அன்புத் தோழி ஆர்த்தி மோகன் பாபுவின் அன்பு பரிசு இச்சிறுகதை தொகுப்பு 16 சிறுகதைகளை தன்னுள் கொண்டுள்ளது. மாணிக்க கற்களாக பதிக்கப்பட்ட அந்த ஜொலிப்பின் ஒளி வீச்சில் ஒவ்வொரு மனித மனங்களின் இயக்கங்களை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
1.இரண்டு குமிழ்கள்
2.புத்தனாவது சுலபம்
3.பெண் என்று எவருமில்லை
4. ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே
5.சீட்டாட்டம்
6.ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்
7.பொய்த்தொண்டை
8.நடுவில் உள்ளவள்
9.ஜெயந்திக்கு ஞாயிற்றுகிழமை பிடிப்பதில்லை
10.யட்சன் தனித்திருக்கிறான்
11.சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது
12.பேசும் கற்கள்
13.சிறுமீன் (குறுங்கதை)
14.சொந்தக்குரல்
15.சிற்றறிவு
16.கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது.
ஒருவிதத்தில் இது உளவியல் சார்ந்த புத்தகம் என்றே தோன்றுகிறது. புத்தகத்தை வாசித்தேன் என சொல்ல முடியாது . மாறாக சிறுகதைகளில் வரும் மனித மனங்களை நுகர்ந்து அந்த நறுமனத்தில் மயங்கி நின்றேன் என்பதே நிதர்சனம்.
இரண்டு குமிழ்கள்
ஒரு பெண்ணின் பயணம் என்பது யுகங்களாய் அவள் கடந்து நடந்து வந்தபாதையின் வெற்றி. சமானியத்தில் அவள் அந்த வெற்றி கிரீடத்தை அடையவில்லை. காவல் துறை உங்கள் நண்பன்” என்ற சொலவடை வெறும் சொலவடையாக மட்டுமே நம்முடன் உலவி வருகிறது.
காவலாளி, காவல்துறை, என்றாலே மக்களிடத்தில் ஒருவித அச்ச உணர்வு தான் இன்றும் நிலவி வருகிறது. ஒரு காவலாளி குடும்பத்தைச் சார்ந்த நபர்களே காவல்துறை என்பதை ஒரு பணியாக பார்க்கும் பார்வை இச்சமூகத்தில் இல்லை என்பதை நிர்மலா தேவி குடும்ப நபர்களை கொண்டு அழகாக காட்சிபடுத்தி உள்ளார் ஆசிரியர்.
ஒரு காவல் துறை பெண் காவலாளிக்கும் ஒரு பெண் கைதி இருவரின் மனநிலையை இக்கதை பிரதிபலிக்கிறது. ஒரு பெண் காவலாளி உடையில் ஏன் ஒரு மாற்றம் உருவாகக் கூடாது? என்றோ உருவாக்கிய ஆடையின் வடிவமைப்பே மாற்றம் அடையவில்லை எனில், திட்ட மாற்றங்கள் சாத்தியமா? என்ற கேள்வி நம்முள் எழத் தான் செய்கிறது.
“துப்பாக்கிச் சுடும் பெண் வேண்டாம்.தோசை சுடும் பெண் வேண்டும்” என்ற இரண்டு வரிகளில் ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது. பெண்னை குற்ற உணர்வு என்ற புதைக்குழியில் தள்ளி விட்டு மேல் எழுகிறது இச்சமூகம்.
வேலைக்கு போனால் குடும்பத்தை பார்த்துக் கொள்ளவில்லை. குடும்பத்தைபார்த்துக் கொண்டால் சம்பாதிக்க துப்பு இல்லை. குடும்பம் அலுவலகம் என இரண்டையும் கையாண்டு வலம் வந்தால் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளவில்லை ஏதோ ஒன்றை சொல்லி சொல்லி பெண்ணின் மனதில் நீங்காத குற்ற உணர்வை அவளின் மூளைக்குள் திணிப்பதில் வல்லமை பெற்றது இச்சமூகம் என்றால் மிகையாகாது.
தீட்டு என்பது பெண்ணின் உடலியல் வெளிப்பாடு. அதைக் காரணம் காட்டியே அவளை தீண்டத்தகாதவள் போல் நடத்துவது சமூகத்தின் மூடத்தனம். படித்த ஏழ்மையான பெண் திருடி பட்டம் சுமக்கும் நிலை ஒன்றும் புதிதல்ல. சபீனா போன்ற பெண்கள் பலர் நமது அருகில் நமது பக்கத்தில் சாலைகளில் கடந்து சென்ற வண்ணம் உள்ளார்கள்.
பெண்ணை சதை பிண்டமாக பார்க்கும் குருட்டு தன்மை என்று நீங்குகிறதோ அன்று முதல் சபீனா போன்ற பெண்கள் வாழ்வில் வெளிச்சம் வரும். காவலாளி என்ற பார்வை மாறினால் ….. பெண் காவலாளியும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வாய்ப்பு உருவாகலாம். சபீனா ஒரு பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சி சிறையில் சிக்கினாலும் அதன் வண்ணமும் அழகும் மாறாது. சிறையில் இருப்பதால் மட்டுமே அவளை கைதி என்ற பார்வையில் பார்க்கும் நம் பார்வையை இக்கதை ஒரு பார்வை மாற்றத்தை அளிக்கிறது.
புத்தனாவது சுலபம்:
20 ஆம் நூற்றாண்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் உணர்வுகளின் பதிவு. மகன் கூட தான் இருக்கிறான். ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிறோம். ஆனால் அவனது உலகம் தனியானது. அவன் எங்கு செல்கிறான் என்ன படிக்கப் போகிறான் இரவுகளில் வெளியே எங்குப் போகிறான், ஏன் எப்போதும் நின்று கொண்டே பேசுகிறான். எதற்கும் அப்பா அம்மாவிடம் பதில் இல்லை. அவனின் தனி உலகத்தில் அவனே ராஜா அவனே மந்திரி. அருண் தனியாக உலகத்தை வேடிக்கைப் பார்க்க விரும்புகிறான். யாரையும் அந்த உலகத்தில் நுழைய அனுமதி அளிப்பதில்லை. இளைய சமூக மனநிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இக்கதை.
பெண் என்று எவருமில்லை:
ஒரு லாட்ஜில் ஒரு அறையில் ஒரு பெண்ணின் அலறல். லாட்ஜில் இருக்கும் கட்டில்கள் பேச துவங்கினால் மனித மனதின் வக்கிரங்களையும் இருண்மையும் கொப்பளித்து வெளிப்படும் என்று ஆசிரியரின் கூற்று நிதர்சனம். தனிநபரின் பயணங்கள் கற்றுக் கொடுக்கும் பாடத்தை பதிவு செய்துள்ளது இக்கதை.
பொய்த் தொண்டை:
மிகவும் வித்தியாசமான கதை. பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் படும் பாட்டை சிறுகதைகள் பிரதிபலிக்கும். இக்கதையில் திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணின் நிலை மாற்றம் பற்றி பதிவு செய்யப்பட்ட்ள்ளது. வைத்தி அண்ணன் கதை முழுவதும் நம்மோடு பயணிக்கிறார்.
நடுவில் உள்ளவள்:
சொத்து சொந்தங்களை மறக்க வைத்து விடுகிறது . இறப்பு நடந்த வீடு என்பதை மறந்து பெற்றவர்கள் உடல் தகனத்திற்கு கூட காத்திருக்காமல் உறவுகளின் சண்டை துவங்கி விடுகிறது. இக்கதை ஒரு தாயின் மறைவிற்குப் பிறகு சகோதர சகோதரிகள் இடையே நடக்கும் நிகழ்வுகளை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. மனசாட்சியை யாராலும் கடக்க முடியாது என்பது நிதர்சனம்.
ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை:
திருமணத்திற்கு முன் வரும் ஞாயிற்றுக்கிழமையை ஆவலுடன் எதிர்பார்க்கும் பெண்கள் திருமணத்திற்கு பின் வரும் ஞாயிற்றுக்கிழமையை வெறுப்பதற்கு காரணம் சாப்பாடு. சாப்பாட்டை சிறிய விஷயமாக பார்க்க முடியாது. சைவம் அசைவம். கணவனுக்கு பிடித்த உணவின் சுவைக்கு ஏற்ப தனது சுவையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். காதலித்து மணமுடித்த கணவன் அருணுக்காக ஜெயந்தி தனது விருபங்களை மாற்றிக் கொள்ளும் நிலை ஒவ்வொரு பெண்ணும் திருமணம் முடித்தபின் சந்திக்கும் நிலை. தத்ரூபமாக ஆணின் மனநிலையையும் பெண்ணின் மனநிலையையும் இக்கதை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
பிடித்த வரிகள்:
“அவளுக்கு வயது இருபத்தியாறு ஆகிறது. இன்னும் எவ்வளவோ வருடங்கள் மீதமிருக்கிறது. எப்படி வாழப்போகிறோம் என்ற நினைப்பு ஜெயந்திக்கு மட்டுமே உரியது அல்ல. ஆண்களுக்கு மட்டுமே வயிறு இருக்கிறதா. பெண்களுக்கும் தானே!
யட்சன் தனித்திருக்கிறான்
திருமணம் முடிந்த ஒவ்வொரு பெண்ணும் விஞ்ஞானி தான். பகலை கடந்து செல்ல ஒவ்வொரு உபாயத்தைக் கண்டுபிடித்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பயணிக்கிறார்கள். சீதை, ஊர்மிளை இவர்களின் பகல் பொழுது எப்படி போய் இருக்கும். ஊர்மிளையாவது தூக்கத்தில் இருந்தாள் என சொல்லி விடலாம். ஆனால் சீதை.. அதேபோல மாதவியிடம் கோவலன் சென்ற போது கண்ணகியின் பகல் பொழுது, எப்படி இருந்து இருக்கும். இதிகாச நாயகிகள் மட்டுமே அல்ல சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்களின் பகல் பொழுது… தனிமையை போக்கி கொள்ள பெண் தேடும் துணை யட்சன். அவன் தண்ணீராகவும் காற்றாகவும் பறவைகள் மொழியாகவும் மறை பொருளாக ஒளிந்துக்கொண்டு இருக்கிறான். நெருப்பு ஒரு திருட்டு பொருள். அதை திருடி பெண்ணிடம் கொடுத்து உள்ளார்கள் என்றும் ஆசிரியர் பதிவு செய்து உள்ளார். நெருப்பு மட்டுமே இல்லை எனில் சமைக்கும் வேலை இருந்து இருக்காது.நினைத்தாலே இன்பம் மனதில் குடியேறுகிறது. சீதை நெருப்பில் இறங்கி இருக்க வேண்டாம். ஊர்மிளாவின் அம்மா பகற்பொழுதோடு வாழ்ந்த அனுபவம் நிறைந்தவள். அவளின் மொழியில் காமம் தான் நெருப்பு. அதுமட்டுமின்றி நெருப்பின் புது மொழி. மூன்று விதமான நெருப்பு
1. நாம் பயன்படுத்துறது
2.நம் மனசில் எரிஞ்சிக்கிட்டு இருக்கிறது
3. பகல் பொழுது
மொத்தத்தில் பெண்களுக்கு பல கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கும் பகற்பொழுது யட்சன் துணையோடு சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன் சிங்கைப் பிடிக்காது: இரவு என்றால் தூக்கம் வருகிறதோ இல்லையோ தூங்குகிறோம் என உறங்க சென்று விடலாம். ஆனால் இந்த பகற் பொழுதை எப்படி கழிப்பது. இது சொர்ணத்து ஆச்சிக்கு மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல. கணவனை இழந்த மனைவிக்கும், மனைவியை இழந்த கணவனுக்கும் ஏன் குடும்பம் என்று சொல்லிக் கொண்டு தனி தீவுகளாக வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், முதியோர் இல்லத்தில் இருக்கும் பெரியவர்களுக்கும் இருக்கும் பிரச்சினை.அவர்களின் பொழுது போக்கு டி. வி. யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் அந்த சத்தம் அவர்களின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.தன்னோடு ஒருவர் வாழ்கிறார், அதனோடு பேசலாம், எதிர் கேள்வி கேட்காது, வீட்டில் இருந்த படி உலகத்தை பார்க்கலாம்… இப்படி எத்தனையோ வசதிகள்…
அரசியல் ஆண் இனத்திற்கு உரியது என்பது எழுதாத சட்டம். தனிமையில் விடப்பட்ட ஆச்சி பேரன் வழியாக மன்மோகன் சிங் பற்றி அறிந்துக் கொண்டு அவரின் ரசிகை ஆகிறாள். கணவனின் மறைவுக்குப் பின் மகள் மகன் வீடு என்று ஷிப்ட் முறையில் தங்கி காலத்தை டிவியோடு கழிக்கிறாள். தன்னுள் இருக்கும் அரசியல் உரிமையை தனது விருப்பபடி ஓட்டு அளித்து நிறைவேற்றிக் கொள்கிறாள். மருமகனுக்கு அரசியல் பிடிக்காது என மறைந்து பேசும் அவள் ஒரு நாள் “எனக்கு அரசியல் பிடிக்கும்” நான் அரசியல் பேசுவேன் என மருமகனிடம் தைரியமாக சொல்லி வெளியேறுகிறாள். தனக்கு இருக்கும் பொறுப்பு உணர்ச்சி ஏன் மன்மோகன் சிங்குக்கு இல்லை என்ற கேள்வியோடு.
பேசும் கற்கள்
பாறைகளுக்கும் வேர் இருக்கிறது என்பதை இக்கதை வாசிப்பின் வழியே அறிந்து கொள்ள முடிந்தது.. காடு என்பது ஒரு விந்தை. மனிதர்களால் வெல்ல முடியாதவை காட்டில் நிறைய இருக்கின்றன. காடு அனுமதிக்காமல் நம்மால் வெளியேறி போக முடியாது.
மனிதன் என்பவன் ஜெயிக்க பிறந்தவன் என்ற அகங்காரம் கொண்டு உலா வருகிறான். தோற்றுப் போவதாக இருந்தால் அழிக்க துவங்கி விடுவான். ஆம் அனைத்தும் தமக்கு சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் ஆழமாக பதியப்பட்டுள்ளது. இயற்கையின் மொழிகள் மனிதனுக்கு புரிவதில்லை. கற்களும் ஆறுகளும் பேசிக் கொள்கிறது . கற்களும் காற்றும் பேசிக் கொள்கின்றன கற்களும் மழையும் பேசிக் கொள்கின்றன
ஒன்றின் அழிவு தனது அழிவு என அவை உணர்கிறது. ஆனால் நாம் எல்லாவற்றையும் அழிக்க முயல்கிறோம். நாம் நம்மை அழிக்க துவங்கி விட்டோம் என அறியாமலே. பழங்குடியினர் தனக்கு தேவையானவற்றை இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்டு தானும் வாழ்ந்து இயற்கையையும் பேணிக் காத்தனர். நமது தலைமுறை அதை மறந்து விட்டோம். ஒரு இடத்தில் புதிதாக திருமணம் முடிந்த பெண்னை சிதைத்து எடுக்க பட்ட பேசும் கல்லோடு ஒப்பீடு செய்தது சரியாக பொருந்துகிறது. பேசுவதை கேட்காமல் இருக்கும் மனிதர்களிடம் கற்கள் போல் பேசாமல் இருப்பதே நலம். நம்மை சுற்றி இருக்கும் கற்களும் நம்முடன் இப்போதும் பேசுகிறது. நமக்கு தான் காது கேட்காதே…….
சிறுமீன்:
மீன் குஞ்சு ஒன்றிற்க்கும் கொக்கிற்க்கும் இடையே நடக்கும் உரையாடல் வழியாக ஒற்றைக் காலில் நிற்பதால் நீ துறவியுமில்லை வெண்ணிறமாக இருப்பதால் நீ தூய்மையானவனுமில்லை இது மனித இனத்திற்கும் பொருந்தும். துறவறம் என்ற பெயரில் எத்தனை எத்தனை துர் மரணங்கள். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான். உருவத்திற்கும் உடைக்கும் சம்பந்தமில்லாத ஒன்று குணம்சிறு மீனுக்கு புரிந்து விட்டது. அதை என்று நாம் புரிந்து கொள்ள போகிறோம்?
சொந்தக்குரல்
இந்த சொந்தக் குரலின் சொந்தக் காரி ஒரு பெண். அவளின் குரல் மட்டுமே அல்ல என்பது நிதர்சனம். திருமண பந்தத்தில் கணவன் என்ற ஆண் மனைவி என்ற பெண் ஊடே நடக்கும் நிகழ்வுகள். அந்த நிகழ்வுகளை கடக்கும் பெண் மனதிற்குள் சத்தமில்லாமல் யாருக்கும் கேட்காமல் ரகசியமாக கதைத்துக் கொள்ளும் உணர்வுகளை ஆசிரியர் கனகச்சிதமாக படைத்து இருக்கிறார். கணவனின் ஆதிக்க உணர்வை அக்கறை உணர்வாக எடுத்துக் கொண்டு தன்னை சமாதானம் செய்துக் கொள்ளும் பெண் இனம்.
என்னை கவர்ந்த வரிகள்.
“;….. என் மனசில இருக்கிற பிரகாசம் எல்லாம் அணைஞ்சி போய் பல
வருசமாகிருச்சிடா. இப்போ நான் வெறும் உடம்பு தான்….. “
பல பெண்கள் உடலோடு தான் இருக்கிறார்கள் உயிரோடு இல்லை என்பதை
இந்த வரிகளில் வலிகளாக ஒலிக்கிறது.
“ எங்கே மனசில இருக்கிற கதையை உங்கப்பா கண்டுபிடிச்சு வாரேன்னுகூட
பயமா இருக்கும்… “
“நான் செத்துப் போயிட்ட ஒரு கதைஅநியாயமா என்னோடவே புதைஞ்சி
செத்துப் போயிரும்டா….. “
கணவன் இறந்த பின்னும் தன் மனதிற்குள் இருக்கும் கதையை வெளியே சொல்லும் போது கேட்டு விடுவானோ என அஞ்சும் அளவிற்கு மூளை சலவை செய்யபட்டு ஒரு மனைவியின் மனக் குமறல்கள் நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது.
சிற்றறிவு:
தூண்டிலில் பொறி போட்டு மீன் பிடிக்கும் வித்தையை மனிதன் மனிதனிடத்திலும் செலுத்தி வருகிறான். ஆசை. இதை தூண்டி விட்டால் நாம் அடிமையாவது உறுதி. போர்த்துக்கீசிய அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல தங்களது கடல் வணிகத்தை புதுப்பித்துக் கொள்ள அவர்கள் பயன்படுத்திய யுக்தியை இந்த சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது. தென்கடல் தீவில் 200 வருடம் முன்பாக இருந்த ராணியிடம் ஓலிவாராவின் தூண்டில் வேலை செய்ய வில்லை. இயற்கை அறிவு பாரம்பரியமாக நமக்கு முன்னோர்களால் கடத்தப்பட்டு உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் அற்புதமானாவை ஆனால் அவை இயல்பான அறிவை முடக்க கூடியவை என்பதை ஒலிவாராவிக்கு ராணி உணர்த்தும் அழகு சிறப்பு. இச்சமூகம் பெண் சமூகத்தால் ஆளப்பட்டது என்பதற்கு இக்கதை ஒரு சான்று. பேராசையும் துர்குணமும் கொண்ட ஒலிவாரா சிரச்சேதம் செய்யப்பட்டபின் அவனது உடலை கடல் மீன்கள் கூட உண்ண நெருங்க வில்லை என்று ஆசிரியர் விவரித்த விதம் அருமை .
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது.
ஒரு பெண் சாவகாசமாகப் புழங்கித் திரிந்த உலகம் ஒரு நாளில் அவளிடமிருந்து பிடுங்கி எறியப்படுகிறது. இது கோகிலவாணிக்கு மட்டுமே ஏற்பட்ட நிலை அல்ல. ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் மொத்த பெண் சமூகத்தின் ஒரு அங்கம் நம் கோகிலவாணிக்கு நிகழ்ந்த இக்கொடுஞ்செயல் தினமும் எங்கோ ஓர் ஊரில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.
ஆசிட் வீச்சு இந்த செய்தியை நாளிதழில் நம்மில் பலர் பல நேரங்களில் படித்ததை. அதிக பட்சமாக “அச்சோ” என்ற ஒரு சொல் உதிர்த்து அந்த கொர சம்பவத்தை கடத்தி விடுவோம். நாளிதழுக்கு அது ஒரு செய்தி. ஊடகங்களுக்கு அவர்களின் டிஆர்பி ரேட் உயர மற்றொரு காரணம். ஆசிட் வீசியவனுக்கு சில சமயங்களில் தண்டனையும் விடுதலையும் கிடைத்துவிடும். பல சமயங்களில் சாதுரியமாக தண்டனையிலிருந்து தப்பித்தும் விடுவான்
ஆனால் கோகிலவாணிக்கு வாழ்நாள் தண்டனை. காதலை ஏற்க மறுத்த ஒரே குற்றத்திற்காக மனமும் உடலும் சேதம். ஒரு பெண் காதலிக்க கூடாதா? காதலனை அவள் விருப்படி தேர்வு செய்ய கூடாதா.? பதில் யாரிடமும் இல்லை.
“ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே, சீட்டாட்டம், ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப் “ என்ற தலைப்பில் இருக்கும் சிறுகதைகள் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை தருகிறது. வாசிப்பாளர்கள் அந்த அனுபவத்தை அடைய விரும்புகிறேன். சிறந்த புத்தகம். ஆசிரியர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
நன்றி