உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கட்டுரைகள் | Can increasing forests reduce carbon emissions | காடுகள் பெருகினால் கார்பன் அளவு குறையுமா

உலக சுற்று சூழல் தினம், அல்லது எந்த ஒரு சுற்று சூழல் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்ச்சிகளில் மரக்கன்று நடுதல் ஒரு வழக்கம்! ஆம்! மரம் சூழலின் ஒரு அத்தியாவசியமான உயிருள்ள பங்கேற்பு கூறு ஆகும்! அதன் இலைகள் ஒளிசேர்க்கை மூலம் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு, உள்ளிழுத்து, ஆக்ஸிஜன் மற்றும் ஆற்றல் தருகிறது என்பதை நாம் அறிவோம்! அல்லவா!!?

ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, இந்த நெடுங்கால நிரந்தர அறிவியல் உண்மையினை, சற்று அய்யப்பாடுடன் அணுகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது!.
இந்திய காடுகள் அனைத்தும் “அமைதியான இடர்ப்பாடு” ஒன்றினை சந்தித்து வருகிறது. உயர்ந்து வரும் வெப்ப நிலைகள், பருவம் தவறி பெய்யும் மழை, மற்றும்காடுகள் அழிதல், போன்றவற்றால், அவை முழுமையாக கார்பன் டை ஆக்சைடு வாயுவினை உள்ளிழுக்க இயலாத பலவீனமான நிலை நோக்கி செல்வதாக அறியப்பட்டுள்ளது. புவி வெப்ப மயமாதல் என்ற சூழல் பிரச்சினையினை எதிர் கொள்ளும் முக்கிய பணி செய்யும் காடுகளின் நிலை பற்றிய இந்த சமீபத்திய கண்டுபிடிப்பு உண்மை, அதிர்ச்சி தரக்கூடியது.

தேசிய சுற்றுசூழலில் செயல் படுத்த வேண்டிய முக்கிய பணிகளில்,ஒன்று எதிர் வரும் 2030ஆம் ஆண்டுக்குள், “பருவ கால மாற்றம் தவிர்க்க, அதிக அளவு கார்பன் உள்ளிழுக்க ஏற்றவாறு கூடுதல் காடுகளை உருவாக்கும் நோக்கம் ஆகும்.தற்பொழுது, நமது காடுகள் கார்பன் உள்ளிழுக்கும் அளவு குறைவாக இருப்பது ஒரு முக்கிய சுற்றுசூழல் பிரச்சனை ஆக உள்ளது என்பதை மறுக்க இயலாது.

மேலும்,சமீப காலமாக ஒளிசேர்க்கை என்ற இந்த செயலில் துவக்கத்தில் கார்பன் டை ஆக்சைடு CO2 காரணமாக ஒளி சேர்க்கை வேகத்தினை அதிகரித்தாலும்,
அதிக சூரிய ஒளிவெப்பமானது, செயல்பாட்டுக்கு முக்கிய தேவையான நொதிகளை (ENZYMES) தாக்குகிறது. அதன் காரணமாக ஒளி சேர்க்கை சரிவர நடைபெறுவதில்லை என தெரிகிறது. நீர் பற்றாக்குறை, மாறுபடும் மழை காலம் ஆகியவையும் கூட இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது.மும்பை,இந்திய தொழில் நுட்ப கழகம் (IIT) நிறுவனத்தின் விஞ்ஞானி, சுபிமால் கோஷ் மற்றும் கோவாவிலுள்ள, பிர்லா அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி ஆகியோர் இந்தியாவில் வடகிழக்கு, தீப கற்ப பகுதி, மேற்கு தொடர்ச்சி பகுதி மலைத்தொடர் காடுகளில் ஆராய்ச்சி செய்து சில உண்மைகள் வெளியிட்டனர்.

2001-2019 ல் இக்காடுகளின் பசுமை பகுதி அதிகரித்தாலும், அவற்றின் கார்பன் டை ஆக்சைடு வாயு உறிஞ்சு திறன் குறைந்து விட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். இவர்கள் இலை பகுதி குறியீடு (LEAF AREA INDEX) மூலமாக அந்த பகுதியின் மொத்த பசுமை பரப்பு, அதன் நிகர முதன்மை உற்பத்தி திறன் (NET PRIMARY PRODUCTIVITY) மற்றும், சுவாசித்தலுக்கு பிறகு கார்பன் டை ஆக்சைடு CO2 உறிஞ்சும் அளவு பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர்.

நம் இந்திய நாடு 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் பசுமை அதிகப்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக, உலகில் இரண்டாம் நிலையில் 18.51% இலை பகுதி குறியீடு (LEAF AREA INDEX) அதிகரித்திருந்தாலும், (2001-2019) இலைகளால், அதிக CO2 உள்ளிழுத்தல், செயல்பாடு அதீத வெப்பத்தால் தடைபட்டது. 2001-2019 ஆம் ஆண்டுகளில் 6.75% பசுமை L A I அதிகரித்து விட்டதாக, தகவல் இருப்பினும் முதன்மை உற்பத்தி (NPP) 6.19%குறைந்து விட்டதாக அறியப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆய்வுகள், செயற்கை கோள் தரவுகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் தரைவழி நேரடி ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்த தொடரவேண்டும்.

காடுகளின் தாவரங்களின் சிற்றினங்கள் வாரியாக, அல்லது, இலையுதிர் காடுகள், பசுமை மாறா காடுகள் என்ற வகையில் மற்றும் மர விதானம் அல்லது கூரை (CANOPY) அமைப்பு என்ற வெவ்வேறு வகை ஆய்வுகள் “ஒளி சேர்க்கை “பற்றி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பல அடுக்குகள் மர விதானம், ஒரே மர விதானத்தினை விட, ஒளி சேர்க்கை பரப்பு அதிகரிக்கும் எனபெங்களூரு இந்திய அறிவியல் கழக, சூழல் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி பேராசிரியர் M. D. சுபாஷ் சந்திரன் கூறுகிறார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், இலைகளின் வெப்ப நிலை 46.7°C அளவிற்கு உயர்ந்தால் வெப்ப மண்டல காடுகளின் மரங்கள், ஒளிசேர்க்கை செய்யும் திறன் இழந்து விடுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் காசிரங்கா காடுகள், முன்னரே கார்பன் உமிழ்கிற தன்மை கொண்டுள்ளது எனவும், கூடுதல் வெப்பம் மேலும், தட்பவெப்பநிலையினை மோசமாக ஆக்கியுள்ளது என்று அங்கு ஆய்வு செய்யும், புனே வில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானியல் நிறுவனம் கூறுகிறதுபொதுவாக வெப்ப மண்டல காட்டு மரங்கள் பகுதியில் சராசரி 4°C வெப்பம் உயர்ந்து விட்டால், அவை, முதன்மை உணவீட்ட உற்பத்தி தமக்குள்ளும் அல்லது மற்ற சிற்றினங்களுக்கும் நிறுத்தி விடுகின்றது.

கேரளா காடுகள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி (KFRI) ஸ்ரீஜித் என்பவர் “அலையாத்தி “(MANGROVES)காடுகள் அதிக வெப்பம் தாங்கக்கூடியவை என்றும், குறிப்பாக
ஆறு அலையாத்தி தாவர சிற்றினங்கள், இத்தகைய பண்பு கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தாவரங்களில் பருவ கால மாற்றங்கள் ஏற்படுத்தி வரும் மாற்றங்களை அறிய, ஒரு சிறப்பு டிஜிட்டல் புகைப்பட கருவி (PHENOCAM), இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன, உதவியுடன், கோவா மாநிலத்தில் உள்ள நேத்ரவெளி காடுகளில் நிறுவப்பட்டது. இதன் மூலம், மரங்களின், பூத்தல், கனி உருவாதல், இலை துளிர் விடுதல் போன்ற வெவ்வேறு பருவ காலத்திற்கு ஏற்ற, செயல்பாடுகளை ஆய்வு செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

2018-20,ல் 28 – தாவர மர சிற்றினங்கள், 58 – குற்று செடியினங்கள், 72 -செடியினங்கள், உத்ராகண்ட் மாநிலத்தில், 4 ஓரளவு உதிர் இலை காடுகள், பசுமை மாறா காடுகளில் இனம் கண்டறியப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளபட்டது. அவற்றின் வாழிடம், 680-1860 மீட்டர் கடல் மட்ட உயரத்தில் இருந்தது. குளிர் காலத்தில் அதிக வெப்பம் (49°C), அதிக மழை (48.5மீ. மீ ), EERAPATHAM (9%) ஆகியவை 2019ல் காணப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டினைவிட, மிக சீக்கிரம் மலர் மொட்டு விடுதல், இலை துளிர் உருவாக்குதல் இரண்டு வாரத்தில் ஏற்பட்டன. 2019-20 ஆம் ஆண்டு குளிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து, காய், விதைகள் ஆக மாறி வளர்ச்சி பெறுவது தாமதம் ஆகிவிட்டது.

இத்தகைய தாவரங்களில், ஏற்படும் பருவ கால மாற்ற பாதிப்புகள், தொடர்ந்து, அவற்றை நம்பியுள்ள பூச்சிகள், பறவைகள் வாழ்க்கையிலும் மாற்றம் உருவாக்க வாய்ப்பு ஆகிவிடுகிறது. குறிப்பிட்ட இயற்கை சூழல் பாதிப்பு அடைகிறது. எடுத்து காட்டாக “கடந்த ஐம்பது ஆண்டுகளாக, 117 ஐரோப்பிய, வலசை வரும் பறவைகளின் வசந்த கால வருகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப் பட்டுள்ளது. உலக வானிலை ஆய்வு மையம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட “2022 ல் உலக தட்ப வெப்பம் “அறிக்கையில் இந்த மாற்றங்கள் பல பறவை சிற்றினங்களின் இனத்தொகை குறைய காரணம் ஆகிவிட்டதாக தெரிவிக்கிறது. எல்லா சிற்றினங்களும் குறிப்பிட்ட பருவ கால மாற்றத்திற்க்கு ஒரே மாதிரி பாதிப்பினை அடைவது இல்லை.

கார்பன் டை ஆக்சைடு உயர்வு, அதிக வெப்ப நிலை, மாறும் மழை காலங்கள், கார்பன் தாவர கருவுறுதல், மண்ணில் ஈரப்பதம் குறைவு போன்றவை நெடுங்காலம் (50ஆண்டுகளுக்கு) ஆய்வு செய்து தரவுகள் சேகரித்தால் மட்டுமே உண்மைகளை அறிய இயலும். மேலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டாக்டர் ஸ்ரீஜித் என்ற விஞ்ஞானிமேற்கு மலைத்தொடரில் 40 இடங்களில் ஆய்வு க்களம் அமைத்து தொடர்ந்து பல பருவ கால மாற்றங்கள் தாவர பாதிப்பு சோதனைகள் செய்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயற்கை கோள் மூலம் ஆய்வுகளையும், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், 2015 ஆம் ஆண்டு நெடுங்கால சூழல் கண்காணிப்பு நிலையங்களை ஆறு வெவ்வேறு மண்டலங்களில் நிறுவி (மேற்கு இமாலய பகுதி, கிழக்கு இமாலய பகுதி, மத்திய வறண்ட பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை தொடர், மத்திய இந்தியா, அந்தமான், நிகோபார் தீவுகள்) என ஆராய்ச்சி பணிகள் செய்கின்றனர்.

தாவரங்களில் பருவ கால மாற்ற பாதிப்புகள், சிற்றின வாரியாக, வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறுஆய்வு நிறுவனங்கள் மேற்கொள்ளப்படும் நீண்ட கால ஆய்வு தரவுகள், குறிப்பாக செயற்கை கோள் மற்றும் நேரடியாக களத்தில் கிடைக்கும் அறிவியல் உண்மைகள், தரவுகள் ஒருங்கிணைத்தல் மிக அவசியம் ஆகும்.

அடிப்படை அறிவியல் குறிப்பாக, சுற்றுசூழல்,பருவ கால மாற்றம் மேலும்,வனவிலங்கு, பறவை உயிரினங்கள் மீது பருவ கால மாற்ற விளைவுகள் பற்றிய ஆய்வு ஊக்குவித்து, அதிக நிதி நல்கைகள் பல்கலைக்கழகம்,மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்குஅரசினால் ஒதுக்கப்படவேண்டியது, அவசர அவசியம் என்பதை அனைவரும் உணரவேண்டும். விழிப்புணர்வு மட்டும் சூழல் மாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல.

அறிவியல் உண்மைகள் முறையாக, ஆய்வுகள் மூலம் அறியப்படவேண்டும். உலக சுற்றுசூழல்  தினம் வெற்று சடங்காக இல்லாமல் தொடர்ந்து ஆய்வு களின் அறிக்கைகள் அடிப்படையில்” சூழல் பாதுகாப்பு செயல் திட்டங்கள் “ஆக மாறி, மக்கள் நலம் பெறவேண்டும்.

கட்டுரையாளர் விவரம்:

முனைவர். பா. ராம் மனோகர்,

 1. உயிரியல் கள ஆய்வாளர் (1983-85) மும்பை இயற்கை வரலாற்று சங்க ஆராய்ச்சி நிலையம், பரத்பூர் பறவைகள் சரணாலயம், ராஜஸ்தான்
  கள ஆய்வாளர், JRF (1985-89) விலங்கியல் துறை, ராஜஸ்தான் பல்கலை கழகம், ஜெய்ப்பூர்.
 2. தஞ்சாவூர் மாவட்ட சுற்றுசூழல் (NGC )விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர். (மதிப்புறு பணி) சுற்றுசூழல் துறை, சென்னை -15
 3. பன்னாட்டு சிறுவர் அறிவியல், சுற்றுசூழல் இலக்கிய மொழிபெயர்ப்பு எழுத்தாளர் (தமிழ் நாடு பாட நூல் நிறுவனம், சென்னை -6)
 4. எழுதிய நூல்கள் – 17
 5.  இணை ஆசிரியர் அறிவுக்கண், மாத இதழ், சென்னை
 6.  முன்னாள் செயலாளர், கவின் மிகு தஞ்சை இயக்கம் (சுற்றுசூழல் செயல்பாடுகள் )
 7.  ADVISOR, SPRINGS, சுற்றுசூழல் தொண்டு நிறுவனம், சென்னை
 8. உறுப்பினர் சென்னை மாவட்ட பசுமைக்குழு,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 2 thoughts on “காடுகள் பெருகினால் கார்பன் அளவு குறையுமா..? – முனைவர். பா. ராம் மனோகர்…”
 1. ஆய்வுத் தரவுகளுடன் கூடிய சிறப்பான விழிப்புணர்வு பதிவு.. சார்.
  கட்டுரையின் முடிவுப் பத்தி நச்சின்னு இருக்கு சார்.. –“அறிவியல் உண்மைகள் முறையாக, ஆய்வுகள் மூலம் அறியப்படவேண்டும். உலக சுற்றுசூழல் தினம் வெற்று சடங்காக இல்லாமல் தொடர்ந்து ஆய்வு களின் அறிக்கைகள் அடிப்படையில் ‘சூழல் பாதுகாப்பு செயல் திட்டங்கள்’ ஆக மாறி, மக்கள் நலம் பெறவேண்டும்”. இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறான். வாழ்த்துக்கள் சார். .

 2. மிக்க நன்றி, தோழரே!🌹🙏B.ராம் மனோகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *