தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் மிகவும் புதிரான முறையில் அதிகரித்துக்கொண்டிருப்பது குறித்து பல பத்தாண்டுகளுக்கு முன்பே பி.ஆர். அம்பேத்கர் கூறியவற்றை துயரார்ந்த முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக மட்டுமே அட்டூழியங்கள் நடைபெறுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்தப் புதிர் இன்றைய தினம் மேலும் மிகப்பெரிய அளவிலான அழுத்தத்துடன் திரும்பவும் ஏவப்படுகிறது. அட்டூழியங்கள் மேற்கொள்ளப்படுவது ஏதோ ஒரு திருவிழாக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போல பல கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
அட்டூழியங்களைப் பலர்பார்த்துப் பூரிக்கும் விதத்திலும், சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் விதத்திலும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு, தலித் பெண்களையும், ஆண்களையும் நிர்வாணமாக சாலைகளில் அணிவகுத்து இழுத்துச் செல்வதும், அதனைப் பலர் இழிவான சந்தோஷத்துடன் பார்த்து மகிழ்வதற்கு வாய்ப்பு அளிப்பதும் இவ்வாறாக ஆதிக்க சாதியினர் தங்களுடைய சமூக மேன்மையை பொது வெளியில் சித்தரிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. இதனை இன்றைய சமூக ஊடகங்களிலும் சாதி ஆதிக்க சக்திகள் திருவிழாவைக் கொண்டாடுவதுபோன்று காணொளிக் காட்சிகள் மூலமாக காட்டிக் கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகங்கள் வருகைக்கு (அநேகமாக 2004க்கு) முன்பு, சாதிய அட்டூழியங்கள் தொடர்பான செய்திகள் பத்திரிகைகள் மூலமாகத்தான் வெளிவந்தன. அவற்றைப் படித்துத்தான் தலித்துகள் தங்களுக்கு எதிரான கொடுமைகளின் தன்மை குறித்து கற்பனை செய்துகொள்வார்கள். பத்திரிகைகளில் படித்தபின்னர் தலித்துகள் தங்கள் மீது ஏவப்பட்ட அட்டூழியங்கள் குறித்து கூட்டாகத்தான் கற்பனை செய்து வந்தார்கள். அதேபோன்று அதற்கு எதிராகவும் கூட்டாகத் தங்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தினார்கள். இன்றைய காலத்தில் சமூக ஊடகங்கள் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும், அவர்கள் மீது துன்புறுத்தல் நடவடிக்கைகளை ஏவியவர்களுக்கும் பல்வேறுவிதமான உணர்ச்சிகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன.
பாதிப்புக்கு உள்ளானவர் மத்தியிலும், அவரைச் சார்ந்த சமூகத்தினர் மத்தியிலும் தார்மீகரீதியான முறையில் காயத்தை ஏற்படுத்தும் விதத்தில், பாதிப்புக்கு உள்ளானவரின் கோர வடிவங்களும், கொரூரமான சித்திரங்களும் சமூக ஊடகங்களின் மூலமாக சுற்றுக்கு விடப்படுகின்றன. தலித்துகள் தங்கள்மீது ஏவப்பட்ட காயத்தின் காரணமாக ஒருவிதமானமுறையில் கூனிக் குறுகிவிடுகிறார்கள். அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இந்தக் காயமானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அவமானமாகக் கருதப்படுகிறது. (குஜராத்தில்) உனாவிலும், (ராஜஸ்தானில்) நாகுவரிலும் குற்றஞ்சாட்டப்பட்ட கயவர்களால் சுற்றுக்கு விடப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிக் காட்சிகள் பாதிப்புக்கு உள்ளானவரை மேலும் அவமானப்படுத்தும் விதத்தில் அவர்களை உந்தித்தள்ளுகின்றன.
அதே சமயத்தில் இக்குற்றச்செயல்களில் ஈடுபட்ட கயவர்களோ சமூகத்தில் பெருமைப்படும் விதத்திலும் கவுரவிக்கப்படும் விதத்திலும் நடத்தப்படுகின்றனர். இவ்வாறு, தீய நோக்கங்களுடனான சமூக ஊடகங்கள் உயர்சாதியினர் மத்தியில் தங்களின் பெருமையையும் கவரவத்தையும் அதிகரித்துக்கொள்ளும் உணர்வினை உருவாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. அதே சமயத்தில் தலித்துகள் மத்தியில் தங்களை மேலும் கீழானவர்களாக உணரும் உணர்வினையும் உருவாக்குகின்றன.
அதனால்தான், இத்தகைய தாழ்வுணர்ச்சி காரணமாக தலித்துகள் தங்கள்மீது ஏவப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக தாமாகவே முன்வந்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. மாறாக அவர்களின் சமூகக் குழுக்கள், தலித் இளைஞர் மீது ஏவப்பட்ட சாதிய அட்டூழியத்திற்கு எதிராகவும், இவ்வாறு தங்கள் சமூகத்தினர் மீது திட்டமிட்டு ஏவப்பட்ட அவமானங்கள் குறித்தும் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவமானத்திற்கு எதிரான போராட்டம், அல்லது, ஆக்கபூர்வமாகச் சொல்வதென்றால், கண்ணியம் மற்றும் சுய மரியாதைக்கான போராட்டம், அம்பேத்கரின் அரசியல் காலத்திலிருந்து தலித் அணிசேர்க்கைக்கானதொரு புதிய மொழியாக இருந்து வந்திருக்கிறது.
அது, மீண்டும் ஒருமுறை, இன்றைய நவீன தாராளமயக் காலத்திலும் தலித் கற்பனையைக் கைப்பற்றி இருக்கிறது. நவீன தாராளமய அரசியல் பொருளாதாரத்திற்கும், இத்தகைய ஒழுங்குமுறை மொழிகளுக்கும் இடையேயான இந்த சிக்கலான உறவினை, கன்ஷ்யாம் ஷா தன்னுடைய நவீன தாராளமய அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூகப் பதற்றங்கள் (இகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, 2 செப்டம்பர் 2017) கட்டுரையில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
சமூக ஊடகங்கள் சாதி ஆதிக்கத்தை மீளவும் நிலைநிறுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே கருதப்படுகிறது. ஆதிக்க சாதிகள் சமூக ஊடகங்களை பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களை அவமானப்படுத்துவதுபோல் மிகவும் வலுவானதோர் ஆயுதமாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. எனினும், இதே சமூக ஊடகங்கள் தன்னுடையக் கட்டுப்பாட்டை மீறியும் சென்றிடும், எதிர்வினையாற்றக்கூடியதாக மாறும்.
சமூக ஊடகத்தில், அட்டூழியம் புரிந்த காணொளி வைரலாகப் பரவியதை அடுத்து, வேறு வழியின்றி, நாகுவர் காவல்துறையினரின் அறிக்கையின் அடிப்படையில், அந்தக் காணொளியின் உதவியுடன் காவல்துறை ஒரு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய முடிந்தது. எனினும், காவல்துறை, உயர்சாதியினரை, தலித்துகளுக்கு எதிராக திருட்டு போன்ற குற்றங்களைச் சுமத்தி முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ய வைப்பதற்கும் கருவியாக இருந்திருக்கிறது என்று தலித் கிளர்ச்சியாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். இவ்வாறு எதிர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருப்பது நிச்சயமாக முதல் தகவல் அறிக்கைகளில் உண்மையைத் திசைதிருப்ப இட்டுச்செல்லும்.
மேலும், முதல் தகவல் அறிக்கைகள் பெருகுவது சாதிய அட்டூழியம் தொடர்பான உண்மை விவரங்களை ஒழித்துக் கட்டுவதற்கும் இட்டுச்செல்லும். காவல்துறையினரின் நடைமுறைகள் அல்லது நீதிமன்றத்தின் நடைமுறைகளில் சாதிய அட்டூழியங்கள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு அநேகமாக காணாமலே போய்விடும். காவல்துறை, நடைமுறைவிதிகளின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து முதல் தகவல் அறிக்கையைப் பெறுவதைப் பாதுகாக்கக் கூடும். ஆனால், மறுபக்கத்தில் உண்மை தங்கள் பக்கம் இருப்பதைக் காட்டுவதற்கும் அது உதவலாம். இது, தலித்துகளால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை உண்மையாக இருக்கலாம். ஆனால், இதற்கு எதிராக, உயர் சாதியினரால் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லாமல் இருக்கலாம்.
இறுதியில், எதிர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வதன் மூலம் அட்டூழியங்களில் இருக்கின்ற உண்மையை அப்பட்டமாகப் பொய் என்று மறுக்காவிட்டாலும், கருத்துக் கூறுவதில் தெளிவற்றிருப்பதாகக் கூறி திசை மாற்றலாம். பிறகு, அட்டூழியம் என்பது கருத்து கூறும் விஷயமாக மாறிவிடும். விஷயத்தில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை சட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நிலைநிறுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் கடைசியில் நீதிமன்றத்தின் விசாரணைகளின்போது நிலைநிறுத்தக்கூடிய அளவிற்கு, அவற்றிற்குத் தேவையான சாதனங்கள் அல்லது சங்கதிகள் கிடைக்காமல் போவதால், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சங்கதிகள் கடைசியில் தலித்துகளை வெளித்தள்ளிவிடும்.
நன்றி: Economic and Political Weekly தலையங்கம், 29/2/20
தமிழில்: ச. வீரமணி