C. Mohan in Enakku Veedu Nanbargalukku Arai Book Review by Pa, AshokKumar. Book Day is Branch of Bharathi Puthakalayam.

சி. மோகனின் “எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை” – பா. அசோக்குமார்“எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை”
சி. மோகன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் : 112
₹. 90

எழுத்தாளர் சி. மோகன் அவர்கள் குறித்து பரவலாக அறியப்பட்ட நிலையில் முதன்முதலாக நான் வாசிக்கும் அவரின் படைப்பு இதுவே ஆகும். முதல் படைப்பு கவிதை நூலாக இருந்தது எனது பாக்கியமே… அதனினும் இந்நூல் அவரின் முத்திரைப் படைப்புகளில் ஒன்றாக இருப்பது கூடுதல் சிறப்பு.

இக்கவிதை நூலில் கிட்டத்தட்ட 72 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கவிதைகள் எழுத்தாளரின் சுயசித்திர அனுபவங்களாகவே பளிச்சிடுகின்றன. தனது சுயத்தின் வழியே சமூகத்தின் இயல்பை கவித்துவமாக வெளிப்படுத்திய பாங்கில் பிரமிக்க வைத்துள்ளார் என்பதே நிதர்சனம்.

யதார்த்தமான தனிமையின் அனுபவங்கள் மனிதத்தின் சொரூபங்களை உள்ளது உள்ளபடி பகிர எத்தனித்த வகையில் மிரட்டியுள்ளதாகவே அவதானிக்கிறேன். வாழ்வில் தனிமையின் மீது அபரிதமான ஆசையை தீர்த்துக் கொள்ள உதவும் வடிகாலாகவும் இக்கவிதைகளை அணுகலாம் என்பது எனது எண்ணம்.

இந்நூலிலுள்ள சில கவிதைகளை முன்வைத்து ஐந்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன என்பது இக்கவிதைகளுக்கு கிடைத்த மணிமகுடமே…. எளிய வார்த்தைகளில் தன்னியல்பான வாழ்வியல் நிகழ்வுகளை ரசனையான பாங்கில் வெளிப்படுத்திய விதம் மிக அருமை.சக நண்பர்களிடம் வயதாகிக் கொண்டிருப்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தும் விண்ணப்பம் குறித்தான கவிதை மிக மிக தேவையானது தானே. “மரணத்திடம் ஒரு விண்ணப்பம் ” கவிதை பாரதியின் சாதல் குறித்த கவிதையை ஞாபகமூட்டுவதாகவே இருந்ததில் பெருமகிழ்வே.

“உன் முடிவுக்கு
ஒரு விநாடி முந்தியாவது
சுதாரித்துக்கொண்டு
விடைபெற்றிருப்பேன்”
~

தனது வீட்டில் (நண்பர்களுக்கு அறை) வாசம் செய்யும் பல்லி, கறுப்பு பூனை, வீட்டுச் செடிகள், கண்ணாடி வரிசையில் தவளை வரை கவிதைகளாக வடித்து பிரமிப்பில் லயிக்க வைத்துள்ளார் கவிஞர்.

“நிலத்தில் வாழ்வதால் அது
வீட்டில் வசிக்க ஏதுவானது
என்றாகிவிடுமா?”

~
குடி குறித்து எழுதியுள்ள கவிதைகள் தனிமையில் குடியிருக்கும் மனிதனின் குண இயல்புகளை எடுத்துரைக்கும் பாங்கில் புதிய கோணத்தில் ரசிக்க வைப்பதாகவே அமைந்துள்ளது.

” காதல் கடிதம்
வாசிக்கப்படுவதற்கும் எழுதப்படுவதற்கும்
காதல் மனம்
கசிந்துருகுவதற்கும் கலங்கியிருப்பதற்கும்
இன்னமும் நம்வசம் எஞ்சியிருக்கும்
அபூர்வங்களில் ஒன்று
பகல்நேர டாஸ்மாக் பார்”

~ஒரு சில கவிதைகளில் குறிப்பிட்ட வடிவத்தில் வார்த்தைகளை (பொருள்) எதிர்ப்பதமாக அமைத்து கவி வடித்த விதம் புதிய பரிமாணத்தில் அமைந்து ரசிக்க வைப்பதாகவே அமைந்துள்ளன.

