நமது உற்பத்தி மதிப்பை உயர்த்த முடியுமா?
– முனைவர் இல. சுருளிவேல்
உற்பத்தி என்றால் என்ன?
மக்கள் மத்தியில் உற்பத்திக்கு பல்வேறு பொருள் இருந்தாலும், பொருளாதாரத்தில், ‘உற்பத்தி’ என்பது பல்வேறு பருப்பொருள் சார்ந்த (எ.கா., மூலப்பொருட்கள்) மற்றும் பருப்பொருள் சாராத (எ.கா., கற்பித்தல், உழைப்பு, ஆலோசனை) உள்ளீடுகளைப் பயன்படுத்தி மதிப்பு மிக்க மற்றும் மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பண்டங்கள் அல்லது சேவைகளாக மாற்றும் செயல்முறையாகும். நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் முனைவு ஆகிய நான்கு முக்கியமான உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தி எந்த ஒரு பண்டமும் பணியும் உற்பத்தி செய்யப்படுகிறது. ‘பண்டங்கள்’ தொட்டு உணரக்கூடியதாக மட்டும் இருக்க வேண்டும் என்று இல்லை, சில பண்டங்கள் பார்க்க முடியாது ஆனால் அதன் பயனை உணர முடியும். சேவை உற்பத்தியை பயன் மூலம் உணர முடியும். உதாரணமாக, ஆசிரியர் கற்பித்தலின் மூலம் பாட அறிவை உற்பத்தி செய்கிறார். மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் துறை சார் வல்லுநர்கள் தங்களது சேவையை உற்பத்தி செய்கிறார்கள். உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் மனிதர்களின் உற்பத்தி மதிப்பு ஏன் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.
இந்தியாவின் நிலை
இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 147 கோடி. தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 7 கோடி. மனித வள மேம்பாட்டு குறியீடு அடிப்படையில் மொத்தம் 193 நாடுகளில் இந்தியா 130வது இடத்தில் இருக்கிறது. இதில் தலா வருமானம், உயர்கல்வி செல்வோரின் நிலை, ஆயுள் காலம், கல்வி அறிவு போன்ற முக்கியமான காரணிகளின் அடிப்படையில் இந்தியா இடைநிலை மனித மேம்பாட்டு நிலையில் உள்ளது. உலகப் பசி குறியீட்டு அடிப்படையில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிறப்பு விகிதம் அதிகரித்து கொண்டு வருகிறது. இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மறுபுறம், வருமானத்தில், உற்பத்தியில், உடல் ஆரோக்கியத்தில், நுண்ணூட்டச் சத்து பாதுகாப்பில், தரமான கல்வியில் மற்ற நாடுகளை விட இன்னும் முன்னேற வேண்டிய நிலையில் உள்ளோம். வேளாண் துறை, தொழில் துறையை முந்தியடித்துக்கொண்டு சேவை துறை அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது.
ஒரு காலத்தில் தொலைபேசி வசதிக்காக வரிசையில் காத்திருந்து பேசினோம். இன்று ஒரு குடும்பத்தில் இரண்டுக்கு மேற்பட்ட கைப்பேசி பயன்பாடு உள்ளது. மனித உறவுகள் பெருகி உள்ளதா? தனிமனித உற்பத்தி பெருகி உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டும். தோற்றத்திற்கு நாகரீகமான ஆடைகள், வாகன வசதிகளை வைத்து நாம் முன்னேறி விட்டோம் என்று சொல்ல முடியுமா? 1950 ஆண்டில் ஒரு டாலர் 4.76 ரூபாய்க்கு சமமாக இருந்தது. 2025ஆம் ஆண்டில் 88.72 ரூபாய் உயர்ந்துள்ளது.மேலும் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு டாலர் 96 ரூபாய்க்கு சமம் என்றால் ஒரு அமெரிக்கர் 96 இந்தியர்களுக்குச் சமம். அப்படியென்றால் யார் மதிப்புமிக்கவர், யார் அதிக வளர்ச்சி கண்டுள்ளது என்று சிந்திக்க வேண்டும். பொருளாதாரத்தில் அமெரிக்கர் பலசாலியாக இருக்கிறார்.
மதிப்பை உயர்த்துவது எப்படி?
ஒவ்வொரு மனிதனும் ஒரு குடும்பத்தின் அங்கம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு சமூகத்தின் அங்கம். எல்லா சமூகமும் சேர்ந்ததுதான் ஒரு தேசம். இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மதிப்பு மிக்கவன். ஆனால் மனிதனின் மதிப்பு ஒவ்வொருவருக்கும் ஏன் வேறுபடுகிறது? சமூகம் காரணமா? பொருளாதாரம் காரணமா? என்ற கேள்வி எழுகிறது. சிலர் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். சிலர் மதிப்பில்லாத பொருளாக பார்க்கப்படுகிறது. சிலர் வரலாற்றில் இடம் பெறுகின்றனர். பலர் இருந்த இடம் தெரியாமல் மறைகின்றனர். அதற்கு பணம் மட்டும் காரணமா, படிப்பு மட்டும் காரணமா? பதவி, அரசியல் போன்றவை மட்டும் காரணமா? என்று சிந்தித்தால் ஒவ்வொருவரும் ஒரு பதிலை தருவர். உண்மையில் எத்தனையோ செல்வந்தர்கள், படித்தவர்கள் நம் நாட்டில் இருந்தாலும் படிக்காத ஏழைக் குடும்பத்தில் பிறந்தும் உலகப் புகழ் பெற்றிருக்கின்றனர் காரணம் என்ன? “மனிதனின் உற்பத்தி பயன்பாடு மதிப்பின் அடிப்படையில் சமூகத்தில் ஒருவர் மதிப்பு மிக்கவராக கருதப்படுகிறார்” என்பது காரல் மார்க்ஸ் சித்தாந்தம். அது உண்மையும் கூட. ஒரு பொருளுக்கு என்ன விலையோ அதனைப் போல் மனிதனுக்கும் விலை வேறுபடுகிறது. பொருளியல் மதிப்பின் அடிப்படையில் சந்தையில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லப்பட்டாலும், மனிதனின் உற்பத்தி பயன்பாட்டு மதிப்பு வேறுபடுகிறது. திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” என்ற குறளின் வாயிலாக பிறப்பால் அனைவரும் சமம் என்று தெளிவுபடுத்துகிறார். ஆனால் சந்தை பொருளியலில் உற்பத்தி மதிப்பு ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. முக்கியமாக பணமதிப்பிற்கும், உண்மை மதிப்பிற்கும் வேறுபாடு அதிகம். ஒரு பொருளின் மதிப்பை பணத்தால் மதிப்பிடலாம், ஆனால் குடும்ப அமைப்பு, இயற்கைத் தந்த கொடை ஆகியவற்றிற்கு விலை மதிப்பீடு செய்ய முடியாது. அவற்றின் விலை பன்மடங்கு அதிகம். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மதிப்பு, ஒரு பொற்கொல்லர், மரத்தச்சு தொழிலாளி மதிப்பு சந்தையில் வேறுபடுவதை பார்க்கலாம். மனித சமூகம் பயன்பாட்டு மதிப்பை உருவாக்குகிறது. அரசியல் அறிவியல் உண்மை என்னவென்றால், உற்பத்தி பயன்பாட்டு மதிப்பின் அடிப்படையில் வேறுபடுகிறது.
சந்தை பொருளியலில் விலை அவ்வப்போது வேறுபடலாம். மனிதனின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்றால் பணம் சம்பாதிப்பதை விட, மனிதர்களை சம்பாதிக்கும் வழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமாக தனித்திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு பயனுள்ள வகையில் வாழத் தொடங்கினால் நமது மதிப்பு இயல்பாக உயர ஆரம்பிக்கும். மீன்களை விட, மதிப்பூட்டிய மீன்களை விற்கும் போது வருமானம் அதிகரிக்கும். பண்டங்களை மதிப்பூட்டி விற்பனை நடவடிக்கையில் ஈடுபடலாம்.
ஒரு பொருளை சந்தைப்படுத்துவது போல நமது திறமைகளையும் சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தி பிறருக்கு பயன்படும்படி செய்ய வேண்டும். நமது சேவை நாட்டுக்கு தேவை என்ற சூழ்நிலை உருவாக வேண்டும். பிறருக்கு பயனுள்ள வகையில் வாழ ஆரம்பித்தாலே, நாம் விரும்புகிற செல்வங்கள் அனைத்தும் பெற்று, நமது மதிப்பு வாழும்போதும் வாழ்ந்த பிறகும் வரலாற்றில் இருக்கும். பிறருக்கு பயனுள்ள வகையில் வாழ்ந்து மறைந்த உயர்ந்த மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மனதில் வைக்க வேண்டும். இறந்த பின்பும் உடல் உறுப்புகள் தானம் செய்து பிறருக்கு பயனுள்ள வகையில் இருந்ததையும் பார்க்கலாம்.
தனி மனித முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். அனைத்து சமூக மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது. உழைப்பின் மதிப்பை குழந்தைகளிடம் அதிகம் விதைக்க வேண்டும். அரிசி, கோதுமை, பால் போன்ற சில உணவுப் பண்டங்கள் உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்தாலும் தனி நபர் நுகர்வு குறைவாக உள்ளது. மனித நுகர்வுக்கு தேவையான பண்டங்களை உள்நாட்டில் அதிகம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். நுகர்வுக்கு ஏற்ப தனி மனித உற்பத்தி பெருக வேண்டும். அது பண்டமாகவோ பணியாகவோ இருக்கலாம். வரவுக்கு மீறிய செலவு, போதைப்பழக்கங்கள் குடும்பபொருளாதாரத்தை மிகவும் பாதிக்கவே செய்கிறது. நாம் கடன் வாங்குவது படிப்பு, உடல் ஆரோக்கியம், தொழில் சம்பந்தப் பட்டதாக இருந்தால் ஆரோக்கியமானதே. அதேசமயம் போலிகவுரவத்திற்கு ஆடம்பரத்திற்கு, கடன் வாங்கி வாழ்வது அமைதியைக் கெடுப்பதோடு பெரும்பாதிப்பு ஏற்படும். அந்த குடும்பமும், நாடும் ஏழையாகவே இருக்கும்.
விழிப்புடன் இருந்தால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் உலகமயமாக்களை சாதகமாக்கிக்கொண்டு தனி மனித உற்பத்தி மதிப்பை பெருக்கிக்கொள்ள முடியும். எனவே நம்பிக்கையை அதிகரிக்க செய்து, நேரம், நிதி, ஆரோக்கிய மேலாண்மைகளை கடைபிடித்து நமது உற்பத்தி மதிப்பை உயர்த்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம்.
📚 எழுதியவர்:
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

