இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை (Caste Census in India – A View) | மாதா (Matha) | எஸ்சி - எஸ்டி - ஓபிசி இடஒதுக்கீடு

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை | மாதா

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை

– மாதா –

யானை, புலி, சிங்கம் ஆகிய வன விலங்குகளின் நிலை அறிய அவற்றின் கணக்கெடுக்கப்படுகிறது. மயில் போன்ற பறவைகளின் எண்ணிக்கை அறியப்படுகிறது. அரசு அலுவலகங்களில் நாற்காலி, மேசை, பீரோ, மின்விசிறி ஆகியவற்றுக்கு எண்கள் வழங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அணிதிரட்டப்படாத தொழில்களான கைத்தறி, விசைத்தறி, சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோரை கணக்கெடுத்து அவர்களுக்கு சலுகைகள் வழங்குகிறார்கள். இந்தியாவில் சாதிகளில் ஏற்றத்தாழ்வான, பாகுபாடன பிரதிநிதித்துவம், அதிகாரப் பங்கீடு ஆகியவற்றுக்கு தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. பாஜக நீங்கலாக மற்ற அரசியல் கட்சிகளும் சமூக நீதி அமைப்புகளும் தொடர் வற்புறுத்தலுக்கு இணங்க ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அறிவித்துள்ளது. 2021ல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்று அறிக்கவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?

சமூக ரீதியாகவும், சட்டபடியும், நிர்வாக ரீதியாகவும் நவீன இந்தியாவை உருவாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. சமூக-பொருளாதாரத்தில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 2011-12 தேசிய மாதிரி சர்வேபடி எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் தனிநபர் வருமானம் உயர்சாதியினரை விட மிகக்குறைவாக உள்ளது. தேசிய குடும்ப சுகாதார சர்வே படி வறுமையின் அளவு எஸ்டி 56.6சதமும், எஸ்சி 33.3சதமும், ஓபிசி 27.22சதமும் உள்ளது. பொதுப்பிரிவில் 15.6சதம் பேரே வறுமையில் உள்ளனர். இந்தப் பாகுபாடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிரதிபலிக்கிறது. பொதுப்பிரிவில் அதிக அளவிலான பட்டதாரிகளும், மாதஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களாகவும் உள்ளனர்.

அதே வேளையில் மற்ற பிரிவினர் குவியலாக அணிதிரட்டப்படாத தொழிலிலும், விவசாயத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். பட்டியலின மக்களுக்கும், இதரபிற்பட்ட பரிவினருக்கும் அரசியலமைப்பு சட்டம் விதி 15(4), 16(4)ன்படி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கவும், எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு விதி 243னு(6), 243வு(6)ன் படி உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் இடஒதுக்கீடு வழங்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓபிசி யலுள்ள உப-சாதி பிரிவினருக்கு இடஒதுக்கீடு மழுமையாகக் கிடைத்திட அந்தந்த சாதி கணக்கெடுப்பு அவசியமாகிறது. ஏனென்றால் வடஇந்தியாவில் எஸ்டி, எஸ்சி தவிர அனைத்து சாதிகளும் ஓபிசி பிரிவின் கீழ் வருகின்றன. பெருந்திரளான ஓபிசி பிரிவினரில் ஆதிக்க சக்திகளின் மேலாதிக்கம் தொடர்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உயர்சாதியினரின் முன்னேற்றமும், உப-சாதியினரின் பின்னடைவும் வெளிச்சத்திற்கு வரும்.

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை (Caste Census in India – A View) | மாதா (Matha) | எஸ்சி - எஸ்டி - ஓபிசி இடஒதுக்கீடு

சாதிவாரி கணக்கெடுப்பு : நடந்ததும், மறந்ததும்

சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவிற்கு புதிதல்ல. ஆங்கிலேய அரசு 1881 முதல் 1931 வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. ஆட்சி நிர்வாகத்திற்காக நடத்தினாலும், சமூகத்திலும், அரசு பதவிகளிலும் உயர்சாதியினரின் ஆதிக்கம், ஆக்கிரமிப்பு அப்பட்டமாக தெரிந்தது. இந்த விபரங்களின்படி உப-சாதியினர் தங்களுக்குரிய இடஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். தேசிய விடுதலை இயக்கம், குறிப்பாக காங்கிரஸ் கட்சி சாதிப் பிரிவுப்படி ஒதுக்கீடு என்பதை ஏற்கவில்லை.

முஸ்லீம்கள் தனியாக அணிதிரட்டப்பட்டதால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒற்றுமை சிதறும் என பயந்தார்கள். மகாத்மா காந்தி இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் என்று கூறினார். அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் சுயராஜ்ய அதிகாரம் உயர்சாதி வசதியானவர்களிடம் கைமாறும் என காங்கிரஸின் கருத்தை எதிர்த்தார்கள். அரசியல் விடுதலை கிடைத்தாலும், சமூக விடுதலை கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சினார்கள். சென்னையில் தந்தை பெரியார் இடஒதுக்கீடுக்கு ஆதரவாக நீதிக்கட்சியினர், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நடத்தினார்.

சுதந்திரத்திற்கு பிறகு நேரு அரசாங்கம் 1951ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், மக்கள் தொகை கணக்கெடுப்பை மட்டும் மேற்கொண்டது. முதல் மக்கள் தொகை பதிவாளர் ஆர்.ஏ.கோபாலசாமி இந்த கணக்கெடுப்பில் சாதிகள், இனங்கள், இனக்குழுக்கள், குலப்பெயர்கள் ஆகிய விபரங்கள் கிடையாது என்றார். விதிவிலக்காக எஸ்டி, எஸ்சி பிரிவினரை அரசியல் சாசன உறுதிமொழிபடி அவர்களை மேம்படுத்த கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இது ஓபிசிக்குள் உள்ள உப-சாதியினரின் குரல் ஒடுக்கப்பட்டு, அது நாளுக்கு நாள் குமுறிக்கொண்டே இருந்தது.

இதன் தொடர்ச்சியாக கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியுள்ள பிற்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கு, அவர்களின் புள்ளிவிபரங்களை சேகரிப்பதற்கு 1953ம் ஆண்டு காகா கலேல்கர் தலைமையில் கமிஷன் நியமிக்கப்பட்டது. அக்கணக்கெடுப்பில் பிற்பட்ட வகுப்பினரில் ஆயிரக்கணக்கான சாதிகள் வந்தன. நேரு மந்திரிசபையில் குழப்பமும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு அறிக்கை அலமாரியில் வைத்து பூட்டப்பட்டது. மத்திய அரசின் இத்தகைய முடிவானது ஓபிசி பிரிவினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைக்காக தென்மாநிலங்களில் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டங்கள் நடந்தன. வடஇந்தியாவில் சோசலிஸ்ட் தலைவர் ராம்மனோகர் லோகியா, விவசாய சங்க தலைவர் சரண்சிங் ஆகியோர் ஓபிசி பிரிவினரை அணிதிரட்டி காங்கிரஸ் தலைமைக்கு சவாலாக இருந்தனர். பின்னர் இந்தக் கட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து 1977ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசை தோற்கடித்தார்கள்.

மண்டல் கமிஷன் திருப்பு முனை

பிற்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பற்றி ஆராய 1978ம் ஆண்டு மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1980ல் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. மத்திய அரசுப் பணியில் 70 சதம் உயர்சாதியினரும், 13 சதம் ஓபிசி பிரிவினரும் இருந்த நிலையில், மொத்த மக்கள் தொகையில் ஓபிசி யினர் 52 சதம் உள்ளனர் என்று தெரிவித்தது. இடஒதுக்கீடு மட்டுமல்ல, அதிகாரப் பகிர்வும் வேண்டுமென்று ஓபிசி பிரிவினரிடையே கோரிக்கை எழுந்தது. உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது. உச்சநீதிமன்றம் 50 சதம் கோட்டாவிற்கு மிகாமல் இடஒதுக்கீடு இருக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது.

அதன்படி மத்திய அரசு பணியிலும், கல்வியிலும் எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு 22.5 சதமும், ஓபிசி பிரிவினருக்கு 27 சதமும் பரிந்துரை செய்தது. இது இந்திய அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1990ல் வி.பி.சிங் அரசு அமல்படுத்த ஆரம்பித்ததும் உயர்சாதியினர் கொதித்தெழுந்தார்கள். எதிர்ப்பை தெரிவிக்க தெருக்கூட்டும் போராட்டம் நடத்தினார்கள். சாலையில் அமர்ந்து காலணிகளுக்கு பாலீஸ் போட்டார்கள். ஓபிசி இடஒதுக்கீடு வெற்றிகரமாக அமலாகி இந்திய அரசியலில் நிரந்தரமான மாற்றம் ஏற்பட்டது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகப்பெரிய எழுச்சி காணப்பட்டது. மாநிலங்களில் பலம்வாய்ந்த ஓபிசி அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டு இதர பிற்பட்ட வகுப்பினர் அதிக அளவிலான எம்பி களும், எம்எல்ஏ க்களும் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள்.

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு – ஒரு பார்வை (Caste Census in India – A View) | மாதா (Matha) | எஸ்சி - எஸ்டி - ஓபிசி இடஒதுக்கீடு

புதிரான 2011 புள்ளி விபரம்

2011ல் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தியது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை மட்டும் வெளியிடவில்லை. பாஜக ஆட்சியில் சாதிவாரிகணக்கெடுப்பை வெளியிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அது மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் படி எடுக்கப்படவில்லை. கணக்கெடுத்த முறையும். உள்விபரங்களும் முரண்பாடாக உள்ளன. அனுபவமற்ற அமைச்சகம் நீணட சர்வேயை குளறுபடியாக நடத்தியுள்ளது. முக்கியமாக தரமான, உண்மையான சாதிப்பிரிவுகளை குறிப்பிடப்படவில்லை.

கணக்கெடுப்பாளர்கள் சாதிபெயர்கள், உப-சாதிகள், குலம் ஆகியவற்றை உபயோகமற்ற வகையில் பதிவு செய்துள்ளார்கள். தனித்துவமான சாதி பெயர்களை குறிப்பிடப்படவில்லை. 1931ல் 4147 சாதிகள் இருந்த இந்தியாவில் 4 லட்சத்து அறுபதாயிரம் உள்ளதாக பதிவு செய்துள்ளார்கள். ஆகவே இந்த கணக்கெடுப்பு அர்த்தமற்ற உண்மைக்கு புறம்பானது என்று கூறியது. இதில் கூறப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் மத்திய அரசின் ஓபிசி பட்டியலுக்கும், மாநில அரசுகளின் ஓபிசி பட்டியலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. எஸ்டி, எஸ்சி தவிர ஓபிசி கணக்கெடுப்பு நடத்த அரசியலமைப்பு சட்டத்தில் கூறவில்லை. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியது.

சொன்னது நடக்குமா?

சில மாநிலங்கள் சுயேட்சையான கணக்கெடுப்பை நடத்தின. பீகார், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்த கணக்கெடுப்பில் ஏற்கனவே இருந்ததை விட ஓபிசி யினர் அதிகரித்தனர். பிற்பட்ட வகுப்பினரை துல்லியமாக கணக்கெடுத்தால்தான் முழுமையான இடஒதுக்கீடு கிடைக்கும். மாநில அரசுகளின் கணக்கெடுப்பு முடிவுகள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கை எழுந்தது.

இறுதியாக ஓனறிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு வலுவான திருப்பு முனையாக அமையும். அதே வேளையில் சில முக்கிய கேள்விகள் நம்முன் உள்ளன.
முதலாவதாக காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. தாமதிக்கப்பட்ட கணக்கெடுப்பு எப்போது துவங்கும்?

இரண்டாவதாக கணக்கெடுப்பு முறை முக்கியம். ஒன்றிய அரசு 2011ல் சமூக பொருளாதார கணக்கெடுப்பின் தோல்விகளிலிருந்து படிப்பினை பெற சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்.

பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்டு, முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட கவனமான கேள்வித் தொகுப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தகவல்களை டிஜிடல் முரறையில் தொகுத்து உயர்தரத்தில் அமைய வேண்டும். குறிப்பாக சாதிப் பட்டியல்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
மூன்றாவதாக கணக்கெடுப்பு விபரங்கள் வெளிப்படையாக இருப்பதுடன், அரசு முடக்கி வைக்கக் கூடாது. தகவல் தொகுப்பை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.

உப சாதிகள் தங்கள் நிலையை தெரிந்து கொண்டு அவர்களின் உரிமைகளை புரிந்து கொள்ளவேண்டும். துல்லியமான கணக்கெடுப்பு விபரங்கள் ஓபிசி உப-சாதியினருக்கு அறிவியல்பு+ர்வமான இடஒதுக்கீடு கிடைக்கும். பல சாதிகளிடையே இடஒதுக்கீடு கூடுதலாகவோ, குறைவாகவோ வந்தால் விவாதம் எழலாம். பாகுபாடான சாதிக்குள் தகுந்த முறையில் மறுபங்கீடு நடக்க வேண்டும். பாஜக அரசு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு கிடப்பில் போட்டது போல், பீகார் தேர்தல் முடிந்த பின் சாதிவாரி கணக்கெடுப்பும் நீர் மேல் எழுத்தாக ஆகிவிடக் கூடாது.

எழுதியவர்:-

✍🏻 மாதா @ மே-பா மா.தங்கராசு
சிஐடியு தேனி மாவட்ட கைத்தறி சங்க செயலாளர்
75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி
ஆண்டிபட்டி- அஞ்சல் 625512
தேனி- மாவட்டம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *