“இதயம்” கவிதை
*********************
இதயம்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு புறாவைப் போல அமர்ந்திருக்கிறது
காதலைப் பாடவோ
அதன் வலியைச் சொல்லவோ
சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் காதலின் வரலாறு
புதைந்திருக்கிறது
காதலர்களின் இதயத் துடிப்புகள்
தேசத்திற்குத் தேசம் மாறுபடுகிறது
ஒரு சடலத்தில் தோண்டியெடுக்கப்பட்ட
இதயம்
காதலின் வரைபடம்
இதன் திசைகாட்டி முள்களின் அசைவை வைத்து
எந்த தேசத்தைச் சேர்ந்தது என்று கூடச்
சொல்லிவிட முடியும்
இந்தியாவில்
இதயம்
அடிக்கடி
விபத்துக்கு உள்ளாகிறது.
இதயம்
சமூகம் சமைத்துச் சாப்பிடும்
காதலின் கறியாகிறது
கலாச்சாரக் கணக்கு வழக்குகளின்
இருப்புநிலையைக் குறிக்கிறது
பலிபீடத்தில் கிடத்தப்பட்டிருக்கும்
ஆடு மாடு அல்லது எருமைக்கிடா போன்று
இதயம் நடுங்கியபடிக் கிடக்கிறது
இந்தியாவில்
இதயம்
ஒரு நகைக் கடையின் தராசுத் தட்டில்
துல்லியமாக அளவிடப்படுகிறது
கனடாவிலோ
இதயம்
ஒரு மலரினைப் போல
அன்புடன் பறிக்கப் போகிற
கரங்களுக்காகக் காத்துக்கிடக்கின்றது
இதயம்
காதலர்கள் முகம் பார்த்துக் கொள்ளும்
கண்ணாடியாக இருக்கிறது.
காதலர்கள் முகம்பார்த்துக் கொள்ளும்
இந்தக் கண்ணாடியை
கண்டவர்கள் போட்டு உடைப்பதேயில்லை!
எழுதியவர் :
நா.வே.அருள்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
