தொடர் 4 :– கனடாவிலிருந்து சில கவிதைகள்
பயணம்
************
முதல் முதல்
பஸ்ஸில் பயணம் செய்ததை
நினைத்துப் பார்க்கையில்
வெட்கமாக இருக்கிறது
அரை டரவுசர் போட்ட பள்ளிக்கூடத்துப் பையனாய்
தனியொரு ஆளாக
நாரேரிக்குப்பத்திலிருந்து வடவானூருக்குப் போன
அந்தப் பயணம்
வாழ்நாளில் முதன் முதலாய்
என் வயிற்றில் புளியைக் கரைத்தது
நிறுத்தத்தில் பேருந்து வந்து நின்றவுடனே
இந்த உலகமே என்னை
வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்
எனக்காக ஒரு பேருந்து நிற்பதா?
ஒரு நொடியில் ஏறிப் போய்
உள்ளே உட்கார்ந்துவிடுவேன்.
உட்கார்ந்தவுடனேயே
இறங்கியாகவேண்டிய பயம்
இதயத்திற்குள் இடியைப் போல
இறங்கும்.
இறங்குமிடம் வருவதற்கு முன்பே
இதயம் படபடவென்று
அடித்துக்கொண்டேயிருக்கும்
கண்டக்டர் எனக்கு ஒரு
கடவுளைப் போலக் காட்சியளிப்பார்
அவர் விசில் அடிப்பதற்கும்
நான் இறங்கியாக வேண்டிய நேரத்திற்கும்
இடைப்பட்ட நேரம்
இறப்பின் இழுபறிபோல
அதுவொரு பதற்றப் பயண பயம்
எப்போது விசிலடிப்பாரோவென்று
அவர் முகத்தைப் பலமுறை
பார்த்துக் கொண்டே வருவேன்…
இறங்குமிடம் வருவதற்கு முன்பே
எழுந்து நின்று கொள்வேன்
என் பொருட்டு ஒரு பேருந்து நிற்பதா?…
‘இலபக்’கென்று எகிறிக் குதித்துவிடுவேன்
ஒரு கூச்சப்பட்ட தூசினைப் போல
என் உடல் கூனிக் குறுகிப் போயிருந்ததை
தூரத்தில் நின்று
இன்று வேடிக்கை பார்க்கிறேன்.
காலம் என்மீது
கருணைப் பூக்களைத் தூவியிருக்கிறது
இன்று என் பயணம் தனியாளாக இல்லை
பக்கத்தில் என் இணையர் ஹேமாவதி
இன்று வயிறு கலக்கவில்லை
மனம் முழுவதும் மகிழ்ச்சி பரவுகிறது
நாரேரிக்குப்பம்
மீனம்பாக்கமாகிவிட்டது
பேருந்து விமானமாக மாறிவிட்டது
அன்று நான் போய்ச் சேருவதாகவிருந்த
வடவானூர்
இன்று கனடாவாகிவிட்டது
எல்லோருக்கும் போலவே
என்பொருட்டும்
விமானம் நின்றுகொண்டிருக்கும் என்ற
தெளிவு பிறந்துவிட்டது
பயணம் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது
மகிழ்ச்சி மட்டுமல்ல…
ஆச்சரியமாகவுமிருக்கிறது
மனிதன்தான் எவ்வளவு மகத்தானவன்!
நூற்றுக்கணக்கான மனிதர்கள் பறந்துசெல்ல
இரண்டே இரண்டு இறக்கை கொண்ட
எந்திரப் பறவை!
— நா.வே.அருள்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.