புத்தகக் காதல் (Puthaga Kadhal) நூலிலிருந்து…
போரிலும் வென்ற புத்தகக்காதலர்கள்..!
– சித்தார்த்தன் சுந்தரம்
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பைப் பார்க்கும் போதும் குறிப்பாக சென்னை, மதுரை, ஓசூர் நகரங்களில் நடைபெறும்போது அங்கு எப்போது செல்ல வேண்டும், எத்தனை நாள்களுக்குச் செல்ல வேண்டும், யாரையெல்லாம் சந்திக்க வேண்டும், என்னென்ன நூல்கள் வாங்க வேண்டுமென்கிற ஆர்வம் என்னையறியாமலே எனக்குள் ஏற்பட்டுவிடும். இது ஒரு போதை போல. இதைப் போதையைப் போக்குவதற்குத் de-addiction மையம் தேவையில்லை. மாறாக, மேலும் மேலும் நூல்கள் வாங்கி அதை வாசித்துத் தீர்ப்பதுதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல!
இப்படி புத்தகங்களின் மீது காதல் வயப்பட்ட சுப்பாராவ் சுமார் 23 கட்டுரைகளை எழுதி அதன் மூலம் பல நூல்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி வாசிப்பவர்களிடையே மேலும் போதையை ஏற்றியிருக்கிறார். அப்படி போதையேற்றக்கூடிய அவருடைய புத்தகம் `புத்தகக் காதல் (Puthaga Kadhal)’. ஒவ்வொரு கட்டுரையும் புத்தகத்தின் மீது நேசம் கொண்ட வாசகர்கள், சேகரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகளையும், அனுபவங்களையும் குறித்த நூல்கள் மற்றும் கட்டுரைகள் பற்றியதாகும்.
`ஓர் எளிய வாசகியின் புத்தகக் காதல் (Puthaga Kadhal)’ என்கிற கட்டுரையில் ஆரம்பித்து `போருக்குச் சென்ற புத்தகங்கள்’ என்கிற கட்டுரையோடு இந்நூல் முடிவடைகிறது. ஒரு புத்தகக் காதலியின் அடையாளங்களாக – அவளிடம் சொந்தமாக ஒரு நூலகம் இருக்க வேண்டும், ஒன்றரையடிக்கும் மேல் இருக்கும் நீளமான வார்த்தைக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும், புத்தகங்களைக் குழந்தைகளைப் போல கையாள வேண்டும், எழுத்துப்பிழை, இலக்கணப் பிழையைக் கண்டால் நக்கீரன் போல நெற்றிக் கண்ணைத் திறக்க வேண்டும் – பல குணங்களைக் கொண்ட ஆனி ஃபாடிமன் எழுதியிருக்கும் Ex-Libris – Confessions of a Common Reader என்கிற நூலை வாசித்த அனுபவத்தை நூலாசிரியர் இதில் எழுதியிருக்கிறார்.
ஆனின் வீட்டில் அவருக்கென்று ஒரு நூலகம், கணவருக்கென்று ஒரு நூலகம் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அதாவது, ஒரே நூலின் இரண்டு பிரதிகள் இருந்தால் என்ன செய்வது? (யாருடைய பிரதியை இரவல் கொடுப்பது அல்லது கடாசுவது?!), புத்தகங்களை எதன் அடிப்படையில் அடுக்குவது? இப்படியாக பல விஷயங்கள் குறித்து தனித்தனியாக எழுதப்பட்டக் கட்டுரைகளைக் கொண்டது ஆனின் நூல்.
அடுத்து யுத்த பூமியான சிரியாவில் ஒரு ரகசிய நூலகம் இயங்கி வந்தது குறித்து மைக் தாம்சன் எழுதிய `Syria’s Secret Library – Reading and Redemption in a town under Seige” என்கிற நூல் பற்றிய கட்டுரையாகும். இதன் ஆசிரியர் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற போது அவரை வியப்படையச் செய்த அனுபவங்களையே நூலாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. இதற்கான உதாரணங்கள் பல இருந்தாலும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்த ஒன்று சிங்களப் பேரினவாதிகளால் அழிக்கப்பட்ட யாழ் நூலகமாகும்.
உலகெங்கும் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. இது போல சிரியாவில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போருக்கு மத்தியிலும் சேதமடைந்த இடங்களிலிருந்து நூல்கள் சேகரிக்கப்பட்டு ஒரு ரகசிய நூலகம் கட்டியமைக்கப்பட்டு பிரபலமானது. ஒரு கட்டத்தில் ராணுவம் புரட்சியாளர்கள் அனைவரையும் கைது செய்து வேறொரு ஊரில் முகாமில் அடைத்தார்கள். ராணுவ வீரர்கள் வீடு வீடாகச் சோதனை செய்தபோது நூலகம் அவர்கள் கண்ணில் பட அதில் பல ஆயிரம் புத்தகங்களை லாரி,லாரியாக எடுத்துச் சென்று அழித்திருக்கிறார்கள். ஆனாலும் முழுமையாக அவர்களால் அதை அழிக்க முடியவில்லை.
அல்பர்டோ மங்கேல் என்பவர் தனது சேகரிப்பான 35,000 புத்தகங்களை வைக்க ஒரு பாழடைந்த தேவாலயத்தை வாங்கி அதை ஒரு நூலகமாக பராமரித்து வந்திருக்கிறார். அதன்பின் அவர் அவற்றையெல்லாம் மரப்பெட்டிகளில் அடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலைமை என தனது அனுபவங்களை `Packing my library’ என்கிற நூல் வாயிலாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
இது போல வாசகர்களும் பழைய புத்தகங்கள் விற்பவர்களுக்குமிடையேயான உறவு, புத்தகங்களை எப்படி, எதன் அடிப்படையில் அடுக்குவது, அழகுக் கலை நிபுணர்கள் போல புத்தகங்களை அலங்காரக் கலை நிபுணர்கள் உதவி கொண்டு அடுக்கும் புத்தகக் காதலர்கள், வாசிக்கும் போது தனது கருத்துகளை புத்தகப் பக்கங்களின் மார்ஜினில் எழுதும்/கிறுக்கி வைக்கும் வாசகர்கள், தனது வாசிப்பு அனுபவத்தையே நூலாக எழுதியிருக்கும் ஜோ குவினன், ஆப்ரிக்க உ.வே.சா.வான டாக்டர் அப்துல் காதர் ஹைதரா, நாம் வாசிக்கும்போது ஏதாவது ஒரு சொல்லுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமெனில் அகராதியைப் புரட்டுவோம், அதோடு சரி.
ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் சுருக்கப்படாத பதிப்பை அதாவது, 21,730 பக்கங்களை குறிப்பெடுத்துக் கொண்டே வாசித்த `அகராதி’யாளர்’ ஒருவர் இருந்திருக்கிறார். அவர் தனது அனுபவத்தை 173 பக்க நூலாக எழுதியது சுப்பாராவ் என்கிற புத்தகக் காதலரின் கண்ணில்பட அது குறித்த ஒரு சுவராசியமான கட்டுரை,
யூதர்களின் அழிந்த மொழியான `இட்டிஷ்’ ஷில் எழுதப்பட்ட புத்தகங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டு அந்த சேகரிப்பு அனுபவத்தையே `Outwitting History” என்கிற பெயரில் சிறு நூலாக எழுதிய ஆரோன் லான்ஸ்கி பற்றிய கட்டுரை ஆச்சரியமான ஒன்று. அவர் சேகரித்த நூல்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம். அவர் சேகரித்த புத்தகங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு ஒரே கூரையின் கீழ் இன்று இருக்கிறது என்பது மேலும் ஓர் ஆச்சரியமான விஷயம்.
இரண்டாம் உலகப் போரின்போது கோடிக்கணக்கான புத்தகங்கள், ஆயுதங்களோடு ஆயுதங்களாகப் போர்முனைகள் அத்தனைக்கும் போயிருக்கின்றன. மனச்சோர்வுற்று, வீட்டு நினைவு வந்து, போராடும் சக்தியை இழந்தக் கோடிக்கணக்கான போர் வீரர்களுக்கு புதிய உற்சாகமும், உத்வேகமும் தந்து, பாசிசத்தை வீழ்த்த அவை உதவியிருக்கின்றன. இது Molly Guptill Manning எழுதிய `When Books Went to War’ என்கிற நூலில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது `வாளை விட பேனா’ வலியது என்பதை நினைவுகூர்கிறது.
143 பக்கங்களே கொண்ட `புத்தகக் காதல் (Puthaga Kadhal)’ என்கிற இந்த நூல் புத்தக வாசகர்கள், ஆசிரியர்கள், விற்பனையாளர்கள், சேகரிப்பாளர்கள், நூலகர்கள் என நூலோடு சம்பந்தப்பட்ட அனைவரைப் பற்றியும் பல அரிய, ஆச்சரியமான செய்திகளைக் கொண்டிருக்கிறது. இந்நூலை வாசிக்கும் போது நம்மையும் சில சம்பவங்களோடு நடவடிக்கைகளோடு எளிதாகப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது. இதில் இடம் பெற்றிருக்கும் நூல்களையும், கட்டுரைகளையும் பட்டியலிட்டால் அதுவே அனுமனின் வால் போல நீண்ட ஒன்றாக இருக்கும்.
இந்நூலை வாசிக்கும் போது எனக்கேற்பட்ட ஆச்சரியமென்னவெனில், நூலாசிரியருக்கு இந்த நூல்கள் குறித்த செய்திகள் / தகவல்கள் எங்கிருந்து கிடைத்தது, அதை எப்படித் தேடிக் கண்டுபிடித்தார் என்பது தான். இன்னும் நான் அதிலிருந்து மீளவில்லை. வாசிப்பு எனும் போதையை இந்நூல் மேலும் அதிகமாக்கியிருக்கிறது. அடுத்து, இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில நூல்களையாவது வாங்கி முழுவதுமாக வாசித்தால்தான் போதை இறங்கும் என நினைக்கிறேன். கண்டடைவேன் என்கிற நம்பிக்கையில் தேடல் ஆரம்பம்.
புத்தகக் காதலர்களே இந்நூலை வாசிக்கத் தவறாதீர்கள்! இதுவரை புத்தகங்களின் மீது காதல் கொள்ளாதவர்கள் கூட இந்நூலை வாசித்தபின் காதல் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்!!
*****************
நூலின் விவரங்கள்:
புத்தகத்தின் பெயர்: புத்தகக் காதல் (Puthaga Kadhal)
ஆசிரியர்: ச. சுப்பாராவ் (C. Subbarao)
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
விலை ரூ 150.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
– சித்தார்த்தன் சுந்தரம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.