குறுங்கதை: அழைப்பு மணி – உதயசங்கர்

Calling Bell (அழைப்பு மணி) Short Story By Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam.மீண்டும் அழைப்பு மணியின் ஒலி கேட்டது. நான் கதவைத் திறக்கவில்லை. காலையிலிருந்து பத்தாவது முறையாக அழைப்பு மணி அடிக்கிறது. முதலில் அடித்தபோது வியூஃபைண்டர் வழியாக வெளியே பார்த்தேன். வாசலுக்கு முன்னால் யாரும் இல்லை. திரும்பி ஹாலுக்கு வருவதற்குள் மறுபடியும் அழைப்பு மணி அடித்தது. மீண்டும் மீண்டும் கதவுக்கண்ணாடி வழியே பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தேன். என்னுடைய அறை நண்பர் ஊருக்குப் போயிருந்தார். ஒருவேளை அவர் திரும்பியிருக்கலாமென்ற எண்ணமே முதலில் எனக்குத் தோன்றியது. ஆனால் ஆள்நடமாட்டமே இல்லாத வீதிகளும் மாடியில் யார் ஏறினாலும் கீச்சிட்டு அறிவித்துவிடும் படிகளும் அமைதியாக இருக்க அழைப்புமணி மட்டும் அடித்துக் கொண்டேயிருந்தால்….இப்போது பயத்தின் கொடிகள் என்னைச் சுற்றிப் படர்ந்தன. நான் அப்படியே கொஞ்சநேரம் மூச்சு விடக்கூட மறந்து கதவுக்கண்ணாடி வழியே வெளியே பார்த்துக் கொண்டேயிருந்தேன். எந்தச் சிறு அனக்கமுமில்லை.

ஊரில் முழு ஊரடங்கு போடப்பட்டிருந்தது. எந்த நடமாட்டமுமில்லை. ஒரு காக்கை குருவியின் சத்தமும் இல்லை. நகரம் அமைதியாக இருந்தது. அமைதியும் வெயிலும் மரணத்தைப் போல கொடூரமாக இருந்தன. இறந்தவர்களைப் பற்றி மட்டுமே தொலைக்காட்சி செய்திகள் சொல்லிக்கொண்டிருந்தன. செய்திகளை வாசிக்கிற வாசிப்பாளர்களின் கண்களில் மரணத்தின் நிழல் தெரிந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது உலகம் அழியப்போகிறதோவென்று தோன்றியது. வீட்டுக்கு வெளியே மரணம் காத்துக் கொண்டிருப்பதாகவே எல்லோரும் நம்பினார்கள். நானும் அப்படித்தான் நம்பினேன். இந்த நேரத்தில் என்னுடைய அறை நண்பர் ஊருக்குப் போயிருக்க வேண்டியதில்லை. அப்படியே இருந்தாலும் இப்போதைய நிலைமையில் அவர் வராமல் இருப்பதே அவருக்கு நல்லது. இல்லையில்லை எனக்கு நல்லது. 

Calling Bell (அழைப்பு மணி) Short Story By Writer Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam.

மறுபடியும் அழைப்புமணி அடித்தது. அழைப்புமணியின் மின்சாரக்கட்டுப்பாட்டுச் சுவிட்சை அணைத்து வைத்தேன். என்னுடைய அலைபேசியை எடுத்தேன். யாரையாவது அழைக்கலாமா என்று யோசித்தேன். யார் வந்தாலும் அவருடன் மரணமும் வந்து விடுமோவென்று பயம் வந்தது. அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்தேன். வேறு விஷயங்களைப் பற்றி யோசிக்கலாம் என்று நினைத்தால் அந்த அறைக்குள் எந்த விஷயமும் நுழைய மாட்டேனென்றது. அறைக்குள் இரண்டு சன்னல்கள் வழியே வெளிச்சம் வந்தாலும் அறையிலிருந்த இருளை விரட்டமுடியவில்லை. இருந்த எல்லா விளக்குகளையும் போட்டேன். ஆனாலும் கூட இருள் மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது. சன்னல் வழியே வெளியே பார்த்தேன். அறை வேறொரு கிரகத்தில் மிதப்பதைப் போலிருந்தது. அறையே கூட இன்னொரு கிரகமாகச் சுழன்று கொண்டிருந்தது. எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது. ஏதாவது மனித நடமாட்டத்தைப் பார்த்தாலாவது மனம் ஆசுவாசமடையலாமென்று சன்னல் வழியே வெளியே பார்த்தேன்.

வெளியே வீடுகளெல்லாம் தனித்தனிக் கிரகங்களாகச் சுழன்று கொண்டிருந்தன. எல்லாச் சன்னல்களிலும் ஒரு முகம் தெரிந்தது. அந்த முகங்களெல்லாம் என்னுடைய முகமாகவே தெரிந்தது. அந்த முகத்துக்குப் பின்னால் தெரிவது யாருடைய ஒரு நிழல்?

மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது.

உதயசங்கர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.