சீ.கெளதமன் மற்றும் ரா.நாகலட்சுமி தொகுத்த “மழைக்கப்பல்:- ஓர் அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்” புத்தகம் | C. Gauthaman and R. Nagalakshmi's Mazhaikkappal Tamil Book Review | www.bookday.in

சீ.கெளதமன் மற்றும் ரா.நாகலட்சுமி தொகுத்த “மழைக்கப்பல்:- ஓர் அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்” – நூல் அறிமுகம்

“மழைக்கப்பல்:- ஓர் அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்” – நூல் அறிமுகம்

வாசிப்பு இயக்கத்தின் கொடை – பாவண்ணன்

கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடையில் அரசு தொடங்கிய காவேரி வாசிப்பு இயக்கம் அழுத்தமான தடத்தைப் பதித்து வருகிறது. பாடநூல்களுக்கு அப்பால் பிற இலக்கிய நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் சொந்தமாக எழுதும் ஆர்வத்தையும் இளம்பருவத்திலேயே மாணவச்செல்வங்களிடையில் வளர்க்கும் ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இப்பள்ளியில் பல இளம்படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த ‘என் நண்பர்கள் எங்கே?’ ‘பூக்களின் அமைதி’ போன்ற நூல்களே அந்த இயக்கத்தின் வளர்ச்சியை அடையாளப்படுத்தும் சான்றுகளாக விளங்குகின்றன.

நூலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆர்வம் கொண்ட மாணவர்களும் மாணவிகளும் இணைந்து, தாம் படித்த புத்தகங்களை முன்வைத்து உரையாடவும் கதை சொல்லவும் எழுதவும் பயிற்சி செய்கிறார்கள். இடைவிடாமல் பேசியும் எழுதியும் தம்மை வளப்படுத்திக்கொள்கிறார்கள். எழுத்தாற்றல் மிக்க இருவர், ஆண்டு இறுதியில் அதுவரை மாணவமாணவிகள் எழுதி வாசித்த கதைகளையெல்லாம் தொகுத்து மீண்டும் அவற்றை வாசித்து, மதிப்பிட்டு, அவற்றிலிருந்து மிகச்சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இறுதியாக அவர்களே தொகுப்பாசிரியர்களாகச் செயல்பட்டு, அக்கதைகளுக்கு நூல்வடிவமும் கொடுத்து வெளியிடுகிறார்கள்.

அந்த நூல்கள் காவேரி வாசிப்பு இயக்கத்தின் அடையாளமாக மட்டுமன்றி, இளம்படைப்பாளிகளின் திறமையை அனைவரும் அறிந்துகொள்வதற்கான முயற்சியாகவும் விளங்குகின்றன. சீ.கெளதமன், ரா.நாகலட்சுமி இருவரும் தொகுப்பாசிரியர்களாக செயல்பட்டு உருவாக்கிய மழைக்கப்பல் என்னும் கதைத்தொகுதி சமீபத்தில் இரு மாதங்களுக்கு முன்பாக நடப்பு கல்வியாண்டின் கொடையாக வெளிவந்துள்ளது.

23 மாணவமாணவிகள் எழுதிய 29 சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. மிகச்சிறிய கதையின் அளவு பத்து வரிகள். மிகப்பெரிய கதையின் அளவு இருபத்தைந்து வரிகள். அந்த அளவுக்குள்ளேயே தம் படைப்பாற்றலைப் புலப்படுத்தும் வகையில் சிலர் ஆற்றலோடும் கற்பனை வளத்தோடும் எழுதியிருக்கிறார்கள். அளவின் சுருக்கம் காரணமாக பல கதைகள் கவிதைகளுக்கே உரிய காட்சிச்சித்தரிப்புகளாக உருமாறியிருக்கின்றன.

ஆறாம் வகுப்பில் படிக்கிற ஹர்ஷிதா என்னும் சிறுமி வானவில் என்னும் தலைப்பில் ஒரு சொற்சித்திரத்தைத் தீட்டியிருக்கிறார். வாசிக்கும் கணத்திலேயே மனத்தில் இடம்பிடித்துவிடும் அளவுக்கு சொற்சிக்கனத்தோடு அமைந்திருக்கிறது அச்சித்திரம்.

என் பெயர் ஹர்ஷிதா. 
அம்மா எனக்கு வளையல் போட்டாள்.
சிவப்பு வளையல் உடைந்துவிட்டது.
வெளிர்நீல வளையல் உடைந்துவிட்டது.
பச்சை வளையல் உடைந்துவிட்டது.
ஆரஞ்சு வளையல் உடைந்துவிட்டது.
வயலட் வளையல் உடைந்துவிட்டது.
மஞ்சள் வளையல் உடைந்துவிட்டது.
கருநீல வளையல் உடைந்துவிட்டது.
எல்லாவற்றையும் தூக்கி வானத்தில் போட்டேன்.
வானவில் வந்தது.

அழகான கற்பனை. கச்சிதமான சொற்கள். எத்தனை முறை படித்தாலும் மகிழ்ச்சி குறைவதில்லை. இறுதிக்கணத்தில் மனம் மலர்ந்து வானத்தைப் பார்க்கத் தோன்றுகிறது. வானத்தில் இனி எப்போது வானவில்லைப் பார்த்தாலும் வளையல் துண்டுகளின் நினைவுதான் முதலில் எழும்.

இதே ஹர்ஷிதாதான் தொகுதியின் தலைப்புக்கதையான மழைக்கப்பலையும் எழுதியிருக்கிறார். ஒருநாள் மழை பொழிகிறது. தெருவெங்கும் மழைநீர் ஆறாக ஓடுகிறது. அனைவரும் தண்ணீரில் காகிதத்தில் கப்பல் செய்து மிதக்க விடுகிறார்கள்.  ஒரு சிறுமியும் தன் பங்குக்கு ஒரு கப்பலை மிதக்க விடுகிறார். கப்பல் தண்ணீரில் அசைந்து அசைந்து மிதந்து செல்கிறது. கண்பார்வைக்கு எட்டும்  தொலைவு வரைக்கும் அது சீராகவே பயணம் செய்து, பார்வைக்கு அப்பாலும் தன் பயணத்தைத் தொடர்கிறது. காகிதக்கப்பலை மிதக்கவிட்ட சிறுமி தன் கப்பல் எங்கும் மூழ்கிவிடாமல் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றும் எங்காவது ஒரு குளத்தில் இறங்கவேண்டும் என்றும் குளத்தில் இறங்கியதுமே மீனாக மாறிவிட வேண்டும் என்றும் மனமுருக வேண்டிக்கொள்கிறார். கள்ளமற்ற அந்தக் குழந்தைக்கனவு, அச்சித்திரத்துக்கு அளித்திருக்கும் மதிப்பு மிகவும் உயர்ந்தது.

ஆறாம் வகுப்பைச் சேர்ந்த பிருத்திகா என்றொரு மாணவி எழுதியிருக்கும் சொற்சித்திரத்திலும் கவிதையின் சாயலைப் பார்க்கமுடிகிறது. தன் வீட்டுக்கு ஒருநாள் ஒரு பட்டர்ஃபிளை வந்துபோன அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதுபோல அச்சித்தரம் தொடங்குகிறது. வீட்டுக்குள் அந்த பட்டர்ஃபிளை வந்ததுமே அச்சிறுமியுடைய  தம்பி அதைப் பிடித்து நசுக்கிக் கொன்றுவிடுகிறான். அவன் செய்கையைக் கவனித்த அவனுடைய அம்மா, அப்பா அனைவரும் அப்படி செய்யக்கூடாது என அவனுக்கு அறிவுரை சொல்கிறார்கள். ஆனால் அவன் அதைப் பொருட்படுத்தாமல், அடுத்தநாள் வந்த பட்டர்ஃபிளையையும் பிடித்து நசுக்கிக் கொன்றுவிடுகிறான்.

அதற்குப் பிறகு எந்த பட்டர்ஃபிளையும் வீட்டுக்கு வரவில்லை. ஒவ்வொரு நாளும் பட்டர்ஃபிளைக்காக எதிர்பார்த்து நிற்கும் தம்பி ஏமாற்றமடைகிறான். சில நாட்களுக்குப் பிறகு ஒருவரும் எதிர்பாராதவண்ணம் அழகானதொரு பட்டர்ஃபிளை மீண்டும் அந்த வீட்டுக்கு மெதுவாகப் பறந்து வருகிறது. தம்பி அதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறான். அவன் அந்த பட்டர்ஃபிளையை ஒன்றும் செய்யவில்லை. அதனுடன் சேர்ந்து அவனும் விளையாடி மகிழ்கிறான். விளையாடிக்கொண்டே “ஏன் தனியே வந்திருக்கிறாய்? உனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா?” என்று ஆர்வமுடன் கேட்கிறான். “இருந்தாங்க. எல்லாரையும்தான் நீ கொன்னுட்டியே” என்று பதில் சொல்கிறது பட்டர்ஃபிளை.

எட்டாம் வகுப்பு படிக்கிற அபிநயாஸ்ரீ எழுதியிருக்கும் கதை பரிசு. கதையில் இடம்பெறும் சிறுமியின் பெயர் யாழினி. பள்ளியில் நடைபெறவிருக்கும் ஒரு பேச்சுப்போட்டிக்கு அவர் பெயர் கொடுத்திருக்கிறார். வீட்டில் அதற்காக தன் உரையைத் தயாரித்துக்கொண்டு பேசிப்பேசி பழகுகிறார். கண்ணாடிமுன்னால் நின்றும், செடிக்கு முன்னால் நின்றும், நாய்க்குட்டிக்கு முன்னால் நின்றும் பேசிப் பார்க்கிறார். ஆயினும் அவருக்கு உள்ளூர தன்னம்பிக்கை வரவில்லை. அச்சம் அவரை வாட்டுகிறது. அதைப் பார்த்த அச்சிறுமியின் தாத்தா அவருடைய காதில் ஒரு யோசனை சொல்கிறார். அவரும் அதைக் கேட்டுக்கொள்கிறார். அந்த யோசனைப்படியே அடுத்தநாள் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பேசி பரிசை வெல்கிறார்.

ஆசிரியருக்கே அவர் சிறிதுகூட அச்சமின்றிப் பேசிய விதம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அவரை அருகில் அழைத்து “எப்படி உன்னால் அச்சமில்லாமல் பேசமுடிந்தது?” என்று கேட்கிறார். “முன்னால் இருப்பவர்களையெல்லாம் சின்னக் குழந்தைகள் என நினைத்துக்கொண்டு பேசுமாறு எங்கள் தாத்தா ஒரு யோசனை சொன்னார். பேசத் தொடங்கியதும் நானும் அப்படியே நினைத்துக்கொண்டு பேசினேன். அவர் சொன்னபடி வெற்றியும் பெற்றேன்” என்று புன்னகைத்தபடி பதில் சொல்கிறார் அவர்.

அளவில் மிகச்சிறியவையாக இருந்தாலும், நினைத்து நினைத்து மகிழ்ச்சியடையும் வகையில் ஒவ்வொருவரும் ஒரு கதையை எழுதியிருக்கிறார்கள். இளம்படைப்பாளிகளான இருபத்துமூன்று பேரும் பாராட்டுக்குரியவர்கள். இச்சிறார்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி அவர்களுக்குத் துணைநிற்கும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள். கும்பகோணம் அரசு மேல்நிலைப்பள்ளியும் அங்கு இயங்கிவரும் காவேரி வாசிப்பு இயக்கமும் பாராட்டுக்குரியவை.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“மழைக்கப்பல்:- ஓர் அரசுப் பள்ளி மாணவர்களின் கதைகள்”
ஆசிரியர்:தொகுப்பு: சீ.கெளதமன், ரா.நாகலட்சுமி
வெளியீடு:
காவேரி வாசிப்பு இயக்கம், குமரசாமி நினைவு நூலகம், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்.
விலை:₹.15
அறிமுகம் எழுதியவர்:  
✍🏻 பாவண்ணன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *