Discover the climate change impact of environmental effects on our planet. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? - சுற்றுச்சூழல் கட்டுரை

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமா..?

காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா?  – த.வி. வெங்கடேஸ்வரன்

சமீபத்தில் வடஇந்தியாவில் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றிந்தேன். இயல்பாகவே கால நிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விவாதம் சென்றது. ஒரு மாணவி ஆக்ரோஷமாக உணர்ச்சி மேலிட பேசினார். என்னையும் அரங்கில் இருந்த சில மூத்தவர்களையும் சுட்டிக்காட்டி “நீங்கள் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள். நீங்கள் உங்கள் இளமையை சுகமாக கழித்து விட்டீர்கள். நீங்கள் இளமையாக இருந்தபோது, 1980ம் ஆண்டில் வளிமண்டல கார்பன் அளவு 338 ppm. இப்போது 2023ல் 419 ppm. எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டீர்கள். புவி தாங்கும் அளவைவிட நுகர்ந்து நுகர்ந்து சுரண்டி விட்டீர்கள். புவியை அழித்துவிட்டு எங்கள் வாழ்வை பாழாக்கிவிட்டீர்கள். ஆபத்தில் இருக்கும் பூமியை எங்களிடம் தந்துவிட்டு எங்களுக்கு உபதேசம் செய்ய உங்களுக்கு தகுதி இல்லை”என்று பொரிந்து தள்ளிவிட்டார். “இனி செய்ய ஏதுமில்லை; காலநிலை மாற்றத்தை தாங்கிக்கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும்” என வருத்ததோடு பேசி முடித்தார். அதாவது காலநிலை மாற்றம் என்பது நிதர்சனம்- இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதே அவரின் கருத்தாக இருந்தது.

அடுத்ததாக நான் பேச வேண்டும். எனது உரையை ஒரு கேள்வியோடு துவக்கினேன். “இங்கே யாருக்கு ஓசோன் ஓட்டை குறித்து தெரியும்?” என்ற என் கேள்விக்கு என் முன்னர் அமர்ந்திருந்த இளம் மாணவ- மாணவியர் யாருக்கும் பதில் தெரியவில்லை. அவர்கள் முகத்தில் கேள்விக்குறி படிந்திருந்தது.

ஓசான் படலத்தில் ஓட்டை

நான் என் இளங்கலைப் படிப்பை 1980-84 காலகட்டத்தில் முடித்தேன். கல்லூரி மாணவனாக இருந்தபோது எங்கும் ஒரே பேச்சு- “ஓசோசன் படலத்தில் ஓட்டை விழுந்து பெரிதாகிக்கொண்டே போகிறது; ஓசோன் படலம் அழிந்தால் தீங்கு விளைவிக்கும் புறஊதாக்கதிர் பூமியை வந்து அடையும். புறஊதாக்கதிர் தோல் புற்றுநோயை ஏற்படுத்தும். உடலில் புகுந்து மரபணு மாற்றங்களை உருவாக்கும். உலகம் அழியப்போகிறது; எல்லோரும் புற்று நோய் வந்து மடிய போகிறார்கள்”. பதைப்பான காலம் அது.

இன்று எவரும் அவ்வளவாக ஓசோன் ஓட்டை குறித்து அலட்டிக்கொள்வதில்லை. ஏன்? அன்று எடுத்த நடவடிக்கை காரணமாக இன்று ஓசோன் ஓட்டை சீர்பட்டு வருகிறது (1). இதே போக்கில் சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் ஓசோன் படலம் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.

உலகமே அழியப்போகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்திய ஓசோன் ஓட்டை சிக்கல் எப்படித் தீர்ந்தது? புவி முழுவதையும் அச்சுறுத்தும் பெரும் சவாலை வெற்றிகரமாக தீர்வுக்கு கொண்டுவந்த அந்த முயற்சியிலிருந்து பாடம் கற்று ஏன் புவி வெப்பமடைதல் பிரச்சனைக்குத் தீர்வு காணவில்லை?

சுருக்கமான பதில்: – இடையில் ஏற்பட்ட மயக்கம்.

சோசலிசம் கம்யூனிசம் எல்லாம் காலாவதியான கருத்து; நவீனத்துவ எதிர்ப்பு, பின் நவீனத்துவ சார்பு என்றெல்லாம் பேசி சந்தைசார் தீர்வுகளையும் சூழலியல் பார்வை என்ற பெயரில் இயற்கைக்குத் திரும்பிப் போவோம் என்ற கற்பனாவாத தீர்வுகளையும் பின்தொடர்ந்து சென்றதன் விளைவு இது.

ஓசோன் ஓட்டை எப்படி ஏற்பட்டது?

குளிர்சாதனப் பெட்டிகள், ஹேர் ஸ்ப்ரே கேன்கள், ஆழ் உறைப்பெட்டிகள் பயன்படுத்திய CFC எனும் குளோரோபுளோரோகார்பன் வாயுதான் ஓசோன் படலத்துக்கு முக்கிய எமனாக அமைந்தது. இதுபோல வேறு சில வேதிப்பொருள்களும் ஓசோன் படலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை.

குளிர்சாதனப் பெட்டி, ஹேர் ஸ்ப்ரே கேன், ஆழ் உறைப்பெட்டி பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்றோ, இயற்கையில் முன்னர் எப்படி இருந்தோமோ அப்படியே இந்த தொழில்நுட்பங்களைப் புறக்கணித்து வாழ்ந்து விடுவோம் என்று அன்று யாரும் சொல்லவில்லை. நவீனத்துக்கு முந்தைய இயற்கைக்கும் திரும்பிப் போகவில்லை. வியப்பாக அன்று இருந்ததைவிட இன்று உலகம் முழுவதும் கூடுதல் குளிர்சாதன பெட்டிகள், ஹேர் ஸ்ப்ரே கேன்கள், ஆழ் உறைப்பெட்டிகள் உள்ளன. எனினும் ஓசோன் ஓட்டை சிக்கல் இல்லை.

இது எப்படி சாத்தியமானது? ஒசோன் படலத்தைச் சிதைக்கும் வேதிப்பொருள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தியதன் தொடர்ச்சியாக இன்று ஓசோன் படலம் சீரடைந்து வருகிறது.

ஓசோன் ஓட்டையை ஏற்படுத்தும் பொருள்களை நீக்கும்படியான சர்வதேச உடன்படிக்கை ஏற்பட்டது. 1987இல் சர்வதேச மாண்ட்ரியல் ஒப்பந்தம் நிறைவேறியது. சர்வதேசக் கண்காணிப்பின்கீழ் ஒவ்வொரு நாடும் முறையாக செயல்படுவதை கண்காணிக்க முடிந்தது. மாற்றுப் பொருட்களுக்கு மாறுவது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் படிப்படியாக ஓசோன் ஓட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள திட்டம் தீட்டப்பட்டது. குளோரோபுளோரோகார்பன் தொழில்நுட்பத்துக்கு மாற்று கண்டுபிடிக்கப்பட்டது.

முழுமையாக செழுமையுராத நிலையில் பல மாற்றுத் தொழில்நுட்பங்கள் அன்றே இருந்தன. தங்களது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்துவிடக்கூடாது என்பதற்காக சில பன்னாட்டு கம்பெனிகள் இவற்றின் உரிமத்தை தங்கள் கட்டுக்குள் வைத்து இருந்தார்கள். ஆனால் மாற்று தொழில்நுட்பங்கள் பயனுக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. எனவே இந்த பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றுத் தொழில்நுட்பத்தை விரைவில் கண்டுபிடிக்க முனைப்பு காட்டினார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகள் மாற்று தொழில்நுட்பத்துக்கு மாறத் தேவையான நிதி உதவி அளிக்க சர்வதேச நிதியம் அமைக்கப்பட்டது. பழைய தொழில்நுட்பத்தில் செயல்படும் குளிர்சாதனப் பெட்டியை திருப்பினால் நுகர்வோருக்கு செலவு இன்றி புதிய மாற்றுத் தொழில்நுட்ப குளிர்சாதனப் பெட்டி அளிக்கப்பட்டது.

இன்று உலகம் முழுவதும் குளோரோபுளோரோகார்பன் உற்பத்தியும் பயன்பாடும் முற்றிலும் இல்லை.

இவையெல்லாம், தானே நடந்துவிடவில்லை. .

வரலாறு முக்கியம்

அண்டார்டிகாவின் வானிலை குறித்த வரலாற்றுத் தரவுகளை கேம்பிரிட்ஜ் இங்கிலாந்தைச் சார்ந்த வானிலை நிபுணரான ஜொனாதன் ஷாங்க்லின் 1970களின் பிற்பகுதியில் ஆய்வு செய்து வந்தார். டாப்சன் ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர் எனும் கருவி கொண்டு ஓசோன் படலத்தின் தடிமனை அளவிட முடியும். இந்தத் தரவுகளைப் பகுத்து சேகரிப்பதுதான் அவர் திட்டம். பிள்ளையார் பிடிக்கப்போக குரங்காக வந்த கதை என்பார்கள் அல்லவா? அதுபோலத் தான் இங்கே நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று.

பூமிக்கு மேலே சுமார் 10 முதல் 50 கிமீ இடையே உள்ள வளிமண்டலப்பகுதியில்தான் ஓசோன் படலம் போர்வை போல படர்ந்து இருக்கும். சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சை ஓசோன் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் புவியின் தரைக்கு மேலே சொற்ப அளவில்தான் புற ஊதக் கதிர் படியும். ஓசோன் படலம் இல்லாமல் இருந்து, பூமியின் மேலே சூரியனின் புறஊதாகதிர் பிரகாசமாக படர்ந்து இருந்தால் ஒருவேளை பூமியில் உயிரே பரிணமித்து இருக்காது.

1950 முதல் பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு நிலையம் அண்டார்டிகாவிற்கு மேலே ஓசோன் படலத்தின் தடிமனை அளவிடத் துவங்கியது. பல ஆண்டுகளின் ஓசோன் படல தடிமன் அளவை பகுத்துப் பார்த்த ஷாங்க்லின் அதிர்ச்சி அடைந்தார். 1950களை ஒப்பிடும்போது 1970களின் பிற்பகுதியில் ஓசோன் படலத்தின் தடிமன் குறைந்து, மெலிந்து வருவதைக் கண்டார்.

ஷாங்க்லினுடைய கண்டுபிடிப்பை யாரும் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் 1984 வாக்கில், அண்டார்டிகாவின் ஹாலி விரிகுடா ஆராய்ச்சி நிலையத்திதில் பதிவு செய்யப்பட்ட ஓசோன் படல தடிமன் தரவுகள் மேலும் அதிர்ச்சியான தகவலை வெளிப்படுத்தின. 1950களை ஒப்பிடும்போது மூன்றில் ஒருபகுதியாக தடிமன் குறைந்து போய்விட்டது என ஷாங்க்ளின், ஜோ ஃபார்மன், பிரையன் கார்டினர் ஆகியோர் கொண்ட குழு நிறுவியது. ஓசோன் படல தடிமன் மெலிந்து வருவதை ஊடகங்கள் “ஓசோன் ஓட்டை”என்று கூறின. இந்தப் பெயரே நிலைத்து விட்டது.

ஓசோன் ஓட்டை ஏற்பட்டு வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், எதனால் இந்த ஓட்டை ஏற்படுகிறது என்பது பெரும் விவாதமாக மாறியது.

மரியோ மோலினா, எஃப். ஷெர்ரி ரோலண்ட் ஆகிய விஞ்ஞானிகள் ஓசான் படலம் மெலிந்து வருவது ஏன் என்று தெரிந்துகொள்ள 1974களில் ஆய்வை மேற்கொண்டனர். ஹேர் ஸ்ப்ரே கேன்களில் பயன்படுத்தப்படும் ஏரோசோல்கள் எனும் நுண்திவலைத்துளிகள், குளிரூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் குளோரோஃப்ளூரோகார்பன்கள் (CFC கள்) முதலியவைதான் ஓசோன் படலத்தை அரித்து அழித்துக்கொண்டிருகிறது என அவர்களது ஆய்வு தெள்ளத்தெளிவாகக் கூறியது.

எதிர்பார்த்ததுபோலவே ஸ்ப்ரே தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் குளிரூட்டும் பொருள்களை தயாரிக்கும் தொழில்துறை ஆகியவை இந்த ஆய்வை கடுமையாக விமர்சனம் செய்து எதிர்த்தன. ஸ்ப்ரே அடிக்கும் போது புஸ் என்று வெளிப்படும் சிறிதளவு குளோரோஃப்ளூரோகார்பன் பத்து பதினைந்து கிலோமீட்டர் உயர்ந்து சென்று அண்டார்டிகா மீது உள்ள ஓசோன் படலத்தில் வினைபுரிய முடியுமா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்.

சர்ச்சைகளுக்கு இடையே 1985இல் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே தீவிர ஆய்வை மேற்கொண்டது. படலம் மெலிந்து வருவது உறுதிப்பட்டது. மேலும் தொழில்துறை உற்பத்தி செய்யும் குளோரோஃப்ளூரோகார்பன்கள் தாம் ஓசோன் சிதைவுக்கு காரணம் என்பதையும் உறுதிபட நிரூபித்தது. இதன் தொடர்ச்சியாக 1995ஆம் ஆண்டு மோலினா மற்றும் ரோலண்ட் ஆகியோர் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

மாண்ட்ரியல் ஒப்பந்தத்துக்குப் பிறகு வெறும் பதினைந்து ஆண்டுகளில் CFCகளின் உற்பத்தி மற்றும் நுகர்வு முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு நிலவரப்படி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட 98% இரசாயனங்கள் படிப்படியாக நீக்கப்பட்டுள்ளன.

மாண்ட்ரியல் ஒப்பந்தம் ஏற்பட்டு கறாராக கடைபிடிக்காமல் இருந்திருந்தால் 2050க்குள் உலகம் முழுவதும் ஓசோன் படலம் அண்டார்டிகாவில் ஓசோன் படலம் மெலிந்த அளவுக்கு அபாயகரமாக மெலிந்து போயிருக்கும். உயிர் வாழத் தகுதியற்ற கோளாக பூமி மாறியிருக்கும்.

வளிமண்டலத்தில் புகும் குளோரோஃப்ளூரோகார்பன்கள் சுமார் ஐம்பது முதல் நூற்று ஐம்பது ஆண்டுகள் சிதையாமல் வளிமண்டலத்தில் புழங்கும். எனவே சீர்படும் வேகம் மெதுவாகத்தான் உள்ளது. எனினும் அறிவியல் ஆய்வுகளின் மதிப்பீடுகள்படி 1980க்கு முந்தைய நிலைக்கு 2050க்குள் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, ஓசோன் ஓட்டை அடைபட்டு விட்டது; பூமிக்கு வந்த ஆபத்து அகன்று விட்டது.

அறிவியல் மட்டும் காரணம் அல்ல

ஓசோன் ஓட்டை ஏற்படுத்தும் திறன் உள்ள மூலக்கூறுகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவது; குளோரோஃப்ளூரோகார்பன்களுக்கு மாற்று; ஒப்பந்தம் முறையாக அமல் ஆகிறதா என கண்காணித்தல் எனப் பலத் தளங்களில் அறிவியல் ஆய்வுகள் முக்கியப் பங்கு அளித்தன. என்றாலும் அறிவியல் ஆய்வுகள் மட்டுமே ஓசோன் ஓட்டை சிக்கல் தீர்வுக்கு காரணம் அல்ல.

குளிர்பதனத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் ஓசான் ஓட்டை யதார்த்தத்தை மறுத்தனர். தங்களின் லாபத்தைப் பாதுகாக்க ஓசான் ஓட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருள்களைக் கைவிட்டு மாற்றுத் தொழில்நுட்பத்தை கைகொள்ள தாமதம் செய்தனர். ஏன் அண்டார்டிகாவில் மட்டும் ஓட்டை ஏற்படுகிறது என்பது போன்ற போலி திசைதிருப்பும் வாதங்களை முன்வைத்து பொதுமக்களைக் குழப்பினர். The Holes in the Ozone Scare: The Scientific Evidence that the Sky is Not Falling (Maduro and Schauerhammer 1992) போன்ற நூல்களை தூண்டிவிட்டனர். ஆண்டுதோறும் கடல் நீர், எரிமலைகள், கடல்வாழ் உயிரினங்கள் மூலம் வெளிப்படும் குளோரின் அளவு CFC வழியே உமிழப்படும் அளவைவிட கூடுதல் என்றும் எனவே CFCக்கு கட்டுப்பாடு விதிப்பது தேவையற்றது என்று இந்த நூல் வாதம் செய்தது. மேலும் குளிர்சாதனப் பெட்டி பற்றாக்குறையால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும், அதன் தொடர்ச்சியாக பசியால் மக்கள் மடிவார்கள். எனவே “மக்கள் தொகைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக”ஓசோன் படலப் பாதுகாப்பை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் பரிந்துரைக்கின்றனர் என்ற நயவஞ்சகமான வாதத்தையும் இந்த நூல் வெளிப்படுத்தியது.

இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லை என்று அறிவியல் ஆய்வுகள் முடிந்து விடாது. எனவே அறிவியலில் எப்போதும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு எனக் கூற முடியாது. குளோரோஃப்ளூரோகார்பன் மட்டுமே காரணம் என உறுதியாகக் கூற முடியாது. அறிவியலின் முடிவுறாத, இறுதி வடிவம் பெறாத தன்மையைப் பயன்படுத்தி சந்தேகப் பார்வையை விதைக்கும் போக்கை கையாண்டனர். முதலாளித்துவத்தின் லாப வெறி நோக்கம் சூழல் பாதுகாப்பான மாற்றத்தைத் தடுக்கும், தாமதப்படுத்தும் என்பதைத் தெளிவாக விளக்கினர்.

1970-80களில் உலகம் முழுவதும் நடைபெற்ற வெகுஜனப் போராட்டம் மிக முக்கியமானது. ஊசலாடிய அரசுகளை மக்கள் இயக்கம் வழிக்குக் கொண்டு வந்தது. ஆய்வுமூலம் கிடைத்த தரவுகளைப் பகுத்து தொகுத்த மக்கள் அறிவியல் இயக்கங்கள் எதிர்ப்பாளர்களை எதிர்கொண்டார்கள். ஓசோன் ஓட்டைக்கு நாங்கள் காரணம் அல்ல என்ற தொழில்துறையினரின் போலி வாதங்களை தோலுரித்து தொங்கப் போட்டனர். மாற்றுத் தொழில்நுட்பங்களை பதுக்கி வைத்தவர்களை அடையாளம் காட்டினர். மாற்றம் சாத்தியம் என்று எடுத்துக்காட்டினார்கள்.

ஓசோன் படல ஓட்டை குறித்த ஆய்வுகள், அதன் வழியே உருவான சூழல் சிந்தனை, மாற்று அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள், மக்கள் இயக்கங்களின் நிர்ப்பந்தம் இவையெல்லாம் சர்வதேச ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தன, என்றாலும் 1980களுக்கு முன்பு இருந்த பொதுத்துறை குறித்த பார்வையால், சூழல் பாதுகாப்பில் அரசின் பங்கு பெருமளவில் இருந்தது.

மூலதனத்துக்கு மூக்கணாங்கயிறு

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மேலை நாடுகளிலும் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளிலும் “மக்கள் நல அரசு”எனும் கோட்பாடு மேலோங்கியது. ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் எனும் பொருளாதார நிபுணரின் தாக்கத்தில் பொருளாதாரம், சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம், கல்வி, விளையாட்டு, கலாசாரம், சமூக நலன் ஆகிய துறைகளில் அரசு வலுவாக செயல்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.

சோவியத் புரட்சிக்குப் பிறகு போர் நடந்து, அதன் பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெரும் அழிவைச் சந்தித்தபோதும் சில பத்தாண்டுகளிலேயே சோவியத் யூனியன் முன்னேறிய நாடாக மாறியது உலகை வியப்பில் ஆழ்த்தியது. மேலை நாட்டு மக்கள் கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் தமது அரசுகளும் தலையிட்டு அனைவர்க்கும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு முதலியவற்றை உறுதி செய்யவேண்டும் என்ற கருத்துக்குள் வந்தனர். இத்தகைய அரசு அமைப்பைக் கலப்புப் பொருளாதாரம் அல்லது மக்கள் நல அரசு என்று குறிப்பிடுவார்கள்.

இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் போன்ற நாடுகளில் council housing போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் துவங்கப்பட்டன. இங்கிலாந்தில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி அளிக்கும் NHS போன்ற திட்டங்கள் உருவாயின. மேலும் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும், அல்லது பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு ஓய்வுதிய வசதி ஏற்படுத்தப்பட்டது. அதாவது, சோசலிசத்தில் வழங்கப்பட்ட வசதிகள் சிலவேனும் இந்த அரசுகள் தமது மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது பொது சேவைத்துறை விரிவடைந்தது. அதாவது முதலாளித்துவ அரசுகள் பசுத்தோல் போர்த்திய புலியாக செயல்பட்டார்கள்.

சோவியத் யூனியன்போல முழுமையாக திட்டமிடப்பட்ட பொருளாதாரமாக உருவாகவில்லை என்றாலும் கல்வி, பொது சுகாதாரம் போன்ற பொருளாதாரத்தின் பல அம்சங்களில் அரசு தலையீடு வலுவானது. பொருளாதாரத்தின் பல பகுதிகளில் சந்தை தீர்மானம் செய்தாலும் சில அம்சங்களில் சந்தை தீர்வு சமூக நலனுக்கு முரணாக அமையும்; எனவே, அங்கெல்லாம் மக்கள் நல அரசின் தலையீடு வலுவாக இருக்கவேண்டும் என மக்கள் நல அரசு பார்வை கூறியது. எடுத்துக்காட்டாக தொழிலாளர் ஊதியத்தை சந்தை மட்டும் தீர்மானம் செய்துவிடக்கூடாது; குறைந்த பட்சக் கூலியை அரசு நிர்ணயம் செய்யும் என அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டது. இந்தப் போக்கின் விளைவாக சூழல் மாசு சிக்கல்களை அரசு தலையிட்டு தான் தீர்க்க முடியும் என்ற கருத்து உருவானது.

அந்தக் காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட சுற்றுச்சூழல் அணுகுமுறை மக்கள் நல அரசின் பொது அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. பொது மக்களின் ‘நலனை’கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட வளங்களை தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு சந்தை அல்லாமல் வேறுவகையில் உரிமம் வழங்குதல் (இலவச அரிசி), கட்டளை வழியே தொழில்துறையை மேலாண்மை செய்தல் (இந்த அளவுக்கு மேல் நீர் மாசு கூடாது- இரவில் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது, எட்டு மணிநேரத்துக்கு மேல் வேலை செய்ய கட்டாயம் செய்யக்கூடாது) என்பது போன்ற பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையின் சில அம்சங்களை சந்தைப் பொருளாக பாவிக்காமல் மக்கள் நல அரசு மூலதனத்தின் லாபவெறிக்கு மூக்கணாங்கயிறு போட்டு வைத்தது. மூலதனத்துக்கும் சந்தைக்கும் சில வரம்புகளை விதித்தது.

பொதுத்துறையின்கீழ், வளர்ந்து வந்த அறிவியல் சூழல் மாசு மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய முடிந்தது. இந்த ஆய்வுகள் அளித்த அறிவுத் தளத்தில் மக்கள் இயக்கங்கள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் மூலதனத்தின் தங்குதடையற்ற செயல்பாட்டுக்கும், தொழில்துறைக்கும் வரம்புகளை விதிக்க அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். சில சமயங்களில் இதில் வெற்றியும் பெற்றனர்.

மூலதனத்தின் லாபவெறிக்கும் சந்தையின் தர்க்கத்துக்கும் மேலான இறையாண்மை தேசிய அரசுகளுக்கு உண்டு என்ற மனப்பான்மையில்தான் சூழல் பாதுகாப்பு குறித்தான சரவதேச மாண்ட்ரியல் ஒப்பந்தம் உருவானது. தொழில் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி குறிப்பிட்ட கால அட்டவணைப்படி, படிப்படியாக ஓசோன் படலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை உற்பத்தி செய்வதும் தேக்கி வைப்பதும் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டது. சூழல் மேலாண்மைக்கு என சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme) உருவாக்கப்பட்டது. அதாவது, தேசிய அரசுகள் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பொருளாதாரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குளோரோஃப்ளூரோகார்பன்களுக்கு மாற்று தேடும் ஆய்வு முடுக்கம் பெற்றது. ஓசோன் படலம் காப்பாற்றப்பட்டது.

சாயம் வெளுத்தது

1970 களின் இறுதியில் 1980களின் துவக்கத்தில் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் உருவானது. நவதாரளமய சிந்தனை வேர்விட ஆரம்பித்தது. மேலை நாடுகளில் பொருளாதார நெருக்கடி, சோவியத் சிதைவு போன்ற பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக இன்று பசுத்தோல் போர்த்த வேண்டிய அவசியம் இல்லாமல் புலி தன் கொடும் கோரை பற்களையும் கூரிய நகங்களையும் காட்டத் துவங்கியுள்ளது. சந்தைதான் ஒரே தீர்வு என நவதாராளவாதத் தத்துவம் கூறுகிறது.

(1) ஏனைய நலன்களைவிட பொருளாதார (குறிப்பாக பெருநிறுவன) நலன்களுக்கு முன்னுரிமை
(2) சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க சந்தை அடிப்படையிலான, போட்டிக் கொள்கைகளைப் பயன்படுத்துதல்;
(3) அரசுக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தங்குதடையற்ற போட்டி மூலம் ஒவ்வொரு சந்தை பங்கேற்பாளருக்கும் வாய்ப்பு அளித்தல் ஆகியவை நவதாராளவாதக் கொள்கையின் தாரக மந்திரங்கள். நவதாராளவாதத்தை “தூய்மையான சந்தை தர்க்கத்திற்கு இடையூறாக இருக்கும் கூட்டு கட்டமைப்புகளை அழிக்கும் ஒரு திட்டம்”என்கிறார் பியர் போர்டியூ.

குறிப்பிட்ட செயலால் உலகளாவிய பெரும் பாதிப்பு வரும் ஆபத்து இருக்கிறது என்று தெரியவந்தால், முழுமையான ஆதாரம் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக முதலில் அந்த செயலில் இறங்கக்கூடாது. பருகுவதற்கு முன்னர் பானத்தின் சூட்டை சற்றே சுவைத்துபார்த்து பருகுவது போல் சிறு அளவில் செய்துபார்த்து சோதனை மேற்கொள்ளலாம். ஆனால் சடசடவென விரிவாக அமல் செய்வது அறிவார்த்தமாக இருக்காது என்பதே முன்னெச்சரிக்கை கொள்கை.

சந்தேகத்துக்கு இடமின்றி CFC தான் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த முன்னெச்சரிக்கைக் கொள்கை அடிப்படையில் தான் மாண்ட்ரியல் ஒப்பந்தத்தில் தடை செய்யப்பட்டது. மேலாய்வுகள் வழியே CFCயின் தீங்கு விளங்கியதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் நவதாரளமயப் பார்வையில் உருவான ரியோ பூமி உச்சி மாநாடு (1992) “செலவு குறைந்த முன்னெச்சரிக்கைக் கொள்கை”அடிப்படையில் புவி வெப்பமடைதல் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியது. “செலவு குறைந்த”ஏன்றால் சந்தையில் செலவு குறைந்த என்றுதானே பொருள்படும். பின்வாசல் வழியே நவதாரளமயம் பரவி உள்ளே நுழைந்தது.

புவி வெப்பமடைதல் தற்காலிக இயற்கைப் போக்கா, நீண்டகால இயற்கை ஊசலா, மனித செயல்பாட்டில் உருவாகும் சூழல் பேரிடரா என்பது தெள்ளத்தெளிவாக தெரியாத நிலைதான் அன்று இருந்தது. நிச்சயமற்ற நிலையில் அறிவியல் உள்ளபோது கார்பன் மாசை உமிழும் தொழில்கள் மீது கட்டுப்பாடு விதிக்க முடிவெடுக்கக் கூடாது. சந்தை மற்றும் தனியார் தொழில்துறையை ஊக்குவித்து கார்பன் மாற்றுத்தேட வேண்டும் என்றனர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் முன்னெச்சரிக்கைப் பார்வையோடு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசுக் கட்டுப்பாடுகள் மற்றும் வரைமுறைகள் வழியே மூலதனத்தையும் சந்தையையும் கட்டுப்படுத்தி செயல்பட வேண்டும் என்கிற நிலையிலிருந்து உலகளாவிய சுற்றுச்சூழல் மேலாண்மையின் வரலாறு சந்தை அடிப்படையிலான தீர்வுகளுக்குப் படிப்படியாக நகர்ந்துள்ளது.

இந்த நிலையில்தான் புவி வெப்பமடைதல் சிக்கல் தலையெடுத்தது. சந்தை புனிதம்; அரசுகள், அதுவும் பன்னாட்டு அமைப்புக்கள் அதில் நுழைந்து அதன் புனிதத்தைக் களங்கப்படுத்திவிடக்கூடாது என்ற பார்வை தான் இன்று மேலோங்கியுள்ளது. கல்வி, பொது சுகாதாரம், மருத்துவம் என பல்வேறு துறைகளிலிருந்து அரசு விலகி எல்லாம் சந்தைமயமாக மாறிவிட்டது.

கார்பன் உமிழ்வுகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, நவதாரளமயக் கொள்கை வினைத்திறமையுள்ள கார்பன் உமிழ்வுக்கு மாறவேண்டும் என்கிறது. அதாவது ஒரு டன் கார்பன் மாசு செய்து உருவாகும் பொருளை நவீன உற்பத்தி முறைகள் கொண்டு அரை டன் கார்பன் உமிழ்வுப் பொருளாக உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். இதுவே வினைத்திறமையுள்ள தொழில்நுட்பம் என்பதன் பொருள். சர்வதேசக் கட்டுப்பாடுகள், அதனைக் கண்காணித்து மேலாண்மை செய்ய சரவதேச ஒழுங்கு அமைப்பு என்பதை எல்லாம் புறம் தள்ளி புவி வெப்பமடைதல் தொடர்பான கியோட்டோ ஒப்பந்தம் (1997) சந்தைசார் தீர்வுகளை முன்வைத்தது.

தாம் வெளியிடும் கார்பன் மாசை ஈடுகட்ட கார்பனை உறிஞ்சும் ஏற்பாடுகளை (காடு வளர்த்தல் போன்ற நடவடிக்கைகளை) தொழில்துறை மேற்கொள்ள வேண்டும்; ஒவ்வொரு நாடும் கார்பன் மாசு உமிழ்வுக்கு வரையறை வகுத்து அதனைத் தாண்டி கார்பன் உமிழ்வு மேற்கொண்டால் அதற்கு சூழல் வரி வசூலிக்க வேண்டும்; தமக்கு அளிக்கப்பட்ட கார்பன் உமிழ்வு கோட்டாவைவிட குறைவாக உமிழும் ஒரு தொழில்துறை கூடுதலாக உமிழும் தொழில் துறைக்கு மாசு செய்யும் உரிமத்தை விற்கலாம் எனும் கார்பன் மாசு சந்தை: இவை தான் நவதாரளமய கொள்கை கண்டெடுத்த வழிமுறைகள்.

இறுதியாக இதில் எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனத் தெரிந்த உடன் பாரிஸ் ஒப்பந்தத்தில் (2015) ஒவ்வொரு நாடும் தாமே தன்னிச்சையாக கார்பன் உமிழ்வை படிப்படியாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

1997 முதல் சந்தைத் தீர்வை முன்வைத்து கடந்த நாற்பது ஆண்டுகள் முயற்சி செய்தும் ஏதும் கூடவில்லை. 2015இல் 35.46 பில்லியன் மெட்ரிக் டன் கார்பன்டை ஆக்சைடு உமிழப்பட்டது இது 2022இல் 37.55 பில்லியன் மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது. எனவே, கியோட்டோ முதல் பாரிஸ் வரை எல்லாமே இல்லாத ஊருக்கு வழி போன்றது தான். வெறும் கற்பிதப் பிதற்றல்தான்.

சந்தைத் தீர்வு சாத்தியமற்ற ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

லாபம் ஒன்றே குறிக்கோள்

மக்கள் தொகை பெருகிவிட்டது; எல்லோருக்கும் நன்றாக வாழ ஆசை- பேன், பிரிட்ஜ். குளிர்சாதனம் என்று வாங்கி குவிக்கிறார்கள் அதுதான் பிரச்னை என, சூழல் செயல்பாட்டளர்கள் உட்பட, பலரும் கூறுகிறார்கள். எனவே, மக்கள் நுகர்வை குறைத்துக்கொள்ள வேண்டும், இயற்கை வழியைக் கடைபிடிக்க வேண்டும் என சில சூழலாளர்கள் தீர்வு முன்வைக்கிறார்கள். நிச்சயம் தேவையற்ற நுகர்வை குறைத்துக்கொள்வது நமக்கும் நலம், பூமிக்கும் நலம்.

இன்னும் சிலர் வளர்ச்சி என்பதே தவறு- உற்பத்தியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இவற்றை காலநிலை மாற்றத்துக்கான தீர்வாக முன் வைகிறார்கள்.

குளிர்சாதனப்பெட்டி போன்ற தொழில்நுட்பத்தால் பூமியை அச்சுறுத்தும் பேரிடராக உருவாகிவந்த ஒசோன் ஓட்டை அடைபட்டு வருகிறது. குளோரோபுளோரோகார்பன் போன்ற வேதிப்பொருள்களின் உற்பத்திப் பயன்பாடு முற்றிலும் தடை பட்டு விட்டது. ஆனால் 1990 இல் வெறும் 56.1 கோடி குளிர்சாதனப் பெட்டிகள்தாம் உலகம் முழுவதும் இருந்தது; 2020இல் இதன் தொகை 193 கோடி. அதாவது அன்று ஓசோன் ஓட்டையை ஏற்படுத்திய குளிர்சாதனப் பெட்டியின் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்காக உயர்ந்தாலும் ஓசோன் ஆபத்து நீங்கி விட்டது. ஓசோன் ஆபத்து நீங்க உற்பத்தி நுகர்வைக் குறைக்கவில்லை; தீங்கான தொழில்நுட்பத்துக்கு மாற்று இனம் கண்டுதான் தீர்வை அடைந்துள்ளோம்.

கார்பன் மாசு செய்யும் தொழில்நுட்பத்துக்கு மாற்று ஏன் இல்லை? இன்று நாம் எல்லோரும் அறிவில் மங்கிவிட்டோமா?

ஹேர் ஸ்ப்ரே, குளிர்சாதனாப் பெட்டி போன்ற சில பொருள்கள் மட்டுமே ஓசோன் படல ஆபத்து விளைவிக்கும் வேதிப்பொருட்களை உமிழ்ந்தன; எனவே, அவற்றுக்கு மாற்று கண்டுபிடிப்பது எளிதானது. சிமெண்டு, மின்சாரம், போக்குவரத்து, விவாசய இடுபொருள்கள் என நவீன பொருளாதாரத்தின் எல்லா அம்சங்களிலும் கார்பன் மாசு ஏற்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. எனவே இது சிக்கல் மிகுந்த சவால் எனவும் கார்பன் மாற்றுத் தொழில்நுட்பம் இல்லை எனபதுதான் பெரும் சிக்கல் என்ற தொனியில் பலர் திசை திருப்புகின்றனர்.

உள்ளபடியே இது மெய்யா? சில துறைகளில் இன்னமும் கார்பன் மாற்று சாத்தியம் இல்லை என்ற நிலை இருக்கலாம். ஆனால், பல துறைகளில் மாற்றுத் தொழில்நுட்பங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக கார்பன் மாசு அற்ற ஸ்டீல் உற்பத்தியை சமீபத்தில் செய்து காட்டியுள்ளனர். ஆனால் இந்தத் தொழில்நுபம் ‘லாபகரமானது’அல்ல என்பதால் அது கையாளப்படுவது இல்லை.

பல்வேறு உலோகப் பொருள்களை மீள் பயன்பாடு செய்தால் பெருமளவு கார்பன் உமிழ்வை நீக்க முடியும். ஆனால், சந்தைப் பொருளாதரத்தில் இதுவும் ‘லாபகரமானது இல்லை’.

நம்மில் பலருக்கும் அச்சம், தயக்கம், கேள்வி இருந்தாலும் அணு ஆற்றல் என்பது கார்பன் மாசற்ற ஆற்றல். பொதுத்துறை மாண்புகளோடு செயல்படும்போது இதில் போதிய பாதுகாப்பு உள்ளது. ஆனால், அணுஆற்றல் லாபகரமானது இல்லை என ஒதுக்கப்படுகிறது. இதே போல பல்வேறு புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வளங்களும் ‘லாபகரமானது’அல்ல என ஒதுக்கப்படுகின்றன.

ஏன் ஒரு குறிப்பிட்ட மாற்று, சூழலைப் பாதுகாக்கக்கூடியதாக இருந்தாலும் பயனில் இல்லை என்று கேள்வி எழுப்பினால் வரும் ஒரே பதில் ‘லாபகரமானது இல்லை’. அதாவது லாபம் என்பதுதான் முழுமுதல் குறிக்கோள் என செயல்படும் முதலாளித்துவ முறையே சூழல் பேரிடருக்கு இட்டுச் செல்கிறது.

முதலாளித்துவம் லாபத்துக்காக எதையும் செய்யும்

உலகம் விழித்துக்கொண்டு உணர்வதற்கு பதினோரு ஆண்டுகள் முன்பே, 1977ஆம் ஆண்டிலேயே புதைபடிம எரிபொருள் பயன்பாடு காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் என உலகின் ஆகப்பெரும் பெட்ரோலிய நிறுவனம் எக்ஸான் அறிந்திருந்தது என சமீபத்தில் குட்டு வெளிப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் துல்லியமாக நடக்கவிருக்கும் ஆபத்தை முன்பே கணித்து இருந்தாலும் அந்த ஆய்வை மூடி மறைத்து, தயக்கம் காட்டி, போலி தகவல்களைப் பரப்பி காலநிலை மாற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள இதுகாறும் மறுத்து வந்தது என்ற செய்தி வெளிப்பட்டுள்ளது.

ஜூன் 1988இல், செயற்கைக்கோள் வழியே கிடைத்த தகவல்களை எல்லாம் சேர்த்து பூமி வெப்பமடைந்து வருகிறது என நாசாவை சார்ந்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஹேன்சன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் சான்று அளித்தார். எக்ஸான் நிறுவன ஆய்வாளர்கள் தெள்ளத்தெளிவாக இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்திருந்த போதிலும் புதைபடிம எரிபொருள் பயன்பாடு தான் பூமியை வெப்பமடையச் செய்கிறது என்ற ஹேன்சனின் முடிவுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று எக்ஸான் வாதாடியது. உலகளாவிய காலநிலைக் கூட்டணி ஒன்றை உருவாக்கி, காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் அடிப்படையை கேள்விக்குட்படுத்த பல்வேறு போலி செய்திகளைப் பரப்பியது. புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைத் தடுப்பது கம்யூனிச சதி என்று கூறியது. இந்தத் தொடர் பிரசாரம் காரணமாக அமெரிக்க அரசு 1998ல் கியோடோ ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்துவிட்டது.

இதே அணுகுமுறையை பின்பற்றி தான் புகையிலைத் தொழிலில் ஈடுபட்டு வந்த பிரபல நிறுவனங்களும் அந்த நிறுவனங்களைச் சார்ந்த ஆய்வாளர்கள் திரட்டிய தகவல்களை மறைத்து, புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெரிந்தே பொய் கூறிவந்தனர். உலக மக்கள் உண்மையை அறிந்தால் தங்களது லாப வெறிக்கு ஆபத்து என்று உணர்ந்து, போலிப் பிரச்சாரங்கள் வழியே பொதுமக்கள் கருத்தை திசை திருப்புவது, அரசியல் தலைவர்களை விலைக்கு வாங்குவது என உத்திகளை கடைபிடித்தனர். சமீபத்தில் புகழ்மிக்க கார் நிறுவனம் வோக்ஸ்வாகனும் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்தது வெளிப்பட்டுள்ளது. உலகம் அழிந்துகொண்டிருக்கும்போது இந்த நிறுவன பங்குதாரர்கள் பெரும் லாபத்தைக் குவித்து வந்தனர்.

அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு அரசு நிதியை எதற்குப் பயன்படுத்த வேண்டும், தனியார்தான் அறிவியல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்ற தனியார்மய சிந்தனைப் போக்கை பலரும் கடைபிடிக்கிறார்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல லாபவெறிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஆய்வையும் மறைத்து வைக்கும் போக்கே தனியார் துறையின் நடவடிக்கை. எனவே தனியார் துறை மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்வது எவ்வளவு ஆபத்து என நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பொதுத்துறை ஆய்வு நிறுவனங்களின் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

என்ன செய்யவேண்டும்?

நவீனத்துவ எதிர்ப்பு, தனிச்சையாக நுகர்வை குறைத்துக்கொள்ளுதல், நவீன வசதிகளை புறம் தள்ளி ‘இயற்கை’க்கு திரும்பிப் போதல் போன்ற கற்பித்த கனவுலகச் சிந்தனைகள் தீர்வைத் தராது. அதேபோல சந்தைத் தீர்வு எனும் மாரீச மான் – கானல் நீரும் உதவாது.

