தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகின்ற புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கலாமா? – தேனி சுந்தர்

 

புதிய கல்விக் கொள்கையை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கும் சில ஆசிரியர் அமைப்புகள் குறிப்பிட்டு கூறுகின்ற ஒரு விசயம் இந்த புதிய கல்விக் கொள்கை தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் இதனை ஆதரிக்கிறோம் என்கின்றனர். உண்மையில் அவர்கள் இந்த கருத்தினை எதனை நம்பி முன்வைக்கின்றனர் என்பது விவாதத்திற்குரிய விசயம் தான்.. பெரும்பாலானாவர்கள் அரசின் கொள்கையோடு ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை தான் அவர்களின் இந்த கருத்திற்கு அடிப்படையாக இருக்க முடியும்.

If Possible என்பதெல்லாம் Impossible தான் :

சிறு குழந்தைகள் தங்கள் வீட்டுமொழி / தாய்மொழியில் குறிப்பிடத்தக்க கருத்துகளை மிக விரைவாக கற்றுக்கொள்கிறார்கள் என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. (தே.க.கொ.அம்சம் 4.11) உலகம் முழுவதிலும் பல வளர்ந்த நாடுகள் நிரூபித்திருப்பது போல, ஒருவர் தமது சொந்த மொழியில், கலாச்சாரத்தில், பாரம்பரியத்தில் நன்கு கல்வி கற்றவராக இருப்பதென்பது கல்விசார்ந்த, சமூக, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அதிக பயனளிப்பதாக உள்ளது. மாறாக தடையாக இருப்பதில்லை (4.15) என்கிற வாக்கியங்கள் மட்டும் தான் தாய்மொழிக்கான முக்கியத்துவம் குறித்துப் பேசுவதாக இருக்கிறது. சிறு வயதில் குழந்தைகள் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்கின்றனர் என்பது ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு என்றால் அதையே சிறுவயதில் நிறைய மொழிகள் கற்றுக் கொள்வதாக திருத்திக் கூறியிருப்பது இவர்களது கண்டுபிடிப்பு.. மற்றபடி தாய்மொழிக்கல்விக்கான முக்கியத்துவத்தை இழக்கச் செய்வதாகவே அல்லது முற்றிலும் தாய்மொழிவழிக் கல்வியை அழித்தொழிப்பதாகவே புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் இருக்கின்றன..

சாத்தியமான இடங்களில் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி, வாய்ப்பு இருந்தால் எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு அப்பால் கற்பிக்கும் மொழி வீட்டு மொழி / தாய்மொழி / உள்ளூர் மொழி / பிராந்திய மொழியாக இருக்கலாம்.. அதன் பிறகு வீட்டு / உள்ளூர் மொழி சாத்தியமான இடங்களில் மொழிப்பாடமாக தொடர்ந்து கற்பிக்கப்படலாம். இந்த முறை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படும். (4.11) இதில், ”சாத்தியம் இருந்தால்”, “வாய்ப்பு இருந்தால்” ஆகிய வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்ற கருத்து என்னவென்றால், சாத்தியம் இருந்தால் 5ம் வகுப்பு வரையிலும் தாய்மொழிவழிக் கல்வி கொடுக்கலாம். வாய்ப்பு இல்லை என்றால் விட்டு விடலாம்.. வாய்ப்பு இருந்தால் 8ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேலும் கூட தாய்மொழிவழிக் கல்வி கொடுக்கலாம். வாய்ப்பு இல்லையென்றால் விட்டுவிடலாம். தாய்மொழிவழிக் கல்வி தான் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்பது தான்.

மேலும் “வேறு மொழியில் கற்பித்தல் நடக்கும்போது, குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாத மொழியில் கற்கும்போது அவர்கள் கற்றலில் பின் தங்கி விடுகிறார்கள் என்பதையும் இக்கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்கிறது. அதனால் தொடக்க நிலையில் கற்பித்தல் மொழி வட்டார மொழியாக இருக்க வேண்டியது அவசியம்.. வட்டார மொழியில் எழுதப்பட்ட (குறிப்பாக அறிவியல்) பாடநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடநூல்களின் தரத்தை ஒத்திருப்பதில்லை. வட்டார மொழியை, பழங்குடியினர் மொழியை மதிக்க வேண்டும். அம்மொழிகளில் அருமையான பாடநூல்கள் வெளிவர வேண்டும். முடியுமெனில் திறமையான ஆசிரியர்களை இம்மொழிப்பாடங்கள் கற்பிக்க நியமிக்க வேண்டும். (வரைவுக் கொள்கை 4.5) மொழிச் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அவர்களது மொழிகள் கற்பித்தல் மொழிகளாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். (வரைவுக் கொள்கை 4.5.1) என வரைவறிக்கையில் கொடுக்கப்பட்ட அழுத்தமோ, உத்தரவாதமோ இறுதிப்படுத்தப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு வெளிவந்த கொள்கையில் இல்லையே.. இதுக்கு அது பரவாயில்லை என்றல்லவா இருக்கிறது.

மேலும், அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்குமான தரமான புத்தகங்கள் அவரவர் வீட்டு / தாய்மொழியில் கிடைக்கும். கிடைக்காத போது ஆசிரியர் – மாணவர் இடையிலான கற்றல் கற்பித்தலுக்கான பரிமாற்ற மொழியாக அவர்களது வீட்டு / உள்ளூர் மொழியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இருமொழிக் கற்பித்தல் முறையினைக் கையாள ஊக்குவிக்கப்படுவார்கள். (4.11) இதில், அவரவர் தாய்மொழியில் தரமான பாடநூல்கள் கிடைக்கச் செய்யப்படும் என்ற உறுதிப்பாடு இல்லை. மாறாக அப்படி அவரவர் தாய்மொழியில் தரமான பாடநூல்கள் கிடைக்காத போது எந்த மொழியில் கிடைக்கிறதோ அதனை வைத்துக் கொண்டு ஆசிரியர் இருமொழிவழிக் கற்பித்தலைக் கையாண்டு குழந்தைகளுக்கு பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்கிறது. இதில் எங்கே தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது..? அவரவர் தாய்மொழி தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. பாடமொழியாக இருந்தால் போதுமானது என்பதை மேலும் அழுத்தம் திருத்தமாக கூறுகின்ற வரிகள் இவை: ஒரு மொழி கற்பிக்கப்படுவதற்கும் நன்றாக கற்கப்படுவதற்கும் அது பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. (4.11)

இந்த அடிப்படையில் கோவை அரசுப் பள்ளி உட்பட பல பள்ளிகள் மாணவர் சேர்க்கை படிவத்தை பெற்றோரின், குழந்தைகளின் கைகளில் கொடுக்கின்றன. கொடுக்கும் வாய்ப்புகளுக்கு உட்பட்டு தானே நமது விருப்பங்கள் இருக்க முடியும்? ஏற்கனவே தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலேயே கூட மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்காக ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டு படிப்படியாக தமிழ்வழிப் பிரிவுகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு நண்பர் தனது குழந்தையை ஒரு அரசுப் பள்ளியில் முதல் வகுப்பில், தமிழ்வழிப் பிரிவில் சேர்க்கிறார். அந்த ஒரு குழந்தையைத் தவிர மீதியுள்ள அனைத்துக் குழந்தைகளும் ஆங்கிலவழிப் பிரிவில் சேர்ந்திருக்கின்றனர். அந்த ஒரு குழந்தையையும் இந்த வழிக்குக் கொண்டுவந்து விடத்தான் முயற்சிகள் நடந்திருக்கின்றன என்பதை சமூக வலைத்தளங்களில் வாசித்தது நமக்கு நினைவிருக்கும்..

வீட்டு மொழியும் உள்ளூர் மொழியும் வேறுபடும். உள்ளூர் மொழியும் பள்ளியில் பயிற்று மொழியும் வேறுபடும். இத்தகைய சூழலில் இளம் குழந்தைகள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வதிலும் விசயங்களை உள்வாங்கிக் கொள்வதிலும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த இடைவெளியைப் போக்க வேண்டும் என்று தொடக்கத்தில் கூறுகின்ற கல்விக் கொள்கை இடைவெளியை இன்னும் விசாலப்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தான் மீதியுள்ள பக்கங்களில் எல்லாம் பேசியிருக்கின்றது.

ஒரே மொழியில் கூட பேச்சுமொழியும் எழுத்து மொழியும் வேறுபடுகின்றன. குழந்தை ஐந்து ஆண்டுகளாக வீட்டில் பேசியதும் பாடநூலில் இருப்பதும் வேறுபடுவது கண்டு திகைக்கின்றனர். உள்ளூர்ச் சூழலுக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத பாடநூல்களால் புரியாத புது உலகில் சஞ்சரிக்க நேர்கின்றது. எனவே முதல் ஐந்து ஆண்டுகளில் அவரவர் தாய்மொழியில் நன்கு எழுதவும் பேசவும் தோன்றும் கருத்துகளைத் தெளிவுபட பேச்சு மற்றும் எழுத்து மூலமாகப் பகிரவுமான திறன்களை உறுதி செய்வதன் மூலமாகத் தான் மாணவர்கள் அறிவியல், கணிதம், வரலாறு உள்ளிட்ட மற்ற பாடங்களைப் போதுமான அளவிற்கு பொருளுணர்ந்து படிக்கவும் ஒப்பிட்டு புரிந்து கொள்ளவும் விமர்சிக்கவும் விவாதிக்கவும் முடியும்.

அரசு மற்றும் அரசு சாரா கணக்கெடுப்புகள் நாம் தற்போது கற்றல் நெருக்கடிக்குள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. தற்சமயம் தொடக்கவகுப்புகளில் இருக்கும் ஐந்து கோடிக்கும் அதிகமான குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவை அடையாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது வாசிக்க மற்றும் பேசுவதைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் இந்திய எண்களில் அடிப்படைக் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளைச் செய்தல் ஆகிய திறன்களை அடைந்திருக்கவில்லை (2.1) எனவே அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அனைத்துக் குழந்தைகளும் பெறுதல் என்பது பல்வேறு முனைப்புகளுடன் மற்றும் தெளிவான குறிக்கோளுடன் குறுகிய காலத்தில் அடைய மிகவும் அவசரமான ஒரு தேசிய இயக்கமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. உச்சபட்ச முக்கியத்துவமாகத் தொடக்கப்பள்ளியில் 2025ல் அனைவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடைவதற்கான இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடையாளம் கண்டு அதற்கான செயல்திட்டத்தை மாநில அரசுகள் தயாரிக்க வேண்டும் (2.2)

மேற்கண்டவாறு இன்றைய பள்ளிச் சூழலில் உள்ள அடிப்படையான பிரச்சனையைக் கொள்கை அடையாளம் கண்டுள்ளது பாராட்டிற்குரியது. அதனைப் பொருத்தமாகச் சுட்டிக்காட்டியிருப்பத்ம் பாராட்டிற்குரியது. ஏற்கனவே தாய்மொழிவழிக் கல்வி மற்றும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இருக்கும் போதே உரிய இலக்குகளை அடைய முடியவில்லை. இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான கல்விக் கொள்கை எட்ட வேண்டிய புதிய இலக்குகளை விடவும் தன் தேசத்து குழந்தைகளுக்கு இன்னும் எழுதப் படிக்க தெரியவில்லை என்ற நிலைமை இருக்கும் போது இன்னும் இரண்டு மொழிகளைச் சேர்த்து படியுங்கள் என்று சொல்வது எந்த வகையில் புத்திசாலித்தனமாக இருக்க முடியும்.. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் 85% வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. 2014க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் ஒன்றுமில்லை. எனில், ஏன் அவை சாத்தியப்படவில்லை.

உண்மையில் இந்த நிலைமை மேம்பட வேண்டுமென்றால், குழந்தைகளின் சிந்தனைத் திறனும் படைப்பாற்றலும் மேம்பட வேண்டுமென்றால் விமர்சனப்பூர்வமான சிந்தனை வளர வேண்டுமென்றால் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி முழுவதும் தாய்மொழிவழிக் கல்வியில் வழங்கப்பட வேண்டும் என்கின்ற அரசியல் உறுதி வேண்டும். அந்த அரசியல் உறுதி கொள்கையில் வெளிப்பட வேண்டும். ஆங்கிலமோ, இந்தியோ இன்னபிற மொழிகளாக இருந்தாலும் இந்தியக் குழந்தைகள் விரும்பினால் அவற்றைக் கற்பதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டும். மழலையர் வகுப்பு முதல் சட்டம், மருத்துவம், பொறியியல் என அனைத்து உயர்கல்விப் படிப்புகளும் தாய்மொழியில் கிடைத்திட வேண்டிய ஏற்பாடுகளையும் அதற்கான நிதியினையும் ஒதுக்கிட வேண்டும். பள்ளியில் பயிற்று மொழியாகவும் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் கோவில்களில் வழிபாட்டு மொழியாகவும் குறைந்தபட்சம் மாநில நிர்வாக நடைமுறைகளாவது தாய்மொழியில் இருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை 2019: மாறவிருக்கும் பள்ளிக் கல்வி | புதிய கல்விக்  கொள்கை 2019: மாறவிருக்கும் பள்ளிக் கல்வி - hindutamil.in

ஒரு கண்ணில் வெண்ணெய்…:

இந்தியாவின் நவீன மொழியான சமஸ்கிருதம் ஒன்றுகூட்டப்பட்ட கிரேக்க, லத்தீன் மொழிகளின் இலக்கியங்களைக் காட்டிலும் செறிவு மிக்கதாகவும் கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டிடக்கலை, உலோகவியல், நாடகம், கவிதை, கதை சொல்ல்ல் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாலும் மதச் சார்பற்றவர்களாலும் வாழ்வின் பலதரப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஏராளமான செல்வங்களையும் உள்ளடக்கியுள்ளது. எனவே சமஸ்கிருதம் மும்மொழிப் பாட்த்திட்டத்தின் ஒரு மொழியாக பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும் கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக்கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும். மொழிச் சுவையுடனும் அனுபவப்பூர்வமாகவும் மட்டுமின்றி தற்காலத்திற்கேற்ப சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலமாக கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருத ”பாடநூல்கள் எளிய, தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்கிருத மொழியின் மூலமே கற்பிக்கப்படும்”.(4.17) சமஸ்கிருதத்தோடு இந்தியாவின் செவ்வியல் இலக்கியங்களைக் கொண்டுள்ள இதர மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஒரிய, பாலி, பாரசீக மற்றும் பிராகிருத மொழிப்பாடங்களும் பரவலாக நிறையப் பள்ளிகளில் ”விருப்ப பாடங்களாக இணையவழியில்” வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் உருவாக்கப்படும்.. (4.18)

சமஸ்கிருதம் குறித்துப் பேசும்போது உயரத்தில் ஏறி நின்று உரத்த குரலேடுத்து ஓங்கிப் பேசுகின்ற கொள்கை மற்ற மொழிகள் குறித்துப் பேசும்போது பத்துநாள் சாப்பிடாதவன் போல பேசுகிறது.. வெறும் காற்று தான் வருகிறது. சமஸ்கிருத மொழிக்கு தலையில் அடித்து சத்தியம் செய்து உத்தரவாதம் அளிக்கின்ற கொள்கை மற்ற மொழிகள் குறித்துப் பேசும்போது போகிற போக்கில் சரி பார்க்கலாம் என்கிற தொனியில் கூறுவது ஏன்..?

குழந்தைகளுக்கான நெருக்கடிகள்:

அடித்தள நிலையிலிருந்து தொடங்கி குழந்தைகளுக்கு வெவ்வேறு மொழிகள் அறிமுகப்படுத்தப்படும். ஆனாலும் தாய்மொழிக்கு ஒரு குறிப்பிட்ட முன்னுரிமை அளிக்கப்படும். மூன்று வயதிலிருந்து மூன்று மொழிகளையும் கேட்கவும் பேசவும் பயிற்சி அளிக்கப்படும். தாய்மொழியை மட்டும் எழுதவும் வாசிக்கவும் பயிற்சி அளிக்கப்படும். பிற இரண்டு மொழிகளை மூன்றாம் வகுப்பிலிருந்து எழுதவும் படிக்கவும் பயிற்சி அளிக்கப்படும். (4.12)

எந்த ஒரு மொழியும் மாநிலத்தின் மேல் திணிக்கப்படாது. மும்மொழி கற்றல் என்பது மாநிலம், பிராந்தியம், மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப மொழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனினும் மூன்றில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். (4.13)

மேனிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் முன் மூன்று மொழிகளிலும் அடிப்படைச் செயல்முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (4.13) அனைத்து இளம் இந்தியர்களும் கலாச்சார செறிவிற்கும் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கத்திலும் தங்கள் நாட்டின் செழுமை நிறைந்ததும் பரந்த எண்ணிக்கையில் அமைந்த்துமான மொழிகள் மற்றும் அவற்றின் இலக்கியங்கள் கொண்டுள்ள பொக்கிஷங்களை அறிந்தவர்களாக இருக்க் வேண்டும். (4.15)

அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைப் பற்றி மாணவர்கள் தம் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் ஏதுவாக இருமொழிகளில் அமைந்த உயர்தரப் பாட புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்குவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். (4.14)

எனவே நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவ மாணவியும் 6-8 ஆம் வகுப்புகளில் ஒரே இந்தியா வளமான இந்தியா என்னும் முன்னெடுப்பின் கீழ் ஒரு உற்சாகமூட்டும் செயல்திட்டத்தில் பங்கெடுப்பர். இதன் மூலம் இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளுக்கிடையிலான பிரம்மிக்கத்தக்க ஒற்றுமையைப் பற்றிக் கற்றுக் கொள்வர். இது எந்த ஒரு முறையிலும் மதிப்பிடப்படாத, தேர்வு பாடத்திட்டத்தின் கீழும் வராத ஒரு செயல்திட்டம் ஆகும். (4.16)

அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது இந்தியாவின் ஏதாவது ஒரு செவ்வியல் மொழியையும் அதனோட தொடர்புடைய இலக்கியத்தையும் பரிட்சார்த்த மற்றும் புதுமையான முறைகளில் தொழில்நுட்ப உத்திகளையும் புகுத்தி 6 ஆம் வகுப்பு முதல் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் கற்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. (4.19)

பள்ளிக்கு குழந்தைகள் மொழியினைக் கற்றுக் கொள்வதற்காக மட்டும் வரவில்லை. பதினைந்து ஆண்டுகளில் பெரும்பாலான நேரங்களை மொழி கற்பதற்காக மட்டுமே நேரங்களை செலவிட வேண்டி வரும். இடையிடையே குலக்கல்வி கற்கவேறு போக வேண்டும். எனில் இதற்கிடையே இத்தனை மொழி சார்ந்து இலக்குகளை நிர்ணயிப்பது அவர்களுக்குச் சுமையாகவே இருக்க முடியும். தமிழ் மொழியின் இலக்கியங்களை வாசித்து முடிக்கவே ஒரு தமிழனுக்கு ஆயுட்காலம் போதாது. இன்று பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்விக்கு போய்விட்ட சூழலில் தன்னுடைய பெயரைக் கூட தமிழில் எழுதத் தெரியாத ஒரு தமிழ்த்தலைமுறை உருவாகி விட்டது. அவரவர் தாய்மொழியில் தேர்ச்சி பெறுவதையும் இலக்கியப் புதையலைத் தேடி வாசிக்கவும் இலக்கிய இன்பம் பெறவுமான வாய்ப்புகளை முதலில் உருவாக்கிய பிறகு பிறமொழி இலக்கிய இன்பங்களைத் தேடிச் சுவைக்கலாம்.

புதிய கல்விக் கொள்கை: சில கேள்விகள்... | புதிய கல்விக் கொள்கை: சில  கேள்விகள்... - hindutamil.in

முந்தைய கொள்கைகள் முன்வைத்தது என்ன?

தாய்மொழிவழிக் கல்வி குறித்து இதற்கு முந்தைய கல்விக் கொள்கைகள் என்ன கூறியுள்ளன என்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

“ஆங்கிலம் போன்ற பிற மொழிக் கல்வியைப் பெறுவதற்கு முன்பாக, குழந்தைகள் தங்களது தாய்மொழியைக் கையாள்வதில் அசாத்தியத் திறமையைப் பெறுதல் அவசியம். சில குறிப்பிட்ட பள்ளிகளில் பரீட்சார்த்த முறையாக ஆங்கிலத்தை முதல்மொழியாக வைக்கலாம். ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பித்தலைத் துவங்குதல் கூடாது.. (பக்.343)” – கோத்தாரி கல்விக் கொள்கை (1964-66)

குழந்தைகள் தமது துவக்க கல்வியின் முதல் ஐந்து வருடங்கள் தாய்மொழிவழிக் கல்வியில் தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.. (பிரிவு 18, பக்.178)- தேசியக் கல்விக் கொள்கை -1986 (செயல்பாட்டிற்கான நகல் திட்டம்-1992)

தேசியக் கல்விக் கொள்கை-2020ஐப் பொறுத்தவரை மொழிகுறித்து பேசும் மேற்கண்ட அம்சங்கள் எதுவும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயம் என்று வலியுறுத்தவில்லை.. இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

-தேனி சுந்தர்