குழந்தைகளுக்கான கதைகளில் விலங்குகளை மனித இயல்புகளோடு சித்தரிப்பது நெடுங்காலமாகத் தொடர்கிறது. 2014ம் ஆண்டில் இது தொடர்பான ஆய்வு ஒன்றை டொரோன்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டார்கள். இது உண்மைத் தகவல்களின் அடிப்படையிலான கற்றல் திறனைக் குறைத்துவிடுகிறது என்றும், சக உயிரினங்கள் பற்றிய புரிதல்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விலங்குகளை அவற்றின் உண்மையான இயல்புகளோடு காட்டும் புத்தகங்களை விட, மனிதர்களின் குணங்களோடு சித்தரிக்கும் புத்தகங்களைப் படிக்கிற பிஞ்சு வாசகர்கள், மனித நடத்தைகளையும் உணர்ச்சிகளையும் விலங்குகளோடு பொருத்திப் பார்க்கிறார்கள் என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
“விலங்குகளை மெய்யாகச் சித்தரிக்கிற புத்தகங்கள் கூடுதலாகக் கற்றுக்கொள்வதற்கும், உயிரியல் குறித்து மேலும் துல்லியமான புரிதலுக்கும் இட்டுச்செல்கின்றன,” என்கிறார் ஆய்வுக்குழு தலைவரும், சிறப்பு உளவியல் மற்றும் மனித மேம்பாட்டுத்துறை துணைப் பேராசிரியருமான பேட்ரிகா கனீயா. “வளர்ந்த குழந்தைகள் கூட புத்தகங்களில் விலங்குகள் மனித இயல்புகளோடு காட்டப்படுவதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள், மெய்யாகச் சித்தரிக்கும் புத்தகங்களை விட மாயாவுலகக் கற்பனைக் கதைகளைப் படிக்கிற குழந்தைகள் அதிக அளவுக்கு மனித நடத்தைகளை விலங்குகளோடு பொருத்திப் பார்க்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தபோது நாங்கள் வியப்படைந்தோம்,” என்கிறார் அவர்.
‘ஃபிரன்டியர்ஸ் இன் சைக்காலஜி’ என்ற இணையத்தள உளவியல் அறிவியல் ஏட்டில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. உண்மை உலகத்தைப் பற்றிக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காகப் பெரியவர்கள் எந்த வகையான புத்தகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தாக்கம் செலுத்தக்கூடியதாகக் கருதப்படும் இந்த ஆய்வு குறித்தும், உயிரியல் உலகம் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்ல விரும்புகிற பெற்றோர்கள் செய்ய வேண்டியது குறித்தும் பேசுகிறார் கனீயா. குழந்தை இலக்கியம் தொடர்பான விவாதங்களோடு, சக உயிரினங்களின் புவியுரிமை பற்றிய சிந்தனைகளும் இன்று முன்னுக்கு வரத் தொடங்கியிருக்கின்றன. இத்தகு சூழலில் இந்த ஆய்வுக் கருத்துகளோடு ஒருவர் உடன்படலாம் அல்லது மாறுபடலாம். ஆயினும் இதுவொரு முக்கியப் பேசுபொருளாக வேண்டும் என்ற விருப்பத்தோடு ‘புக் டே’ மேடையில் வைக்கப்படுகிறது.
பேட்டி: எழுத்தாளர் டொமினிக் அலி
(குழந்தைகளை ஊடகங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைச் சொல்லும் ‘மீடியா மேட்னெஸ்’ என்ற புத்தகத்தை எழுதி விருதுபெற்றவர்.
தமிழில்: அ.குமரேசன்
படங்களுடன் வருகிற புத்தகங்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா, அல்லது நாவல் உள்ளிட்ட எழுத்தாக்கங்களும் இதே விளைவை ஏற்படுத்துகின்றனவா?
எங்களின் ஆராய்ச்சி இதுவரையில், மழலையர் பள்ளி அளவில் உள்ள குழந்தைகள், படங்களுடன் கூடிய புத்தகங்களிலிருந்து எந்த அளவுக்கு உண்மைத் தகவல்களின் அடிப்படையிலான அறிவைப் பெறுகிறார்கள் என்பதைப் பற்றியதுதான். ஆயினும், வளர்ந்த குழந்தைகளுக்கும் கூட, கற்பனைமயமான சித்தரிப்புகள் ஒரு சவாலாகவே அமையக்கூடும். கற்பனைச் சித்தரிப்புகளிலிருந்து மாறுபட்டு, உண்மை உலகத்தோடு உள்ளார்ந்து பொருந்துகிற கதையின் உள்ளடக்கத்தை அவர்கள் பிரித்துப் பார்க்க வேண்டியவர்களாகிறார்கள். குழந்தைகள் கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த முறையில் கற்றுக்கொள்கிற திறன் வயதாக வயதாக வளர்கிறது. அது பெருமளவுக்கு கற்பனைமயத்திலிருந்து உண்மை நிலைகளை வேறுபடுத்திப் பார்க்கிற திறனோடு தொடர்புடையதாக இருக்கிறது.
பல புத்தகங்கள் – குறிப்பாகப் படங்களுடன் வருகிற புத்தகங்கள் – மனித இயல்புகள் ஏற்றப்பட்ட விலங்குளைப் பயன்படுத்துவது ஏன்?
இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு விலங்குகள் சுவாரசியமாக இருக்கின்றன, விலங்குளைப் பயன்படுத்திச் சொல்லப்படும் கருத்துகள் இளம் குழந்தைகளை மிகுதியாகக் கவர்கின்றன என்ற அனுமானத்திலிருந்து வந்ததாக இருக்கலாம். புத்தகங்களில் வருகிற விலங்குக் கதாபாத்திரங்கள் ஆடைகள் அணிந்திருக்குமானால், அவற்றிற்குப் பெயர்கள் இருக்குமானால், அவை மனிதர்கள் போல நடந்துகொள்ளுமானால் குழந்தைகள் அந்தக் கதாபாத்திரங்களோடு அதிகமாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் என்ற எண்ணத்திலிருந்தும் இது வந்திருக்கலாம்.
ஆயினும், விலங்குகளையும் அவற்றின் வாழிடச் சூழல்களையும் மனித இயல்புகளோடு இணைத்துச் சொல்வது எல்லாப் பண்பாடுகளிலும் பரவியிருக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம். தங்களின் அன்றாட வாழ்வில் உண்மை விலங்குகளோடு கூடுதலாக நேரடித் தொடர்பு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு, புத்தகங்களில் விலங்குகள் மனித இயல்புகளோடு சித்தரிக்கப்படுவதால் ஏற்படும் தாக்கம் குறைவுதான் என்ற வாய்ப்பும் இருக்கிறது.
குழந்தைகள் விலங்குகளை மனித இயல்புகளோடு காண்பதில் என்ன தவறு இருக்கிறது?
விலங்குகளை அவைகளின் இயற்கையான தன்மைகளோடு மெய்யாகச் சித்தரிப்பதற்கு மாறாக, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக, மனிதர்கள் சார்ந்த வழிகளில் சித்தரிப்பதால் குழந்தைகள் அறம் சார்ந்த கருத்துகளைப் புரிந்துகொள்கிற வாய்ப்பு அதிகம் என்று காட்டுகிற ஆதாரம் எதும் இல்லை. பொதுவாக இயற்கையான உலகத்தைப் பற்றிய ஆர்வத்துடிப்பு கொண்டவர்கள் குழந்தைகள். ஆகவே, விலங்குகளையும் அவற்றின் சூழல்களையும் துல்லியமாக, அறிவார்ந்த முறையில் காட்டுகிற புத்தகங்களால் அவர்கள் ஈர்க்கப்படுவதற்கும், அவற்றை விரும்பி ஏற்பதற்கும் மிகுந்த வாய்ப்பிருக்கிறது.
படங்களுடன் கூடிய புத்தகங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விலங்குகளை மனித இயல்புகளோடு காட்டுவது, விலங்குகளின் செயல்முறைகள் குறித்தும் தேவைகள் குறித்தும் குழந்தைகளிடம் தவறான எண்ணங்கள் உருவாக இட்டுச்செல்லக்கூடும். உயிரியல் புலம் பற்றிய அறிவியல்பூர்வ விளக்கங்களைப் பெறுகிற திறனில் குறுக்கிடக்கூடும்.
ஒரு குழந்தை வாசிக்கிறபோது, வேறு எந்த வகைனயான “தகவல்பூர்வ கற்றல்” செயல்பாடுகள் நடக்கக்கூடும்? கற்பனையான கதாபாத்திரங்கள் விலங்குகளாக இருக்குமானால், (துயரம், கோபம், முரண்பாடு, ஏமாற்றம், தோல்வி போன்ற) சவால்களை அந்தக் கதாபாத்திரங்கள் எப்படிக் கையாளுகின்றன என்று பார்ப்பது அவர்களுக்கு எளிதாக இருக்குமா?
புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்வதில், அவற்றிலிருந்து சமூக நெறிகளையும் அற நெறிகளையும் தங்களுக்குள் கடத்திக்கொள்வதில் குழந்தைகளின் திறனை முறையாக ஆராய்ந்து அறிவதற்குத் தொடர்ந்து ஆய்வுகள் தேவைப்படுகின்றன. குழந்தையின் கண்ணோட்டத்திலிருந்து மிகவும் விலகிப்போன கதாபாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நுட்பமான சமூக நிலைமைகளையும் அறநெறிச் சிக்கல்களையும் சித்தரிப்பதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்டலாம். அதனால், குழந்தைகள் புத்தகத்திலிருந்து பெற்ற தகவல்களைத் தங்களது உண்மை உலகத்திற்குக் கடத்தாமல் விட்டுவிடக்கூடும்.
தற்போதைய ஆராய்ச்சியிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், குழந்தைகள் புத்தகங்களில் உள்ள கற்பனைமிகு கதைகளைக் காட்டிலும், உண்மைத்தன்மை வாய்ந்த கதைகளிலிருந்து பெறுகிற தகவல்களையோ, நடைமுறைத் தீர்வுகளையோ மெய்நிலைக்குக் கடத்தக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இளம் வாசகர்களின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உங்களது ஆலோசனை என்ன?
பல வகைப்பட்ட புத்தகங்களும் குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்யுங்கள், தான் ஏற்கெனவே தெரிந்துவைத்திருப்பதோடு ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் எவ்வாறு தொடர்புள்ளதாகிறது என்பதில் குழந்தையின் கவனத்தை ஈர்த்திடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே தெரிந்துவைத்திராத விலங்குகள் பற்றிய புத்தகம் ஒன்றை உங்கள் குழந்தையோடு உட்கார்ந்து வாசிக்கிறீர்கள் என்றால், குழந்தை முன்பே பார்த்திருக்கிற அல்லது கேள்விப்பட்டிருக்கிற விலங்குகளோடு தொடர்புபடுத்துவதும், அவை எவ்வாறு ஒரே மாதிரியாக இருக்கின்றன என்றோ, அல்லது மாறுபடுகின்றன என்றோ பேசுவதும் உதவிகரமாக இருக்கும்.
நன்றி: U of T News (டொரோன்டோ பல்கலைக்கழக செய்தி ஏடு)
—
அ. குமரேசன்