” விலகிச் செல்வதற்கான குறைகளைச் சேகரித்தபடியே
நீ என்னுடன் பழகுவதற்கும்
பதறிக் கொள்வதற்கான நிறைகளைச் சேகரித்தபடியே
நான் உன்னுடன் பழகுவதற்கும்
ஒருவேளை நம் கனவுகளே
குற்றவாளிகளாகவும் இருக்கக்கூடும்”

~

காதல், காமம் குறித்த பார்வைகளும் மிக இயல்பான போக்கில் அமைந்து உணர்வினை கிளறிவிடச் செய்பவைகளாகவே அமைந்துள்ளன.

” காதலின் தார்மீகத்தோடும்
வேட்கையின் உந்துதலோடும்
நீ நிகழ்த்தும் ஆனந்தக் கூத்தில்
பரிபூரணமும் நறுமணமும் எய்துகிறது
புதிதாய்ப் பூத்த என் காமம்”

~

“குயிலின் குதூகலக் கூவலில்
குடியிருக்கிறது நம் பிரேமை”.

தலைப்பிடாமல் எழுதப்பட்டுள்ள சின்னஞ்சிறு கவிதைகள் ஒவ்வொன்றுமே ரசிக்கத்திஅக வகையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

“கதவைத் தள்ளித் திறக்கிறது காற்று
அரவமில்லாமல் அறைக்குள் நுழைந்தது வெளிச்சம்”

~

“என் வீட்டுக் கண்ணாடிக்குள்
பதுங்கியிருந்து கண்காணிக்கிறான்
என்னைப் போன்ற
பிறிதொருவன்”

~நான் விரும்பி ரசித்த கவிதைத் தலைப்புகளில் சில:

வரிசை, மாயக் கவித்துவம், காமப்பூ, உச்சகட்ட உச்சாடனம், ஆறுதல் – அருவெறுப்பு, கனவுகளின் குற்றங்கள், உருமாற்றம், காம வண்ணங்கள், நீயின்றி நான், நீங்கிய கோடை, மிருக வாய்த் தூக்கம், மரணத்துடன் ஓர் உரையாடல் மற்றும் பல…..

இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்துள்ள கவிதை மிக மிக ரம்மியமான அனுபவமே…
“எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை”

“தனித்து வசிக்கும் ஆணின் இடம்
அறைதான் போலும்”

“வீடுகளுக்குள் கட்டுண்டு கிடக்கும்
தங்கள் போக்கிரி ஆசைகளுக்கு வசதியாக
என் இருப்பிடத்தை
அறை என்றே அழைக்கிறார்கள்
நண்பர்கள்”

~

தனிமையின் துயரில் தன்னியல்புகளை எடுத்துரைப்பதாக பெருவாரியான கவிதைகள் இருந்த போதிலும் யாவற்றிலும் மிளிரும் அழகுணர்ச்சியும் தன்னம்பிக்கையுமே கவிஞரின் வெற்றியாகவே பாவிக்கிறேன்.

விரும்பி ரசித்த கவிதை வரிகளில் சில:

“கால வெக்கையில்
பட்டுப் போயின
அப்பாவின் கனவும்
அம்மாவின் கனிவும்”

~

எழுதப்படாத தாளுக்கு
முன்பின் பக்கமில்லை”

~

தீராக் காதலின் பாடலாகவும்
உனக்கான அழைப்பாகவும்
ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது
என் குறட்டை”

~

“ஒரு நாள் காலை
என் விருந்தோம்பலுக்கு நன்றி கூறி
நெற்றியில் முத்தமிட்டு
விடைபெற்றுச் சென்றுவிட்டது”
(துன்பத்தின் நேசம்)

~

இங்ஙனம் ரசித்த வரிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்…. கவிஞர் அதிகப்படியான இடங்களில் “ஆயினும், எனினும்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது ஆரம்பத்தில் ஒருவித குறையாகத் தெரிந்தது என்பதே உண்மை. ஆனால், தொடர்ந்து வரும் வரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பயன்படுத்திய விதம் புரிந்து ரசிக்க ஆரம்பித்தேன் என்பதும் மறுப்பதற்கில்லை….

அவ்வப்போது ஒவ்வொரு கவிதையாகப் படித்து அசை போட்டபடியே அடுத்த கவிதைக்கு நகர்ந்த அனுபவம் அலாதியானது. பல இடங்களில் நம்மை நாம் அடையாளங் காணவும் பல இடங்களில் நாம் கவனிக்கத் தவறிய நுணுக்கங்களை உணர்ந்து கொள்ளவும் இக்கவிதைகள் துணைபுரிகிறது என்பதே எனது அனுமானம்.

நல்லதோர் கவிதைத் தொகுப்பு. வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *