மோடி இந்தியாவில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் : நேர்காணல்
புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: விதைகளை ஊன்றிவைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுக்கும் நேர்காணல்: ஆதவன் தீட்சண்யா சந்திப்பு: ஆயிஷா இரா.நடராசன்
தற்போதைய இலக்கியச்சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவத்தைச் சொல்லுங்கள்?
1975 ஜூலை 12,13 தேதிகளில் தமுஎகச முதல் மாநில மாநாடு மதுரையில் நடந்தபோது அவசரநிலை அமலிலிருந்தது. 15ஆவது மாநாடு நடைபெறவிருக்கும் இவ்வேளையில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலிலிருக்கிறது. அறிவிக்கப்படாததாய் இருப்பதாலேயே இப்போதைய அவசரநிலையை விலக்கிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஆட்சியாளர்களுக்கு இல்லை.
முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தனிமனித வாழ்வில் அரசின் நேரடித் தலையீடும் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. அரசியல் சாசனத்தின் வழியே குடிமக்கள் தமக்கு உறுதி செய்துகொண்ட உரிமைகள் பலவற்றையும் அரசிடம் இழக்கும் காலமாகவும் இது இருக்கிறது. தன் உடல்மீதுகூட அவர்கள் முழு உரிமை கோரமுடியாது. அரசு குடிமக்களை குற்றவாளிகளாகப் பார்ப்பதும், அவர்களது இயல்புரிமைகளை மறுப்பதும், எதிர்த்தால் வன்முறைகளை ஏவுவதுமாக மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. உணவு, உடை, வசிப்பிடம், கல்வி, கலைஇலக்கிய நாட்டம், வழிபாடு, கொண்டாட்டங்கள் என அனைத்திலும் ஆட்சியாளர்களின் விருப்பம் எதுவோ அதுவே குடிமக்களின் தேர்வாகவும் இருக்கவேண்டுமென்கிற நிர்ப்பந்தம் வலுக்கிறது. எவரிடமிருந்து ஆளும் அதிகாரத்தை இவ்வரசு பெற்றிருக்கிறதோ அவர்கள் மீதே தன் குரூரபலம் முழுவதையும் பிரயோகிக்கும் இக்கொடுங்காலத்தில் சுயசிந்தனையும், சுதந்திரமான வெளிப்பாட்டுணர்வும், அச்சமற்ற வாழ்வுக்கான பேரவாவும் கூருணர்வுமுள்ள எழுத்தாளர்களும் கலைஞர்களும் செய்யவேண்டியது என்ன என்பதுமே மாநாட்டின் முதன்மை விவாதம். கடந்த மாநாட்டிற்குப் பிறகான இக்காலகட்டத்தில் கலைஇலக்கிய பண்பாட்டுத்தளத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், அவற்றில் தமுஎகசவின் பங்களிப்பு மற்றும் நிலைப்பாடு ஆகியவை பற்றிய மதிப்பீட்டையும் மாநாடு மேற்கொள்ளும்.
“புதுவிசை” காலாண்டிதழ் ஒரு கலாச்சார இலக்கிய இயக்கமாகவே உணரப்பட்டது. அதை தொடங்கி நடத்திய அனுபவங்களைச் சொல்லுங்கள். உங்களது நோக்கம் எந்தளவிற்கு நிறைவேறியது?
நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதிக்கக் கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குவது, சமகால கருத்துலகில் தலையிடுவது, கலைஇலக்கிய ஆக்கங்களின் புதிய போக்குகளுக்கு இடமளிப்பது, பண்பாட்டுத்தளத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் உரையாடல்களை நமது சூழலிலும் நிகழ்த்துவது என்கிற நோக்கில் நூறுநூறு பத்திரிகைகள் தேவை. அதிலொரு பகுதியை புதுவிசை நிறைவேற்றியுள்ளது.
பெரும்பாலும் ஓசூர் நண்பர்களின் நிதிநல்கையில் மட்டுமே 48 இதழ்களை கொண்டுவர முடிந்ததை இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எங்களது குழுவினரின் உழைப்பு அதற்குரிய விளைவுகளை உருவாக்கியுள்ளது. ஆனால் திருப்தியடைய ஒன்றுமில்லை. ஏற்கெனவே இரண்டுலட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பிருந்தாலும், இன்னொரு சுற்று வந்து பார்க்கலாம் என்கிற துடிப்பு மங்கவில்லை, பார்ப்போம்.
புறப்பாடு, பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி, மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் உட்பட உங்கள் கவிதைத்தொகுதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. தற்கால கவிதை உலகம் எப்படி இருக்கிறது?
அதிகாரத்தின் கண்காணிப்பு தீவிரமாகியிருக்கும் நிலையில் அதிகாரத்தைப் பற்றிய உண்மைகளைப் பேசும் கவிதை முன்னிலும் பூடகமாகவும் யூகிக்க முடியாத வலிமையுடனும் தமது இலக்கைத் தாக்கி வாசகர்களை செயலுக்குத் தூண்டுகிறது. அதேநேரத்தில் அதிகாரத்தை விமர்சிப்பதால் ஏற்படவிருக்கும் விளவுகளுக்கு அஞ்சும் கவிதை, அச்சமற்று இருப்பதுபோல காட்டிக்கொள்வதற்காக பெருங்குரலெடுத்து தொந்தரவில்லாத பாடுபொருள்களை முன்வைத்து இதுதான் இக்காலத்தின் கவிதை என்பதுபோல பாவனை செய்வதுடன், வாசகர்களையும் தனது மட்டத்திற்கு கீழிழுத்துப் போடுகிறது. முகத்தை உக்கிரமாக வைத்துக்கொண்டு கைகளை அங்கீகாரப்பிச்சைக்கு விரிக்கும் இத்தகைய கவிஞர்கள் மலிந்து கிடந்தாலும் பிரசுரம், பரிசு, விருது, இலக்கியப் பயணங்கள் என எதையும் எதிர்பாராமல் வாழ்வின் பாடுகளைச் சொல்லும் கவிதைகளின் தொடர் வருகை தமிழ்க்கவிதைக்கு மேலும் காத்திரமேற்றுகிறது.
“இருப்பிடம் வரைதல் போட்டியில்
முதலில் முடித்தது நான்தான்
வரைவதற்கு என்னிடம் இருந்தது
ஒற்றைச் செங்கற்சுவர் மட்டுமே” என்று ஓர் ஈழ ஏதிலி தன் வாழ்வை எழுதுவதற்கெல்லாம் இப்போது இங்கே வாய்க்கிறது.
லிபரல்பாளையத்துக் கதைகள், கடுங்காலத்தின் கதைகள், நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள், கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் என்று தொடர்ந்து, கதையுலகில் புதியபுதிய கலகவெளிகளை உருவாக்கிய கதைக்காரன் ஆதவன் தீட்சண்யாவின் புதிய முயற்சிகள்?
சமூக அமைப்பின் மீதும் அதை வழிநடத்தும் அதிகாரத்துவத்தின் மீதும் யாதொரு புகாருமற்று, எல்லா ஒழுங்கீனங்களுக்கும் குற்றங்களுக்கும் பாகுபாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கி நெக்குருக எழுதுவதும் அதை கண்ணீர் மல்க கதைப்பதும் இங்கொரு வணிகமாகப் போய்விட்டது. முப்பதாண்டுகால உலகமயமாக்கமும் எட்டாண்டுகால இந்துத்துவாக்கமும் சமூக அமைப்பிலும் வாழ்முறையிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள், ஆளுமைச் சிதைவுகள், அறவீழ்ச்சிகள், நுகர்வியம், வாழ்க்கைத்தரத்தில் அரிமானம், சூழலழிப்பு என்று நம்முடைய சமகாலத்தை துள்ளத்துடிக்க எழுதுவதே எனது நேர்வாக இருக்கிறது. அப்படியல்லாத ஊளைக்கதைகளை எழுதிக்குவிப்போர் பட்டியலில் எனது பெயர் இல்லாதது சற்றே கர்வத்தைத் தருகிறது.
மீசை என்பது வெறும் மயிர் நாவல், நந்தஜோதி பீம்தாஸ் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை சென்று சாதிவெறி சமூக அவலங்களை அனுபவித்து, கப்பல் ஏறி, உலக நாடுகளைச் சுற்றி, மீசை என்பது எங்கெங்கெல்லாம் எப்படியான அதிகார அடையாளமாக இருக்கிறது எனக் காட்டுகிறது. இடுப்புக்கு கீழே மீசை வளர்க்கும் விஷயத்தை இன்று நினைத்தாலும் வலியிலிருந்து மீள முடிவதில்லை. நாவல் தளத்தில் உங்களது அடுத்தடுத்த முயற்சி என்ன?
உலகத்துக்கே மனிதமாண்பை போதிக்கும் யோக்கியதை இருப்பதாக பீற்றிக் கொள்ளும் பிரிட்டன், இந்தியாவை ஆண்டபோது தனது படையினரின் பாலுறவுத் தேவைகளுக்காக ஒவ்வொரு ஆயிரம்பேருக்கும் 10-12 பாலியல் தொழிலாளிகள் வீதம் பணியமர்த்தியுள்ளது. தொழில் செய்வதற்கு பணம்கட்டி உரிமம் பெறும் பெண்களை பகிர்ந்தனுப்புவதற்கான மேற்பார்வையாளர், இதிலேதும் சண்டை வந்தால் தீர்ப்பதற்கு ரகசிய நீதிமன்றங்கள், மருத்துவப் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் ரகசிய மருத்துவமனைகள் (லாக் ஹாஸ்பிடல்) என கண்டோன்மென்ட்டுகளில் நடந்த அட்டூழியங்களை மையப்படுத்தி ஒரு நாவலை காலவரம்பின்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்களது எழுத்தளவுக்கு உரைகளும் கவனம் பெற்றவை. உங்கள் உரையின் அடிப்படை எவை? தமுஎகச குரலாக அவற்றை முன்வைப்பதில் எத்தகைய சவால்கள் உள்ளன?
காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகளில் நடந்துவந்த விடுதலைப்போர்களுக்கு உதவும் வகையில் இரண்டாவது போர்முனையை – அதாவது பண்பாட்டுப் போராட்டத்தை முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடங்கியுள்ளனர். பேனாவை, தூரிகையை வாளாக, துப்பாக்கியாக உருவகித்துச் செயல்பட்டார்களாம். பார்ப்பனியமும் கார்ப்பரேட்டியமும் இணைந்து இந்தியச்சமூகத்தை அடிமைப்படுத்திவரும் இன்றைய பார்ப்பரேட்டியச் சூழலில் இங்குள்ள முற்போக்காளர்கள் அந்த இரண்டாவது போர்முனையை நமது தனித்தன்மைகளுக்கேற்ப தொடங்கியாக வேண்டும் என்பதை கலைஇலக்கிய நிகழ்வுகளில் வலியுறுத்துகிறேன். நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவாக காட்டிக்கொண்டு ஆளும் வர்க்கம் எப்படி தன்னை மிகவும் நவீனமாக பலப்படுத்திக்கொண்டு நாட்டை ஒரு பெருஞ்சந்தையாக ஒருங்கிணைத்துச் சுரண்டுகிறது என்பதையும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான காலத்து முதலாளியத்திலிருந்து இன்றைய முதலாளியம் வரைக்குமாக ஆய்ந்தறிந்து தோழர் எஸ்.வி.ஆர். போன்றவர்கள் முன்வைக்கும் புதிய விவாதங்களிலிருந்து பெறும் புரிதலையும் அரசியலரங்குகளில் பகிர்கிறேன். இந்தப் பேச்சுகளில் சாதியொழிப்பையும், சமூகநீதியையும் உள்ளிணைத்தே முன்வைக்கிறேன். இவை தமுஎகசவின் மைய நோக்கங்களுடன் இசைவிணக்கம் கொண்டவையே.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும் பொறுப்பு வகிக்கிறீர்கள். அதுசார்ந்த அனுபவங்களைச் சொல்லுங்கள். ஆணவக்கொலைகள் இன்றும் தொடர்கின்றனவே. தமிழக அரசுக்கு உங்களது கோரிக்கை என்ன?
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் நேரடிப் போராட்டங்களுக்கு கருத்தியல் தளத்தில் வலுசேர்க்கும் சிலவேலைகளைச் செய்வதுண்டு. அவ்வகையில் சாதியொடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் எழுதுவதும் பேசுவதும் வன்கொடுமைக்களங்களுக்குச் செல்வதுமே எனது செயல்பாடுகள். புதுக்கூரைப்பேட்டைக்கும் உத்தபுரத்துக்கும் பரமக்குடிக்கும் நத்தத்திற்கும் பாப்பாப்பட்டி கீரிப்பட்டிக்கும் சென்று சாதியத்தின் மூர்க்கத்தை அதன் நேரடி வடிவத்தில் கண்டுவந்து பதைபதைப்பு அடங்காமல் பலநாட்கள் தவித்திருக்கிறேன். குஜராத்தில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி மேற்கொண்ட நடைப்பயணத்தில் இங்கிருந்து சில தோழர்களுடன் அங்கு சென்று பங்கெடுத்து திரும்பியபோதும்கூட இதேவகையான கொந்தளிப்புக்குள் சிக்கி தத்தளித்தேன். சாதிய வன்கொடுமைகள் அடுத்தடுத்து ஏவப்படும்போது திணறிப்போய் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு என் முன்னால் எந்தக் கொடுமையும் நடக்கவில்லை என்பதுபோல என்னை நானே ஏமாற்றிக்கொண்டு மரத்துப்போன மனதோடு கிடந்துவிட்டு பின் ஆற்றமாட்டாமல் அழுதோய்ந்த நாட்களுமுண்டு. ஆனால் அதிலிருந்து மீள்வதற்கான உள்வலுவை அம்பேத்கர், பெரியாரின் எழுத்துகளும் கம்யூனிஸ்ட்களின் களச்செயல்பாடுகளுமே வழங்கின.
வயதுவந்த பெண்ணும் ஆணும் தனது வாழ்க்கைத்துணையைச் சுதந்திரமாக தெரிவுசெய்யும் உரிமையை மறுப்பதிலிருந்தே ஆணவக்கொலைகள் நடக்கின்றன. பல நாடுகளில் மத, இன வெறியில் ரத்தத்தூய்மையை வலியுறுத்தி இக்கொலைகள் நடக்கிறதென்றால் இந்தியாவில் சாதியின் பெயரால் நடக்கின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 120-150 பேர் கொல்லப்படுகிறார்கள். நடப்பிலுள்ள குற்றவியல் சட்டங்களின் மூலம் இக்கொலைகளைத் தடுப்பதிலும் தண்டிப்பதிலுமுள்ள இடர்பாடுகளை கவனத்தில் கொண்டு, மாநில அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடைப்பயணம் மேற்கொண்டது. உச்ச நீதிமன்றமும் தனிச்சட்டத்தின் தேவையை பலவாறாக வலியுறுத்தியும்கூட ராஜஸ்தானில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாமதமின்றி தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
ஓசூர் புத்தகத்திருவிழா உங்களது தலைசிறந்த பங்களிப்புகளில் ஒன்று. பலரை ஒன்றிணைத்து முதல் புத்தகத் திருவிழாவை வழிநடத்தியவர் நீங்கள். ஓசூர் புத்தகக்காட்சி இன்று தொடரும் விதத்தில் உங்கள் நோக்கம் நிறைவேறியதாக கருதுகிறீர்களா?
இப்போது நிலநிர்வாக ஆணையராக உள்ள திரு.எஸ்.நாகராஜன் அப்போது ஓசூரின் சாராட்சியர். நிர்வாக வரம்பின் எல்லைவரை சென்று முன்னுதாரணமான பணிகளை அவர் செய்ததை கவனித்துதான் ‘புத்தகக் கண்காட்சி’ யோசனையை தெரிவித்தேன். உடனே ஏற்றுக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக மாறுமளவுக்கு நிர்வாகம் முழுவதையும் ஈடுபடுத்தினார். கலைஇலக்கிய விழாக்களுக்கு ஆயிரக்கணக்கானவர்களை அணிதிரட்டிய தமுஎகச அனுபவம் உள்ளூர் சமூகத்தைத் திரட்டுவதற்கு உதவியது. எனது முன்னெடுப்புகள் யாவற்றுக்கும் துணையிருக்கும் நண்பர் பி.எம்.சி.குமார் இந்த முயற்சிக்கும் பேராதரவளித்தார். அதன் தொடர்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பலரையும் இணைத்துக்கொண்டு தொடர்ந்து நடத்திவருவது பாராட்டத்தக்கது. விதைகளை ஊன்றிவைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுத்துக் கொள்ளும் தானே!
“தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” முழக்கத்தின் பின்னணி?
செம்மலர் இதழில் வரவிருக்கும் எனது கட்டுரையின் பின்வரும் பகுதி இக்கேள்விக்கு உரிய பதிலாக அமையும். இந்தியப் பெருநிலப்பரப்பில் வாழும் 130கோடிக்கும் மேலான மக்களாகிய நாம் இயற்கைநேர்வு மற்றும் வாழ்முறைகளால் பல்வேறு மொழிவழி இனங்களாக வாழ்ந்து வருகிறோம். பிறப்பு முதல் இறப்பு வரையிலும் (சில விடயங்களில் இறப்புக்குப் பின்னும்கூட) தனிமனிதர்களின் வாழ்வை நெறிப்படுத்தி நடத்துகின்ற இவ்வாழ்முறைகளின் தொகுப்புதான் பண்பாடு எனப்படுகிறது. பண்பாடு நாடு முழுதும் ஒருபடித்தானதாக இல்லை. ஒவ்வொரு இனமும் தனக்கான தனித்த உணவு, உடை, இருப்பிட அமைவு, வாழ்க்கைவட்டச் சடங்குகள், தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், கலை இலக்கியம், கல்வி ஆகிய பண்பாட்டுக்கூறுகளை வரலாற்றுரீதியாக பெற்றுள்ளன. சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவை பண்பாட்டை இடைவெட்டிச் சென்றபோதும் அவற்றுக்கப்பாலும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்ள பொதுவான பண்பாட்டம்சங்கள் இருக்கவே செய்கின்றன. இதேரீதியில் ஒவ்வொரு இனமும் தனக்குள்ள தனித்துவமான பண்பாட்டை பேணிக்கொண்டே இதர இனங்களுடன் தமக்குள்ள பொதுமைப்பண்புகளைக் கண்டடைந்து அவற்றுடன் ஒப்புரவாக வாழ்ந்துவருகின்றன.
ஓர் இனத்தின் வேறுபட்ட பண்பாட்டை அதன் தனித்துவமாக கருதி சமமாக ஏற்றுக்கொள்வதற்கு மாறாக அதனை இதர பண்பாடுகளுக்கு எதிரானதாகவோ கீழானதாகவோ உயர்வானதாகவோ சித்தரிக்க ஒன்றிய அரசும் அதனை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் முயற்சித்து வருகின்றன. இதன் மேலதிக தீவிரத்தில், தேசிய இனங்கள் என்பதையே மறுத்து இந்திய இனம் என்கிற செயற்கையான அடையாளத்தைச் சுமத்தி அந்த இந்திய இனத்தின் பண்பாடானது ஆரியப்பண்பாடே என்று நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனாலேயே “தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” என்கிற முழக்கத்துடன் தமுஎகச 15ஆவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.
தமுஎகச பொதுச்செயலாளராக இக்காலத்தின் பணிகள்?
கூட்டுமுடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு என்பதற்கும் அப்பால் விவாதங்களுக்கும் செயல்பாட்டுக்குமான நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதற்கும் கருத்தொற்றுமையை உருவாக்கிச் செயல்பட வைப்பதிலும் என் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாலும், நானிருந்து செய்தாக வேண்டிய சொந்தவேலைகள் எதுவும் இப்போதைக்கு எனக்கு இல்லாதிருந்ததாலும் இது சாத்தியமாயிற்று. கருத்துரிமைக்கு கடும் அச்சுறுத்தல் உருவாவதை முன்னறிவித்து “கருத்துரிமை போற்றுதும்” கூடுகை, தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான கருத்துருவாக்கத்தில் முன்னோடியாக “கல்வி உரிமை மாநாடு”, “பெண் எழுத்தும் வாழ்வும்” முகாம், பொதுமுடக்கக் காலத்திலும் இணையவழியில் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், இணையவழியில் திரைப்பள்ளி (இப்போது நேரடியாக நடக்கிறது), அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி நாடகப்பள்ளி, நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாடுகள், நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான உதவிகள் என்று இக்காலத்தில் இடையறாத வேலைகள் நடந்துள்ளன. மேலெழுந்த பிரச்னைகள் அனைத்திலும் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அமைப்பினரின் கலைஇலக்கியச் செயல்பாட்டு மட்டத்தை உயர்த்துவது, கலைஇலக்கிய நாட்டமுள்ள எவரொருவரையும் தவறவிடக் கூடாது என்பதற்காக “வீடுதோறும் உறுப்பினர், வீதிதோறும் கிளை” என்று அமைப்பினை விரிவுபடுத்துவது, எமது அமைப்புடன் நெருங்கிவரத் தயங்கும் கலை இலக்கியவாதிகளுடனும் பண்பாட்டு ஊழியர்களுடனும் தோழமை பேணுவது, தமிழகத்தின் வினைத்திறன்மிக்க கலைஇலக்கிய அமைப்பு என்னும் நற்பெயரை திடப்படுத்துவது என இனிவரும் காலத்துப் பணிகள் எம்மை அழைக்கின்றன.
புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: நாங்கள் காண்பது கூட்டுக் கனவு… நேர்காணல்: மதுக்கூர் ராமலிங்கம் சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன்
நீங்கள் தமுஎகச-வில் இணைந்த கதையைச் சொல்லுங்கள்
மதுக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1970-களில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்றதுண்டு. அந்தச் சிற்றூரில் அமைந்திருந்த அரசு நூலகம் வாசிப்பு வாசலைத் திறந்துவிட்டது. அந்த ஊரில் நடைபெறும் கோவில் விழாக்கள் மற்றும் மீலாது விழாக்கள் இலக்கிய விழாக்களாகவே நடைபெறும். என்னுடைய தந்தை மு.சந்திரன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வராதவர். இயல்பாகவே எங்கள் குடும்பம் காங்கிரஸ் குடும்பமாக இருந்தது. காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசில் மாணவர் பருவத்தில் எனக்கும் ஈடுபாடு இருந்தது. இந்தப் பின்னணியில் தான் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை பொருளாதார வகுப்பில் சேர்ந்தேன். அப்போது ஜனதா கட்சி உருவாகியிருந்த பின்னணியில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாணவர் ஜனதா மாவட்டச் செயலாளராக இருந்தேன். அப்போது காங்கிரசில் பிரபல பேச்சாளர்களாக இருந்த நெல்லைஜெபமணி, கோ.கலிவரதன், தமிழருவி மணியன், தஞ்சை இளஞ்சிங்கம் ஆகியோரடு சேர்ந்து மேடையைச் சுற்றி வந்திருக்கிறேன்.
மறுபுறத்தில் புதுக்கவிதை பேரலையாக எழுந்திருந்த காலம். அநேகமாக கல்லூரி மாணவர்கள் அனைவருமே கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படித்தான் நானும்.
பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் கவியரசர் கண்ணதாசன் மறைவையொட்டி நடைபெற்ற இரங்கல் கவியரங்கில் என்னையும் போட்டுவிட்டார் எனது பேராசிரியர் சோ.சிங்காரவேலன். நான் பதறிப்போய் அவரிடம் சென்று எனக்குக் கவிதை எழுத வராதே என்றேன். அவர் தான் “எழுதிப் பார் வரும்” என்றார். அப்படி எழுதப்பட்ட கவிதையை இரங்கல் கூட்டத்தில் வாசித்தேன். அதன்பிறகு தொடர்ந்து கல்லூரி விடுதி அறிவிப்புப் பலகையில் தினமும் ஒரு கவிதைதைய எழுதிப்போடுவேன். கைகழுவும் இடத்தில் இருந்த அந்த அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்ட கவிதைகளை மாணவர்கள் படித்துவிட்டு கைகழுவிவிட்டுப் போவார்கள்.இவற்றைப் படித்த சில நண்பர்கள் “நீ ஏன் புத்தகம் போடக்கூடாது” என ஏற்றி விட்டனர். அதை நானும் சீரியசாக எடுத்துக்கொண்டு புள்ளியில்லா கோலங்கள் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுத்தேன். மயிலாடுதுறைக்கு வேறு வேலையாக வந்த கவிஞர் வைரமுத்துவை மடக்கி முன்னுரையும் வாங்கிவிட்டோம். கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் அந்த நூலை வெளியிட்டார். கல்லூரி நிர்வாகமே செலவை ஏற்றுக்கொண்டது. மெஸ் பில்லுடன் கவிதை நூலுக்கான ரூ.500-ஐயும் சேர்த்துவிட்டது தனிக்கதை.
அடுத்து அதே கல்லூரியில் முதுகலை படிக்கும்போது காய்க்கத் தெரியாத காகிதப்பூக்கள் என்ற நூலை வெளியிட்டேன். விடுதியில் இருந்ததால் சந்தைப்படுத்துதல் கடினமாக இல்லை. இதன்பிறகு பொருளாதாரத்தில் எம்.பில்,. ஆய்வுப்படிப்பிற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்கு மார்க்சிய பொருளாதார அறிவியர் வெ.ப.ஆத்ரேயா பணியாற்றினார். அப்போது நான் கையில் ஏர்-உழவன் சின்னம் பொறித்த மோதிரம் அணிந்துகொண்டிருப்பேன்.
அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மார்க்சிய இயக்கத்திற்குள் கொண்டுவருவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் தான் என்னை முதன்முதலில் கட்சிக் கிளையில் சேர்த்தார். துவக்கத்தில் அவரது வீட்டில் தான் கட்சிக் கிளைக் கூட்டங்கள் நடைபெறும். அவர் வீட்டில் கிடைக்கும் தேநீரின் ருசி இன்னமும் நாவில் மிச்சமிருக்கிறது. என்னிடம் இருக்கும் அரசியல் ஆர்வத்தை அறிந்து வகுப்பு முடிந்தவுடன் அழைத்து தொடர்ந்து பேசுவார். அவர் என்னிடம் முதன் முதலில் படிக்கக் கொடுத்த நூல் தோழர் கு.சி.பா எழுதிய “சங்கம்” நாவல். அதைத் தொடர்ந்து பல புத்தகங்களைக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.
ஒரு நாள் தமுஎச திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த முகிலிடம் அழைத்துச் சென்று என்னை அறிமுகப்படுத்தினார். தோழர் நந்தலாலாவும் அப்போது திருச்சியில் தான் இருந்தார். முகில், நந்தலாலா, புதிய கம்பன், அக்னிக்குஞ்சு உள்ளிட்டவர்கள் இணைந்து சோலைக்குயில்கள் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் திருச்சி மலைக்கோட்டை அருகிலுள்ள இப்ராஹிம் பூங்காவில் கவிதை வாசிப்பு நடத்துவார்கள். மனுஷ்யபுத்திரன். பிச்சினிகாரி இளங்கோ, பொன்னிதாசன், இரா.எட்வின் ஆகியோர் வந்து கவிதை படிப்பார்கள். அவற்றைத் தொகுத்து சிறுநூலாக வெளியிடுவார்க்ள். இவ்வாறாக தேசியநீரோட்டத்திலிருந்து விலகி தமுஎச-வால் ஈர்க்கப்பட்டேன். அப்போது தமுஎக திருச்சி மாவட்ட மாநாடு நடைபெற்றது. தோழர்கள் மேலாண்மை பொன்னுச்சாமியும், ச.தமிழ்ச்செல்வனும் பேச வந்திருந்தார்கள். அதுவரை கேட்ட பேச்சுக்களிலிருந்து அது வித்தியாசமாக இருந்தது. தோழர் தமிழ்ச்செல்வன் ” வெயிலொடு போயி சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார். அந்த அட்டை இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறது. அதே ஆண்டு திருச்சியில் தமுஎச மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு தான் நான் மட்டுமல்ல, தோழர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் பங்கேற்ற முதல் மாநில மாநாடு. கே.முத்தையா, அருணன், கந்தர்வன், ச.செந்தில்நாதன் உள்ளிட்ட பல தலைவர்களை அப்போதுதான் பார்த்தேன். திருச்சி தேவர் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாடு அது.
பலரும் திருச்சியில் திருப்புமுனை மாநாடு என்பார்கள். என்னைப் பொருத்தவரை தமுஎச மாநாடு தான் உண்மையில் திருப்புமுனையாக அமைந்தது. திருச்சியில் படிப்பை முடித்த பிறகு தஞ்சையில் தமுஎச-வுடன் பயணம் தொடர்ந்தது. தோழர்கள் கோ.பாரதிமோகன், ச.ஜீவபாரதி, வல்லம் தாஜ்பால், ஆர்.தாமோதரன், நாகை.மாலி, ரகுபதி, புலவர் சௌ.ராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றுபட்ட பல ஆளுமைகள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டக்குழுவில் இருந்தார்கள். தஞ்சை மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் பிரிந்த பிறகு தஞ்சை மாவட்ட தமுஎச தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன்.ஆண்டுதோறும் பட்டுக்கோட்டையில் நடைபெறும் மக்கள் கவிஞர் விழா என்னை வளர்த்துக்கொள்ளவும் அமைப்பிற்குள் பணியாற்றவும் பெரும் உதவியாக இருந்தது.தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அறிவியல் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட கிழக்குக் கடற்கரைச் சாலை கலைப் பயணத்தில் ஒரு கலைஞனாகப் பங்கேற்றேன். பிரளயன் தான் கலைக்குழுவின் தலைவர். போப்பு, ஷாஜகான், ந.முத்துநிலவன் உள்ளிட்ட தோழர்களும் அந்தக்குழுவில் இருந்தனர். அது ஒரு நல்ல அனுபவம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்த பிறகு மதுரை மாவட்ட தமுஎச-வோடு தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாக திருப்பரங்குன்றம் கிளையின் சார்பில் இயங்கிய வேடந்தாங்கல் என்னையும் இணைத்துக்கொண்டது. தோழர்கள் சு.வெங்கடேசன், வெண்புறா, சோழ.நாகராஜன் ஆகியோர் ஒரு கூட்டுப் பறவைகள்
தோழர் கே.முத்தையாவுடனான உறவும்-தோழமையும் பற்றி…
மதுரை பல்கலைக்கழகத்தில் பணிக்குச் சேர்ந்த போது தோழர் கோ.வீரய்யன், கே.எம்.அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். தீக்கதிர் அலுவலகத்திற்கு அந்தக் கடிதத்துடன் வந்து அவரைச் சந்தித்தபோது “வாங்க.. வாங்க…” என்று வரவேற்றார். பல்கலைக்கழகப் பணி முடிந்தவுடன் தினமும் மாலையில் தீக்கதிர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள் என்றார். தோழர் குமரேசன் முதலில் ஒரு செய்தியைக் கொடுத்து எழுதச் சொன்னார். அடுத்த நாள் தீக்கதிரில் அது வெளியாக, பித்துப் பிடித்துவிட்டது. அடுத்து தோழர் அருணனிடம் கே.எம்.ஆற்றுப்படுத்தினார். எழுத்தின் நுட்பங்களை அவர்தான் முழுமையாக சொல்லிக்கொடுத்தார். ஒரு நிலையில் “பல்கலைக்கழகப் பணியை விட்டுவிட்டு முழுநேரப் பணியாக தீக்கதிருக்கு வந்துவிடு.” என்றார் தோழர் கே.எம். நிறைய தயக்கம் இருந்தது. இடையில் இரண்டு கல்லூரிகளில் கிடைத்த பேராசிரியர் பணிக்கும் செல்லவில்லை. தோழர் நல்லசிவன் அழைத்துப் பேசி “நீ தீக்கதிரில் தான் பணியாற்ற வேண்டும்” என்று கூறியதை மறுக்கமுடியவில்லை.
தோழர் கே.முத்தையா தீக்கதிர் அலுவலகத்திலேயே தங்கியிருப்பார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது. அவர் மேற்கொண்டிருந்தது ஒரு துறவு வாழ்க்கை. காலையில் இருவரும் சேர்ந்து டீ போட்டுக் குடிப்போம். நானும் அலுவலகத்தில்தான் தங்கியிருந்தேன். எப்போதும் அவருடனே இருக்கும் அரிய வாய்ப்பு அது. “இவன் என் மகன்” என்றுகூட சிலரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரிடம் கற்றுக்கொண்டது, பெற்றுக்கொண்டது ஏராளம். அவர் தான் பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தார். என் திருமணத்தை முடிப்பதற்காக இரண்டொரு முறை மதுக்கூரில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடமும் பேசிவிட்டார். இவர் தான் ஏதோ மந்திரப்பொடி போட்டு என் மகனை வழி மாற்றி அழைத்துக்கொண்டு போய்விட்டார் என்று என் அம்மா உறவினர்களிடம் சொல்லியது முன்னுக்கு வருகிறது. தஞ்சையில் நடைபெற்ற திருமணத்தை என்.சீனிவாசன், ஆர்.சி.பழனிவேலு போன்ற தலைவர்கள் தான் நடத்தி வைத்தனர். கோ.வீரய்யன் உட்பட மாவட்டத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டுவந்து நடத்தி வைத்த திருமணம் அது. கே.எம். கூறியபடி ஒவ்வொரு கமிட்டியும் ஆளுக்கொரு பொருளாக வாங்கிக் கொண்டுவந்து கொடுத்ததை மறக்க முடியாது. திருமணத்தின் போது குடும்பம் தொடங்குவதற்கான பண்ட பாத்திரங்களை வாங்கிக் கொடுத்தார். அவர் சென்னைக்குச் செல்லும் வரை நிழல் போல அவரையே பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். அவர் செல்லும் கூட்டங்களுக்கு என்னையும் அழைத்துச் சென்று அவர் பேசுவதற்கு முன் என்னைப் பேசவைத்து ரசிப்பார். எழுதுவதைச் செப்பம் செய்து கொடுப்பார். பல கட்டுரைகளை அவர் சொல்லச் சொல்ல எழுதிக்கொடுத்திருக்கிறேன்.
தோழர் பி.ராமமூர்த்தி இறந்தபோது நான் எழுதிய ஒரு கவிதையை செல்லுமிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். என்னிடம் ஏதாவது மேன்மை இருந்தால் அதற்கு அவரே பொறுப்பு. அவர் ஒரு ஞானத்தந்தை.
அன்றைய தமுஎச-விற்கும் இன்றைய தமுஎச-விற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்… வளர்ச்சி குறித்து குறிப்பாக சிலவற்றை சொல்ல முடியுமா?
செம்மலர் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட தமுஎச அடிப்படையில் ஒரு எழுத்தாளர் அமைப்பாகவே தொடக்கத்தில் இருந்தது. இலக்கியம் படைப்பதே பிரதான பணியாக இருந்தது. பிற்போக்கு இலக்கியங்களுக்கு எதிராக கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவசரநிலைக் காலத்தில் உருவான இந்த அமைப்பு கருத்துரிமைக்கான போரில் எப்போதும் முன்நின்றுவந்துள்ளது. தோழர் எஸ்.ஏ.பி. போன்றவர்களின் முயற்சியால் நிறைய கலைஞர்கள் இந்த அமைப்பால் ஈர்க்கப்பட்டார்கள். தமிழ் இலக்கிய உலகில் தமுஎச தலைவர்கள் நடத்தி வந்துள்ள விவாதங்களை தொகுத்தால் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக அது அமையும்.பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும் திருவண்ணாமலையில் தொடங்கி திருப்பரங்குன்றத்தில் பறந்து தமிழகம் முழுவதும் ஒளிர்ந்த கலை இரவுகள் தமுஎச-வை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றது.
கலை இரவு மேடையால் அடையாளம் காடடப்பட்ட பேச்சாளர்கள், கலைஞர்கள் ஆயிரம் ஆயிரம். கலை இரவு பார்த்துதான் திரைத்துறைக்குச் சென்றேன் என்று கூறும் கலைஞர்கள் ஏராளம். மறுபுறத்தில் நாவல், சிறுகதை, நாடகம், இசைப்பாடல்கள் எனஆண்டுதோறும் ஏராளமான பயிற்சி முகாம்கள்.தொடக்கத்திலிருந்தே கலைஞர்கள் இந்த அமைப்பில் இருந்தாலும் பெயரிலும் அவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக தமுஎச தமுஎகச-ஆக மாறியது. பண்பாட்டுப் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து முகம் கொடுத்து வந்தாலும் திருவண்ணாமலை மாநாடு ஒரு பெரும் பாய்ச்சலாக மாறி இது தற்போது கலை-இலக்கிய-பண்பாட்டு பேரமைப்பாக வளர்ந்துள்ளது. அவ்வப்போது பயற்சிமுகாம்கள் நடத்திவந்த நிலையில், நிரந்தர திரைப்படப் பள்ளி, நாடகப் பள்ளி என கலை-இலக்கிய-பண்பாட்டு நிறுவனமாக தற்போத நிமிர்ந்து நிற்கிறது தமுஎகச.
முப்பெரும் ஆளுமைகளான பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையாரை இத்தனை காலம் முன்னோடிகளாகக் கொண்டிருந்த தமுஎகச ஐம்பெரும் ஆளுமைகளாக கவிஞர் தமிழ் ஒளியையும் பால சரஸ்வதியையும் இணைத்தது ஏன்?
பாரதியின் தேசியம், விடுதலை உணர்வு, பாவேந்தரின் பகுத்தறிவு, பட்டுக்கோட்டையாரின் பொதுவுடைமை என மூன்று தத்துவப் போக்குகளையும் ஒன்றிணைத்தே முப்பெரும் ஆளுமைகளைத் தேர்வு செய்தனர் எம் முன்னோடிகள். அவர்களது நிர்ணயிப்பு மிகச்சரியானது.எனினும் வளர்ச்சிப்போக்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது. கவிஞர் தமிழ்ஒளியை எப்போதும் போற்றிக் கொண்டாடியே வந்துள்ளது. முற்போக்கு தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய பங்களிப்பு மகத்தானது. பாரதியின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் அவர். சிங்காரவேலர் மே தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினார் என்றால் மேதினத்தை முதன்முதலில் பாடியவர் தமிழ்ஒளி. நிலைபெற்றசிலை, ஈராயி, மே தின ரோஜா போன்ற அவரது காவியங்கள் நிகரற்றவை. பொதுவுடைமைக் கொள்கையைப் பாடியதோடு இந்தியாவிற்கே உரிய சாதிச் சிக்கல்களை சரியாகப் புரிந்து கொண்டு அதையும் தமது படைப்புகளில் கொண்டு வந்தவர். எனவே அவரையும் தமுஎகச ஆளுமைகளில் இணைக்க வேண்டுமென்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது.
தஞ்சாவூர் பாலசரஸ்வதி தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இழிவு செய்யப்பட்ட பரதக்கலைக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தவர். உலகளவிலான பல்கலைக் கழகங்களில் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்தவர். சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர். கலையைப் போற்றும் தமுஎச அவரையும் தன்னுடைய ஆளுமைகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஐம்பெரும் ஆளுமைகள் பல்வேறு தத்துவ போக்குகளை, கலை-இலக்கிய வடிவங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளனர். காலப்போக்கில் கள மாற்றத்தில் நிகழ்ந்துள்ள இயல்பானதொரு மாற்றம் இது.
கலை-இலக்கிய அமைப்பாகத் தொடங்கப்பட்ட தமுஎச இன்று பண்பாட்டு அமைப்பு போல செயல்படத் தொடங்கியிருப்பது தற்செயலானதா? திட்டமிட்டதா?
தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று அது ஒரு பண்பாட்டு அமைப்பாக செயல்பட்டதாகும். தீபாவளிக்கு மாற்றாக பொங்கல் விழாவை முன்னிறுத்தியது பெரும் பாய்ச்சலாகும். பழமையில் வேரூன்றி இருந்த பண்பாட்டை அவ்வியக்கம் பல வகையில் அசைத்தது. இன்றைக்கு சனாதனவாதிகள் பண்பாடு என்ற பெயரிலேயே பழமையை, அழுக்கைத் தக்க வைக்க முயல்கிறார்கள். இதற்கெதிரான உழைக்கும் மக்கள் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை தமுஎகச உணரந்தது. நாட்டில் மட்டுமல்ல வீட்டிலும் கூட நிறைய பண்பாட்டு மாற்றங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. ஆண்களும் சமைக்க வேண்டும். குடும்ப வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பேசத் தொடங்கிய தமுஎகச வாழ்வியல் நிகழ்வுகளில் மட்டுமல்ல, இறப்பு நிகழ்ச்சியிலும் கூட முற்போக்கு விழுமியங்கள் உயிர்த்திருக்க வேண்டுமென தற்போது பேசத் தொடங்கியுள்ளது. சடங்குகளை மறுத்து உடல் தானம் செய்வதற்கான படிவங்கள் பரபரப்பாக விநியோகிக்கப் படுகின்றன. காலத்தின் இன்றைய தேவைக்கு முகம் கொடுக்க வேண்டுமானால் பண்பாட்டு வேர்களை விசாரிக்க வேண்டியது அவசியம். காலத்தின் தேவையை உணர்ந்து கொண்டதால் நிகழ்ந்துள்ள இயல்பான மாற்றம் இது.
பிற கலை-இலக்கிய அமைப்புகளிடமிருந்து தமுஎகசவை வேறுபடுத்திக்காட்டும் சிறப்பம்சம் எவை எனக்கூறுவீர்களா?
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான கலை-இலக்கிய அமைப்புகள் இயங்குகின்றன. ஒத்த கருத்துள்ள அமைப்புகளுடன் ஒத்திசைவாக இயங்க ஒரு போதும் தவறியதில்லை. பல்வேறு அமைப்புகளோடு இணைந்து இயங்கி வருகிறது.இங்கு தனிநபர்கள் முன்னிறுத்தப்படுவதில்லை. தத்துவம் தான் இந்த அமைப்பை வழி நடத்துகிறது. கால மாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வது இந்த அமைப்பின் பெரும் சிறப்பு.
எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமின்றி ஆர்வலர்கள், ரசிகர்களையும் தமுஎகச உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வது ஏன்?
ரசிகன் இல்லாத கலையும், அழகும் பெருமை கொள்ளாது என்பார் கண்ணதாசன். மரத்தில் பழம் பழுத்து தொங்குவதும் கலை என்பார் பட்டுக்கோட்டையார். படைப்பாளிகள் எந்தளவிற்கு முக்கியமானவர்களோ. அந்தளவிற்கு முக்கியமானவர்கள் வாசகர்கள். அவர்களை ஒரு படி மேலானவர்கள். அதே போல கலை-இலக்கிய ஆர்வலர்களும் இந்த அமைப்பின் வேர்களாக விளங்குகின்றனர். தமுஎகச திரைப்பட உருவாக்க முகாம்களை மட்டுமல்ல, திரைப்பட ரசனை முகாம்களையும் நடத்தியுள்ளது. தேரில் இருக்கிற சிலைகள் மட்டுமல்ல. தேரை இழுத்துச் செல்கிற கரங்களும் முக்கியமானவை. ஆர்வலர்கள், ரசிகர்கள், வாசகர்கள் என எல்லோரையும் இணைத்துச் செல்வதால் தான் இந்த அமைப்பு சில நூறு பேரைக் கொண்டதாக மட்டுமின்றி பல ஆயிரம் பேரைக் கொண்ட பேரமைப்பாகவும் பயணிக்கிறது. இது தொடரும்.
தமுஎகச-வின் எதிர்காலம் குறித்து தங்களுக்குள்ள கனவு பற்றி…
தமிழகத்தில் தற்போதுள்ள கலை-இலக்கிய அமைப்புகளிலேயே அளவில் மட்டுமல்ல. போர்க் குணத்திலும் தமுஎகச-வே பேரமைப்பாக விளங்குகிறது என தன்னடக்கமாக கூறமுடியும். இன்னமும் கூட இந்த அமைப்பு மண்ணில் வேர் பற்றி விண்ணைத் தொட வேண்டும் என்பதே இந்த அமைப்பிலுள்ள ஒவ்வொருவரது கனவும் ஆகும். இங்கு கனவு என்பதே தனி நபர் சார்ந்ததாகவே உள்ளது. எங்களது கூட்டுக் கனவு. எல்லாப் பறவைகளும் வந்து தங்குகிற பெரு மரமாக, எல்லாப் பயணிகளும் இளைப்பாறுகிற பெரும் நிழலாகவும் இந்த அமைப்பு வளர வேண்டும் என்பதே எம் கனவு.
தமிழகப் பண்பாட்டு வெளியில் கடந்த 50-ஆண்டுகளில் தமுஎகச ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
படைப்புரிமை, கலையுரிமை, கருத்துரிமைக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கொதித்தெழுந்து போராடும் அமைப்பு இது. அதற்கு ஒரு உதாரணம் தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் அச்சுறுத்தப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வீதிமன்றத்தில் மட்டுமல்ல நீதிமன்றத்திற்கும் சென்று வழக்காடி கருத்துரிமைக்கு ஆதரவான தீர்ப்பை தமுஎகச பெற்றுத் தந்ததை சொல்லலாம்.எதிரிகளால் அதிகமாக அவதூறு செய்யப்படும் படைப்பாளிகள், கலைஞர்களில் பலர் நாங்களாகவே இருக்கிறோம். இது எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம். கலை இரவுகள்
தமிழ்ச் சமூகத்திற்கு தமுஎகச தந்த கொடை. அதை நகலெடுக்க முயன்ற பலர் தத்துவ வறுமையால் தோற்றுப் போனார்கள். பேசாப் பொருளை பேசியிருக்கிறோம். அதனாலேயே தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்ச் சமூகத்தின் தடத்தையே மாற்றிவிட்டோம் என்று கூறவில்லை. ஆனால், பண்பாட்டுப் பெருவெளியில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறோம் என்று கூறமுடியும். மதவெறி, சாதிவெறி முன்வைப்பதே பண்பாடு என்பதை மாற்ற முயன்று கொண்டிருக்கிறோம். உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயரத்தில் நிறுத்தும் வரை ஓய மாட்டோம்.
புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல – ஆதவன் தீட்சண்யா
“இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை” சிறுகதையை முன்வைத்து ஆதவன் தீட்சண்யாவுடன் உரையாடல்
நேர்காணல் : கே. பாலமுருகன்
கேள்வி: தங்களின் இந்தக் கதையின் மூலம் சுதந்திரத்திற்கு முன்பான ஒரு வரலாற்றுச் சூழலையும் அக்காலத்து ஏகாதிபத்தியத்தின் கொடூரங்களையும் விடுதலைக்கு முன்பாகவே மரணித்த ஒரு போராளியின் இலட்சியவாதத்தைப் பற்றியும் சொல்வதாக நான் உணர்கிறேன். உங்களைப் பொருத்தவரையில் இந்தச் சிறுகதைக் குறித்தான புரிதலும் அனுபவமும் எங்கிருந்து தொடங்கி வளர்கிறது? அந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?
பதில்: சென்னைக்கு சென்றிருந்தபோது பாரதி புத்தகாலயம் நாகராஜனும் சிராஜூம் “விடுதலைப்பாதையில் பகத்சிங்” என்கிற புத்தகத்தைக் கொடுத்தார்கள். அந்நூலுக்கு சிவவர்மா எழுதியிருந்த முன்னுரையைப் பேருந்தில் வரும்போது படித்துக்கொண்டு வந்தேன். “சிறையில் பகத்சிங் எழுதிய நான்கு முக்கியப் புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகள் அழிக்கப்பட்டுவிட்டன என்பது மிகவும் துரதிருஷ்டவசமாகும்.
(1) சோசலிசத் தத்துவம் (The Ideal of Socialism),
(2) சுயசரிதை,
(3) இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு மற்றும்
(4) மரணத்தின் நழைவாயிலில் (At the Door of Death)
என்பவையே அந்நான்கு புத்தகங்களுமாகும். அவை நான்கும் சிறையிலிருந்து வெளியே கடத்தப்பட்டு ஜலந்தரிலிருந்து குமாரி லஜ்ஜாவதி என்பவரிடம் அனுப்பப் பட்டிருந்தது. அவர் அவற்றை 1938இல் விஜய்குமார் சின்ஹா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார்.
1939இல் உலகயுத்தம் வெடித்தப் பின்பு, சின்ஹா தான் கைது செய்யப்படலாம், தன் வீடு சோதனைக்குள்ளாக்கப்படலாம் என்று பயந்தார். அவ்வாறு சோதனைக்கு உள்ளானால் கையெழுத்துப் பிரதிகள் காவல்துறையினரின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தன் நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்கும்படிக் கூறி அவற்றை ஒப்படைத்திருந்தார். 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியபோது, அரசாங்கத்தின் அடக்குமுறை எந்திரம் முழு வீச்சிலிருந்த சமயத்தில் அந்த நண்பர் மிகவும் பயந்துபோய் அக்கையெழுத்துப் பிரதிகளை அழித்துவிட்டார்…” என்று சிவவர்மா எழுதியிருந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மிகுந்த மனத் தொந்தரவுக்கு ஆளாகி வாசிப்பதை நிறுத்திவிட்டிருந்தேன்.
அந்நேரத்திற்கு நாகராஜன் கைப்பேசியில் அழைத்தார்.”பகத்சிங் எழுதியப் புத்தகங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்கிற செய்தியை என்மனம் ஏற்க மறுக்கிறது தோழரே… அந்த வரிகளுக்கு மேல் படிக்கமுடியாமல் திணறுகிறேன். அந்தப் புத்தகங்களில் பகத்சிங் எதையெல்லாம் எழுதியிருப்பார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று மனம் தவிக்கிறது” என்று அவரிடம் சொன்னேன். படிக்கும்போது தனக்கும் இதே உணர்வுதான் ஏற்பட்டது என்று அவரும் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். சமாதானமடையாத என்மனம் பலவாறாக குழம்பிப் புரட்டியது. அழிக்கப்பட்டு விட்டதாய் சொல்லப்படுகிற அந்தப் புத்தகங்கள் இதோ என்னிடமிருக்கின்றன என்று திடுமென யாரேனும் வந்து சொல்லமாட்டார்களா என்றெல்லாம் அர்த்தமற்று யோசித்தேன். யாரேனும் வரக்கூடும் என்று கற்பிதமான ஒரு விருந்தாளியின் நற்செய்திக்காக காத்திருப்பதைவிடவும் அந்தப் புத்தகங்களை வைத்திருக்கிற ஒருவரை நாமே உருவாக்கினால் என்னவென்று தோன்றியது. அப்படி உருவானவள்தான் நந்தினி. புத்தகங்களை வைத்திருப்பவராக ஒரு நந்தினியை உருவாக்கிவிட முடியுமானால் புத்தகங்களையும் நானே உருவாக்க முடியும்தானே? வாசிக்கப்படாமலே அழிந்துவிட்ட அப்புத்தகங்களை பகத்சிங்கின் இடத்திலிருந்து நானே எழுதுவதெனத் தீர்மானித்தக்கொண்டேன். இன்னின்னதையெல்லாம் பகத்சிங் எழுதியிருந்தார் என்று நானாக எழுதிக் கொள்வதற்கான எல்லையற்ற சுதந்திரம் இருப்பதை உணர்ந்துகொண்டேன். புனைவின் சாத்தியமும் அதுதான். எனவே அடிப்படையான இந்த செய்தியை உட்பொருளாக வைத்துக்கொண்டு அதைச் சுற்றிவரப் புனைந்தேன்.
தலைமறைவுக்காலத்தில் பகத்சிங் ரஞ்சித் என்ற பெயராலேயே விளிக்கப்பட்டார். அந்தப்பெயரே ஒரு புனைவாய் இருக்கும்போது அதிலிருந்து புனைவின் வெவ்வேறு நிறங்களை வடிவங்களை சுவையை உருவாக்கமுடியும் என்றே தோன்றியது. அதற்குப்பிறகு நான் தாமதிக்கவில்லை. வாசிப்புகளினூடாக பகத்சிங் குறித்து எனக்கிருந்த மனப்பதிவுகளின் சித்திரமாக முதல்வரைவை ஒரேமூச்சில் எழுதிமுடித்தேன். பிறகான வேலைப்பாடுகளுக்குதான் சற்றே கூடுதலாக உழைப்பு தேவைப்பட்டது. கதையில் இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்களும் புனைந்து எழுதப்பட்டவையும் ஒன்றுக்கொன்று இசைமையோடு இழையும் வண்ணமாக எழுதுவதன் மூலம்தான் வரலாற்றை ஒரு புனைவாகவும் புனைவை வரலாற்றின் ஒரு பகுதியாகவும் நிலை மாற்றம் செய்யவைக்கமுடியும் என்பதை இக்கதையை எழுதியதனூடாக விளங்கிக் கொண்டேன் என்றே சொல்லவேண்டும்.
தவிரவும் ஒரு தொழில்முறை பட்டாளத்தானைப்போல காட்டப்படுகிற பகத்சிங்கின் உருவத்தை நான் எப்போதும் ரசித்ததேயில்லை. சிவகாசியில் காலண்டர் அச்சிடுபவர்கள் கண்டுபிடித்த அந்த பொம்மை முகத்தில் எவ்வித மனவோட்டத்தையும் நீங்கள் அறிய முடியாது. பகத்சிங்கின் அசலான புகைப்படங்களைப் பாருங்கள், அவனை நீங்கள் இதற்குமுன் எங்கோ சந்தித்திருப்பதைப்போன்ற உணர்வு வரும். நம்மில் ஒருவன் என்று அவனை நம்பத்தொடங்கிவிடுவீர்கள். புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல, அவர்கள் இந்தச் சமூகத்தின் அழுத்தத்திலிருந்தும் தேவையிலிருந்தும் உருவாகி வருகிற நமது சொந்தப்பிள்ளைகள் என்பதனை விளங்கப்படுத்துகிற குறியீடாகவும்கூட நான் பகத்சிங்கை உருவகித்துக் கொள்வது இதனால்தான். வெகுசாமான்யனான ஒரு பஞ்சாபி இளைஞன்தான் பகத்சிங் என்ற மகத்தான வெல்லற்கரிய புரட்சியாளனாக உருவானான் என்று காட்டுவதன் மூலம்தான், நம்மாலும் முடியுமென்று எளியமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அப்படியானதொரு பகத்சிங்கைத்தான் ரஞ்சித்தாக எழுத முயன்றிருக்கிறேன்.
கேள்வி: ஆக்க்ஷன் (Action) மூலம் சிறைப்போராளிகளை விடுவிப்பதும் கொடூர அதிகாரிகளைக் கொல்வதும் என நடந்த வேட்டையில் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டார்களா?
உண்மையில் அன்று பயங்கரவாதிகள், அமிதவாதிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பகத்சிங்கும் அவரது தோழர்களும் வன்முறை என்பதை மிகக்கடைசியான வழிமுறையாகவே நம்பினார்கள் – பயன்படுத்தினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் காயம் அல்லது உயிர்ச்சேதம் விளைவிக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டினை பாராளுமன்றத்திற்குள் வீசியிருக்க முடியும். அவர்களது நோக்கம் அதுவல்ல. அந்த சபையினுடைய – அதன் வழியே உலகினுடைய கவனத்தை ஈர்ப்பது மட்டுமே அவர்களது நோக்கமாயிருந்த படியால் வெறுமனே சத்தம் எழுப்புமளவிலான குண்டையே வெடிக்கச் செய்தார்கள்.
இன்றைய ஆட்சியாளர்களே தம்மை எதிர்க்கும் சொந்தமக்களை கறுப்புச் சட்டங்களைக் கொண்டு விசாரணைகூட இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்தி வைக்கும் ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள். தமக்கு தொல்லையென்று கருதக்கூடியவர்கள்மீது தேசவிரோத முத்திரைகுத்தி உள்ளே தள்ளவோ அல்லது என்கவுண்டரில் போட்டுத்தள்ளுவோ இந்தத் தேசிய அரசுகள் தயங்குவதேயில்லை. இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்யாத அட்டூழியங்கள் என்று ஏதாவதுண்டா உலகத்தில்? கொன்ற பின்பு நுரையீரலை ஓட்டையாக்கி கடலுக்குள் வீசிவிட்டால் பிணம் மேலே வராது என்கிற கொடிய உத்திகளையெல்லாம் அவர்கள் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்டிருக்கிறார்கள். சானல் 4 வெளியிட்டிருக்கிற வீடியோக்களைப் பார்த்தால் நடந்திருக்கும் கொடுமைகளின் உண்மைநிலவரம் பற்றிய சிறுபகுதியையாவது உணரமுடியும். இதற்கு சற்றும் குறையாதவர்கள்தான் இந்திய ஆட்சியாளர்களும். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்திவரும் கொடூரங்கள் மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்டவை. கனிமவளங்களை கொள்ளையடிக்க வருகிற பன்னாட்டு நிறுவனங்களுக்காக சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸா போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் நரவேட்டையாடப்படுகின்றனர். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக நடைபெறுகிற நிலப் பறிமுதல், அந்த மண்டலங்களுக்குள் பணியாற்றும் தொழிலாளர்கள்மீதான உழைப்புச்சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பவர்களை ஈவிரக்கமற்று சுட்டுத்தள்ளி தமது இரும்புக்கரத்தின் பலத்தை சொந்த மக்கள்மீதே சோதித்துப்பார்க்கிற ஆட்சியாளர்களை பல திக்கிலும் கண்டுவருகிறோம்.
சொந்த மக்கள் என்று சொல்லிக்கொண்டே அவர்களது உயிரையும் உடைமையையும் சுயமரியாதையையும் அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களே பறிக்கிற கொடுங்கோலர்களாய் இருக்கிறபோது பகத்சிங் காலத்து அந்நிய – பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாய் இருந்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
உலகம் முழுதுமிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட தங்களது காலனிநாடுகளில் காப்பி தேயிலை ரப்பர் போன்ற பெருந்தோட்டத் தொழில்களுக்கும் சுரங்கம் வெட்டவும் ரயில் பாதை அமைக்கவும் துறைமுகம் உருவாக்கவும் இந்தியாவிலிருந்து பிடித்துச் செல்லப் பட்ட தொழிலாளர்களை பிரிட்டிஷார் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை வரலாற்றுப்பிரக்ஞையுள்ள எந்தவொரு மனிதரும் மறந்துவிடவோ மன்னிக்கவோ முடியாது. ‘‘மலேயாவில் ஒரு தொழிலாளி மனிதக்கழிவை (பீ தான் சார்) உண்ணுமாறு பலவந்தப்படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானான். அதனை விசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்றுநோய்க் கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை எனத் தீர்ப்புக் கூறினார்… இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு தொழிலாளி பட்டினி போடப்பட்டதால் தனது எஜமானனின் குதிரை லாயத்தில் மரணமடைந்தான்…’’ (மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் பக்-12). ஐந்து ஆண்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் பிடித்துப்போகப்பட்ட பெண்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? எஸ்டேட்டுகளுக்கு செல்லும் மலைப்பாதையெங்கும் அழுகியப் பிணங்களும் எலும்புக்கூடுகளும் பெருகிக் கிடந்ததென்ற அச்சமூட்டும் தகவலை இலங்கையின் மலையகத்திற்கு சென்றவர்கள் பதிவுசெய்துள்ளனர். இதே கொடிய அனுபவம் தமிழகத்தின் ஆனைமலைப்பகுதிக்குச் சென்றவர்களுக்கும் இருந்ததை எரியும் பனிக்காடு நாவல் காட்டித்தருகிறது.
பெண்களை சாக்குப்பைக்குள் நிறுத்தி அதன் உள்ளுக்குள் ஒரு பூனைக்குட்டியையும் போட்டு இடுப்பில் கட்டிவிட, தப்பிக்கும் மூர்க்கத்தில் அந்தப் பூனைக்குட்டி அந்தப் பெண்ணின் அடிவயிறுவரை தன் கூரிய நகங்களால் பிராண்டிக் குதறிவிடுவதாக சிங்கப்பூர் இளங்கோவனின் நாடகம் ஒன்றில் காட்டப்படுவதைப் போன்ற சித்திரவதைகளை பிரிட்டிஷார் உலகெங்கிலும் அரங்கேற்றியிருக்கிறார்கள். சித்திரவதைகளின் கொட்டடியாகத்தான் அவர்கள் சிறைச்சாலைகளை வைத்திருந்தனர் என்பதற்கு அந்தமானின் செல்லுலார் சிறை இன்றைக்கும் சாட்சியமாய் இருக்கிறது. கைது செய்யப்பட்ட மாப்ளா போராட்டக்காரர்களை கூட்ஸ் வண்டிக்குள் அடைத்து மூச்சித் திணறி சாகவைத்து அவ்வளவு பேரையும் பிணமாகக் கொண்டுவந்து கொட்டியதை கேரளத்தின் திரூர் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. இப்படி இந்தியப் பரப்பில் பிரிட்டிசார் நிகழ்த்திய அட்டூழியங்களின் பட்டியல் மிகநீண்டது. (அப்பேர்ப்பட்ட கொடுமைக்கார பிரிட்டனை இன்று மாபெரும் மனிதவுரிமைக் காவல்நாடென நம்பி சிலர் முறையிடும் அவலத்தை என்னென்று சொல்ல?)
ஆகவே, இப்படியான கொடுமைகளை நிகழ்த்திவந்த அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட அன்றைக்கு வேறுமார்க்கங்கள் இல்லாத நிலையில் ‘கணக்குத் தீர்க்கும்’ வழிமுறையை மேற்கொள்ள வேண்டிய தவிர்க்கமுடியாத நிலை போராளிகளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். அப்படியான நடவடிக்கைகளை அன்றைய காலப் பின்னணிக்குள் பொருத்திப் பார்க்காமல் போனால் அது வெறுமனே கொலை என்பதாக குறுக்கிப் புரிந்து கொள்ளும் அபத்தத்திற்கு இட்டுச்சென்றுவிடும். மற்றபடி பொதுமக்களது உயிருக்கும் உடைமைக்கும் சேதத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சியாளர்களை நிர்ப்பந்திப்பது அல்லது சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தூண்டுவது என்ற இழிவான உத்தியை பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் செய்தாரில்லை. ‘‘…அதிகாரப்பூர்வமான பயங்கரவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? புரட்சியாளர்களின் எதிர் பயங்கரவாதத்தால் மட்டுமே இந்த அதிகாரத்துவ அச்சுறுத்தலுக்கு உண்மையான தோல்வியைக் கொடுக்க முடியும்…’’ என்கிற புரிதலுடன்தான் அவர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள்.
‘‘ஒரு மனிதனின் இறப்பிற்காக வருந்துகின்றோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த இவன், மிகக் கொடூரமானவன், கீழ்த்தரமானவன், கேவலமானவன், ஒழிக்கப்பட வேண்டியவனாவான். உலகில் உள்ள அரசாங்கங்களிலேயே மிகக்கொடுங்கோன்மை அரசாக விளங்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜண்ட்டாகச் செயல்பட்ட இவன் இறந்துவிட்டான். ஒரு மனித உயிரின் ரத்தம் சிந்தப்பட்டதற்கு வருந்துகின்றோம். ஆனால் அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக் கூடியதும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாகக் கூடியதமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலி தவிர்க்க இயலாதவையே….’’ சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டது குறித்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் 1928 டிசம்பர் 18ம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணப்படுகிற இந்த வாசகங்கள் நமக்குப் போதுமான விளக்கங்களைத் தந்துவிடுகின்றன.
கேள்வி: “சனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கெடுக்காமல் எதைச் சாதிக்க முடியும்?” இந்த வார்த்தையை நீங்கள் யாரை நோக்கி முன் வைக்கிறீர்கள்?
பதில்: புரட்சிகரத்தன்மைக்கு உரிமைகோருகிற பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும் கூட ஆண்களின் சபைகளாக தேங்கிக் கிடப்பது குறித்த எனது அதிருப்தியை நான் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். மொழியால் செயலால் இது ஆண்களின் அமைப்பு என்கிற கருத்து தொடர்ந்து வெளிப்படுத்தப்படுகிறது. அவை ஆண்மையவாத சிந்தனைகளால் அழுகிப் போயிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே பெண்கள் அமைப்புகளுக்கு வெளியே இருக்கிறார்கள்.
கட்சிகளால் அணிதிரட்டப்பட்டிருக்கிற பெண்கள், கட்சியின்/ இயக்கத்தின் பொத்தாம் பொதுவான முடிவுகளை பெண்களிடம் கொண்டு செல்வதற்காகத் தான் பயன்படுத்தப் படுகின்றரே தவிர, பெண்களின் தனித்துவமான நிலைமைகளையும் தேவைகளையும் கட்சிக்குத் தெரிவித்து அவை குறித்து முழுகட்சியின் கவனத்தையும் செயல்பாட்டையும் கோருகிறவர்களாக செயல்படுவதற்கான சாத்தியங்கள் அரிதாகவே தென்படுகின்றன. இந்த ஒருவழிப்பாதை அணுகுமுறையால் பெண்களின் கருத்தியல் பங்களிப்பைப் பெறாமலே ஆண்வயப்பட்ட ஒற்றைத்தன்மையுடன் இயங்குகின்ற அமைப்புகளே பெரும்பான்மை. பெருவாரியான ஆண்களுக்கிடையில் பிரதிநிதித்துவ அடிப்படையில் போனால் போகிறதென்று அனுமதிக்கப்பட்டவர்களாக பெண்கள் நடத்தப் படுகின்றனர். இதனால் அவர்கள் மிகத் தாழ்ந்த ஸ்தாயியில் பேசுகின்றனர். அல்லது பெரும்பான்மைக்கு கீழ்ப்படிந்து / ஒத்துழைத்து பிரச்னையில்லாதவர்களாக சில மேடைகளை பகிர்ந்துகொள்கின்றனர்.
பெண்கள் பொதுவாழ்வில் பங்கெடுப்பதற்கரிய சாதகமான நிலைமைகளை உருவாக்குவதற்கான கருத்தியல் போராட்டத்தை ஆண்களிடம் நடத்துவதற்கோ பாலின சமத்துவத்துவம் என்பதில் உளப்பூர்வமான ஈடுபாடு கொள்வதற்கு தனது அணிகளை தயார்படுத்துவதற்கோ இங்குள்ள இடதுசாரி இயக்கங்களே வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்ற நிலையிருக்கும்போது மற்றக்கட்சிகளைப் பற்றி நான் சொல்வதற்கொன்றுமில்லை. மார்க்சீய சொற்றொடர்களையே பிரயோகித்து பாலின சமத்துவத்தை மறுக்கிற சில இடதுசாரிகளின் சாமர்த்தியம் குறித்து நான் அச்சம் கொண்டதுண்டு. ஆகவே பெண்கள் பங்கேற்காத எந்தப் புரட்சியும் முழுமையடையாது என்று லெனின் எச்சரித்திருப்பதை திரும்பத்திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது- நமக்கும் மற்றவர்களுக்கும். அதனால்தான் ‘‘பூமியின் மீதிலே அடிமையொருவன் இருக்கும் வரை/ நீங்கள் சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவர்கள் என்று கூறு இயலுமா…’’ என்கிற ஜேம்ஸ் ரஸ்ஸல் லொவல் என்பவரின் கவிதைவரிகளை தன் குறிப்பேட்டில் கவனப்படுத்தும் பகத்சிங் நிச்சயம் பாலின அடிமைத்துவத்திற்கும் எதிரானவனாகத்தான் இருப்பான்- இருக்கவேண்டும் என்று சொல்ல விரும்பினேன்.
பகத்சிங் தன் நண்பன் சகதேவுக்கு காதல் குறித்து எழுதிய கடிதத்தின் வாசகங்களும் கூட என்னை இம்முடிவுக்கு இட்டுச்சென்றதற்கு காரணமாய் இருக்கலாம். ஆகவே கதவுக்குப் பின்னிருந்து பேசும் பதுமைகளென பெண்களை உருவகப்படுத்தி ஒடுக்கிவந்தக் காலத்தில், அரசியல் போராட்டத்தில்- பொதுவாழ்வில் பங்கெடுக்க பெண்களும் முன்வரவேண்டும் என்ற பொருளில் “சனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கெடுக்காமல் எதைச் சாதிக்க முடியும்?” என்று ரஞ்சித் சொல்வதாக எழுதினேன். இது பகத்சிங் மற்றும் அவனது தோழர்கள்மீது வலிந்து கூறப்பட்ட எனது விருப்பமல்ல. 6.4.1928 அன்று வெளியிடப்பட்ட அவர்களது வெகுசன அமைப்பான ‘நவஜவான் பாரத் சபா என்னும் இளைஞர் அமைப்பின் கொள்கையறிக்கை இவ்வாறு நிறைவுபெறுகிறது- ‘‘ஒரு தேசத்தின் உருவாக்கம், தங்களது சொந்த சுகங்களையும் நலன்களையும் காட்டிலும் தங்களது சொந்த உயிர்களையும் தாம் நேசிப்பவர்களின் உயிர்களைக் காட்டிலும் தங்களது நாட்டுநலனையே பெரிதெனப் பேணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள் பெண்களின் தியாகங்களையே வேண்டுகிறது…’’
கேள்வி: “யங் இந்தியாவில் வெளியான கட்டுரைகளின் வழியே புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கும் அரசின் அத்துமீறல்களுக்கு தனது ஒப்புதலை காந்தி பகிங்கரமாக வெளிப்படுத்தினார், இதன் மூலம் போலிஸின் அட்டூழியம் தொடங்கியது”. உங்களின் இந்தச் சிறுகதையின் ஒட்டுமொத்த பகுதியிலிருந்து காந்தி எவ்விதமான அடையாளத்தைப் பெறுகிறார்? அவரின் அரசியல் செயல்பாடுகள் மீதான தங்களின் மதிப்பீடு என்ன? மேற்கண்ட காந்தியின் ஒப்புதல் புரட்சிக்காரர்களை ஒடுக்கியதா?
பதில்: காந்தியின் அகிம்சாவழிக்கு முரணாக வெளிப்படும் வன்முறையைக் கையிலெடுத்ததால்தான் கடைசிவரை காந்தி பகவத் சிங் மீது எதிரான கொள்கையைக் கொண்டிருந்தார்? தாங்கள் கோரிய சீர்த்திருங்களும் ஏற்கப்படாத நிலையில் ‘‘ எரிச்சலடைந்தக் குழந்தை ஒன்றின் வீம்பான எதிர்ச்செயலைப்போலவே’’ காங்கிரஸ் பூரண விடுதலைக் கோரிக்கையை எழுப்பியது என்பதே புரட்சியாளர்களின் மதிப்பீடு. எனவே காங்கிரஸ் கோரிய விடுதலையின் எல்லைகள் மிக்குறுகியவை. இந்தியச் சுதந்திரம் எவ்வகைப்பட்டதாக இருக்கவேண்டும், அதற்கானப் போராட்டம் எத்தகைய வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும், போராட்டத்தின் தலைமை யார், நேசஅணிகள் எவை என்பவற்றின் மீதான நிலைப்பாடுகளில் பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்கள் காந்தியிடமிருந்து வேறுபடுகின்றனர். ‘‘நாம் தொழிலாளர்களை விடுதலைப் போராட்டத்தினுள் திருப்பிவிடக்கூடாது. ஆலைத்தொழிலாளர்களை அரசியல்ரீதியாகப் பயன்படுத்துவது அபாயகரமானது’’ என்கிற கருத்து காந்திக்கு தொடக்கம் முதலே இருந்தது. ‘‘உண்மையான புரட்சிகர ராணுவத்தினர் கிராமங்களிலும் தொழிற்சாலைகளிலுமே உள்ளனர். விவசாயிகளும் தொழிலாளர்களுமே அவர்கள்…’’ என்பது பகத்சிங்கின் கருத்தாக இருந்தது. ஆகவே காந்திக்கும் பகத்சிங்குக்கும் இடையே விரிகின்ற முரண் அரசியல்ரீதியானது.
காந்தி என்றால் அகிம்சை என்கிற ஒரு சித்திரம் மட்டுமே திரும்பத்திரும்ப காட்டப்படுகிறது. அது இட்டுக்கட்டப்பட்டதொரு தோற்றம். இம்சை என்பது ஆயுதம் கொண்டு வதைப்பது மட்டுமல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் காந்தியின் அகிம்சை எந்தளவிற்கு மற்றவர்களுக்கு இம்சையாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். தன்னையே வருத்திக்கொள்ளும் மனவலிமையின் மூலம் ‘‘எத்தனை ஓ’டயர்களையும் ரீடிங்குகளையும் இர்வின்களையும் அவரால் இந்தியாவின் நண்பர்களாக மாற்ற முடிந்தது?’’ என்கிற கேள்வி முக்கியமானது. அஹிம்சை என்பதில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்காக இந்தநாட்டின் கோடானகோடிப் பேரின் போர்க்குணத்தையும் தியாகத்தையும் உயிர்ப்பலிகளையும் வீணடித்து பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தை நீட்டிக்க வைத்தக் குற்றத்தில் காந்திக்குள்ள பங்கை நாம் பரவலாக பேசுவது கிடையாது.
‘மீரட் சதி வழக்கு, லாகூர் மற்றும் பெஷாவர் அட்டூழியங்களின் சூத்ரதாரியான வைஸ்ராய்’ இர்வின் 1929 டிசம்பர் மாதத்தில் சென்ற சிறப்பு ரயிலின் அடியில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. ஆனால் அவர் தப்பித்துவிட்டார். வைஸ்ராய் தப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி சொன்ன காந்தி புரட்சியாளர்களைக் கண்டித்து வெடிகுண்டின் வழிபாடு என்று கட்டுரை எழுதினார். தொடர்ந்தும் அவர் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் புரட்சியாளர்களை தனிமைப்படுத்த முயற்சித்துக் கொண்டேயிருந்தார். புரட்சியாளர்கள் உள்ளிட்டவர்களாலும் இந்த நாட்டின் தலைவரென ஏற்கப்பட்ட அவரிடமிருந்து வெளியான இவ்வகையான கருத்துகள்தான் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிடப்படுவதை தடுப்பதில் காந்திக்கு மனத்தடையை ஏற்படுத்தியிருந்தது. அவர் தன்குரலை உரிய தொனியில் உரிய நேரத்தில் ஏன் எழுப்பவில்லை என்பதற்கான பதில் வெற்றிடமாக உள்ளது. ஆனால் அதில் மர்மமொன்றும் இல்லை. புரட்சியாளர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தீர்த்துக்கட்டியதன் மூலம் தனது அரசியலுக்கு எதிரான- கடக்கமுடியாத தடைகள் நீங்கிவிட்டன என்கிற தற்காலிக நிம்மதிகூட அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
கேள்வி: ஆனால், ரஞ்சித் இந்தக் கதையில், அவனுடைய நான்கு புத்தகங்களும் அச்சாகிய பிறகு, அதைக் காந்திக்கும் அனுப்பி கருத்து கேட்குமாறு சொல்லும் இடம் நெருடலை ஏற்படுத்துகிறது. ரஞ்சித்திற்கு முற்றிலும் முரணான ஒரு காந்தியிடம் ஏன் ரஞ்சித் தனது புத்தகங்களைக் காட்டி கருத்துக் கேட்க வேண்டும் என்கிற ஆவலைக் கொண்டிருக்க வேண்டும்? அதன் அவசியம் என்ன?
பதில்: “ச்சே.. அந்தாள் மூஞ்சில ஜென்மத்துக்கும் முழிக்கமாட்டேன்..” என்கிற இன்றைய தலைவர்களின் வறட்டுகௌரவமும் வெற்றுவீம்பும் காந்திக்கும் பகத்சிங்குக்கும் இருந்திருக்க வேண்டுமா என்ன? தனிநபர்கள் என்ற வகையில் அவர்களுக்கிடையே எவ்விதப் பகைமையோ காழ்ப்போ இல்லைதானே? மாற்றுக் கருத்துள்ளவர்களையெல்லாம் போட்டுத்தள்ளுகிறவரல்ல பகத்சிங். அவர் மாற்றுக் கருத்துக் கொண்டோரிடம் தொடர்ச்சியாக உரையாடலை நடத்திக் கொண்டிருந்தார். ‘வெடிகுண்டின் வழிபாடு’ என்ற காந்தியின் கட்டுரைக்கு ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்று பகவதி சரண் வோரா எழுதிய மறுப்பாகட்டும் அல்லது காந்தி-இர்வின் ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவிருந்த நேரத்தில் சுகதேவ் காந்திஜிக்கு எழுதிய பகிரங்கக் கடிதமாகட்டும் – இவையெல்லாம் இந்த உரையாடலின் பகுதிகளே. புரட்சி என்பதன் பொருளை அதன் முழுஅர்த்தத்தில் வெகுமக்களும் இந்த சமூகத்தின் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பிய பகத்சிங் தன் நூல்கள் மீதான காந்தியின் அபிப்ராயத்தை எதிர்வினையை அறிந்துகொள்வதில் ஆர்வமுடயவராகவே இருந்திருப்பார் என்ற நம்பிக்கையிலேயே அவ்வாறு எழுதியிருக்கிறேன். எதிரும் புதிருமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த அதேவேளையில் பரஸ்பரம் மரியாதையுடன் இருக்கிற நல்லமரபுகள் இந்திய அரசியலில் இருந்திருக்கின்றன.
கேள்வி: “கடவுளுக்கு முன்பே உலகம் இருந்தது என்பதைப் போல எனக்குப் பின்னும் இருக்கும் ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்று கொண்டிருக்க முடியாது” வரலாற்றில் நாம் எத்தனையோ போராளிகளை இழந்துவிட்டோம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்கள் அரசியல்/அதிகாரப் பலத்தால் ஒடுக்கப்படும்போது ஒரு போராளி அந்தச் சமூகத்திலிருந்து பிறப்பான் எனச் சொல்லப்படுவதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? ஒரு போராளியின் கனவு ஏகாதிபத்தியங்களை எந்த வகையில் உடைக்க நினைக்கிறது? அவனது உயிரைப் பறிப்பதிலா அல்லது அவனது அதிகாரத்தைப் பலவீனமாக்குவதிலா? ஏதாவது ஒரு வரலாற்றை முன்வைத்தும் சொல்லலாம்.
பதில்: “கடவுளுக்கு முன்பே உலகம் இருந்தது என்பதைப் போல எனக்குப் பின்னும் இருக்கும் ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்று கொண்டிருக்க முடியாது” என்ற வரிகளை நானாகத்தான் எழுதினேன். பகத்சிங் மற்றும் அவனது தோழர்களைப் பொறுத்தவரை இந்த வரிகள் பொய்யில்லைதானே? அந்த ஆளுமைகளின் குறுக்கீடும் செல்வாக்கும் வெவ்வேறு தளங்களில் வெளிப்படையாகவும் மறைபொருளாகவும் இன்றளவும் நம்மை வழிநடத்தத்தானே செய்கின்றன? அவர்கள் உருவாக்கிய இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் உணர்வினில் கலந்துவிட்ட முழக்கமல்லவா?
“மாலைநேரத்தில் நெருப்புமூட்டிக் குளிர்காயும் விவசாயியுடன் வட்டமாய் அமர்ந்து அவ்விவசாயி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் முயற்சி செய்திருக்கிறாரா? ஒரு மாலைப் பொழுதையாவது ஒரு ஆலைத்தொழிலாளியுடன் கழித்ததுண்டா? தனது உறுதிமொழிகளை அத்தொழிலாளியுடன் அவர் பகிர்ந்து கொண்டதுண்டா?” என்ற கேள்விகளை காந்தியைப் பார்த்து கேட்பதற்கும் முன்பாக பகத்சிங்கும் அவரது தோழர்களும் முதலில் தங்களைத்தாங்களே கேட்டுக் கொண்டார்கள். போராளிகள் அந்தரத்திலிருந்து வருவதில்லை, அவர்கள் தங்களைப் போன்ற சாமான்யர்களிலும் சாமான்யர்களிலிருந்துதான் உருவாகிறார்கள் என்பதை அறிந்தேயிருந்தனர். குறிப்பாக, தாங்கள் மகாத்மாக்கள் அல்ல என்பதில் தெளிவாயிருந்தனர். அவர்கள் சாமான்ய மக்களுக்குள் தண்ணிக்குள் மீனாகத் தங்கி, அவர்களது நலனுக்காகப் போராடுவதையே நோக்காகக் கொண்டிருந்தார்கள். உள்ளூர் மட்டத்திலான உணர்வுகளை சர்வதேசப் போக்குகளுடன் இணைக்கவும் அவர்கள் தவறவில்லை.
தனியொரு மனிதனாய் இருந்து தனது மூளையிலிருந்து உதிக்கிற குழப்பங்களுகேற்றபடியெல்லாம் மக்களை மந்தைபோல நடத்துகிறவர்களை போராளி என்பதாக வரலாறு பதிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு வேறுபெயர் இருக்கிறது. கண்ணியமானதொரு வாழ்வு குறித்த வெகுமக்களது விருப்பார்வங்களை உணர்ந்து அவற்றை ஒருங்கிணைத்து, அடைவதற்கான வழிமுறைகளையும் அமையவிருக்கும் புதிய சமூக அமைப்பிற்கான வரைவையும் வளர்த்தெடுப்பவர்களாகிய போராளிகள் எல்லாக்காலத்திலும் உருவாகித்தான் வருகிறார்கள். அப்படியான போராளிகள் தங்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் பின்னாளில் தகுந்த வெகுமானம் கிடைக்கும் என்று ஒருபோதும் ‘கணக்குப்பண்ணி’ போராடுவதில்லை. களத்திலே நிற்பதென்று முடிவான பிறகு சமரசமோ சரணாகதியோ இன்றி போராடுகிறார்கள். அதிலே உயிர்த்தியாகம் உள்ளிட்ட எதையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ‘தியாகிகள் சிந்தும் செங்குருதி உணவிலேயே இளம் சுதந்திரப்பயிர் செழித்து வளரும்’’ என்று நம்புகிற – போராடுகிற- தியாகம் செய்கிற பரம்பரை ஒன்று எப்போதும் இயங்கும்.
‘ஒரு நிராதரவான மனநிலை சமூகத்தைப் பீடித்திருக்கும்போது, அழிவைத் தரக்கூடிய அந்த மனச்சோர்வை வெற்றிகொள்வதற்காக – ஓர் உண்மையான தியாக உணர்வை ஊட்டுவதற்காக’ புரட்சியாளர்கள் போராட்டங்களின் முன்வரிசையில் நிற்கிறார்கள். முன்வரிசையில் என்றால், மக்களைத் திரட்டிக்கொண்டுதான்.
புரட்சியாளர்களின் நடவடிக்கை என்னமாதிரியான விளைவுகளை உருவாக்குகின்றன என்றால், ‘‘ஒடுக்குவோரின் மனதில் பயபீதியை உண்டாக்குகிறது. ஆனால், ஒடுக்கப்படும் மக்களிடத்திலோ அது பழிவாங்குவதற்கும் மீட்சிக்குமான நம்பிக்கையை விதைக்கிறது. ஊசலாட்டத்தில் இருப்பவர்களுக்குத் துணிவையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. பயங்கரவாதமானது ஆளும் வர்க்கமே வலிமை வாய்ந்தது என்ற மாயையைத் தகர்த்தெறிந்து உலகத்தின் பார்வையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் அந்தஸ்தை உயர்த்துகிறது…’’ இந்த அடிப்படைக்குள் பொருந்தி வருகின்றதா என்று உலகத்தின் எந்தவொரு அமைப்பையும் நீங்களே பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.
கேள்வி: “ஏகாதிபத்தியத்திற்கு சற்றும் குறைவில்லாமல் ஒவ்வொரு இந்துவும் தனக்குக் கீழிருக்கும் சாதிகளை ஒடுக்குகிறான்” – சிறுகதையிலிருந்து. இதைப் பின்காலனிய மனோபாவம் எனச் சொல்லலாமா அல்லது காலனியக் காலக்கட்டத்தில் உக்கிரமாக உருவான சாதி அமைப்பு எனச் சொல்லலாமா? இந்து என்கிற அடையாளம் ஏகாதியபத்தின் இரண்டாம்தர அதிகார தரகர் என அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா? எது நீங்கள் கதையின் வழி முன்வைக்கும் இந்து?
பதில்: உண்மையில் இந்து என்று ஒருவர் எந்தகாலத்திலும் இருந்தது கிடையாது. அது இட்டுக்கட்டப்பட்டதொரு மாயை. எவரொருவர் பௌத்தவராகவோ சமணராகவோ பார்ஸியாகவோ இஸ்லாமியராகவோ கிறித்தவராகவோ இல்லையோ அவர்தான் இந்து. இப்படியொரு வெட்கங்கெட்ட விளக்கம் வேறு எந்த மதத்தவருக்காவது உண்டா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். புராதன இந்தியப்பரப்புக்குள் நிலவிய பன்முகப்பட்ட வழிபாட்டுமுறைகளின் தொகுப்பை ஒரு பூர்வீக மதம் என்று வகைப்படுத்துவதாயிருந்தால் ஆரியர்களது வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதீக மதம்தான் இந்தியாவிற்கு முதல் அன்னிய மதம். இந்த வைதீக மதத்திற்கு வெளியே வேறு வழிபாட்டு மரபுகள் இருந்தன. வைதீக மதத்தின் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக அவைதீக மதங்கள் தோன்றின. இவை எல்லாவற்றிலிருந்தும் சாத்தியமானதையெல்லாம் உறிஞ்சிக் கொண்ட ஒரு கலவைதான் இன்றைக்கு இந்துமதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கு மதம் என்பது ஒருவருக்கு முற்றுமுடிவான அடையாளமல்ல.
நான் ஒரு இந்து என்று ஒருவர் சொன்னால், நாங்களும் அந்த மசுருதான். உன் சாதியச் சொல்லு… என்பதுதான் அடுத்தக் கேள்வியாக இருக்கிறது. அதாவது சாதிதான் இந்துமதத்திற்கு அடிப்படை. அந்த சாதியடுக்கு அமைந்துள்ள விதமே ஏற்றத்தாழ்வானது, சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. சாதியடுக்கின் உச்சியில் தம்மை இருத்திக்கொண்ட பார்ப்பனர்கள் எல்லாச்சாதிகளையும் சுரண்டுவதற்கான அதிகாரங்களும் உரிமைகளும் கொண்டிருந்தனர். அதாவது எவருடைய உழைப்பையும் உடைமையையும் அபகரித்துக்கொள்வதற்கான அதிகாரம். அவர்களுக்கு அடுத்த நிலையிலான சாதியினர் தமக்கு அடுத்த நிலையிலிருந்த சாதிகளைச் சுரண்டினர். இந்த சுரண்டல் அமைப்பின் மொத்தச்சுமையையும் இழிவையும் பூர்வகுடிகளாகிய தலித்துகள் ஏற்கவேண்டியுள்ளது.
சமூகவளங்களைப் பகிர்ந்துகொள்வதில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வை / சுரண்டலை நியாயப்படுத்தவும் போட்டியாளர்களை அப்புறப்படுத்தவும் தீட்டு புனிதம் என்கிற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு ஒரு கடவுளாம்சம் தருகின்ற புராணங்களும் கட்டுக்கதைகளும் தேவைப்பட்டன. அவற்றை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்கான சட்டதிட்டங்கள் – உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து முதல் உச்ச நீதிமன்றம் வரை- நிறுவப்பட்டுள்ளன. எனவே இங்கு சுரண்டல் என்பதோ ஒடுக்கு முறை என்பதோ புதிதல்ல. அதிகாரப்பூர்வமான சிறைகள் உருவாகும் முன்பே இங்கு சேரிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. இப்படி ஒருவரையொருவர் ஒடுக்குவதற்கான தத்துவப் பின்புலத்தை வழங்கக்கூடியதாய் இந்துமதம் இருப்பதை மிகச்சரியாய் அம்பலப்படுத்திய அம்பேத்கர் அந்த இந்தமதத்தை விட்டு வெளியேறுவதுதான் சுதந்திரமாக வாழ விரும்பும் ஒருவர் செய்ய வேண்டிய முதற்பணி என்றார்.
இந்திய ஆதிக்கச்சாதியினர் ஒருபக்கம் இந்தியவாதம் பேசிக்கொண்டே மறுபக்கத்தில் காலனியாட்சியாளர்களின் இளையபங்காளிகளாகவும் சேர்ந்து கொண்டனர். காலனியாதிக்கம் தன்தேவையிலிருந்து உருவாக்கிய கல்வி, தொழில், அரசுப்பதவிகள் போன்றவற்றை கையகப்படுத்தி அதிகாரத்தின் ஒருபகுதியாகி நாட்டுமக்களை தம்பங்குக்கு சுரண்டினர். மக்களது போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தால் காலனியாட்சியாளர்கள் வெளியேற நேர்ந்தபோது அவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட இவர்கள் சுதந்திர இந்தியாவின் வளங்களைத் தின்று இன்று கொழுத்திருக்கிறார்கள். உலகமயம் என்ற போர்வையில் ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து சுரண்டலைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்தச் சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக கொடிய கறுப்புச்சட்டங்களை வகுக்கிறார்கள். முதலாளித்துவமும் பார்ப்பனீயமும் நமக்கு முதன்மை எதிரிகள் என்ற அம்பேத்கர் சொன்னதன் முழுப்பொருளை முன்னெடுத்துச் செல்வதற்கான இயக்கங்கள் இன்றையத் தேவை.
கேள்வி: “இழப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் மார்க்சின் பிரகடனத்தை மறுப்பவர்களாக இந்திய உழைப்பாளிகளை இந்துமதம் பிறப்பிலேயே வடிவமைத்து விடுகிறது”- சிறுகதையிலிருந்து மார்க்சின் இந்தப் பிரகடனத்தின் அர்த்தம் என்ன? (இழப்பதற்கு ஒன்றுமில்லை). இந்திய உழைப்பாளிகள் இதை மறுப்பதனால் என்ன ஆகுகிறார்கள்? இந்துமதம் பிறப்பிலேயே எப்படி இந்த மனநிலையைக் கட்டமைக்கிறது?
பதில்: அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகுண்டு என்பது மார்க்சின் பிரகடனம். அடையப்போகிற பொன்னுலகில் எங்கள் சாதிக்கு தனித் தெருவுண்டா தனி சுடுகாடுண்டா தனி கோயிலுண்டா என்பதுதான் இந்தியர்களின் பிரச்னையாக இருக்கிறது. பூகம்பத்திலும் சுனாமியிலும் போரிலும் வீடுவாசல் சொத்துசுகம் குடும்பம் அவ்வளவையும் இழந்துவிட்டப் பின்னும் சாதியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிற வேதாளமனம் இந்தியருக்கு இருக்கிறது. சாதிப்பெருமை என்ற கற்பிதத்தை துறக்கமுடியாத இந்த மனநோயாளிகள் ஒவ்வொரும் மற்றவருக்கு அடிமைவிலங்கைப் பூட்டிவிட்டு தம்மையும் கூண்டுக்குள் அடைத்து பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். மொத்த பேருக்குமான சாவிக்கொத்து பார்ப்பனர் இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. எந்தச் சூழலிலும் இழக்கக்கூடாததென இவர்களுக்குள்ள சாதிப்பெருமிதம் இயல்பிலேயே மற்றவர்களோடு ஒரு வர்க்கமாக அணிதிரள முடியாமல் தடுத்துவிடுகிறது. சாதி அப்படியே இருக்கட்டும், இப்போதைக்கு வர்க்கமாக திரட்டிவிடுவோம் என்று எவரேனும் சொன்னால் அவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று அர்த்தம்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் என்று ஒரு இடதுசாரிக் கட்சி இருப்பதை தாங்களும் அறிவீர்கள். அதன் தமிழ்நாட்டுப் பிரிவில் பெரும்பாலும் தேவர் சாதியினர்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய நிர்வாகி ஒருவர் அங்கு குழுமியிருந்த தனது கட்சியினரைப் பார்த்து பழக்கதோஷத்தில் ‘டியர் காம்ரேட்ஸ்’ என்று விளித்திருக்கிறார். காம்ரேடாவது கத்திரிக்காயாவது, டியர் காம்ரேட்ஸ் என்பதை ‘தேவரினச் சிங்கங்களே…’ என்று தமிழில் மொழிபெயர்த்தார்களாம். மார்க்சீயத்திற்கும் அந்தநிலை வந்துவிடக்கூடாது என்று குறைந்தபட்சம் நாம் கூட்டாக கவலையாவது படுவோமே – ரஞ்சித்தைப்போல.
கேள்வி: காந்தி ஏன் தீண்டத்தகாதவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கக்கூடாது என சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்? (20.09.1932)? அவருடைய அரசியல் புரிதல் சிறுபாண்மை இனத்தை ஒடுக்கியது என நினைக்கிறீர்களா?
பதில்: யார் சாகும்வரை அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்வியை சற்றே திருத்தினால் நமக்கு இதற்கான விடை மிகவும் எளிமையாகவே கிடைத்துவிடும். தலித்துகளை தொடர்ந்து இந்துக்களின் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக – தலித்துகள் தமக்கான பிரதிநிதிகளைத் தாமே சுயமாக தேர்வு செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார். இந்துக்களின் தயவைப் பெறுகிற ஒருவர்தான் தலித்துகளின் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார். தலித்துகளின் அரசியல் உரிமைகளை இந்துக்களுக்கு கீழ்ப்பட்டதாக மாற்றியமைப்பதில் அவர் அடைந்த வெற்றி தேசத்தந்தை என்கிற முகமூடியை அணிந்துகொண்டிருந்த ஒரு இந்துசனாதனியின் நயவஞ்சகத்திற்கு கிடைத்த வெற்றி.
கேள்வி: உங்களின் இந்தச் சிறுகதை குறித்து எழுப்பப்பட்ட எதிர்வினைகள், வாசகப் பார்வையைப் பற்றி சொல்லுங்கள்.
பதில்: போதுமான கவனம் பெற்றிருக்கிறது அல்லது இல்லை என்று சொல்வதற்கு எந்த அளவுகோலும் இங்கு இல்லை. ஆனால் பல நண்பர்கள் கதையைப் பற்றி ஏதோவொரு வகையில் விவாதித்தார்கள். குறிப்பாக பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து கதையில் வரும் பகுதியை சுட்டிக்காட்டி அது உண்மையா என்று பலரும் கேட்டார்கள். கதையை எழுதிக் கொண்டிருக்கும் போதே பகத்சிங் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது Hidden Facts: Martyrdom of Shaheed Bhagat Singh- “Secrets unfurled by an Intelligence Bureau Agent of British-India” என்ற புத்தகத்தைப் பற்றிய அறிமுகக்குறிப்புகள் வாசிக்கக் கிடைத்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜெண்ட்டாக இருந்த தலிப்சிங் அலகாபாதி என்பவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையும் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள ஆவணங்கள் சிலவற்றைத் தரவுகளாகக் கொண்டும் குல்வந்த் சிங் கூனூர் மற்றும் ஜி.எஸ்.சிந்த்ரா ஆகியோர் எழுதிய இப்புத்தகம் 2005 அக்டோபர் 28ல் வெளியாகியுள்ளது. ( தற்போது இப்புத்தகம் மறுபதிப்பு செய்யப் பட்டுள்ளது. Unistar Books Pvt. Ltd, S.C.O. 26-27, Sector 34 A, Chandigarh – 160022, ph: 0172 5077427, 5077428)
‘‘பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரையும் தூக்கிலிடும் நடவடிக்கைக்கு ஆபரேசன் ட்ரோஜன் ஹார்ஸ் என்ற சங்கேதப் பெயரிடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மக்களிடமிருந்த பெரும் கொந்தளிப்பின் காரணமாக, காலை எட்டு
மணியளவில் தூக்கிலிடும் வழக்கத்திற்கு மாறாக 1931 மார்ச் 23 மாலை 7.15 மணிக்குதான் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்ட மூவரும் உயிர் பிரியும் முன்பே கழுத்தெலும்பு முறிக்கப்பட்ட நிலையில் கீழிறக்கப்பட்டு மரக்கட்டைகள் நிரம்பிய ஒருலாரியில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் ஒரு பிணமும் லாரிக்குள் ஏற்றப்பட்டது. அது அவர்களைத் தூக்கிலிட்ட தொழிலாளியினுடையது. தூக்கிலிடும் வேலையை முடித்ததற்கு சன்மானமாக அவரை பிரிட்டிஷார் கைது செய்த மிகக்கொடூரமான முறையில் கொன்றுவிட்டிருந்தார்கள். பிறகு லாரி லாகூர் கண்டோன்மென்ட்டுக்கு சென்றிருக்கிறது. அப்போதைய பஞ்சாப் கவர்னரின் தனிஉதவியாளராக இருந்த சாண்டர்சின் மாமனாரின் ஏற்பாட்டில் அங்கு காத்திருந்த சாண்டர்ஸ் குடும்பத்தார் மூவரையும் ஆத்திரத்துடன் சுட்டு பழிதீர்த்துக் கொண்டனர்… தூக்கிலிடப் பட்டவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியக்கூடாது என்பதனால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறொரு இடத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டன… ’’.
‘‘சாண்டர்ஸ் கொலை வழக்கு குறித்து தனது நினைவுக்குறிப்பில் எழுதிப்போகும் பஞ்சாப் குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் வி.என்.ஸ்மித் ‘‘மாலை 7 மணியளவில் சிறைக்குள்ளிருந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் கேட்கத் தொடங்கியதை வைத்தே உள்ளுக்குள் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து விட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நினைவுக்குறிப்பு பிரிட்டிஷ் நூலகத்தில் நுண்படச்சுருளாக இன்றும் இருக்கிறதென்கின்றனர் நூலாசிரியர்கள். இந்நூல் வெளியானதையடுத்து பகத்சிங்கின் சகோதரி பிரகாஷ் கவுர் தனது சகோதரர் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியிருந்தார்.
-இப்படியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்று விளக்க வேண்டியிருந்தது. ஓரிருவராவது அந்தப் புத்தகத்தை தேடிவாங்கிப் படித்திருக்கக்கூடும். இன்னும் சில நண்பர்கள் ‘‘கோபப்படும்போது அழகாய் தெரியவேண்டும் என்று அலங்காரம் பண்ணக் கிளம்பிகிறவனால் ஒருபோதும் கோபப்படவே முடியாது’’ என்ற பெட்டிச்செய்தியைக் காட்டி ‘‘இது எங்கள் தலைவரைக் கிண்டலடித்து எழுதியதுதானே?’’ என்று கோபப்பட்டார்கள். உங்கள் கண்ணுக்கு அப்படித் தெரிந்தால் நானென்ன செய்ய என்று நழுவிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படி அலங்காரம் பண்ணிக்கொண்டிருப்பதிலேயே காலத்தையும் காசையும் வீணடிக்கிற தலைவர்கள் சிலர் எந்த இயக்கத்தில்தான் இல்லை என்று கேட்பதில் தவறொன்றும் இருப்பதாக நான் கருதவில்லை. போராளிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிற சிலர் விதவிதமான தோரணைகளில் தோன்றும் மெகாசைஸ் விளம்பரத்தட்டிகளைப் பார்த்து மனம் வெதும்பியே அவ்வாறு எழுதியிருந்தேன்.
தொண்டர்கள் கையில் இருக்கும் அற்பசொற்பத் தொகைகளையும் இப்படி தனது விளம்பரத்துக்காக செலவழிக்க வைக்கும் ஊதாரித்தலைவர்களை வேறு எப்படிதான் விமர்சிப்பது? சுவர் கண்ட இடமெல்லாம் இந்தத் தலைவர்களின் பெயரை ஆளுயரத்திற்கு எழுதிக்குவிக்கும் தொண்டர்கள் எத்தனை நாளைக்கு தங்களது சம்பாத்தியத்தை இதற்காக இழக்க முடியும்? எனவே அவர்கள் வேறுவழியின்றி நெறியற்றவகைகளில் இயக்கங்களின் பெயரைச் சொல்லி பணமீட்டும் நிலைக்குத் தாழ்கிறார்கள். அரசியலில் ஒருவரது இருப்பு ஆடம்பரத்தின் வழியாகத்தான் நிறுவப்பட முடியும் என்று ஒரு இயக்கம் நினைத்துவிடுமானால் அதற்குப்பிறகு அது தன் தொண்டர்களிடம் எப்படி தொண்டுள்ளத்தை எதிர்பார்க்க முடியும்? தலைவர்களின் இந்தச் சீரழிவு மனநோய்க்கு ஒத்துப்போகிறவர்களும் செலவழிக்கக்கூடியவர்களுமே பதவிக்கும் பொறுப்புக்கும் உயர்த்தப்படுவார்கள் என்றாகி விட்டால் பொதுவாழ்க்கை, அரசியல்பணி என்பதெல்லாம் மக்களுக்கானதல்ல என்றாகிவிடாதா? எனவே, போராளி தோற்றத்தில் இப்படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு உபயோகமாக வேறு எதுவும் செய்யலாமே என்று அந்தத் தலைவர்களைப் பார்த்து கேட்காமல் ஏன் எழுதினாய் என்று என்னைப் பார்த்து கோவித்துக் கொள்ள எந்தத் தார்மீகமும் கிடையாது என்று பொறுமையாக சொல்லத்தான் வேண்டியிருந்தது.
குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொரு விசயம், கதையில் வரக்கூடிய மெஹருன்னிசாவின் வயது குறித்த ஒரு காலக்குழப்பத்துடனேயே பிரசுரமாகிவிட்டது. கதையோட்டத்தில் நான் அதை கவனிக்கவேயில்லை. இதுவரை படித்த வேறுபலரும்கூட அதை கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. எழுத்தாளர் பிரியாதம்பி தான் நுணுக்கமாக வாசித்து அந்தப் பிழையை சுட்டிக்காட்டினார். சரிசெய்துகொள்வதற்கு உதவியாக இருந்தது. பகத்சிங்கை மையப்படுத்தி நாடகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் அப்பணசாமி சமீபத்தில் இந்தக் கதையைப் படித்துவிட்டு வெகுவாகப் பேசினார். அவருக்கு தோழர் ஜீவசுந்தரி பரிந்துரைத்திருக்கிறார். இதோ இப்போது நீங்கள்…. இப்படியாக இந்தக்கதை ஒருவர்பின் ஒருவராக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தின் பயனும் அதுதானே?
நன்றி: vallinam.com.my
தமிழ் நூல்களை வாசிப்பவர்கள் அதிகரித்து உள்ளனர் பாரதி புத்தகாலயம் க. நாகராஜனுடன் நேர்காணல் – ச. கோபாலகிருஷ்ணன்
தமிழகம் முழுவதும் கிளைபரப்பி நூல்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் ஆழமாக விதைத்திருக்கும் பதிப்பகம், பாரதி புத்தகாலயம். அரசியல், இலக்கியம், கல்வி, அறிவியல், வரலாறு, சூழலியல், பெண்ணியம் எனப் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நூல்களை வெளியிட்டிருக்கிறது. பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளரும் பபாசி அமைப்பின் முன்னாள் துணைத் தலைவருமான க.நாகராஜன் தமிழ் வாசிப்பு, பதிப்புச் சூழல் குறித்த தன் கருத்துகளை நம்முடன் பகிந்துகொள்கிறார்…
ஒரு பதிப்பாளராக கரோனா பெருந்தொற்றின் தாக்கங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?
பெருந்தொற்றானது பதிப்பகங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் பதிப்புலகத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. குறைந்தபட்சம் நூலக ஆணைகளுக்கான பழைய நிலுவைத்தொகையைகூடச் செலுத்தவில்லை. 2019-ல் வாங்கிய நூல்களுக்கான தொகைகூட நிலுவையில் உள்ளது. அதே நேரம், இந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகமாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் நூல்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. தமிழ் நூல்களின் தரமும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருக்கிறது. கேரளம், கர்நாடகம், வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழ்நாட்டிலும் நூல்கள் அதிக அளவில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பின்புலம் கொண்ட பதிப்பகங்கள் பொது வாசகர்களை ஈர்ப்பதற்கு என்னென முயற்சிகளை மேற்கொள்கின்றன?
2,000 தலைப்புகளில் குழந்தைகளுக்கான நூல்கள், 300 தலைப்புகளில் அறிவியல் நூல்கள், 60-70 தலைப்புகளில் கல்வி, மாற்றுக் கல்வி குறித்த நூல்களை வெளியிட்டுள்ளோம். வரலாறு, பொருளாதார நூல்களையும் வெளியிட்டுள்ளோம். இவற்றை எந்த அரசியல் கட்சி, அமைப்போடும் தொடர்புபடுத்த முடியாது. அரசியல் என்னும் விரிவான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால், அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. ஒரு நாவல், சிறுகதையில்கூட அரசியல் உண்டு.
பாரதிபுத்தகாலயத்தின் சிறு வெளியீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன?
வெகுஜன இதழ்களை மட்டும் படித்துக்கொண்டிருந்தவர்களை சிறு வெளியீடுகள் புத்தக வாசிப்பு நோக்கி நகர்த்தியுள்ளன. அப்படி வருகிறவர்கள் தீவிரமான விஷயங்களைப் படிக்கத் தொடங்குகிறார்கள். தீவிரமான விஷயங்களைக் குறித்த சிறிய காத்திரமான நூல்களைப் படிப்பவர்கள், அவை குறித்த மேலும் அதிகமான நூல்களைத் தேடுகிறார்கள். அந்த வகையில் சிறுவெளியீடுகள் ஒட்டுமொத்த வாசகர் பரப்பைப் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இன்று நிறைய பதிப்பகங்கள் சிறு நூல்களைவெளியிடத் தொடங்கிவிட்டன. சிறு வெளியீடுகளைத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் அனைவருக்கும் பரிசாகக் கொடுக்கிறார்கள்.
நல்ல புத்தகங்களைக் கொண்டுவரும் பல பதிப்பகங்கள் சந்தைப்படுத்தலில் தோல்வியடைந்துவிடுகின்றன. இந்த விஷயத்தில் பாரதி புத்தகாலயத்தின் வெற்றி எப்படிச் சாத்தியமானது?
பாரதி புத்தகாலயத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 24 கிளைகள் உள்ளன. கிளைகள் மட்டுமல்ல… வாசகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான முகவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரூ.5,000 செலுத்தினால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை விற்பதற்குக் கொடுத்துவிடுவோம். ஒவ்வொரு புத்தகத்துக்கும் விளம்பரத்துக்கு அதிகத் தொகையைச் செலவிடுகிறோம். புத்தகங்களுக்காகவே ‘புத்தகம் பேசுது’ என்னும் இதழை நடத்துகிறோம். அது 5,000 சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது. இது தவிர, புத்தக விமர்சனங்களுக்கென்று ‘புக் டே’ இணையதளம், ‘பாரதி டிவி’ என்னும் யூடியூப் சேனல் போன்றவற்றை நடத்திவருகிறோம். இவற்றின் மூலமாகத்தான் எங்களுக்கு ரூ.10, ரூ.20-க்குச் சிறு நூல்களை வெளியிடுவதற்கான பொருளாதார பலம் கிடைக்கிறது.
இணையம்வழியாகப் புத்தக விற்பனை, கிண்டில், கைபேசி போன்றவற்றில் படிக்கும் வசதிகள் ஆகியவற்றுக்கிடையே சென்னை புத்தகச் சந்தை போன்ற பிரம்மாண்ட புத்தகத் திருவிழாக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
புதிதாக வரும் வாசகர்களில் சிறு பகுதியினர் மட்டுமே இணையம்வழியாகப் புத்தகம் வாங்கவும், கிண்டில் உள்ளிட்டவற்றை நாடவும் செய்கிறார்கள். 85% புத்தகங்கள்நேரில்தான் வாங்கப்படுகின்றன. அச்சு நூல்களின் எண்ணிக்கையை மின்னூல்களால் குறைத்துவிட முடியாது. எனவே, சென்னை புத்தகக்காட்சியின் பிரம்மாண்டம் அதிகரிக்குமேதவிர குறையாது. அரசும் ஊடகங்களும் போதுமான ஆதரவு அளித்தால் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துப் புத்தகக்காட்சிகளும் பதிப்பாளர்களுக்கு லாபகரமாக அமையும். இந்தப் புத்தகக்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: [email protected]
நன்றி: இந்து தமிழ் நாளிதழ்
24.02.2022
கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை – ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் | தமிழில்: தா. சந்திரகுரு
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரசிகர்களால் இழிவுபடுத்தப்பட்டேன் என்று கூறிய டேனியல் மெட்வெடேவ், எதிர்காலத்தில் தனக்காகவும், தனது நண்பர்கள், குடும்பத்தினர், நாட்டிற்காக மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்தார். ‘எனக்கு ஆதரவாக இருக்கின்ற கூட்டத்தின் முன்பாக ரஷ்யாவில் விளையாடுவதற்காக பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் விளையாடுவதைக்கூட நான் கைவிடுவேன்’ என்றும் அப்போது அவர் கூறினார்.
மெட்வெடேவ்-ரஃபேல் நடால் இடையிலே நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மெட்வெடேவ் 2-0 என்று இரண்டு செட்கள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். ஆனால் நடாலுக்கு ஆதரவாக இருந்த ராட் லாவர் அரினா கூட்டத்தின் முன்பு இறுதியில் அவர் தோல்வியையே சந்தித்தார். 2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி முழுவதுமே பல சந்தர்ப்பங்களில் மெட்வெடேவ் கூட்டத்துடன் மோதியிருந்தார். விளையாட்டரங்கில் கூடியிருந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இறுதிப் போட்டி முழுவதும் மெட்வெடேவின் தவறுகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர், பல கட்டங்களில் தன்னை அவர்கள் உற்சாகமிழக்க வைத்தனர் என்று அவர் குறை கூறினார்.
உலக அளவில் இரண்டாவது தரவரிசையில் உள்ள மெட்வெடேவ் வெற்றிக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் போது கூட்டத்தை மறைமுகமாகத் தாக்கினார். அதற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பை டென்னிஸ் நட்சத்திரம் என்ற தன்னுடைய பயணத்தைப் பற்றிய நீண்ட கதையுடன் மெட்வெடேவ் தொடங்கினார். தனக்கு எதிராக இருந்த ஆஸ்திரேலிய ஓபன் கூட்டத்திடமிருந்து கிடைத்த அனுபவத்திற்குப் பிறகு சிறுவயதிலிருந்தே தன்னிடமிருந்து வருகின்ற டென்னிஸ் கனவின் ஒரு பகுதி மரணித்து விட்டதாக இருபத்தைந்து வயதாகும் மெட்வெடேவ் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் நடந்த உரையாடல்
நெறியாளர்: இன்றிரவு நேரம் குறைவாகவே இருக்கிறது… மிகவும் தாமதமாகி விட்டது. துரதிர்ஷ்டம் டேனியல். இந்த தோல்வியைப் பகுப்பாய்வு செய்து பார்ப்பது கடினம் என்றே நினைக்கிறேன். போட்டியின் போது எல்லாவற்றையுமே நீங்கள் வித்தியாசமாகச் செய்து பார்த்தீர்களா? அதுகுறித்து உங்கள் பயிற்சியாளருடன் விவாதித்தீர்களா?
டேனியல் மெட்வெடேவ்: உண்மையில் வித்தியாசமாக கொஞ்சம் செய்து பார்த்தேன். புது வகை செய்தியாளர் சந்திப்பாக இது இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முக்கியமானவற்றை மட்டுமே கொண்டு இதை நான் தொடங்கப் போகிறேன். அது சுருக்கமாக இருக்குமா அல்லது மிகவும் நீண்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது. சுருக்கமாகச் சொல்ல முயற்சி செய்கிறேன். டென்னிஸில் பெரிய விஷயங்களைப் பற்றி கனவு கண்ட சிறு குழந்தையின் கதையை…
ஆறு வயதில் டென்னிஸ் ராக்கெட்டைக் கையில் எடுத்தேன். நேரம் வேகமாகச் சென்றது. பன்னிரண்டு வயதாக இருந்தபோது பயிற்சிகளை மேற்கொண்டேன். சில ரஷ்ய போட்டிகளில் விளையாடினேன். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை, பெரிய நட்சத்திரங்கள் விளையாடியதை, ரசிகர்கள் அந்த நட்சத்திரங்களுக்கு ஆதரவளித்ததை டிவியில் பார்த்த நான் அங்கே நானும் இருக்க வேண்டும் என்று கனவு காணத் துவங்கினேன்.
பின்னர் சில ஐரோப்பிய டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். யூத் ஒலிம்பிக் விளையாட்டுகளை விளையாடியது என்னுடைய நினைவில் உள்ளது. அது யூத் ஒலிம்பிக் விழா அல்லது வேறு ஏதோ பெயரில் இருந்தது என்று நினைக்கிறேன். அங்கே இறுதிப் போட்டிக்கு வந்தேன். அது அருமையாக இருந்தது. எங்களுக்கு நடு கோர்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. அது துருக்கியில் நடந்தது. அங்கே ஓராயிரம் பேர் இருந்திருக்கலாம். இரண்டாயிரம் பேர் என்றும் கூறலாம். அங்கே இருப்பது மிகவும் அருமையாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. அது தான் அடைய வேண்டும் என்று ஒருவர் கனவு காணும் தருணம்… ஆம், மிகப் பெரிய உயரத்தை அடைவது…
ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடுவதுதான் ஒவ்வொரு ஜூனியருக்கும் பெருமை. அங்கேதான் தங்களிடம் சாதகமாக உள்ளவற்றைப் பார்க்க முடியும். யுஎஸ் ஓபனில் கலந்து கொள்பவர்களுடன் உணவகத்தில் சாப்பிடலாம். அது போன்ற சிறிய விஷயங்கள் கிடைக்கும். யார் என்று உங்களைத் தெரிந்திருக்காவிட்டாலும் கூட, உங்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஆட்கள் வருவார்கள். ஜூனியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இருப்பார்கள். உண்மையில் அது அருமையான தருணம்… எவரும் விரும்பும் தருணம் அது… உலகின் மிகச் சிறந்த நபர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைத் தருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன்.
யுஎஸ் ஓபனுக்குச் சென்றிருந்த போது, ஜான் இஸ்னர் என்னைக் கடந்து செல்வதைப் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. ஓ… அவர் மிகவும் ஆஜானுபாகான ஆளாக இருந்தார்… டிவியில் பார்ப்பதைக் காட்டிலும் பெரிய ஆளாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அது உண்மையிலேயே இனிமையான தருணம்.
மிகப் பெரிய போட்டிகளில் விளையாடத் தொடங்கும் போது எதிர்காலத்தில் விளையாடப் போகிறவர்கள், உங்களுக்குச் சவாலாக இருப்பவர்கள் என்று ஏராளமானோர் உங்கள் வழியில் வர முயற்சி செய்வார்கள். எனது வாழ்க்கையில் அதுபோன்ற பெரிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து கனவு காண வேண்டுமா, வேண்டாமா என்று இந்தக் குழந்தை சந்தேகப்பட்ட சில தருணங்களும் உள்ளன.
எனக்கு ஒன்று நன்றாக நினைவிலிருக்கிறது. ரோலண்ட் கரோஸில் இரண்டு முறை மிகவும் கடினமான போட்டிகளில் தோற்றுப் போனேன். நான் பிரெஞ்சு பேசுவேன். அந்த தோல்வி என்னுடைய வயதில் மோசமானதல்ல என்று முதல் ஐவரில் நான் இருக்கின்ற இந்த தருணத்தில் உணர்கிறேன். நம்மிடம் மிகப் பெரிய தலைமுறை உள்ளது. ஏராளமான திறமையுடன் உள்ள டாப்-10 வீரர்களை உங்களால் இப்போது காண முடியும்.
இப்போது முதல் நூறு பேரில் ஒருவராக இருக்கின்ற பெஞ்சமின் போன்சியிடம் நான் தோற்றது எனக்கு நினைவிலிருக்கிறது. என்னைத் தவறாக நினைக்கவில்லை என்றால், அந்த அறையில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். உண்மையில் நான் அதுபோன்று எப்படி இருந்தேன்? அது ஒரு கிராண்ட்ஸ்லாம். அப்போது நான் முதல் ஐம்பது இடங்களுக்கு அருகில் இருந்தேன் என்று நினைக்கிறேன். உண்மையில் அது ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்யப் பத்திரிகையாளருடன் – நாங்கள் ஐந்து நிமிடங்கள் பேசினோம். பத்திரிகையாளர்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும்.
பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டிடம் ஏற்பட்ட கடினமான தோல்வி நன்றாக நினைவிலிருக்கிறது. நான் 2-0 என முன்னிலை பெற்றிருந்தேன். அது உண்மையிலேயே அற்புதமான போட்டி. அவர் அற்புதமாக விளையாடினார். அதுபோன்ற போட்டிகள் எனக்குப் பிடிக்கும். அதனாலேயே டென்னிஸ் எனக்குப் பிடிக்கும்.
முதல் பத்து இடங்களுக்குள் வருகின்ற இடத்தில் நான் இருந்தேன். என்னுடைய அந்த வயதில் நான் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது அநேகமாக ஸ்வெரெவ்வாக இருக்கலாம். ஒருவேளை முதல் இருவராக இருக்கலாம் – நிச்சயமாக டொமினிக். ஆனால் அவர் கொஞ்சம் வயதானவர்.
அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்தேன். நான் கொஞ்சம் – ஆமாம், ரசிகர்கள் மற்றும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விரக்தியடைந்திருந்தேன். அந்தச் சந்திப்பைச் சுருக்கமாக வைத்துக் கொள்ள விரும்பியதால் அது வேடிக்கையாக இருந்தது. இரண்டு வார்த்தைகளில் அல்லது அதுபோன்று ஏதாவது பதில் சொல்லவே விரும்பினேன். பத்திரிகையாளர் ஒருவர் அங்கே இருந்தார். அவர் இத்தாலியன் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் ஏதோ கேட்டார். இரண்டு வார்த்தைகளில் நான் அவருக்குப் பதிலளித்தேன். அதற்குப் பிறகு கேள்விகள் எதுவும் எழவில்லை. சில ரஷ்யர்கள் அங்கே இருந்தார்கள். அவர்கள் என்னிடம் சில விஷயங்களை கேட்டார்கள். பெரும் கனவுகளைத் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கொண்டதாகவே அப்போது அந்தக் குழந்தை இருந்தது.
அது ஏன் என்பதை நான் விளக்கப் போவதில்லை. ஆனால் இன்று போட்டியின் போது நான் டென்னிஸ் விளையாடப் போகிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அது வேடிக்கையாக இருந்தது. பத்திரிகையாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். உங்களுடன் பேசுவதை நான் மிகவும் விரும்புகிறேன். நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது அது முக்கியமானதல்ல. அந்தக் குழந்தை கனவு காண்பதை நிறுத்திய சில தருணங்களைப் பற்றியே நான் இப்போது பேசுகிறேன். இன்றும் அதுபோன்றதொரு தருணமாகி இருக்கிறது. அது ஏன் என்று நான் இங்கே சொல்லப் போவதில்லை.
இனிமேல் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், என் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்காகவும் – நிச்சயமாக அனைத்து ரஷ்யர்களுக்காகவும் நான் விளையாடப் போகிறேன். என்னை அவர்கள் நிறைய ஆதரிப்பதாக நான் உணர்கின்றேன்.
அதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ரோலண்ட் கரோஸ் அல்லது விம்பிள்டனுக்கு முன்பாக – விம்பிள்டன் அல்லது ரோலண்ட் கரோஸ் அல்லது வேறு எங்கு செல்வதைத் தவறவிட்டாலும் மாஸ்கோவில் ஹார்ட் கோர்ட்டுகளில் போட்டிகள் நடந்தால் நிச்சயம் நான் அங்கே சென்று விளையாடுவேன். கனவு காண்பதை அந்தக் குழந்தை இப்போது நிறுத்திக் கொண்டது. இனிமேல் அது தனக்காக விளையாடப் போகிறது. அவ்வளவுதான். இதுதான் என்னுடைய கதை. கேட்டதற்கு மிகவும் நன்றி நண்பர்களே.
இப்போது நாம் டென்னிஸ் அல்லது வேறு எதையும் குறித்த கேள்விகளுக்குச் செல்லலாம்.
அறையில் கேள்விகள் ஏதேனும் எழுந்தனவா?
அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை (சிரிக்கிறார்).
டேனியல், உங்களுடைய சாதனைக்கு வாழ்த்துகள்.
மிக்க நன்றி கிரேக்.
இப்போது உங்கள் உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றன? வெளிப்படையாக நீங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். ஓரிரு நாட்களுக்குப் பிறகும் இப்போது நடந்திருப்பதையே நீங்கள் தொடரப் போகிறீர்களா?
டென்னிஸ் பற்றி பேசினால் அந்த அளவிற்கு நான் ஏமாற்றமடையவில்லை. இது மிகப் பெரிய போட்டி. வெற்றி பெற வேண்டுமென்றால் நிச்சயமாக சில சிறிய பாயிண்டுகளில், சிறிய விவரங்களில் நான் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் டென்னிஸ். அதுதான் வாழ்க்கை.
இது மிகப் பெரிய போட்டியாக இருந்தது. ரஃபா நம்ப முடியாத வகையிலே விளையாடினார். அவர் தனது நிலையை உயர்த்திக் கொண்டார். இரண்டு செட்களில் 2-0 என்று முன்னணியில் இருந்த போது ‘கமான் அவருடன் போராடு, இன்னும் அதிகமாகப் போராடு’ என்ற உணர்வுடனே நான் இருந்தேன்.
ஐந்தாவது செட்டில் அவரைக் கடுமையாக முயற்சி செய்ய வைத்ததாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் நம்ப முடியாத வகையில் விளையாடினார். மிகவும் வலுவுடன் இருந்தார். நான்கு மணி நேரம் அவர் விளையாடிய விதம் குறித்து அப்போது உண்மையில் நான் ஆச்சரியப்பட்டேன். ஆனாலும் ரஃபா எப்படி விளையாடுவார் என்பது நமக்குத் தெரியும். ஆறு மாதங்களாக அவர் விளையாடவே இல்லை. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம், தான் அதிகம் பயிற்சி செய்யவில்லை என்று சொன்னார். அது நம்ப முடியாதவாறே இருந்தது.
டென்னிஸ் பற்றி பேசுகின்ற போது, என்னிடம் அதிகம் வருத்தமில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகத் தொடர முயற்சி செய்வேன். ஆமாம், இன்னும் கடினமாக நான் உழைக்கப் போகிறேன். ஒரு நாள் இந்த சிறந்த போட்டிகள் சிலவற்றில் சாம்பியனாக இருக்க முயற்சிப்பேன்.
உண்மையில் இன்று இந்த தோல்வி, என்னுடைய டென்னிஸ் அல்லது அது போன்ற எது குறித்தும் நான் ஏமாற்றமடைந்தவனாக இல்லை.
இதுதான் அந்தக் கூட்டத்திடமிருந்து உங்களுக்கு கிடைத்ததா?
அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை, மன்னிக்கவும் (சிரிக்கிறார்).
நீங்கள் கோர்ட்டிற்கு வருகிறீர்கள் – மக்கள் கூச்சலிடுவதைக் கேட்கிறீர்கள்.
நான் மிகச் சிறிய எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். ஐந்தாவது செட்டில் கூட ரஃபா சர்வீஸ் செய்வதற்கு முன்பாக யாரோ ஒருவர் கமான் டேனியல் என்று கத்தியதைக் கேட்ட நான் ஆச்சரியப்பட்டேன். ஆயிரம் பேர் ட்ஸ்ஸ்ஸ், ட்ஸ்ஸ்ஸ், ட்ஸ்ஸ்ஸ் என்று ஒலியெழுப்பினார்கள். எனது செர்விற்கு முன்பாக அதுபோன்ற சப்தத்தை அவர்கள் எழுப்பினார்கள். நான் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உண்மையில் அது ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. அது அவமரியாதை செய்வதாக, ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் விளையாட விரும்புவேனா என்று எனக்குத் தெரியவில்லை.
(மைக்ரோஃபோன் வேலை செய்யவில்லை)
ஆம்… அது என்னைச் சுற்றியுள்ளவர்கள், அவர்கள் என்னிடம் என்ன சொல்லப் போகிறார்கள், இந்த பயணத்தில் எப்படி ஒன்றாகச் செல்லப் போகிறோம் என்பதைப் பொறுத்தது.
கனவு கண்ட அந்தக் குழந்தை இன்றைக்குப் பிறகு எனக்குள் இல்லை என்பதை மீண்டும் சொல்கிறேன். இவ்வாறாக இருக்கின்ற போது டென்னிஸைத் தொடர்வது மிகவும் கடினமாகவே இருக்கும்.
மூன்றாவது செட்டில் டிரிபிள் பிரேக் பாயிண்ட்டைப் பெற்றிருந்த போதும், ஒப்பீட்டளவில் இந்தப் போட்டியில் மிகவும் எளிதாக வெற்றியை நீங்கள் நெருங்கி விட்டதாகத் தோன்றிய போது உங்கள் ஆட்டத்தில் அல்லது உங்கள் எண்ணத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டது?
ஆம், டிரிபிள் பிரேக் பாயிண்ட் பெற்றது அருமையான தருணமாகவே இருந்தது. உண்மையில் அவையனைத்தும் எனக்கு விவரமாக நினைவில் இல்லை. நான் செய்த அந்த மூன்று ரிட்டர்ன்களும் எனக்கு நினைவிலிருக்கின்றன. அவை கொஞ்சம் நெருக்கமாகவே இருந்தன. ஆனால் மீண்டும் சொல்வேன் – அதுதான் டென்னிஸ்… நான் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் ஒருவேளை போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கலாம்.
உத்தியாக எதையும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் சரியாக விளையாடுவதாகவே உணர்ந்தேன். ஆனால் ரஃபா முன்னேறினார். உடல்ரீதியாக கொஞ்சம் மேலும், கீழுமாக இருந்தேன் என்றாலும் இன்று அவர் உடல்ரீதியாக என்னை விட வலிமையுடன் இருந்தார். மூன்றாவது செட் ஆரம்பத்திலிருந்தே அவரது சில ஷாட்கள் மற்றும் பாயிண்டுகள் நான் கொஞ்சம் பின்வாங்கிக் கொள்ளும் வகையிலேயே இருந்தன அதை. அப்படித்தான் சொல்ல வேண்டும். ரஃபா அந்த தருணங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
ஆனாலும்… ஆம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
உங்களின் இந்த போட்டிக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி.
இன்றிரவு நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? நீங்கள் சொன்ன கதை இன்றிரவுக்கு முன்பாகவே நீங்கள் உணர்ந்திருந்ததா அல்லது இன்றிரவைப் பற்றியதாக மட்டுமே அது உள்ளதா?
நான் சொன்னதைப் போல, என் கேரியரில் சில தருணங்களுக்கேற்றவாறு என்னை மாற்றியமைக்க முடிந்திருக்கிறது. என்னுடைய கதையில் அந்தக் குழந்தையைப் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.
டாப் 20, டாப் 30 என்று கொஞ்சம் கொஞ்சமாக நான் உயர ஆரம்பித்த போதுரோஜர், நோவக், ரஃபா ஆகியோருக்கு எதிராக விளையாட ஆரம்பித்தேன். எங்களுக்கிடையே சில கடினமான போட்டிகள் நடந்தன. நான் இன்னும் அவர்களை வெல்லவில்லை. அப்போதும் ஏராளமான பேச்சுகள் இருந்தன. இப்போது இருப்பதைப் போல அவ்வளவாக அப்போது இருந்ததாக நான் நினைக்கவில்லை என்றாலும் நிறைய பேச்சுகள் இருக்கவே செய்தன. ஆனால் இளைய தலைமுறை சிறப்பாகச் செய்ய வேண்டும், இளைஞர்கள் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், சிறப்பாக இருக்க வேண்டும், வலிமையுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதைப் போன்றதாகவே அந்தப் பேச்சுகள் இருந்தது நினைவில் உள்ளது. அது எனக்கு உந்துதலை அளித்த மாதிரி உணர்ந்தேன். ஆமாம், அவர்களுக்கு கடினமான நேரத்தைக் கொடுக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் என்னிடமிருந்தது.
ஆனால் மக்கள் பொய் சொல்கிறார்கள் என்றே நினைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் பெரிய போட்டிகளில் ஒவ்வொரு முறை நான் கோர்ட்டில் அடியெடுத்து வைக்கும் போது, நான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றவர்களை அதிகமாக என்னால் பார்க்க முடியவில்லை.
இது இன்றிரவால் மட்டும் நடந்ததல்ல; படிப்படியாக உருவானது என்று சொல்லலாமா?
ஆம். இது படிப்படியாக வந்ததுதான். ஆனால் இன்றிரவு (தெளிவாக இல்லை), அல்லது அதை எப்படிச் சொல்வது… மலையின் உச்சியை அடைந்ததைப் போன்றுள்ளது.
இது உங்களுடைய தேசம் குறித்ததா அல்லது நீங்கள் இளையவர், அவ்வளவாக நன்கு அறியப்படாதவர் என்பதாலா?
நான் எந்த தேசம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது என்றே நினைக்கிறேன். ரஷ்ய டென்னிஸ் சிறிது காலம் வீழ்ந்திருந்தது. நான் ஏராளமாக முயற்சி செய்து வருவதாகவே நினைக்கிறேன். ரஷ்யாவில் இப்போது டென்னிஸ் பற்றி நிறைய பேச்சுகள் இருப்பதை உணர்கிறேன். என்னுடன் ஆண்ட்ரி, கரேன், அஸ்லான் போன்றவர்களும் நன்றாக விளையாடி வருகிறார்கள். அருமை. எங்களுக்காக இன்னும் பலரை விளையாட வைக்க முயற்சி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
மற்ற நாட்டில் யாருடனாவது விளையாடும் போது, அவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். ரஷ்யன் அல்லது அதுபோன்ற ஏதாவது ஒன்றிற்காக அல்ல என்றே என்னால் நிச்சயமாகப் பார்க்க முடிகிறது.
அன்று நோவக் என்ன செய்வார் என்று நீங்களே கேட்டுக் கொண்டீர்கள். இன்று இரண்டு செட் பின்னால் இருந்த ரஃபா திரும்பி வந்ததைப் பார்க்கும் போது, அந்த நிமிடத்திலிருந்து அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்புவீர்களா?
ரஃபா இடதுகை ஆட்டக்காரர். அடுத்த முறை நான் 2-0 என்று இரண்டு செட் பின் தங்கியிருக்கும் போது ‘உனக்கு எதிராக ரஃபா விளையாடியதைப் போல் விளையாடு’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.
இன்று அவர் விளையாடிய விதம், அதை நான் அவர் போராடினார் என்று சொல்ல விரும்பவில்லை. ரஃபா எப்போதும் போராடுவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். திடீரென்று ரஃபா இன்று ஒரு ஸ்லாமின் இறுதிப் போட்டியில் போராடினார் என்று அதைச் சொன்னால் யாரும் ஆச்சரியப்படப் போவதில்லை.
அனைத்து செட்களிலும், கடினமான தருணங்களில் கூட அவர் விளையாடிய விதம் அவரைப் பொறுத்தவரை வரலாற்றை உருவாக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது. அதைப் பற்றி சிந்திக்காமலே இருக்க அவர் முயற்சி செய்திருக்கிறார் என்றாலும் அது அவரது தலையில் எங்கோ இருந்து கொண்டே இருந்திருக்க வேண்டும்.
நான் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவனாக இருக்கின்றேன். ஆமாம், முடிந்தவரை முயற்சி செய்து விளையாடிய போது என்னை அவர் வென்றதில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டிருக்கிறேன். நான் உண்மையில் மிகவும் நன்றாகவே முயற்சி செய்தேன்.
நன்றி நண்பர்களே.
https://www.foxsports.com.au/tennis/australian-open-2022-daniil-medvedev-press-conference-loss-to-rafael-nadal-full-transcript-angry-at-crowd-rod-laver-arena/news-story/da08b88411473616f6f118b0258742d4
"Are you tired?"
Never change, @DaniilMedwed 😂#AusOpen • #AO2022 pic.twitter.com/6ys8NqBFs5
— #AusOpen (@AustralianOpen) January 30, 2022
நன்றி: ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு
‘புதிய கல்விக் கொள்கை’ தில்லி பல்கலைக்கழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? நந்திதா நரேன் உடன் நேர்காணல் – சஞ்சுக்தா பாசு | தமிழில்: தா.சந்திரகுரு
ஒன்றிய அமைச்சரவையால் 2020 ஜூலை மாதம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2040ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை முழுமையாக ‘மாற்றம்’ செய்து விட முயல்கின்றது. கல்வியை இணையவழியில் எளிதான, நெகிழ்வான முறையில் அணுகுவதற்கான உதவி, கல்லூரிகளுக்கான தன்னாட்சியையும், கல்விக்கான தனியார் நிதியுதவியையும் உறுதி செய்வது, தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் கற்றலுக்கான முக்கியத்துவத்தை அளிப்பது போன்ற அரசின் லட்சியங்களை காகிதத்தில் மட்டுமே பிரதிபலிப்பதாக அது இருக்கிறது. மேலும் கற்றுக் கொள்ளப் போகின்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை அதிக அளவிலே மாணவர்களிடமே வழங்குவது, திறமையானவர்களாக, பொறுப்பேற்றுக் கொள்ளக் கூடியவர்களாக ஆசிரியர்களை மாற்றுவதுடன் கல்வியை தாராளமயமாக்குகின்ற முயற்சிகளிலும் ஈடுபடப் போவதாக அது கூறுகிறது.
தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (DUTA) தலைவராக இரண்டு முறை இருந்த செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியின் கணிதப் பேராசிரியை நந்திதா நரேன் தேசிய கல்விக் கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று சஞ்சுக்தா பாசு நடத்திய நேர்காணலின் போது தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய அளவிலே பின்னுக்குத் தள்ளப்பட வேண்டிய தேவையிருப்பதாக அப்போது அவர் கூறினார்.
உரையாடலின் பகுதிகள்:
எந்த அளவிற்கு தேசிய கல்விக் கொள்கை – 2020 நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது?
ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கைக்கு பல மாநிலங்கள் ஒப்புதல் அளித்து உத்தரவுகள் அல்லது தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன என்றாலும் அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக பாராளுமன்றத்தில் விவாதங்கள் மேற்கொள்ளப்படவில்லை. கல்வியாளர்களும், எதிர்க்கட்சிகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தே வந்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கை – 2020இல் உள்ள எந்த அம்சங்கள் மிகவும் கவலையளிப்பவையாக இருக்கின்றன?
தேசிய கல்விக் கொள்கை – 2020 கல்வி, நிர்வாகம் என்று இரு முனைகளிலிருந்தும் கல்வியை மறுசீரமைக்கிறது. மேலும் கல்வியை தனியார்மயமாக்கவும் அது முயல்கிறது. கல்வியின் தரத்தைப் பாதிக்கும் வகையிலே இருக்கின்ற இந்த கல்விக் கொள்கை ஆசிரியர்களைத் தேவையற்றவர்களாக ஆக்குகிறது. பல்கலைக்கழகங்களை வெறும் பட்டம் வழங்கும் அமைப்புகளாக தரம் தாழ்த்துகிறது.
கல்வியைப் பொறுத்தவரையில் தில்லி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஏபிசி (அகாடமிக் பேங்க் கிரெடிட்) ஒழுங்குமுறை, ஸ்வயம் விதிமுறைகள், கற்பித்தல் மற்றும் கற்றலில் கலப்பு முறை என்று மூன்று விதிமுறைகளை முன்மொழிந்தது. ஏபிசி ஒழுங்குமுறை ஒரு ‘கிரெடிட் வங்கியை’ உருவாக்குகிறது. அதன் மூலம் தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இந்தியாவில் உள்ள A அல்லது A+ தரம் பெற்ற எந்தவொரு பல்கலைக்கழகத்திடமிருந்தும் ஐம்பது சதவிகித கிரெடிட்களைப் பெற்றுக் கொண்டு பல தடவை வெளியேறி-நுழைகின்ற வகையிலே ஏழு ஆண்டுகளுக்குள் தன்னுடைய படிப்பை முடித்துக் கொள்ள முடியும். பெரும்பாலும் இணையவழியில் இருகின்ற இந்த ஐம்பது சதவிகித கிரெடிட்களுக்கான கற்றல் தரத்தின் மீது தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது.
தொற்றுநோய் காலத்தில் வழங்கப்பட்ட இணையவழிக் கல்வியின் தரம் சொல்லிக் கொள்ளுமாறு இருக்கவில்லை என்பதை நாம் அனைவருமே கவனித்திருக்கிறோம். அவற்றை மாணவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, அவர்கள் பொதுவாக படிப்பின் மீது உரிய கவனத்தைச் செலுத்தாமல் பக்கத்திலேயே வேறு ஏதாவதொரு வேலையைச் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள்.
மிகவும் வசதியாக இருப்பதாக மாணவர்கள் கருதுகின்ற வெளிப்படையாக புத்தகத்தைக் கொண்டு இணையவழியில் நடத்தப்படுகின்ற தேர்வுகளில் பெருமளவிற்கு மற்றவர்களைப் பார்த்து பிரதி எடுத்துக் கொள்வதே மிகவும் சாதாரண நடைமுறையாகி விட்டது. ஆசிரியர்களுக்கும் இணையவழிப் பயன்பாடு மிகவும் வசதியானதாகி விட்டதால் அவர்களும் போதுமான முயற்சிகளை எடுப்பதில்லை. டிஜிட்டல் இடைவெளி, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை குழுக்களின் அணுகல் குறித்து எழுந்துள்ள சிக்கல்களுக்கு தேசிய கல்விக் கொள்கை எந்தவொரு தீர்வையும் கொண்டிருக்கவில்லை.
உலகின் பிற பகுதிகளில் தோல்வியடைந்த மிகப்பெரிய திறந்தவெளி இணையவழி படிப்பு (MOOC) மாடலையே இணையவழி படிப்புகளுக்கான கிரெடிட் கட்டமைப்பான ‘ஆர்வமுள்ள இளம் மனங்களுக்கான தீவிர கற்றல் வலைகள் (ஸ்வயம்)’ தீவிரமாகப் பின்பற்றுகின்றது. பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்ற இந்த மிகப்பெரிய திறந்தவெளி இணையவழி படிப்புகள் ஸ்வயம் எனப்படும் அரசு தளத்திலே பதிவேற்றப்படுகின்றன. ஸ்வயம் தளத்திலிருந்து நாற்பது சதவிகித பாடத்திட்டத்தை மாணவர் ஒருவர் தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஒழுங்குமுறை கூறுகிறது.
ஆக ஐம்பது சதவிகிதப் பாடங்களை மற்ற பல்கலைக்கழகங்களிடமிருந்தும், நாற்பது சதவிகித பாடங்களை ஸ்வயம் தளத்திலிருந்தும் ஒரு மாணவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், தொன்னூறு சதவிகித கற்றல் பணி வகுப்பறை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருந்து மிகவும் திறம்பட நீக்கி வைக்கப்படுகிறது. ‘இனிமேல் எங்களுக்கு ஆசிரியர்களே தேவையில்லை’ என்பதுதான் அதிலிருந்து கிடைக்கின்ற பாடமாக உள்ளது. இன்றளவும் ஐம்பது சதவிகித ஆசிரியர்கள் தற்காலிகப் பணியிடங்களில் இருந்து வருகின்ற நிலையில், இதுபோன்ற முயற்சிகளால் அவர்கள் அனைவரும் படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள். இனிமேல் ஆசிரியர் – மாணவருக்கிடையிலான விகிதம் முக்கியமில்லாமல் போய் விடும்.
மூன்றாவது ஒழுங்குமுறை தில்லி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு பாடமும் நாற்பது சதவிகிதம் வரை முன் தயாரிக்கப்பட்ட, முன் பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் மூலமாகவே வழங்கப்படும் என்றிருக்கிறது. மீதமுள்ள நேரத்தில் வழிகாட்டுதல், தரப்படுத்தல் போன்ற வேலைகளை ஆசிரியர்கள் செய்வார்கள். அதன் மூலம் மாணவர்-ஆசிரியருக்கிடையிலான உரையாடல் என்ற கருத்தே நடைமுறையில் இல்லாமல் போய் விடும்.
இதுபோன்ற மாடல் மற்ற நாடுகளில் எங்காவது இருக்கிறதா?
இல்லை. வழக்கமான பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இணையவழி படிப்புகள் இவ்வளவு அதிகமாக இருக்கின்ற வகையிலான மாடல் உலகில் வேறெங்கும் கேள்விப்படாததாகவே இருக்கிறது. தொற்றுநோய்கள் என்ற போர்வையில் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர்களின் பங்கை நீர்த்துப் போகச் செய்கின்ற, மிகவும் எளிதில் பெற்றுக் கொள்ளக் கூடிய பட்டங்கள் என்ற கேரட்டை மாணவர்கள் முன்பாகத் தொங்கவிட்டு ஆசை காட்டுகின்ற மிகப்பெரிய மாற்றங்களை இந்தக் கல்விக் கொள்கை மூலமாக அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது.
வகுப்பறைகளில் நாம் என்ன சொல்லித் தருகிறோம் என்பதைப் பொறுத்ததாக மட்டுமே கல்வியின் தரம் இருப்பதில்லை. மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகவே அது இருக்கும். பலதரப்பட்ட மாணவர்கள் பல்வேறு பின்னணியில் இருந்து தில்லி பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வருகிறார்கள். அவர்களில் பலர் விளிம்பு நிலைக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது உலகத்தைப் பற்றிய பார்வை மாணவர்களிடம் மாறுகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையோ இந்த மாணவர்களை முற்றிலுமாக எவ்விதத் தொடர்பும் இல்லாமல் தனிமைப்படுத்தி வைக்கிறது. மனித தொடர்புகள், நிறுவனத் திறன்கள், கலை, நாடகம், விவாதங்கள் நிறைந்த கற்றல் வெளியை அது சுருக்குகிறது. மனிதர்களிடையே உள்ள பிணைப்பு, நிறுவனரீதியான உறவுகள், தொடர்ச்சி போன்றவை முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.
பட்டத்தின் தரம் அது அச்சிடப்பட்டுள்ள காகிதத்தின் மதிப்பில்கூட இல்லை என்ற நிலையில் பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டம் வழங்குகின்ற அமைப்பாக மட்டுமே கருதப்படுகின்றன. இளைஞர்களைப் பேச முடியாதவர்களாக்குகின்ற கல்வி நிறுவனங்கள் அரைகுறையாகப் படித்தவர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு, கிக் பொருளாதாரத்திற்குத் தேவையான மலிவான உழைப்பாளிகளாக உருவாக்கித் தருகின்றன.
இனிமேல் ‘இதை நான் ஏன் செய்ய வேண்டும்’, ‘என்னுடைய ஊதியம் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது’ என்று கேள்விகளைக் கேட்கின்ற எண்ணம் இளைஞர்களிடம் தோன்றப் போவதில்லை. சுதந்திரமான விமர்சன சிந்தனைக்கான வெளி முற்றிலுமாக வறண்டு போய் விடும்.
நிர்வாகத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன?
தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைவிக்கப்பட்டுள்ள கல்லூரிகளும் பல்கலைக்கழக மானியக் குழு, அது விதித்துள்ள ஆசியர்களுக்கான பணிநிலைமைகள் குறித்த வழிகாட்டுதல்கள் மூலமாகவே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவிலான உள்கட்டமைப்பு, மாணவர்-ஆசிரியர் விகிதம், படிப்புகளின் தரம், தேர்வுகள் போன்றவற்றை சரியாகப் பராமரித்து வர வேண்டும். நாடு முழுவதற்கும் இந்த ஒழுங்குமுறைகள் ஒரேமாதிரியாக இருப்பதாலேயே அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்களும் ஒரே மாதிரியான பணிநிலைமைகளில் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் இனிமேல் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை வகுக்காது என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. பல்கலைக்கழகங்களுடன் கல்லூரிகளை இணைவிக்கும் அமைப்புமுறை இனிமேல் இருக்காது என்று கூறுகிறது. அனைத்துக் கல்லூரிகளும் இனி ‘முழுமையாக ஆய்வு’, ‘ஆய்வு மற்றும் கற்பித்தல்’ அல்லது ‘முழுமையாக கற்பித்தல்’ போன்ற பணிகளுக்காகன தனித்த நிறுவனங்களாக மாறப் போகின்றன. அதனால் கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இல்லாத வகையில் தனித்து வைக்கப்படுகின்ற நிலைமையே உருவாகும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இனிமேல் நிர்வாக வாரியம் (BoG) என்பது இருக்கும். இதுவரையிலும் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகின்ற நிர்வாகக் குழு, கல்லூரியில் உள்ள ஆட்சிக் குழுவை அது முற்றிலுமாக மாற்றியமைக்கப் போகிறது. தற்போது செயற்குழு உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து சிலர், கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் சிலர் என்று பெரும்பாலும் கல்வியாளர்களாகவே இருந்து வருகின்றனர். இனிமேல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவில் இருப்பவர்கள், அரசு பிரதிநிதிகள், ‘பொதுஎண்ணம் கொண்ட அறிவுஜீவிகள்’ என்று கல்வியாளர்களாக இல்லாதவர்களே மூன்றில் இரண்டு பங்கு செயற்குழு உறுப்பினர்களாக இருக்கப் போகின்றனர்.
கல்வி நிறுவனங்கள் 2030ஆம் ஆண்டிற்குள் சுயநிதி கொண்டு செயல்படுபவையாக மாறி விடும் என்று கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது கல்விக்கான பொது நிதியுதவியை நீண்ட காலத்திற்கு எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அந்தக் கொள்கை இருக்கிறது. ‘பொதுஎண்ணம் கொண்ட அறிவுஜீவிகள்’ என்றால் யார் என்பதை கல்விக் கொள்கை தெளிவாக வரையறுக்கவில்லை. நிச்சயம் அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள், கருத்தியல் ரீதியாக எதிர்க்கின்றவர்களும், வேறுபட்டவர்களும் முழுமையாக ஓரங்கட்டப்படுவார்கள் என்றே நாம் கருதலாம். அந்த உறுப்பினர்களே கல்வி நிறுவனங்களுக்குள் இருக்கின்ற கல்வியாளர்களிடமிருந்து மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினரை செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
நிர்வாக வாரியத்தில் பதினெட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களில் ஆறு பேர் மட்டுமே கல்வியாளர்களாக இருப்பார்கள். அதுவும் அரசு மற்றும் பெருநிறுவன நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பன்னிரண்டு பேரால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற கல்வியாளர்களே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உண்மையில் அரசு மற்றும் கார்ப்பரேட் சித்தாந்தங்களுக்கு இடையிலான திருமண ஒப்பந்தமாகவே அது இருக்கும். இனிமேல் சீனியாரிட்டி அல்லது சுழற்சி முறை என்று எதுவுமே கருத்தில் கொள்ளப்படாது. தேர்தல் குறித்த கேள்வியே எழப் போவதில்லை. பழைய உறுப்பினர்கள் புதியவர்களை நியமிப்பதாக இருப்பதால் ஒரு தன்னிறைவுடனான அமைப்பாக அது இருக்கும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
நிர்வாக வாரியம் எந்த அளவிற்கு அதிகாரம் மிக்கதாக இருக்கும்?
இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருக்கின்ற அனைத்து அதிகாரங்களும் இனிமேல் இந்த நிர்வாக வாரியத்திடமே இருக்கும். கற்பிக்கப்பட வேண்டிய படிப்புகள், பாடநெறி உள்ளடக்கம், கட்டண அமைப்பு, மாணவர்-ஆசிரியர் விகிதம், புதிய பணியிடங்களை உருவாக்குதல், பணியமர்த்தும் கொள்கைகள், ஆசிரியர்களின் பணி நிலைமை, அவர்களுடைய பணி மேம்பாடு போன்றவை அதில் அடங்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக புதிய நிர்வாக வாரியம் யாருக்கும் பதிலளிக்க வேண்டியதாக இருக்காது.
நிறுவனத் தரங்களை பராமரிப்பதற்கு, மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கை எவ்வாறு திட்டமிடுகிறது?
நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தரப்படுத்தப்படும். ஆனாலும் முதன்முறையாக தேவையான உள்ளீடுகளுக்கு அரசாங்கம் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல், உற்பத்தியைக் கொண்டு மட்டுமே மதிப்பிடுவது என்றே அது இருக்கப் போகிறது. பொதுநிதிக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றாலும் சோதனை, கண்காணிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அந்த கல்வி நிறுவனம் தனது தரத்தை இழக்க நேரிடும். ஆனாலும் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் தொலைதூரத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ளதா, மாணவர்களின் நிதிப் பின்னணி என்ன, அவர்களால் ஏன் நன்றாகச் செயல்பட முடியவில்லை என்பது போன்ற காரணிகள் எதுவும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
தேசிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயல்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?
இந்தியாவில் சுமார் ஐம்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்ற தேசிய கல்விக் கொள்கை அந்த எண்ணிக்கை பதினைந்தாயிரமாக குறைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும் அது ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் பல துறைகளுடன் இருக்க வேண்டும், ஐயாயிரத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் கூறுகிறது. அதன்படி பார்க்கும் போது, ஆயிரத்து இருநூறு மாணவர்களைக் கொண்ட செயின்ட் ஸ்டீபன் போன்ற கல்லூரிகள் இனிமேல் நீடித்திருப்பதற்கான சாத்தியம் என்பது காணப்படவில்லை.
தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற சாத்தியமில்லாத கல்வி நிறுவனங்களைக் கையகப்படுத்திக் கொள்வதற்கும், அவற்றையெல்லாம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து வைத்துக் கொள்வதற்கும் இந்தக் கல்விக் கொள்கை அடித்தளம் அமைத்துத் தருகிறது. ஒரு அம்பானி அல்லது அதானி ஐயாயிரத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட மூன்று அல்லது நான்கு கல்லூரிகளை வாங்கி ஒன்றிணைத்து வைத்துக் கொள்வார். ஆய்வுகளில் நன்கு கவனம் செலுத்தி வருகின்ற ஜேஎன்யூ போன்ற பல்கலைக்கழகங்கள் இனிமேல் மருத்துவக் கல்லூரி, வணிகக் கல்லூரி போன்றவற்றையும் உள்ளடக்கியவையாக இருக்கும்!
ஆனால் பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் தனிப்பட்ட சட்டங்களால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் இத்தகைய பெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமா?
தில்லி பல்கலைக்கழகச் சட்டம் அல்லது ஜேஎன்யூ சட்டம் போன்ற தற்போதுள்ள அனைத்து சட்டங்களையும் மீறுகின்ற வகையில் புதிய சட்டத்தை இயற்றுவதே அவர்களுடைய திட்டமாக இருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் தேவையில்லை என்று நினைக்கின்ற மோடி, உலகெங்கிலும் உள்ள மற்ற வலதுசாரி தலைவர்களை விட ஒரு படி மேலே சென்றிருக்கிறார். அறிவார்ந்த காலனித்துவத்தை உருவாக்குகின்ற இதுபோன்ற முயற்சிகள் குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் விழித்தெழ வேண்டும்.
தாராளவாதக் குழுக்கள் ஒன்றுகூடி சுதந்திரமான உயர்கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொள்ள முடியாதா?
அரசு தன்னுடைய கட்டுப்பாட்டை முழுமையாக விட்டுக் கொடுத்து விடவில்லை. கார்ப்பரேட்டுகளுடன் அரசின் பிரதிநிதிகளும் நிர்வாக வாரியத்தில் இருப்பார்கள். லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்கள் அரசின் விதிகளின்படி செயல்படும். அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை மீறுகின்ற எந்தவொரு நிறுவனத்தையும் துன்புறுத்துவதற்கு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும்.
https://www.nationalheraldindia.com/interview/how-is-the-new-education-policy-being-implemented-in-delhi-university
நன்றி: நேஷனல் ஹெரால்டு
தமிழில்: தா.சந்திரகுரு
இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் – கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு
நடிகர் நசீருதீன் ஷாவுடன் கரண் தாப்பர் நடத்திய நேர்காணல் தி வயர் யூடியூப் சேனலில் 2021 டிசம்பர் 28 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாட்டில் இப்போது ஒரு முஸ்லீமாக இருப்பதன் பொருள் பற்றி நடிகர் நசீருதீன் ஷா அந்த முப்பத்தைந்து நிமிட உரையாடலில் விரிவாகப் பேசினார். இந்திய முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்புகள் எந்தவொரு விளைவுகளுமில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலில் முஸ்லீம்கள் உணர்ந்துள்ள காயங்களுக்கு சாளரத்தைத் திறந்து வைப்பதாக அந்த உரையாடல் இருந்தது. அவர்களுடைய உரையாடலின் முழுமையான எழுத்தாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழு நேர்காணலை இங்கே காணலாம்.
கரண் தாப்பர்: ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த தர்ம சன்சத் கூட்டத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வது, இனச் சுத்திகரிப்பு செய்வது என்று ரத்தவெறி கொண்ட குரல் எழுப்பப்பட்டது. ரோஹிங்கியாக்களுக்கு மியான்மரில் என்ன நடந்ததோ அதை இங்கே முஸ்லீலிம்களுக்கு நாம் செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஹிந்துக்களுக்கு கூறப்பட்டது. இந்திய குடிமக்கள் தங்களுடைய சக குடிமக்கள் மீதே இதுபோன்று திரும்புவார்கள் என்று என் வாழ்நாளில் ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதுதான் இப்போது நடந்தேறியிருக்கிறது. எனவே நான் இன்றைக்கு உங்களிடம் ‘நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?’ என்று ஓர் எளிய, வெளிப்படையான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்…
இன்றைக்கு எனது விருந்தினர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். அவரது வாழ்க்கையில் ஒரேயொரு அடையாளம் மட்டுமே அவரிடம் இருந்து வந்திருக்கிறது. மதம் என்பது முக்கியமில்லை என்று தன்னை இந்தியர் என்று அவர் நினைத்தது சரிதான். இருப்பினும் இன்றைக்கு அவரது சொந்த நாட்டு மக்களில் பலரும் அவர் மீது மத அடையாளத்தைத் திணிக்கிறார்கள். இப்போது அனைவராலும் நன்கு அறியப்பட்ட, மிகவும் மதிக்கப்படுகின்ற நடிகர் நசிருதீன் ஷா என்னுடன் இணைகிறார்.
நசீருதீன் ஷா! ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த அந்த தர்ம சன்சத் கூட்டத்தில், இன அழிப்புக்காக முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று ரத்தவெறி கொண்ட அழைப்பு விடுக்கப்பட்டது, மேலும் மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு செய்யப்பட்டதை இங்கே ஹிந்துக்களுக்குச் செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். உங்கள் சொந்த நாட்டு மக்கள், சக குடிமக்கள், உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்யுமாறு அழைப்பு விடுத்தது குறித்து உங்களிடம் என்ன மாதிரியான உணர்வு இருந்தது?
நசிருதீன் ஷா: என்னிடம் ஏற்பட்ட முதல் எதிர்வினை கோபம். இங்கே நடந்து கொண்டிருப்பது முஸ்லீம்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிற கூட்டு முயற்சியாகும். அவுரங்கசீப் மற்றும் முகலாய ஆக்கிரமிப்பாளர்களை துணைக்கழைத்து தலைமையில் இருப்பவர்களிலிருந்து தொடங்கி பலரும் பேசுவதன் மூலம் பிரிவினைவாதமானது ஆளும் கட்சியின் கொள்கையாக மாறி விட்டதாகவே தோன்றுகிறது.
அவர்களுக்கு (வலதுசாரி ஆர்வலர்கள்) என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதற்கு நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதில் எனக்கு எந்தவொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில் இங்கே விவசாயிகளை மோதிக் கொன்ற அமைச்சருக்கு எதுவும் நடக்கவில்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை, அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அமைச்சர் பதவியை விட்டு விலகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படவில்லை. அந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் அதிக விவரங்களுக்குள் செல்லவில்லை. ஆனாலும் இப்போது இங்கே எங்களை (சிறுபான்மை சமூகத்தினர்) பயமுறுத்துவதற்கான முயற்சி நிச்சயமாக இருக்கிறது. ஆனாலும் ‘நாம் பயந்து விடக் கூடாது’ என்பதை ஒரு பலகையில் எழுதி நான் எப்போதும் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்.
வேடிக்கையாகச் சொல்வதென்றால் பயப்படுவது என்பது – ‘நீங்கள் இந்தியாவில் இருக்கப் பயப்படுகிறீர்கள்’ என்று எப்போதும் என் மீது சுமத்தப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டு. அது ஏன் சொல்லப்பட்டதென்றால், சில மாதங்களுக்கு முன்பு எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுவதைப் பற்றி பேசியிருந்தேன். ‘என் வாழ்க்கை முடிந்துவிட்டது. என் வாழ்க்கையில் இன்னும் எனக்கு பத்து ஆண்டுகளே எஞ்சியிருக்கின்றன. அதனால் நான் அதைக் காண்பதற்கு உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால் என்னுடைய குழந்தைகளின் நிலை என்னவாகும் என்பது குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது. காவல்துறை ஆய்வாளரின் மரணத்தைக் காட்டிலும் ‘பசுவின் மரணம்’ இப்போது முக்கியத்துவம் பெறுவது மிகவும் சோகமானது’ என்று நான் அப்போது கூறியிருந்தேன்.
சில காரணங்களால் அந்த அறிக்கை என்னை கேலி, வெறுப்பு மற்றும் தவறான அச்சுறுத்தல்களின் தொடர் இலக்காக ஆக்கியது. அதனால் நான் முற்றிலும் குழம்பிப் போனேன். ஏனென்றால் நான் ஆத்திரமூட்டுகின்ற வகையில் எதையும் பேசியிருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்திருந்த ஒரு திரைப்படம், எ வெட்னஸ்டே அந்த நேரத்தில் இழுத்துக் கொண்டு வரப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த ‘சர்ஃபரோஷ்’ படமும் அப்போது இழுக்கப்பட்டது.
சர்ஃபரோஷ் திரைப்படத்தில் உளவுத்துறை ஏஜெண்டாக வரும் நான் பாகிஸ்தான் கஜல் பாடகராக நடித்திருந்தேன். எ வெட்னெஸ்டே திரைப்படத்தில் கொல்லவில்லையெனில் அவர்கள் தப்பித்து விடுவார்கள் என்று அஞ்சி நான்கு பயங்கரவாதிகளை தனியொரு ஆளாகக் கொல்ல முடிவு செய்கின்ற பாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். என்னைப் பற்றி பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவில் லாகூருக்கு ஒருமுறை சென்றிருந்த போது நான் பேசியதுடன் அந்த இரண்டு படங்களும் அருகருகே இணைத்துக் காட்டப்பட்டன. லாகூருக்கு சென்றிருந்த சமயத்தில் என்னிடம் லாகூருக்கு வந்திருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. ‘வீட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன்’ என்று சொன்னேன். அது அவர்களைக் கோபமடையச் செய்திருக்கும் என்று தோன்றுகிறது. ‘வீட்டில் இருப்பது போல உணர்ந்தால் நீங்கள் அங்கேயே சென்று விடுங்கள்’ என்று கூற ஆரம்பித்தார்கள்.
அவ்வாறு ஏன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை. ஒருவரின் வீட்டிற்கு செல்லும் நீங்கள், அங்கே உங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தால், அவர்கள் உங்களை நன்றாக நடத்தினால் ‘என் வீட்டைப் போலவே இருக்கிறது’ என்று சொல்ல மாட்டீர்களா? அவர்களுக்கு அந்தப் பேச்சு எ வெட்னெஸ்டே திரைப்படத்தில் கரப்பான் பூச்சிகள் போன்றவற்றிடமிருந்து வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி நான் பேசிய பேச்சுக்கு முரண்பட்டதாக இருந்திருக்கிறது. ‘இவர் மிகப் பெரிய துரோகி. ஒருபுறம் அவரது திரைப்பட பிம்பம் இவ்வாறு சொல்கிறது – ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் சொல்வது இதுதான்’ என்று அவர்களால் காட்டப்பட்டது.
நான் இங்கே நன்கு வரவேற்கப்பட்டிருக்கிறேன், மிகவும் வசதியாக உணர்கிறேன் என்றுதான் நான் நிஜ வாழ்க்கையில் சொல்லியிருந்தேன். நமது பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் பள்ளி மாணவிகள் போல கைகளைப் பிடித்துக் கொண்டு லாகூர் விமான நிலையத்தின் தரைப்பாலத்தில் அதே சமயத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
கரண் தாப்பர்: முற்றிலும் உண்மை. நான் இப்போது தெரிந்தே தர்ம சன்சத் கூட்டத்தில் இருந்த இரண்டு நபர்கள் பேசியவற்றை மேற்கோள் காட்டப் போகிறேன், ஏனென்றால் அங்கு பேசப்பட்ட சில விஷயங்கள் எந்த அளவிற்கு அதிர்ச்சியூட்டுபவையாக, ரத்தவெறி கொண்டவையாக, பயங்கரமானவையாக இருந்தன என்பதை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
‘மியான்மரைப் போல இங்குள்ள காவல்துறையினர், அரசியல்வாதிகள், ராணுவம் மற்றும் ஒவ்வொரு ஹிந்துவும் ஆயுதம் ஏந்தி இந்த சுத்திகரிப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். அதைத் தவிர வேறு தீர்வு எதுவுமில்லை’ என்று சுவாமி பிரபோதானந்தா அங்கே பேசினார். பின்னர் பூஜா ஷகுன் பாண்டே ‘அவர்களில் இருபது லட்சம் பேரைக் கொல்வதற்கு நம்மில் நூறு பேர் தயாராக இருந்தால் போதும், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதில் நாம் வெற்றி பெற்று விடுவோம்’ என்று பேசினார். உங்கள் வாழ்நாளில் நீங்கள் எப்போதாவது முஸ்லீம்களைப் பற்றி அவர்களுடைய சொந்த ஹிந்து சகோதர சகோதரிகளே இவ்வாறாகப் பேசுவார்கள் என்று நினைத்திருப்பீர்களா? சக குடிமக்களே இப்போது உங்கள் மீது தாக்குதலை நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள்.
நசிருதீன் ஷா: இது போன்ற விஷயங்களைக் கேட்கும் போது மன உளைச்சலே ஏற்படுகிறது. மேலும் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பது உண்மையில் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர்கள் இப்போது அழைத்துக் கொண்டிருப்பது முழு அளவிலான உள்நாட்டுப் போருக்கே ஆகும்… நம்மிடையே இருந்து வருகின்ற இருபது கோடிப் பேர் இதை எங்கள் தாய்நாடு என்றும் நாங்கள் இந்த இடத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றும் கூறி திரும்ப எதிர்த்துப் போராடும் போது அவர்கள் அனைவரையும் அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது.
நாங்கள் இங்கேதான் பிறந்தோம், எங்கள் தலைமுறைகள் இங்கேயே வாழ்ந்து மடிந்திருக்கின்றன. அத்தகைய இயக்கம் ஏதேனும் தொடங்குமானால், அது மிகப் பெரிய எதிர்ப்பையும், கோபத்தையும் நிச்சயம் சந்திக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது அதுபோன்று பேசுபவர்களுக்கு எதிராக எதுவும் செய்யப்படுவதிவில்லை. ஆனால் அதேசமயத்தில் ஒரு கவிஞர், நகைச்சுவை நடிகர் தான் சொல்லப் போகின்ற நகைச்சுவைக்காக கைது செய்யப்படுகிறார். ஆனால் யதி நரசிங்கானந்த் இதுபோன்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்… வெறுக்கத்தக்க வகையில் பேசுகின்ற இந்த யதி நரசிங்கானந்த் சொல்வது… முற்றிலும் அருவருப்பானவையாக, அபத்தமானவையாகவே இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் இல்லையென்றால் அந்த பேச்சுகள் உண்மையில் வேடிக்கையானவையாகவே இருக்கும்.
கரண் தாப்பர்: தாங்கள் ஓர் உள்நாட்டுப் போருக்குச் சாத்தியமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று நீங்கள் மிக முக்கியமான ஒன்றை சொன்னீர்கள். இருபது கோடி முஸ்லீம்களைத் தாக்கி கொல்லப் போவதாக தர்ம சன்சத் மிரட்டுவதாலேயே நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கீழே விழுந்து அவர்களிடம் சரணடைந்து விடப் போவதில்லை. அவ்வாறு பேசுபவர்கள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
நசிருதீன் ஷா: ஆம், நீங்கள் சொன்னதைப் போல் அவர்கள் தங்களால் இயன்றவரையிலும் இங்கே இருக்கின்ற சக குடிமக்களை மிரட்டி வருகிறார்கள். முகலாயர்கள் செய்த ‘அட்டூழியங்கள்’ என்று சொல்லப்படுபவை மீது தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது உண்மையில் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. அவர்கள் முகலாயர்கள் இந்த நாட்டிற்குப் பங்காற்றியவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்; நீடித்து நிற்கின்ற நினைவுச்சின்னங்கள், வரலாறு, கலாச்சாரம், நடனம் மற்றும் இசை மரபுகள், ஓவியம், கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை நமக்கு விட்டுச் சென்றவர்கள் முகலாயர்கள் என்பதை மறந்து விடுகிறர்கள். தைமூர், கஜினி முகமது அல்லது நாதர் ஷா பற்றி யாருமே பேசுவதில்லை. ஏனென்றால் அந்த வரலாறு குறித்த அறிவு கொண்டவர்களாக அவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை முகலாயர்கள் இங்கே வந்த கொள்ளையர்கள், கொள்ளையடித்து விட்டுச் சென்றவர்கள் எனப்து மட்டுமே… இந்த இடத்தை தங்கள் தாயகமாக்கிக் கொள்வதற்காக முகலாயர்கள் இங்கே வந்தனர். விரும்பினால் நீங்கள் அவர்களை அகதிகள் என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம், மிகவும் வசதியுடன் இருந்த அகதிகள். ஆனால் முகலாயர்கள் மீது இப்போது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்படுகிறது. ‘அட்டூழியங்கள்’ என்று அவர்களால் விவரிக்கப்படுகின்ற செயல்களுக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லீமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்வது உண்மையில் கேலிக்குரியதாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: நசீருதீன் ஷா, உங்களுக்குத் தெரிந்திருக்கும். மக்களை கலங்கச் செய்திருப்பது தரம் சன்சத்தில் பேசிய பேச்சுகள் மட்டும் அல்ல… அதற்கான எதிர்வினையும்தான். காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலே நாட்கள் பல கடந்து சென்று விட்டன. இன்று வரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை. இறுதியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோது, அது வெறுமனே ‘மத விரோதத்தைத் தூண்டுகின்ற’ என்ற மிகக் குறைவான குற்றத்திற்கானதாக மட்டுமே இருந்தது.
உத்தரகாண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் மிக முக்கியமான ஊபா சட்டம் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) பயன்படுத்தப்படவில்லை என்றும் அது பயன்படுத்தப்படாமலேகூட போகலாம் என்றும் தி ஹிந்து பத்திரிகையிடம் உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு கோவிட்-19 பரவியதாக தப்லிகி ஜமாஅத் மீது குற்றம் சாட்டப்பட்ட வேளையில் சிலர் மீது கொலைக் குற்றமே சுமத்தப்பட்டது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. காவல்துறை மிக நியாயமாக, நேர்மையாக இருக்கிறது என்று நீங்கள், முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? இந்த கொடூரமான குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக கொண்டு வந்து காவல்துறை நிறுத்தும் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்களா?
நசிருதீன் ஷா: அது காவல்துறைக்கு யார் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. நீதித்துறையின் இந்த வகையான பாகுபாடு மிக மேலே இருந்து தொடங்குகிறது. எல்லா வழிகளிலும் அது அங்கிருந்தே பரவுகிறது. உயர்மட்டத்தில் இருப்பவர்களே முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். எனவே உத்தரவின் பேரிலேயே காவல்துறை செயல்படலாம். மக்களை அடிப்பதில் காவல்துறையினரிடம் மகிழ்ச்சி அல்லது ஏதாவது ஒரு உணர்வு இருக்கிறதா என்பது இங்கே முக்கியமாக இருக்கிறது. பொதுமுடக்கத்தின் போது நாம் பார்த்த காட்சிகளிலிருந்து காவல்துறையினர் அவ்வாறு செய்து வருவதை நம்மால் வெளிப்படையாகக் காண முடிந்திருக்கிறது. காவல்துறையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும், கூட்டத்தின் மீது லத்தி கொண்டு அடிக்க உத்தரவைப் பெற்றுக் கொண்ட முஸ்லீம் காவலர் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதற்கு கீழ்படிவார் என்றால் என்ன செய்வது? இந்த விஷயத்தில் அவருக்கான தேர்வு என்று எதுவும் இருக்கவில்லை.
கரண் தாப்பர்: காவல்துறை எவ்வாறு நடந்து கொள்கிறது, எப்படி எதிர்வினையாற்றுகிறது, நேர்மையாக அல்லது நியாயமாக அவர்கள் நடந்து கொள்வார்களா, சட்டத்தின் முன்பு குற்றவாளிகளைக் கொண்டு வந்து நிறுத்துவார்களா என்பது மேலிட உத்தரவுகளைப் பொறுத்தது என்று மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் எதிர்வினை எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்போம். கண்டிக்கின்ற வகையில் ஒரு வார்த்தையைக்கூட வெளியிடாத உத்தரகாண்ட் அரசு, ஒன்றிய அரசு, பிரதமர் ஆகியோரின் மௌனம் காதைச் செவிடாக்குகிறது. அது எதுவும் நடக்கவில்லை அல்லது நடப்பவற்றை பொருட்படுத்தவில்லை என்று அவர் கூறுவதைப் போலவே உள்ளது.
நசிருதீன் ஷா: அவர் கவலைப்படவில்லை. உண்மையில் அவர் கவலைப்படுவதே இல்லை. தான் வருந்தத் தேவையில்லை என்று கருதுகின்ற விஷயத்திற்காக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துபவராக அவர் இருப்பதால் அவரை ஒரு பாசாங்குக்காரர் என்றுகூட உங்களால் குற்றம் சாட்ட முடியாது. அவர் ஒருபோதும் அகமதாபாத் படுகொலைகளுக்காக மன்னிப்பு கேட்டதில்லை, அதுமட்டுமல்ல… அவர் வேறு எதற்குமே மன்னிப்பு கேட்டதாக இருக்கவில்லை. விவசாயிகள் விஷயத்தில் அரை மனதுடன் அவர் கேட்டிருந்த மன்னிப்பும்கூட வஞ்சகம் நிறைந்த மன்னிப்பாகவே இருந்தது.
மோசமாகப் பேசியவர்களில் யாரையும் தண்டிக்கும் வகையில் ஒரு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லை. உண்மையில் அந்த நபர்களை ட்விட்டரில் பின்தொடர்பவராகவே அவர் இருக்கிறார். அதை அவர் ஏன் செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதில் ஒருவித மகிழ்ச்சியை அவர் பெறுகிறார்.
கரண் தாப்பர்: இந்த நாட்டின் தலைவராக இருக்கின்ற பிரதமர் மௌனம் சாதிப்பது தார்மீக ரீதியாக மட்டுமே சிக்கலானதாக இருக்கவில்லை. அவருடைய மறைமுகமான ஆதரவு இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகின்ற தெளிவான அறிகுறியாகவே அவரது மௌனம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவர்களை ஒரு விதத்தில் அவர் ஊக்குவித்தே வருகிறார். அவர்களை நீங்கள் சொல்வதைப் போல அவர் தண்டிக்கவில்லை, அவர்களைக் கண்டிக்கவில்லை. உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்ய நினைக்கும் அவர்களுக்கு மேல்மட்டத்தில் இருந்து மௌன ஆதரவு இருப்பது உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறதா?
நசிருதீன் ஷா: அதுவொன்றும் முழுக்க ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை என்றாலும். கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் அது ஏறக்குறைய நாம் எதிர்பார்த்ததுதான். இப்படி நடந்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனாலும் அனைவரின் மோசமான எதிர்பார்ப்புகளையும் தாண்டி மிகவும் மோசமாக விஷயங்களாக அவை எவ்வாறு மாறின என்பதை நான் சொல்ல வேண்டும். இவ்வாறு ஆத்திரமூட்டப்பட்டாலும் மௌனம் காக்கின்ற தலைவர், எல்லோரிடமும் அக்கறை காட்டுபவராக தன்னைக் கூறிக் கொள்பவர், மக்களுடைய வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர், எந்தவொரு மதத்துக்கும் எதிராக தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிக் கொள்பவர் நம்மிடையே இருந்து வருகிறார் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனை. அவர் கணக்கிலடங்கா கேமராக்களின் துணையுடன் தனது சொந்த மத நம்பிக்கைகளை அணிவகுத்துச் சென்று காட்டுபவராக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் முஸ்லீம்களைப் பற்றி குறிப்பிட்டவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் பேசுவதற்கான நேரத்தையும் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார். அது நிச்சயமாக கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் இதுகுறித்து என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
கரண் தாப்பர்: முஸ்லீம்களுக்கு எதிராக நடந்துள்ள சமீபத்திய சீற்றமாக ஹரித்துவாரில் நடந்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக முஸ்லீம்கள் மிது லவ் ஜிகாத் என்று பலமுறை குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. பசுக் கொலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். காவலர்கள் மற்றும் கும்பல்களால் தாக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக மூத்த தலைவர்கள் பகிரங்கமாக அவர்களை மீண்டும் மீண்டும் பரிகாசம் செய்து வருகிறார்கள். தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களா?
நசிருதீன் ஷா: இரண்டாம் தரக் குடிமக்களாகத் தாழ்த்துவதற்கான செயல்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் அது நடந்து வருகிறது. ‘திரைப்படங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன அல்லது சமூகம் திரைப்படங்களைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறியது உண்மைதான். திரைப்பட உலகில் நடப்பது நிச்சயமாக நாட்டில் பிரதிபலிக்கிறது.
மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள ஜித்வால் கலான் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக முஸ்லீம் குடும்பங்களுக்கு தனது பூர்வீக நிலத்தை வழங்கிய விவசாயி ஜக்மெல் சிங் (நடுவே வெள்ளைத் தலைப்பாகை அணிந்துள்ளவர்)
அது முஸ்லீம்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கிப் பரப்புகின்ற முயற்சியாகவே இருக்கிறது. முஸ்லீம்கள் அதற்கு ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது என்பதையே நான் எப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். நெருக்கடி என்று வந்தால் அதை எதிர்த்து நின்று போராடுவோம் என்பதால் ஒரு விஷயம் நம்மைப் பயமுறுத்துகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நம்மிடம் ‘ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக வாழ முடியாது’, ‘இருவரின் கலாச்சாரங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை’ என்று வெளிப்படையாகக் கூறுகின்ற மூத்த தலைவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அதைப் பற்றி எதுவும் நினைத்தவராகத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து ‘தகனம் செய்யும் மயானம் – கல்லறை’ (சம்ஸ்தான் – கப்ரிஸ்தான்), ‘மசூதி – கோவில்’ போன்ற வேறுபாடுகள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். முக்கிய பெரும்பான்மை என்று தாங்கள் உணர்கின்ற ஹிந்துப் பெரும்பான்மையினரை ஒருங்கிணைப்பதற்காக அவர்களைப் பிரித்தாண்டு ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மிகச் சிறந்த வழியை பாஜக கண்டுபிடித்து வைத்திருக்கிறது. அவர்கள் யாருக்கும் பிடி கொடுப்பதில்லை. முஸ்லீம்கள் ஓரங்கட்டப்பட்டு தேவையற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அவர்களைத் தேவையற்றவர்கள் என்று நிரூபிக்கும் வகையிலான செயல்முறைகள் படிப்படியாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
கரண் தாப்பர்: நீங்கள் மிக முக்கியமான ஒன்றைச் சொன்னீர்கள். ஆனால் அதை மெதுவாகச் சொன்னீர்கள். அவ்வாறு நீங்கள் அதைச் சொன்னதாலேயே அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. நெருக்கடி வந்தால் எதிர்த்துப் போராடுவோம் என்று சொன்னீர்கள். அதுதான் அவர் உங்களுக்கு விட்டுச் செல்கின்ற கடைசி வழி இல்லையா? உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் நிலையைத் தற்காத்துக் கொள்ளவும் நீங்கள் ரகசியமாகப் போராட வேண்டும்.
நசிருதீன் ஷா: ஆம். அப்படி ஒரு நிலைமை வந்தால் நாங்கள் அவ்வாறே செய்வோம். எங்கள் வீடுகளையும், தாயகத்தையும், குடும்பங்களையும், குழந்தைகளையும் நாங்கள் பாதுகாத்து வந்திருக்கிறோம். எங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி நான் பேசவில்லை; நம்பிக்கைகள் மிக எளிதாக அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. அதாவது அவ்வப்போது ‘இஸ்லாம் ஆபத்தில் உள்ளது’ என்று கூறபப்டுவதை நான் கேட்டு வந்திருக்கிறேன். இப்போது ஹிந்து மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் எவ்வளவு அபத்தமானவராக இருக்க வேண்டும் தெரியுமா? எங்களை விட பத்துக்கு ஒன்று என்ற அளவிலே அதிக எண்ணிக்கையில் இருந்து கொண்டு ‘என்றாவது ஒரு நாள் ஹிந்துக்களைக் காட்டிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கப் போகிறார்கள்’ என்று இன்னும் பிரச்சாரம் செய்து வரப்படுகிறது. ஹிந்துக்களின் எண்ணிக்கையை என்றாவது ஒரு நாள் முஸ்லீம்கள் மிஞ்சுவதற்கு எந்த விகிதத்தில் நாங்கள் சந்ததியை உருவாக்க வேண்டும் தெரியுமா? நாங்கள் ஏன் அதை விரும்ப வேண்டும்? இருக்கின்ற இடத்தில் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்; எங்களால் முடிந்ததை நாட்டிற்காகச் செய்திருக்கிறோம். நிம்மதியுடன் வாழத் தகுதியானவர்கள் என்றே எங்களை நாங்கள் முழுமையாக உணர்கிறோம்.
கரண் தாப்பர்: இன்னும் ஒருபடி மேலே செல்ல விரும்புகிறேன்… இன்றைக்கு அந்தக் கும்பல் குர்கானில் முஸ்லீம்களை தொழுகை நடத்த விடுவதில்லை. உத்தரப்பிரதேசத்து கிராமங்கள், சிறு நகரங்களில் காய்கறிகள் மற்றும் வளையல்களை முஸ்லீம்கள் விற்பதை அந்தக் கும்பல் அனுமதிப்பதில்லை. குஜராத் நகரங்களில் முஸ்லீம்கள் அசைவ உணவுக் கடைகளை நடத்துவதற்கு அந்தக் கும்பல் அனுமதிக்காது. குஜராத்தில் உள்ள ‘தொந்தரவுக்குள்ளான பகுதிகள் சட்டம்’ ஹிந்துக்களுக்கானது என்று கருதப்படும் பகுதிகளில் முஸ்லீம்கள் சொத்துக்களை வாங்குவதை அனுமதிக்காது. நீங்கள் வாழ்ந்து வருகின்ற நாடு மிகக் கூர்மையாக துருவப்படுத்தப்படுவதை, ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் காண்கிறீர்களா?
நசிருதீன் ஷா: அது அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. வெவ்வேறு விஷயங்களைப் போதிக்கின்ற இரண்டு வெவ்வேறு மதத்தினரிடையே உள்ள வெறுப்பு இயல்பானது என்றால், சீக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பும் குரோதமும் அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா? சீக்கியர்களும், முஸ்லீம்களும் தேசப் பிரிவினையின் போது எதிரிகளாக இருந்தவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டவர்கள், இருதரப்பிலும் சிந்திய ரத்தத்தைக் கண்டவர்கள். ஆனால் இன்றைக்கு தொழுகை நடத்த விரும்பும் முஸ்லீம்களுக்காக சீக்கியர்கள் தங்களுடைய குருத்வாராக்களை திறந்து வைத்திருக்கும் நேரத்தில் ஹிந்து அடிப்படைவாதிகள் கூட்டம் வந்து முஸ்லீம்களின் தொழுகையைச் சீர்குலைக்க முயல்கிறது. சீக்கியர்கள் மட்டுமே இப்படியானதொரு நற்காரியத்தைச் செய்யும் அளவிற்கு உன்னதமானவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையான நற்செயலை முஸ்லீம்கள் பிரதிபலிப்பார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.
கரண் தாப்பர்: இந்திய முஸ்லீம்களைப் போன்றவராக நீங்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும் என்றாலும் நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அது இரண்டு ஆண்டுகளாக உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி. நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
நசிருதீன் ஷா: மிகவும் கோபமாக, வெறுப்பாக உணர்கிறேன். அன்புத் தலைவரை கேள்வி எதுவும் கேட்காமல் வணங்கி வருபவர்கள் அவரைப் பற்றி நகைச்சுவையாகப் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். நான் பாதுகாப்பற்றவனாக உணரவில்லை. ஏனென்றால் இது எனது வீடு என்று எனக்கு நன்கு தெரியும். என்னை யாரும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது. எனக்கான இடத்தைக் கொண்டிருப்பதற்குத் தேவையான வகையில் எனது பணிகளை நான் செய்திருக்கிறேன். ஆனாலும் ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களிடமுள்ள வெளிப்படையான உணர்வுரீதியான வெறுப்பே என்னை அதிகம் கோபப்படுத்துகிறது. அது என்னை அதிகம் தொந்தரவு செய்கிறது. எதிர்காலத்தில் அது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கப் போகிறது என்பதை அறிந்தே இருக்கிறேன்.
கரண் தாப்பர்: இதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: நீங்கள் பாரபங்கியில் பிறந்தவர். அஜ்மீர் மற்றும் நைனிடாலில் படித்தவர். இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். உங்கள் சகோதரர் ராணுவத்தின் துணைத்தலைவர் பதவி வரை உயர்ந்தவர். ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற போது உங்கள் இருவருக்குள்ளும் என்ன மாதிரியான உணர்வு எழுகிறது?
நசிருதீன் ஷா: அதைக் கேட்டு நாங்கள் சிரித்துக் கொள்வோம். ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று சொல்பவர்களைப் பார்த்து ‘கைலாசத்திற்கு போ’ என்று சொல்ல நினைக்கிறேன். உண்மையில் அது மிகவும் அபத்தமானது… ‘உருது பாகிஸ்தானிய மொழி’ அல்லது அந்த வார்த்தை… தீபாவளி விளம்பரத்தில் வந்த அந்த வார்த்தை என்ன… ‘ரிவாஸ்’ – ‘ரோஷ்னி கா ரிவாஸ்’ அல்லது அதுபோன்று ஏதாவது… அவையெல்லாம் எவ்வளவு அபத்தமானவை? ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி மொழிகளில் எத்தனை பார்சி வார்த்தைகள் உள்ளன தெரியுமா? அரேபிய மொழி வார்த்தைகள் எத்தனை உள்ளன என்று தெரியுமா? முஸ்லீம்களின் மொழி உருது என்று தவறாகக் கருதப்படுகிறது. அது முஸ்லீம்களின் மொழி அல்ல, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தின் மொழி என்று பலமுறை ஜாவேத் அக்தர் கூறியிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் உருதை முஸ்லீம் மொழி என்பதாக முத்திரை குத்தி விட்டது.
கரண் தாப்பர்: நரேந்திர மோடியின் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற முஸ்லீம் என்ற முறையில் கோபம், வெறுப்பை நீங்கள் உணர்கிறீர்களா?
நசிருதீன் ஷா: சரிதான்.
கரண் தாப்பர்: அவ்வாறு உணர்வது மகிழ்ச்சி தருகின்ற வழியாக யாருக்கும் இருக்கப் போவதில்லை.
நசிருதீன் ஷா: இல்லை. அது அப்படி இருக்காது. நமது பிரதமர் நகைப்புக்குரிய அறிவியல் அறிக்கைகளை வெளியிடுவதைப் பார்க்கும் போது, நிறைய நேரம் உண்மையை அவர் மூடிமறைப்பதைப் பார்க்கும் போது, உண்மைகளை அவர் சிதைப்பதைப் பார்க்கும் போது, எதிரிகள் மீது குற்றம் சாட்டுகின்ற போது அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கும் போது, இந்த அளவிற்கு அரசியல் உரையாடல்கள் தரம் தாழ்ந்தவையாக ஒருபோதும் என் நினைவில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
கரண் தாப்பர்: உங்களிடம் நான் பேச விரும்புவது முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மட்டும் அல்ல என்பதால் இந்த கட்டத்தில் நமது விவாதத்தைச் சற்று விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஒட்டுமொத்த இந்தியாவிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்கள் மனைவி ஹிந்து. உங்கள் குழந்தைகள் நவீன, மதச்சார்பற்ற, முன்னோக்குப் பார்வையுடன் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்த மாதிரியான நாடாக மாறியதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நசிருதீன் ஷா: அதைச் சொல்வது மிகவும் கடினம். அதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்றாலும் நமது மத அடையாளங்களை முன்னிறுத்திச் செல்லாமல் இருப்பது முக்கியம் என்பதை உறுதியாக அறிந்திருக்கிறேன். நான் மதம் முக்கியத்துவம் பெறாத நாள் என்று ஒரு நாள் வரும் – நிச்சயமாக அது ஒரு கற்பனாவாத விருப்பமாக இருந்தாலும் – என்றே நம்புகிறேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்த போது, எங்கள் குடும்பத்தில் இருந்த பெரியவர் ஒருவரைக் கலந்தாலோசித்தோம். அவர் அப்போது எங்களிடம் ‘அரசியல் பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் வீட்டில் ஹிந்து மதம் இருக்குமா அல்லது முஸ்லீம் நெறிமுறை இருக்குமா, மது அனுமதிக்கப்படுமா, இறைச்சி சாப்பிடலாமா, ஹோலி கொண்டாடப்படுமா… என்பது போன்ற சமூகப் பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும்’ என்று கூறினார்.
அரசியல் பிரச்சனை இருக்காது என்ற அவரது கூற்று முற்றிலும் தவறாகிப் போனது. எந்தவொரு சமூகப் பிரச்சனையும் எங்களுக்கு இருக்கவில்லை. எங்களுடைய நண்பர்கள் பலரும் மதங்களை மறுத்தே திருமணம் செய்து கொண்டுள்ளனர். சொல்லப் போனால் என்னுடைய பிள்ளைகள் ஒரே மதத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியை முதன்முதலாகச் சந்தித்த போது ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எங்கள் நண்பர்களில் பலரும் ஹிந்து-முஸ்லீம், முஸ்லீம்-கிறிஸ்துவர், ஹிந்து-கிறிஸ்துவர், யூதர்-சீக்கியர் அல்லது அது போன்று திருமணம் செய்து கொண்டவர்களே. அவர்களை அவ்வாறு வைத்திருப்பதற்கான நம்பிக்கையுடன் இருந்த நாடு. இது அப்படிப்பட்ட நாடாக இருந்தது என்று பிள்ளைகளிடம் சொன்னோம். எனக்கும் அதுபோன்ற நாடாக இருந்தது என்றே சொல்லப்பட்டிருந்தது.
பாகிஸ்தானுக்கு செல்வதற்கு எனது தந்தை மறுத்தார். அப்போது அவரது சகோதரர்கள், என் அம்மாவின் சகோதரர்கள் மற்றும் எனது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இங்கிருந்து வெளியேறினர் என்ற போதிலும் என் தந்தை இங்கிருந்து செல்வதற்கு மறுத்து விட்டார். நமக்கு அங்கே எவ்வளவு எதிர்காலம் இருக்குமோ அதே அளவு இங்கேயும் இருக்கும் என்று நன்கு உணர்ந்தவராக அவர் இருந்தார். இன்றைய இந்தியாவில் இப்போது நான் குழந்தையாக இருந்திருப்பேன் என்றால் என்ன மாதிரியான எதிர்காலம் எனக்காகக் காத்திருக்கிறது என்று சொல்ல எனக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.
கரண் தாப்பர்: இன்றைய இந்தியா உங்களை வெளியேற்றியிருக்கலாம். உண்மையில் அது வெளியேற வேண்டுமென்று உங்களை விரும்பச் செய்திருக்கலாம்.
நசிருதீன் ஷா: அவ்வாறு செய்திருக்கலாம் என்றாலும் அவ்வாறு செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ‘ஓடி ஒளிந்து கொள்’ என்பது என் வழி அல்ல. நான் அதைச் செய்யப் போவதில்லை. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. இங்கே எவ்வளவு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. இங்கிருந்து கொண்டே நான் அதைச் சமாளிப்பேன். அதுபோன்று இருக்குமாறு என் குழந்தைகளுக்கும் கற்பிப்பேன்.
கரண் தாப்பர்: நசீர்! அனைவரும் சேர்ந்து ஈத், கிறிஸ்துமஸை ஒன்றாகக் கொண்டாடிய அறுபது, எழுபதுகளில் வளர்ந்தவர்கள் நீங்களும் நானும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மூன்று நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. ஆனால் அசாமில் கிறிஸ்தவ கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹிந்துக்கள் மீது பஜரங் தளம் வன்முறையில் ஈடுபட்டது. குர்கான் மற்றும் பட்டோடியில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பள்ளியில் சிறுவர்களுக்காக நடந்து கொண்டிருந்த அபிநய நாடக நிகழ்ச்சி சீர்குலைந்தது. அம்பாலாவில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கர்நாடகாவில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறி வருகிறார்களா என்ற கேல்விக்கு இல்லை என்று பதில் இங்கே இருக்குமானால் இதுபோன்ற சகிப்பின்மை எங்கே இருந்து வருகிறது?
நசிருதீன் ஷா: நான் சொன்னதைப் போல இது முற்றிலும் உருவாக்கப்பட்ட வெறுப்பு. அடுத்தவர் கொண்டுள்ள நம்பிக்கைகளை சகித்துக் கொள்ளாத தன்மை. மத நம்பிக்கை என்பது மிகவும் ஆபத்தான விஷயம். அது உங்களைத் தீவிர வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடியது. தேவாலயங்கள், மசூதிகள் சேதப்படுத்தப்படுவதைப் போல யாராவது ஒருவர் கோவிலைச் சேதப்படுத்த முயன்றால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறு சேதப்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுப்பதில் நீதி ஒருபோதும் தாமதிக்காது. ஆனால் மற்ற வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துபவர்களுக்கு அதுபோன்று எதுவும் நடக்காது. ‘உங்கள் கடவுளை விட என்னுடைய கடவுள் பெரியவர்’, ‘நீங்கள் நம்புவதை வணங்குவதற்கான உரிமை உங்களுக்குக் கிடையாது’ என்று சொல்வது உண்மையில் மிகவும் அபத்தமானது. நிலைமை அபத்தமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.
கரண் தாப்பர்: அன்னை தெரசாவின் மிஷனரி ஆஃப் சேரிட்டிக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெற அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டதை நேற்று பார்த்தோம். அது கிறிஸ்துமஸ் தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதை தற்செயல் நிகழ்வு என்று நினைக்கிறீர்களா? தேதி, நேரம் போன்றவை திட்டமிட்டு தந்திரமாக நிகழ்த்தப்பட்டது என்று நினைக்கிறீர்களா? கிறிஸ்தவர்களுக்கான மோசமான செய்தியை கொண்டு சென்று சேர்ப்பதற்கான மற்றொரு வழியாகவே அது இருந்தது.
நசிருதீன் ஷா: அது நிச்சயமாக வேண்டுமென்றே செய்யப்பட்டதுதான். வேண்டுமென்றே செய்யப்படாமல் உள்ளதாக நிச்சயம் இருக்க முடியாது. கிரீன்பீஸ், அம்னெஸ்டி இந்தியா அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் நலனுக்காக உழைக்கின்ற பலருக்கும் எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தப்படுகிறது. அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முற்போக்காகத் தெரியும் அனைத்தும் அரசுக்கு எதிரானவையாகவே தோன்றுகின்றன. அமைதியான தேவாலய பிரார்த்தனையைச் சீர்குலைக்கும் வன்முறைக் கும்பல் அங்கேயே அமர்ந்து பஜனை பாடத் தொடங்குகிறது என்ற இன்றைய உண்மை நினைத்துப் பார்க்கவே முடியாததாக உள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்று ஒருபோதும் நடந்ததே இல்லை. இந்தச் செயல்கள் வெளிப்படையாக மேலிருந்து ஒப்புதலைப் பெற்றே நடைபெறுகின்றன.
கரண் தாப்பர்: பெரும்பாலும் இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படும் அல்லது கண்டிக்கப்படும். செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அப்படி எதுவுமே நடக்கவில்லை.
நசிருதீன் ஷா: அப்படி எதுவும் நடக்கவில்லை, நடப்பதற்கான வாய்ப்பில்லை. அது இன்னும் மோசமாகக் கூடிய வாய்ப்பே இருந்து வருகிறது.
கரண் தாப்பர்: யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிலே நமது நாடு மாறிக் கொண்டிருப்பது மதத்தின் அடிப்படையில் மட்டுமல்ல. விமர்சகர்கள் மற்றும் கருத்து வேறுபாடு கொண்டவர்களுக்கு இப்போது என்ன நேர்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்படுகிறது. பாராளுமன்றத்தைப் பாருங்கள். அது செயல்படாதது மட்டுமல்ல, பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. ஊடகங்களைப் பாருங்கள் — பெரும்பாலானவை உறுமுகின்ற காவல் நாய்களாக இருப்பதைக் காட்டிலும் அரசின் மடியில் கிடக்கின்ற நாய்களாக இருக்கவே விரும்புகின்றன. நீதித்துறையும் கூட அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடிய வழக்குகளை வேண்டுமென்றே, தெரிந்தே ஒத்தி வைக்கிறது. நம்முடைய இளமைக் காலத்தில் நம்மை மிகவும் பெருமைப்படுத்திய ஜனநாயகத்தின் மீது இந்தியாவிற்கு இருந்த உறுதி, அரசியலமைப்பு விழுமியங்களுக்கான நமது அர்ப்பணிப்பு போன்றவையெல்லாம் தோல்வியடையும் நிலையில் இருக்கின்றனவா?
நசிருதீன் ஷா: நிச்சயமாக அது சில பிரிவுகளில் அவ்வாறுதான் இருக்கின்றது. நீதித்துறை மிகப்பெரிய அழுத்தங்களின் கீழ் செயல்பட்டு வருவதால் அவை குறித்து அவ்வாறு தீர்மானிப்பது மிகவும் அவசரப்படுவதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றம் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருவது மிகவும் நம்பிக்கைக்குரிய அறிகுறியாக இருக்கிறது.
அழிவும், இருளும் நம்மைச் சூழ்ந்துள்ள போதிலும் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் இருப்பதாகவே நான் கூறுவேன். ஜனநாயகத்திலிருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்று சொல்வது முன்கூட்டியதாகவே இருக்கலாம். சில சமயங்களில் நாம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984இல் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது. செய்தித்தாளைத் திறக்கும் போதெல்லாம் கள்ளச் சிரிப்புடன் அந்த ‘பிக் பிரதர்’ உங்களை வரவேற்பார். அங்கே ‘இரண்டு நிமிட வெறுப்பு’ அன்றாடம் கொண்டாடப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் அனைத்து சமூக ஊடக விஷயங்களிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையாகச் சொல்வதென்றால் அது இரண்டு நிமிட வெறுப்பு அல்ல – இருபத்திநான்கு மணிநேர வெறுப்பு. அங்கே ‘பிக் பிரதரை நான் நேசிக்கிறேன்’ என்ற கீதம் தொடர்ந்து இசைக்கப்படுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் ‘நான் பிக் பிரதரை நேசிக்கிறேன்’ என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. அது போல சில சமயங்களில் உணர்கிறேன் என்றாலும் அதைச் சொல்வது மிகவும் முன்கூட்டியதாகவும் தெரிகிறது. ஜனநாயகம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சமீபத்திய நிகழ்வாகவே இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அரசமுறை கொண்டதாக இருந்தது. அதற்கு முன்பு மொகலாயர் காலத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட மகாராஜாக்களின் கூட்டமாக இருந்தது. இந்த நாட்டில் ஜனநாயகம் தன்னுடைய வெற்றியைக் கண்டடைந்திருக்கிறது என்றும் நடந்து செல்கின்ற எந்தவொரு நபரும் தவறாக எடுத்து வைக்கின்ற காலடிகளில் அதுவும் ஒன்றாக இருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்
கரண் தாப்பர்: முற்றிலும் சரி. அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ஜனநாயகத்தை மிகவும் மாறுபட்ட பரப்பில் இருக்கும் மேல் மண் என்பதாகக் குறிப்பிட்டார். நான் முடிப்பதற்கு முன்பாக நீங்கள் பிக் பிரதர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு கணம் அதைப் பற்றி பேச விரும்புகிறேன். இப்போது வெளிப்படுகின்ற ஆளுமை வழிபாட்டில் ஓர் ஒளிவட்டம் உள்ளது. பிரதமரைக் கண்டு அவரது சொந்தக் கட்சியே பயப்படுகிறது. அவரை விமர்சித்தால் உங்கள் மீது ட்ரோல்களின் பட்டாளமே வந்து இறங்குகிறது. தன்னை மூன்றாவது நபராக மட்டுமே அவர் குறிப்பிட்டுக் கொள்வதை நான் கவனித்திருக்கிறேன்.
நசிருதீன் ஷா: ஆமாம். அது முரணாக இருக்கிறது. உங்களுடைய வார்த்தைகள் மீதே மிகப் பெரிய மதிப்பீட்டைக் கொண்டிருப்பது, முகஸ்துதியால் எளிதில் பாதிக்கப்படுவது, தவறாக பல விஷயங்களையும் பேசுவது, தனக்குக் கல்வி இல்லை என்று வெளிப்படையாகப் பெருமை பேசுவது – பிரதமர் ஆவதற்கு முன்பு அவர் இதைச் செய்திருந்தார். அது வீடியோவில் உள்ளது. அவர் அதில் ‘நான் எதுவும் படிக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் அது அவைவரையும் வசீகரமான பேச்சாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் சொன்ன, செய்திருக்கும் விஷயங்களைக் கொண்டு பார்க்கும் போது இப்போது அது நம்மையெல்லாம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் தானே மையமாக இருக்க வேண்டும் என்ற அவரது ஆசை, ‘M’ என்ற எழுத்தில் தொடங்கும் மற்றொரு வார்த்தைக்கு மிக அருகே உள்ளது. அதை நான் சொல்லமாட்டேன். ஆனாலும் அவர் ஒரு ராஜாவாக, கடவுள் போன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறார். நம்மில் எவருக்குமே அது நல்ல விஷயமாக இருக்க முடியாது.
கரண் தாப்பர்: இந்த நேர்காணலை இன்னும் ஒரே ஒரு கேள்வியுடன் முடிக்கிறேன்: இந்தியா எப்படியெல்லாம் மாறி வருகிறது என்பது பற்றி சிந்திக்கும் போது, உங்களிடம் தோன்றுகின்ற உணர்வுகளை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? வருத்தப்படுகிறீர்களா? ஏமாற்றமடைந்து, மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா அல்லது விரக்தி உணர்வைப் பெறும் அளவிற்குச் சென்றிருக்கிறீர்களா?
நசிருதீன் ஷா: விரக்தி உணர்வை நான் நிராகரிக்கின்றேன். ஏனென்றால் அது எதற்கும் வழிவகுத்துத் தரப் போவதில்லை. சோகமாக, கோபமாக உணர்கிறேன்; இவை தானாகச் சரியாகி விடும் என்று நம்புகின்ற அளவிற்கு நம்பிக்கையுடையவன் நான் இல்லை என்றாலும் ‘அகாதிஸ்ட்’ என்று அழைக்கப்படுகின்ற வகையில் இருப்பவனாக – காலம் வட்டங்களில் நகர்வதாக இருப்பதால், விஷயங்கள் சரியாக இல்லை என்றாலும் இறுதியாக பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்று நம்புகின்றவனாக இருக்கிறேன். எந்தவொரு கொடுங்கோலரும் இறுதியில் கவலைப்படும் நிலைக்கே வந்து சேர்ந்திருக்கின்றனர். அந்தச் சுழற்சி இந்தியாவிலும் விரைவிலேயே முழுவதுமாக வரும். அதைப் பார்க்க நான் இல்லாமல் போயிருக்கலாம். தாலி கட்டுவது போன்ற மூடநம்பிக்கைகளை நம்புகின்ற தலைவர்களுடன் நாம் இன்னும் சில வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டியிருக்கலாம். ஆனாலும் ராட்டினம் முழுவதுமாகச் சுழன்று பழைய நிலைக்கு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கரண் தாப்பர்: ஒருவேளை அது ஆறுதல்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கலாம். பேச்சுவழக்கில் சொல்வது போல் ‘இதுவும் கடந்து போகலாம்’. ஆனால் இருக்கின்ற ஒரே பிரச்சனை என்னவென்றால், இப்போதைய நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும், எப்போது முடியும் என்று நமக்குத் தெரியாது. நசிருதீன் ஷா, இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி. கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
நசிருதீன் ஷா: புத்தாண்டு வாழ்த்துகள், கரண். வாழ்த்துகள்.
https://thewire.in/communalism/full-text-naseeruddin-shah-karan-thapar-interview
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு