முகலாய ஆட்சிக் காலம் முழுவதும் கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு நாத் மரபினர் பேரரசர்களிடமிருந்து பரிசுகளும் நிதியுதவிகளும் பெற்றுள்ளனர். அதிகாரப்பூர்வமான ஆலய ஆவணங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.
கிறிஸ்டைன் மாரேவா கர்வோஸ்கி
[முகலாய ஆட்சியாளர்களை இந்தியாவின் நாயகர்களாக எப்படிக் கருத முடியும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டதை முன்வைத்து, இந்தி இலக்கியம் மற்றும் மதவாத அரசியல் ஆய்வாளர் கிறிஸ்டைன் மாரேவா கர்வோஸ்கி எழுதி, ‘தி ஒயர்’ இணையத்தள ஏட்டில் வெளியாகியுள்ள கட்டுரை இது.
மூலக்கட்டுரையின் தலைப்பு: By Attacking Mughals, Adhidyyanath Is Erasing the History of His Own Nath Sampraday
தமிழில்: அ.குமரேசன்]
செய்தி ஏடுகளும் அரசியல்வாதிகளும் எப்படிச் சித்தரிக்க முயன்றாலும் வரலாறு, பிரச்சாரம் இரண்டுக்கும் அவற்றின் உண்மைத்தன்மையில் பெரும் வேறுபாடு உண்டு. வரலாறு தன்னை நிறுவுவதற்கு ஆதாரங்களையும் உண்மைகளையும் பகுத்தறிதலையும் ஈடுபடுத்துகிறது. பிரச்சாரமோ அடிப்படை உண்மைகளைக் கூடத் திரிக்க முனைகிறது.
இந்தியாவில் எந்த ஒரு முகலாயரையும் ஒரு நாயகராக எப்படிக் கருத முடியும் என்று அண்மையில் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியதும், முகலாய ஆட்சியை அடிமைத்தனத்தோடு ஒப்பிட்டதும் வரலாற்றைச் சிதைக்கிற ஒரு வேலையேயாகும். முதலமைச்சர் அண்மையில் ஒரு பொது நிகழ்வில், உருவாகிவரும் “முகல் அருங்காட்சியகம்” கட்டடத்திற்கு, தீவிர இந்துயிசத்திற்கு மிகவும் பிடித்தமான, இந்து தேசியவாத அடையாளச் சின்னமாக உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் பெயர் சூட்டப்படும் என்ற முடிவை அறிவித்தார். இது அவருடைய இந்துத்துவா ஆதரவாளர்களுக்காகப் பரப்பப்பட்டு வந்துள்ள வழக்கமான இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தையும், சகிப்பின்மை அதிகரித்து வருகிற இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கிற அரசியல் கூச்சல்களையும் விட சற்றுக் கூடுதலானதாகும்.
ஆயினும், கோரக்பூர் நகரில் உள்ள கோர்க்நாத் மடத்தின் அல்லது ஆலய வளாகத்தின் அதிபதியாகிய ஆதித்யநாத், உணர்ச்சியைத் தூண்டுகிற இத்தகைய கருத்துகளைச் சொல்கிறபோது, தனது சொந்த நாத் சம்பிரதாய வரலாற்றோடு இணைந்த அத்தியாயங்களைத் தானே ஒரு முனைப்போடு அழித்துக்கொண்டிருக்கிறார். இதில் வேடிக்கையான முரண் என்னவென்றால், அவரது அண்மைக்காலக் கருத்துகள் இந்தியாவின் பன்மை மத வரலாற்றுக் கூறுகளைக் கீழிறக்குவது மட்டுமல்லாமல், அவருடைய சொந்த மதம் சார்ந்த சமூகக் கூறுகளையும் புறக்கணிக்க முயல்கின்றன. யோகிகளின் ஒரு பிரிவான நாத் சம்பிரதாய வழிவந்தவர்கள் பல்வேறு முகலாய ஆட்சியாளர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றவர்கள்.
இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு இன்று, யோகி ஆதித்யநாத் ஒரு தலைவராக உள்ள நாத் மரபின் வரலாற்றை விட, அவருடைய வலதுசாரி இந்து மதவாத அரசியலும் தூண்டிவிடும் வார்த்தை ஜாலங்களும்தான் மிகுதியாகச் சென்றடைந்துள்ளன. இதில் வியப்பதற்கு ஏதுமில்லைதான்.
ஆதித்யநாத் எப்போதும் செய்திகளில், தொலைக்காட்சிகளில், நமது ட்விட்டர் தரவுகளில் வந்துகொண்டே இருககிறார். நாத் யோகி சமூக வரலாறோ ஆகப் பெரும்பாலும் இருள்கவிந்த ஆவணக் கிடங்குகளில் புதையுண்டு கிடக்கிறது. அந்தக் கிடங்குகளைத் தோண்டியெடுத்து ஆராய்வோமானால், யோகி ஆதித்யநாத்தின் சித்தாந்தங்கள் நாத் யோகிகளின் முன்-நவீன நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக, அந்தத் தொடக்கக் கால நவீன சமூகக்குழு கற்பித்தவைகளுக்கு நேரெதிரானதாகவே இருக்கின்றன என்பதை நாம் உடனடியாகக் காண முடியும்.
நாத் யோகிகளிடையே இஸ்லாமிய தாக்கம்
நாத் யோகிகள் என்போர் துறவு அடிப்படையிலான ஒரு மாறுபட்ட சம்பிரதாய வழியினராவர். 13 ஆம் நூற்றாண்டில் உருவான இந்த மரபினரின் நம்பிக்கைகள் சமணம், தாந்திரீகம், முஸ்லிம், சீக்கியம் ஆகிய சமூகங்களோடு ஊடாடி வந்திருப்பவையாகும். குரு கோரக்நாத் போதனைகளை மையமாகக் கொண்ட இந்தப் பிரிவு வேறு பல மதப்பிரிவுகளோடு கலந்துரையாடி, அவ்வப்போது அவர்களது போதனைகளைத் தனது நம்பிக்கைகள் சார்ந்த அமைப்புடன் இணைத்துக்கொண்டு வந்துள்ளது. “நாத் சம்பிரதாய்” என பெயரிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும் இந்தச் சமூகம் பதினாறாம் நூற்றாண்டு வரையில் முற்றிலுமாக ஒன்றிணைந்து விடவில்லை. அதன் மூல வேர்களை அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நாம் காண முடியும். தொடக்ககால நாத் யோகிகளுக்கும் துறவு சார்ந்த இதர அமைப்புகளுக்கும் இடையே, குறிப்பாக முஸ்லிம் மறையருளாளர்களுடன் நடந்த அறிவார்ந்த உரையாடல்கள் இந்தச் சமூகத்திற்கு இஸ்லாமியச் சிந்தனைகளின் பால் ஒரு திறந்த அணுகுமுறை ஏற்பட இட்டுச்சென்றது. இத்தகைய உரையாடல்கள் தொடரத்தொடர சுஃபி சிந்தனைகளும் நாத் யோகி சிந்தனைகளும் ஒன்றுடன் ஒன்று ஊடாடி வந்தன.
முகலாய ஆட்சி தொடங்கிய 16ம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில், இந்தியத் துறவுவாத அடிப்படையிலான, ஒரே வகையான பண்பாட்டு மொழி பேசிய, விரிவானதொரு பன்மைச் சமயச் சமுதாயத்தின் ஒரு அங்கமாக நாத் யோகிகள் உருவெடுத்திருந்தனர்.
அன்றைய வேறு பல மாறுபட்ட மத அமைப்புகளைப் போலவே, நாத் சமூகமும் இந்து அல்லது முஸ்லிம் அடையாளத்திற்கு முக்கியத்துவம் தருவதைத் தவிர்த்தது. அதற்கு மாறாக, கோரக்நாத் போதித்தவை என கூறப்படும் தனது இந்தி போதனைகளில், “கோரக்பானி” என்ற, இறைவனோடு தனிமனிதராக உரையாடும் தத்துவத்தை முன்னிறுத்தியது.
நாத் யோகி தத்துவத்தின் படி, கடவுளை அடைவது மட்டுமே இலக்கு அல்ல, யோக நடைமுறைகளைப் பின்பற்றிக் கடவுளுடன் ஒன்றாவதே இலக்காகும். அனைத்து முரண்பாடுகளையும் கடந்து பூமியில் மரணமில்லாக் கடவுள்களாக மாறுவதே நாத் கோட்பாட்டின் இறுதி நோக்கமாகும். கண்ணுக்குப் புலப்படாத ஒரு கடவுள் பற்றிய சம்பிரதாய் போதனைகள், முஸ்லிம் மறையாளர்களுடன் அவர்களது உரையாடல்கள், தங்களது நடைமுறைகளில் பல்வேறு இஸ்லாமியச் சடங்குளை ஏற்றுக்கொண்டமை, அதே போல் தங்களது யோக சித்தி மீது அல்லது மறுமையுலக சக்தியின் மீதான நம்பிக்கை ஆகியவை அவர்களை வெவ்வேறு சூழல்களுடன் பொருந்திக்கொள்ளச் செய்தன. காலத்தைப் பொறுத்து, முகலாய, இஸ்லாமிய ஆட்சிச் சூழல்களோடும் பொருந்திக்கொள்ள வைத்தன.
சமூகத்தின் பன்மைத்துவம், அவர்களது செய்திகளில் இருந்த அனைவரையும் உள்ளடக்கிக்கொள்ளும் தன்மை, இந்துச் சடங்குகளையும் முஸ்லிம் சடங்குகளையும் அனுமதிக்கிற, அதேவேளையில் இவ்வுலகின் அனைத்துப் பிரிவுகளையும் கடப்பதை நோக்கமாகக் கொண்டதொரு சிந்தனையை முன்வைத்த பாங்கு ஆகியவை பல முகலாயப் பேரரசர்களை ஈர்த்தன. அதே ஆட்சியாளர்களிடமிருந்து நாத் யோகிகளுக்கு முக்கியமான நிதி உதவிகள் கிடைப்பதற்கும் இது வழிசெய்தது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
முதலாவது முகலாயப் பேரரசரான பாபர் கூட, தனது ‘பாபர்நாமா’ நினைவுக் குறிப்பில், அன்றைய புகழ்பெற்ற நாத் மையங்களில் ஒன்றாகிய கோர்காத்ரி தலத்தின் யோகிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததைப் பதிவுசெய்திருக்கிறார். அந்தப் புனிதத் தலத்திற்குச் சென்றுவர வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது முதல் பயணத்தின்போது அந்த மடத்திற்கு அவரால் சென்று வர முடியவில்லை. ஆயினும் மீண்டும் அங்கே செல்ல வேண்டும், “தங்களது தலைமுடியையும் தாடியையும் மழித்துக்கொள்வதற்காகத் தொலை தூர இடங்களிலிருந்து யோகிகளும் இந்துக்களும் வருகிற புனிதத் தலத்தை” காண வேண்டும் என்ற ஆவலோடு இருந்தார்.
1519ல் அப்பகுதிக்கு இரண்டாவது பயணம் மேற்கொண்ட பாபர் கோர்காத்ரி மடத்தின் நாத் யோகிகளைச் சந்திக்க முடிந்தது.
கோர்காத்ரி பயணம் அவரை பெரிதும் ஈர்க்கவில்லை. ஆனால் அதற்கு அவர் மதம் சார்ந்த வேறுபாடுகளைக் காரணமாகக் கூறவில்லை. யோகிகளின் இருப்பிடம் சீரற்றதாக, நெருக்கடியான சூழலில் இருந்தது கண்டு ஏமாற்றம் அடைந்ததாக அந்த முகலாயப் பேரரசர் குறிப்பிடுகிறார். பாபரின் பேரனாகிய அக்பர் (தமது பாட்டனாரின் கோர்காத்ரி பயணத்தைச் சித்தரிக்கும் நேர்த்தி மிக ஓவியங்களை உருவாக்கச் செய்தவர்) நாத் யோகிகளின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டதில் வியப்பில்லை. கோர்காத்ரி மட்டுமல்ல, பால்நாத் தில்லா, ஜக்பார் ஆகிய தலங்களாலும் அவர் ஈர்க்கப்பட்டார். அந்த இரண்டு நாத் மையங்களுக்கும் அவர் உதவத் தொடங்கினார்.
அக்பர் எவ்வாறு ஆன்மீகப் பாதைகளின் பல்வேறு நற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் என்பதே ஒரு தனித்துவமான இலக்கியம்தான். அவர் யோகிகள் சம்பிரதாய அமைப்பை ஆதரித்தது தெரிந்ததே. அவரது இந்த அணுகுமுறையை மனதில் கொள்கிறபோது, கோர்காத்ரிக்குத் தனது பாட்டனார் பயணம் மேற்கொண்டதைச் சித்தரிக்கும் ஓவியங்களுக்கு அவர் ஏற்பாடு செய்ததில் பாபர் எழுதியிருப்பதைக் காட்டிலும் கூடுதலான பரந்த கண்ணோட்டம் அக்பருக்கு இருந்ததை நம்மால் காண முடிகிறது.
இந்த ஓவியங்கள் கோர்காத்ரிக்கு அக்பரே சென்றுவந்த பிறகு வரையப்பட்டவையாகும். இவற்றில் பாபரின் கருத்துநிலையை விட அக்பரின் கருததுநிலையே கூடுதலாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கு வாய்ப்பிருக்கக்கூடும். ஆயினும், நாத் சம்பிரதாய மையங்களை அக்பர் எவ்வாறு அணுகினார் என்பதை வெளிப்படுத்துவது இந்த ஓவியங்கள் மட்டுமல்ல, அவர் அந்த மடங்களுக்கு சென்று வந்தபோது அவரோடு சேர்ந்து பயணித்தவர்களின் எழுத்துப்பூர்வ பதிவுகளும் அதை வெளிப்படுத்துகின்றன.
அபுல் ஃபாஸ்ல், சேசுசபை பாதிரியார் அன்டோனியோ மோன்செராட்டி இருவரும் பதிவுசெய்துள்ளபடி, ஜோகிபுரா நகரத்தைக் கட்டியவரும், தீன் இலாஹி என்ற, பேரரசு சார்ந்த தனது சொந்த மதத்தை உருவாக்கியவருமான அக்பர் 1581ல் கோர்காத்ரி, ஜேலாம் பகுதியின் பால்நாத் தில்லா ஆகிய மடங்களுக்குச் சென்று நாத் யோகிகளைச் சந்தித்து, அவர்களோடு இருப்பதில் மகிழ்ந்திருநதார். அந்த மையங்களுக்கு அவர் சென்றார், யோகிகளோடு ஆழ்நத உரையாடலில் ஈடுபட்டார் என்பது இந்த இருவரின் பதிவுகளிலிருநதும் தெளிவாகத் தெரியவருகிறது. பால்நாத் தில்லா மடத்திற்கு அக்பர் நிலக்கொடை (மதாத்-இ-மாஷ்) வழங்கினார் என்று பின்னர் பதிவாகியுள்ளது. காலனியாட்சி அரசிதழ் பதிவுகளின்படி, அந்த மடத்தில் அக்பரின் எழுத்துப்பூர்வ நில ஆவணம் 20ம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டம் வரையிலாவது பராமரிக்கப்பட்டு வந்தது. (அபுல் ஃபாஸ்ல் அக்பரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர், அவருடைய அமைச்சராகவும் இருந்தவர். -மொழிபெயர்ப்பாளர்)
நாத் யோகிகளும் முகலாய மன்னர்களின் ஆதரவும்
அக்பரின் ஆதரவு பால்நாத்தில் இருந்த நாத் யோகிகளோடு நின்றுவிடவில்லை. தனது ஆட்சிக் காலம் முழுவதும் அவர் இதர நாத் மையங்களுக்கும் ஆதரவளித்து வந்தார். அவர் ஜோகிபுராவில் கூடிய பல துறவிகளோடும் ஆன்மிகவாதிகளோடும் உரையாடினார், அத்துடன் (ஜேலம் அருகில்) ஜாக்பார் மடமும் குறிப்பிடத்தக்க வகையில் அவரது ஆதரவைப் பெற்றது.
நில தானம், நிதி ஆதரவு ஆகியவற்றுக்கான முகலாய பேரரசு ஆவணங்களைத் தேடுவது இன்று பெரிதும் கடினமானதாக இருக்கக்கூடும் என்றாலும், பி.என். கோஸ்வாமி, ஜே.எஸ். கிரேவால் ஆகியோரின் சிறப்பான கண்டுபிடிப்பு அக்பர் தொடங்கி அவுரங்கசீப் வரையில் நான்கு தலைமுறைகளாக முகலாய ஆதரவு ஜாக்பார் நாத் யோகிகளுக்கு இருந்துவந்ததற்குச் சான்றளிக்கிறது. ஜாக்பாட் மடத்திற்கு 1571ல் அக்பர் வருகை தந்தபோது முதலாவது ஆதரவு வழங்கப்பட்டது என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன. அவர் தனது கடிதத்தில், ஆலயத் தலைவரான யோகி உதாந்த் நாத்துக்கு போவா கிராமத்தில் இருநூறு பிகாஸ் பரப்புள்ள வரி விதிப்புக்கு உட்படா நிலம் வழங்குவதாக அறிவிக்கிறார். ஒரு இயற்கைச் சீற்றத்தால் பஞ்சாப் பாதிக்கப்பட்டபோது அந்த நில ஆவணம் தொலைந்து போனது. அடுத்த பேரரசர் ஜஹாங்கீர் புதிய அரசாணை பிறப்பித்து அந்த நிலத்தை யோகிகளுக்கு வழங்கினார். 1642ல் பேரரசர் ஷா ஜஹான் அதே அளவிலான நிலத்தை நாத் மரபினருக்கு வழங்கினார். பேரரசர் அவுரங்கசீப் எப்படிப்பட்டவர் என்று பலரும் நம்பவைக்கப்பட்டிருப்பதற்கு மாறாக, அவரும் தனது ஆயுட்காலத்தில் பெருமளவுக்கு ஜாக்பார் நாத் யோகிகளுக்கு ஆதரவளித்துவந்தார்.
அவுரங்கசீப் தனது மதக் கொள்கைகளை மாற்றிக்கொண்டார், குறைந்தது தனது ஆட்சியின் தொடக்கக் காலத்தில் மாற்றிக்கொண்டார் என ஆவணங்கள் காட்டுகின்றன என்றபோதிலும், காலனியாட்சிக்கால வரலாறுகளும் நவீன வரலாறுகளும் நம்மை நம்பச்சொல்வதை விடவும் அவர் மிகவும் பரந்த மனம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். அவர் தொடர்ந்து ஜாக்பார் நாத் யோகிகளுக்குப் புரவளித்து வந்ததும், மிகவும் வியக்கத்தக்க வகையில் யோகிகளின் தலைமை குரு ஆனந்த நாத் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்ததும், கறாரான முஸ்லிம் அமைப்புகள் அல்லாத நிறுவனங்கள் குறித்து அவர் கொண்டிருந்த தொடக்கக்கால நிலைப்பாட்டின் ஒரு பகுதியேயாகும்.
பேரரசின் முந்தைய மன்னர்களுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி, 1961ல் அவர் கொடுக்கல் வாங்க்ல் பரிமாற்ற நோக்கத்திற்காக ஆனந்த் நாத்தைத் தொடர்பு கொண்டார். அந்தப் பரிமாற்றம் முற்றிலுமாக மதம் சார்நதது மட்டுமே அல்லதான். தற்போது ஒரு கடிதம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. ஆய்வாளர்கள் கோஸ்வாமி, கிரேவால் இருவரும் இணைந்து எழுதிய ‘முகலாயர்களும் ஜாக்பார் ஜோகிகளும்’ என்ற புத்தகத்தில் அந்தக் கடிதத்தை வெளியிட்டு விவாதித்துள்ளனர். அவுரங்கசீப் ஆயத்தவெள்ளி அல்லது பாதரசம் தயாரிப்புக்காக யோகிகளுக்குப் பணம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது, மடத்திற்கு அளிக்கப்படும் பாதுபாப்பு தனது ஆட்சிக்காலத்தில் தொடரும் என்று உறுதியளித்திருக்கிறார். அதிகாரப்பூர்வமான அந்தக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“ஷிவ் மூர்த்தி உயர் பீட அதிபதி குரு ஆனந்த நாத் ஐயன்மீர்,
ஸ்ரீ ஷிவா (?) அரவணைப்பின் கீழ் தங்கள் மாண்பு சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் இருப்பதாக, ஐயன்மீர்!
கறாரான ரகசியமாக:
மாண்புமிகு தங்களால் அனுப்பப்பட்ட கடிதம் அத்துடன் (மூலத்தில் உள்ளபடி) இரண்டு தோலா ஆயத்தவெள்ளியோடு கிடைக்கப்பெற்றோம். மாண்பிற்குரியீர், தாங்கள் தேவையற்ற தாமதமின்றி மேலும் கொஞ்சம் ஆயத்தவெள்ளியைக் கவனமாகப் பதப்படுத்தி அனுப்பிட வேண்டும் என்று (யாம்) விரும்புகிறோம். ஒரு காணிக்கையாக அனுப்பப்பட்டுள்ள அங்கிக்கான ஒரு துண்டுத் துணியும் இருபத்தைந்து ரூபாய் பணமும் (மூலத்தில் உள்ளபடி) (மாண்பிற்குரிய தங்களை) வந்தடையும்.
மேலும் மாவீரர் ஃபதே சந்த் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவருக்கு சில வார்த்தைகள் எழுதியுள்ளோம். எப்போது எங்களுடைய பணி தங்களுக்குத் தேவை என்றாலும் மாண்பிற்குரிய தாங்கள் எங்களுக்கு எழுதிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
அவுரங்கசீப் முத்திரையிட்ட மேலும் இரண்டு கடிதங்கள் ஜாக்பார் மடத்தில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. இரண்டாவது கடிதம் 1682ம் ஆண்டில் எழுதப்பட்டது. முஸ்லிம் அல்லாத குடிமக்களுக்கு ஜியாஸ் என்ற வரியை அறிவித்த அவுரங்கசீப், ஜாக்பார் மடத்தைப் பொறுத்தவரையில் அதற்கு முன்பு பேரரசர் ஜஹாங்கீர் வழங்கிய வரி விதிப்பு இல்லா நிலம் அதே நிலையில் தொடரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆலயத்தின் நாத் யோகிகளுக்கு வருடாந்திர வருவாயாக, “நிர்ணயிக்கப்பட்ட தொகை” என்ற அடிப்படையில், ஓரு நூற்று அறுபது ரூபாய் வழங்கப்படும் என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
கோரக்பூர் மடமும் முஸ்லிம் ஆட்சியாளர்களும்
கோரக்பூரில் உள்ள யோகி ஆதித்யநாத்தின் சொந்த மடம், பல்வேறு முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் தனக்கு இருந்த உறவுகள் பற்றிச் சொல்வது இதைக்காட்டிலும் குறிப்பிடத்தக்கதாகும். வரலாற்றுத் தடத்தில், 18ம் நூற்றாண்டு வரையில் கோரக்நாத் மடத்திற்கு முகலாய ஆட்சியாளர்களுடன் மிகக் குறைவாகவே தொடர்பு இருந்து வந்திருக்கிறது. ஆவாத் நவாபுகள் கூட, கோரக்பூர் மடம் உள்ள இடத்தை முகலாயப் பேரரசின் கடைப்பகுதி என்றே குறிப்பிட்டுள்ளனர். கோரக்பூர் பகுதியின் மீது முகலாய ஆட்சியாளர்கள் பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டியதற்கான ஆவணப் பதிவுகள் இல்லை. ஆயினும் இதனாலெல்லாம், கோரக்நாத் மடம் தொடர்பான நவீன எழுத்தாக்கங்கள், அந்த ஆலயத்தின் தொன்மை பற்றி உயர்வாகச் சொல்வதற்கும், அதனுடைய ஆன்மீகப் பெருமை பல முஸ்லீம் எதிரிகளின் கவனத்தைப் பெற்றது என்று கூறுவதற்கும், அவர்கள் அதன் கட்டுமானத்தைத் திரும்பத் திரும்ப சேதப்படுத்தினார்கள் என்று சித்தரிப்பதற்கும் தயங்கவில்லை.
இப்படிப்பட்ட தவறான சித்தரிப்புகள் உள்ளபோதிலும், அவர்களுக்குள்ளேயே செயல்படுகிற வரலாற்றாய்வாளரும் நாத் சம்பிரதாய பக்தருமான அக்‘ஷய குமார் பானர்ஜி இவ்வாறு சொல்வதன் நம்பகத்தன்மை பற்றி எழுதுகிறபோது அது தவறானது என்றே குறிப்பிடுகிறார். “இந்த இடம் (கோரக்நாத் மடம்) அனைத்தையும் துறந்த யோகிகளின் பழங்காலத் தபோவனம் அல்லது துறவிகள் வாழ்விடம் என்ற தன்மையோடு இருந்திருக்கலாம் என்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அக்காலத்தில் பழைய கல் கட்டுமானமோ, செங்கல் கட்டுமானமோ இல்லாதிருந்திருக்கக்கூடும்,” என்கிறார் பானர்ஜி. அதேவேளையில், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் முகலாய பேரரசுடன் சம்பந்தப்பட்டிருந்த வளமான உயர்நிலையினரிடமிருந்து கோரக்பூர் நாத் யோகிகள் பலரும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நிதி உதவிகள் பெற்றனர் என்பதை, வரலாற்றுப்பூர்வமான ஆவணங்களாக இல்லாவிட்டாலும், பல தகவல்மூலங்கள் தெரிவிக்கின்றன.
ஆய்வாளர்கள் ஷஷாங்க் சதுர்வேதி, டேவிட் கெல்நெர், சஞஜய் குமார் பாண்டே ஆகியோரது பதிவுகளின்படி, கோரக்பூர் மாவட்டத்தில் கோரக்நாத் ஆலயம் ஆவாதி நவாப் என்ற முஸ்லிம் மன்னரால் யோகிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. குறைந்தது, பெயரளவிலாவது முகலாயர்களோடு சம்பந்தப்பட்டவர் அவர். நாம் ஏற்கனவே பார்த்தது போல, இப்படிப்பட்ட கொடைகள் அக்காலக்கட்டத்தில் நிச்சயமாக வழக்கத்துக்கு மாறானது அல்ல.
கவனத்தை ஈர்க்கும் விதத்தில், தலைமைப் பூசாரி (மஹந்த்) திக்விஜய் நாத்தும், கோரக்நாத் மடமும் வெளியிட்டுள்ள ஆலயம் பற்றிய நூல் இந்த தகவல் உண்மைதான் என்று காட்டுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத ஒரு நவாப் கோரக்பூர் யோகிகளுக்கு ஆலயம் கட்டுவதற்காக பெரும் நிலமும் வளமும் வழங்கினார், தற்போதுள்ள ஆலயம் அந்த இடத்தில் கட்டப்பட்டது என்று பானர்ஜி எழுதியுள்ளார்.
இந்த நூல்கள் கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மடத்திலேயே தொடர்ந்து விற்பனையாகின்றன. முதலமைச்சர் தனது அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்றைச் சிதைக்கிறார் என்பதை இந்த நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இன்றைய நாத் ஆலயம், பகுதி அளவிலேனும், முகலாயப் பேரரசுடன் இணைந்த ஒரு முஸ்லிம் ஆட்சியாளரின் மரியாதை, பரந்த மனம் என்ற அடிவாரத்தின் மீது கட்டப்பட்டதுதான் என்பதை இந்த வெளியீடுகளே உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிற நிலையில், யோகி ஆதித்யநாத் கேட்டுள்ள கேள்வியை மாற்றிக் கேட்க வேண்டியுள்ளது.
வாதத்திற்குரியது என்னவெனில், ஒரு முகலாயரை இந்தியாவின் ஒரு நாயகராக எப்படிக் கருதுவது என்பதல்ல, மாறாக, மிகத் துல்லியமாக – இத்தகைய பரந்துபட்ட ஆதரவுகள் இருந்து வந்துள்ள நிலையில் – அவரை ஏன் அப்படிக் கருதக்கூடாது?
மேலும், நாட்டின் முஸ்லிம் குடிமக்களைத் தாழ்வுபடுத்துவதற்கும், சீர்குலைப்பதற்குமான ஓர் இந்துத்துவத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக வரலாற்றை மாற்றிச் சொல்வதில் யோகி ஆதித்யநாத் இன்னும் எவ்வளவு தொலைவு செல்வார்?
[கட்டுரையாளர் அமெரிக்காவின் ஃபுல்பிரைட் ஆய்வு நிறுவன முன்னாள் ஆய்வாளர், கொலம்பியா பல்கலைக்கழக முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது இந்தி இலக்கியம், வட இந்திய மதவாத அரசியல் இரண்டையும் குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.]
நன்றி: தி ஒயர்