‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ – நூல் வெளியீட்டு விழா
பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது
பால புரஸ்கார் விருதும் சாகித்ய அகாடமியும் – தசிஎகச கண்டனம்.
வணக்கம்,
2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் பால சாகித்ய புரஸ்கர் திருமதி. ஜி.மீனாட்சி எழுதிய ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கர் என்பது சிறார் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ’மல்லிகாவின் வீடு’ நூல், பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கதை ‘அப்பாவை ஏன் பிடிக்கும்?’. இதற்கு மிகச் சாதாரணமான பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கதையின் முடிவாக ஒரு மாணவர்,”எங்கப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! ஏன்னா, அவர் எங்கம்மாவைக் கல்யாணம் செய்துக்கிட்டாரே!” என்று சொல்கிறார். பட்டிமன்ற நகைச்சுவைத் துணுக்கு போன்ற இதை, சிறுவர் கதை என்கிற முடிவுக்கு தேர்வுக் குழுவினர் எப்படி வந்தனர்?
இப்படி இத்தொகுப்பில் உள்ள முக்கால்வாசி கதைகளில் கதைத்தன்மையே இல்லை. மொத்தத் தொகுப்பும் ஆரம்பகட்ட சிறார் கதைகள் எழுதுபவரின் முயற்சியைப் போலுள்ளது. 1980களில் வந்த புத்தகத்தினைப் போல எந்த வகையிலும் நவீனத்துவம் (இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவது நவீனத்துவம் ஆகி விடாது) சிறிதும் இல்லாத தொகுப்பாக இருக்கிறது. புதிய முயற்சியாகவோ, புதிய கதை சொல்லும் பாணியிலோ, இதுவரையில் யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல முற்பட்டதாகவோ தெரியவில்லை.
விருது என்பது தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டால்தான் அந்தத் துறை வளர்ச்சிபெறும். ஆனால், பால சாகித்ய புரஸ்கார் தேர்வுக் குழுவினரோ, தமிழில் நவீன சிறார் இலக்கியம் வளரக் கூடாது என நினைப்புடன் இந்நூலைத் தேர்ந்தெடுத்துள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது.
விருது கொடுக்கப்பட்டுள்ள நூலாசிரியரின் கதைகள், நூல்கள் தமிழ் சிறார் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ, முன்னுதாரணப் படைப்பாக அடையாளம் பெற்றதுபோலவோ தெரியவில்லை. இந்த விருது வழங்கப்படுவதற்கு முன் எந்த வகையிலும் சிறார்களையோ, சிறார் இலக்கியப் படைப்பாளிகளையோ இந்தக் கதைகள் சென்றடைந்ததுபோலவும் தெரியவில்லை. பால சாகித்ய புரஸ்கார் என்பது சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழுவினர், தேர்வுக் குழுவினருக்கு நெருக்கமானவர்களுக்கே பெரும்பாலான நேரம் கொடுக்கப்பட்டுவருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனம் செய்யப்பட்டுவருவதை, உறுதிப்படுத்துவதுபோல் இந்த ஆண்டு விருதுத் தேர்வும் அமைந்திருக்கிறது.
இதை சாகித்ய அகாடமியின் தலைமை அலுவலகப் பார்வைக்கும் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கொண்டு செல்லும். இதற்குக் காரணமான தமிழ் பால சாகித்ய புரஸ்கார் தேர்வு குழுவுக்கு கடும் கண்டனங்களை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்வரும் காலத்தில் தகுதியான நூலுக்கு விருதுகளை அளிக்கும்படி சாகித்ய அகாடமி அமைப்பினரைக் கேட்டுக்கொள்கிறது.
எதிர்காலத்தில் சாகித்ய அகாடமியின் பால சாகித்ய விருதுத் தேர்வு மேம்பட்ட வகையில் அமைய கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறோம்:
1. சமகாலச் சிறார் இலக்கியத்தோடு நேரடித் தொடர்புடையவர்களை மட்டுமே விருதுத் தேர்வுக் குழுவுக்குத் தேர்வுசெய்ய வேண்டும்.
2. தற்போது இறுதிக் குறும்பட்டியல் மட்டும் வெளியிடப்படுகிறது. அதே நேரம், இறுதிப்பட்டியலுக்கான நூல் தேர்வு செய்யப்பட்ட முறை, அவற்றைப் பரிந்துரைத்த தேர்வாளர்கள் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிட வேண்டும்.
3. சாகித்ய அகாடமி அலுவலர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு சமகாலத்தில் என்ன மாதிரியான சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்கிற விவரம் தெரிந்திருக்க வேண்டும்.
4. விருதுத் தேர்வு முறை நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதை உத்திரவாதப்படுத்த, வெளிப்படைத்தன்மை வேண்டும்.
5. விருதுக்குரிய நூல் இறுதிப் பட்டியலிலுள்ள மற்ற நூல்களைவிட எந்த வகையில் தகுதியானது என்பது குறித்து விருதுக் குழு நடுவர்களின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
நன்றி,
விழியன் | செயலாளர்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
+91 90940 09092 / +91 94438 81701
contact.tncwaa@gmail.com
பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் – தசிஎகச வரவேற்கிறது – விழியன்
வணக்கம்,
சிறாருக்குக் கூர்மையான அறிவையும் அகன்ற பார்வையையும் அளிப்பவை புத்தகங்கள். ஆனால், கெடுவாய்ப்பாக பாடத்திட்டம் தாண்டிய நூல் வாசிக்கும் வாய்ப்பு பெரும்பான்மையான சிறாருக்குக் கிடைப்பதே இல்லை. பள்ளிகளின் வழியே அப்படியான வாய்ப்பை வழங்க முடியும் என்று பலரும் யோசனை தெரிவித்து வந்தனர்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கமும், கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு முன்வைத்த பரிந்துரைகளில், ’வாரம் ஒரு புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் வாசித்து. அது குறித்து வகுப்பறையில் பேசும் விதமாக பாடவேளை அட்டவணை அமைய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தோம். ஏனெனில், கதை, பாடல், நாடகம், அறிவியல் நூல்கள் வாசிப்பது பாட நூல்களைக் கற்கவும் உதவும் என்பதால், அதை வலியுறுத்தியிருந்தோம். இந்த அரசு, இம்மாதிரியான கோரிக்கைகளை ஆராய்ந்து ’பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ எனும் திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் பணியைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்க’த்தைத் தொடங்கியிருப்பது மிகுந்த ஆரோக்கியமான முன்னெடுப்பு. நூல்களை வாசிக்கும் மாணவர்களை பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுத்து சிறப்பிக்க உள்ள முறை வரவேற்கத்தக்கது. முத்தாய்ப்பாக, ‘இறுதியில் தேர்வாகும் மாணவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, புகழ்பெற்ற நூலகங்களைப் பார்வையிட வைப்பது சிறப்பானது. அதே நேரம், இந்தச் செயல்பாடு வழக்கமான போட்டிகளில் ஒன்றாக மாறிவிடுவதும் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் எனும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. அதேபோல, மாநில அளவில் தேர்வான மாணவர்கள், குழந்தை எழுத்தாளர்களோடு உரையாட வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் கூறியிருப்பது மாணவர்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நல்ல முயற்சி, அதை மனதார பாராட்டுகிறோம். பள்ளிக்கல்வித் துறையோடு கைக்கோத்து செயல்படவும் விரும்புகிறோம்.
இந்தத் திட்டம் 6ஆம் வகுப்பிலிருந்து தொடங்குகிறது என்று உள்ளது. விரைவில் தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்று நம்புகிறோம். மேலும் போட்டிகள் என்பது உந்து சக்தியாக இருக்கமட்டுமே, போட்டி முடிந்தாலும் வாசிப்பு தொடர உறுதி செய்ய வேண்டும். இந்த சரியான சந்தர்ப்பத்தில் பள்ளிகளுக்கு நூலகரை நியமிப்பது, நூலகத்திற்கு என்று போதிய ஏற்பாடு, புதிய புத்தகங்களுக்கான வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் எனும் இந்தத் திட்டம் கல்வியிலும் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்த்தெடுப்பதிலும் மகத்தான சாதனையை நிகழ்த்தும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இதனை முன்னெடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் அன்பில் பொய்யாமொழி அவர்களுக்கும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கும் எங்கள் சங்கத்தின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்கணம்,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம்
நன்றி,
விழியன் | செயலாளர்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
+91 90940 09092 / +91 94438 81701
contact.tncwaa@gmail.com
செய்தியாளர் சந்திப்பு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு – ஆதவன் தீட்சண்யா
மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்கள் உருவாக்க வேண்டும் – பபாசி (BAPASI) வேண்டுகோள்
சென்னை, டிச. 7-
அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை பபாசி வரவேற்கிறது என பபாசி தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்…
அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாக கருதுகிறோம். முன்பெல்லாம் நீதி வகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரிகளில் நூலக வாசிப்புக்கு என முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்கு என நூலகர்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களோடு பொது நூல்களும் படிக்கும் ஆர்வம் மாணாக்கர்களிடையே இருந்தது.
பள்ளி படிப்போடு பொது மற்றும் இலக்கிய புத்தகங்களைப் படிக்கும் போது மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக, அறிஞர்களாக, மதிப்புமிக்க பொறுப்பாளர்களாக உயர முடிந்தது. அதோடு மாணவர்களின் மனநிலையும் ஆரோக்கியமாக இருந்தது. இன்றைய சூழலை கருத்தில்கொண்டு மாணவர்களின் நலன் கருதி நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அனைத்து பதிப்பாளர்கள் சார்பாக தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பபாசி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை தேர்வு செய்துவதுடன், பதிப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வாங்க அரசு உதவ வேண்டும் எனவும், அதற்கான நிதி ஆதாரத்தை பள்ளிகளுக்கு அரசு தரவேண்டும் எனவும் இந்த நேரத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம் என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்…ஆண்டுதோறும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதுபோன்று 2022ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னைப் புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பணியை பபாசி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பபாசி தலைவர் எஸ்.வயிரவன்,
செயலாளர் எஸ்.கே.முருகன்.
Library letter to all ceo's (1)தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்படுகிறது. 1994 இல் வெளியான “Paradise’, இவர் எழுதியவற்றில் மிகப்புகழ் பெற்றது. Desertion, By the sea என்பவை பிற புத்தகங்கள்.
2005 இல் பூக்கர் ப்ரைஸ் (Booker Prize) விருதிற்கும், வைட்பிரெட் ப்ரைஸ் (Whitbred prize) விருதிற்கும் இவர் புத்தகங்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.
1948 இல் தான்சனியாவின் சான்சிபர்( Zanzibar) எனும் தீவு பிரதேசத்தில் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்துவருகிறார். தான்சியா ஆட்சியை 1964 இல் ராணுவம் கைப்பற்றியபோது இங்கிலாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.பின்பு அந்நாட்டிலேயே நிரந்தரமாக வசித்துவருகிறார்.
காலனிஆட்சிமுறை தருகிற தாக்கத்தோடும் , அகதிகளின் வாழ்க்கைவலியோடும் சரசமற்றதும் மிகத்தீவிரமானதுமான அனுதாபவுமே நோபல் பரிசுக்கான தேர்வின் காரணமாக தேர்வுக்குழு சொல்கிறது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிற ஐந்தாவது ஆப்பிரிக்க தேசத்தவராவர் அப்துல் ரசாக் குர்னா.
2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிப்பு
2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பபாசி இன்று (செப். 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“2007-ல் 30-வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.
அதற்காக, பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கு ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவித்து வருகிறது. அதன்படி, 2007-ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார். கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும், 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:
1. அபி – கவிதை
2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்
3. எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை
4. வெளி ரங்கராஜன் – நாடகம்
5. மருதநாயகம் – ஆங்கிலம்
6. நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)”.
இவ்வாறு பபாசி தெரிவித்துள்ளது.