எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை | Children Mythological Stories Or Ithikasa Kathaikal | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?” கட்டுரை

“புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?” கட்டுரை

– எழுத்தாளர் உதயசங்கர்

இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டதால்  மக்கள் மனதில் இதிகாசங்கள் ஊறிப்போய் விட்டன. அந்தக் கதைகளில் வருகிற கதாபாத்திரங்களின் மீது தெய்வீகத்தன்மை ஏற்றப்பட்டு தெய்வங்களின் அவதாரங்களென்று வழிபடப்பட்டதாலும்  யாரும் கேள்விகள் கேட்பதில்லை. ஏன் கேள்விகள் கேட்கலாமென்று எண்ணம் கூட வருவதில்லை.

பற்றாத தற்கு பெரியவர்களுக்காக எழுதுகிற எழுத்தாளர்களும் இதிகாசக்கதைகளை மறுவாசிப்பு என்ற பெயரில் மீண்டும் மீண்டும் எழுதி (அப்படி எழுதுவதில் ஒரு வசதி இருக்கிறது, மக்கள் மனதில் ஏற்கனவே நிலைபெற்றிருப்பதால் அவர்களிடம் சுலபமாக விற்றுவிட முடியும்) வருவதால் இதிகாசங்களில் சொல்லப்பட்ட விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சமூகமாக மாறியிருக்கிறோம்.

இதிகாசங்கள் ஏன் உருவாயின?

முதலில் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான மகாபாரதமும் இராமாயணமும் வரலாறு அல்ல என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் வரும் சம்பவங்களோ கதாபாத்திரங்களோ உண்மையானவர்களில்லை. அவை கதைகள். கற்பனை கலந்தவை. துளியூண்டு உண்மையின் மீது காலங்காலமாகச் சொல்லப்பட்ட கற்பனைக் கதைகள். புளுகு மாளிகைகள். அவை நாட்டார் கதைகளாக உருவாகி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பிறகு எழுதப்பட்ட காவியங்கள்.

மூலப்பிரதியை எழுதியது வியாசராகவோ, வால்மீகியாகவோ, இருந்தாலும் பின்னால் ஏராளமான இடைச்செருகல்களும் உருப்பெருக்கங்களும், மாறிவரும் புதிய சமூகச்சூழ்நிலைகளுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் அறவிழுமியங்களும், விளக்கங்களும் சேர்ந்து ஊதிப் பெருத்தவை.

ஒரே நேரத்தில் ஆரிய சமூகத்தில் இரண்டு விதமான பிரச்னைகள் எழுந்தன. முதலாவது வேத சமயத்துக்கெதிராக இந்தியாவில் உருவான இரண்டு சமயங்களான பௌத்தமும் சமணமும். அவை அரசுகளின் ஆதரவு பெற்ற சமயங்களாக மாறியதால் வேத சமயத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு. அதன் விளைவாக அதுவரை யாகங்களின் பெயரைச் சொல்லி மக்களிடம் செலுத்தி வந்த ஆன்மீக அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.  அதை எதிர்கொள்ள வேண்டிய நிலையும், இரண்டாவது ஆரியச்சமூகத்துக்குள் இருந்த பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல். அரசு அதிகாரத்தையும் ஆன்மீக அதிகாரத்தையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடுகள். அத்துடன் வெகுமக்களிடம் வர்ணப்பாகுபாடுகளை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம். ஏன் இந்த நிலைமை உருவானது?.

அதுவரை  இனக்குழுக்களாக இருந்த சமூகங்கள் உபரி உற்பத்தியின் வழியே நிலவுடமைச் சமூகமாக மாறிக் கொண்டிருந்த காலம். ஒரு நிலையான அரசாக உருவான காலம்.

அரசனின் வானாளவிய அதிகார த்தைச் சமூகம்  ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.  அதனால் தான் அரசனை கடவுளின் பிரதிநிதியாகவும், கடவுளாகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்த எழுதப்பட்ட இலக்கியப்பிரதிகளே புராணங்களும் இதிகாசங்களும்.

இன்னும் சரியாகச் சொல்லப்போனால் புராண இதிகாசங்களின் வழியே ஏற்கனவே சொன்ன இரண்டு பிரச்னைகளை ஆரிய சமூகம் தீர்த்துக் கொண்டது.  பார்ப்பனர்கள் தங்களுக்கு அடுத்த நிலையிலுள்ள சத்திரியர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.  அதாவது அரசு அதிகாரத்தை சத்திரியர்கள் வைத்துக்கொள்ளவும் ஆன்மீக அதிகாரத்தை பார்ப்பனர்கள் வைத்துக்கொள்ளவுமான ஏற்பாடு நிகழ்ந்த து.  அதில் ஏற்படும் சமரசங்களையும்  மகாபாரததத்தையும் இராமாயணத்தையும் நுட்பமாக வாசித்தால் தெரியும்.

அதேபோல வர்ணப்பாகுபாட்டை உருவாக்கியது அதாவது மனிதர்களை நான்கு வர்ணங்களாகவும் அவர்களுக்கான உணவு, உடை, தொழில், இருப்பிடம் ஆகியவற்றை வரையறைத்துக் கொடுத்த து கடவுளே எனும் கருத்தாக்கத்தை மிக சுலபமாக மக்களிடம் பரப்பவும் இந்தப் புராண இதிகாசங்கள் பேருதவி செய்தன.

இதிகாசக்கதைகள் உருவானதின் தத்துவப்பின்புலம் என்ன? 

வேதங்களை மட்டுமே ‘ அபௌருஷ்யே ‘ அதாவது காற்றிலே பிறந்த து என்று வணங்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் தங்களுடைய சமயத்தை வளர்க்க, வெகுசனமயமாக்க உருவ வழிபாட்டை நோக்கி நகரும்போது புராணக்கதைகளை உருவாக்கினார்கள். வேதங்களில் யாகங்களைப் பற்றியும், எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டுதல்கள், சூளுரைகள், இவையே பெரும்பாலும் இருந்த போது, இந்தியாவில் வளர்ந்த பௌத்தமும் சமணமும் வாழ்க்கை குறித்தும் வாழ்வின் அர்த்தம் குறித்தும் தத்துவத்தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது பார்ப்பனச் சமயத்துக்கு ஏற்பட்ட தேவை காரணமாகவே பிரமாணங்கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், உபநிட தங்கள் உருவாயின.

அப்போது வாழ்ந்த வெகுமக்கள் குலதெய்வ வழிபாடு அல்லது நாட்டார் தெய்வ வழிபாடுகளின் வழியே தங்களுடைய முன்னோர்களை வழிபட்டார்கள். தங்கள் வாழ்க்கையுடன் ஒன்று கலந்த இந்த மண்ணில் வாழ்ந்த முன்னோர் வழிபாடு மிகப்பிரபலமாக இருந்த போது அந்த மக்களைக் கவர் கைலாயம், வைகுண்டம் என்று கற்பனையான அப்பாலை உலகங்களையும் தெய்வங்களையும் உருவாக்கினார்கள். அவர்களுக்கான கதைகளை உருவாக்கினார்கள். அவர்களை இங்கிருக்கும் நாட்டார் தெய்வங்களுடன் இணைத்தார்கள். உதாரணத்துக்கு முருகன். உழைப்பாளி மக்களின் தெய்வங்களுக்கு பூணூல் அணிவித்தார்கள்.அவர்களை மேல்நிலையாக்கம் செய்தார்கள். அதாவது பார்ப்பன, சத்திரிய குலத்துக்கு மாற்றினார்கள். அவர்களுக்கு பெண் கொடுத்தார்கள். பெண் எடுத்தார்கள். எல்லாம் கதைகளில் மட்டும் தான் என்பதை மறக்கக் கூடாது.

காலம் காலமாக இந்தக் கதைகளை வாய்மொழியாகச் சொல்லியும் அப்போதைய இந்தியாவிலிருந்த ஐம்பத்தியாறு  நாடுகளில் மக்களிடம் புழங்கிக் கொண்டிருந்த நாட்டார்கதைகளை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை இணைத்து ஊதிப்பெருக்கி (இன்னமும் கூட அந்தத் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது) இதிகாசங்களாகப் புனைந்தார்கள்.

அந்த இதிகாசங்களில் சொல்லப்படும் கதைகளின் கருத்தியல் என்ன? அவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்ல லாமா?

இருபெரும் இதிகாசங்களும் வாய்மொழி நாட்டார்கதையாக எப்படியிருந்ததோ தெரியாது. ஆனால் எழுதப்பட்டபோது அது மனுநீதியை, அதாவது மக்களை வர்ணங்கள் என்று சொல்லப்படுகிற பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பெருந்தொகுதிகளாகவும், சங்கர சாதிகள் என்ற சிறு தொகுதிகளாகவும் பிரித்த தை நியாயப்படுத்தும் விதமாகவே எழுதப்பட்ட து. அதாவது மக்களைப் பிறப்பால் மேல் கீழ் சாதிகளாகப் பிளவுபடுத்தும் வர்ணாசிரமத்தர்மத்தை  நிலைநிறுத்துவதற்காக, எழுதப்பட்டவை.

இந்தப் பெரும் பிரிவுகளுக்குள் வராத ஒரு பெரும்திரள் பூர்வகுடிமக்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும் தீண்ட த்தகாதவர்களாகவும் ஊரை விட்டு, சமூகத்தை விட்டு வெளியேற்றி பார்த்தால் தீட்டு, தொட்டால் பாவம் என்று  ஒடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்திய மனுநீதியை நியாயப்படுத்துகிற கதைகள்.

ஹிந்து தர்மம், ப்ராமண தர்மம், சத்திரிய தர்மம், சூத்திரர் தர்மம் என்று ஒரே தர்மநியாயங்கள் கொட்டிக்கிடக்கும். இவற்றை இன்றைய குழந்தைகளுக்குச் சொல்லும்போது என்ன மாதிரியான உளவியல் பாதிப்பு ஏற்படும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டாமா? இந்தப் பிரிவுகளுக்குள் வராத பழங்குடி மக்கள், பூர்வகுடி மக்கள் மேலே குறிப்பிட்ட பிரிவினர்களுக்குச் சேவை செய்யவும், உயிர்த்தியாகம் செய்யவும் பிறந்தவர்கள் என்பது போன்ற கருத்தியல்களைச் சொல்ல லாமா?

இன்றைய நவீன சனநாயகயுகத்தில் இவற்றுக்கான பொருத்தப்பாடு என்ன என்பதை யோசிக்க வேண்டாமா?

மகாபாரதம், ராமாயணம் இரண்டுமே அரசர்களைப் பற்றிய, அவர்களது குடும்பங்களைப் பற்றிய, அவர்களுக்கிடையில் நடந்த காம, குரோத, காதல், அன்பு, தயை, ஈகை, கருணை, துரோகம், வஞ்சகம், இவற்றைப் பற்றிய கதைகள். இவற்றைச் சிறுவயதிலே தெரிந்து கொள்வதால் குழந்தைகளுக்கு என்ன பயன்?

மகாபாரதம் பழமையானது. அது ஒரே இனக்குழுவைச்சேர்ந்த இரண்டு பங்காளிகள், தாயாதிகள், வகையறாக்கள், கிளைகள், பிரிவுகள், இவர்களுக்கிடையே நிகழ்ந்த நிலத்துக்கான சண்டை. சுற்றியலைந்து கொண்டிருந்த நாடோடிகள் ஒரு இடத்தில் நிலையாக இருந்து அங்கிருந்த மக்களை சாம, தான, தண்ட, பேதங்களினால் உருட்டி, மிரட்டி, கொலைசெய்து, நிர்வாகம் செய்யத் தொடங்கிய காலம். குறிப்பாக இரண்டு இதிகாசங்களிலும் அவர்களை எதிர்த்த பூர்வகுடிகளைக் கொன்றழித்து ஆட்சியை நிலைநிறுத்தியதைப் பெருமையாகப் பேசுகிறது.

அப்படியா என்று கேட்பவர்களுக்கு, மகாபாரதத்தில், ஏகலைவன் கதை, இடும்பன்கதை, தொடங்கி இந்திரப்பிரஸ்த நகரத்துக்காக நாகர்களை அழித்தகதை அரக்கு மாளிகையில் தீக்கிரையான பழங்குடிகள் கதை, என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன. அதேபோல ராமாயணத்திலும் ராவணன், தாடகி, சூர்ப்பனகை, வாலி, சுக்ரீவன், ஜடாயு என்று கதைகளிருக்கின்றன.

யார் அந்த பூர்வகுடிகள் என்று யோசித்துப்பார்த்திருக்கிறோமா?

விந்திய மலைக்குத் தெற்கில் இருந்தவர்கள் எல்லாரும் அரக்கர்கள், காட்டுமிராண்டிகள், விலங்குகள், நாகரீகமற்றவர்கள், என்று இரண்டு இதிகாசங்களிலும் சித்தரித்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் யார்? என்று யோசித்திருக்கிறோமா?

இரண்டு இதிகாசங்களிலும் வருகிற குடும்ப உறவுகள், குழந்தைப்பேறுகள், குறித்த உண்மைகளைச் சொல்லமுடியுமா? இன்றைய அறிவியல்யுகத்தில் குழந்தைகளிடம் வரத்தினால் குழந்தை பிறக்கும், மாம்பழம் அல்லது பாயாசம் குடித்தால் பிள்ளை பிறக்கும் என்று சொல்வது அறிவுடமையாகுமா? பெண்ணடிமைத்தனத்தின் உச்சமாக இருக்கும் இரண்டு இதிகாசங்களைக் கேட்கும் ஆண் குழந்தைகளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? பெண்குழந்தைகளிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

இதிகாசங்களிலும் வருகிற போர், துரோகம், வஞ்சகம், கருணை, பழிக்குப்பழி, சபதம், எல்லாம் குழந்தைகளுக்குத் தேவையா? மனித மனவிசித்திரங்களைப் பற்றிச் சிறுவயதில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

வாய்மையைக் கடைப்பிடித்தல், கீழ்ப்படிதல், செய்ந்நன்றி, குருபக்தி, என்று ஆயிரம் வியாக்கியானங்களைச் சொன்னாலும் அவற்றுக்கு எதிரானதும் அவற்றில் இருக்கின்றன என்பதும், காலத்தின் துருவேறி இற்றுப்போன விழுமியங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமா?  அப்படிப் புதுப்பிப்பதினால் யாருக்கு பலன் என்று யோசிக்க வேண்டாமா? 80-களில் தொடங்கிய மகாபாரத, ராமாயணத் தொலைக்காட்சித்தொடர்கள் எப்படி சநாதனத்தையும் சடங்குகளையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும்தானே.

புராண இதிகாசங்கள் வயது வந்தவர்களுக்கான இலக்கியம். கடந்த காலத்தின் அருங்காட்சியகம். நம்முடைய முன்னோர்கள் எப்படி இருந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? என்பதற்கான இலக்கிய ஆதாரம். மனித மனவிகாரங்களின் கண்காட்சி. ஆனால் இப்போது அந்தக் காலத்துக்குத் திரும்பவோ, அதில் வாழவோ முடியாது.

அதனால் தான் இப்படியான பழமையான இலக்கியப்பிரதிகளுக்குள்  நுழைய வயது வரம்பு வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் வாசிக்கவும் தெரிந்து கொள்ளவுமான இலக்கியம். குழந்தைகளிடம் இவற்றைப் பற்றிச் சொல்வதோ, குழந்தைகளை வாசிக்க வைப்பதோ என்பது நாமே குழந்தைகளின், குழந்தைமையை ஆளுமைத்திறனின் சுதந்திரமான வளர்ச்சியைச் சிதைப்பதாகும்.

உலகம் முழுவதுமே இதே நிலைமைதான். முற்றான அதிகாரத்தை கடவுள், அரசன், இவர்களை மையமாகக் கொண்டே காவியங்களும், புராணங்களும், இதிகாசங்களும், பாடல்களும் புனையப்பட்டன.

இவையெல்லாம் உலக முழுவதுள்ள அனைத்து மதங்களுக்குமே பொருந்தக் கூடியவை. எந்த மதமும் கேள்விகளை அனுமதிப்பதில்லை. நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.

இவற்றைப் படிப்பதற்கு வயது வரம்பு தேவைப்படுகிறது. ஏனெனில்  கடந்த காலத்தில் நிலவிய, பெண்ணடிமைத்தனம், அரசவழிபாடு, தந்திரம், துரோகம், பழிக்குப்பழி, இவற்றையே விழுமியங்களாகக் கொண்டிருப்பவை என்பதாலேயே எச்சரிக்கைத் தேவைப் படுகிறது.

நம்முடைய குழந்தைகளின் ஆளுமையை நிகழ்காலமும் எதிர்காலமும் தான் உருவாக்க வேண்டும்.

இறந்த கால ஆவணங்கள் அல்ல.

📚 எழுதியவர்:

எழுத்தாளர் உதயசங்கர்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *