1.கனா கண்டேன்
************************
பனையோல
குச்சுலுக்குள்ள
பகல்வேல
அலுப்புல…
பக்குவமா வடிச்செடுத்த
மொழிக்கருப்பாஞ்
சோறுக்கு..
கடிச்சுக்க
கத்தரிக்கா
கொழம்புல
கணக்கா ரெண்டு
கருவாடு போட்டு..
மினுக்குனு
எரியும்
சிம்னி வெளக்கு
வெளிச்சத்தோட..
தட்டுரெண்டுல
தாராளமா
பருக்க போட்டு…
நெறஞ்ச வயித்தோட
சாணிவாசனை
முத்தத்துல
ஒதறி விரிச்ச
பாயில படுத்து…
பேட்டரி போட்ட
ரேடியாவுல
மயிலறகுன்னு
பழைய பாட்ட
கேட்டுக்கிட்டு..
கடலு மணலு
எளஞ்சூடா
பக்கத்துல
நீயிருக்க..
த்தூ..கனவாம்டி
இதுமட்டும்
கெடச்சா ராசாத்தி
சொறிமுத்து ஐயனாருக்கு
வெடல போட்டு
கும்புடுவேனே…
–விஜி கல்யாணி
2.இரவின் ஓவியம்
***********************
திருட்டுத்தனமாய்
தங்கள் ஆசைகளை கொட்டி
முரட்டுத்தனமான தூரிகையால்
இருட்டுக்குள் வரையப்படும்
இரவின் ஓவியங்கள் நாங்கள் !
வெள்ளை மல்லிகையை
கருப்புக் கூந்தலில்
காரிருளில் மட்டும் சுமக்கும்
காரிகைகள் நாங்கள் !
தேவைகள் முடியும் வரை
தேனொழுகப் பழகிவிட்டு
தேவடியாளென ஒதுக்கப்படும்
தேவதைகள் நாங்கள் !
இருளுக்குள் எங்களைத் தள்ளி
இச்சைகளைத் தீர்த்தவரே
வேசி என எங்கள் மீது
வெளிச்சமிட்டு காட்டிச் செல்லும்
துரோகத்திற்கெதிராய் ஏதும்
செய்ய இயலா கையறு விதியை
நொந்து நிதம் வாழும்
தாசிகளும் நாங்களே !!
சிரத்தையாய் சேர்ந்து வாழ
கரத்தை கேட்டால் மட்டும்
தரத்தை யோசிக்க வைக்கும்
பரத்தைகளும் நாங்களே !!
–கலிபுல்லா கனி
தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்.