பட்டாம் பூச்சி கவிதைகள் 4 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்1.தூக்கிப்போட வருவீகளா..?
*******************************

அரைக் கூலி கொடுத்தப்போ
அரைவயிறு நெம்பிச்சு…

அரிசி பருப்பு இல்லனாலும்
கம்பங் கூழு உதவுச்சு..

சேத்து வச்சக் காசெல்லாம்
சில காலம் இருந்துச்சு …

சில்லறையைக் காணாம
உண்டியலும் தூங்குச்சு…

விடிஞ்சிட்டா என்ன செய்ய
விளங்காமப் பதறுச்சு…

பசியோட படுத்ததால
பாயும் உறங்காமப் புரண்டுச்சு …

வித்து திங்க ஏதுமில்ல
வெறும் வீடு நின்னுச்சு…

மண்ணு மதில சுரண்டிச் சுரண்டி
விரல் நகமும் கூட தேஞ்சுச்சு…

தொற்று நோயில செத்தவங்க
எண்ணிக்கையிலத் தெரிஞ்சுச்சு …

இந்த பசி வந்து நொந்தவங்க
யாருக்காவது தெரிஞ்சுச்சா …

எண்ணி எண்ணிப் பார்த்து
இந்த டிவியும் தான் சொல்லுச்சா…

ஊரடங்கு வந்தாலே
உள்ளுக்குள்ளப் பதறுது…

உயிர் குடிக்கும் அந்த சொல்லைக்
கேட்டாலே எரியுது …

வேலை வெட்டி இல்லாம
வயிறு தண்ணில நெரம்புது…

அடுப்பெறிச்சு நாளாச்சு
அங்க கரும்பூனை தூங்குது…

உலை மூடிக்கே வேலையில்ல
பாவி புள்ள பாலுக்கு அழுகுது …

எத்தன நாள் தாங்குவோமோ
எங்களுக்குத் தெரியல..

செத்தது தெரிஞ்சப் பின்ன
தூக்கிப் போடவாவது வருவீகளா …!!!

–ராஜிலா ரிஜ்வான்.2.நானும் துயரமும்
*********************

துயரமே நான்தான்
உனக்கு மிகவும் பிடித்த எதிரி வந்திருக்கிறேன்

யுத்த கோட்டுக்குள்
உனக்கும் எனக்கும் நாள் தவறாது யுத்தம்

உன் வரலாற்று நாவால்
ருசித்து
மென்றென்னை பலமுறை விழுங்குகிறாய்

நானுன் குடலிறங்கும்போது
உன்
உயிருக்கு அவ்வளவு சுகம்

என்னை நசுக்குவதாய்
நீ விழுங்குகிறாய்
ஆனால்
உன் குடலுள் புகுந்ததும்
எனக்கு
வாள் நகம் முளைக்கிறது

போராடாமல் இருக்க முடியுமா

ஒவ்வொரு முறையும்
உன் வயிற்றை கிழித்து
வெளியேறுகிறது
என் அன்றாடம்

என்னை வீழ்த்த முடியாத
நீயும்
உன்னை வீழ்த்த முடியாத
நானும்
ஓய்ந்து போனதை
யார் அறிவிப்பது

சரி வா
கை குலுக்கிவிட்டு
மீண்டும் தொடங்கலாம்

நீயென்னை விழுங்கும் விளையாட்டையும்
நானுன் வயிற்றை கிழித்து
வெளியேறும் விளையாட்டையும்.

–குமரன்விஜி.

தொகுப்பு: புதுகை விஜய்ஆனந்த்.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)