பிரபல சூழலியலாளர் பாரி காமன்னர் கூறியதுபோல “பகுத்தறிவோடு திட்டமிட்ட முறையில் பூமியின் வளங்களையும், பயன்பாட்டையும் நுகர்தல் அல்லது புதிய காட்டுமிராண்டி வாழ்க்கைக்குச் செல்லுதல் ஆகிய இரண்டு பாதை இடையேயான தேர்வு”தான் நம் முன் உள்ளது. நீண்டகால நோக்கில் சோசலிசம்தான் தீர்வாக இருக்க முடியும் (2) என்றாலும் உடனடியாக, காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த குறைந்தபட்சம் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஓசோன் படல மீட்சி நமக்குத் தரும் பாடமும் அதுவே.

அடிக்குறிப்பு:-

(1) முற்றிலும் ஓசோன் ஓட்டை அபாயம் அகன்று விட்டது எனக் கூறிவிட முடியாது. வேறு சில பொருட்களும் ஓசோன் படலத்துக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இன்று பின்பற்றப்படும் சந்தைசார் தீர்வு என்ற முறையில் இதற்குத் தீர்வு காண முயற்சி செய்கின்றனர். இது சந்தைசார் காலநிலை மாற்றத் தடுப்பு முயற்சிபோலத் தோல்வியில் முடியும் அபாயம் உள்ளது. எனினும் அன்று இருந்த அதே அளவில் அபாயம் இன்று இல்லை.

(2) சோசலிச ரஷ்யாவில் யூரல் கடல் வற்றிவிடவில்லையா; சோசலிச நாடுகளில் சூழல் பாதிப்பே இருக்கவில்லையா என பலரும் கேள்வி எழுப்பக்கூடும். இது குறித்துப் பல ஆய்வுகள் நடந்துள்ளன. அதன் சாரம்சத்தை வேறொரு கட்டுரையில் விளக்குகிறேன்.

கட்டுரையாளர்;

can-climate-change-be-controlled-environment-articlr-by-scientist-dr-t-v-venkateswaran

த வி வெங்கடேஸ்வரன் தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசியராகப் பணியாற்றுகிறார். அறிவியல் எழுத்தாளர். மக்கள் அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர்.




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 3 Comments

3 Comments

  1. S V Rajadurai (Manoharan)

    அன்புள்ள தோழர் த.வி.வி.,

    இன்று இணையயதங்களிலோ அல்லத் சமூக வலைத் தளங்களிலிலோ வருகின்ற, மேம்போக்கான கருத்துக்ளைக் கொண்ட சில கட்டுரைகளையோ தகவல்களையோ மட்டும் படித்துவிட்டு, தங்களை மெத்தப் படித்த அறிவாளிகள் எனக் காட்டிக் கொள்ளும் போக்கு மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் மட்டுமல்ல, இடதுசாரி, முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடமும் வளர்ந்து வருகிறது. இ தெ இணையதளங்கள் அறிவுக் கஞ்சியங்களாகவும் விளங்குகின்றன என்பதைக்கூட அவர்கள் புரிந்துகொள்வதில்லை. எனவே நீங்கள் குறிபிட்ட மாணவி, நீங்கள் எதைப் பேசப் போகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முயலாமலேயே யே பொரிந்து தள்ளியதுவியப்புக்குரியது அல்ல நாள் தோறும் உங்கள் அறிவியல் ,சமூவியல் அறிவை வளர்த்துக் கொண்டிருக்கும் அறிவியலாளர்தான் நீங்கள் என்பதைக்கூட உணராமல் பேசிய மாணவியை மன்னித்துவிடுவோம், காலநிலைஅல்லது பருவ நிலை மாற்றம் என்பதைப் பற்றிய கவலை உலகெங்கும் இருந்து வரும் நிலையில் அதைப் போக்குவதற்கு அறிவியல் என்ன செய்துவருகிறது என்பதையும் , அது என்ன செய்ய வேண்டும் , செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் முதலாளிய சக்திகள் முக்கியப் பாத்திரம் வகிக்கின்றன என்பதையும் அறிவியல் என்பது முற்றுபெற்ற முழுமை அல்ல, அது நாள்தோறும் வள்ர்ச்சியும் மாற்றமும் அடைடந்து வரும் ஒன்று என்பதையும் உங்கள் கட்டுரை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது ஓசோன்ன் படல்த்தில் ஓட்டை விழுதல் பற்றிய விவாதங்கள் இந்தியாவில் மிக நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட்டன என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். உங்களைப் போல அறிவியல் அறிவு இல்லாத எங்களைப் போன்றவர்கள் போபால் விபத்துக்குப் பிறகு ‘ போதும் ஒரு போபால்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி அதைப் பல மாதங்கள் நடத்து வந்தோம். செர்னோபில் விபத்துக்குப் பிறகு இந்தியாவிற்கு கோர்ப்பசேவ் வந்திருந்த போது சென்னை அண்ணா சாலையில் ஓர் கண்டனப் பேரணி நடத்தினோம். அப்போது எங்களுக்கு நல்ல அறிவியலாளர்கள் தொடர்பு கிடைத்திருந்தால் இன்னும் தீவிர்மாகச் செயலாற்றி இருப்போம். எனினும் சூழலியல் பற்றிய உணர்வு தமிழகத்திலும் அன்றிலிருந்தே வளரத் தொடங்கியது. பின்னர் அறியல் இயக்கம் தோன்றி அரும் பணிகளை ஆற்றியது. பின்நவீனத்துவம், அடையாள அரசியல்,நவ மார்க்ஸியம போன்ற கருத்துநிலைக் கோட்பாடுகள் மக்களின் சிந்தனையில் குழப்பம் விளைவித்து புறநிலையில் முதலாளியத்துக்கு சேவை புரிவதில் முடிவடைகின்றன என்பதையும் இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. மிக எளிய நடையில் அறிவியல் கருத்துகளையும் சாதனைகளையும் எடுத்துரைக்கும் இக்கட்டுரைக்காக எங்களைப் போன்றவர்கள் உங்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். இக்கட்டுரையை முற்போக்குக் கருத்துக்ளைத் தாங்கி வரும் தமிழ் மாத ஏடுகள் ஏதோவொன்றில் மறு வெளியீடு செய்யலாமா?. தோழமையுள்ள, எஸ்.வி.ராஜதுரை

  2. Sethuraman Krishnan

    I m seriously following Tha Vee Ve’s articles.
    This is excellent and thought provoking.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *