருதப்படுவது. பிராமணிய தத்துவம் நான்கு அடிப்படை தத்துவங்களை கொண்டதாகும். அவை,

1. வேதங்கள் புனிதமானவை, குறைகளற்றவை ஆதலால் அதில் திறனாய்ந்து கேள்விகள் எழுப்பலாகாது.

2. ஆன்மாவின் கடைத்தேற்றம் யாகங்கள் நடத்துவதாலும், மதச்சடங்குகளை, கடைபிடிப்பதாலும், பிராமணர்களுக்கு தானம் வழங்குவதாலும் கிட்டுகிறது.

3. சதுர்வர்ணத்தை ஏற்றுக்கொள்ளுதல். கேள்வி கேட்காமல் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்.

4. கர்ம விதிக்கோட்பாடு. ஒரு மனிதன் தான் செய்யும் வினைகளுக்கு ஏற்ப அவனுடைய ஆன்மா நல்ல கதியடையும். இப்பிறவியானது முற்பிறவியின் கர்மத்தை பொறுத்தது.

உபநிடதங்கள் எண்ணிக்கையில் அதிகம். சில பிராமணர்களுக்கு எதிராய எழுதப்பட்டவை. வேதக்கல்வியை அஞ்ஞானகல்வியாக இவைகள் கருதின. வேதங்கள் நான்கையும் வேத விஞ்ஞானத்தையும் தாழ்ந்த அறவினதாய் மதிப்பதில் இவையனைத்தும் ஒத்துப்போயின. வேதங்களின் தெய்வீக தோற்றுவாயை எதிர்த்து உபநிடதங்கள் கேள்விகளை எழுப்பின. உபநிடதங்களின் மையக்கொள்கை பிரம்மமே உட்பொருள் என்பதே. தானே பிரமம் என்று ஆன்மா அறியாமல் போவதற்குகாரணம் அது உபாதைகளில் சிக்குண்டிருப்பதே.

புத்தரும் அவர் தம்மமும் by அம்பேத்கர்

பிரமணியத்தை எதிர்ப்பதற்கு 62 பிரிவு தத்துவங்கள் புத்தருடைய சமகாலத்தில் இருந்தன.

1. காஷ்யபரின் அக்ரியவாதம்
2. மாக்கலி கோசலரின் நியதிவாதம்
3. அஜிதகேசம்மணரின் உசேதவாதம்
4. பகுத கச்சாயனரின் அந்நியோன்யவாதம்
5. சஞ்சய பேலபுத்ரர் என்பவரின் விஷேபவாதம்
6. மகாவீரரின் சதுர்யமாசம்வர் வாதம்.

இப்படி பலமதங்கள் தோன்றின. மனிதவாழ்வின் துன்பத்தை துடைக்க பல தத்துவ ஞானிகள் தோன்றினர். கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பது உலகத்தின் மிகசிறந்த ஆன்மீகத்தேடலை கொண்ட ஒரு நூற்றாண்டு ஆகும் என்பதில் எந்தவித ஐயமில்லை.

நாம் இதுவரை அறிந்திராத, தவறாக புரிந்து வைத்திருந்த பல நம்பிக்கைகள் எல்லாம் தகர்க்கும் ஒரு நூலாகும் இது. இந்நூலில் உள்ள பத்து இயல்களில் இப்போது பதிவு செய்திருப்பது முதல் இயலேயாகும். வாய்ப்பிருந்தால் மீதமுள்ள ஒன்பது இயல்களையும் வாசிப்போம். நன்றி.

நூல்: புத்தரும் அவர் தம்மமும்
ஆசிரியர்: B. R. அம்பேத்கார்
தமிழில்: பெரியார் தாசன்
வெளியீடு: பெரியார் தாசன் நினைவகம், இந்திய சிமிண்ட்ஸ் குடியிருப்பு
சென்னை 77

அன்புடன்,
பெ. அந்தோணிராஜ்
தேனி.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *